இணைய இதழ்இணைய இதழ் 51தொடர்கள்

ரசிகனின் டைரி; 6 – வருணன்

தொடர் | வாசகசாலை

The Matrix (1999)

Dir: Wachowski Brothers | 136 min | Amazon Prime

டைச்சவனே தன்னோட படைப்போட மல்லுக்கட்டும் நெலம வந்தா எப்படி இருக்கும்? படைச்சவன் மனிதன். படைப்பு ‘தொழில்நுட்பம்’. மேலே சொன்னதுதான் நிகழ்காலத்தோட யதார்த்தம்! டெக்னாலஜிங்கறது நாம அன்றாட வாழ்க்கையில புழங்குற மிக மிக அடிப்படையான, சாதாரண வார்த்தையா இப்ப மாறிப் போயிருக்கு. நிறைய பேர் டெக்னாலஜி இல்லேன்னா அவுங்க வாழ்க்கையோட அடுத்த நிமிசத்தை எப்படி கடத்துறதுன்னெ தெரியாத அளவுக்கு அதுல மூழ்கிப் போயிருக்காங்க. இன்னைக்கு நாம ஆளுற தொழில்நுட்பம் நம்மையே ஆளுற காலம் கூடிய சீக்கிரமே வரும். அதுதான் ஏற்கனவே வந்துடுச்சேன்னு நீங்க சொல்லலாம். ஆனால், இது வெறும் தொடக்கம்தான். 

சயின்ஸ் ஃபிக்‌ஷன் (அறிவியல் புனைவு) என்பது சினிமாவுல எப்பவுமே ஒரு சுவாராசியமான ஜானர். ஒரு பக்கம் அசலான அறிவியலும், மறுபக்கம் தரமான கற்பனையும் வந்து சரியான இடத்துல சந்திச்சா, அந்த சந்திப்பில் சரிவிகிதத்துல கலந்தா, நமக்கு ஒரு நல்ல சயின்ஸ் ஃபிக்‌ஷன் கிடைக்கும். நடுத்தர வயசுல இருக்க எந்த சினிமா ரசிகர்கிட்டையும் உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச Action Sci-Fi எதுன்னு கேட்டா பலரும் யோசிக்காம சொல்ற பட்டியல்ல நிச்சயம் இடம் பிடிக்கிற படமா The Matrix இருக்கும். (படத்தோட ஜானர இன்னும் குறிப்பா சொல்லணும்னா இது Cyberpunk வகையறா) யாரு சொல்றாங்களோ இல்லையோ, என்கிட்ட அந்த கேள்வியக் கேட்டீங்கன்னா என்னோட ஒரே பதில் இதுவாதான் இருக்கும். படம் வெளியாகி இருபத்திமூணு வருசமாகியும், அதுக்குப் பிறகு எத்தனையோ நல்ல சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் வந்திருந்தாலும், இந்தப் படத்தை மிஞ்சுற ஒரு பிரம்மாண்டமான அறிவியல் கற்பனை இதுவரைக்கும் வரலேன்னுதான் எனக்கு தோணுது. கதையை சொன்ன விதம், பார்வையாளர்களான நமக்கு அது கொடுக்குற நம்பகத்தன்மைன்னு இதுக்கு நிகரான இடத்தை இன்னோரு படத்துக்கு கொடுக்க மனசே வராம தவிக்கிற ரசிகன் நான் மட்டும் இல்லேன்னு நினைக்கிறேன். 

