தொடர்கள்

‘சங்கிலி’ மரபுக்குத் திரும்பும் பாதை – 2

வலசைப்பாதை ஒருங்கிணைப்பாளர் பறவை பாலா

2,நிலம்

பெருந்தெய்வங்கள் குடியிருக்கும் இறை வழிபாட்டுத்தளங்களுக்கு சென்று திரும்பும்போது ஏற்படும் மனநிலையைப் போல, ‘வானகம்’ போன்ற இயற்கை வழி வாழ்வியலைக் கற்பிக்கும் இடங்களுக்கு போய்வரும் போது எந்த வலியுமில்லாமல் மரத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு உதிரும் சருகைப்போல நம் வாழ்க்கை இருந்து விடக்கூடாதா? என்று உங்கள் மனம் ஏங்க ஆரம்பிக்கும்.

ஆனால் நிகழ்கால நிஜம் நெருப்பாய்ச் சுடும். படித்து முடித்தவுடன் நகரத்தில் வேலை தேட நீங்கள் எடுத்த முயற்சி, பட்ட அவமானம், ஒருவழியாக வேலை கிடைத்து,   கிடைத்த வேலையைத் தக்க வைக்க நீங்கள் எடுத்த பிரயத்தனங்கள், அந்த வேலையில் நீங்கள் தொட்ட உயரத்தோடு சேர்த்து வீட்டுக்கடன், கல்விக்கடன், இன்ன பிற கடன்களும் வளர்ந்திருக்கும் சூழல் உங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்.

தன் உயிரையே பணயம் வைத்து வேட்டையை வீழ்த்தினாலும், வீழ்த்திய வேட்டையை மிகக்கவனமாக எஜமானனுக்கு கொண்டுபோய் கொடுக்கும் விசுவாசமான வேட்டை நாயைப் போல நாம் இரவு, பகல் பாராமல் உடல்நலம் கெடுத்து யாருக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்? என்கிற புரிதலுக்கு வந்துவிட்ட பிறகு காலையில் பிதுக்கும் பற்பசைக்குப் பதிலாக ஆல், அரசு, வேம்பு, வெவ்வேல், கருவேலம் போன்ற மரத்தின் பட்டைத் துகள்களால் ஆன பல்பொடியை உங்கள் ஆட்காட்டி விரலால் ஈறுகளை அழுத்தி விட ஆரம்பித்தது தொடங்கி, கழிவறையில் நுண்ணுயிர்களின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கும் ரசாயனங்களுக்குப் பதிலாக பூந்திக்கொட்டைக் கரைசலையும், சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட ரசாயனங்களால் முடியெல்லாம் உதிர்ந்து தோல் சுறுங்கி முப்பது வயதிற்குள் முதுமையை எட்டி விட்ட உங்கள் உடலை பயறு மாவு, பழச்சாறு, அரப்புப் பொடிகளால் மீட்டெடுத்து  வளர்ச்சியென்கிற மாய பிம்பத்திலிருந்து விடுபட்டிருப்பீர்கள்.

மாதந்தோறும் நீங்கள் போடும் பட்ஜெட்டில் கொஞ்ச பணம் மிச்சமிருந்து இந்த நகர வாழ்க்கை நாள் தோறும் புதிய புதிய அர்த்தங்களை வழங்கத் துவங்கும்.

அடுத்து ‘ஆர்கானிக் உணவு’ என்று அடுத்தக் கட்டத்தை எட்டும் போது பட்ஜெட் எகிறும். இதெல்லாம் தற்காலிகத் தீர்வுதான் போலயே! நிரந்தரமாக இதிலிருந்து விடுபட வேண்டுமானால் சொந்தமாக நமக்கென்று விவசாய நிலமிருந்தால் தான் முடியும் என்கிற நிலைக்கு நீங்கள் வந்து சேர்வீர்கள்.

அப்போது உங்களுக்கு இருக்கும் வாய்ப்பு மூன்று.

1, வீக்கெண்ட் அக்ரி.

2, குத்தகை நிலம்,

3, சொந்த பூமி.

பஞ்சபூதங்களில் மற்ற பூதங்களைப் போல நகரும் தன்மையில்லாமல் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பதால் ‘நில்’ என்கிற சொல்லில் ‘ம்’ விகுதி சேர்த்து நிலம் ஆன நிலையான வாழ்க்கையைத்தரும் நிலத்தின்மீது யாருக்குத்தான் காதல் பிறக்காது?

1, வீக்கெண்ட் அக்ரி:

உங்களைப் போல இயற்கை வழி வாழ்வியலுக்காக ஏங்கித் தவிக்கும் ஒத்த சிந்தனையுள்ளவர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் பங்கு போட்டு வார இறுதி நாட்களில் மட்டும் செய்யும் வேளாண் அமைப்பு முறை தற்போது பெருநகரை ஒட்டிய பகுதிகளில் பிரபலமாகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமையானால் ‘மால், சினிமா’ என்று காசைக்கறியாக்கும் செயல்களிலிருந்து விடுபட்டு நிலத்திற்கும் நமக்குமான உறவை பலப்படுத்தி மண்ணில் இறங்கி உழைக்க இது ஒரு வாய்ப்பு.

2, குத்தகைநிலம் :

என்னதான் பத்து பேர் ஒன்று சேர்ந்து வேளாண்மை செய்தாலும் சொந்தமாக நாம் நமது அபிலாஷைகளை தீர்த்துக்கொள்ள முடியவில்லையே என்று சிந்திப்போரின் விளைவே குத்தகை நிலம்.

