![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/05/Suresh-Bharathan-780x405.jpg)
சித்திரை மாத வெயில் மண்டையில் சிறு துளையிட்டு உடலிலுள்ள நீர்ச்சத்தையெல்லாம் உறிஞ்சுவதைப் போல உணர்ந்தான் மாதவன். கையில் வைத்திருந்த சின்ன சீட்டித் துண்டைத் தலையின் மீது போட்டுக் கொண்டான். அங்கிருந்த ஆண்களெல்லாம் பெரிய பெரிய தலைப்பாகைகளை தலையில் சுற்றியிருந்தார்கள். பெண்களோ மறைக்க வேண்டிய சட்டையணிந்த மார்பை மறைக்காமல் தலை வழியே இட்டிருந்த முக்காட்டுத் துணியில் முகத்தினை மட்டும் மறைத்தபடி இருந்தார்கள். மதுரையில் பிறந்து வளர்ந்தவனுக்கு வெயிலொன்றும் புதிதில்லையெனினும் இந்த சவாய் மாதோப்பூர் வெயில் சர்வ நிச்சயமாய்ப் புதிதாகவே இருந்தது. காற்றில் ஈரப்பதம் என்பதே இல்லாத இராஜஸ்தான் மாநிலத்தின் மிக வறண்ட பகுதியான இந்த ஊரில் அவன் தன்னையே அந்நியமாக உணரத் தொடங்கியிருந்தான். வைகையோடும் மதுரை நகர வீதியில் தன்னுடைய பஜாஜ் ஸ்கூட்டரில் உல்லாசமாக சுற்றியவனுக்கு சுற்றிலும் வறண்ட பாலை நிலமாக காட்சியளிக்கும் இந்த ஊருக்கு முதன்முதலாய் வந்ததிலிருந்து அவன் மனமெங்கும் வெறுப்பு தான் மண்டிக்கிடந்தது. இதே வேறொரு சமயமாக இருந்திருந்தால் அவன் இப்படியான ஒரு ஊருக்கு வந்திருக்கவே மாட்டான். காலத்தின் கட்டாயம் மாதவனை இங்கே இப்படி இழுத்து வந்திருந்தது.
மாதோப்பூர் ரயில் நிலையத்தினையொட்டி இருந்த ஒரு மிகச் சிறிய தங்கும் விடுதியில் பத்துக்கு எட்டு அறையில் கடந்த பத்து தினங்களாக தங்கியிருக்கும் மாதவனுக்கு துளிகூட சுத்தமேயில்லாத அந்த அறையோ அல்லது சுத்தமேயில்லாத அந்த விடுதியோ அத்தனை பிரச்சினையாக இல்லை. ஆனால் சாப்பிடக் கிடைக்கும் சப்பாத்தியும் அதற்குத் தொட்டுக்கக் கிடைக்கும் கடுகெண்ணெயிட்ட ஊறுகாயுமே பெரிய பிரச்சினையாக இருந்தது. எண்ணெய் என்பது பேருக்குக் கூட இல்லாத அந்த வறட்டு சப்பாத்தியைக் கடித்துத் திண்ண பெரும்பாடு பட்டானவன். சாப்பிடும் ஒவ்வொரு முறையும் அவனுக்குத் தாடையெல்லாம் வலியெடுத்தது. என்ன வாழ்க்கையடா இதுவென சலித்துக்கொண்டான். சப்பாத்தியைத் தவிர அந்த ஊரில் கிடைத்த இன்னுமொரு பண்டம் கச்சோரி. ஆமையோட்டைப் போல இருபக்கமும் உப்பியிருந்த அந்த உணவு அவ்வூரின் சிற்றுண்டி. மைதா மாவினுள் வெந்ததும் வேகாததுமாய் இருக்கும் உருளைக் கிழங்கினை அரைத்த மசாலாவுடன் உருட்டி வைத்து வட்டமாய்த் தேய்த்து கடுகெண்ணெயில் பொறித்துக் கொடுத்தார்கள். கடுகெண்ணெயைத் தவிர வேறெந்த எண்ணெயும் அவ்வூர் மக்களுக்குத் தெரியவே தெரியாது போலும். அதற்கு கூடவே ஒரு கறுப்பும் சிகப்பும் கலந்த வண்ணத்தில் சட்னி என்ற பெயரில் இனிப்பும் புளிப்பும் கலந்த ஒன்றை தந்தார்கள். அதனை கட்டா மீட்டா என்றும் பெயரிட்டு அழைத்துக் கொண்டார்கள். அதில் தான் ஆடிப் போய் விட்டான். உறைப்புப் பலகாரத்திற்கு யாரேனும் இனிப்பாய் சட்னியை சாப்பிடுவார்களா. கச்சோரியின் மிளகாய்ப் பொடி தூக்கலான மசாலாவோ அல்லது அதைப் பொறித்தெடுத்த எண்ணெயோ எதுவோ ஒன்று ஒத்துக் கொள்ளாமல் வயிற்று வலி வேறு வந்துவிட்டதவனுக்கு.
