இணைய இதழ்இணைய இதழ் 100மொழிபெயர்ப்பு சிறுகதைமொழிபெயர்ப்புகள்

ரேடியோ ஸ்டேஷனில் ஓரிரவு –

மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

கன்னடத்தில்: சந்தியாராணி            
தமிழில்: கே. நல்லதம்பி

‘ரேடியோ பெங்களூர்’

-மேலே நீலக்கருவானம், வானின் ஒரு துணுக்கு கழண்டு விழுந்தது போல என்ற கரும்பலகை, அதைச் சுற்றி இருந்த ஒளிச்சுடர், பக்கத்து மரத்து நிழல், அவற்றுக்கு நடுவில் கடும் சிகப்பின் இந்த எழுத்துக்கள், ஒரு நல்ல ஃபிரேம் ஆகலாம் என்று நினைத்து, ‘சத்யபிரகாஷ’னுக்கு சைட் ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி, அப்படியே வண்டி மீது உட்கார்ந்து கொண்டு மொபைல் எடுத்து ஃபோட்டோ கிளிக் செய்து இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்து, #radio station, #childhood dream என்று எழுதி போஸ்ட் செய்தேன்.

‘இந்த மாதம் எங்கள் சிறப்பு ‘ஷோ’க்கு நீங்கள் விருந்தினராக வரவேண்டும் சார்’ – என்று அழைப்பு வந்த போது ஒப்புக்காகவது ‘அய்யோ நான் எதற்கு’ என்று சொல்லாமல் ஒத்துக்கொண்டிருந்தேன். கவிஞனாக இருப்பதும், தற்போது சினிமா ஒன்றுக்கு எழுதிய பாட்டு ஹிட் ஆகியிருப்பதும் அதற்குக் காரணம். ரேடியோ என்றால் எனக்கு படு மோகம். சிறுவனாக இருந்த போது தாத்தா ஊரில் கூரைக்குக் கட்டியிருந்த கம்பி வலை என்றால் ஏதோ வியப்பு.

‘அது ரேடியோ வரட்டும் என்று கட்டியது, இப்போது டிவிக்கு ஆண்டெனா இருப்பது போல’ – என்று சொல்லியிருந்தார் தாத்தா. அவர் காலத்தில் ரேடியோக்குத் தேவையான லைசன்சைக் கட்டியிருந்தார். தாத்தா வீட்டிற்குப் போனால் சமையலறை மற்றும் குளியளறைக்கு நடுவில் இருக்கும் சாப்பாட்டு அறையில் – அதை எதற்கோ ‘நடுவில்’ என்பார்கள் – உயரமாக இருந்த சன்னல் கூட்டில் ஒரு பெரிய ரேடியோ இருந்தது. நான் இரண்டு கைகளையும் நீட்டினால் தழுவிக்கொள்ளும் அளவிற்கு பெரியது. மாமன் என்னைத் தூக்கிக்கொள்ளும் போது அதன் பெரிய பெரிய குமிழ்களைச் சுழற்றி வெவ்வேறு மொழிகளில் அதில் பாட்டை வரவழைத்து எனக்கு நானே பெரிய மனிதன் போல தோன்றும். வீட்டுக் கடைசிக் குட்டி நான், முதல் பேரன், எல்லோரும் என்னைவிட உயரம். அதொரு தருணத்தில் நான் எல்லோரையும் விட உயரமாக இருப்பேன். தாத்தா வீட்டிற்கு போனவுடன் ‘என்னை தூக்கிக்கொள்ளுங்கள்’ என்று எல்லோரையும் நச்சரித்து ரேடியோவைத் தொடுவேன். கண் முன்னாடியே இருந்து, என்னளவு உயரமான டிவி என்னை அந்த அளவிற்குக் கவரவில்லை. பிறகு நான் உயர்நிலைப் பள்ளியில் இருந்த போது என்று நினைக்கிறேன், தாத்தா நொடிந்து போயிருந்தார். என் ரேடியோ மீதான விருப்பம் அறிந்திருந்த அவர், இந்த முறை ஊரிலிருந்து வரும் போது, ‘ரேடியோ எடுத்துட்டு போறயாடா?’ என்றார். அம்மா சுத்தமாக வேண்டாம் என்றாலும் கேட்காமல் பிடிவாதமாக அதை எடுத்து வந்து அப்பாவின் ஜீப்பில் வைத்தேன். மனதில் அதற்கு ‘முத்துலட்சுமி’ என்று பெயர் சூட்டினேன். லிஃப்ட் ஏறும்போது ‘சத்ய பிரகாஷ்’ சரியான இடத்தில் இருக்கிறான் என்று உறுதி செய்து கொண்டேன். எனக்குப் பிடித்தமான எல்லாவற்றுக்கும் ஒரு பெயர் வைப்பது என் பழக்கம். காசு சேர்த்து, வாழ்க்கையின் நோக்கம் என்று கொண்டிருந்த புல்லட் வாங்கிய அன்றே அதை கோவிலுக்கு எடுத்துச் சென்று ‘சத்யபிரகாஷ்’  என்ற  பெயரில் பூசை செய்ய வைத்தேன். அதைப் பார்த்து எல்லோரும் சிரித்தார்கள், ஆனால் ஜானு மட்டும் கையை அழுத்தி உள்ளங்கைக்கு முத்தமிட்டிருந்தாள். ஜானு என்றால்…

