
வைரஸ்க்கு நோ என்ட்ரி
கொஞ்ச நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வந்தது. அன்றும், மழை திடீரென வெளுத்து வாங்கியது. வெளியில் மித்ரன், ஆதவன், அமுதா, மருதாணி நால்வரும் விளையாடிக் கொண்டிருந்தனர். மழை பெய்ய ஆரம்பித்தவுடன் வேகமாக வீட்டிற்குள் ஓடி வந்தனர். ஆதவன் அம்மா எல்லோருக்கும் துவட்ட துண்டு கொடுத்து, டீ போட்டு கொடுத்தார்.
நால்வரும் வீட்டின் உள்ளே கதகதப்பாக அமர்ந்து வாசல் வழியே மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். ஜாலியாக பேசிக் கொண்டே ரொம்ப நேரம் ஆகிவிட்டது. மழை நிற்க இரவு 8 மணி ஆனது. மித்ரனும் அமுதாவும் அதன்பின் தான் வீட்டுக்கு கிளம்பினர்.
அடுத்த நாள் முதலில் மருதாணி தும்மினாள். அம்மா மருந்து கொடுத்து படுக்க வைத்தார். தூங்கி சாயங்காலம் எழுந்து பார்த்தால், மருதாணிக்கு பயங்கர காய்ச்சல், சளி. ஆதவன் தான் முதலில் பார்த்தான்.
ஆதவன்: மருதாணி, வா விளையாட போலாம்.
மருதாணி: அண்ணா, எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.
ஆதவன்: அவள் அருகே சென்று தொட்டுப் பார்த்தான். பயங்கரமாக சுட்டது.
ஆதவன்: அம்மா… அம்மா! மருதாணிக்கு பயங்கரமா சுடுதும்மா.
அம்மா வந்து தொட்டுப் பார்த்தார். நல்ல சூடு. சாயங்காலமே மருத்துவரைச் சந்தித்து, மருந்து மாத்திரைகளோடு வீடு வந்து சேர்ந்தனர்.
அம்மா: மருதாணி, நீ் போய் படுத்துக்கோ. ஆதவா, நீ தனியா விளையாடு. வெளிய போக வேண்டாம்.
ஆதவன்: அவளுக்கு தானேம்மா காய்ச்சல். நான் ஏன் போகக் கூடாது?
அம்மா: மழை வர மாதிரி இருக்குல்ல. அதான்.
அப்போது மித்ரனும், அமுதாவும் வீட்டிற்கு வந்தனர்.
மித்ரன்: டேய் ஆதவா, வாடா விளையாடலாம்.
ஆதவன்: மழை பெய்யற மாதிரி இருக்குனு அம்மா விளையாடப் போக வேண்டானு சொல்லிட்டாங்க.
அமுதா: மருதாணி எங்க?
மித்ரன்: ம்ம்ம்.. செடியில இருக்கும். போய் பறிச்சுக்கோ.
அமுதா: ஏய், என்ன லொள்ளா?
மித்ரன்: ஹாஹா.
அமுதா: மருதாணி எங்கடா ஆதவ்?
ஆதவன்: அவளுக்கு காய்ச்சல்டா. மருந்து குடுத்து அம்மா தூங்க சொல்லிட்டாங்க.
மித்ரன், அமுதா: அச்சச்சோ…
ஆதவன்: 2 நாள்ல சரியாகிடும்னு டாக்டர் சொன்னாங்க.
மித்ரன்: ம்ம்ம்.
அப்போது ஆதவன் அம்மா வந்தார்.
அம்மா: எல்லாரும் இங்கேயே உக்காந்து விளையாடுங்க பசங்களா. மழை வர்ற மாதிரி இருக்கு. வெளிய போக வேண்டாம்.
அமுதா: சரிங்க ஆண்ட்டி.
மித்ரன்: காய்ச்சல் ஏன் வருது?
அம்மா: நம்ம உடம்புக்குள்ள ஏதாவது கிருமி வந்திருச்சுன்னா, அத விரட்டறதுக்காக உடம்பு பண்ற முயற்சி இது.
அமுதா: விரட்டுனா காய்ச்சல் வருமா?