அறிவியல் அப்டிங்குற பிரம்மாண்டத்துல எந்த ஒரு சின்ன விசயத்தையும் அடிப்படையா எடுத்துக்கிட்டு அதைச் சுத்தி ஒரு கதையைப் பின்னி ஒரு சுவாரசியமான படத்த குடுக்குறதே சிரமமான வேலை. அதுல ‘மேட்ரிக்ஸ்’ மாதிரி ஒரு கதையை எழுதுறத விடுங்க, உண்மையிலயே யோசிக்கிறதே கஷ்டம். இத ஒரு சினிமா ரசிகன்கிறதத் தாண்டி ஒரு இயற்பியல் மாணவனா நான் சொல்றேன். ஒரே படத்துக்கான கதையை இயற்பியல், தகவல் தொழில்நுட்பம், பயோ கெமிஸ்ட்ரி, தத்துவம் (குறிப்பா ஜென் புத்திச தத்துவ மரபு) இப்படி சகலதையும் மடிச்சு சுருட்டி உருவாக்குனது மட்டுமில்லாம, அது எதுவுமே துருத்திகிட்டு தெரியாம மிகப் பொருத்தமான இடங்கள்ல திரைக்கதையோட ஓட்டத்துல கச்சிதமா பொருந்திப் போற மாதிரியான மேஜிக்தான் இந்த படத்தை இன்னிக்குவரை தனித்துவமான ஒரு படமா தக்க வச்சிருக்கு. இப்படியொரு படத்த அந்தப் படத்தோட இயக்குநர்களே நினைச்சாலும் திரும்பக் கொடுக்க முடியாது அப்டிங்குறத அடுத்தடுத்து வெளிவந்த இந்தப் படத்தோட இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களும் (முதல் பாகத்துக்கு கிடச்ச வரவேற்ப பயன்படுத்தி இன்னும் அதிகமா கல்லா கட்டுற லட்சியத்துக்காகவே எடுக்கப்பட்டவை), இல்ல இப்போ மிக சமீபமா வந்துச்சே அதோட தொடர்ச்சியும் (The Matrix Resurrections) நிரூபிக்குது. அதிலும் குறிப்பா போன வருஷம் இறுதியில வந்த கடைசி படத்தப் பத்தி சுருக்கமா சொல்லணும்னா, ‘அந்த பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்’ தான்.

இந்த தொடரோட முதல் அத்தியாயத்துல நான் உங்ககிட்ட கொடுத்திந்த வாக்க இந்த முறை உரிமை எடுத்துகிட்டு மீறப் போறேன். அதாவது படத்த எனக்குப் புரிந்த அளவுக்கு முழுசாவே சொல்லப் போறேன். ஆனா, கொஞ்சம் முன் பின்னா மாறி வர்ற திரைக்கதைய, மாத்தி அடுக்கி அப்படியே நேர் கோட்டுல சொல்லாம அதனோட பின்னணிய பத்தி விளக்கமா சொல்லப் போறேன். அதனால உங்க பார்வை அனுபவம் கெடாத அளவுக்கு சொல்ல முயற்சிக்கிறேன். இந்த கட்டுரை தரும் புரிதலோட நீங்க படம் பார்த்தீங்கண்னா இன்னும் படம் நல்லா புரியும். படத்தை முன்னமே பார்த்திருந்தா இன்னும் கொஞ்சம் தெளிவு கிடைக்கும்னு நம்புறேன். 

மனித பாட்டரி : மேட்ரிக்ஸ் கதையின் அடிப்படை 

இருபதாம் நூற்றாண்டோட இறுதியில மனிதர்கள் மிஷின்களுக்கு Artificial Intelligence – A.I (அதாவது செயற்கை நுண்ணறிவு) உருவாக்குற ஆராய்ச்சிகள செய்யறாங்க. அது எதிர்பார்த்ததை விடவும் பெரிய அறிவியல் பாய்ச்சலா இருக்குது. இதோட விளைவா மெஷின்களுக்கு சுயமா சிந்திக்கிற திறன் கிடைச்சுட்டதுனால, அவை எல்லாம் ஒன்னு கூடி, ஒரு கட்டத்துல, இவ்வளவு அறிவை வச்சிகிட்டு நாம ஏன் , நம்மை உருவாக்கினான் அப்டிங்குற ஒரே காரணத்துக்காக, மனுஷனுக்கு கீழ அடிமை போல இருக்கணும்னு யோசிக்கத் துவங்குது. மெஷின்கள் எல்லாம் இன்னும் தங்களைத் தாங்களே இன்னும் மேம்படுத்தி மிக அதிகமான எண்ணிக்கையில உற்பத்தி செஞ்சுக்குது. 