ரிசப்ஷனில் என் பெயரைக் கொடுத்தேன். அவர் கெஸ்ட் ஐடி கொடுத்து கழுத்தில் மாட்டிக்கொள்ளச் சொன்னார்கள். என்னுடன் பேசிய ஆர்ஜே சௌதாமினி வெளியே வந்து கை குலுக்கி என்னை அழைத்துச் சென்றாள். நடுத்தர உயரம், நல்ல உடல்வாகு, கொஞ்சம் சிவந்த நீண்ட முடி. அதை எல்லாம் மீறி அவளிடம் ஏதோ ஒரு கவர்ச்சி இருந்தது. அவள் கார்டைத் தேய்த்த போது கதவு திறந்துகொண்டது. தற்போதைய எந்த கார்பரேட் அலுவலகங்கள் போல ஃபார்மல் அல்லாத சூழல். என்னைவிட சிறிய வயது பையன் பிள்ளைகள் விளையாடுவது போல வேலை செய்து கொண்டிருந்தார்கள். யாரோ எழுதிக் கொண்டிருந்தார்கள், யாரோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார்கள். மற்றொருவர் எதையோ யோசித்துக்கொண்டு எதிரில் இருந்த கண்ணாடி சுவரில் பந்தை வீசி எறிந்து அது தெறித்து திரும்பி வரும்பொது அதைப் பிடித்துக் கொண்டிருந்தார். நான் பணியாற்றிக் கொண்டிருந்த அரசாங்க அலுவலகத்திற்கு முழுமையாக மாறுபட்ட சூழல் இங்கே. சௌதாமினி தன் டெஸ்க் அருகே அமர்ந்து, எனக்கொரு நாற்காலியை இழுத்துப் போட்டாள்.

‘ப்ரோக்ராம் இன்னும் அரை மணி நேரத்தில் ஆரம்பமாகும் சார். சிம்பல் இது. நான் நிகழ்ச்சியைத் தொடங்குகிறேன். இது லேட் நைட் ஷோ. அழைப்பவர் சாதாரணமாக வேறொரு மூடில் இருப்பார்கள். சிலர் கிண்டல் செய்யவே ஃபோன் செய்வார்கள், சிலர் சிடி பிஸி வாழ்க்கையிலிருந்து காலி வீடுகளுக்குத் திரும்பிய பிறகு அந்த வெறுமையை பொறுக்க முடியாமல் ஃபோன் செய்வார்கள், சிலர் அவர்களின் ஏதோ துயரத்தை சொல்லிக்கொள்ளவும் ஃபோன் செய்வார்கள். நாங்கள் அவர்களுடைய எல்லா பேச்சுகளையும் கேட்போம். பரிகாரம் எதுவும் கொடுக்கா விட்டாலும், சொல்லிக் கொண்ட ஆறுதல் அவர்களுக்கு. ஒரு வகையில் நாங்கள் காசு கேட்காத உளவியலாளர்கள்’ – என்று சிரித்தாள்.

‘நான் என்ன செய்ய வேண்டும்?’

இங்கே வரும் மகிழ்ச்சியில் இதுவரை அந்த கேள்வியையே கேட்கவில்லை நான்!

‘அழைப்புகளுக்கு இடையே உங்களுடன் பேசுவேன். உங்களைப் பற்றி, உங்கள் எழுத்தைப் பற்றி பேசுங்கள், உங்கள் விருப்பமான பாட்டைக் கேட்பேன்… அழைப்பவர்களுக்கு நீங்கள் ஏதாவது பதில் சொல்ல வேண்டுமென்றால் சொல்லலாம்…’

விவரித்துக் கொண்டே போனாள். என்னுடன் பேசிக்கொண்டே அவள் நோட்ஸ் எடுத்துக் கொண்டாள்.

‘நீங்கள் ஆசுகவிதை எழுதுவீர்களா சார்?’

‘எதற்கு?’

‘எங்கள் பிரட்யூசர் புது ஐடியா கொடுத்தார். நீங்கள் சரி என்றால்…?’

