இரவின் ஆன்மா
(தமிழ் கஜல்)
எத்தனை இதயங்கள்
விழுந்து கிடக்கின்றன
நீ வரும் பாதையில்…
காதலின் அம்புநுனி
பாதம் தைக்காமல்
பார்த்து நட
நின் முகத்தைப்
பிரதிபலித்துச் சிவக்கும்
இதயங்கள்
உன் பார்வையில்
தீயாடித் தீர்த்து
உன் கூந்தலின் நிறமாகும்
நீயிருக்கும் இடம்
எதுவாக இருந்தாலும்
வேறோர் உலகமாகிறது
நேரங்களில் வந்து போகும்
யுகங்களுக்கான
என் கடிகாரம் நீ
மன வர்ணங்களின்
அலங்காரமின்றி
உள்ளபடி உன்னைப்
பார்க்கவேண்டும் என்றேன்
ஒரு நறுமண மூச்சால்
என் உட்சுடரை
அணைத்தாய்
பூவனம் துறந்து
பாலைவனத்திற்குப்
போய்விட்டான் மஜ்னூன்
தடையின்றி லைலாவின்*
தரிசனம் அடைய
ஞான கானம்
லைலாவை நினைவூட்டியதாம்
மஜ்னூனுக்கு
மஜ்னூனின் பாடலில்
இறைவனை நினைவு கூர்கிறார்
சூஃபி
அதிகாலை வெயிலில்
கூந்தலுலர்த்துகிறாய்
சூரியனைப் பார்த்துச்
சிரிக்கின்றது
இரவின் ஆன்மா.
*லைலா என்றால் இரவு என்று பொருள்.
***
அரவத் தீற்றல்
வாசலில் வந்து நின்ற
டாக்ஸியின் விளக்கொளியில்
பளபளத்தது
மஞ்சள் நிறச் சுடரிழையாய்
ஐந்தடி நீளச் சாரைப் பாம்பு
ஆவாரமும் எருக்கமும்
மண்டிக் கிடக்கும்
பக்கத்துக் காலி மனையிலிருந்து
சாலையின் குறுக்கே
ஊர்ந்து செல்கிறது
புங்கமும் கருவேலமும்
சாழ்க்கடையில் அருகம்புல்லும்
அடர்ந்து கிடக்கும்
எதிர்த்த காலி மனைக்கு
மெல்ல ஊறும் அதன் நளினத்தை
பாவனை செய்ய இங்கே
ஒரு ருக்மினி எங்கே?
அதன் மஞ்சள் பளபளப்பை
திரைச்சீலையில் தீட்டிட
இல்லை இங்கே ஒரு
Chiaroscuro* மேதை யாரும்
அதன் அசைவுக்கு ஏற்ப
காற்றில் இழையோடலாம்
ஒரு மொஸார்ட் அல்லது
ஒரு பாக்-கின்
சிம்ஃபொனித் துணுக்கு
இத்தனை அற்புதக்
கலையுருவாய் இருந்தும்
ஏதுமற்றதொரு யாத்ரீகன் போல்
பிரபஞ்சமெனும் சலன ஓவியத்தில்
போய்க்கொண்டிருந்தது அது,
அருவ ஓவியனின்
அருவத் தூரிகையின்
ஒரு லாவகத் தீற்றலாய்.
*Chiaroscuro – ஓவியத்தில் ஒளிவிளைவைத் தீட்டும் உத்தி.
********