கவிதைகள்
Trending

அனாமிகா கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

அகமியத் துயரியலின் நடனம்
என் உடல் முன் நின்று நடனம் ஆடுகிறேன்
மகிழ்ந்து கொண்டாடி ஆடுகிறேன்
என் நடனம் மிகப் பிரபலமானது
பேயாட்டம் என்பார்கள்
பறை அதிர உதிர ஓட்டம் நின்ற உடல்
எழுந்து ஆடும் நடனம்  அப்பழுக்கற்றது
சமன் பிசகிய சவாட்டத்தில்
இன்னுமொரு நான் கூட சேர்ந்தாடுகிறேன்
என் கழுத்தில் மாலை அணிவித்திருக்கிறார்கள்
என் உடல்மீது பூக்களை சரியாக எறிகிறார்கள்
இறந்தவுடலின் நறுமணம்
பூக்களால் நாறித்தொலைக்கிறது
சவத்துக்கு ஒழுக்கம் வேண்டியதில்லை சவமே
மனிதக் காதுகளுக்கு கேட்கும்படி கத்தத் தோன்றியது
என் முன்பு நீங்களும் நடனமாடுங்கள்
என் நடனத்தில் மனித ஆசையின் பலவீனம் உடையும்
தீயில் நடனம் பூணுவதைக் காண்பீர்கள்
சிவப்பு நடனத்தில் விடுதலை கொதித்தெழும்
நீல நடனம் சமத்துவத்தை போதிக்கும்
கருப்பு நடனத்தில் போர்த்திமிர் உக்கிரமாகும்
அடிமையின்  உடல்மொழி தலைகுனிந்து நிற்கும்
நான் பெரும் சத்தத்தில் கூத்தாடி நடனமாடுகிறேன்
உயிர் போக்கிய உடலைக் கண்டு
ஏன் அச்சம்கொள்கிறீர்கள் வாய்பொத்தி அழுகிறீர்கள்
என் நடனம் பூமிக்கும் வானுக்கும் இடையிலானது
அகமியத் துயரியலின் நடனம்
பிறப்பொக்கும் எல்லா உயிருக்குமான நடனம்
நான் மனிதக்கழிவில் ஒரு விந்துத்துளி
நான் கர்ப்ப வயலில் நீந்திய உயிர்ச் சலனம்
என் உடல் முன் தீராத நடனம் ஆடிக்களிக்கிறேன்
***
யோனி
அவள் நீலக்கண்கள் கொண்ட  ஒரு புராணியப் பரத்தை
கடவுளால் சபிக்கப்பட்ட ஒரு பாவப்பெண்
தனித்துவிடப்பட்ட பச்சைத் தீவில்
அவளொரு காம உண்ணியென உருமாறி களிக்கத்தொடங்கினாள்
அரக்கர்களின் காம உறுப்புகள் தடித்து நெளிந்தன
காம அரக்கர்களால் எப்பொழுதும்
புணரப்பட்ட அவள் யோனியிலிருந்து
நாள் ஒன்றுக்கு ஒருநூறு குழந்தைகளை  பெற்றுத்தள்ளினாள்
குழந்தைகள் பிறந்தவுடன் மரிக்கும்படி கடவுளின் சபித்தலை
மிகத்தீவிரமாய் வெறுத்தாள்
மேலும் ஆக்ரோசத்தில் அவள் ஒருநூறு நூறு என
அரக்ககுழந்தைகளை ஈன்றேடுத்தாள்
அவைகளும் மடிந்து கால்களுக்கு இடையில் விழுந்தன
ஒன்றும்கூட பூமியில் உயிர்தங்காத
அவளின் மரித்த சிசுவின் உடல்களை
தலைமயிர் ஒவ்வொன்றிலும் கட்டி
வனம் முழுக்க பைத்தியம்போல்
காலம்தோரும் ஓடித்திரிந்தாள் பாவப்பெண்
குழந்தைகளின் உடல்கள் அழுகின
தீவெங்கும் தூர்நாற்றம் வீசியது
சதைகளிலிருந்து புழுக்கள் உறுப்பென மாறிக்கொண்டிருந்தன
மரங்களுக்கு அடிப்பகுதியின் கீழ் யோனிகள் உண்டாயின
சர்வகாலமும் நிலம் குலுங்கிக்கொண்டே இருந்தது
அழுதாள் அரற்றினாள் ஆவேசங்கொண்டு
அவள் தலையை உக்கிரமாய் அசைத்தாள்
தலைமுடியிலிருந்து அவிழ்ந்த  குழந்தைகளின் எலும்புத்துண்டுகள்
மலைபோல் காடெங்கும் குவிந்தன
அதன் உச்சியில் ஏறி நின்று
தன் கைகளை அகலம் விரித்துக் கத்தினாள்
தூரத்திலிருந்து ஆதாமும் ஏவாளும்
அவளைநோக்கி மண்டியிட்டு  வணங்கிக்கொண்டிருந்தார்கள்.
***
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button