
“ஆ காட்டுங்க அய்யா !” என்றவாறே இறுதிக்கிடப்பாட்டில் கிடந்த வெட்டுக்குத்தி செல்லையனின் வாய்க்குள் டார்ச் அடித்தார் டாக்டர் வேலாயுதம். ஆட்டோமேட்டிக் வாய்ஸ் ரெக்கக்னைசேசன் சிஸ்டம் ஒர்க் ஆகாமல் செல்லையனின் வாய் சரியாக வேலை செய்யவில்லை. ஆகையால் மேனுவலாகவே வாய் திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
“இழுத்து மூச்சு வுடுங்க !”
“மூச்சு போவாம கெடக்கியாருன்னிதானே ஒம்மள விளிச்சி வருத்திருக்கோம் !”
என்ற செல்லையனின் மகன் கோன்ஐஸ் பொன்னப்பனைத் திரும்பிப் பார்த்த வேலாயுதம் அவனிடம்,
“தம்பி நீங்க செத்த வெளியில நிக்கேளா ?” என்றதும் பொன்னப்பன் வெளியே போனான். அங்கே அவனது மைத்துனன் தவசியும் இருந்தான். செல்லையனின் மனைவி சிவகாமியிடம் டாக்டர் கேட்டார்,
“கடைசியா எப்பம்மா சாப்டாரு ?”
“ரெண்டு நாளத்தக்கி மின்ன சார் !”
“என்னம்மா சாப்டாரு ?”
“வறுத்தரச்ச நாட்டுக்கோழி கொளம்பும், புட்டுந் தின்னாரு சார் !”
“ரெண்டு நாளைக்கி முன்னால வரைக்கிம் நல்லாத்தான் இருந்தாரு இல்லியா ?”
“ம்க்கும் ! நல்லாத்தாங் கெடந்தான் !”
“ஏம்மா இது ஒங்களுக்கு யார்ம்மா ?”
“எனக்க மேப்புடியான் !”
“அப்டின்னா ?”
“என்னய தாலியக் கெட்டி பீலியக் கெடந்தவன் !”
இடையில் மறித்த பொன்னப்பன், “டாக்டேர் சார் ! படுத்துக் கெடக்கியது எங்க அய்யன் ! இது எங்க அம்ம ! அவளால ஒரு கேள்விக்கும் கூறா வெவரஞ் சொல்லிக்கிட முடியாது ! ஏணைக்கி கோணையின்னுதாம் பேசுவா பாத்துக்கிடுங்க !” என்று கூற,
“ஒங்கள வெளியிலத்தானே நிக்கச் சொன்னேன் ?” என்று டாக்டர் சொல்ல,
“எனக்கென்ன மயிரு! அவகிட்ட வாயக் குடுத்து ஆவியையுஞ் சீவனையும் பறிகுடுத்துக்கிட்டு ஆம்புலன்சுல ஆயிபித்திரிக்கி திரும்பிப் போவ எனக்கென்ன ? கோம்பத்தாயளி!”
என்று சொல்ல நினைத்தாலும் பொன்னப்பன் சொல்லவில்லை. டாக்டர் சிவகாமியிடம்,
“பல்ஸ் ரொம்ப டவுனாயிருக்கும்மா !”
“பல்லா ! இந்த ஊத்த வாய்க் கொன்னப் பெயலுக்கு டவுனுலாதம்ப் போயி பல்லு கெட்டிருந்து ! இந்த செத்த ஆட்டுப் பல்லக் கெட்டியதுக்கு ஒரு பல்லு டாக்டர் செத்த பெயலுக்கு அஞ்சாயிரம் ஓவா அழுதுருக்கேன் !! என்ன சீமைல கெடந்த பல்செட்டு நோனியோ ? அன்னக்கி நா மட்டும் இந்த அழுவழிஞ்ச செலவு செய்யலைன்னா இந்தா கெடக்கியவன் நாக்கு செத்த காலத்துல நாட்டுக் கோழி திம்பானா ?”
“ஏம்மா நா என்ன சொல்லுகேன் ? நீங்க வேற என்னத்தயோ சொல்லுகியோ ? என்ன ?”
வெளியில் நின்ற பொன்னப்பனுக்கு சிரிப்பு அள்ளியது, அவன் மனதுக்குள்,
“சாவு கூய்மோன ! எக்கண்டமா பேசுத எங்கிட்ட ? எங்கய்யன் சாவக் கெடக்கியதுக்கே இந்த சூவ முண்டதாங் காரணம் ! நீயும் வங்கொலையா வந்து சூண்டையில வுழுந்துருக்க ?”
“துடிப்பு கொறஞ்சிருக்கும்மா !”
“எளமையில நல்ல துடுப்பாத்தான் திரிஞ்சான் சார் ! ஏழாவது புள்ளையோட நாந்திரும்பி படுத்துக்கிடுவெம் பாத்துக்காங்க ! இப்ப குறுக்கு செத்த காலத்துலயுங்கூடி நடுராத்திரில எழுப்புவாய்ன் ! நாஞ் சம்மதிக்க மாட்டம்லா?”
“எம்மா நாடித்துடிப்பு கொறஞ்சிருக்குன்னு சொல்லுதேன் ! வெளங்குகாம்மா?”
“செவத்து நாடியப் போட்டு சுடுங்க சார் !”
“கடசியா எப்ப லிக்கூடு ஃபுட் எடுத்துக்கிட்டாரு ?”
