இணைய இதழ்இணைய இதழ் 54கட்டுரைகள்

சர்வதேச கிரிக்கெட்டை அழிக்கப் பார்க்கிறதா ப்ரான்சைஸ் கிரிக்கெட்? – வில்சன் ராஜ்

கட்டுரை | வாசகசாலை

மீபத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ட்ரெண்ட் போல்ட் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதைக் குறைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார். கடந்த மாதத்தில் மற்றொரு உலகத்தர வீரரான இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸும் இதே முடிவை அறிவித்தார். இந்த இரண்டு அறிவிப்புகளுமே தொடர்ந்து அடுத்தடுத்து வந்ததால் வீரர்கள் அனைவருமே சர்வதேச கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற ஒரு வாதம் எழுந்தது. நாட்டுக்காக ஆடுவதை விட பணத்திற்காக விளையாடுவதைத் தான் வீரர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் இது நியாயமான விமர்சனமாகத்தான் தெரியும். ஆனால், எல்லாவற்றுக்கும் மறுபக்கம் என்பது உண்டு தானே? அந்த மறுபக்கத்தை சற்று அலசிப் பார்ப்போம் வாருங்கள். 

சர்வதேச கிரிக்கெட்டை விட்டு விட்டு வீரர்கள் வேறு நிறுவனத்திற்கு கிரிக்கெட் விளையாடுவது ஒன்றும் புதிது அல்ல. 1980-களின் தொடக்கத்திலேயே கெர்ரி பேக்கர் என்னும் ஆஸ்திரேலிய தொழிலதிபர் World Series Cricket என்னும் தொடரை ஆரம்பித்தார். கிரிக்கெட்டில் வரும் லாபம் அனைத்தையும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தின்று ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த காலத்தில் வீரர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து பலரையும் வளைத்துப் போட்டார் பேக்கர். டோனி கிரெய்க், இம்ரான் கான், டென்னிஸ் லில்லி, விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற பல திறமையான வீரர்கள் தங்களின் நாடுகளை அம்போ என விட்டு விட்டு, இவர் ஆரம்பித்த தொடரில் விளையாட வந்து விட்டனர். சர்வதேச கிரிக்கெட்டின் தலைமை இடமாக அப்போது இருந்த MCC வழக்கு தொடர்ந்து மிரட்டிய போது கூட வீரர்கள் அதிக சம்பளம் கிடைப்பதால் கெர்ரி பேக்கருக்கு விளையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தனர். MCC ஒரு கட்டத்தில் இறங்கி வந்து கெர்ரி பேக்கர் கேட்டதையெல்லாம் கொடுக்க ஒப்புக்கொண்ட பின்பு தான் இந்த கிரிக்கெட் தொடரை நிறுத்தினார் அவர். 

ஆக, சர்வதேச கிரிக்கெட்டை புறக்கணித்துவிட்டு மற்ற கிரிக்கெட் தொடர்களில் விளையாடச் செல்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இப்போது மட்டும் ஏன் அதை பெரிதுபடுத்துகிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை. இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு ஒன்று, “இப்படியே தொடர்ந்தால் வரும் காலங்களில் சர்வதேச கிரிக்கெட் அழிந்து போய்விடும்” என்பது. ஆனால், IPL போன்ற தொடர்களில் வீரர்கள் ஆட ஆரம்பித்த இந்த பத்து ஆண்டுகளில் எந்த வித கிரிக்கெட்டும் அழிந்ததாகத் தெரியவில்லை. பதிலுக்கு T10, The Hundred போன்ற புதுவிதமான கிரிக்கெட் தொடர்கள் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 

இரண்டு ஆண்டுகளில் இரண்டு T20 உலக கோப்பைத் தொடர்கள் நடைபெற இருந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகமாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற உள்ளதால் மீண்டும் அடுத்த ஆண்டு அதிக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நிச்சயம் நடைபெறத்தான் போகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற தொடர்கள் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டையும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் டிரெண்ட் ஆன இங்கிலாந்தின் அதிரடி கிரிக்கெட் எல்லாம் டெஸ்ட் போட்டிகள் மெருகேறிக் கொண்டே இருக்கிறது என்பதைத்தான் உணர்த்துகின்றது. அப்படி உண்மையிலேயே ஒரு வித கிரிக்கெட்டை அழிக்க வேண்டும் என்று ஐசிசி நினைத்தால் இத்தனை கோடிகள் செலவு செய்து உலகக் கோப்பை தொடரை ஏன் அவர்கள் நடத்த வேண்டும்? 