அவ்வளவாக மொழி தெரியாத ஊரில் மாதவன் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கச்சோரியைத் தின்று வயிற்று வலி வந்த ஒரு நாளில் அவன் அவ்வூரில் இருந்த மருத்துவரைத் தேடிப் போனான். வீடு போலும் இல்லாது கடை போலுமில்லாது இருந்த ஓரிடத்தில் முதல் மாடியில் இருந்தாரந்த மருத்துவர். கூட்டமானால் கூட்டமிருந்தது அங்கே. முக்காலேவாசிப்பேர் இருமிக் கொண்டிருந்தார்கள். மருத்துவரிடம் தன்னைக் காண்பித்துக் கொள்ள வந்தவர்களால் நிரம்பி வழிந்தது மாடிப் படிக்கட்டு. பெண்களெல்லாம் வாயில் பீடியை வைத்து வலித்துக் கொண்டிருந்தார்கள். ஆண்களோ குட்கா எனும் புகையிலையை கையில் தட்டி துளி சுண்ணாம்பை அதனுடன் சேர்த்து ஒரு விரலால் பரபரவென்று தேய்த்து பின் அதனை வாயில் அதக்கியிருந்தார்கள். நன்கு மென்று, வாய்க்குள் கொப்புளிக்கும் புகையிலைச் சாறை, மாடிப் படிக்கட்டு திரும்பிய பகுதியின் மூலையில், பொளிச் பொளிச்செனத் துப்பி அந்த மூலையைக் காவி வண்ணத்தில் ஆக்கி வைத்திருந்தார்க்ள். அம்மூலையைக் கடக்க அவன் முயன்ற போது ஒருவர் பொளிசென்று துப்ப, ஏறக்குறைய அது அவன் மேலேயே விழுந்தது போல் இருக்க, இவன் நெளிந்து, வளைந்து, குதித்து, ஜிம்னாஸ்டிக் வீரனொருவனின் அனைத்து சாகசங்களையும் ஒரு நொடியில் செய்து, அதிலிருந்து தப்பினான். சுள்ளென்று வந்த கோபத்தில், தனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் ஏனய்யா இப்படி என் மேலேயே துப்பி விடுவீர்கள் போலயே என்று கேட்டதிற்கு அவர் ஆமா இவர் பெரிய கலெக்டரு.. பேசாம போய்யா என்று பதிலுரைக்க இவன் கொஞ்சம் அரண்டு தான் போய் விட்டான். கலெக்டராய் இருக்கும் பட்சத்தில் மட்டுந்தான் மேலே எச்சில் துப்ப மட்டார்கள் போல என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.
அவனுக்குத் தெரிந்த அரைகுறை இந்தியே அவனை இந்த ஊரில் இந்தத் தருணத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது. ஒரு சமயத்தில் அவ்வளவு ஆசையாசையாய் இந்தி கற்றுக் கொண்டான் மாதவன். தக்ஷிண பாரத் இந்தி பிரச்சார் சபா என்றழைக்கப்பட்ட தென்னிந்திய இந்தி மொழி பரப்புச் சபையொன்று நடத்திய ப்ராத்மிக், மத்யமா மற்றும் இராக்ஷ்டிர பாஷா போன்ற இந்திப் பரீட்சைகளில் தேர்வாகியிருந்தான். அப்பரீட்சைகளை எழுதிய வேளைகளில் அவன் இப்படி இராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்து சேருவானென நினைத்துக் கூட பார்த்தானில்லை. அப்போது படித்த இந்தி மாதோப்பூரில் அவ்வளவாக செல்லுபடியாகவில்லை என்பதில் வேறு அவனுக்கு வருத்தமான வருத்தமிருந்தது. ஊரில் பேர்பாதிக்கும் மேலானோர் துந்தாரியோ, மார்வாரியோ அல்லது இரண்டையும் கலந்தவொரு மொழியையோ பேசுபவர்களாகவே இருந்தார்கள். ஆனாலும் பத்து பதினைந்து நாட்களில் அவர்களின் பேச்சினூடே வரும் உணர்ச்சிகளிலிருந்தும் அவர்களின் முக பாவனைகளிலிருந்தும் அவர்கள் என்ன பேசுகிறார்களென ஓரளவு புரிந்துகொள்ளும் அளவில் அவன் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தான்.