“கிளிக்கூடெல்லா இஞ்ச வைக்கியதில்ல சார் ! இந்த எழவெடுத்த பூச்சையளுவளுக்க சல்லியம் ! வளத்த குருவியெல்லாத்தையும் கண்ணு தப்புத நேரத்துல வந்து புடிச்சிக்கிட்டு போயிரும் ! இந்த கோனைசு பெயெலே மூணு பூனையள கொன்னு கொளுத்திருக்காம்னா பாத்துக்காங்க ! என்னெடே சொல்லுத பொன்னப்பா ?” என்று வெளியில் குரல் கொடுக்க, பொன்னப்பன்,
“ஓமா ஓமா ! எல்லாத்தையும் டாக்டருகிட்ட உயிலு எழுதி குடுத்துரு ! அப்பந்தானே ஃபாரஸ்ட்டுகாரேன் வந்து என்னையப் புடிச்சி சிங்கியில வச்சி ஆட்டுவாம் ? செத்த மூளி!” என்றான்.
”எம்மா ! லிக்குட்’னா திரவாகாரம் ! கடைசியா என்னைக்கி தண்ணி குடிச்சாரும்மா ?” டாக்டருக்கு வாய் காய்ந்துபோனது.
”முந்தா நேத்தி மூணு குப்பி மாம்பட்டைய தொண்டைய தொறக்காமலே உறிஞ்சாய்ன் ! அதாங் கடசி பாத்துக்கிடுங்க ! குடிச்சீட்டு வந்து தட்டுல என்ன மயித்த எடுக்கப் போனானோ தெரியாது ! நா இரிட்டுக்காத்த போயி ஏணிய எடுத்தம்லா ! மொந்தட்டி’ன்னி ஒரு சத்தங் கேட்டு ! ஓடிவந்து வந்து பாத்தா மனியன் தல திரிஞ்சி தரையில மலந்து கெடந்தாய்ன் !”
”என்னாச்சி ?”
”இல்லாத்த ஏணியில கால வச்சா மயிரா தாழ எறங்குவான் ? சள்ளைய மலத்திட்டு கெடந்தத பாக்கணுமே !”
“அப்டிப் போடு ! கட்டுன மாப்புளைய கீழ வுழத் தட்டுனதையே எம்புட்டு நேக்கா மாத்தி சொல்லுதா பாத்தியா மச்சா ? டாக்டரு பொழைப்பானா ?”
என்று தவசியிடம் கேட்க அதற்கு தவசி, “கொஞ்சம் செரமந்தான் மாப்ளேய் !”
டாக்டர் திகைத்துப் போய் நின்றார். சிவகாமி டாக்டரிடம், “நீங்க கடசியா என்ன சொல்ல வறிய சார் ?”
”காலம்பர வரைக்கும் தாக்குப்புடிக்காது ! சொந்தக்காரேன் சொக்காரனுக்கெல்லாஞ் சொல்லியனுப்பிருங்க ! விடியவும் அடக்கிறலாம் !”
இதைக் கேட்டதும் “எண்டம்மோ!” என்று கூப்பாடு வைத்த சிவகாமியை ஆச்சரியத்தோடு பார்த்தபடியே வெளியில் வந்தார் டாக்டர் வேலாயுதம். பொன்னப்பன் அவரிடம், ”என்னாச்சி டாக்டர் காரியம் ?” என்று கேட்க டாக்டர் சொன்னார்,
”காரியத்துக்கு ரெடி பண்ணிருங்க ! வெள்ளனக்கி மிஞ்சாது ! தேகம் முச்சூடும் குளுந்தாச்சி ! ஆளுகளுக்கு சொல்லி விடுங்க தம்பியளா?”
”டாக்டர் சார் ! ஒங்களுக்கு ஃபீசு எத்தன் ரூவா ?”
ஆளக் காப்பாத்துனாத்தாம் பீசு வாங்கனும் ! தொண்ணூறு சதமானம் போஞ்சிட்டாரு ஒனக்க அய்யன் ! முடிஞ்ச வரைக்கிம் சீவம் போற நேரத்துல ஒங்கம்மய கொஞ்சோல அவுருக்க பக்கத்துல இருந்து மாத்தி வையிங்க! போற ஆவியாவது சாந்தமா போவட்டும் ! அது வாயா வடசேரி சந்தையா ? எப்புடிடே இவளுக்க கூட இருந்து காலங் கடத்துகியோ !”
என்றவாறே டாக்டர் வண்டியைத் தட்டினார். பொன்னப்பனும், தவசியும் படபடவென வேலையில் இறங்கினார்கள். போன் வசதியெல்லாம் அந்த அளவுக்கு இல்லாத கால கட்டமாதலால் ஊர் ஊருக்கு சொற்பம் அளவிலான லேண்ட் லைன் இணைப்புகள் இருந்தன. ஒரு ஊரில் உள்ள ஒரு வீட்டுக்கு தகவல் சொன்னால் போதும். அது அப்படியே பரவி அவ்வூரில் உள்ள சொந்தக்காரர்களின் காதுகளுக்குத் தகவல் போய்விடும்.
மரணக்கிடக்கையில் கிடக்கும் செல்லய்யனுக்கு வயது எண்பது என்றால் நம்ப முடியாது. ஒரு நூத்தியைம்பது வயதுக்குண்டான தோற்றம் கொண்ட ஊச்சாளி. எப்பவும் ஏதாவது வேலை ஒன்றைச் செய்து கொண்டேயிருப்பார். இடுப்பில் ஒரு வெட்டுக்கத்தி ஒன்று தொங்கியபடியே இருக்குமாதலால் அவரது பெயர்க்கு முன்னால் அதுவும் இணைந்து கொண்டது.
