இணைய இதழ்இணைய இதழ் 56தொடர்கள்

ரசிகனின் டைரி 2.0; 11 – வருணன்

தொடர் | வாசகசாலை

முதல் சுற்றில் யாதும் நலமே. இந்த பதிப்பு 2.0, பேச்சு மொழியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழுத்து மொழிக்கு நகர்ந்திருக்கிறது என்பதை வாசிக்கும் இந்த இரண்டாம் வாக்கியத்திலேயே கண்டுபிடித்திருப்பீர்கள். ‘ரசிகனின் டைரி’ தொடரின் அறிமுகக் கட்டுரையில் பேச்சு மொழியில் எழுதுதல் குறித்து பகிர்ந்திருந்த அத்தனை கருத்துகளும் இப்போதும் அப்படியே தான் இருக்கின்றன. எனினும், ஒரு சிறு நெருடல். மொழியின் அடிப்படை பயன் கருத்துகளை பரிமாறுதல் தான் என்ற போதிலும், அதில் பொருத்தமான சொற்களை அழகுற அடுக்குவதால் சொல்ல வருகின்ற விடயத்தை இன்னும் ரசித்துச் சொல்லுகிற வாய்ப்பையும் மொழி நல்குகிறது. குறிப்பாக கலை, இலக்கியம் சார்ந்த எழுத்துகளில், இந்த ‘சொற்களால்’ உச்சி முகர்தலை ரசித்து ரசித்துச் செய்ய முடியும்! அந்த பெருவாய்ப்பினை தவற விடுவதாக தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் மனது சொல்லிக் கொண்டே இருந்தது. 

“அருவியாகத் தமிழ் கொட்டிகொண்டிருக்க இவர்கள் ஏன் கட்டாந்தரையில் ஊற்று தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்?” என்று கிருபாவின் ‘கன்னி’ நாவலில் (ப:163) ஒரு வரி வரும். அது வேறு நினைவின் கடலில் விழுங்கப் பசித்திருக்கும் பெருமீன் போல இம்சித்துக் கொண்டிருந்தது. எனவே தான் இந்த ‘நடை மாற்றம்’. கூடவே இன்னொரு மாற்றமும். ஓடிடி தளங்களில் பல நல்ல படங்கள் காணக்கிடைக்கின்றன என்பது உண்மை என்றாலும், அவற்றின் பெரும்பான்மையான தேர்வுகள் முழுக்க முழுக்க வணிக சூத்திரங்களுக்குள் அடங்குபவையாகவே இருக்கின்றன. எனவே ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு திரைப்படம் குறித்தான அறிமுகம் என்ற அடிப்படை அம்சத்தை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டு, ஓடிடி தளங்களில் உள்ள படங்கள் மட்டும் எனச் சுருக்கிக் கொள்ளாமல், சர்வ சுதந்திரத்தோடு பார்க்கும் படங்களில் என் மனதிற்கு நெருக்கமான அல்லது ஏதோ ஒரு வகையில் அறிமுகம் செய்யத் தகுந்த படைப்பு எனத் தோன்றுகிற எந்த படத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வதாய் இருக்கிறேன். (அதில் ஓடிடி படங்களும் நிச்சயம் வரும்.)

தொடர்ந்து கலையெனும் பெருஞ்சுரங்கத்தின் ஆழங்களில் தேடுவோம். யார் கண்டது! வைரங்களும் கிடைக்கலாம்! அல்லது ஒதுங்கி ஆசுவாசங் கொள்ள கொஞ்ச நிழலேனும்…

Blue Jay (2016) 

Dir: Alex Lehmann | 80 min | Netflix 

உடலுக்கு வயதானாலும் மனதில் ஒளிந்திருக்கும் பதின்பருவ காதல் நினைவுகளுக்கு வயதேறுவதே இல்லை. எத்தனை ஆயிரம் முறை மீட்டப்பட்டிருக்கும் அந்த ஞாபக வயலின்! அதனால் தான் அந்த சுகந்த நினைவிற்கு மட்டும் மூப்பே இல்லை. ஆனால், வளர வளர வாழ்க்கையின் பாதைகள் மாறுகின்றன. காற்றின் திசைக்கு இழுபட்டுப் பறந்த காகித மலராய் அந்த பதின் காதல் அலைக்கழிந்து மனதின் ஏதோ ஒரு மூலையில் முடங்கிக் கொள்கிறது. யாருடன் பகிர்ந்ததால் அந்த வசந்தம் வாய்த்ததோ அவருடனேயே மீண்டும் அதை அசைபோடும் தருணம் வாய்த்தால்? அது தான் இருவர் மட்டுமே திரையில் வாழும் Blue Jay. 