ஒரு கட்டத்தில் மனுஷங்கள விட அதிகமா எண்ணிக்கையில கூடிப் போற மெஷின்கள் முன்னாடி ரெண்டு முக்கியமான சவால்கள் இருக்கு. நம்மைப் படச்ச மனுஷன் ஒண்ணும் அவ்வளவு கேனையன் இல்ல. தன்னோட படைப்புகிட்டயே அடிமையா மாறி காலம் தள்ள. (அதுங்களுக்கும் இனியும் மனுஷனுக்கு கீழ இருந்து வேலை செய்ய முடியாது. அறிவு வந்துடுச்சே!) அவனோட புத்திசாலித்தனத்த குறைச்சு எடை போடக் கூடாது. எப்படியாவது இத சரிகட்டியே ஆகணும். இது முதலாவது சவால். மெஷின்களுக்கு சோறே மின்சக்தி தான். அதுலையும் எக்கச்சக்கமா உற்பத்தி செஞ்சு வேற வச்சாச்சு. எல்லாத்துக்கும் மின்சக்தி அவசியம். இதுனால எதிர்காலத்துல தங்களுக்குள்ளையே சாப்பாடுக்கான சண்டை வந்துடும்னு யூகிக்கிது. மேலே சொன்ன ரெண்டு சவால்களையும் எப்படி சமாளிக்கிறதுனு யோசிக்கும் போது அதுங்களுக்கு ஒரு அற்புதமான யோசனை வருது. 

இனி வருவது பயோ கெமிஸ்ட்ரி. 

மனித மூளை தான் நம்ம உடம்போட CPU அப்டிங்குறது இப்போ குழந்தைக்குக் கூட தெரிஞ்ச விசயம்தான். மூளை மற்றும் மனித நரம்பு மண்டலத்தோட (Nervous System) செல்கள ‘நியூரான்’ன்னு சொல்வாங்க. தலைவிரி கோலமா நிக்கிற நபர் போல அதனோட உருவ அமைப்பு இருக்கும். குட்டிப் பசங்க அறிவியல் பாடபுத்தகத்துலயே இது பத்தி ரொம்பவே தெளிவா போட்டிருப்பாங்க. இந்த நியூரான்கள் (Neurons) தான் வெளி உலகத்துல இருந்து உடம்புக்குள்ள வர்ற தகவல்களை கடத்துற வேலைய செய்யுது. இந்த தகவல் கடத்துற வேலையை அதுங்க தங்களுக்குள்ள குட்டி குட்டி எலக்ட்ரிகல் சிக்னல்கள் வழியாகத்தான் செஞ்சுகிட்டு இருக்கு. இதுக்கு Bioelectric Singnals-னு பேர். அதாவது சுருக்கமா சொன்னா இது ஒவ்வொரு மனுஷனும் எல்லா நேரமும் தன் உடம்புக்குள்ள உற்பத்தி செய்யுற மின்சாரம். என்ன! உற்பத்தி ஆகுற மின்சாரத்தோட அளவு ரொம்பவே கொஞ்சம் தான். 

மிஷின்கள் உயிர்வாழத் தேவையான அடிப்படை மின்சாரத்தை இதிலிருந்தே உருவாக்க நினைக்குதுங்க. (அளவில் கொஞ்சம்னாலும் மனுசங்கதான் கோடிக்கணுக்குல பூமியில இருக்காங்களே!) அதாவது மனுசனை பேட்டரியா பயன்படுத்திகிறதுதான் திட்டமே. ஆனா, இதை அப்படியே செயல்படுத்துறதுக்கு வாய்ப்பே இல்ல. மனிதர்கள் கூட இதுக்காக ஒரு பெரும் போர நடத்தி ஜெயிச்சு, அவங்களை அடிமைகளாக்கி, பிறகுதான் அவனை வச்சு தங்களோட எனர்ஜி தேவையை மெஷின்களால பூர்த்தி பண்ணிக்க முடியும். ஆனா, அது அவ்வளவு சாதாரணமில்ல. 

நிஜம் என்றால் என்ன? 

ஒரு மாத்து யோசனைய அதுங்களே கூடி கண்டுபிடிக்குது. மேல தலைப்பா நீங்க பாக்குறீங்களே, அதையே உங்ககிட்ட கேள்வியா கேட்டா உங்க பதில் என்னவா இருக்கும். ஒரு வேளை நாம இதை பத்தி யோசிச்சே பார்த்திருக்காம இருக்கவும் வாய்ப்பு இருக்கு. நம்மள சுத்தி இருக்கும் எல்லாத்தையும், அல்லது நாம ‘நிஜம்’னு நம்புற எந்தவொரு விசயமும் ‘அது அப்படி இருக்குதுன்னு’ மூளை சொல்றது தான். நம்ம மூளை எந்த ஒண்ண ‘நிஜம்’ (real) ‘உண்மையானது’னு முழுசா நம்புதோ அது வெறும் பிரமை என்றாலும் அதுதான் நம்மளுக்கும் நிஜம். சுருங்கச் சொன்னா நிஜம் என்பதே ‘ மூளை தான் நம்பி ஏத்துக்கிட்டத நாமளும் ஏத்துகிற ஒண்ணுதான். (படத்துல ரொம்ப அழகா மார்ஃபியஸ் கதாபாத்திரம் நியோ கிட்ட சொல்வாரு “(Inside the Matrix) what you are is just the mental projection of your digital self.”) 