எழுதுபவர்களுக்கு தங்கள் எழுத்தைப் பற்றி ஒரு சிறிய செருக்கு இருக்கும், அதுபோலவே ஒரு சிறிய இன்செக்யூரிட்டியும் கூட. லைவ் என்று வேறு சொல்கிறார்கள், ஏதாவது வெட்கக் கேடானால்…

‘என்றால் உடனே சொல்ல வேண்டுமா?’

‘இல்லை, இல்லை, உடனே அல்ல. ஒரு பாட்டு.. ஒரு விளம்பர நேரம் இருக்கும்.’

அழகாகச் சிரித்ததாள். கவியானவன் அப்படிப்பட்ட பெண் முன்னால் முடியாது என்பது எப்படி? மரியாதை விஷயம்!

‘ஊம்’ என்று சொல்லிவிட்டேன்.

‘இப்படி உங்களுக்கு ஃபோன் வருகிறதே, உங்கள் நிகழ்ச்சியில், இன்ட்ரஸ்டிங் ஆனது இல்லையா?’ – என்ன கேட்பது என்று தெரியாமல் கேட்ட கேள்வி அது!

‘ஓ எஸ்! அதனால் தான் இந்த வேலை என்றால் எனக்கு மிகவும் விருப்பம். ஒரு முறை வேலன்ஸ்டைன் டேக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். சிங்கிளாக இருப்பவர்கள் நம்பரை வாங்கிக்கொண்டு, கம்ப்யூட்டர் வழியாக ஒரு ஆண் ஒரு பெண் நம்பரை ஃபிக்ஸ் செய்து, இருவரையும் அழைக்கச் சொல்வது. பிளைண்ட் டேட் என்பார்களே அது போல. ஒரு மாதிரி நன்றாக இருந்தது. அதில் ஒரு ஜோடி இணைந்து வந்து முந்தாநாள் கேக் கொடுத்துப் போனார்கள்!’

பேசிக்கொண்டே சௌதாமினி என்னை ரெகார்ட் ஸ்டூடியோவிற்குள் அழைத்துச் சென்றாள். கதவருகே நின்று பார்த்ததவன் அசந்து போனேன். அவள் உட்கார்ந்திருந்த சுழலும் நாற்காலி, அதன் எதிரில் ஒரு கன்சோல், அதில் இருந்த ஏற்ற இறக்கத்து சிகப்புக் கறுப்பு நாப்கள், அதற்கு பொருத்திய இரண்டு கம்ப்யூட்டர் ஸ்கிரீன்கள், அருகில் லேண்ட்லைன் ஃபோன். அதன் அருகில் டேபிள் லேம்ப், லேப்டாப், மௌஸ், பேப்பர்கள், டிவி ரிமோட், பேப்பர் கிளிப், பேனா ஸ்டேண்டில் இருந்த நேர்த்தியாக முனை சீவிய வண்ண வண்ண பென்சில்கள், அருகே கண்ணாடி மலர் குவளையில் இருந்த பூக்கள்…

‘பன்னிரெண்டு கைகள் கொண்ட துர்காதேவி போல தெரிகிறீர்கள்’ – என்று பாராட்டி சொல்லி எதிரில் இருந்த நாற்காலியின் மீது அமர்ந்து கொண்டேன்.

‘ஆல்மோஸ்ட் அப்படித்தான், முன்பு ஃபோனில் பதில் சொன்னால் போதுமாக இருந்தது. இப்போது ஃபோனுடன் ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் எல்லாம் பார்க்க வேண்டும். கூடவே நியூஸ் பக்கமும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்’ – என்று என் பின்னால் சுவர் மேல் பகுதியில் தொங்கவிட்ட டிவியைக் காட்டினாள். என்னுடன் பேசிக்கொண்டே நிகழ்ச்சியை தொடங்கினாள்.

‘ஹலோ, குட் ஈவனிங்! பெங்களூரின் இரவுக் குளிரில் வீட்டில், அலுவலகத்தில், கேப்-இல், ஆட்டோவில், காரில், டூவீலர் சீட்டில் அமர்ந்து கொண்டும், தெருவில் நடந்து கொண்டும், நின்று கொண்டும், ஓடிக்கொண்டும் என் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கும் நண்பர்களே… ஆதாப் வணக்கம் குட் ஈவனிங்! ரேடியோ பெங்களூர் 99.5 இன் ‘பேச்சு உங்களுடையது பாட்டு எங்களுடையது’ நிகழ்ச்சிக்கு வரவேற்கிறோம். நான் உங்கள் அன்பான சௌ…தாமினி! ஏதாவது பேசுங்கள், எவ்வளவாவது பேசுங்கள். இன்று நம்முடன் இருக்கிறார் எங்கள் உங்கள் எல்லோருடைய அன்பான கவிஞர் எழுத்தாளர் சாகில் அவர்கள்’