ஜிம் ஹேண்டர்சன் கலிபோர்னியா மாகாணத்தில் தனது சொந்த ஊருக்கு தன் தாயாரின் பழைய வீட்டைப் புதிப்பித்து விற்பனை செய்கிற எண்ணத்தோடு வருகிறான். அங்கு ஒரு பல்பொருள் அங்காடியில் மிக தற்செயலாக அவன் தன் பதின்பருவக் காதலி அமேண்டாவை சந்திக்கிறான். பார்த்த மாத்திரத்தில் இருவருமே (உண்மையில் ஒருவரை ஒருவர் சற்றே தயக்கத்தோடு) அடையாளங்கண்டு கொள்கின்றனர். இருவருமே நடுத்தர வயதினராக, தங்கள் இளமையை காலத்திற்கு தின்னக் கொடுத்திருப்பதால் அடையாளங்களை உறுதி செய்ய அவகாசம் வேண்டி அச்சிறு துவக்க தயக்கம். இருவரின் கடந்த காலங்களும் நமக்கு துவக்கத்தில் அறிமுகமற்று இருந்தாலும் இதமாய் வருகின்ற சாரலுக்கு மெல்ல விரிகிற குடையென அவர்கள் இணைந்து கதைப்பதன் வழியாக நாம் அவர்களின் இளமைக்கால காதல் நினைவுகளுக்குள் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்கிறோம். ஆனால், சம்பிரதாய திரைப்படக் காட்சிகளைப் போல அது அல்லாது, வெகு சாதாரணமான அவர்களின் உரையாடல்கள் வழியே மெல்ல முகிழ்வது பார்வை அனுபவத்தை சுகமாக்குகிறது. 

பல்பொருள் அங்காடியில் இருந்து வெளியேறுகிற அவர்கள் சம்பிரதாய முகமன் செய்து பிரியப் போகும் கடைசி நொடியில், ‘நாம் காபி அருந்தப் போகலாமா?’ என ஜிம் கேட்க, அமேண்டா ‘நல்ல வேளை இப்போதாவது கேட்டாயே’ என்பதான முகபாவனையோடு அழைப்பை ஏற்கிறாள். தான் பழகிக் கழித்த காலத்தின் நாயகன் தன்னெதிரில் அமர்ந்திருக்கும் போதிலும், பேச வார்த்தைகள் தேடுபவளாகவே அவள் இருக்கிறாள். ஒரு வேளை அவன் என்பதாலேயே அந்நிலையோ என்னவோ! முன்னாள் காதலி பரப்பி வைத்த மௌனத்தின் அசூயை தாளாமல் அவனே அதிகம் பேசுகிறான். அவளது திருமண வாழ்க்கை குறித்தும் குடும்பம் குறித்தும் அவள் சொல்லக் கேட்கும் ஜிம், அவனைப் பற்றிய அவளது விசாரிப்புக்கு தான் வேலையை மணந்து கொண்டதாக நாசூக்காய் பதில் தருகிறான். தான் தனது மாமாவுடன் இணைந்து பழைய வீடுகளை புதிப்பிக்கிற தொழிலில் இருப்பதாய் தன் பக்க வாழ்க்கையை பகிர்கிறான். இருவருமே நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிற பழைய தோழர்கள் பெரும்பாலும் செய்கிற மனம் கோணாமல் பாரட்டிக் கொள்கிற, ஆமோதித்துக் கொள்கிற சம்பிரதாய பாவனைகளுடனேயே இருந்துவிடுகின்றனர். காபி அருந்திவிட்டு தாங்கள் ஒரு காலத்தில் கரம் கோர்த்துச் சுற்றிய வீதியில் திரும்பவும் நடக்கின்றனர். வருடங்கள் தந்த இடைவெளி அவர்களுக்கு இடையே இப்போது. போகிற வழியில் எதிர்படும் அவர்கள் முன்காலத்தில் வழமையாய் போகிற ஒரு கடையில் இருக்கின்ற அதே வயதான நபர் தங்களை நினைவில் வைத்திருந்து அடையாள காண்பார் என்ற தனது எதிர்பார்ப்பை அவள் அவனிடம் பகிர, இருவரும் உள்நுழைகிறார்கள். அவள் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. அவர் மிகத் துல்லியமாய் ‘ஏய் ! என்ன முன்னாள் காதல் பறவைகளே!’ என கச்சிதமாய் கண்டு கொள்கிறார். இருவருக்குமே இனம்புரியா மகிழ்ச்சி. 