மாதவனுக்கு இன்னும் இந்தியின் நம்பர்கள் அத்துப்படி ஆகவில்லை. இந்த நம்பர்களையெல்லாம் அவன் முன்பே எழுதியிருந்த மூன்று இந்திப் பரீட்சைகளிலும் படித்திருந்தானெனினும் அவன் அவற்றை அடிக்கடி உபயோகப் படுத்தாததினால் அவன் மறந்தே போய்விட்டானென்றே சொல்ல வேண்டும். இப்படித்தான் அவன் இந்த ஊருக்கு வந்த முதல் நாள் அவனுக்கு பாத்ரூமிற்கெனத் தனியே ஒரு இரப்பர் செருப்பிருந்தால் நல்லதெனத் தோன்றவே, தெருவோரம் தள்ளு வண்டியில் செருப்புகளை விற்றுக் கொண்டிருந்த ஒருவனிடம் போய் செருப்பு விலை கேட்டான். செருப்பு விற்பவன் அதன் விலையை முதலில் மார்வாரி மொழியில் கூறினான். அதைக் கேட்டு மாதவன் முழித்த முழியிலேயே அவனுக்குப் புரியவில்லை என்று வியாபாரிக்குத் தெரிந்து போயிற்று. உடனே அவ்வியாபாரி இந்தியில் செருப்பின் விலையை பேன்தீஸ் (முப்பத்தைந்து) எனக் கூற, அதுவும் சத்தியமாய் மாதவனுக்குப் புரியவில்லை. புரியாததை வெளியில் காட்டிக் கொள்ள விரும்பாத மாதவன் செருப்பை முன்னும் பின்னுமாய் மீண்டும் மீண்டும் திருப்பிப் பார்த்துவிட்டு, நீண்ட யோசனைக்குப் பின் ஃபார்ட்டி ஒன்லி என்று ஆங்கிலத்தில் கூறினான். வியாபாரி அவனை ஒரு விநோத ஜந்துவைப் பார்ப்பது போல பார்த்தான். மாதவன் அப்படியென்னடா நான் தப்பாய்க் கூறிவிட்டேன் என்று நினைத்தான். உடனே வியாபாரி ஆங்கிலத்தில் தர்ட்டி ஃபைவ் ஒன்லி என்றான். மாதவனுக்கோ அசிங்கம் அசிங்கமாய் போய்விட்டது. என்னடா இப்படி நம்பர் கூட தெரியாமலிருந்து விட்டோமேயெனத் தன்னைத் தானே நொந்து கொண்டு முப்பத்தைந்து ரூபாயைக் கொடுத்து செருப்பை வாங்கிக் கொண்டு வேக வேகமாய் விடுதியை நோக்கி நடயைக் கட்டினான். அன்றிரவே ஊருக்குள் சென்று புத்தகக் கடையொன்றை தேடி, ரெபிடெக்ஸ் ஒன்றை வாங்கிக் கொண்டான். அன்றிலிருந்து அது தான் அவனுக்கு நம்பர் வழிகாட்டியாய் இருந்தது. இத்தனை கஷ்டங்களையும் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்த மாதவன் பொறுத்துக் கொண்டேயிருக்க மாட்டான் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் மாதவன்.
மூன்று மாதங்களுக்கு முன்பொருநாள் நிகழ்ந்த நிகழ்வொன்று தான் மாதவனை இப்படி அடியோடு மாற்றிவிட்டது.