சிவகாமி அவருக்கு இரண்டாவது மனைவி. முதல் மனைவி செண்பகத்தாய் சுசீந்திரம் தேரோட்டத்தில் தொலைந்து போனாள். அவள் தொலைந்து போன அடுத்த முக்கால் மணிநேரத்தில் சிவகாமியைக் கண்டடைந்தார் செல்லையன். சிவகாமியும் தேரோட்டக் கூட்டத்தில் தன்னுடைய கணவனைத் தொலைத்திருந்ததால் அவளுக்கும் இது இரண்டாவது திருமணம்.
செண்பகத்தாய் ஒரு தீமூட்டிக் குழலின் உருவத்தை ஒத்த மேனியையுடையவள். ஆனால் சிவகாமி அப்படியில்லை. அட்டகாசமான உருவமுடைய பேரழகி. கோயில் கலசத்தைவிடவும் பெரிய இரண்டு கலசங்களைக் கொண்டிருந்தாள். அவளது கையில் இரண்டு செம்புத் தவலைகள் இருந்தன. ஆகையால் செல்லையனைக் கவர்வது அவளுக்கு மிகவும் எளிதாக இருந்தது.
ஒரு பானை அன்றைய விலைக்கு ஐம்பது ரூபாய் என்பதாலும் அன்றைய தினமே திருவிழாவில் அவை வாங்கப்பட்டிருந்ததாலும் அவைகளை அங்கேயே விற்று ஒரு தாலியைக் கொள்முதல் செய்து சிவகாமியின் கழுத்தில் கட்டி அன்றுமுதல் சிவகாமி என்ற சிலுவையைச் சுமக்கத் துவங்கினார். சிவகாமிக்கு மொத்தமாக ஏழு பிள்ளைகள். மூத்ததும், இளையதும் கடுவன் குட்டிகள், மீதம் ஐந்தும் ஏழரைகள். பல்வேறு இடங்களில் கட்டிக் கொடுக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். மூத்த மகன் இசக்கியப்பன் தன்னுடைய மனைவிக்கு வாழ்க்கைப் பட்டு தாமரை குளத்தில் ஜீவியம்.
முதல் போன் அவனுக்குதான் போனது, இறச்சகுளம் எஸ்.டி.டி பூத்திலிருந்து தவசி அந்த ஊரில் இருந்த ஒருவருக்கு லேண்ட்லைனுக்கு போன் செய்து இசக்கியப்பனை விளித்து இப்படிச் சொன்னான்,
“மச்சா ! மாமஞ் சாவக்கெடக்கான்! காலத்தைக்குள்ள சோலி முடிஞ்சிரும்ன்னி டாக்டரு செல்லிறுக்காரு ! ஒடனத்தன்னே பொறப்டு வந்து சேந்துரும் !”
”எந்த மாமனடே சொல்லுத ?”
”ஒமக்கு ஒம்பத்தோரு அய்யனா இருக்கான் ? ஒம்ம தவப்பந்தா எல்லு திருங்கி கிழிஞ்சி சாவக் கெடக்கான் ! வந்து தொலையும் !”
”ப்போ ! இப்பத்தா வூடு கெட்டி கடத்துல கெடக்கியேன் ! அதுக்குள்ள சாவடிச்செலவா? தாயளி மொவனுக்கு சாவியதுக்கு இப்போ என்ன அவசர மயிரு ?”
”ஆமாவோய் ! சாக்காலம்னா பொறந்த வூட்டுக்குப் போன பொஞ்சாதி மாதிரி சொல்லிக்கிட்டுத்தானே வரும் ? மாமியா வூட்டுல மாடு மேய்ச்சிட்டு கெடக்கீரு ? ஒமக்கு இதெல்லா வெளங்குமா ? போன வையும்வோய் ! பைசா பிச்சிக்கிட்டு போகு !”
”வாரம்டே ! வாரேன் !”
அடுத்த போன்கால் இரண்டாவது மகள் மாரியம்மாளுக்கு, கால் அட்டெண்ட் செய்து அரைமணிநேரம் கழித்து வந்ததால் அவளுக்கு மட்டுமே போன் பில் முப்பதைத் தொட்டது.
”அலோ மாரியம்ம பேசுதேன் ! ஆரு பேசியது ?”
”ஏ மைனி ? இவ்ள நேரம் அண்ணனுக்கு மண்டையில பேனா பாத்துட்டு கெடந்த ? போனு விளிச்சா நேரத்துக்கு வாரதுக்கு என்ன கொள்ளையோ ?”
”எடே யாரு தவசியா ? கொரலு புடி கெடைக்கல கேட்டியா ? போனு இருக்க வூட்டுக்கும் எனக்கா வூட்டுக்கும் ரெண்டு தெரு தள்ளில்லா இருக்கியெய்ன் ? அதா நேரமாயிட்டு ! ஊருல என்ன விசேசம் ?”
”அது ஒண்ணுமில்ல ! ஒங்கையன் இழுத்துகிட்டு கெடக்காரு பாத்துக்கா ? வெள்ளனக்கி காணமுடியாதுன்னி டாக்ட்ரு கைய விரிச்சிட்டாங் கேட்டியா ? என்னத்த டாக்ட்ருக்கு படிச்சி கிழிச்சானோ தலதெறிப்பான் !”