சரி அப்படி உண்மையிலே அழிகிறது என்று வைத்துக்கொள்வோம். சர்வதேச கிரிக்கெட்டை வரிசையாக எத்தனை நாடுகள் தொடர்ந்து விளையாடிக் கொண்டு வருகின்றன? எட்டு தான். ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை விளையாடும் நாடுகளை சேர்த்து கணக்கு போட்டால் கூட 15-ஐ தாண்டாது. ஆனால் ப்ரான்சைஸ் (Franchise) கிரிக்கெட் என்று அழைக்கப்படும் ஐபிஎல் போன்ற லீக் கிரிக்கெட் தொடர்கள் அதிகம் வந்தால் ஜிம்பாவே, கென்யா போன்ற நாடுகளில் இருந்து வரும் வீரர்களுக்கு அதிக வாய்ப்பும் வருமானமும் கிடைக்கும். ஒரு விளையாட்டு என்பது அனைத்து நாடுகளையும் அனைத்து இன மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சில நாடுகளை புறக்கணிப்பது சரியானதாக இருக்காது தானே. 

சில நாட்களுக்கு முன்பு ரியான் பர்ல் என்னும் ஜிம்பாவே வீரர் தொடர்ச்சியாக தனது காலணி கிழிந்து கொண்டே இருப்பதாகவும், தனக்கு யாராவது காலணி வாங்க உதவி செய்யுமாறும் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். எந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரருக்கோ அல்லது இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கோ இந்த நிலை ஏற்படுமா? தமிழ்நாடு பிரீமியர் லீக் போன்ற தொடர்களில் விளையாடும் வீரர்களை விட ஜிம்பாவே, வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளுக்கு விளையாடும் வீரர்களின் சம்பளம் மிகவும் குறைவு. இப்படி இருக்கும்போது எந்த ஒரு வீரரும் எதைத் தேர்வு செய்வார்? Franchise கிரிக்கெட் விளையாடுவதைக் தானே? சம்பளம் போதவில்லை என்று ஒரு வருஷத்துக்கு ஒரு முறை அலுவலகத்தை மாற்றும் அதே ஆட்கள் தான், வீரர்கள் நல்ல சம்பளம் கிடைக்கும் இடங்களைத் தேர்வு செய்யும் போது விமர்சிக்கின்றனர். 

இனிவரும் காலங்களில் அதிகம் ஐபிஎல் போன்ற லீக் கிரிக்கெட் தொடர்கள் தான் இருக்கும். அவற்றால் வருமானமும் வருகிறது; ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும் தருகிறது. இவ்வளவு ஏன்? காலம் காலமாக வருமானம் தராத போட்டிகள் என்று புறக்கணிக்கப்பட்ட பெண்கள் கிரிக்கெட்டுக்கு தற்போது நடைபெற்று வரும் The Hundred லீக் தொடரில் மைதானம் முழுக்க ரசிகர்கள் நிரம்பி வழிகின்றனர். ஐபிஎல் தொடர் மூலமாக வந்த வருமானத்தில் அமீரகம், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் அணிகளை உரிமையாளர்கள் வாங்குகின்றனர். சிறிய சிறிய நாடுகளில் இருந்து கிரிக்கெட் விளையாட வரும் பல வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது தான் தங்களது இலக்கு என்பதைத் தெளிவாக குறிப்பிடுகின்றனர். 