கனிந்த காதலின் வாசனை அவர்களுக்கிடையே ஒவ்வொரு அசைவிலும் ஏதோ ஓர் மூலையில் பட்டுத் தெறித்தபடியே இருக்கிறது. மிகச் சாதாரண காட்சிகளுக்குள்ளேயே, அவர்களுடன் நாமும் இணைந்து பயணிக்க முடிவதும், வெளிப்படுத்தாமலேயே அவர்களுக்குள் தளும்புகிற காதலை பார்வையாளர்களாகிய நாமும் உணரும் தருணங்களால் நிரம்பியிருக்கிறது அடுத்தடுத்து வரிசைகட்டும் காட்சிகள். இத்தனைக்கும் மிகுந்த யோசனையுடன் வடிவமைக்கப்பட்ட நாடகீய தருணங்கள் போல எதுவும் துருத்திக் கொண்டு தெரிவதில்லை. அவர்களின் காதலில் நாமும் கொஞ்சம் நனைந்து கொள்கிறோம். இருவரும் இணைந்து ஜிம்மின் தாயாரின் பழைய வீட்டிற்குச் செல்கின்றனர். அவனது கடந்த காலத்தின் ஞாபகக் கிடங்காகவும் அது இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் அவர்களின் பதின்பருவக் காலத்தை பிரதிபலிக்கிற கண்ணாடிகள் – பொருட்களாய், வாழ்த்து அட்டைகளாய், எழுதிப் பகிராத கடிதங்களாய், பகிர்ந்திருந்த பரிசுப் பொருட்களாய் இப்படி எவைஎவையாகவோ இறைந்து கிடக்கின்றன. கரங்கள் தொடுகிற அத்தனையும், கண்கள் தீண்டுகிற எதுவும் அவர்களே மறந்திருந்ததாய் நினைத்திருந்த யாவற்றையும் மலர்த்துகிறது. ஒருவகையில் அவ்வீடே அதன் பொருட்களோடு சேர்ந்து ஒரு கால யந்திரமாய் உருக்கொண்டு அவர்களை பின்னகர்த்தி இழுக்கிறது. துவங்கத்தில் இருந்த சம்பிரதாய பாங்கு விடைபெற்று உணர்வுப்பூர்வமான ஒரு நெருக்கம் தங்களுக்குள் ஏற்பட்டுவிட்டதை அவர்களுணரும் முன்பே பார்க்கின்ற நாம் உணர்ந்து விடுகிறோம். 

பின்மாலையில், ஜோடிகளாய் சிறகடித்த காலத்தில் விளையாட்டாய் அவர்கள் பதிவு செய்திருந்த அவர்களது குரல் பதிவுகளுள் ஒன்றை, இருவரும் இணைந்தே கேட்கிறார்கள். கடந்த காலத்தில் உறைந்திருக்கும் குரல்களின் சொந்தக்காரர்களே பார்வையாளர்களாய் உருமாறி தங்களைத் தாங்களே கேட்கிறார்கள். இளமை துள்ளும் வயதில் செய்திருந்த குறும்புகளையும், விளையாட்டுகளையும் இப்போது வளர்ந்தவர்களாய் கேட்டு ரசித்து அவர்களே சிரித்துக் கொள்கிறார்கள். பழகிக் கழித்த நாட்களை நினைவுபடுத்தி சொற்கள் கொண்டு ‘கடந்ததை’ சிருஷ்டிக்க முயல்கிறார்கள். இடையே தனது பெயர் எழுதப்பட்ட ஒரு கடித உறையை அமலாரியில் பார்த்து அது குறித்து அவனிடம் கேட்டு வம்பிற்கிழுக்கும் அமேண்டா, அதைத் திரும்ப வைத்துவிடுமாறு ஜிம் சொல்லிய பிறகும், அவனறியாமல் அதனை பத்திரப்படுத்திக் கொள்கிறாள். 