அம்மா: நம்ம உடம்பு சாதாரணமா இருக்குற அதே வெப்பத்துலயே இருந்தா, வந்த கிருமி ஜாலியா இருக்கும். வெப்பத்த அதிகப்படுத்துனா, சூடு தாங்காம செத்துரும். அதனால உடம்பு தன்னால அதோட வெப்பத்த அதிகப்படுத்தும். அதான் காய்ச்சல்.
மித்ரன்: அதான், அதுவே கொன்னுடுமே, அப்புறம் ஏன் நாம மாத்திர சாப்பிடறோம்?
அம்மா: சூடு அதிகமா இருந்துட்டே இருந்தாலும், நமக்கு ஆபத்து தான். அதனால கிருமிய அழிக்க வெளிய இருந்து மருந்து குடுக்கறோம்.
ஆதவன்: மாத்திர தான் கிருமிய கொன்னுடும்லம்மா. அப்பறம் ஏன் விளையாட போகக்கூடாது?
அம்மா: ஓய்வெடுக்கனும்ல டா.
ஆதவன்: ம்ம்.
அம்மா: காய்ச்சல் சளியோட வெளிய போனா, திரும்பவும் கிருமி தொற்று வந்து, இருக்கிற சளி அதிகமாகவும் வாய்ப்பிருக்கு.
அமுதா: மழை வர்ற மாதிரி இருக்குனு தான் போக வேண்டாம்னு நீங்க சொன்னீங்கனு ஆதவ் சொன்னான் ஆண்ட்டி.
அம்மா: ம்ம். சளி அதிகமாக, குளிர் காத்து, இனிப்புனு இன்னும் சில விஷயங்களும் காரணமா இருக்கு. அது பக்கம் போகாம இருந்தா சீக்கிரம் சரியாகும்ல.
அமுதா: ம்ம்ம் ஆமாங்க ஆண்ட்டி.
ஆதவன்: ஆமா. எதுக்கும்மா மாஸ்க் போடறோம்?
அமுதா: எனக்குத் தெரியும்.
ஆதவன்: எதுக்கு?
அமுதா: கிருமி நம்ம மூக்கு கிட்ட வராம இருக்க.
ஆதவன்: ஏன்? மாஸ்க்ல என்ன no entry-ன்னா எழுதி இருக்கு?
எல்லோரும் சிரித்தனர்.
அமுதா: ஏய் நிஜமாத்தான். ஆமா தானேங்க ஆண்ட்டி?
அமுதா, ஆதவன் அம்மாவைப் பார்த்து கேட்டாள்.
அம்மா: அவ சொல்றது சரிதான். வைரஸ் கிட்ட இருந்து மாஸ்க் நம்மள பாதுகாக்கும். ஆனா 100 சதவிகிதம் இல்ல.
ஆதவன்: அப்புறம் ஏன் போடுறோம்?
அம்மா: குறிப்பிட்ட அளவு பாதுகாப்பு கண்டிப்பா தரும். தூரமா ஒருத்தங்க தும்முனாங்கனா, மாஸ்க் இல்லாம் இருந்தா கண்டிப்பா உன்கிட்ட அந்த வைரஸ் வர வாய்ப்பு இருக்கும். ஆனா, இரண்டு பேரும் மாஸ்க் போட்ருந்தா, அது வைரஸ் பரவுற வாய்ப்பை ரொம்பவே குறைக்கும்.
ஆதவன்: ம்ம்.
அம்மா: அதே சமயம், கை கழுவறது, கண்ட இடத்துல கை வைக்காம இருக்கறதுனு சுத்தமான பழக்கங்களையும் ஃபாலோ பண்ணணும்.
மித்ரன்: இதெல்லாம் கொரொனா இருக்கும்போது தானே பண்ணணும்.
அமுதா: சளி, இருமல், காய்ச்சல், கொரொனா எல்லாத்துக்கும் இதே தான்.
எல்லோரும் கோரஸாக ‘ம்ம்ம்’ சொன்னார்கள். மருதாணி ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
ஆதவன்: அப்போ சரி. நாம அவளுக்கு சரியான அப்புறம் வெளியே போய் விளையாடுவோம். இப்போ புதிர் போட்டு விளையாடலாம்.
ஜோராக புதிர் விளையாட்டு தொடங்கியது.
தொடரும்…