அணில்மயிர்த் தூரிகை
ஜன்னலருகில்
கொய்யாக் கிளைகளில்
பால் செசானின் பழங்கள்
பீன்ஸ் நறுக்குகையில்
லேசாகக் கழுத்தைச்
சாய்த்திருக்கிறாள் சகதர்மினி
சான்றோ பாட்டிசெல்லியின்
மகுடம் சூடும் மேரியைப் போல்.
சுற்றுச்சுவரண்டையில்
குறுஞ்செடிகளில்
வான்காவின் ஐரிஸ்களைப் பழிக்கும்
தும்பைப் பூக்கள்
உணர்வுப் பதிவிய
ஓவியம் ஒன்றைத்
தோலாகப் போர்த்திப்
படுத்திருக்கிறது
சாலையோரத்திலொரு
கன்றுக்குட்டி
அவ்வப்போது
தேநீர்க் கடையில்
பார்க்கக் கிடைக்கிறான்
பிக்காஸோவின்
கியூபிச மனிதன்
மன்றல் விழா ஒன்றில்
வணக்கம் சொன்னார்
மோடிகிலியானியின்
நீள் முகத்தர்
டாவின்சியின்
தன்னோவியம் போலிருக்கிறார்
காஜாமலைப் பகுதியில் உலவும்
யாசகர் ஒருவர்
சுவரொட்டிகளில் எல்லாம்
கோயாவின் பேய்கள்
மழலைச் சிறுமி
மெழுகுக் குச்சியால்
வரைகிறாள்…
தொல் குகையாகிறது
தாள்
அழகில் தோயும்போதெல்லாம்
என் மனம்
வெறுமனேயொரு
அணில்மயிர்த் தூரிகை மட்டும்.
***
வெண்ணிறப் பென்சில்
காலி மனைகளில் மேயும்
மாடுகளினருகில்
தத்திக்கொண்டிருக்கும்
கொக்குகள்
பெரும் பசுக்கள்
மடி சோர்ந்தது போல்
தூவெண் துளிகளாய்த்
தும்பைப் பூக்கள்
நாற்பத்தாறில்
என் தாடியில்
அதிகரித்துவரும்
நரை
ராத்திரி வானில்
ஒற்றை முழுநிலா
ஓராயிரம் விண்மீன்கள்
வாயு அடுப்பின் மேல்
இண்டாலியம் சட்டியில்
நுரை பொங்கும் பால்
மீக்கற்பனைக் கதை மாதிரி
ஒச்சமே இல்லாமல்
ஒளிபோல் பாய்ந்து வரும்
வெண்புரவி
கொத்தலர்ந்து
கண் நிறைக்கும்
நந்தியாவட்டை
தூரிகையின்
கூர்க் குஞ்சமே போன்ற
முல்லை மொட்டு
இவற்றில் எதையேனும்
தீட்டிடக்கூடாதா என்று
கரையாமல் கிடந்து
மருகுகின்றது
வண்ணப் பென்சில்களின்
கூட்டத்திலொரு
வெண்ணிறப் பென்சில்.
***
கவியதிகாரம்
உண்டாகிய கவிதை கோருகிறது
அப்படியே இருக்கவிடு
உருவாக்காதே என்னை.
உருப்பெற்ற கவிதை கோருகிறது
அப்படியே இருக்கவிடு
பிரதியாக்காதே என்னை.
பிரதியான கவிதை கோருகிறது
அப்படியே இருக்கவிடு
படியாக்காதே என்னை.
ஆயிரம் கண்களுக்குக்
கொண்டு சேர்க்கும் ஆசையால்
ஆயிரம் படிகளில் நகலாகித்
தேய்கிறது கவித்துவம்.
***
யாமொரு காஃபி கேட்டோம்
சொன்ன நேரத்திற்குப் போய்
அமர்த்தப்பட்டோம் முதல் ஆளாய்.
மருத்துவர் ரவுண்ட்ஸில் இருக்கிறார்
என்று சொல்லப்பட்டது
கால்மணி நேரத்துக்கப்புறம் கேட்டதில்
பொறுமையாய்க் காத்திருக்கும்படி
அவசரமாய்ச் சொல்லிச் சென்றாள்
ஓர் இளம் செவிலி.
“பிணியாளர்களிடம்
கனிவாய்ப் பேசுவோம்…”
என்றெல்லாம்
ஏழெட்டுச் செவிலியர்கள் கூடி நின்று
வாக்குறுதி எடுத்தபோது
மனப்பூர்வமாய்
’ஆமீன்’ சொல்லிக்கொண்டிருந்தேன்
பத்து நிமிடத்துக்கொருதரம்
பணிப்பெண் ஒருவர் வந்து
மருந்துநீரில் தோய்த்துத்
தரை துடைத்துப் போனார்.
அதி சன்னமான ஓசையுடன்
தன் கைப்பேசியில்
விருப்பப் பாடல் கேட்டபடி
பொழுது போக்கினார்
ஸ்கேனுக்குக் காத்திருக்கும் ஒருவர்
இம்புட்டு ஜனங்க! என்று
பிணியாளர் கூட்டத்தை வியந்த அத்தா
சராசரிக் கட்டணத்தைப் பெருக்கிக்
கணக்குப் பார்த்து
மேலும் வியந்தார்
மருந்துகளின் மஜ்முஆ* ஆன
நெடியை மீறி
திடீரென்று பரவிற்று
காஃபியின் நறுமணம்
ஒரு மூலையில்
காஃபியும் தேநீரும் நொறுக்குகளும்
வந்து சேர்ந்ததை அறிந்து
பிணியரும் துணையரும் சுறுசுறுப்பாக
அடுத்த அரை மணி நேரத்துக்கு
ஒரு மினி பிக்னிக் ஸ்பாட்
எழுந்தருளி மறைந்தது அங்கே
காஃபியின் நறுமணம்
என் நெஞ்சில் நிரம்ப,
எல்லோரும் இன்புற்றிருக்க விழையும்
தாயுமானவ நிலையெய்தி
’ஆமீன்’ சொல்லிக்கொண்டே
வீடு கிளம்பினேன்.
*மஜ்முஆ – கலவை என்று அர்த்தம்.
இது ஒரு பிரபலமான அத்தரின் பெயர்.
*****
– trameez4l@gmail.com –