இலையுமில்லை காயுமில்லை
பழுக்கத் தெரிந்த காத்திருப்பை
காலங்காலமாக கையில் வைத்திருக்கிறது
மனமுறிந்து கீழ் விழுந்த
சருகுடைய ஓர் நாள்
ஒட்டிப்பார்க்கும் பதற்றத்தைக்
கொடுத்து விடுவதில்லை
பச்சையம் நழுவி
பூமி பார்த்த சொல்லொன்று
அசைத்து அசைத்து
அது நிகழ்த்தும் நாடகத்தில்
காற்றுண்டு
கட்டுக்கடங்காத மாசின் நுண்துகள்களோடு
சொல்லைத்தான் மந்திரமென்கிறது
மெளனம்
உச்சரிக்க
உடுத்திப் பார்க்க
கிடைக்கும் பார்வை
நிர்வாணம்
ஒரு நாள்
அசைகிற காற்றின் சருகுடைய
ஒரு நாள்
அசைக்கிறது
காலங்காலமாக
காற்றைத்தான் மந்திரமென்கிறது
கிளை.
***
பலிபீடம்
இறக்கிட விருப்பமில்லை
இருக்கும் கனல்
நிறுத்தும் சொல் திசை பருக தவிக்கிறேன்
தந்து பெற்ற மனம்
தரத்துணிந்த ரேகைக்குப் பின்
ஈரமில்லை
துளியா மனம்
கடல்
கற்றல்
காட்டுத் தீ
பரவுகிறது
கனல் பெருகுகிறது
எதில் மிதக்க
எதைக் எடுக்க
எப்படி அணைக்க
சுழல்கிறேன்
சுற்றியும் பெற்றது
சுற்றம் அளிக்கிறது
சுடும் பாதை தகிக்கிறது
எரிகிறேன்
எரிக்கிறேன்
எங்கே தணல்
அங்கே மனம்
தகிக்கிறேன்
***
முடிச்சு
ஒரு மாயைக்குள் மாயையென
மனம் இறங்கி வருகிறாய்
அழியா சுவடெடுத்து
பொசுக்கும் நிழல்
பொய்த்துப் போகும் நாளில்
பொறுக்கும் வெயிலுக்குள்
நடக்கிறது
அத்தனையும்.
********