”நீ என்னத்தலே சொல்லுத ? அய்யோ எப்பா ! கண்ணாறக் கண்டு கண்ணு மூடல ! அதுக்குள்ள மண்ணுப் போட்டு மூடணுமா ? ஏ ராசா !”
என்று அவள் ஒப்பாரி வைத்த காரியமானது எஸ்.டி.டி பூத்திலுள்ள ஒனருக்குக் கேட்டு அவர் தவசியிடம் ஒரு விண்ணப்பத்தை வைக்க ஏதுவாக இருந்தது.
“தம்பி அதிக சத்தமாப் பேசுனின்னா போனுல உள்ள ஸ்பீக்கரு கிழிஞ்சிரும் பாத்துக்கா !”
“துட்டி சொல்லி விளிச்சா எதுத்தாக்குல பேசுதவுக முத்தமா குடுப்பாவ ?” என்று தவசி சொல்லி ஃபோனை வைக்க மறுமுனையில் மாரியம்மாள் மயங்கி போனின் காலடியில் சரணடைந்திருந்தாள். தன்னுடைய அப்பாவைக் கடைசியாகக் கண்ணாறக் கண்டதாகச் சொன்ன அந்த கடைசிக்கும் அன்றைய நாளுக்கும் இடையில் மூன்றரை ஆண்டுகள் இருந்ததைத் தவசி உணர்ந்து ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தான்.
‘கொப்பனோ…யளு! தாயி தவப்பன் உயிரோட இருக்கம்போ ஒரு வாயி தண்ணிய குடுக்கியதுக்கு வலியெடுக்கும் ! சாவக் கெடக்கியவங்கிட்ட வந்து நின்னு சங்கரா சங்கராம்பாளுவ ?’ தவசியின் மனம் கலங்கியது.
வரிசையாக மீதமுள்ள பாக்கியசீலி, பரமேஸ்வரி, ரெங்கம்மாள், கனகவதி என்று சொல்லி முடிக்கவும் தவசியின் காதுகளும், வாயும் வறண்டிருந்தன. கடைசியாக கனகவதி கேட்ட வார்த்தைகள் மாத்திரம் தவசியின் மூளையைச் சுரண்டி வைத்ததில் தவசிக்கு கடுப்பு வந்தது. அவள் கேட்டது இதுதான்,
”தவசி மச்சாய்ன் ! ஒம்ம மாமங்காரன் வஸ்துக்களெல்லாத்தையும் ஒழுங்கு படுத்திருக்கானா ? இல்லாம செத்தூட்டாம்னா அப்பொரம் தேவையத்த செறை வந்துரும் ! யாருக்கு என்னென்னன்னி ஒரு பட்டியலு போட்டு வச்சி கைரேகைய வாங்கி வைக்க ஏற்பாடு பண்ணிரும்!”
என்று சொன்ன அவளிடம் தவசி சொன்ன பதில் இதுதான்,
”வரம்ப பத்து ரூவா பத்தரத்துல ரெண்டண்ணம் வாங்கியா ? ஒங்கொய்யனுக்க கோமணத்துல ஒண்ணு கிழியாம கொடியில காஞ்சிட்டு இரிக்கி ! ஆளுக்கொரு துண்டா பத்தரம் பதிஞ்சிருங்க ! அது கட்டையா இருந்தா சொல்லும்மோ ! நா ஒரு புதுச்சாரம் வாங்கித்தாறேன் ! குடும்பத்தோட உத்தரத்துல மாட்டிக்கிட்டு தொங்கிருங்க ! செவம் பூமிக்க பாரமாது கொறையட்டும் !”
தவசிக்கு வெப்ராளம் வந்து விட்டது, ‘பெத்த அப்பஞ் சாவக்கெடக்காம் ! பட்டியலு போடச் சொல்லுகு ! பலவரவோ…யுள்ள ?’ என்று ஃபோனை வைத்துவிட்டான். போன் பில் மாத்திரம் நூத்தியெண்பது ரூபாய்கள்.
‘இந்தச் சக்கரத்துல நாலு குவாட்டரு வாங்கி அடிச்சிருக்கலாமே?’ என்ற துக்கம் வேறு தவசியின் தொண்டையை அடைத்தது. பொன்னப்பன் தோப்புக்குள் புகுந்து பச்சைமட்டை வெட்டிக் கொண்டிருந்தபோது காவல்காரன் வெள்ளி கேட்டான்,
”என்னடே பொன்னப்பா ? இன்னேரத்துல வந்து பச்ச மட்ட வெட்டிக்கிட்டு நிக்கிய ? ஊருக்குள்ள யாராது தாந்துட்டாவியளா?”
”எங்கய்யந்தாம்ணே !”
”என்னடே சொல்லுக ? நாலாமத்தநாளுக்க மின்னுக்க கூட தெங்கு ஏறியதுக்கு வந்த மனியன போக்குன்னி செல்லுத ? சாவிய பிராயம் ஒண்ணுங் கெடையாதுல்லா ? நல்ல ஒத்தப்பன கணக்கா இருந்தாரடே ? எப்புடி ?”
”இல்ல வெள்ளியண்ணே ! மிந்தா நாளு செவுரு முட்டிய போட்டுகிட்டு வந்து தட்டுக்காத்த ஏறுனாரு ! கீழ எறங்கம்ப ஏணி தவறிட்டு ! பதினோரு அடி பொக்கத்துல இருந்து பொடதியடியா மலந்தா ஜீவிக்கியதுக்கா ?”