தோனி விளையாடிய 15 ஆண்டு காலத்தில் மற்றொரு விக்கெட் கீப்பரால் இந்திய அணிக்குள் நுழைய முடிந்ததா? அதிகபட்சம் தொலைக்காட்சியில் கூட ஒளிபரப்படாத ரஞ்சி மாதிரியான போட்டிகளில் தான் மற்ற விக்கெட் கீப்பர்கள் விளையாடினர். ஆனால், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல் என பல விக்கெட் கீப்பர்கள் அணியில் இருக்கிறார்கள். காரணம் IPL. தோனியின் வருகைக்கு முன்பு கங்குலி ஒரு நல்ல விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய எவ்வளவு மெனக்கட்டார் என்பது அந்தக் கால ரசிகர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், தற்போது ஒவ்வொரு தொடருக்கும் மூன்றில் இருந்து நான்கு விக்கெட் கீப்பர்கள் அணியின் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கின்றனர். இதுதான் ஐபிஎல் கொடுத்த மாற்றம். யாரையும் புறக்கணிக்காமல் ஏதாவது ஒரு வகையில் எப்படியாவது ஒரு வாய்ப்பை வழங்க Franchise கிரிக்கெட் பெரும் பங்கு வகிக்கிறது.

கிரிக்கெட்டிற்கு பெருகும் செல்வாக்கை கருத்தில் கொண்டு பார்த்தால், இனிமேல் மூன்றுவித கிரிக்கெட்டும் விளையாடும் வீரர் என்று ஒருவரைக் காண்பது அரிதாகிவிடும். பல்வேறு வீரர்களைக் கொண்டு அணி ஒவ்வொரு வித கிரிக்கெட்டுக்கும் கட்டமைக்கப்படும். ஒரு இந்திய அணி டெஸ்ட் விளையாடிக் கொண்டிருக்கும் போதே, மற்றொரு இந்திய அணி வேறொரு நாட்டில் டி20 தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும். இந்திய அணியை சார்ந்த மற்ற வீரர்கள் ஏதாவது ஒரு டி20 லீகில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருப்பார்கள். இது எல்லாவற்றுக்கும் மேலாக சில வீரர்களை அவர்கள் விளையாடும் காலம் முழுதும் எதாவது ஒரு Franchise அணி ஒப்பந்தம் செய்து விடும். காலத்துக்கும் பிரச்சனை இல்லாத இன்ஸ்யூரன்ஸ் போன்றது இது. 

கிரிக்கெட்டில் தற்போது இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் வீரர்கள் மூன்று வித கிரிக்கெட்டும் விளையாட வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவது தான். மாதத்திற்கு 20 நாட்கள் கிரிக்கெட் பார்ப்பதற்கு வேண்டுமென்றால் சுகமாக இருக்குமே தவிர விளையாடுவதற்கு அல்ல. டி20, ஒருநாள் போன்ற அதிக உடல் உழைப்புகளைப் போட வேண்டிய கிரிக்கெட் ஆட்ட முறைகளால் இவர்கள் மிக எளிதில் சோர்வடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஸ்டோக்ஸ், மொயீன் அலி என மன அழுத்தம் காரணமாக சில காலம் கிரிக்கெட்டிற்கு முழுக்கு போட்ட வீரர்கள் இருவருமே மூன்று வித கிரிக்கெட்டுகளும் ஆடுபவர்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவே பிராண்ட் வேல்யூ போன்றவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஒரு வீரரை ஒருவித கிரிக்கெட்டுக்கு முழுவதுமாகத் தயார் செய்வது தான் வருங்கால கிரிக்கெட்டுக்கு ஏற்றதாக இருக்கும். எடுத்துக்காட்டாக ஹர்திக் பாண்டியா டி20 போட்டிகளில் அதிக காலம் நீடிக்க வேண்டும் என்றால் மற்ற இரண்டு வித கிரிக்கெட்டையும் அவர் தியாகம் செய்தாக வேண்டும். அதுபோல ஸுப்மான் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டாராக மாற வேண்டும் என்றால் மற்ற இரண்டு வித கிரிக்கெட்டையும் அவர் கைவிட்டாகத்தான் வேண்டும். அப்போதுதான் ஏதாவது ஒரு வகை கிரிக்கெட்டிலாவது காயங்கள் இல்லாமல் அவர்கள் நினைக்கும் வரை சிறப்பாக விளையாட முடியும். 

