கவிதைகள்
Trending

தாட்சாயணி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

கற்சிலை

ஓராயிரம் நாட்கள் கடந்தன…
இன்னும் அந்தக் கற்சிலை
கல்லாகவே கிடக்கிறது
ஓராயிரம் இலைகள்
பழுத்து உதிர்ந்து
அந்தக் கல்லைத் தழுவிச் சுரந்தன
எந்த மாற்றமும் இல்லை
ஓராயிரம் சொற்கள்
அந்தக் கல்லுக்கு
இரங்கற்பா எழுதின,
எதுவும் நடக்கவில்லை
ஓராயிரம், ஈராயிரம்… பல்லாயிரம்
காலம் கடந்து, கடந்து போயிற்று
அந்தக் கல் இன்னும் கல்லாகவே கிடக்கிறது!

***

தகிப்பு

நெருப்பின்  நடனத்தில்
தாவி  அசைகிறது  கடவுளின்  நாவு.
நூறாயிரம்  கிருமிகள்  நெளிகின்றன.
சுரத்தின்  வெப்ப  அருகாமையில்
மனிதன்  தவிர்ந்த  விலங்குகள்  யாவும்
குளிர் காய்ந்தபடி… சுகிக்கின்றன.

தகிக்கின்ற  நெருப்பின்  முன்
சுருள்கின்றான்  மனிதன்

ஒரு  அணைவும்,
சிறு  தொடுகையும்
உறவிலிருந்து  வெளியேறுகின்றன!

மரணத்தின்  துளி  வாசனையை
காற்றுக்குள்   புகுத்தி,
மூச்சுக்குள்  எட்டி  எறிகிறது  ஊழி.

இரவிலிருந்து  பகல்…
பகலிலிருந்து  இரவு…
மிக, மிக  நீளும்  வெறுங்காலம்.

அச்சத்துடனான  நகர்வில்
ஆதாமின்  தனிமை
ஒருமுறை  புரள்கிறது.

மூன்றடி  தள்ளி  நிற்கிறாள்  ஏவாள்!

இனி,
பேசுவதற்கும்  முடியாது!
எச்சிலிலிருக்கும்  அமுதத்தை  விட
விஷம்  அதிகம்.

***

நீல மென்சிறகு

பிறகு…
நெருப்பை உமிழ்ந்த வானத்திலிருந்து
ஒரு சிறகு வீழ்ந்தது!

நீல மென்சிறகிலிருந்த புள்ளிகளிலிருந்து,
எந்தப் பறவையினுடையதும்
அடையாளம் இல்லை!
குயிலின் குரலிலிருந்து
அந்தச் சிறகு உற்பவித்திருக்கலாம்…!
நரை நிறத்துப் பளிங்கென அது
ஒளிர்ந்து, ஒளிர்ந்து நிறைந்தது!

நீ எனைப் பிரிந்து போயிருந்தாய்!

அந்தச் சிறகு காற்றில்
அலைந்து, அலைந்து
என் ஒவ்வொரு அணுவையும் தழுவியது…!
என்னிடம் வந்து சேர்ந்த அந்தச் சிறகை
குழல் ஊதிக் கொண்டிருந்த சிறுவன்
பறித்துக் கொண்டான்!

ஒரு தீச்சொல் கீழே உதிர்ந்தபோது
என் சிறகுகள் எரிந்தன!

முழுதாய் எரிந்த பிறகு
என்புகளால் மட்டும்
நிரம்பியிருந்தேன்!

சவர்க்காரக் குமிழி போலும்
பட் டென்ற உடைவு,
பலூனைப் போல
குத்தி உடைக்கவியலாது என்னை,
எனச் சொல்லிக் கொண்டேயிருக்கிறது.

***

மாய இசை

ஆதிவாசி ஒருவனின் குடிலுக்குள்ளிருந்து
கிளம்புகிறது,
மூங்கில் வாசனையுடனான கீதம்!

எந்தப் பாசாங்குமில்லாமல்
அந்தப் பாடலை இசைக்கிறான் அவன்!

மேகத்திலிருந்து இறங்குகிறது மழை!
ஈரக்குளிர்ச்சியில்
சிலிர்க்கின்றன பச்சைப் புற்கள்!

வண்ணாத்தியின் சிறகுகளிலிருந்து
திரட்டிய வண்ணங்களை
இசையில் நனைத்து
வானுக்கு அனுப்புகிறான்!

வானவில்லை நோக்கிச்
சிறகடிக்கின்றன பறவைகள்!

கார்காலத்தைச் சுவைக்கிறது காடு!

***

மூடப்பட்ட நகரம்

தனிமையின்  சாளரத்திலிருந்து
திட்டுத் திட்டாய்  நிறங்கள்  உதிர்கின்றன
மஞ்சளிலிருந்து  விசிறப்பட்ட  மகரந்தப்பொடிகளாகவும்,
நீலத்திலிருந்து  சொட்டிய  நட்சத்திரங்களாகவும்,
பின்  வெண்மையிலிருந்து  நழுவிய  அமிழ்தத் துகள்களாக,
கடைசியில்,
சிவப்பிலிருந்து  குருதித்துளிகள்  உதிர,  உதிர
கொஞ்சம்,  கொஞ்சமாய்
கழுத்தை  இறுக்குகிறது  அகோரனின்  பிடி.

ராட்ஷசப்  பருந்தொன்று
வானத்தில்  சுற்றிக்கொண்டிருக்கிறது,
இதுகால வரையில்  கிடைத்திராத
பிரமாண்ட  விருந்தொன்றிற்காக.

அந்தியை  உரசிக்கொண்டு
எப்போதும்  கேட்கின்ற  ரயிலின்  கூவல்
கண்களறியாக்  குகைக்குள்ளே  நுழைந்தபின்
திரும்பி  வராமலே  போனது.
இரவினைப்  புணர்கின்ற
இயந்திர  உறுமல்களோ  இப்போதில்லை.

சப்தங்களற்ற  உறைவிலிருந்தது  நகரம்.
நீளச்சாலைகள்  தோறும்  மருந்திற்கும்  ஆட்களில்லை.

கதவடைக்கப்பட்ட  கோவிலுக்கு  வெளியே  நிற்கிறேன்.
உள்ளே  சிலவேளை,
சிலைகள்  பேசிக்கொண்டிருக்கலாம்.

மீன்கள்  கரையொதுங்குகிறாற்போல்…
சடலங்கள்  குவியல்,  குவியலாக
கரையொதுங்கிக் கொண்டிருக்கும்
காலத்தில்  நிற்கிறேன்…

மிக  அருகில்  கடந்து  போய்க் கொண்டிருக்கிறது,
குறி  பார்த்து  வீசப்பட்ட  யமனின்  கத்தி.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button