இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

ரட்சகன் – ஜீவ கரிகாலன்

சிறுகதை | வாசகசாலை

இன்வெர்ட்டர் இல்லாத நடுத்தர வீடுகளுக்கேயான கோடை மாத வெப்பம் தகிக்குமாறு பாவ்லா செய்யும் சாளரத்தில் காற்றுக்கு பதிலாக ஊடுருவும் இன்வெர்ட்டர் ஒளி விளக்குகளில் என் தோளில் படர்ந்திருக்கும் ஊடல் முடித்த அவளது தேகம்.. தூக்கத்தில்தான் இருந்தாள்.

நான் அவளை ரசித்துக் கொண்டிருந்தேன்.

இல்லை…. இல்லை. அவளையும் என்னையும்…

அப்போது திடீரென உஷ்ணமிக்க என் உடல் சில்லிட்டிருப்பதை உணர்கையில்,  பயத்துடன் அவள் என்னை உசுப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போதும் எனக்குப் புரியவில்லை அவள் ஏன் பதட்டமாகிறாள் என. அவள் என் கன்னங்களில் மாறிமாறி அறைந்து கொண்டிருக்கையில், என்னை ஒரு விசை படீரென இழுத்தது.

“அம்மு ஏன் பயப்படுற? எனக்கு ஒன்னுமில்ல”

மின்சாரம் திக்கியபடி வந்ததும், இன்வெர்ட்டருக்கு சத்தியம் செய்யவும், ஆறுதலானாள்.

***

“என்னடா சொல்ற… இது கனவு வந்துச்சா? இல்ல OB அனுபவமா?” என்று நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கையில்…

மேலும் அவன், “உன்னை நீயே பாக்குறல்ல… அதுக்கு பேரு என்னன்னு சொல்லுடா”

“மொத்த வாழ்க்கயும் ஒரு சிமுலேசன்தான். ரெண்டு ட்டீ ட்வெண்ட்டி கேம் மாதிரிதான் அது. ஸ்க்ரிப்ட்டடா கூட இருக்கலாம்”

“இப்படியே பேசுனன்னா, அவ உனக்கு நோட்டீஸ்தான் அனுப்புவா”

“மச்சி, உன்ட்ட சொல்லலை. ம்யூச்சவலா நாங்க பிரிஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணதே நேத்துதான்.”

“ஏய்… என்னடா சொல்ற…”

“அது OB-லாம் இல்ல, ஆம ஓட்டை விட்டு வெளி உலகத்த பார்த்துட்டு அப்றம் ஓட்டுக்குள்ளயே ஒடுங்கின மாதிரி அனுபவம்”

“ஓட்டுக்குள்ள ஒடுங்கினா வாழ்க்கைய எப்படி வாழ்றது? அதான் அவ முடிவெடுத்துருப்பா!!”

“ஆனா, ஓடுங்கறத நான் ஒடம்புன்னு சொல்லலை.. ஆனா, எனக்கு ஆமைதான் சரியான உதாரணம்… இந்த ஓட்டுக்குள்ள ஒடுங்கி தூங்கறப்போ வர்ற கனவுதான் வாழ்க்கைன்னு தோணுது… ஆனா, ஒன்னு… நான் என் கூட்டை விட்டு வெளியே வந்தப்போதான் அவ எனக்கு ரொம்ப நெருக்கமா இருந்தா, எல்லா புலன்களும் அவளை உண்மையா உணர்ந்தது. நாங்க முடிவெடுத்ததும் அப்போதான்.”

“என்னடா சொல்ற”

“பின்னாடி அவளே என்னையத் தள்ளி விட்டுட்டா… நாங்க எடுத்த முடிவு, கடலுக்கு முதல்முறையா மத்த ஆமைக் குஞ்சுகளோட பயணமா இருக்கறத உணர்ந்தோம். அப்போ அவ எனக்கு அதுவரை இல்லாத புதிய ஒளியா தெரிஞ்சா…”

“அப்போ அதுவரைக்கும்?”

