
“அம்மா! எதிர் ப்ளாட்டுக்கு குடுத்தனம் வந்துட்டாங்க, பாத்தீங்களா?” என்றாள் கன்னியம்மா பாத்திரம் துலக்கிக் கொண்டே.
“அப்படியா?” என்றாள் அனு.
“நேத்திக்கே வந்துட்டாங்க, போல. நானு ஒங்க வூட்டு வேலை முடிஞ்சு போகசொல, என்னைக் கூப்பிட்டு அவுங்க வூட்லேயும் பாத்திரம் துலக்கற வேலைக்குக் கூப்டாங்கம்மா!”
அந்த அடுக்குமாடி குடித்தன ‘ஏ’ ப்ளாக்கில் நாலு வீடுகளில் கன்னியம்மா வேலை செய்கிறாள். எல்லா வீட்டு செய்திகளும் சுடச்சுட அன்றாடம் அனுவிற்கு வந்துவிடும்.
“அவுங்க ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கன்னு ப்ளாட்ல பேசிக்கிறாங்கம்மா.” என்றாள் அடுத்த நாள்.
‘அட! குடித்தனம் வந்த ரெண்டாம் நாளே எப்படி அவங்களைப் பற்றிய விவரங்கள் மற்ற குடியிருப்புவாசிகளுக்குத் தெரிந்து விடுகிறது?’ அனுவிற்கு ஆச்சரியமாக இருந்தது.
“நம்ப கீழ் வூட்டு விமலாம்மா இருக்காங்க இல்ல? அவுங்களுக்குத் தெரிஞ்சவங்களாம்மா இந்த புள்ளையாண்டன். ரெண்டு பேரும் வேலை பாக்கிறாங்களாம். அந்த பொண்ணுதான் டைவர்ஸாம். அவருக்கு மொதக் கல்யாணந்தானாம்! போன மாசந்தான் கல்யாணம் ஆச்சாம்!” அநேகமாக மொத்த ஜாதகமும் வந்து விட்டது என்று நினைத்து சிரித்துக் கொண்டாள் அனு.
அந்த சனிக்கிழமையே எதிர் ப்ளாட் பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அனுவிற்கு.
சனிக்கிழமை காலை அனு வாசற்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது அந்தப் பெண் பால்கனியில் நின்று கொண்டு ஃபோனில் பேசிக் கொண்டிருந்தாள்.
அனுவைப் பார்த்ததும் “வீட்டுக்குள்ள சிக்னல் கிடைக்கமாட்டேங்குது.” என்று சிரித்தபடியே கூறியவள் ஃபோனை வைத்துவிட்டு, “ஹை ஆன்ட்டீ! நான் எதிர் ப்ளாட்டுக்கு புதுசா குடித்தனம் வந்திருக்கேன்” என்று சொன்னாள். சிரிக்கும்போது அவள் கன்னங்கள் குழியும் அழகிலேயே சொக்கிப் போய் நின்றாள் அனு.
“இப்போ அவசரமா வெளியே போயிட்டிருக்கேன். சாயந்திரமா உங்களை வந்து பார்க்கலாமா?” என்றாள்.
“அவசியம் வாம்மா!” என்று அனு அவளைப் பார்த்து சிநேகமாக சிரித்தாள்.
சாயந்திரம் சரியாக ஐந்து மணிக்கு அனு வீட்டு காலிங் பெல் அடிக்கப்பட்டது.
“நான் எதிர் ப்ளாட், என் பெயர் குந்தவை!” என்றாள் அந்தப் பெண் சிரித்த முகத்துடன், காற்றில் பறந்து அலைபாயும் சுருட்டை முடியை ஒரு கையால் ஒதுக்கியபடியே.
“உள்ளே வாம்மா. உட்கார்.” என்று சொன்னதும்,
குந்தவை மறுக்காமல் உடனே உள்ளே வந்து ஹால் சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.