இராஜம் அழுது கொண்டிருந்த தன் இரண்டு வயது கைக்குழந்தையை இடுப்பில் ஏந்தியவாறு வலது கையில் துணிகள் அடுக்கிய இரட்டை வார் பிடியுள்ள பையை தூக்க மாட்டாமல் தூக்கியவாறு தன் அப்பாவின் வீட்டினில் நுழையும் பொழுது மணி பகல் பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அடுப்படியில் சாம்பாரில் போடுவதற்காக தேங்காயையும் சீரகத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொண்டிருந்த அவளம்மா
“பட்டப்பகல்ல வேகாத வெயில்ல என்னடி இப்படி பச்சப்புள்ளைய தூக்கிட்டு வந்து நிக்க. ஒரு போனப் போட்டுச் சொல்லியிருந்தா தம்பி கூப்பிட வந்துருப்பானே. மாப்பிள்ளையாவது கொண்டு வந்து விட்டுட்டுப் போகச் சொல்லியிருக்கலாமே.. நல்லாருக்காரா அவரு.” என்று கேட்டுக் கொண்டேயிருக்க இராஜம் எதுக்குமே பதில் சொல்லாமல் “வெயில்ல வந்தது ரொம்பத் தாகமா இருக்கு. குடிக்க ஏதாச்சிம் தர்றியாம்மா” என்றாள். அவளம்மா மோரில் உப்பும் காயமும் கலந்து இரண்டு பச்சை மிளகாய் அரிந்து போட்டு கூடவே கறிவேப்பிலை பிய்த்துப் போட்டு சடுதியில் நீர்மோர் கலந்து இராஜத்திடம் நீட்ட வாங்கியவள் கடகடவென ஒரு சொம்பு மோரையும் குடித்தாள். அப்புறம்தான் அவளுக்கு மூச்சும் பேச்சும் வந்தது.
“உனக்குத் தெரியாதா ஒம் மாப்பிள்ளை அழகு. அந்த மனுஷனுக்கு எத்தக் கொடுத்தாலும் திருப்தின்னு ஒன்னு வரவே வராதுன்னு. கலியாணமாகி இந்த நாலு வருஷத்தில அதைக் கேட்டு வாங்கியா இதக் கேட்டு வாங்கியான்னு எத்தனை தரம் இங்கன தொரத்தி உட்டுருக்கான் அந்த பாவி மனுஷன். நானும் ஒவ்வொரு தரமும் வெக்கங்கெட்டு இந்த வாசல்ல வந்து நிக்கன். எனக்குன்னு விடிஞ்சிருக்கு பாரு இப்படியொரு பொழப்பு. வேறென்னத்தச் சொல்ல”
“இப்ப என்ன வேணுமாம்….”
“புல்லட்டுல போற மனுஷனுக்கு கழுத்துல போட்டு மினிக்கிகிட்டு அலையறதுக்கு புலி நகம் போட்ட செயின் வேணுமாம். போன பொங்கலுக்குக் கழுத்தில மாட்டுன செயின்லேயே கோத்துக்கிடுவாகளாம். புலிநகந்தான் வேணுமாம். எவனோ போக்கத்தவன் சொன்னானாம் இராஜஸ்தான்ல ரத்தம்போருன்னு ஒரு ஊர் இருக்காம். அங்கிட்டுதா ஒரிஜினல் புலிநகம் கிடைக்குமாம். இங்கன கொண்டு வந்து விக்கிறதெல்லாம் டூப்ளிகேட்டாம்.”
“இராஜஸ்தானுக்கு யாருடி போறது.. முன்ன பின்ன போன இடமா..?”
“தம்பிய அனுப்பனுமாம். அவனுக்குத் தான் இந்தியெல்லாம் தெரியுமாம். இதையெல்லாம் போய் அவருகிட்ட சொல்லியிருக்காம் பாரு அவனச் சொல்லனும். மச்சானை நம்பினா மலையேறி பொழைக்கலாங்கிறது அவரு விசயத்தில் மட்டுந்தான் கரெக்ட்டா இருக்கு.”
“இவம் போவானா தெரியலையே..”
“எப்படியாவது போகச் சொல்லனும்மா.. இல்லைன்னா அவரு வாய்ல வர்ற வசவ காதால கேட்க முடியாதும்மா.”
வேலைக்குப் போய் திரும்பி வந்த மாதவனிடம் அவனம்மாவும் அவனக்கா இராஜமும் விசயத்தைச் சொன்னதும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான் மாதவன்.