 

எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்ல. என் எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணும்னு யோசிப்பவன் முட்டாள். அதிபுத்திசாலி வேற மாதிரி யோசிப்பான். அதாவது எதிரியோட சேதம் அதிகமாகணும்னு யோசிக்கிற அதே நேரத்துல தன்னோட சேதாரத்த எப்படி குறைக்கிறதுன்னும் யோசிப்பான். அதுக்கான மிக மிக எளிமையான வழியத்தான் தேடுவான். மெஷின்கள் அதிபுத்திசாலிங்க. அதனால மனுஷன விடவும் அவனோட மூளையை அவன் விரும்புற ஒரு வாழ்க்கைய சுதந்திரமா வாழறதா நம்ப வச்சாலே போதும். அவன் அத உண்மைனுதான் நம்புவான்னு விளங்கிக்கிற மெஷின்ஸ் எல்லாம் ஒன்னு கூடி அதுக்கான அடிப்படை வேலையில இறங்குது. 

திட்டம் இது தான். மனுஷங்கள எல்லாத்தையும் மிகப் பெரிய காப்ஸ்யூல்கள்ல அடைச்சு வச்சி அவங்ககிட்ட இருந்து பயோ மின்சாரத்தை அப்படியே அறுவடை செஞ்சு தங்கள் தேவையை பூர்த்தி பண்ணிக்கிறது. அதே நேரம் மனுஷங்களோட மூளையே உண்மை நெலமை இவ்வளவு பரிதாபமா (கிட்டத்தட்ட கோழிப் பண்ணையில இருக்குற கறிகோழிகளோட நிலமை தான்) இருக்குதுனு துளியும் உணர முடியாத வகையில அவங்களை ஒரு மாயத்தோட பிடியில நிரந்தரமா வச்சுட்டா அவங்கள மொத்தமா உண்மையிலயே பாட்டரிகளாக மாத்திடலாம். தெளிவாகி கேள்வி கேட்டாதானே பிரச்சனை. மழுங்கடிச்சே வச்சிருந்தா!? இந்த மூளையை ஏமாத்தி நம்ப வைக்கிற வேலைய கச்சிதமா செய்ய மெஷின்ஸ் கூடி எழுதுற மிகப்பெரிய கம்யூட்டர் புரோகிராம் (நிரல்) தான் “தி மேட்ரிக்ஸ்”. 

மனுஷங்க உண்மை, நிஜம் அப்டினு நம்புற, உணர்ற சகலமும், இந்த புரோகிராம் உருவாக்குகிற மாயைகள்தான். கட்டிடங்கள் துவங்கி, மனித முடி வரையிலும் நிஜ உலகத்துல இருக்குற எல்லாத்தையுமே இந்த புரோகிராமால ‘நிஜம் போல’ உருவாக்க முடியும். அதாவது மேட்ரிக்ஸ் நிஜ நிலைமைய மனுஷ மூளை உணர முடியாத வகையில அதை ஒரு விர்சுவல் ரியாலிட்டிக்கு (மெய்நிகர் யதார்த்தம்) உள்ளேயே வச்சிருக்கும். 

