
1
மாலை மழையைச் சொல்லும் வெயிலில்
தகிக்கிறது சமணர் மலை.
உதடுகளை நனைத்திறங்கும் குளிர்ச்சியை
தலையசைத்துப் பார்க்கிறது ஓணான் குஞ்சு.
பாறை விளிம்பில் அமர்ந்து
வெயிலில் நனைகிறது ஒற்றை வல்லூறு.
யாருமற்ற படிகளில் ஏறுகையில்
திரும்பி சுயமிகளில் பதிகிறார்கள்
இளைய ஆதாமும்,ஏவாளும்.
தாமரை பூத்த தடாகத்தில்
மேலெழும்பி மறைகின்றன
பயமற்ற பெரும் மச்சங்கள்.
காலி கண்ணாடி போத்தல்களும்
நெகிழி டம்ளர்களையும் கடந்து
அமர்ந்த பாறைச் சிறு பிளவில்
யாரோ தவற விட்ட
ஆழ் கருப்பு ஹேர்பின்.
காலுயர்த்திய குதிரைகள் காத்திருக்க,
பெருந் தொற்றுத் தடை அடைத்த
கதவுகளின் பின்
அய்யனார் தவித்திருக்க
அமைதியின் பேரழகு மிளிர
நான்கு பூதங்களோடு
என்னையும் பார்த்தபடி
கண்கள் மூடி அமர்ந்திருக்கிறார்
இருபத்து நான்காவது தீர்த்தங்கரர்.
2
ஆடைகளகற்றப்பட்டு
பிரேத பரிசோதனைக் கூடத்தில்
படுத்திருக்கிறது
எந்தத் திட்டமிடலுமின்றி
பிறந்ததைப் போலவே
எந்தத் திட்டமிடலுமின்றி
இறந்தும் போன பாவப்பட்ட நம் உறவு
எவருமறியாமல் பொத்திப் பொத்தி
பார்த்துப் பார்த்து
வளர்த்த போதெல்லாம்
நாம் அறிந்திருக்கவில்லை.
ஒளியேறிய கூரிய வார்த்தைகளால்
நம்மாலேயே
அது அநியாயமாகக் கொல்லப்படுமென்று.
நீதான் கொலை செய்தாயென்று
பரஸ்பரம் நீள்கின்றன விரல்கள்.
எவர் தோள்களிலும் சாய்ந்து
கரைக்க முடியாத துக்கமல்லவா.
வா வந்து அருகில் உட்கார்.
பிரேதக் கூராய்வைத் தொடங்குமுன்,
பிரிவின் கடுங் கசப்பேறிய
கடைசித் தேநீரைச் சேர்ந்து பருகலாம்.
3
விசையுடன் சாற்றப்பட்டன
நனைந்த பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள்.
பதற்றத்துடன் கீழிறக்கப்படுகின்றன
படிக்கட்டுகளின் கனத்த மடிப்புத் திரைகள்.
இரட்டை இருக்கையொன்றின்
ஜன்னலோரத்தில்
ஒற்றையாக அமர்ந்திருந்த நீ
அடைபடாத ஜன்னலின் வழி
முகத்தைக் காட்டுகிறாய்.
அத்தனை ஆசையுடன்
முத்தங்களிட்டுச் சிலிர்க்கிறது
வெகு நேரமாய்க் காத்திருந்த மழை.
4
கூர் நகங்களால் பிராண்டி
கோரப் பற்களால் கடித்து
வெளியதிரும்படி ஓசையிட்டு
இரு கைகளால் மார்பிலறைந்து
நம்மிரு மிருகங்கள் போரிட்டு
இரத்தம் வழிய
மூச்சிரைக்க
எதிரெதிர் திசைகளில் நடக்கும்
நம்முடன்
தள்ளாடி நடந்து வருகின்றன.
நாம் பழகியபோது
நாம் தழுவிக் கொண்ட போது
நாம் முத்தமிட்டுக் கொண்டபோது
இவை எங்கிருந்தன?
5
நான் வரைந்த ஓவியத்தை
உங்கள் பார்வைக்கு வைத்தேன்.
கான்வாஸை இன்னும் கொஞ்சம்
கனமாக மாற்று என்றீர்கள்.
மாற்றினேன்.
இந்த பிரஷ்ஷையா பயன்படுத்துவது
என்றீர்கள்.
மாற்றினேன்.
உருவங்கள் தெளிவாக இல்லையே
என்றீர்கள்.
மாற்றினேன்.
வண்ணங்கள்
அடர்த்தியாக இருக்கிறதே என்றீர்கள்.
மாற்றினேன்.
என்ன அழகிய ஓவியம் பார்த்தாயா
என்றீர்கள்.
ஓவியத்தின் ஓரத்திலிருந்த
என் கையெழுத்தை அழித்து
உங்கள் பெயரை எழுதினேன்
சரிதானே?
***