“புலிநகமா.. விளையாடுறீங்களா.. அதை வாங்குறது விக்கிறதெல்லாம் சட்டப்படி குற்றம். மாட்டிக்கிட்டா உள்ள தூக்கி வச்சுருவான் தெரியுமா. பெயில்ல கூட வர முடியாது. மச்சான் தெரிஞ்சுதான் பேசுறாரா. புத்தி கித்தி கெட்டுப் போச்சா அந்தாளுக்கு.”
“ஆமடா. ஊரு உலகத்துல வேற ஆம்பிளையே இல்லைன்னு தானே தேடித்தேடி இந்தாளை மாப்பிள்ளையாக்கி எனக்குக் கட்டி வைச்சீங்க. அதோட நிக்காம தலையில வேற தூக்கி வச்சிகிட்டு ஆடினீங்க எல்லாரும். அதான் அந்தாளு இப்ப ஓந்தலைமேலே ஏறி உக்காந்துகிட்டு அதக் கொண்டா இதக் கொண்டாங்கறான்.”
“அதுக்காக ஒரு வரமுறையில்லையா இப்படித்தான் இல்லீகல் மேட்டரில் எல்லாம் தலைய குடுத்துட்டு நிக்கிறதா?. எடுத்துச் சொல்றதுக்கென்ன..?”
“நாஞ்சொல்றதையெல்லாம் அந்தாளு உடனே தன் கோவணத்துல முடிஞ்சுகிடுவாம் பாரு. எடுத்துச் சொல்றதுக்கு. அது கிறுக்கு முத்திப் போய் அலையுது. மொதத்தரம் புல்லட்டுக்கு வந்து நின்னப்பயே செவுளு செவுளா அறைஞ்சு அனுப்பியிருந்தீங்கன்னா இப்ப புலிநகத்துக்கு வந்து நிக்க விட்டிருக்குமா. வீட்டு மாப்பிள்ளையைக் குலசாமியா வச்சுக் கும்பிட்டா இப்படித்தான் ஆடிக்கொரு கொடையும் ஐப்பசிக்கொரு கொடையும் கேக்கும். கேட்டதெல்லாம் சுளுவா கிடைக்கும்ன்னு தெரிஞ்ச ஆம்பிளை பொஞ்சாதியை அவ அப்பன் வீட்டுக்குத் தொரத்தி விடறதையே தொழிலா வச்சுருக்கான்.”
இனி இராஜத்திடம் வாக்கு வாதம் செய்வதில் எவ்வித அர்த்தமுமில்லையெனத் தெரிந்து கொண்ட மாதவன் தனக்கு வந்த கோபத்தில் சாப்பிடாமல் வெளியே சென்று விட்டான்.
கோபத்தில் எடுக்கும் எந்தவொரு முடிவும் யாருக்கும் எவ்வித நன்மையையும் தரப் போவதில்லை என்பதில் மிகத் தெளிவாயிருந்த மாதவன் தனது பஜாஜ் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டுநேராக வண்டியூர் தெப்பக்குளத்திற்கு வந்து அதன் படிக்கட்டுகளில் கால்கள் தண்ணீரில் படும்படி உட்கார்ந்து கொண்டான். அந்த முன்னிரவில் வீசிய சன்னமான காற்றில் குளத்தில் தண்ணீர் அலையடித்துக் கொண்டிருந்தது. தண்ணீரைத் தொட்டு வீசிய காற்றில் நல்லதொரு குளுமையிருந்தது. காற்றின் குளுமை மதுரையின் பகல் நேர வெக்கையை மட்டுமில்லை மாதவனின் மனதில் இருந்த வெம்மையையும் மெதுவாகக் குளிர வைத்தது.
இராஜமும் பாவம் என்ன செய்வாள். வெட்டிப் பெருமைக்கு அடிமையான மச்சானின் அத்தனைக் கோப தாபங்களையும் அவள் ஒருத்தி தானே தினந்தினம் தனியாகச் சமாளித்தாக வேண்டும். நம்மிடமே இத்தனைக் கோவங்கொள்பவள் மச்சானிடமும் தானே மறுத்துப் பேசியிருப்பாள். அவர் வறட்டுப் பிடிவாதமாய் இருந்தால் இவளைச் சொல்லிக் குற்றமென்ன. அவருக்கல்லவா தெரிந்திருக்க வேண்டும். எதற்கு ஆசைப்படலாம் எதற்கு ஆசைப்படக் கூடாதென்று. புலிநகமென்றால் சும்மாவா. வேகமாக அழிந்து வரும் புலிகள் இனத்தினைப் பாதுகாக்க அரசாங்கம் என்னவெல்லாம் செய்கிறார்கள். சட்டங்களை எத்தனைக் கடுமையாக்கி வைத்திருக்கின்றனர். புரியாமல் பேசுபவர்களிடம் என்னத்தச் சொல்லிப் புரிய வைப்பது.