“நான் அனு……” என்று அனு பேச ஆரம்பித்தபோது இடைமறித்து,
“நீங்க தான் இந்த ‘ஏ’ ப்ளாக்கில மொதல்ல குடி வந்தவங்க. ஒரு பத்து வருஷம் ஆகியிருக்குமா? நீங்க ஒரு எழுத்தாளர். ஒங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. காலேஜ்ல படிக்கிறாங்க. சார் ஒரு வங்கியில மேனேஜரா இருக்கார்” என்று மடமடவென்று அவளைப் பற்றிய விவரங்களை கூற ஆரம்பித்தாள்.
‘எல்லாம் கன்னியம்மா உபயமாகத்தான் இருக்கும்” அனுவிற்கு புரிய ஆரம்பிக்க அவளும் குந்தவையைப் பார்த்து சினேகமாக ஒரு சிரிப்பு சிரித்தாள்.
“ஆன்ட்டீ! சாயந்தர காப்பி குடிச்சாச்சா? இல்லேன்னா நானும் ஒங்களோட குடிக்கலாம்னு நெனச்சேன்!” என்றாள் ஒரு குறும்பு சிரிப்புடன், குழியும் கன்னங்களுடன்.
அனுவிற்கு அவள் சகஜமாகப் பேசியது பிடித்துப் போக உடனே, “அடாடா! வீட்டுக்கு வந்தவங்களை நான் இல்ல கேட்டிருக்கணும் காப்பி குடிக்கிறயான்னு” என்று உடனே காப்பி போட உள்ளே போனாள்.
காப்பியோடு கலகலப்பான உரையாடலும் ஆரம்பித்தது.
“காப்பி சூப்பர் ஆன்ட்டீ!” என்று ரசித்து குடித்துக் கொண்டே பாராட்டியவள், “எழுத்தாளர்னா ஒங்க கண்ணோட்டமே வித்தியாசமா இருக்குமே? எதுக்குக் கேக்கறேன்னா, நீங்களும் என்னை பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க. கீழே இருக்கிற ஹேமா ஆன்ட்டீ சொல்லியிருக்கலாம். அவங்க என் கணவருக்கு வேண்டியவங்க. ஒரே ஊர்க்காரங்க.” என்றாள்.
“ஒன்னைப் பத்தி இன்னொருத்தர் மூலமா ஏன் கேள்விப்படணும்? நீயே சொல்லேன்!” என்றாள் அனு புன்சிரிப்போடு.
“வருண் என்னோட ரெண்டாவது கணவர். என்னோட மொதல் கல்யாணம் சரிப்பட்டு வராம, டைவர்ஸ் ஆயிடுத்து.” பட்டென்று எடுத்த எடுப்பிலேயே விஷயத்தைப் போட்டு உடைத்தாள் குந்தவை.
அனு குறுக்கிடாமல் அவளையே கூர்ந்து கவனித்தாள்.
“மொதல்ல அம்மா அப்பா பார்த்து வச்ச பையனைத்தான் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். ஆனா, கல்யாணத்துக்கு முன்னால அவனோட பேசிப் பார்த்தபோது அவனோட எதிர்பார்ப்புகளை அவன் வெளியே சொல்லாம மறைச்சிட்டான். நா மொதல்லேயே எங்கப்பா கிட்ட, நா வெளிநாடெல்லாம் போகமாட்டேன். இங்கேயேதான் இருப்பேன். அந்த மாதிரி இடம் பாருங்கன்னுதான் சொன்னேன். அவுங்களும் அப்படித்தான் பார்த்தாங்க. ஆனா, கல்யாணம் ஆகி ரெண்டே மாசத்தில அவன் தன் வேலையை விட்டுட்டு ஒரு அமெரிக்கன் கம்பெனியில ஜாய்ன் பண்ணினான். என்கிட்ட என்ன சொன்னான்னா, ‘மூன்று மாசம்தான் குந்தவை. சும்மா ஒரு அனுபவத்திற்காகத்தான் அந்த வேலையில சேரப் போறேன். நாம்ப திரும்பி இங்கேயே வந்திடலாம்னு.’ அதை நம்பி நானும் என் வேலைக்கு லீவு போட்டுட்டு அவனோட அமெரிக்காவிற்குப் போனேன். ஆனா, அங்கே போனதும் அவன் சுபாவமே மாறிடிச்சு. அங்கேயே இருக்கணும்னு முடிவு செஞ்சிட்டான். அது மட்டுமல்ல…..” குந்தவை சற்றே நிறுத்தி விட்டு எழுந்து போய், காப்பி டம்ளரை ஹாலின் மூலையில் உள்ள சிங்க்கில் கழுவி கவிழ்த்து வைத்தாள்.