இப்படி ஏதாவது ஒரு கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துபவர்கள் எல்லாம் பெரிதாகக் காயங்கள் இல்லாமல் இருப்பதையும் நாம் கவனிக்க முடியும். 40 வயது வரை இளமையாக பந்து வீசிக் கொண்டிருக்கும் ஆண்டர்சன் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டை தியாகம் செய்ததின் பலனைத்தான் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த பொல்லார்ட் சர்வதேச போட்டிகளை விட T20 போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் போவதாகப் பேசிய உடன் பலர் அவரை விமர்சித்தனர். ஆனால், தற்போது டி20 உலகின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் பொல்லார்ட் தான். அவரின் சக நாட்டு வீரர்களான பிராவோ, நரைன் போன்றவர்களும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டைத் தியாகம் செய்ததன் பலனைத் தான் தற்போது அறுவடை செய்கின்றனர். 

இதில் மற்றொரு விஷயத்தையும் நன்கு கவனிக்க வேண்டும். சுமார் 15 ஆண்டுகள் முன்பு வரை வீரர்கள் 36 வயதைக் கடந்ததுமே கிரிக்கெட்டில் சாதிக்க முடியாமல் வேறு தொழில்களுக்கு செல்வது உண்டு. வரிசையாக பல போட்டிகள் ஆடி வந்த காரணத்தினால் ரவி சாஸ்திரி 30 வயதிலேயே வர்ணனையாளராக மாறினார். கிரிக்கெட் உலகின் முதல் பினிஷர் என்று அழைக்கப்படும் மைக்கேல் பவன் தற்போது வரை நிலையான வருமானம் இல்லாத காரணத்தால் ஏதாவது ஒரு நாட்டிற்கு பயிற்சியாளராக வரட்டுமா என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்த டி20 உலகில் இதற்கெல்லாம் சாத்தியமே இல்லை. முடிந்த வரை விளையாடு; உடலும் மனமும் ஒத்துழைக்க மறுக்கும் சமயத்தில் ஏதாவது ஒரு கிரிக்கெட் மட்டும் விளையாடி சம்பாதித்துக் கொள் என்று புதிய வழியை கிரிக்கெட் காண்பிக்கிறது. Data Analyst, Power Hitting Coach போன்ற புது வகையான தொழில்களையும் இந்த Franchise கிரிக்கெட் தான் உருவாக்கிக் கொடுத்துள்ளது.

முதன் முதலில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமானபோது உண்மையான கிரிக்கெட்டை அழிக்க நினைக்கிறார்கள் என்று அப்போதும் கண்டன குரல்கள் எழுந்தன. DRS அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் நடுவர்களின் குரல்வளையை இது நெருக்குகிறது என்று கூட கண்டனங்கள் எழுந்தன. இவ்வளவு ஏன்? டிவி அம்ப்பயரிங் முறை 1993-ல் அறிமுகப்படுத்தப்பட்ட போது இது ஒரு முட்டாள்தனமான காரியம் என்று பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறினார். ஆக காலப்போக்கில் ஏதாவது ஒரு புதுமை அரங்கேறும் போதெல்லாம் ஏதாவது ஒரு விமர்சனம் எழுந்த வண்ணமாகத் தான் இருந்துள்ளது. மற்றவைகளை ஏற்றுக்கொண்டது போல இந்த வகையான கிரிக்கெட் கலாச்சாரத்தையும் நிச்சயம் உலகம் ஏற்றுக்கொள்ளும். 

*****

wr67878@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button