அப்பா வந்து என்ன சொல்லப் போகிறாரோ. அவருக்கு மாப்பிள்ளையென்றால் அரைத்துத் தான் கலக்கியிருக்கிறது. அப்படி இருக்கையில் அவர் வேறு என்ன சொல்லிவிடப் போகிறார். அவ்வளவுதான மாப்பிள்ளை வாங்கிட்டாப் போச்சு என்பார். பின்னர் மாதவனிடம் வந்து இராஜம் உன் அக்காள் மட்டுமில்லை. எனக்குப் பெண் மட்டுமில்லை. நம் குடும்பத்தின் குலசாமி. பெண் தெய்வம். அவள் பிறந்த பின்னர்தான் நாங்க இராத்திரியில பசியில்லாம தூங்க ஆரம்பிச்சோம். அதுவரை இங்க அங்கன்னு வேலை பாத்துகிட்டு இருந்த நான் டவுண் ஹால் ரோட்டுல சின்னதா பேனாக் கடையொன்னு போட்டேன். அது தான் இன்னிக்கு நல்ல ஸ்டேஷனரி கடையா வந்துருக்கு. எல்லாம் அவ பொறந்த இராசி. அப்படி இப்படி பழைய கதையெல்லாம் பேசுவார். அவரு மச்சினரை குலசாமியா பாக்குறதுக்குக் காரணம் அவர் அக்காவை குலசாமியா பாக்குறதுதான்னு மாதவனுக்கு நன்றாகவேத் தெரியும்.
ஆனால் இதுவோ சட்ட விரோதமான செயல். மாட்டிக் கொண்டால் எல்லாருக்கும் திண்டாட்டமாய் போய்விடும். யாருக்கும் பாதகமில்லாமல் இந்த பிரச்சினையிலிருந்து வெளிவர வேண்டும். அவனுக்கு டவுண்ஹால் ரோட்டில் செருப்புக் கடை வைத்திருக்கும் ஒரு மார்வாடியின் பையனைத் தெரியும். அவன் இராஜஸ்தான் காரன் தான். அவனிடம் பேசிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தவனாய் வீடு வந்தான் மாதவன்.
மறுநாள் காலையில் மாதவன் இராஜஸ்தான் மார்வாடி செருப்புக் கடைக்குச் சென்றான். அந்த மார்வாடிக் கடை வெகு நாட்களாக மதுரையில் இருக்கும் ஒன்று. அந்த மார்வாடியின் பையன் குல்தீப் வர்மா மதுரையிலேயே பிறந்து வளர்ந்தவன். அதனால் அந்த குடும்பத்தில் அனைவரும் நன்றாக தமிழ் பேசக் கூடியவர்கள் தான். குல்தீப் வர்மாவை மாதவனுக்கு வெகு நாட்களாகவே தெரியும் என்பதால் நேராய் விசயத்தைச் சொன்னான். வர்மாவுக்கும் முதலில் பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. மாதவனோ குல்தீப்பிடம் இந்த விசயத்திற்கு என்னதான் தீர்வு என்று கேட்டான்.