“கல்யாணம் ஆன புதுசுல குழந்தை உடனே வேண்டாம். கொஞ்சம் போகட்டும்னு சொன்னான். எல்லா பேச்சும் அமெரிக்கா போன உடனே மாறிடுச்சு. நமக்கு குழந்தையெல்லாம் வேண்டாம். உனக்கு இங்கேயே ஒரு வேலை நிச்சயமா கிடைக்கும். நாம் இப்படியே ஜாலியா லைஃபை எஞ்சாய் பண்ணலாம்னு சொல்றான். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பேச்சு. அப்பப்போ மாறுகிற மனோபாவம். எனக்கு சரிப்பட்டு வரல்ல ஆன்ட்டீ. நீங்க DINK-ன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா ஆன்ட்டீ? அதாவது ‘டூயல் இன்கம் நோ கிட்ஸ்’ னு. அவன் அதைத்தான் சொல்றான்னு புரிஞ்சு போச்சு. இப்ப அந்த மாதிரி மனோபாவம் வெளிநாட்டில மட்டுமில்ல, இங்கேயும் வர ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு சரிப்பட்டு வரல்ல. அப்பா அம்மாக்கு எடுத்து சொல்லி பிரிஞ்சு வந்துட்டேன். என்னோட அதிர்ஷ்டம், என்னைப் புரிஞ்சிக்கிற நல்ல அப்பா அம்மா கிடைச்சிருக்காங்க. கூடவே ஒரு அன்பான அண்ணனும்.” மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்த அவளையே வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.
“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணுங்கிற யோசனை வரதுக்கு முன்பே அந்த ப்ரொபோசல் வருண் ரூபத்தில் வந்தது.” இந்த இடத்தில் நிறுத்தி விட்டு குந்தவை, “ஆண்ட்டீ நா ஒங்களை சந்திச்ச மொத நாளே ரொம்ப பேசி தொந்திரவு பண்றேனா?” என்று ஒரு சந்தேகம் கேட்டாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா! நீ பேசு. வித்தியாசமா இருக்கு நீ உன் வாழ்க்கை பத்தி பேசற விஷயங்களௌல்லாம்” என்றாள் அனு.
“அதானே பார்த்தேன்!” குந்தவையின் முகத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு. “நீங்க எழுத்தாளராச்சே! நான் உங்களுக்கு எழுதறதுக்கு நிறைய விஷயங்கள் கொடுக்கிறேனே? இல்லையா ஆண்ட்டீ?” என்றாள்.
அனு பதில் சொல்லாமல் ஒரு புன்னகையோடு அவளை ஏறிட்டு, ‘மேலே சொல்லு!’ என்று ஊக்குவித்தாள்.
“வருணை காலேஜ் டேஸ்லேர்ந்தே பழக்கம். என் காலேஜ் டேஸ்ல என்னை நிறைய பசங்க சுத்தோ சுத்துன்னு சுத்தி காதலிச்சிருக்காங்க.”
குந்தவையின் மந்தகாச முகம், அந்த குறும்பு சிரிப்பு, பேசும்போதே குழியும் கன்னங்கள், காற்றில் அலைபாயும் சுருள் முடி வாளிப்பான தேகம், கோதுமை நிறம்….
“பசங்க உன்னை சுத்தாம விட்டிருந்தாதான் ஆச்சரியம்!”‘ அனுவின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு தவழ்ந்தது.