”எத்தன மணிக்கி அடக்கம் மக்கா ?”
”சீவம் போனப் பொறவுதாஞ் சொல்ல முடியிம் ?”
”எலே என்னத்தடே சொல்லுதா ? இன்னுஞ் சாவவேல்லியா ?”
”ஆமண்ணே வதச்சிக்கிட்டு கெடக்கியாரு !”
”எப்போ ! ஒரு மனுசனுக்க ஆத்துமா கூட்ட வுட்டுப் போறதுக்கு மின்னால பச்ச மட்ட வெட்டுதீயளே ? இது செரி கெடையாது கேட்டியா ?”
”ஊரு சொல்லியாச்சிணே ! காலம்பற கெடந்து ஓட முடியாதுல்லா ? அதான் எல்லா ஏற்பாட்டயிம் ராத்திரியோட செஞ்சிரலாம்ன்னி !”
”என்னவோ போடே ! சரி காலத்த வாரேன் ! அன்னா அந்த மரத்துல பாரு அதுல மூணண்ணத்த வெட்டி எறக்கிரு! நல்ல மட்ட பாத்துக்கா !”
”சரிண்ணே !” என்று சொல்லியவாறே மட்டையை இழுத்துக் கொண்டே வீட்டுக்குப் பக்கத்தில் வரவே சொத்து வஸ்துக்களை பட்டியல் போடச் சொன்ன ஆறாவது மகள் கனகவதி வந்து,
“ஏ தம்பி பொன்னப்பா ! நீ பாத்துக்கிடுவான்னிதானே எங்கப்பன வுட்டுக்கிட்டுப் போனே ? எங்கூட அனுப்பிருந்தா முட்டைய பொத்துக்கது மாதி பொத்திப் பொதிஞ்சி பாத்துருப்பனே ? இப்புடி பொட்டலங் கெட்டி வச்சிருக்கியளே எங்கய்யன ! ஏ ராசா !”
என்று ஊளையிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தவளைக் கண்டு தவசி பொன்னப்பனிடம் சொன்னான்,
”மத்தவ வைக்கியது முச்சூடும் மாய்மாலங் கேட்டியா மாப்ளே ! எங்கிட்ட போனுல இந்தக்கூதர என்ன கேட்டான்னி தெரியிமா ஒனக்கு ? கொப்பஞ் சாவியதுக்கு மின்ன பாத்தியதைய பங்கு வச்சிருங்கடோன்னு… இப்ப என்ன சொல்லிக்கிட்டு போறான்னி பாத்தியா ?”
பொன்னப்பன் வீட்டு முன் பச்சை தென்னை ஓலைகளைப் பாவத் தொடங்கினான். வீட்டினுள் சிவகாமி மகளிடம் கதறிக் கொண்டே சொன்னாள்,
”இஞ்ச பாருட்டி கொப்பங் கெடக்க கெடைய ? மல்லியப்பூ மாதிரி மலந்து கெடக்க ஒங்கய்யன கண்டேளாம்மோ ஏ அம்மோ ?”
கனகவதி கனைத்தாள், “ஊருல உள்ள ஓம்பரங்க எல்லா நத்தகொத்தியா லாத்திக்கிட்டு கெடக்க, இப்புடி ஒத்தசெத்தயா போக ஒனக்கு எப்புடியப்போ மனசு வந்து… எங்களையு கூட விளிச்சிருந்தா வந்துருப்போம்லியா ? இப்புடி அம்மய அனங்காய வுட்டுட்டுப் போய்ட்டியே ?”
“ஒங்கொய்யன் கூடவே ஒங்கம்மயயும், இந்த லெவுண்டியையும் பாடையில ஏத்தி தூக்கிருவம்ல மாப்ளேய் ! செத்த கூய்வுள்ளயளுக்கு ஒப்பாரி ஒண்ணுதாங் கொரச்சல் !”
என்று தவசி சொல்லி முடிக்கவும் பக்கத்திலிருந்த கிழவி ஒருத்தி ஒப்பாரியை ஏறெடுத்தாள்.
“காடு மல தாவி வந்த கடுவாகெணக்க காலம் பூரா வாழ்ந்தியய்யா !”
என்று ஆரம்பிக்க தவசி அவளிடம்,
“கூட கொஞ்ச காலம் ஜீவிக்கனுமா ஒனக்கு ? இல்ல இவனுக்க கூடவே போறியா ? காதுக்கிட்ட கெடந்து ஊளக்கு…ண வச்சிய ? ஒன்னிய விட பத்து வயிசு எளப்பம் கெழவனுக்கு ! சாவக்கெடக்காம் பாத்தியா ? நீ இந்த நிமுத்தி வச்ச வாரியலு கணக்க தலைய பரத்திக்கிட்டு திரிய இல்லியா பாண்டக் கூயா ? எந்திச்சி போ அந்தால செவமே !”
”எய்யா ஊருல ஆளுக செத்தாவியன்னா ஒப்பாரி பாடணும்லா ! அதுக்கு நீ யாம்லே நீட்டுக நீளத்துக்கு ?”