“மாதவா. ரெம்ப ஆபத்தான விசயம் இது. மாட்டிக்கிட்டோம்னா உன்னைய மட்டுமில்லை உனக்கு ஐடியா கொடுத்தேன்னு என்னையையும் உள்ளே தூக்கி வச்சிருவாங்க. நான் எனக்குத் தெரிஞ்ச ஒரு ஐடியாவைச் சொல்றேன். நீ இராஜஸ்தானுக்கு, சவாய்மாதோப்பூருக்குப் போ. சவாய் மாதோப்பூருக்குப் பக்கத்தில தான் இரத்தம்பூர் புலிகள் சரணாலயம் இருக்கு. அங்கே போய் ஒரு பதினைஞ்சு இருபது நாட்கள் தங்கியிரு. என் ரிலேட்டிவ்ஸ் கிட்ட சொல்லி தங்குறதுக்கு ஏற்பாடெல்லாம் பண்ணீரலாம். அங்கேயே நகைக் கடைகள்ல்ல டூப்ளிகேட் புலிநகம் விப்பாங்க. ஒரிஜினலை விட பக்காவா இருக்கும். யாராலும் அவ்வளவு சீக்கிரமா வித்தியாசம் கண்டே பிடிக்க முடியாது. இலட்சக் கணக்குல கோடிக் கணக்குல இந்த டூப்ளிக்கேட் நகம் பல்லுன்னு ஸ்கேம் பண்ணீட்டு இருக்காங்க. பக்கா பில் போட்டுத் தருவாங்க. அந்த பில்லை பத்திரமா வச்சிகிட்டேன்னா ட்ராவல்ல எந்த ப்ராப்ளமும் வராது. இங்க வந்து உன் மச்சான்கிட்டயோ அல்லது அப்பாகிட்டயோ மட்டும் சொல்லாத. அக்காகிட்ட மறைக்காதே. சிம்பிள் அண்ட் ப்ளைன் கேம். எவ்வரிவொன் இஸ் ஸேஃப்.
திஸ் இஸ் ஒன் ஆஃப்ஷன். இன்னொன்னும் இருக்கு. பட் அது டூ ரிஸ்கி.”
இரத்தம்பூர் டைகர் ரிசர்வைச் சுற்றி லாப்பூர், ப்ரேம்புரா கச்சீடா அப்படி இப்படின்னு சின்னதும் பெரிசுமா நிறைய ட்ரைபல் வில்லேஜஸ் இருக்கு. அங்கிருக்கிறவங்க ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ் கூட லிங்க் வச்சுருப்பாங்க. அவங்களுக்குத் தெரியாம புலிகளை வேட்டையாடவோ புலிகளோட நகத்தையோ பல்லையோ ஏன் முடியையோ வாங்கவோ விக்கவோ யாராலும் முடியாது. அப்படி ஒரு நெட்வொர்க் அவங்களுக்குள்ள. இன்னொரு விசயம் இருக்கு. பெண் புலி குட்டி போட்டவுடனே அந்தக் குட்டிகளை ஆண் புலி கொல்ல வரும். ஏன்னா குட்டிகளைப் பராமரிக்கிற பெண் புலி தன்னோட மேட் பண்ணாதுன்னு அதுக்குத் தெரியும். அதனால குட்டி போட்ட பெண் புலி ஆண் புலியை தன் பக்கத்துலேயே சேக்காது. சில சமயம் தாயப்புலி இல்லாத நேரமா ஆண் புலி வந்து குட்டிகள்ல்ல ஒன்னையோ இரண்டையோ கொன்னுரும். அந்த ட்ரைபல் வில்லேஜ்ல இருக்குறவங்க சர்வ சாதாரணமா டைகர் ரிசர்வ் ஏரியாவுக்குள்ள போயிட்டு வந்துட்டு இருப்பாங்க. அவங்களுக்குத் தான் ஃபாரஸ்ட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு மொதல்ல தெரிய வரும். அவங்க சொல்லிதான் ரேஞ்சர்களுக்கெல்லாம் தெரியும். அதனால அவங்க ரேஞ்சர்ஸ் வர்றதுக்கு முன்னாடியே யாருக்கும் எதுவும் தெரியாத மாதிரி செத்துப் போன புலிக் குட்டிகளிடமிருந்து சின்னச் சின்னதா நகம் பல்லுன்னு கலெக்ட் பண்ணியிருப்பாங்க. அது ரேஞ்சர்களுக்கும் தெரியும். ஒரிஜினல் புலிநகம் எவ்வளவு இருக்கும்ன்னு நினைக்கிற மாதவா. க்ரே மார்க்கெட்டுல சைஸைப் பொருத்து அஞ்சுலேருந்து அம்பது இலட்சம் ரூபாய் வரை போகும். முடியோட இருக்கனும். அதுதான் ஆதென்டிக். கொஞ்சமா கலெக்ட் ஆனவுடனே அத விக்கிறதுக்கு ஆள் தேடுவாங்க. வித்தவுடனே எல்லாரும் சேர்ந்து பங்கு போட்டுக்குவாங்க. நீ மாதோப்பூருக்கு போனா எங்க ரிலேட்டிவ்ஸ் கிட்ட சொல்லி இப்படி ஆட்களை மீட் பண்றதுக்கு ஏற்பாடெல்லாம் பண்ணமுடியும். பட் வெரி வெரி டேஞ்சரஸ். வெரி வெரி ரிஸ்கி.
