இணைய இதழ் 105சிறார் இலக்கியம்

உனக்கும் கீழே உள்ளவர் கோடி! – ஷாராஜ்

சிறார் கதை | ஷாராஜ்

   ‘என்னா பொழப்புடா இது நாய்ப் பொழப்பு!’ சலித்தபடி, வளர்ப்பு வீட்டு வாசலில் உள்ள வேப்ப மர நிழலில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது கடிவேலு.

   அது ஏழைகளின் வீடு என்பதாலும், அது ஒரு சாதாரண நாட்டு நாய் என்பதாலும், அதற்கு அங்கு உயரிய பராமரிப்போ, உயர் ரக உணவுகளோ கிடைக்காது.

   வடித்த கஞ்சியில் கொஞ்சம் சோற்றைப் போட்டு, எஜமானியம்மா அதற்கு ஊற்றுவாள். நைந்த பழைய சோறு, ஊசிப் போன பலகாரங்கள் ஆகியவை இருந்தால், அதுவும் நாய்ப் பாத்திரத்தில் கொட்டப்படும். ஞாயிற்றுக் கிழமை தோறும் அசைவம் எடுக்கிற அளவுக்கு அவர்களுக்கு வசதி கிடையாது. அதிசயமாக எப்போதாவதுதான் இறைச்சியோ, மீனோ எடுப்பார்கள். எச்சில் எலும்புத் துண்டுகள் மட்டும் கடிவேலுவுக்குக் கிடைக்கும். மீனின் கழிவாடுகளையும், மீன் முள்ளையம் கூட த்ரிஷா பூனைக்குப் போட்டுவிடுவார்கள்.

   கடிவேலுவுக்கு அதன் வளர்ப்பு வீட்டில் கஞ்சி கூட அரை வயிறுதான் கிடைக்கும். அண்டை அயல் வீடுகளில் போடக்கூடிய மிச்ச மீதிகளையும், குப்பையில் கொட்டப்படுகி்ற எச்சில்களையும் தின்றுதான் அது முக்கால் வயிறாக வாழ்ந்து கொண்டிருந்தது.

   “நாய்க்கு ராத்திரி கஞ்சி ஊத்தாத. நொப்பமாக் குடிச்சிட்டு, ராத்திரில அது பாட்டுக்கு கொறட்டையுட்டுத் தூங்கீரும். திருடன் – கிருடன் வந்தா, அதுக்கும் தெரியாது; நம்மளுக்கும் தெரியாது.” எஜமானன், அவனுடையதும் கடிவேலுவுடையதுமான எஜமானியம்மாவிடம் சொல்வான்.

   ‘ஆமா,… இவரு பெரிய அம்பானி, டாடா பிர்லா பரம்பரை! திருடன் வந்து இவுரு சொத்தைத் திருடிட்டுப் போகப் போறான்! உனக்கெல்லாம் என்ன மேன் சொத்து இருக்குது? ஸ்டுப்பிட் பெல்லோ! திருடன் உன்னோட இந்த மாளிகைக்கு வந்தா, என்னைத்தான் திருடிட்டுப் போகணும். நான்தான் உனக்கு இருக்குற ஒரே அசையும் சொத்து!’ என்று கடிவேலு உறுமிக்கொண்டு கிடக்கும்.

   “அரை வயிறு, முக்கா வயிறோட, விடிய விடிய தூக்கம் வராம, புரண்டுட்டிருக்கறது பெரும்பாடு. அது கூடப் பரவால்ல. கண்ட கண்ட ஊர் நாய்க, தெரு நாய்க, சொரி நாய்ககிட்டல்லாம் கடி வாங்கிட்டு, கடிவேலுன்னு பட்டப் பேரு வேற வாங்கி இருக்கறனே…! அதை நெனச்சாத்தான் லைப்பே வெறுத்துப் போகுது!”

   “நாயாப் பொறந்தாலும் நடிகை வீட்டு நாயாவோ, பணக்கார நாயாவோ, ஃபாரின் நாயாவோ பொறந்திருந்தாத் தேவுல! இப்படி கோம்பை நாயாப் பொறந்துட்டு, அதுவும் இப்படிப்பட்ட ஒரு வீட்டுல வளர்ப்பு நாயா இருக்கறது, பெரும் தும்பம். நாம வேற எதாச்சுமா பொறந்திருக்கலாம்” என்று அங்கலாப்பு பட்டுக்கொண்டிருந்தது கடிவேலு.

   அப்போது அந்தப் பக்கமாக வந்த அந்த வீட்டு வளர்ப்புப் பூனையான த்ரிஷா, ஒரு அணிலைத் துரத்தியபடி வேப்ப மரத்தில் ஏறியது. பிறகு அணிலைப் பிடிக்க முடியாமல் இறங்கி வந்தது.