“நீ ஒரு மயிரும் பாடி நாட்டாண்டாம் ! ஊளமூக்கி ! ஒனக்கு அப்புடியே ஏதாச்சிம் செய்யணும்னு நெனச்சா செல்லய்யம் மாமனுக்க மூஞ்சிய கிட்டக்கப் போயி எட்டிப் பாரு ! நோவாம ஒரே ஷாக்குல போயிருவான் !”
கிழவி கடுப்பில், “நாம்போறேன் ! இனி இந்த நடையச் சவூட்ட மாட்டேம்ல!”
”பாத்துப்போ ! ஆட்டுத்தோலுன்னு நெனச்சி நரி தூக்கிட்டு போயிறாம ! நடையச் சவுட்ட மாட்டாளாமே ? ஊர்ப்பட்ட செங்கல் லாரி எல்லாம் ரோட்டுல போகு ! ஒரு டிரைவர் பெயலுக்கும் ஒன்னய கண்ணுக்குத் தெரிய மாட்டங்கே! காடு மல தாண்டி வந்த கடுவாவாமே ? செல்லையனே கடுகு மாதிரி சிறுத்து வெறச்சிக் கெடக்கான் ! இனி இந்த பக்கத்துல ஒன்னயப் பாக்கப் புடாது ஆமா !”
கிழவி இருட்டுக்குள் நடந்து மறைந்தாள். சற்றைக்கெல்லாம் மற்ற மகள்கலெல்லாம் வந்து அழுது ஊரைக் கூட்டினார்கள். ஒப்பாரிப் பாடல்கள் காற்றில் கரைந்தன. சிவகாமி சரணத்தைத் தொடங்க மற்றவர்கள் பல்லவியையும், அனுபல்லவியையும் சாணத்தில் கரைத்தார்கள்.
”சுயிந்திரத்து தேரு மறைவுல மூத்தோடியான் முங்கக்கண்டு மூக்கச் சிந்தி நின்னவள…
ஏ அப்பா !
ரெக்க கெட்டி பறந்து வந்து ரெண்டாமதா கூட்டியாந்தானே ?
ஏ அப்பனோவ்…
ஒரு வார்த்தையா? ரெண்டு வார்த்தையா? ஓராயிரத்த ஒய்த்துவியே ?
தவப்பனே……
ஒண்ணுமண்ணா கெடந்தாப்புல போவும்பயும் ஒங்கூட கொண்டுட்டு போவேன்னு பாத்தா…. ?
எய்யோ !
ஓதவாக்கர பெயல மாதிரி ஒருக்களிச்சி கெடக்கியேய்யா !
போவாதப்பா !
ஏழண்ணம் பெத்தனே ஏன் ராசா !
எந்திரிய்யா !
எட்டாமத்தயா ஏறியதுக்கு நின்னியே ?”
ஒப்பாரி நிறுத்தப் பட்டு சற்று நேரம் அமைதி… வெளியில் தவசி பொன்னப்பனிடம் சொன்னான்,
“கொம்மைக்க வளம மயித்தக் கேட்டில்லா ? கொப்பன் எட்டாவது தடவையா கொண்டி போட்டானாம் ! சாவக் கெடக்கவனும் லேசுப்பட்டவங் கெடையாது கேட்டியா ?”
பொன்னப்பன் அமைதிகாத்தான். தவசி எழுந்து வீட்டினுள் போய்,
“ஒப்பாரி நக்குனது போறும் ! பாலு ஊத்துகவுக ஊத்துங்க ! பாட்டு மயிரு பாடியாளுவ ! எட்டாவதா ஏறக் கூப்டான் ! ஒம்பதாவதா ஒலக்கய சாப்புட்டானாம்னு !”
வெளியில் ஆட்கள் ஆங்காங்கே கூடியிருந்தார்கள். பல்வேறு கதைகள் ஓடிக்கொண்டிருந்தன. அதில் அச்சிலேற்ற முடியாத கதைகளும் அடங்கும். வீட்டுத் திண்ணைகள் முழுவதும் செல்லையனின் பாடுகளும் சிவகாமி என்ற சிலுவையை அவர் சுமந்த கதைகளுமாய் ஒவ்வொரு நொடியும் செல்லையன் அந்தக் கதைகளில் செத்து செத்துப் பிழைத்தார். வீட்டினுள்ளே செல்லையனுக்குப் பாலூற்றுவதில் ஒரு பெரும் பெகளமே நிகழ்ந்தது. பால் ஊற்ற ஊற்ற செல்லையனின் வாய் ஒரு செயற்கை நீரூற்றாய் மாறி பாலைக் காறித் துப்பியது.
வாழ்க்கை முழுமைக்கும் பாலை மட்டுமே தேடி அதை மட்டுமே ஆதாரப்புள்ளியாய்க் கொண்டு நடந்த செல்லையன் இப்போது பாலை விரும்பவில்லை. செல்லையன் ஒரு பசும்பால் பிரியர். காமத்துப்பாலையும் கூட சேர்த்துக் கொண்டாலும் தப்பில்லை.
இறுதியாக மூத்த மகன் இசக்கியப்பன் குடும்பத்தோடு வந்து சேர்ந்தான். கூடவே வேலாயுதம் டாக்டரும் வந்தார்.
“என்னடே பெயலுவளா பாடி கெடக்கா எப்புடி ? வீட்டுக்குப் போற வழி அதான் எட்டிப் பாத்துட்டுப் போயிரலாம்னு வந்தேன் !”