அந்தப் பெண்ணின் தன்னம்பிக்கையைப் பார்க்க விருப்பமாக இருந்தது. அப்படி பார்க்கப் போனால் பெண்ணின் அழகைவிட அவள் தன்னம்பிக்கை எப்போதும் எனக்கு கவர்ச்சிதான். ஜானுவைப் பார்த்தால் அதனால்தான் எனக்கு பெருமை, மதிப்பு. என் எழுத்தைப் பற்றி யார் என்ன புகழ்ந்து பாராட்டினாலும், ஜானு அதைப்பற்றி என்ன சொல்வாள் என்பது எனக்கு எப்போதும் முக்கியம். ஏனென்றால் அவள் தயங்காமல் தன் கருத்தை சொல்லிவிடுவாள். அஃப்கோர்ஸ் அதை எப்போதும் நான் அவளிடம் சொல்லியதில்லை. செருக்கு என்றல்ல, என்னமோ எல்லாவற்றையும் அப்படி சொல்லிக்கொள்ள முடிவதே இல்லை. சொல்லாமல் இருக்கும் உணர்வுகளில் இருக்கும் உண்மையை வார்த்தை தொட்டவுடன் குறைந்து விடுகிறது என்று தோன்றுகிறது. ஆனால், ஜானு அப்படித்தான்.. என்னிடம் எதையாவது சொல்லாமல் தக்க வைத்துக் கொண்டால் சங்கடமாகும். ஜானு புரிந்து கொள்வாள். வைவாள், ஆனாலும் புரிந்து கொள்வாள்.

அதற்குள் ஒரு ஃபோன் வந்தது. ஸ்பீக்கர் அழுத்தியதால் எனக்கும் கேட்டது. கவனமாக கேட்டேன். அடுத்த பக்கத்திலிருந்து யாரும் பேசவில்லை. மூச்சு விடும் சத்தம் மட்டும் கேட்டது. ஓரிரு நொடிக்குப் பிறகு சௌதாமினி,

‘ஹலோ, நீங்கதானா? இரண்டு நாட்களாக ஃபோன் செய்வது, எதற்காக பேசாமல் இருக்கிறீர்கள்?’

‘நீங்கள் ஃபோன் நம்பர் நோட் செய்துகொள்கிறீர்களா?’

ஏதோ பெண், குரலில் அதிர்ச்சி.

‘இல்லை, இல்லை மூச்சு விடுவது கேட்டேனே, அதுமட்டுமல்ல இதே நேரத்துக்கு ஃபோன் செய்கிறீர்கள்…’

‘ஓ…அது… பிறகு ஃபோன் செய்யட்டுமா?”’

ஃபோன் கட் ஆன ஒலி. பேக் டு பேக் இரண்டு பாட்டுகள் என்று பாட்டைப் போட்ட சௌதாமினி போய் இரண்டு கப் காப்பி எடுத்து வந்தாள்.

‘இது போல கால்ஸ் வந்து கொண்டிருக்குமா?’

ஆர்வத்துடன் கேட்டேன்.

அதற்குள் அவள் போட்ட அடுத்த பாட்டு வந்தது.

‘ராத் ஆயே தோ வோ ஜின்கே கர் தே, வோ கர் கோ கயே சோ கயே

ராத் ஆயி தோ ஹம் ஆவாரா ஃபிர் நிக்லே

ராஹோ மே அவுர் ஃபிர் கோ கயே…’

‘இரவு இந்த நேரத்தில் யார் ஃபோன் செய்வார்கள் சார். குடும்பம் இருப்பவர்கள் எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். நண்பர்கள் வெளியே எங்கேயோ சுற்றிக் கொண்டிருப்பார்கள். காதலர்கள் அவர்களே பேசிக் கொண்டிருப்பார்கள். ஃபோன் செய்பவர்கள் எல்லாம் தனியாக இருப்பவர்கள். சொல்லிக்கொள்ள எவ்வளவோ இருந்தும், சொல்லிக்கொள்ள யாரும் இல்லாதவர்கள்…’

எவ்வளவு பொருத்தமான பாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்! அடுத்த ஃபோன் ஒரு இளைஞனுடையது. பெயர் ரஃபி. அவன் விரும்பிய பெண் அவனை விட்டுப் போய்விட்டாள். எட்டு மாதமாகிறது. இன்னும் மறக்க முடியவில்லை. அவள் வெளியேறியதை விட அவனை அதிகமாக வாட்டிக் கொண்டிருப்பது அதற்கு அவள் எந்த காரணமும் கொடுக்காமல் போனது.

‘பேசிக்கொண்டிருந்தவள் எழுந்து அப்படியே போய் விட்டாள் மேடம்… அவள் காரணம் சொல்லியிருந்தால் இப்படி வலித்திருக்காது, எதற்காக என் வாழ்க்கையில் வந்தாளோ…’

அவன் குரலில் கண்ணீர் பசை. பேச்சை மாற்றவென்று சௌதாமினி,

‘ஒரு வேலை செய்யலாம் ரஃபி நம்முடன் இன்று கவிஞர் சாகில் இருக்கிறார். நீங்கள் ஏதாவது நான்கு சொற்களைக் கொடுங்கள், அவர் உங்களுக்காக ஒரு கவிதை சொல்வார்’ என்றாள்.

