
வெள்ளிக்கிழமையென்றாலே
அம்மையின் கால்களுக்கு
ஓய்வு என்பதில்லை
விரிசல் விட்ட
கால்களில்
அப்பிக் கிடக்கின்றன
சகதிகளும்
திடமான நம்பிக்கையும்
வெடவெடுத்துப் போய்
கூடையை இறக்கி
கூவும் அவளுக்கு
அவ்வப்போது
கூறுக் காய்களுக்கிடையில்
நீந்திப் பாய்கிறது
மெல்லிய குரலின்
மௌன ரீங்காரம்
ஒவ்வொரு வாரச்சந்தையிலும்…
****
கிணற்றடியில்
நினைவுகளைக் கிளப்பி
துவைத்துக் கொண்டிருக்கும்
வெள்ளந்தி அப்பாவிடம்
முத்தத்தை நடவு செய்யும்
வண்ணத்துப்பூச்சியின்
தூரத்து வாசனையை
சுழியெழுப்பி
நிமிரும்
புழுதிக் காற்றுக்கிடையில்
ஒற்றைப் பனையிலிருந்து
லயித்துக் கொண்டிருக்கிறது
இளைப்பாறும் சுடரொளி.
****
கொடிப்பிச்சிகளும்
கோபுர வெற்றிலையும்
விரித்தாடும்
மூங்கில் வரிந்த வேலியில்
நார் திரிந்த
கொடிக் கயிற்றில்
தறி வேட்டியின்
நுரைப் பூக்களை
சிலுப்பி உதறுகையில்
வந்தமர்கிறது
கதிர் அறுப்பில்
கூடுகளை இழந்த
எச்சக் கோலமிடும்
ஊர்க்குருவிகளின் படை
********