கதையோட துவக்கம் 1999 ன்னு இருந்தாலும், இந்த கதை உண்மையில நடப்பது எந்த வருஷத்துல அப்டிங்குறது யாருக்குமே தெரியாது. (மார்ஃபியஸ் இது 2199-ஆம் வருஷம்னு நம்புறாரு. அவ்வளவுதான்.) தெரிஞ்சது இதுதான். 21-ஆம் நூற்றாண்டோட தொடக்கத்துல மனிதர்களுக்கும், அதிபுத்திசாலியான மெஷின்களுக்கும் இடையில பெரிய போர் நடக்குது. அதோட முடிவுல மெஷின்ஸ் ஜெயிச்சுடுது. உக்கிரமா நடந்த போரால உலகமே நிர்மூலமாகி எங்க பார்த்தாலும் இடிபாடுகள். ஒரு பக்கம் தங்களோட தேவையை நிறைவேத்திக்க மெஷின்கள் எழுதின மேட்ரிக்ஸ்குள்ள மிச்சமிருக்கிற மனிதர்கள் விழுந்துட, அதுக்கு தப்பிப் பிழச்ச கொஞ்சம் மனிதர்கள் மெஷின்களோட கட்டுப்பாட்டுக்குள் வராத பூமியோட ஆழத்துல இருக்குற சையான் (Zion) நகருக்குள்ள தஞ்சம் புகுந்துக்கிறாங்க. அதுல இருந்த சில நல்ல ஹேக்கர்கள் சையானில் இருந்தபடியே மேட்ரிக்ஸ் புரோகிராமோட டிஜிட்டல் மாய உலகத்துக்குள்ள போய் வரும் வித்தைய கண்டுபிடிச்சு செயல்படுத்துறாங்க. மெஷின்கள் மேட்ரிக்ஸ் உலகத்துல இருக்கிறவங்களை கண்காணிக்க சில செக்யூரிட்டிகளை நியமிக்கிறாங்க. அவங்க பேரு ஏஜண்ட்ஸ். அவங்களோட தலைமை அதிகாரி தான் ஏஜண்ட் ஸ்மித். 

மார்ஃபியஸ் தலைமையில நெபுகட்னேசர்ங்கற பறக்கும் ஓடத்துல (ஸ்பேஸ் ஷிப் போலனு வச்சுக்கங்களேன்) ஒரு குழு இயங்கிகிட்டு இருக்கு. அங்க இருந்துகிட்டே ஒரு பக்கம் அவங்க சையான் நகரதுக்குள்ள எப்படியாவது நுழைய துடிக்கிற மெஷின்கள தடுத்து நிறுத்துறதுன்னும், மறுபக்கம் மார்ஃபியஸ் இருப்பதாக நம்புற எல்லாரையும் காப்பாத்தும் திறன் படச்ச ‘நியோ’வை தேடிகிட்டும் இருக்காங்க. அதே நேரத்துல அதில் இருந்தபடி அவங்களால தங்களோட மனசை (mind) மேட்ரிக்ஸுக்கு உள்ளேயும் வெளியேயும் கொண்டு போயிட்டு திரும்பி வர முடியும். கதையோட ஆரம்பத்துல நியோ உண்மையில கதையின் நாயகன் இல்ல. அவன் அதிபுத்திசாலி மெஷின்களோட படைப்பான மேட்ரிக்ஸ் புரோகிராம்ல ஏற்பட்ட ஒரு கோளாறு (glitch). அந்த தப்பு எங்க நடந்தது என மெஷின்களுக்கும் ஒரே குழப்பம். அதுக்காக ‘ஏஜண்ட்களும்’ இன்னொரு பக்கம் நியோவை தேடி அலையுறாங்க. 

வெள்ளை முயலைத் தொடர்ந்து போ

நம்மாளு நியோ இது எதுவுமே தெரியாம பகல் நேரத்துல தாமஸ் ஆண்டர்சன் என்ற பேருல ஒரு கம்யூட்டர் புரோகிராமராகவும், மாலை நேரத்துல நியோ என்ற பேருல ஒரு ஹேக்கராகவும் ரெட்டை வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்காரு. அவரும் மேட்ரிக்ஸோட மாயவலைக்குள்ள சிக்கிக்கிட்டு இருக்க ஆனா, சிக்கி இருப்பதே தெரியாத, சாதாரண ஒரு மனுசப் பூச்சிதான். அவரைத் தேடிக்கிட்டு இருக்குற மார்ஃபியஸ் குழுவுல உள்ள ட்ரினிட்டிங்கற பொண்ணுதான் நியோவ சந்திச்சு மார்ஃபியஸ்கிட்ட கூட்டிகிட்டு போறாங்க. அங்கதான் அவர் அவனுக்கு ரெண்டு கலர்ல மாத்திரைகள குடுத்து அதுல ஒண்ண தேர்ந்தெடுக்கச் சொல்றாரு. நீல மாத்திரை அவன் உண்மை என்னன்னு தெரிஞ்சிக்கவே விரும்பலேன்னா எடுக்க வேண்டியது. சிகப்பு மாத்திரை தெரிஞ்சுக்கணும்னா எடுக்க வேண்டியது. நியோ எடுக்குற அந்த சிகப்பு மாத்திரை அவன் வாழ்க்கையவே புரட்டிப் போடுது. இதுவரை தான் வாழ்ந்துகிட்டு இருக்க வாழ்க்கை எவ்வளவு போலியானதுன்னு தெரிய வர, அவன் மனசு அத நம்ப மறுக்குது. அதுலையும், மார்ஃபியஸ் அவன்கிட்ட நியோதான் மனிதர்களோட ஒரே நம்பிக்கை. நீதான் எல்லாரையும் காப்பாத்தப் போற ‘The One’ (கதாபாத்திர பேரான Neoவுல இருக்குற எழுத்துகள மாத்தி எழுதினா One ன்னு வரும்) அப்டினு சொல்றத ஏத்துக்கவே மாட்டேங்குறான். 