‘சார் வணக்கம். என் வலியை எல்லாம் அப்படியே எழுத வேண்டும் சார். நான்கு சொற்கள்… ‘நீ’, ‘இரவு’, ‘தூரம்’, பிறகு ‘குட் பை – பிரிவு’, சொல்லுங்க சார்?’

‘ரஃபி இப்போது இந்த பாட்டைக் கேட்டுக்கொண்டிருங்கள், பாட்டு முடிவதற்குள் கவிஞர் உங்களுக்கு கவிதையைக் கொடுப்பார்…’

‘தண்ணீரில் சிறு அலையொன்று தோன்றி உடைந்த நிலா இப்போது

இங்கொரு துண்டு அங்கொரு துண்டு…’

ஜானுவுக்கு பிரியமான பாட்டு… அவள் எனக்கு கடைசியாக அனுப்பிய பாட்டு…

இந்த பெண் எவ்வளவு அழகாக, அவ்வளவு குறைந்த நேரத்தில் சூழலுக்கு ஏற்றார் போல பாட்டுக்களை தேர்ந்தெடுக்கிறாள்.

சௌதாமினி அந்த நான்கு சொற்களை எழுதிய தாளை என் முன் வைத்தாள். ரஃபியின் குரலில் இருந்த வலி, என் மனதில் இருந்த வலி இரண்டும் குடைந்தன.

‘நேரத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஒருவேளை முடியாவிட்டால் மற்றொரு பாட்டைப் போடுகிறேன்.’

என் முன்னால் நான்கு சொற்களின் அந்த தாள். என் மனதில் அங்கே எங்கேயோ துபையில் இருக்கும் ஜானுவின் முடி சிகைக்காய் மணம்…

‘உனக்கு விடை சொன்ன நாளிலிருந்து

ஒவ்வொரு இரவும் படுக்கையின் உன் பக்கமே

படுக்கிறேன். ஆனால்

விடியும் போது படுக்கையின் என் பக்கத்திலிருந்து

எழுகிறேன்.

ஒவ்வொரு இரவும் அது எத்தனை தொலைவை கடக்கிறேன்…’

ஒரே மூச்சில் எழுதி சௌதாமினியிடம் கொடுத்தேன். மைக்கில் அதை வாசித்த சௌதாமினி என் கண்களை கூர்ந்து நோக்கினாள். நான் அவள் பார்வைத் தவிர்த்தேன். பாட்டைக் கேட்ட ரஃபி அமைதியாக இருந்தான். அவனுக்குப் புரிந்ததோ இல்லையோ… நான் பேசினேன்,

‘ரஃபி, விலகிப் போவவர்கள் காரணம் சொல்லிப் போனால் வலி குறையுமா? ஒருவேளை உங்கள் வாழ்வில் அந்த காதல் வாராமலே இருந்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு வெறுமையாக இருந்திருக்கும் யோசியுங்கள். காதல் நிரந்தரமாக கூட இருந்து நன்றி காட்டத் தேவையில்லை ரஃபி, அது இருந்த போது பெற்ற இன்பத்தின் நன்றியை அது போன பிறகு தீர்க்கிறோம் அவ்வளவுதான். எவ்வளவு அதிகம் காதலோ, அவ்வளவு அதிகம் அதன் நினைவு…’

ஒரு சிகரெட் புகைக்க வேண்டும் என்ற பதட்டம் ஆரம்பமானது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்

மீண்டும் வந்தது அந்த பெண்ணின் அழைப்பு. சௌதாமினி எந்த அவசரமும் படாமல் ‘பேசுங்கள்’ என்றாள்… அடுத்த பக்கத்திலிருந்து தயங்கித் தயங்கி பேச்சு வந்தது…

‘ஒரு விஷயம் சொல்லணும்… இது நடந்து மூன்று நாட்களானது… ஏனோ மறக்க முடியவே இல்லை… என்னுடைய தவறு ஏதாவது இருந்ததா தெரியவில்லை… நான் வேறு ஏதாவது செய்திருக்க வேண்டுமா புரியவில்லை… ஆனால், ஒரே பதட்டம்… குழப்பம்… அவமானம்…

குரல் கேட்டால் மிக இளமையானவள் அல்ல. நடு வயதுப் பெண்ணாக இருக்கலாம். மென்மையாக பேசிக்கொண்டிருந்தார். மெல்ல பேசிக்கொண்டிருந்தார். பேசும் முன் அதிகமாக யோசித்திருப்பார் போல என்று தோன்றியது.