  அதைப் பார்த்த கடிவேலு, “நானும் உன்னை மாதிரி ஒரு பூனையாப் பொறந்திருக்கலாம். எஜமானியம்மா எனக்கு கஞ்சி ஊத்திட்டு, உனக்கு மட்டும் பால் சோறு வெக்கறாங்க. அது போக, நீ அக்கம் பக்கத்து வீடுகள்லயும் பாலைத் திருடிக் குடிக்கற. டெய்லி உனக்கு நான்வெஜ்தான். எலி, ஒடக்காய் (ஓணான்), அணில், தவக்களைன்னு எதையாச்சும் புடிச்சுத் தின்னுக்கற!

   “என்னை மாதிரி உனக்கு, வீட்டைக் காவல் காக்கற வேலையும் கெடையாது. தெண்டச் சோறு தின்னுட்டு சும்மா ஊரச் சுத்திட்டு இருக்க வேண்டியதுதான். எவ்வளவு ஜாலியான வாழ்க்கை!

   “எஜமானியம்மாளோட ப்ளஸ் ஒன் படிக்கிற மக, உன்னைய மடில வெச்சுக் கொஞ்சறா,… முத்தம் வேற குடுக்கறா. குடுத்து வச்சவ நீயி! என் பொழப்புதான் நாறப் பொழப்பா, நாய்ப் பொழப்பாப் போச்சு!” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டது.

   “உனக்கு என்ன ப்ரோ,… உன்னப் பார்த்து சின்னப் பசங்க, பெரிய ஆளுங்க கூட பயப்படறாங்க. ஆனா, நான் பால் திருடப் போகும்போது, வீட்டுக்காரங்ககிட்ட மாட்டாமத் தப்பிக்கிறது எவ்வளவு பாடு தெரியுமா? எசகு பிசகா அன்னைக்கு ஒரு வீட்டுல மாட்டிட்டேன். கதவச் சாத்தி, எனக்குன்னே எடுத்து வெச்சிருந்த குச்சியால மொத்து மொத்துன்னு பின்னிப் பெடலெடுத்துட்டாங்க.

   “அதை அடிச்சுக் கொன்னு போடாத. பூனையக் கொன்னா, வயசான காலத்துல கை – கால் விளங்காமப் போகும்ன்னு, அந்த ஆளோட பாட்டி சொன்னதுனாலதான் அவரு என்னை உயிரோட விட்டாரு. இல்லாட்டி நான் அப்பவே மர்கயா! பூனை பாடு சாதாரணமான பாடு இல்ல; எப்ப எவன் கைல மாட்டுவமோன்னு உருக்கு உருக்குன்னே இருக்கற திருட்டுப் பொழப்புதான் பூனைப் பொழப்பு” என்றது த்ரிஷா.

   அப்படியானால் பூனையாக தான் பிறக்காதது நல்லதாகப் போய்விட்டது என்று எண்ணியபடியே அங்கிருந்து எழுந்து நடையோட்டம் விட்டது கடிவேலு.

   குறிப்பாக எங்கே செல்வது என்று அதற்கு எந்த ஒரு ஐடியாவும் இல்லை. கால் போன போக்கில் ஓடிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே அதைப் பார்த்துக் குரைக்கிற வளர்ப்பு நாய்களுக்கு பதில் சொன்னபடியும், கடிக்க வருகிற தெரு நாய்களுக்கு டிமிக்கி கொடுத்தபடியுமாகத் தப்பித்து, ஊருக்கு வெளியில் உள்ள ஆற்றின் பக்கம் சென்றுவிட்டது.

   கரையோரத்திலிருந்து ஆற்று நீரைக் குடித்துக் கொண்டிருந்தபோது, அதில் நீந்திக்கொண்டிருக்கும் மீன்கள் தென்பட்டன.

   அவற்றைப் பார்த்து, “நீங்க ரொம்ப குடுத்து வெச்சவங்கப்பா! எவ்வளவு சுகமான வாழ்க்கை உங்களுக்கு! கோடை வெயில் கொளுத்தி எடுக்கறதால எனக்கு ஒடம்பு எரியுது. ஆனா, நீங்க என்னேரமும் தண்ணிக்குள்ளேயே, வெயிலோட சூடு தெரியாம சொகுசா வாழ்ந்துட்டிருக்கறீங்க. என்னை மாதிரி வீட்டைக் காவல் காக்க வேண்டிய வேலையோ, அரை வயிறு – கால் வயிறா இருக்கவேண்டிய நிலையோ உங்களுக்கு வராது. நானும் கூட உங்கள்ல ஒருத்தனாப் பொறந்திருக்கலாம்” என்றது.