***

சேகர் மாமாதான் அழைத்துச் சென்ற ஞாபகம்…

“நம்ம பண்ணை கெணத்துல ஆமை வந்துருக்கு”

ஆமையை பாடப் புத்தகங்களில் பார்த்த எனக்கு, அன்று கிணற்றுக்குள் பார்க்கையில் அடிவயிறு கலங்கியது. நிதானமாக அது கிணற்றின் சுவர்களுக்கு மத்தியில் ஊர்வது போல நீந்திக்கொண்டிருந்தது கிலி மூட்டியது.

‘பார்த்துட்டேன் போதும்’ என பயந்தவாறு அங்கிருந்து விலக, படக்கென்று என்னைத் தூக்கி – என் கால்களைப் பிடித்து கிணற்றில் தலைகீழாக போடுவது போல் பயமுறுத்தினான் இன்னொரு மாமா (அவன் பெயரை மறந்துவிட்டது ஆச்சரியம்தான்). பின்னர் என் தம்பியையும் அவ்விதம் பயமுறுத்தினார்கள்.

ஆனால், கிணற்றில் தொங்கியபடி தலைகீழாகப் பார்க்கையில் கிணற்றுக்குள் இருந்த அந்த விநோத ஜந்து, பறந்து வந்து என் தலையைக் கொய்யும் கனவை நான் அடிக்கடி கண்டதுண்டு.

கொசுக்கடிக்காக டார்ட்டாய்ஸ் வைக்கும்போது அது என் அருகில் வைக்கும்போதெல்லாம் அந்தக் கனவு வருவதாகக் கண்டறியும்போது, நான் கவனமாக என் தம்பிக்கு அருகில் அதை வைத்துவிடுவேன்.

அம்மா காய்கறி வாங்கச் சொல்கையில் வெண்டைக்காயின் காம்பை உடைத்துப் பார்த்து வாங்கச் சொல்வார். என் தலையைக் கொய்யும் சப்தத்திற்கு இணையாகவே வெண்டையின் காம்பை உடைப்பதும் இருப்பதாகத் தோன்றும்… வாங்குகையில் உடைக்கவில்லை என்றாலும், வீடு வரும்வழியிலேயே ஒவ்வொன்றாக எடுத்து உடைத்துப் போடுவேன், ஒவ்வொரு முறையும் ஆமை நினைவில் வந்து பயமுறுத்தும்.

பலமுறை கிணற்றிலிருந்து பறந்துவந்த அந்தக் கனவு ஆமை என் தலையைக் கொய்யும் போதெல்லாம் கொஞ்சம் சிறுநீர் கழித்துவிடும் வழக்கம் இருந்தது. முதன்முறையாக பிசுபிசுத்ததும் கூட அப்படியான ஒரு ஆமையினால்தான் (இப்போதும் கூட ஆமையைவிட என்னைக் கொடுமைப்படுத்திய அவளை மறக்க நான் ஏதாவது சொல்லவோ, செய்யவோ வேண்டியிருக்கிறது). அதனாலேயே நான் மாலையிலிருந்தே தண்ணீர் குடிக்கும் வழக்கத்தை நிறுத்தியிருந்தேன்.

கண்களை மூடிக்கொண்டு கற்பனையாக திரைப்பாடல்களுக்கு அவளோடு நடனம் ஆடும்போது கூட, கீழே ஆமை வந்துநிற்பதை உணர்வேன். ஆமை வந்து நின்றதுமே என் காதல் மாதயிறுதி ஓடோனில் டப்பா போல ஒன்றுமற்றதாக மாறிவிடும், நான் மண்டியிட்டோ, குனிந்தோ ஆமைக்கு என் தலையைத் தருவேன்.