துவக்க காட்சிகளில் அதிகம் பேசுபவனாக நமக்கு அறிமுகமான ஜிம், முகமூடிகள் கழற்று உள்ளுக்குள் திருப்தியற்ற வாழ்க்கையைச் சுமந்தலையும் ஒரு வெறுமையான மனிதனாக, அமேண்டாவின் தோள் தேடிக் கேவுகிற ஒரு வலிமையற்ற மனிதனாக நிற்கிறான். அயர்ந்து போகிறாள் அவள். அவர்களின் பாதைகள் பிரிந்து ஏறத்தாழ இருபத்தி நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டதை அவள் ஆச்சரியத்துடன் பகிர்கிறாள். ஆனால், இத்தனை ஆண்டுகளாக அவனுடையதென பகிர்ந்து கொள்ள ஏதுமற்ற வாழ்க்கையையே அவன் வாழ்ந்திருப்பதை உணர்ந்து கலங்குகிறாள். இருவரும் தங்களது வெற்றிகரமான இருபதாவது திருமண நாளைக் கொண்டாடுகிற கணவன் மனைவி போல பொய்யாய் நடித்து ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். உடனிருந்து அவர்களின் இணைய இயலாததால் தவித்தலையும் தணியா ஏக்கங்கள் எட்ட நின்று பார்க்க தொடர்கிறது அந்நாடகம். வாழ நினைத்து கைகூடாத ஒரு வாழ்க்கையை கணங்களேனும் வாழும் பேராசை தான் அந்நாடகத்தை இயக்குகிறது. அன்னியோன்யமான இணையரைப் போல அவர்கள் ஒரு நாடக வாழ்க்கையை சில நிமிடங்கள் வாழ்ந்து பார்த்து தங்கள் ஏக்கங்களை தணித்துக் கொள்கிறார்கள். காதலின் தருணங்களில் காமம் எட்டிப் பார்ப்பது சகஜமானதே. ஆனால், இருவருமே காமத்தில் கூடடையாத பறவைகளாய் வானில் பறத்தலை ரசிப்பவர்கள் போல நடந்து கொள்கிறார்கள். 

வெளியில் நள்ளிரவில் நட்சத்திரங்களுக்கடியில் அவனது வண்டியில் பின்புறம் வானம் பார்த்தபடி படுத்துக் கொண்டு கதைக்கத் துவங்குகிறார்கள். சிறிது சிறிதாக அவளது சந்தோஷ ஒப்பனையும் கலையத் துவங்குகிறது. தனது கணவருக்கு அறுபத்து நான்கு வயதென அவள் சொல்கிறாள். மேலும் தான் சில வருடங்களாகவே மன அழுத்தத்திற்காக மருத்துகள் உட்கொண்டு வருவது குறித்தும் பகிர்கிறாள். எல்லாமே தன் வாழ்க்கையில் குறை சொல்ல இயலாதபடி நல்லபடியாகவே இருக்கின்ற போதிலும் ஏதோ ஒரு சோகம் தன்னை பீடித்திருப்பதாகவும், அது எங்கிருந்து வருகிறது என்பது விளங்கவில்லை எனவும் புலம்புகிறாள். சொல்லக் கேட்ட திகைப்பை செறித்து வெளிப்படும் பாவனை மின்னி மறைகிறது அவனது முகத்தில். இப்படியே பேசியபடியே கழிகின்ற பொழுதில், அக்கணத்தில் இருவரது மனதிலும் மண்டிக்கிடக்கும் வெறுமையில், அவர்கள் தீர்மானத்தோடு தள்ளி வைத்திருந்த காமம் சமயம் பார்த்து கொடியென இருவர் மீதும் படரத் துவங்குகிறது. ஒரு முத்தம் தீப்பந்தமாகிறது. இருள் போர்த்திய நட்சத்திரங்கள் நிரம்பிய வானிற்கடியில் இருவரும் எரியத் துவங்குகிறார்கள். இருபதாண்டுகளுக்கும் மேலாக எங்கோ அடியாழத்தில் புதைந்திருந்த தேகங்கள் மீதான வேட்கை கிளர்ந்து மேலெழுகிறது. பிரியாத இதழ்களோடு அவர்கள் மஞ்சம் சேர்கிறார்கள். பித்தேறிப் பிதற்றும் ஜிம் அவளைக் காதலிப்பதாகச் சொல்கிறான். முத்ததில் தோய்ந்திருக்கும் அவர்கள் இருவருள் யதார்த்தம் விழித்துக் கொள்வது முதலில் அமேண்டாவுக்குத் தான். தன்னிலைக்கு அவள் மீள, அவளைத் தொடர்ந்து அவனும் மீள்கிறான். 