”தொண்டக்குழியில சீவம் துடிச்சிட்டு கெடக்கு சார் !” என்றான் பொன்னப்பன். இருங்க நாம் போயி பாத்துக்கிட்டு வாரேன் ! என்றவாறே உள்ளே போனார். உள்ளே குத்த வைத்து அமர்ந்திருந்த கூட்டத்தில்,
“எல்லாரும் எந்திச்சி வெளிய போங்க ! பல்ஸ் பாக்கட்டு !” என்றவுடன் சிவகாமி டாக்டரிடம்,
”சாவக்கெடக்கிய மனுசனுக்க பல்ல எதுக்குய்யா பாக்கிதிய ?”
”எம்மா கொஞ்சம் எந்திச்சி வெளிய நிக்கிதியா ?” என்றார் வேலாயுதம். சிவகாமி எழுந்து வெளிநடைக்கு வந்து பொன்னப்பனிடம்,
”எலேய் ! அதா உங்கொய்யன் பொழைக்க மாட்டாம்னி சொல்லிட்டு போயாச்சில்லா ! பின்ன எவம்புல இந்த கம்பவிஞ்சவன விளிச்சது ?”
”சத்தம் போடாதம்மோ ! கேட்டுறப்போகு!”
”கேட்டா நொட்டிருவானோ ? எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு ! ரொம்ப நேரமாட்டே பல்சு பல்சுங்கியாம் ! கொய்யனுக்க பல்செட்ட களவெடுக்க ஐடியா வக்கியாம்ன்னி நெனக்கியேன் ! பணம் அஞ்சாயிரமாக்கும் !”
என்று சொல்லி முடிப்பதற்குள் டாக்டர் வெளியில் வந்து , “ஏதாச்சும் இன்டேக் எடுத்தாரா ?”
”டெக்கு டீவியெல்லா எடுத்து படங்காட்டியதுக்கு சக்கரம் வேண்டாமாய்யா ! ஒங்களுக்கென்ன கை பூத்த சக்கரம் ! நீங்க படம் போடுவிய ? நமக்கெல்லா ருசுப்படாது !”
என்று சிவகாமி சொல்ல டாக்டர் தளர்ந்து போய் அவளிடம்,
”எம்மா ! பெரியவரு ஏதாவது ஆகாரம் சாப்டாரான்னு கேட்டம்மா!”
என்று சொல்லி அதற்கு சிவகாமி பதில் சொல்வதற்குள் பொன்னப்பன் தலையிட்டு டாக்டரை மனப்பிறழ்வுக்கு ஆளாவதிலிருந்து காப்பாற்றி அவரை பத்திரமாக அனுப்பி வைத்தான். அப்போதெல்லாம் சாவு வீட்டில் யாரும் தூங்காமலிருக்க வாடகைக்கு டீவியும், டெக் எனப்படும் வீ.சி.ஆரும் எடுத்து படங்களைப் போட்டுப் பார்ப்பது வழக்கம். இசக்கியப்பன் உள்ளே போய்ப் பார்த்துவிட்டு வெளியில் வந்து பொன்னப்பனிடம் சொன்னான்,
“இப்பந்தா வீட்டுல வேலைய முடிச்சி பாலக்காச்சி கடன அடைக்க ஆரம்பிச்சேன் ! அதுக்குள்ள சக்கரத்துக்கு வெடி வச்சிட்டானடே ஒங்கய்யன் !”
“அவனுக்கு அய்யம்னா ஒமக்கு செல்லய்யன் யாருவே? மச்சானா?”
லேசாக குடலுக்குள் சாராயத்தை தெளித்திருந்த தவசியின் நாவுகள் தாண்டவமாடின. அங்கே ஒரு சிறிய அளவிலான மற்போர் ஆயத்தப் பட்டது. ஆனால் அதற்குமாறாக இசக்கியப்பன் வெள்ளைக்கொடியை அசைத்தான்.
“செரிடே தவசி மாப்ளேய் ! கெளம்பம்போ ஊர்ல ஒரு மில்ட்டிரிகாரரு உண்டும் ! ஒனக்க அக்காளுக்க சொந்தக்காரரு பாத்துக்கா ! ஒரு ஒயிட் ரெம்மு குப்பி தந்தாரு ! செரி நீயு இங்கன கெடக்கல்லா ? சேந்து சாத்தலாம்ன்னி கொண்டாந்தேன் ! வா கொளத்தாங்கரையில போயி குப்பிய பொட்டுவோம் !”
இதைக் கேட்ட தவசி உற்சாகத்தில்,
“எலே கோனைசு பொன்னப்பா ! உள்ளாற போயி எள்ளோல ஊறுகாயிம் ஒரு செம்புல வெள்ளமும் கொண்டா ! மாமன கொண்டாடி அனுப்பி வைப்போம் ! மூத்தவஞ் சொல்லுகாம்லா ? சமஞ்ச புள்ள மாதி நிக்கிய ?”
என்று பொன்னப்பனைத் தடவ பொன்னப்பன் தலையிலடித்து கொண்டான். மூவரும் தாம்புக்குளத்தின் கரையில் ஒயிட்ரம்மோடு கரைந்தார்கள். பொன்னப்பனுக்கு அழுகை தாங்காமல் இசக்கியப்பனிடம்,
“நம்ம அய்யன மாதி இந்த ஊர்ல எவனுங் கெடையாது கேட்டியாணே ?”