இளைஞனாக வளர்ந்தபோது, ஊரைவிட்டு மாநகரத்திற்கு வந்த எனக்கு ஆமை உற்ற தோழனாகியது.. பகல் நேரத்திலோ அல்லது நள்ளிரவிலோ எங்களைப் போன்ற தனித்த கிணற்று ஆண்களுக்கு ஆறுதலாக இருக்கும் பழக்கங்களை இழிவாகப் பேசும் பாட்டன் காலத்திலிருந்து தொடரும் சித்த மருத்துவர்களைக் காட்டிலும், ஆமைகள் எவ்வளவோ ஆறுதல் தரும் வல்லமை கொண்டதாகக் கருதினேன். அதன் பின்னர் ஆமையை ஒரு சென்ட்ரி போல என் தலைமாட்டில் இடவலமாய் நடந்துகொண்டே இருக்கும்படி கற்பனை செய்துவிட்டு உறங்கலானேன்.

பின்னர் ஒருநாள், பணிமுடித்து வீடு செல்லும்முன் பாலாவோடு கொஞ்சம் இலக்கியம், அரசியல் எனப் பேசியபடி அந்த மாநகரத்து ‘பறக்கும் ரயில்’ என சிறப்பு பெற்ற, மக்களின் மீதுள்ள கரிசனத்தால் கால்வாய் (இப்போது அது வெறும் சாக்கடை) மீது கட்டப்பட்ட பாலத்தை ஒட்டிய சாலையில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தோம். அப்போது கவிழ்த்து வைக்கப்பட்ட பெரிய இரும்புச்சட்டி போல ஒரு குப்பைமேடும் அதில் நாய்கள் மாடுகளோடு சேர்ந்து சில மான்களும் பொறுக்கிக் கொண்டிருந்தது. பாலா, ‘அதை கவனித்தீர்களா?’ என்றார்… அப்போதுதான் கவனித்தேன் அந்த குப்பைத்தொட்டி ஊர்ந்து ஊர்ந்து சாக்கடைக்குள் இறங்கியது. மானுட வெறுப்பாளரான பாலா, உடனேயே மதுவருந்த வேண்டும் என்று உரையாடலைத் துண்டித்துக் கொண்டார்.

அந்த சம்பவத்திற்கு பின்னர் ஆமை என்றால் நாற்றம்தான் வரும்.. ஒரு கீழ்மையான செயலைச் செய்தாலோ, பணியின்போது நேர்மை தவறினாலோ, அவளை ஏமாற்றும்போதோ எனக்கு அந்த நாற்றம் பிடித்த ஆமை ஊர்ந்துவர ஆரம்பித்தது. தினமும் பறக்கும் ரயிலில் ஹார்பர் வரை வந்து செல்பவன் என்பதால், அந்த நாற்றத்தை என் மூளை நரம்புகள் துல்லியமாகச் சேமித்து வைத்திருந்தன… சொல்லப்போனால் சில ஆண்டுகளாகவே நான் அந்த நாற்றத்தோடு வாழ்ந்து வந்தேன். அதாவது நானே ஓர் ஆமை புகுந்த வீடாக மாறியிருந்தேன்.

என் தரித்திர காலத்து ஒரே சகாவான அந்த முதிய ஆமையை எனது திருமணத்திற்கு பின்னரும் கண்டேன்… எங்கள் தேனிலவு காலத்திலேயே, ரிசார்ட்டின் கடற்கரையில் காமுறுகையில் கரையொதுங்கி வந்த முதிய ஆமை ஒன்றை அவள்தான் முதலில் பார்த்தாள். கழுத்தில் ஒரு பிளாஸ்டிக் பை சுற்றியிருந்தது, குப்பையில் அது பார்க்காத ப்ளாஸ்டிக்கா என்று அந்த ஆமையை நினைத்தபடி அருகே செல்ல, அது செத்துக்கிடப்பதை உணர்ந்தவுடன் அலறி அடித்துக்கொண்டு அறைக்கு ஓடினேன்… காமம் ஓட்டிற்குள் புகுந்தது.