“அதுல வருணுக்கு ரொம்பவே ஆத்மார்த்தமான காதல் போலிருக்கிறது. ஆனா, படிக்கிற காலத்தில எனக்கு ப்ரொபோஸ் பண்ற தைரியமும் அவனிக்கில்ல. நா படிக்கிற காலத்தில யாரையும் சட்டை செஞ்சிதே இல்ல ஆண்ட்டீ! படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் அப்பா அம்மா கை காட்டின பையனை சமத்தா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்னைப் பண்ணிக்க முடியாத ஏக்கத்தில வருண் அவுங்க வீட்டில கல்யாணப் பேச்சை எடுத்தபோது அதை தட்டிக் கழிச்சிருக்கான். எனக்கு டைவோர்ஸ் ஆன விஷயம் வெளியில பரவினதும் பாய்ந்து ஓடி வந்தான் என்னைப் பார்க்க”
“ஊம்! அப்புறம்..” என்றாள் அனு சுவாரசியமாக .
“அப்புறமென்ன? நாந்தான் ரொம்பவே தயங்கினேன். பாவம் இவ்வளவு நல்ல குணமுள்ள பையனுக்கு நான் செகண்ட் ஹேண்டா கிடைக்கணுமான்னு. ஆனா, அவன் கண்டிப்பா சொல்லிட்டான். அந்த மொதக் கல்யாணத்தை நீ ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்திடு. நாம கல்யாணம் செஞ்சிக்கிட்டு சந்தோஷமா வாழலாம்னு சொன்னான்”
“எங்கண்ணன் ஆபீசிலதான் வருண் வேலை செய்றான். அதனால் அண்ணனுக்கும் வருணை நல்லா பழக்கம். அண்ணன்தான் மொனஞ்சு நின்னு இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வச்சான். வாழ்க்கை சந்தோஷமா போயிட்டிருக்கு ஆண்ட்டீ! ரெண்டு கொழந்தங்க கட்டாயமா வேணும்னு ப்ளான் பண்ணியிருக்கோம். அது மட்டுமல்ல. வருணுக்கு நிடைய ‘லாங்க் டெர்ம்’ ப்ளான்ஸ் எல்லாம் இருக்கு ஆண்ட்டீ. செங்கல்பட்டு கிட்ட ஒரு கிராமம்தான் அவன் சொந்த ஊர். இன்னைக்கும் அவன் தாத்தா பாட்டியெல்லாம் அங்கதான் இருக்காங்க. அங்க ஒரு வீடு கட்டி தோட்டம் துரவுன்னு எங்களோட கடைசி காலத்தில் அங்க போய் செட்டில் ஆகலாம்னு முடிவு பண்ணியிருக்கான். எப்படி ஆண்ட்டீ எங்க கதை? சுவாரசியமா இருந்ததா? நீங்க எழுத்தாளராச்சே? சொல்லுங்க” கன்னம் குழிய சிரித்தபடி குந்தவை கேட்டாள்.
“இரு! இன்னும் கேக்க வேண்டியது இருக்கே?” என்றாள் அனு முகத்தைக் குறும்பாக வைத்துக் கொண்டு.
“உனக்கு குந்தவைன்னு பெயர் வச்சிருக்காங்க. வருண் உன்னை எப்படி செல்லமா கூப்பிடுவார்?”
“ஓ! அதுவா? க்யூட்டீன்னு கூப்பிடுவான்”னு சொல்லிக்கொண்டே “அச்சச்சோ! நேரமாச்சு ஆண்ட்டீ! போய் விளக்கேத்தணும்! தேங்க்ஸ் ஃ பார் த சூப்பர் காப்பி!” என்று எழுந்து கொண்ட குந்தவை வாசலுக்குச் சென்றதும் ஒரு நொடி திரும்பிப் பார்த்து, “நீங்க இன்னொண்ணு கேக்க மறந்துட்டீங்களே ஆண்ட்டீ!” என்றாள்.
அனு வியப்போடு விழி உயர்த்தி ‘என்ன’ என்பது போல் பார்க்க, “நான் எப்படி வருணை செல்லமா கூப்பிடுவேன்னு கேக்கலியே நீங்க?”
“எப்படி கூப்பிடுவேன் தெரியுமா, ‘காதல் பிசாசே’ன்னு கூப்பிடுவேன்” என்று குறும்பாக சிரித்துக் கொண்டே கையை அசைத்தபடி தன் ப்ளாட்டுக்குள் நுழைந்தாள் குந்தவை.