நம்ம நிஜ உலகத்தோட அறிவியல் கோட்பாடுகள் ஏன் மேட்ரிக்ஸ்குள்ள செல்லுபடியாகாது, எப்படி மனசை மட்டுமே வச்சு முடியாதுன்னு நாம நம்புற விசயங்களைக் கூட வித்தை போல செய்ய முடியும் என நியோவுக்கு புரிய வைக்க பல வழிகள்ல முயற்சி செய்றாரு மார்ஃபியஸ். ஒரு கட்டத்துல பல சிமுலேஷன் புரோகிராம்களோட உதவியோட இது எல்லாத்தையும் புரிஞ்சுக்கிற நிலைக்கு அவன் வந்துட்டாலும், தான்தான் ‘The One’ அப்டிங்குறத மட்டும் அவனால ஏத்துகவே முடியல. ஒரு வேள அப்படி ஒருத்தன் இருந்தாலும் அது தான் இல்லேன்னும் அது வேற யாரோ ஒருத்தராதான் இருக்க முடியும்னு தீர்க்கமா நம்புறான். தீர்க்கதரிசி மாதிரி இருக்க பெரிய அம்மா ‘ஆரக்கிள்’ கூட நடக்குற சந்திப்பு ஒரு மாற்றத்தை அவனுக்குள்ள ஏற்படுத்துற போதிலும், அவனால மனப்பூர்வமா அதை ஏத்துக்க முடியல. நம்பினா மட்டும்தான் அவனால ‘அதுவாக’ முடியும். ஆனா, அது அவனுக்குள்ள இருந்து வர வேண்டியது. (மார்ஃபியஸ் சொல்வாரு, “நான் உனக்கு கதவைத்தான் (பாதையை) காட்ட முடியும்… நீ தான் அதுல நடந்து அதைக் கடந்து போகணும்” அப்டீன்னு). ட்ரினிடிகிட்ட அவனுக்கு துளிர்க்கிற தூய்மையான ஆனால், அவங்களுக்குள்ள பரிமாறிக்கிறாத காதல்னால கூட அவன தான் தான் காக்க வந்தவன்னு நம்ப வைக்க முடியல. 

ஒரு கட்டத்துல மேட்ரிக்ஸ்குள்ள போகிற ஒரு சமயத்துல ஏஜண்ட் ஸ்மித்கிட்ட இருந்து இவனைத் தப்பிக்க வைக்க மார்ஃபியஸ் மாட்டிகிறாரு. ஆனா, தப்பிச்சு ‘நெபுகர்னேசர்’கே திரும்புறவன் அவரைக் காப்பாத்த துணிஞ்சு மீண்டும் மேட்ரிக்ஸ்குள்ள போகத் தயாராகுறான். அந்த சாகசம் என்னவோ ஒரு குருட்டு தைரியத்தோட விளைவுதான். கூடவே அடம்பிடிச்சு ட்ரினிடியும் வர்றா. அங்க நடக்குற ஆக்‌ஷன் காட்சிகள் (படம் வெளியான காலகட்டத்துல மட்டுமில்லாம இப்பவும்) ரொம்பவே ஸ்பெஷலானவை. இறுதியில மார்ஃபியஸை காப்பாத்துற இந்த முயற்சில தான் மத்தவுங்கள மாதிரி இல்லன்னும், தனக்குன்னு தனியான சிறப்பு சக்தி ஏதோ ஒண்ணு இருக்குன்னும் நியோ உணரத் துவங்குறான். 