இந்த அமைப்பு முறையில் குறைந்தது இரண்டு வருடமும், அதிகபட்சம் ஐந்து வருடமும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நகர்வது உத்தமம். ஐந்து வருடங்களுக்கு மேல் யாரும் குத்தகைக்கு தரமாட்டார்கள். ஒருவேளை நீங்கள் வருடத்தை நீட்டிக்க விரும்பினால் அது உங்களுக்கும், நில உரிமையாளருக்குமிடையே புரிதலின் அடிப்படையில் அப்படி ஒரு அதிசயம் நிகழ வாய்ப்பிருக்கிறது.

3, சொந்த பூமி:

சொந்தமாக நிலம் வாங்கவேண்டுமென்று முடிவெடுத்த பின்பு அந்த நிலம் உங்கள் தாய் கிராமத்திற்கு அருகிலா? அல்லது உங்கள் மாவட்டத்தின் பிறபகுதியா? அல்லது தமிழகத்தின் எந்தப்பகுதியாக இருந்தாலும் பரவாயில்லையா? நஞ்சை நிலமா? புஞ்சை நிலமா? அந்தப்பகுதியின் நீராதாரம் எவ்வாறு உள்ளது? போன்றவற்றை அலசி ஆராய்ந்து வாங்கவேண்டும். கார், பைக், மிக்ஸி, கிரைண்டர் போன்றல்ல நிலம். பிடிக்கவில்லையென்றாலோ, வேறு ஏதேனும் பிரச்சனையென்றாலோ உடனே மாற்றிக்கொள்ள…

நீங்கள் வாங்கப்போகும் நிலமானது உங்கள் தலைமுறையை வாழ்வாங்கு வாழவைக்கப்போகும் சொர்க்க பூமியாதலால் நிலம் வாங்கும் போது அதை மிகமிக கவனமாக கையாள வேண்டும்.

அப்புறம் நிலம் வாங்கும்போது நீங்கள் கவனித்தில்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் யாதெனில் தற்போது நீங்கள் கையிருப்பு வைத்திருக்கும் பணத்தில் 25% மட்டுமே நிலத்தில் முதலீடு செய்ய வேண்டும். ‘கட்டுனா நான் இவளத்தான் கட்டுவேன், இல்லன்னா என் கட்டை வேகாது’ங்கிற அளவுக்கு நிலம் உங்களுக்கு மிகவும் பிடித்துப்போனால் 50%வரை கொடுக்கலாம். மீதமுள்ள பணத்தை வேறு ஒன்றும் செய்யாமல் சும்மா கையில் வைத்திருந்தாலே போதும். வேலியாக, நீர்மேலாண்மையாக, மின்சாரமாக, உட்கட்டமைப்பாக, மனித உழைப்பாக, உரமாக, விதையாக நீங்கள் மேற்கொள்ளப்போகும் வாழ்க்கைக்காக அந்த நிலமே மீதிப்பணத்தை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும். அதை விடுத்து கையில் வைத்திருக்கும் மொத்த பணத்தையும் நிலத்தில் முதலீடு செய்துவிட்டால் நீங்கள் பயணிக்கத்திட்டமிட்டிருக்கும் பயணம் எரிபொருள் இல்லாமல் பாதியிலேயே தடைபட வாய்பிருக்கிறது.

உங்களுடைய பொருளாதாரத்தைப்பொறுத்து மேற்கண்ட மூன்று வழிமுறைகளில் ஏதேனும் ஒரு வழிமுறையைத்தேர்ந்தெடுக்கலாம். சிலருக்கு உடனே செயல்படுத்த முடியும். வேறு சிலருக்கு இரண்டு வருடமோ, ஐந்து வருடமோ கூட ஆகலாம். தேவை நிலத்தின் மீது உங்களுக்கு இருக்கும் காதலை உயிர்ப்போடு வைத்திருப்பது மட்டுமே.

நிலம் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:

பொதுவாக நமது நாட்டில் நிலம் இரண்டு வகையாக பிறிக்கப்பட்டிருக்கிறது.தாத்தா, அப்பா, மகன் என்று தலைமுறை கடந்து பராமரிக்கப்பட்டு வரும் பட்டா நிலம். பொறம்போக்காக கிடக்கும் அரசு நிலம்.

இதில் பட்டா மொத்தம் எட்டு வகைப்படும். எடுத்துக்காட்டாக ஒரு சில ஊர்களில் பனை, புளி போன்ற மரங்களுக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கும். அது பூமிக்கு மேலே நிற்கும் மரங்களுக்கு மட்டுமேயான பட்டாவே தவிர, நிலத்திற்கான பட்டா கிடையாது. கொஞ்சம் அசந்தாலும் அதையும் நம் தலையில் கட்டி விடுவார்கள். நீங்கள் பிறந்த தாய்க் கிராமத்திற்கும் உங்களுக்குமான உறவு துண்டிக்கப்படாமல் இருக்கும் வரை இவற்றையெல்லாம் மிக எளிதாக கடந்து விடுவீர்கள். அப்படியில்லாத பட்சத்தில் ஏற்கெனவே இடம் வாங்கிய அனுபவமுள்ள உங்கள் நண்பர்களின் துணையோடு இடம் வாங்குவதே சிறந்த வழி.

 

 பாதை விரியும்…

முந்தைய பகுதி:

1. வலசைப்போதல்

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button