![](https://vasagasalai.com/wp-content/uploads/2024/10/ramees-bilali-780x470.jpg)
வெயிலாகவே இருந்து
ஒருநாள்
மூடிக்கொண்டால்
நல்லாத்தான் இருக்கிறது,
பேசிக்கொண்டே இருந்து
சற்று மௌனமாகிவிட்டதுபோல்.
வெயிலே இல்லாமலிருந்து
ஒருநாள்
வெயில் வந்தால்
நல்லாத்தான் இருக்கிறது,
மௌனமாகவே இருந்து
ஒரு சொல் பேசியதுபோல்.
•
இருபத்தோராம் நூற்றாண்டிற்கு
என் வீட்டு வாசலில்
வந்து நிற்கிறாள்
நெற்றித் திருநீறும்
தோற் பையுமாக
ஓர் ஔவை.
‘அறம் செய விரும்பு’ –
அவளின் போதனையை
நினைவு கூர்ந்தபோது
வாய்மலர்ந்தாள்:
‘ஐயா, தர்மம் பண்ணுங்க சாமீ’.
•
பனிசுமக்கும் காற்று
அசைவற்றுக் கிடக்கும்
இந்தக் காலைப் பொழுது
மிகவும் சோம்பலாயிருக்கிறது
எனக்கு,
கிளைதோறும் கீசுகீசென்னும்
பட்சிகளுக்கு
அப்படியில்லை.
நின்று பெய்து ஓய்ந்த
மழைக்கால முன்னிரவில்
எதுவுமே செய்ய முனைப்பின்றிச்
சோம்பிக் கிடக்கிறேன்
நான்,
தவளைகளோ
சிக்காடாப் பூச்சிகளோ
அப்படியில்லை.
சோம்பல்
மனிதனின் தனித்தன்மை!
மனிதனாய் இருப்பதால்
சோம்பலாயிருக்கிறேன்;
அல்லது,
சோம்பலாய் இருப்பதால்
மனிதனாயிருக்கிறேன்
என்றெல்லாம் சிந்தனை வேறு.
சோம்பலுக்கு
நிர்ணயமும் உண்டோ?
தேனீயின் சுறுசுறுப்பு
ஆமை வேகம் –
சார்பளவீடுகள் சரியா?
ஸ்லாத்
சோம்பலாயில்லை
அஃதே அதன்
இயங்கு கதி
எறும்பு
சுறுசுறுப்பாயில்லை
அஃதே அதன்
இயங்கு கதி
மனிதர்க்கோ
அவரவருக்கான
இயங்கு கதி.
•
அன்றொரு நாள்,
சாலையோரத்தில்
சாக்கடையருகில்
சரிந்து கிடக்கும்
குடிமகனைப் பார்த்து
சரிதானென்றபடி
மந்தச் சிரிப்புடன்
வீடுவர முடிந்தது.
இன்றோ,
நட்டநடு ரோட்டில்
புழுதியில் புரளும்
காட்சியால்
இனம்புரியாத பயத்தை
ஊறச் செய்துவிட்டது
காக்கி நிற
அரைக்கைச் சட்டை ஒன்று.
•
எது நடந்ததோ
அது நடக்கிறது.
எது நடக்கிறதோ
அது நடக்கும்.
எது நடக்குமோ
அது நடந்தது.