தான் அங்கிருப்பது சரியல்ல என்றுணரும் அவள் கிளம்ப எத்தணிக்க, தான் அனுபவிக்கிற தனிமை வாதையில் இருந்து அவனை தற்காலிகமாகவேனும் மீட்டெடுத்த அவளது இருப்பை இன்னும் கொஞ்ச நேரத்திற்கு தக்கவைத்துக் கொள்ள அவன் இறைஞ்சுகிறான். அதுவரையிலான உரையாடல், கொஞ்சம் சமாதானம் சொல்லும் அவன் சொற்களாலும், மெலிதாக கோபம் பூசிக் கொள்கிற அவளது மறுமொழிகளாகவும் மாற்றம் கொள்கிறது. அவளது மேல் கோட்டை அணிவதற்கு எடுக்க, அதனை அவன் தடுக்க, அக்கணத்தில் அவள் அவனறியாமல் ஒளித்து வைத்திருந்த, இருபது வருடங்களுக்கும் மேலாக அவள் கண்ணிலிருந்து காத்திட்ட, அக்கடிதம் கீழே விழுகிறது. அதை தன் மறுப்பை மீறி அவள் எடுத்திருக்கிறாளே எனக் கொந்தளிப்பான மனநிலைக்கு ஆட்படுகிறான் ஜிம்.. இயலாமை அழுகையாய் வெடிக்கிறது. இப்போது அமேண்டா குற்றவாளிக் கூண்டில் அகப்பட்டுக் கொண்டதைப் போல துடிக்கிறாள். அவனை சமாதானம் செய்ய வழியற்ற தவிப்பு, அதுவரை அங்கு நடந்தவைகளையும் மீறி அவளைத் தொந்தரவு செய்கிறது. அது தனக்காக எழுதப்பட்ட கடிதம் தானே என்பது அவள் வாதமாக இருக்க, அதில் ‘நானும் தான் இருக்கிறேன்’ என்பது அவனது எதிர்வாதமாக இருக்கிறது. உடைந்து அழுகிற அவன் சிறிது நேரத்தில், கண்ணீர் வழியே கொஞ்சம் வருடங்களாக இதயத்தில் ஏற்றி வைத்திருந்த சுமைகளை இறக்கி வைத்தது போன்ற ஆசுவாசங் கொள்கிறான். உணர்வின் உச்சியில் இருந்து சற்று இறங்கி அவன் தரையிறங்கி இயல்புக்கு வருகிறான். அவளது புறப்படல் தான் யதார்த்தம் என்பதைக் காணும் அளவுக்கு அவன் மிகையுணர்வு மனநிலையில் இருந்து விடுபட்டிருக்கிறான். அவளை வழியனுப்ப, அதிகாலையில் அதே பல்பொருள் அங்காடிக்கு உடன் வருகிறான். 

காரில் ஏறும் முன்னர் அவள் விடைபெற முயலும் தருணத்தில், தன் முன்னால் அவள் அக்கடித்தை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறான். அதுவரையிலான திரைக்கதையில் அவர்களது காதல்அத்தியாயத்தின் முன்கதை என்ன என்பதோ, அத்தனை வாஞ்சையுடன் இருக்கிற அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதோ நமக்குச் சொல்லப்படுவதில்லை. அமேண்டா வாசிக்கிற அக்கடிதமே அந்த இருளில் கொஞ்சம் வெளிச்சம் பாய்ச்சுகிறது. அவர்கள் உறவின் விளைவாய் அவள் கருவுற்றதும் அதனைக் கலைப்பது தொடர்பாக ஏற்பட்ட மனத்தாங்கலே அவர்களின் உறவு அறுபடக் காரணமானதெனவும் நாம் அறிகிறோம். ஆனால், அக்கடிதத்தில் என்ன இருந்தது? ஏன் அதனை அமேண்டாவுக்காக எழுதி அனுப்பாமல் ஜிம் இத்தனை வருடங்களாக வைத்திருக்கிறான்? 