  அப்போது அயிரை மீன் ஒன்று மேற்பரப்புக்கு வந்து, “இருக்கற வரைக்கும் நாங்க சுகமாக இருக்கலாம். ஆனா, எப்ப எங்களுக்கு ஆபத்து வரும்னு சொல்ல முடியாது. மீன் பிடிக்கறவங்க எங்களைப் பிடிச்சுட்டுப் போகலாம். இல்லாட்டி வாத்து, முங்காங்கோழி, கொக்கு, நாரை, மீன்கொத்தி மாதிரி பறவைகள் எங்களைப் பிடிச்சுத் திங்கலாம். எங்களுக்குள்ளேயே பெரிய மீன்கள், சின்ன மீன்களை முழுங்கறதும் உண்டு. இதுக்கெல்லாம் தப்பிச்சுத்தான் நாங்க வாழ்ந்து, வளர வேண்டியிருக்குது. அப்படியும் கோடைகாலத்துல ஆத்துத் தண்ணி வத்தும்போது, மக்கள் மொத்தமா எங்களைப் பிடிச்சுட்டுப் போயிடுவாங்க. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளா இருந்தா, ஆறு முழுக்க வத்தும்போது நாங்க தானாவே செத்துப்போயிடுவோம்.

   “ஆனா, உனக்கு அது மாதிரி ஆபத்து எதுவும் இல்லை. சேட்டைக்காரப் பசங்ககிட்ட கல்லடி பட்டாலும், மத்த நாய்ககிட்ட கடி வாங்கினாலும், உயிருக்கு ஆபத்தான நிலை உனக்கு வரப்போறதில்லை. அவ்வளவு ஏன், தெரு நாய்களைக் காப்பாத்தறக்குக் கூட ப்ளூ க்ராஸ் இருக்குது. ஆனா, நாங்களோ எந்த நேரமும் உயிரைக் கையில புடிச்சுட்டுத்தான் வாழறோம்” எனப் புலம்பியது.

   ‘நல்ல வேளை,… நான் மீனாப் பொறக்குல!’ என்று எண்ணிக்கொண்டு அங்கிருந்து நடையோட்டம் தொடர்ந்தது கடிவேலு.

   கரையோரமாக இருந்த மரங்களில் கொக்கு, நாரை, மீன்கொத்தி முதலான மீன்பிடிப் பறவைகள் அமர்ந்திருந்தன.

   அவற்றை அண்ணாந்து பார்த்த கடிவேலு, “இந்த பூமியிலேயே செம ஜாலியா வாழக்கூடிய உயிரினங்க நீங்கதான்! மனிதர்கள், விலங்குகள், மீன்கள், மற்ற பிராணிகள் எதாலயும் பறக்க முடியாது. பூச்சிகளும், நீங்களும்தான் பறக்க முடியும். ஆகாயத்துல பறந்து திரியறது எவ்வளவு ஜாலியான விஷயம்! நானும் உங்களை மாதிரி ஒரு பறவையாப் பொறந்திருக்கலாம்” என்றது.

   “பறக்கறது சில சமயம் ஜாலியான விஷயம்தான். ஆனா, இரை தேடி நாங்க ரொம்ப தூரம் பறந்து வந்திருக்கறோம். எங்களுக்கு இப்பவே டயர்டா இருக்குது. நாங்க லஞ்ச் சாப்டுட்டு, தொலை தூரத்துல இருக்கற எங்க கூடுகளில காத்துட்டிருக்கற குஞ்சுகளுக்கு டின்னர் எடுத்துட்டும் போகணும். இறக்கை ஒடிஞ்சு விழற மாதிரி அவ்வளவு வேதனையா இருக்கும். ஆனா, எங்களுக்காகவும், எங்க குஞ்சுகளுக்காகவும் நாங்க இந்தக் கடுமையான பயணத்தை மேற்கொண்டாக வேண்டியிருக்குது. இடையில யாராவது வேட்டைக்காரங்க எங்களை வேட்டையாடற ஆபத்து இருக்கு. அதே மாதிரி, கூட்டுல இருக்கற குஞ்சுகளை, கழுகு, பருந்து, வல்லூறுன்னு ஏதாவது பறவைகள் கொத்தித் தின்னுடவும் சான்ஸ் இருக்கு. எங்க முட்டைகளை பாம்பும் குடிச்சுட்டுப் போயிடும்.

   “ஆனா உனக்கோ, நாய்க் குட்டிகளுக்கோ இப்படிப்பட்ட ஆபத்துகள் எதுவும் இல்லை. பறவைகளோட வாழ்க்கை அந்தரத்துல இருக்கற மாதிரி, உயிரும் கூட எந்த நேரமும் அந்தரத்துல ஊசலாடிட்டுத்தான் இருக்கும்” என்றன அந்தப் பறவைகள்.

   ‘நல்ல வேளை, நான் பறவையாவும் பொறக்காம நாயாப் பொறந்தேன்!’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட கடிவேலு, ‘ஒவ்வொரு உயிரினமும் நமக்கு மேலானதுன்னு நெனைச்சா, அதெல்லாமே நம்மளைவிடக் கீழதான் இருக்குது. உண்மைல மனுசனுக்கு அடுத்தபடியான உயர்ந்த உயிரினம் நாமதான் போலிருக்குது!’ என எண்ணிப் பெருமைப்படவும் செய்தது.

-shahrajscape@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button