அடுத்த நாளே வேறு ரிசார்ட் போவோம் என்று எட்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் வேறோர் ஓட்டலுக்குச் சென்றோம்… அங்கு இரவு உணவை கடற்கரையிலேயே உண்ணுவதாய் ஏற்பாடு… அந்த மங்கிய ஒளியில் உணவு பரிமாறித் திரும்பிய சிப்பந்தி, ஏதோ இடறிக் கீழே விழ அருகிலிருப்போர் டார்ச் அடித்துப் பார்த்தார்கள். அதற்கும் மேலே சொன்னால் என் கொடூரமான தேனிலவைப் பற்றிய கதையாக மாறிவிடும்…

ஆமை போல நகர்ந்த என் வாழ்வில் மீனுக்குட்டி வந்தாள். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. கொள்ளைக்காரர்கள் புத்திசாலிகளானால் கிட்ஸ் ஷோரூம் வைப்பார்கள் என புதுமொழி ஒன்றை ஷிவா அடிக்கடி சொல்வான்… அந்தப் பாழாய்போன புதிய பேபி ஸ்டோருக்கு மீனுவையும் அழைத்துச் சென்றிருந்தேன். எத்தனையோ பொம்மைகள் இருக்க 2000 ரூபாய் மதிப்புள்ள ஒரு எலக்ட்ரானிக் ஆமைதான் வேண்டும் என்று சொன்னாள். முதன்முறையாக என்னிடம் குதித்து அடித்து அழுது அடம்பிடித்தது அந்த ஆமைக்காகத்தான். எனக்கோ யார் மீதாவது வன்மத்தைக் காட்ட வேண்டும் என்று தோன்றியது… அப்போதுதான் கண்ணதாசன் எனக்குப் பிறந்தநாள் பரிசாக கெட்டி அட்டையிலான ‘அந்த எக்ஸைல்’ நாவலைப் பரிசளித்தான்.

ஆமையை விட மோசமான நைட்மேர்கள் எனக்கு வர ஆரம்பித்தன, ஹோம் லோன் அதில் தலையாயது. அதைவிட மேலானது உடல், பயிற்சி, யோகம் என ஆரம்பித்து ஆன்மீகம், பிரபஞ்ச சக்தி, வீடு பேறு, குருஜியின் பாதம் என மனம் எங்கெங்கோ பற்றியது. ஆனால், எல்லாவற்றையுமே வெவ்வேறு ஆமைகளாக மட்டுமே உருவகப்படுத்த முடியும்.

அண்மையில், மழைக்காலத்தின் ஒரு மாலையில் வீட்டிலிருந்து ஒரு அழைப்பு.

“ஏ நியூஸ் பாக்கலையா – ரெட் அலெர்ட் போட்ருக்கான்”

புயலுக்கான அறிவிப்பு என்பது சூப்பர் மார்க்கெட்களில் மேகியும், பிஸ்கட்களும் சூறையாடப்படும் அறிவிப்பும் கூட. முந்தாதவர்கள் சேமியாவும், ரவையும் வாங்கியபடி வீடு திரும்புவார்கள். இலக்கிய மரபுப்படி வாழும் நான் இரண்டாமவன் என்பது இயல்புதானே.

புயல் ஆரம்பிக்கும் சமிஞ்ஞைகள், ஊருக்கே சேர்ந்தார்போல் கேட்க, சர்ச்சை விட உயரமான ஓநாய் ஊளையிடத் தொடங்குவது போல பலத்த காற்று ஊரைச் சூழந்தது.

எஞ்சிய பிஸ்கட்கள், ரவை, சேமியா, கடலை மிட்டாய்களோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். சரியாக ஏரிக்கரை சாலை வழியாகச் செல்லும்போது காற்றில் பறந்துவந்த ஒரு உடைந்த பனை மட்டை என் ஹெல்மெட்டில் விழுந்தது. ஒருகணம் மீனுக்குட்டி மட்டும் என்னைத் தழுவிச்சென்றாள்.