அவள் அக்கடித்தத்தினை வாசிக்க அதில் அவன் ‘நாம் அக்குழந்தையை கலைக்காமல் வைத்துக் கொள்ளலாம்’ என்று சொல்லியிருக்க, அது அவளுக்குள் பெரும் உணர்ச்சிகரமான உடைவை ஏற்படுத்துகிறது. இதனை எனக்கு ஏன் அப்போதே அனுப்பவில்லை எனக் கண்ணீர் வழிய அங்கலாய்க்கிறாள். சொல்லத் தயங்கி சொல்லாமல் விட்ட, சொல்லாமல் தவிர்த்த விடயங்கள் எப்படியெல்லாம் மனிதர்களின் வாழ்க்கைப் பாதையை மடைமாற்றி விடுகிறது! கண்ணீருக்குப் பிறகு பூக்கும் சிறு சினேகப் புன்னகையோடு அவர்கள் இருவரும் பரஸ்பரம் விடைபெறுகிறார்கள். 

படம் முழுக்க முழுக்க கறுப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவே ஒருவித் கவித்துவத்தை அவர்களது காதற்கதைக்கு அளிக்கிறது. வறண்ட பாலையென கிடக்கும் வாழ்க்கைக்கிடையே ஊற்றெடுத்த சிறு சுனை போல அந்த ஒரு நாள் அவர்களுக்கு வாய்க்கிறது. தற்செயலால் ஆசிர்வதிக்கப்பட்ட அந்த இனிய நாள் அவர்களது ஏக்கங்களைத் துடைக்கவல்லது அல்ல எனினும் அடுத்து வரும் நாட்களின் புரட்டிப் பார்த்து அசை போட்டு உள்ளூற பூரிக்கிற ஞாபகங்கள் பொதிந்ததாய் அது நிச்சயம் இருக்கும். ரசித்து நுழைந்து, கசந்து பிரிந்து, பின் அதன் ஞாபகச் சுழலுக்குள் என்றென்றைக்குமாய் சிறைபட்டுத் தவிக்கிற இரு ஆத்மாக்களின் மறுசங்கம நாளை, நாமும் பார்க்கிற வாய்ப்பாக இருக்கிறது படம். வலிந்து திணிக்கப்பட்ட ஒரு வசனம் கூட படத்தில் இல்லை. மிக இயல்பான உரையாடல்களால் நிரம்பிய காட்சிகள் கோர்க்கப்பட்டு திரைப்படமென முழுமையடைகிறது. 

காட்சிகள் பலவும் வசனங்கள் எழுதப்படாமல் முதன்மை பாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கும், மார்க் டியுப்ளக்ஸ் மற்றும் சாரா பவுல்சன் இருவராலும் சுயமாக பேசப்பட்டு மேம்படுத்தப்பட்ட உரையாடல்கள் தான். ஒரு வகையில் திரைக்கதையையும் மார்க்கே எழுதியுள்ளதால் இது இன்னும் எளிமையாகவும், யதார்த்தமானதாக சாயல் கொள்ளவும் உதவியிருக்கலாம். பதின் காதலை முன்வைத்து மனதிற்குள் ரகசியமாய் சுமந்தலையும் கணக்கற்ற ஆண் / பெண்களின் மனதை நிறைத்திருக்கின்ற இளம்பிராயத்து ஏக்கங்களுடன் இப்படம் உறவாடும். உங்களது வாழ்வில் நீங்கள் மறக்கத் துடிக்கிற ஒரு அத்தியாயத்தை இது நினைவூட்டி இம்சிக்கிற படைப்பாகவும் இருக்கலாம். நாடகீய அதீதங்கள் பெரிய அளவில் படத்தில் எங்குமே இல்லையெனும் போதிலும். ஒட்டுமொத்தமாக படம் தரக்கூடிய பார்வை அனுபவம் அதீதமாகவே இருக்கிறது. இதழோரம் வழியும் சிரிப்பும், கண்ணோரம் வழியும் கண்ணீருமாய் இச்சிறு படத்தை பார்த்து முடிக்கிற வாய்ப்புகள் அதிகமுண்டு. பொதுவாக தனிமனிதர்களின் நாஸ்டால்ஜியாவை தீண்டும் எதையும் மையப்பொருளாய் படைப்பில் கொள்ளும் போது அது இயல்பாகவே அதனோடு உறவாடுபவர்களை எளிதில் தன்வசமாக்கும். இது அவ்வகையிலானது. 