‘நான்… ஹாஸ்பிடாலிட்டி தொழிலில் பி.ஆர் துறையில் இருக்கிறேன். மக்களுடன் கலப்பது, அவர்களை விருந்துக்கு அழைத்துச் செல்வது, பார்ட்டி கொடுப்பது என் பணியின் ஒரு பாகம். அப்படியாக எல்லோருடனும் நன்றாக பேசுவேன். சுமார் 20-25 ஆண்டுகளாக என் கம்பனியில் நிர்வாகத் துறையில் இருக்கும் ஒருவர்… ஒரு வகையில் நாங்கள் இருவரும் குடும்ப நண்பர்கள்…’

என்னைப் போலவே ஒருவேளை சௌதாமினியும் கூட அவள் வயதை கணக்குப் போட்டுக் கொண்டிருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் 45-50 வயதாகி இருக்க வேண்டும்.

அவள் குரல் மேலும் நிதானமானது.

‘கொஞ்சம் சுதாரித்து கொள்ளுங்கள்… ஒரு பாட்டுக் கேளுங்கள் பிறகு பேசலாம்…’

சௌதாமினி பாட்டைப் போட்டு என் பக்கம் பார்த்தாள்.

‘இது எங்கே சென்றிருக்கலாம் என்று உங்களுக்கு தெரிந்திருக்குமே?’

நான் தலையசைத்தேன்…

பாட்டு முடியட்டும் என்று காத்துக்கொண்டு உட்கார்ந்தேன். ஃபோனுக்கு அடுத்த பக்கம் இருந்த அவள் கொஞ்சம் ஆறுதல் அடைந்தது போல இருந்தது. பேச்சைத் தொடர்ந்தார்.

திடீரென்று அவர் பேச்சின் தோரணை மாறியது. ‘இந்த வயதில் மனம் எல்லாவற்றுக்கும் வெளியே இன்னும் எதையோ தேடுகிறது… ஏதோ தேவை என்று தோன்றுகிறது. அப்படி இருவர் குடும்பத்திற்கும் சிக்கல் ஏற்படாமல் நாம் இருவரும்… என்று என் கையைப் பற்றிக்கொண்டார். நான் கையை விடுவித்துக் கொண்டேன், அதிர்ச்சியால் எழுந்து நின்றேன்.

அட, உட்காருங்க. உட்காருங்க. உங்களை பலாத்காரம் செய்யும் வயதில்லை எனக்கு.’ – என்றார்.

‘எனக்கு பதட்டம் ஏற்படத் தொடங்கியது. பீபி ஏறிக்கொண்டே போனது. தலைக்குள் இரத்தம் புகுந்து கால்கள் சோர்ந்து போனது போலானது. அந்த நிலைமையிலும் அவர் பலாத்காரம் செய்யும் வயதல்ல என்றாரே தவிர பலாத்காரம் செய்பவன் அல்ல என்று சொல்லவில்லை என்பதை நினைத்து கோபம் வந்தது. எழுந்து நின்றவர் மீண்டும் என் கையைப் பற்ற வந்தார். அவரை தள்ளிவிட்டேன். எனக்கு டென்ஷன் அசிங்கம் எல்லாம் மொத்தமாக ஏற்பட்டது…

ஆனால், ஒன்று தெரிந்தது… நான் தன்னம்பிக்கையை இழந்து விட்டேன் என்று எந்தக் காரணத்திற்கும் காட்டிக்கொள்ளக்கூடாது… சூழ்நிலை என் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதைப் போல நடந்துகொள்ள வேண்டும். அவரை தொடர விடாமல் தடுப்பது அது மட்டும் தான்.

இதொரு மைண்ட் வார் என்று தோன்றத் தொடங்கியது. வார்த்தைகளால் இது எனக்கு சம்மதமில்லை என்று விவரித்துக்கொண்டே போனேன்… I just wanted that moment to pass… உரக்க கத்தவேண்டும் என்று தோன்றியது. ஆனால், அக்கம் பக்கத்து வீட்டார்கள் கேட்டால், என் வயதில் அது messy என்று தோன்றியது. ஆனால், அவர் வற்புறுத்தல் நிற்கவே இல்லை. வேண்டியதை எல்லாம் அடைந்து அடைந்து பழக்கப்பட்ட ஒருவர் ‘நோ’ என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத போது நடந்து கொள்வது போல அவர் அடிக்கடி முயற்சி செய்துகொண்டே இருந்தார்.

நிமிடங்கள் உருள பயமாகத் தொடங்கியது. ஒருவேளை அவர் தொடர்ந்து விட்டால் நான் அதை எப்படி எதிர்ப்பது… தலைக்குள் செண்டை அடிப்பது போல இருந்தது… எப்படியோ அவரை வெளியே அனுப்பி வைத்தேன்.