நௌ யூ டிசைட்.” என்று முடித்தான் குல்தீப் வர்மா.
மாதவன் ரொம்ப நேரம் அமைதியாய் இருந்தான். அப்புறமாய் பேசினான்.
“குல்தீப். நீ சொன்னதயெல்லாம் வச்சு பாக்குறப்போ எனக்கு என்ன தோன்றதுன்னா செகண்ட் ஆஃப்ஷனை பண்ணப் போறதா நான் எங்க அப்பாகிட்ட, மச்சான்கிட்ட, எங்க அக்காகிட்ட எல்லாம் சொல்லிகிட்டு சாவாய் மாதோப்பூர் போறேன். பட் நாம மொத ஆஃப்ஷனைத் தான் பண்ணப் போறோம். யாருக்கும் எந்த ப்ராப்ளமும் வரக்கூடாது. எந்த சட்ட சிக்கல்லேயும் யாரும் மாட்டிக்கக் கூடாது. அதுக்கு இது தான் சரியான வழி. என்ன நான் சொல்றது” என்றான். குல்தீப்பிற்கும் மாதவனின் இந்த யோசனை பிடித்திருந்தது.
இப்படித்தான் இந்த சவாய் மாதோப்பூருக்கு வந்து சேர்ந்தான் மாதவன். இரயில் நிலையத்தின் அருகில் இருந்த அவன் தங்கியிருந்த விடுதியிலிருந்து இரத்தம்பூர் புலிகள் சரணாலயம் நான்கைந்து கிலோ மீட்டருக்குள் தான் இருந்தது. சரணாலயத்தில் உள்ளே போவதற்கு அனுமதிக்கப் பட்ட திறந்த ஜீப்புகள் நிறையவே போய் வந்து கொண்டிருந்தன. அதில் ஒரு முறை சரணாலயத்திற்குள் அழைத்துக் கொண்டு போய் திரும்பி வர ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வரை வசூலித்தார்கள். கேமராவுக்குத் தனிக் காசு. இந்த பத்து நாட்களுக்குள் மாதவன் தான் புதிதாய் வாங்கியிருந்த டெலி-ஜூம் கேமராவுடனும் நல்லதொரு விலையுயர்ந்த பைனாக்குலருடனும் சரணாலயத்திற்கு நன்கைந்து தடவைகள் போய் வந்து விட்டான். ஆனால் ஒரு நாள் கூட அவன் புலியை நேரில் பார்க்கவே இல்லை. சரணாலயத்தில் புலிகள் நிசமாகவே இருக்கின்றனவா என்ற சந்தேகம் கூட அவனுக்கு வந்துவிட்டது. ஒரு புலியையாவது பார்க்காமல் மதுரைக்குப் போவதில்லை என்ற சபதத்தை எடுத்துவிட்டான் மாதவன்.
மாதவன் அடிக்கடி வந்து போவதைக் கவனித்த ஒரு திறந்த ஜீப்புக்காரன் ஒரு நாள் மாதவனைப் பார்த்ததும் மெல்ல சிரித்து வைத்தான். அவனுக்கு ஒரு ரெகுலர் கஸ்டமர் கிடைத்த மகிழ்ச்சி தெரிந்தது அவன் முகத்தில். அவனிடம் பேச்சுக் கொடுத்தான் மாதவன்.
“உங்களுக்கு எந்த ஊருங்க.?”
“இங்கன தான் பக்கத்துல.”
“பக்கத்துலன்னா.. சவாய் மாதோப்பூரா”
“இல்லீங்க.. பக்கத்துல ஒரு கிராமம். காட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கு. பேரு ப்ரேம்புரா.”
அவன் சொன்ன அந்த ஊரின் பெயரைக் கேட்டதும் மாதவனின் உள்ளே சிவப்பாய் இரண்டு கொம்புள்ள சாத்தான் ஒன்று தன் வாய் திறந்து கோரைப் பற்கள் தெரியச் சிரிக்கத் துவங்கிற்று.