இப்படத்தின் சிறப்பாக நான் பார்ப்பது ஒரு உறவில் லயித்து, அதிலிருந்து விடுபட்டபின்னர் அதனை அதே ஆணும் பெண்ணும் எவ்விதம் அணுகுகிறார்கள் என்பதில் இருக்கிற நுண்மை. ஒரு மிகையுணர்ச்சியுள்ள ஆணாக ஜிம் முடிந்துபோன தன் காதலை எஞ்சிய வாழ்வில் அணுகுகிற விதமும், அப்பிரிவை ஒரு பெண்ணாக அமேண்டா கையாளுகிற விதமும் நிரம்ப வேறானவை. இந்த இடத்தில் தான் நாம் வழமையாக ஊட்டப்பட்டு வருகிற சமூக கற்பிதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ‘பார்! ஒரு ஆண் தன் காதலை எப்படி மறக்காமல் இப்போதும் அதை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறான். ஆனால், அவளோ எல்லாவற்றையும் துடைதெறிந்துவிட்டு இன்னொரு திருமணம் செய்துகொண்டு வாழ்கிறாள். இந்த பெண்களே இப்படித்தான்!’ எனும் பொதுமைப்படுத்துதல் தான் அது. 

மேலைநாடு ,கீழைநாடு என வேறுபாடின்றி, ஒரு பெண் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கூட பல முடிவுகளை சமூக நிர்பந்தத்தை முன்வைத்தே மேற்கொள்ள நேர்கிறது. ஒரு ஆண் தான் தனியனாகவே இருக்கப் போவதாக முடிவு எடுப்பதற்கு அவனுக்கு இருக்கக்கூடிய சுதந்திரத்தை அங்கீகரிக்கிற பொது சமூகம், அதே அங்கீகாரத்தை அதுபோலவே ஒரு முடிவை எடுக்கிற பெண்ணுக்கும் வழங்குமா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. காதல் வாழ்வின் நினைவுகளைக் கூட அதி ரகசியமாகவே அவள் பாதுகாக்க முற்படுகிறாள். இளமையின் காதல் குறித்து ஆண்கள் பகிர்வதை அவர்கள் வெளிப்படைத்தன்மையாக பார்க்கிறோம். அதே வேளையில் அது சமூகம் ஏற்புடையதெனக் கொள்கிற ஒரு அனுமதி என்பதாகவும் நாம் கருதலாம். விருப்பமென பெரிதாக இல்லாவிட்டாலும் வாழ்வில் ஒரு பிடிப்பு வேண்டுமென்பதற்காகவே பெண் ஒரு பந்தத்திற்குள் நுழைய தலைப்படுபவளாக இருக்கிறாள். இந்த இரு பார்வைக் கோணங்களை மிக மெலிதாய், வலிந்து திணிக்காமல், படம் எடுத்துக் காட்டுகிறது. 

குறிப்பு: இறுதிவரையிலும் இக்கட்டுரையை வாசித்திருக்க வேண்டுமென்பதில்லை. ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே, உங்கள் மனதிற்குள் தமிழ் திரைப்படமான ‘96’ மனதில் மின்னி மறைந்திருக்கலாம். நான் அப்படத்தை இதுவரையிலும் பார்க்கவில்லை. ஆனால், அதன் கதை குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். அறிந்த வரையில் இப்படங்கள் இரண்டுமே ஒரே அடிநாதத்தைக் கொண்டவையாக இருப்பதாய் தோன்றுகிறது. ப்ளூ ஜே 2016-இல் வெளியாகி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே 2018-இல் ‘96’ வெளியாகியுள்ளது. அதற்காக உடனே இது அப்படத்தின் நகல் எனும் அவசர முடிவுக்கு நான் வர விரும்பவில்லை. ஒரு வேளை இரண்டு படங்களையும் உங்களில் பார்த்தவர்கள் அது குறித்து பின்னூட்டங்களில் பகிருங்கள். 

(தொடரும்…)

writervarunan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button