அவர் வெளியே அடியெடுத்து வைத்தவுடன் கதவை சாத்திக்கொண்டேன். கைக்கு சானிடைசர் போட்டுக்கொண்டேன்… எதுவும் பேசும் வலு இருக்கவில்லை என்று தோன்றியது. சாப்பிடாமல் கூட படுத்துவிட்டேன்…

ஆனால், அன்றிலிருந்து… I am doubting myself… அன்று அவர் ஃபோன் செய்த நொடியிலிருந்து நடந்ததை ரீவைன்ட் செய்து, செய்து பார்க்கிறேன். எங்கே நான் தவறு செய்தேன்? How did I miss the signs…? How did I allow myself to get scared…? ‘

பக்கத்து அறையில் அமர்ந்திருந்த புரோக்ராம் புரட்யூசரும், நானும் பேச்சே இல்லாமல் உட்கார்ந்திருந்தோம். சௌதாமினியின் குரல் கேட்டது,

‘மேடம் I am sorry… என்ன சொல்ல வேண்டுமென்று தோன்றவில்லை. நிதானமாக யோசியுங்கள், உங்களை உண்மையாக காயப்படுத்திக் கொண்டிருப்பது என்ன?’

‘தெரியாது… அவமானம்… கோபம்… மிகவும் சிரமப்பட்டு வேலை செய்து சமுதாயத்தில் இந்த இடத்தைப் பெற்றிருக்கிறேன்.

How did he dare to… How did he think that he would getaway with it… that slime man…’

அவர் குரலில் சினம், தோல்வி இரண்டும் இருந்தது.

‘மேடம், அப்படி என்றால் show him that he cannot get away with it. அதற்காக என்ன செய்வீர்கள் என்பது உங்கள் தேர்வு. வேண்டுமென்றால் அவர் மீது புகார் கொடுக்கலாம். உங்கள் பொசிஷனுக்கு அது சிரமமல்ல…’

‘சிரமமல்ல ஆனால்…’

‘அப்படி என்றால் அவருக்கு ஃபோன் போட்டு அவர் நடத்தை உங்களுக்கு எவ்வளவு கோபத்தை உண்டு பண்ணியது, மற்றொரு முறை இப்படி நடந்து கொண்டால் பொறுத்துக் கொள்ளமாட்டேன் என்று உரக்க சொல்லலாமா? யோசியுங்கள்… அவர் நடத்தையை நீங்கள் சும்மா சகித்துக் கொள்ளவில்லை என்று சொல்வதால் உங்களுக்கு சமாதானமாகலாம். அது அவரை மீண்டும் தொடராமல் தடுக்கலாம். ஆனால், மற்றவரின் நடத்தையால் நம் தன்மானத்திற்கு எதுவும் நடப்பதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…’

பிறகு மேலும் சில அழைப்புகள் வந்தன, எல்லாம் எந்திரம் போல பேசினேன். நிகழ்ச்சி முடிந்த பிறகு சிகரெட் அவசியம் தேவை என்று தோன்றியது. நன்றி சொல்லி அவர் காட்டிய ஏதோ தாளில் கையொப்பமிட்டு, அவர் கொடுத்த மலர் செண்டை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். அங்கே அருகிலேயே ஸ்மோகிங் ஏரியா. சிகரெட் பற்ற வைத்தவன் நெஞ்சு முழுக்க உறிஞ்சிக்கொண்டேன். நெஞ்சுக்குள் சென்ற சூடு தலையில் இருந்த வலைகளை எல்லாம் துடைத்துவிட்டது போல தோன்றியது. அவற்றை எல்லாம் புகையுடன் சேர்த்து வெளியே தள்ளி கண் திறந்தேன். தலை குனிந்துகொண்டு வந்த சௌதாமினி என்னைப் பார்த்து ஒரு நொடி வியப்படைந்து, பிறகு பக்கத்து சுவரில் சாய்ந்து கொண்டு தானும் ஒரு சிகரெட் பற்ற வைத்தாள். புகையை விட்டுக்கொண்டே தலையை பின்னால் சுவார் மீது சாய்ததாள்.

‘அவள் அதை தவிர்த்திருக்கலாமா…? அவர் தனியாக வீட்டிற்கு வரட்டுமா என்றது… வைன் கொடுத்தது’

நான் இன்னும் பேசிக்கொண்டிருந்தேன். அதற்குள் சௌதாமினி பேசினாள்.