இங்கே நின்றால் ஆபத்து என விரைவாக வண்டியை ஓட்டினேன். ஸ்பீட் ப்ரேக்கரில் வேகமாக ஏறியது போல வண்டியைத் தூக்கிப்போட்டது, இரண்டாம் கண்டத்திலும் தப்பி வீட்டுக்கு விட்டேன்… இரவு சாப்பிட்டு முடித்து, இடி மின்னலுக்கு பயந்து என்னுள் புதைந்து தூங்கிக் கொண்டிருக்கும் மீனுவைத் தொந்தரவு செய்யாமல் விழித்தே இருந்தேன். புயல், இடியை விட மோசமான சஞ்சலமாக இருந்தது. வழக்கம் போல திசைமாறிச் சென்றது போல அதிகாலைச் செய்திகளை செய்தி ஊடகங்கள் துலக்கித் துப்பிக்கொண்டிருந்தது.

நான் விடிந்ததும் வண்டியை எடுத்துக்கொண்டு ஏரிக்கரைக்குச் சென்றேன்…

நான் நினைத்தது சரிதான். ஒரு பனை மட்டையைக் கொண்டு அந்த தலை சிதறிய முதிய ஆமையை அப்புறப்படுத்துகையில், ஒரு பெரியவர் தன்னை முன்னாள் விவசாயி என அறிமுகப்படுத்திக் கொண்டவர். அது குளத்து ஆமைதான் என்றார். அதன் வயதைச் சொன்னார். அந்த ஏரியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் பற்றிச் சொன்னார். அவர் வாட்ச்மேனாக வேலை பார்க்கும் அவர் விவசாயம் செய்த நிலம் பற்றி ஒரு டெம்ப்ளேட் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட அதன் வயதும் என் வயதும் ஒன்றென அவர் கூறியதிலிருந்து தெரிந்துகொண்டேன்.

***

என் நண்பனை அம்மாலையே பாருக்கு அழைத்தேன்..

“ஜீ, இனி அந்த ஆமை என் கனவுல வராது ஜி. எங்க பந்தம் முடிஞ்சிருச்சு”

அவருக்கு நான் ஏதும் இலக்கியம் பேசாத சந்தோசம், புன்சிரிப்போடு நான் பேசுவதைக் கேட்டபடி இருந்தார்.

“ஜி, ஒன்னேயொன்னு சொல்றேன்… அந்த ஆம நெனச்சா ஓட்டுக்குள்ள தலைய எடுத்துருக்கலாம். ஆனா, அதெ செய்யல… ஏன் தெரியுமா?”

அமைதியாக இருந்தார்.

“அது தற்கொலை செஞ்சுருச்சு ஜி… அதுவும் என் வண்டில” என்று அழ ஆரம்பித்தேன்..

ஒருவழியாக சமாளித்து, வீடு திரும்பி இரவு இருநாள் உறக்கத்தையும் சேர்த்து தூங்க எத்தனிக்கையில் போனை எடுத்திருக்கக் கூடாது. நண்பர் வீடு சேர்ந்ததை மெசேஜ் செய்திருப்பார் என்றுதான் போனை கையில் எடுத்தேன்.. ஆனால் அவரோ…

“ஜீ, தப்பா எடுத்துக்காதிங்க… உங்க கனவிலும் கற்பனையிலும் வந்த ஆமை ஒருபுறம் இருக்கட்டும், அது இனிமே வராம கூட இருக்கலாம். ஆனா, என்னோட கேள்வி என்னான்னா…

அந்த ஆமையோட கண்லயும், கனவுலயும் நீங்க யாரா இருப்பிபீங்கன்னு தெரியுமா?”.

kaalidossan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button