அவங்க மேட்ரிக்ஸ்கு உள்ளேயும் வெளியேயும் போய் வருவதா சொல்லி இருக்கக்கூடிய வழி ரொம்பவே அறிவியல்பூர்வமா சுவாரசியமானது. ரொம்ப நாள் முன்னாடியே பருப்பொருளோட இருமைப் பண்பு (duality of matter) பத்தி ‘டி பிராய்’னு ஒரு இயற்பியலாளர் (physicist) விளக்கி இருக்காரு. அதாவது அணுக்களால (atoms) ஆன பொருட்களுக்கு அலை பண்பும் (wave nature) இருக்கும் அப்டீங்கிறதுதான் அது. அதை கொஞ்சம் மசாலாவாக்கி கதையோட கோத்து விட்டிருக்காங்க. அதாவது அணுக்களால ஆன மனுஷங்க (நமக்கு கதையில விளக்கப்படாத ஏதோ ஒரு வகையில) மின்காந்த அலைகளா (electromagnetic waves) மாற்றப்பட்டு ஒரு டெலிஃபோன் லைன் வழியா பயணப்படுறாங்க. இத காட்சிப்படுத்தி இருக்குற விதம் படத்துல ரொம்ப சுவாரசியமாகவும், ஆச்சரியமூட்டுற த்ரில் அனுபவமாகவும் இருக்குது . 

துரத்துற ஏஜண்டுகள்கிட்ட இருந்து மார்ஃபியஸையும் ட்ரினிடியையும் தப்பிக்க வைக்கிற நியோவால கடைசியா தப்பிக்க முடியாம ஸ்மித்கிட்ட மாட்டிக்கிறான். அவனால சுடப்பட்டும் சரியுறான். அங்க தப்பிச்ச ட்ரினிடி இதுவரை பொத்தி வச்சிருந்த காதலை (உடலா இருக்குற அவன்கிட்ட) வெளிப்படுத்தி, ‘எழுந்திரு நியோ’ன்னு சொல்ல, அந்த காதல்அவன வழி நடத்துது. சாவை ஜெயிச்ச அவன் தான்தான் மீட்க வந்தவன்னு புரிஞ்சுக்கிற நொடி நமக்குமே சிலிர்ப்பான கட்டம்தான். நம்புற அவனோட கண்ணுக்கு மேட்ரிக்ஸோட மாய டிஜிட்டல் உலகம் போர்த்தப்பட்ட மாயத்திரைகள் விலகி தெரியத் துவங்க – ஏஜண்டுகள் உள்பட எல்லாமே – பச்சை நிறத்துல மின்னி சாரல் போல நேர்கோடுகளா கீழ இறங்குற கோட்களா (codes) காட்சி தருது. தலைவனா இருக்குற ஏஜண்ட் ஸ்மித்தை நியோ அழிக்கிறதோட படம் முடியுது. 

***************

ஏறக்குறைய படத்தோட அடிப்படைக் கதைய உங்க பார்வை அனுபவத்த (viewing experience) கெடுத்திடாம முடிஞ்ச அளவுக்கு கோர்வையா சொல்லிட்டேன். உண்மையிலயே இந்த படத்தைப் பார்த்த அப்புறம் காட்சிகளா படம் கொடுத்த திரில்லை விட இந்த கதைய முழுசா உள்வாங்கும் போது மனசுகுள்ள உருவாகுற (மனுஷங்களோட எதிர்காலம் பத்தின) ஒரு பயம் கலந்த திரில் ரொம்பவே பெருசா இருக்கும். ரொம்பப் பெரிய மெனெக்கெடல் இந்த படத்துக்குப் பின்னால இருக்கு. வாச்சௌஸ்கி இரட்டையர்கள் அவங்க எழுதுன இந்தக் கதைய பல பெரிய ஸ்டுடியோக்களுக்கும் சொன்னாங்க. ஆனா, இதை படமா தயாரிக்க எல்லோருமே தயக்கம் காட்டினாங்க. இவ்வளவு அடர்த்தியான கதையை திரைப்பட வடிவத்துக்கு கொண்டு வருவது சாத்தியமே இல்லன்னு பலருக்கும் தோணுச்சு. ஒரு வேளை சிரமப்பட்டு எடுத்திட்டாலும் இப்படிப்பட்ட கதைய பார்வையாளர்கள் எவ்வளவு தூரம் புரிஞ்சுக்க முடியும் அப்டிங்குற சந்தேகம் அவங்களுக்கு அதிகமாவே இருந்துச்சு. நிச்சயம் இந்தக் கதைய திரைப்பட வடிவத்துக்கு மாத்த பல நூறு கோடி தேவைப்படும். அவ்வளவு பெரிய முதலீட்ட எதை நம்பி செய்றதுன்னு தயக்கம். கடைசியா வார்னர் பிரதர்ஸ்தான் இதைத் தயாரிக்க முன்வந்தாங்க. ரசிகர்கள விடுங்க, முதல்ல இப்படி ஒரு படத்தோட கதைய அதோட தத்துவத்த, அதுல நடிக்கிற நடிகர்களுக்கு புரிய வைக்கணும். அதுவே மிகப் பெரிய சவால். இதுக்கே இயக்குநர்கள் பெரிசா மெனக்கெட்டாங்கன்னு நியோ பாத்திரத்துல நடிச்ச கியனோ ரீவ்ஸும், ட்ரினிடி பாத்திரத்துல நடிச்ச காத்தரின் ஆனி மோஸும் சொல்லி இருக்காங்க. 