‘நாம் இப்போது அவர் பேச்சை எல்லாம் கேட்டோம். அங்கே என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும். அப்படி அவர் ஒருவரே வீட்டிற்கு வந்தது, வைன் எடுத்து வந்தது எல்லாம் நமக்கு அவர் நோக்கத்தின் அறிகுறி போலவே தெரிகிறது. பாவம் அந்த பெண்ணுக்கு இப்போது அப்படியே தோன்றி, கில்ட் ஆக இருக்கிறது. ஆனால், நாம் மறப்பது அவர்கள் இதற்கும் முன்பு பலமுறை சந்தித்திருக்கிறார்கள் என்பதையும், அவ்வளவு இயல்பாக மகன் கொண்டு வந்த வைனை கொடுக்க வேண்டுமென்றால் அவர்கள் சர்க்களில் அது சிறப்பானது அல்ல என்பதுவும்…’

‘அப்பாடா, எதுவும் நடக்கவில்லை…’

நான் மெல்லிய குரலில் சொன்னேன்.

‘நடக்கவில்லையா? பலாத்காரம் என்றால் அது உடலளவில் மட்டுமல்ல சார். Its not just sex. ஒரு விதமான பவர் கேம். அந்த பெண் வேண்டாம் என்ற போது அத்துடன் நிறுத்தி இருக்கலாம், ஆனால், இல்லை. அவன் அடி எடுத்து வைத்து விட்டான். இப்போது பணிய வைக்காவிட்டால் அவன் தோற்றது போல. அவன் வெல்ல வேண்டும் அப்படியாக பலாத்காரம் செய்துகொண்டே இருந்தான்…’

‘Will she be OK ? But, தற்போது சூழ்நிலை மாறியிருக்கியது. அவள் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாமே?’

“Oh I hope so… பாருங்க அவர் இருக்கும் இடத்தில் இந்த விஷயத்தை எடுத்தவுடன் அவர் வயது, அவர் நடத்தை, என்றோ சிரித்த சிரிப்பு, அவர் உடுத்தும் ஆடை, பார்ட்டிகளில் அவர் குடிக்கும் வைன் எல்லவற்றின் மீதும் காமெண்ட் தொடங்கும்…’

‘அட, நான் கவனிக்கவில்லை… அவருக்கு திருமணமாகியிருக்கிறதா?’

‘Does it matter? Does that explain how or why he should behave like that?’

எனக்கு வெட்கமாக இருந்தது. புறப்படுகிறேன் என்று பைக் ஸ்டார்ட் செய்து ‘சத்யபிரகாஷி’ டம் சொன்னேன்.

‘Consensual என்றால் அவர் சரி என்னும் போது தொடர்வது மட்டும் அல்லடா, அவர் வேண்டாம் என்றால் மூடிக்கொண்டு சும்மா இருக்க வேண்டும்!’

அவன் குர் என்று சம்மதம் தெரிவித்தான்.

இரவின் இருள் புதிராக, இரகசியமாக, பாரமாக தோள் மீது அமர்ந்திருந்தது.

*********

ஆசிரியர் குறிப்பு:

சந்தியா ராணி, சரித்திர கல்வியில் முனைவர் பட்டம் பெற்றவர். சில ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். இதுவரை பதிமூன்று நூல்களைப் படைத்துள்ளார். இதில் நாடகங்கள், மொழிபெயர்ப்பு, கவிதை, சினிமா, கட்டுரைகள் அடங்கும். ‘நாதிசராமி’ என்ற கன்னடப் படத்திற்கு திரைக் கதையும் வசனமும் எழுதியுள்ளார். பல ஆங்கிலக் கட்டுரைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். ‘கோட்டியாதிபதி’ கன்னடத்தின் இரண்டு தொடரில் பணியாற்றியுள்ளார்.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

கே. நல்லதம்பி , பிறப்பு மைசூரில். படிப்பு B.A.வரை. ஒரு தனியார் கம்பெனியில் வியாபாரப் பிரிவின் அகில இந்திய மேலாளராக 35 வருடங்கள் வேலை பார்த்து, ஓய்வுபெற்றவர். நிழற்படக் கலையில் ஆர்வமிக்கவர். பல உலக மற்றும் தேசிய கண்காட்சிகளில் இவரது நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, பல பரிசுகளும் பெற்றிருக்கின்றன. இந்திய லலித கலா அகாடெமியில் இவரது 6 புகைப்படங்கள் நிரந்தர அருங்காட்சியகத்தில் இருக்கிறது. கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மொழிபெயர்த்து, பல கன்னட மற்றும் தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.

கன்னடத்திலிருந்து தமிழிற்கு சுமார் 33 நூல்களும் தமிழிலிருந்து கன்னடத்திற்கு 18 நூல்களும், சுயமாக கன்னடத்தில் ஒரு கவிதைத் தொகுப்பும், தமிழிலும் கன்னடத்திலும் ஒவ்வொரு சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. இவர் சிறுகதைத் தொகுப்பு தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகாதமி விருது, குவெம்பு பாஷா பாரதி ‘கௌரவ விருது’ போன்ற பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.

-kntt1949@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button