படம் வெளியான போது உண்மையிலயே ரசிகர்கள் பலராலும் இது ரொம்ப வித்தியாசமான ஆக்‌ஷன் படமா மட்டும்தான் கொண்டாடப்பட்டுச்சு. அதுவும் மறுக்க முடியாததும்தான். நானும் என்னோட டீன் ஏஜ் பருவத்துல முதல் முறை படத்தைப் பார்க்கும் போது அப்படித்தான் புரிஞ்சிகிட்டேன். கதையப் புரிஞ்சுக்காம, வெறுமனே பல மாடிக் கட்டிடங்கள்ல இருந்து கீழ குதிச்சு எதுவும் ஆகாம எந்திரிக்கிறது, அதி வேகமா சண்டை போடுறது, நினைச்சா பறக்குறதுன்னு வெறும் சூப்பர் ஹீரோ வேலையா நியோ செய்யுறத அப்போ பார்க்கும் போது அப்படித் தானே தோணியிருக்கும். ஆக்‌ஷன் காட்சிகளோட உருவாக்கத்துல ரொம்பப் பெரிய பாய்ச்சல இந்த டீம் சாதிச்சாங்க. ஆனா, அதுக்கெல்லாம் அடிப்படையா இருக்குறது இந்த படத்தோட மையக் கதை. அதுதான் சகலத்தையும் தூக்கி நிறுத்துது. அத புரிஞ்சுக்கத் துவங்குன பிறகுதான் உண்மையிலயே படம் இன்னும் பிரம்மாண்டமா தெரியுது. வெளியான சமயத்துல ரொம்ப கொஞ்ச பேர்தான் அந்த கதையோட தத்துவத்த புரிஞ்சிகிட்டு மலைச்சுப் போனாங்க. அதுவும் கதையில சும்மா ஜிகினா மாதிரி மேம்போக்கான தத்துவ தூவலா இல்லாம ரொம்ப ஆழமா உலகத்தோட பல தத்துவ மரபுகளையும் இணைச்சு (பிளாட்டோவுடைய ‘Allegory of the Cave’ தொடங்கி ஜென் புத்திச தத்துவ மரபு வரைக்கும்) அடிப்படைக் கதைய அதுக்கு மேல உருவாக்கி இருக்கும் விதம் பிரமிப்பானது. ஆனா, பல துறைகள்ள மனித வாழ்க்கையில டெக்னாலஜியோட பங்கு பத்தின ஒரு தொடர்ச்சியான, தீவிர விவாதம் ஏற்பட இந்தப் படம் ஒரு துவக்கப் புள்ளியா இருந்திருக்கு. 

நம்ம காலத்துல வெளியான தவறவே விடக்கூடாத படங்கள்ல இதுவும் ஒண்ணு. எல்லா காலத்துலயும் வெளியான மிகச் சிறந்த சயின்ஸ் பிக்‌ஷன் கதைகளோட பட்டியல்ல இந்த படத்துக்கு என்னைக்குமே நிரந்தர இடம் இருக்கு. படத்தோட அத்தனை பாகங்களும் பிரைமில் இருக்குதுன்னாலும் நான் முதல் பாகத்தை மட்டும்தான் சிபாரிசு பண்ணுவேன். மீதமுள்ளது எல்லாம் உங்களுக்கு நிறைய நேரமும், கைவசம் நிறைய பாப்கார்னும் இருக்கும் போது மட்டும் பாக்க வேண்டியவை. 

(தொடரும்)

writervarunan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. Well explained sir, while first time I am seeing this movie in the age 12 i understand nothing, but after this I have an interest to see the movie again.
    Thankyou ?
    Waiting for the next essay.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button