“உண்மதாம் மாப்ள ! செவம் ஒங்கொய்யன ஒரு அலவலாதி நாயி இந்த ஊருல மட்டுமில்ல… இந்த லோகத்துலயே கெடையாது பாத்துக்கிடுங்க ! சாவுக காலத்துலயுங்கூட அவன் எவனையும் நிம்மதியா இருக்க வுடலை! செல்லையம்னு பேரு வச்சதுக்கு பதிலா தொல்லையம்னு வச்சிருக்கலாம் !” என்றான் தவசி.
“நா அந்த அர்த்தத்துல சொல்லல ! எங்கய்யன மாதிரி ஒரு நல்ல மனுசன் இந்த ஊருக்காத்த எவனுமில்லைன்னி சொன்னேய்ன் !”
“அது நூத்துக்கு நூத்தி ஒம்போது பிரெசென்று நியாயம் மச்சினேன் ! மாமன மாதிரி ஒரு நியாயஸ்தன் ஒருத்தன எனக்குக் காட்டுடே பாப்பம் ! எனக்க மாமன மாதி இஞ்ச எந்த நாயி இருக்கு ? எல்லாம் செத்த செவங்கள் ! கூதரத்தனங்கள் காட்டுவாம்தான் ! ஆனாலும் செல்லய்யம் மாமனால மத்தவியளுக்கு சல்லியங் கெடையாதுல்லா?” என்றான் தவசி.
“ஆனா இந்த அம்ம சிவகாமி இருக்கால்லா ?”
“அவ தெய்வம்லா மாப்ள ? நாங்கூட அவள செலப்பம் அத்தைய்ன்னு சென்னாலுங் கூட அவளும் எனக்க அம்ம மாதிரிதாம் பாத்துக்கா !” என்று கண்ணீரோடு சொன்னான்.
அதற்கு பொன்னப்பன், “நா அந்த அர்த்தத்துல சொல்லல தவசி மச்சாய்ன் ! எங்கம்ம சீவனோட இருக்க நாள்ள எங்கூட்டு பல்லி கூட முட்டையிடாது ! அப்டி ஒரு பூசி வெளக்காத்த வெங்கலச் சட்டுவம் ! ”
“நா மொத அதத்தாஞ் சொல்லணும்ன்னி நெனச்சேன் ! ஒங்கம்ம இருக்கால்லா அவ ஒரு தரித்திரம் புடிச்ச சூவையாக்கும் ! இங்க கெட்டுப்பூட்டு வந்த நாள்ள இருந்து அவ எங்க மாமனுக்கு பொடதியில ஏறுன ஐய்யா ! இன்னா வரைக்கும் எறங்கேயில! அவள நா அத்தையின்னு சும்மாதாம்… உப்புக்குச் சப்பாணியா கூப்புடுவேன் ! அவ இருக்கிய நாளைக்கி புத்துலதாம் புல்லு மொளைக்கும் ! செவம் சாவ நாளத்துத் திரியி !”
என்றான் தவசி. இசக்கியப்பன் அழுதான்,
“எவன் எவனுக்கெல்லாமோ ஒரு சாக்காலம் வருகு ! இந்த மொன்னத் தாய்ளிக்கி ஒரு சாவு வரல்லியே ? என்று தவசியைக் கைகாட்ட பொன்னப்பன் அதிர்ச்சியடைந்தான். தவசிக்கும் அதிர்ச்சி,
”என்னண்ணே சொல்லுத ? மச்சான் என்ன செஞ்சாருன்னு சாவச் சொல்லுக ?”
”பொன்னப்பா ! நீ தண்ணியப் போட்டுகிட்டு அழுத ! நம்ம அய்யஞ் சாவக் கெடக்காரு ! அதுல ஒரு நியாயமிருக்கு !”
”ம் செரி ?”
”நானுந் தண்ணியப் போட்டுகிட்டு அழுதென் ! நம்ம அய்யஞ் சாவகெடக்காம் ! இதுலயிம் ஒரு நியாயம் இருக்கத்தாஞ் செய்யி !”
”அப்புறமெதுக்கு தவுசி மச்சான ஏசுக ? அவுனுந் தண்ணியப் போட்டுருக்காம் ! அழுகான் ! நம்ம அய்யன் அவனுக்கும் மாமந்தானே ? அவனுக்கு வேதன இருக்காதா ?”
”அந்தக் குண்…யத்தா நானுஞ் சொல்லுகேன் ! நம்ம ரெண்டுவேருங் குடிச்சது ஒயிட் ரெம்மு ! ஒனக்க மச்சாங் குருட்டுக் குண்… யாங்கன் குடிச்சது நம்ம மிக்சு பண்ண கொண்டாந்தம்லா பச்சத் தண்ணி மயித்தத்தான் ஊத்தி ஊத்திக் குடுத்தேன் ! அதக் குடிச்சீட்டு அலம்பிட்டு நிக்கியான் ! இதுக்கா இத்தன பேச்சி பேசுகு ? எவே எவனுக்கெல்லாமோ ஒரு போக்கடி வருகு ! இந்த நாயிக்கி வரேல்லியே ?”
தவசி துக்கத்தில் ஆழ்ந்தான், “ரெண்டுந் தண்ணி மாதிரி இருந்தா நா என்னவே செய்யதுக்கு ?”
”அதுக்குன்னு பச்சத் தண்ணிய குடிச்சிக்கிட்டு எனக்க அம்மையையும் அய்யனையும் வச்சி தரைல போட்டுத் தேய்ச்சல்லா ? கொள்ளாம் !”
என்று இசக்கியப்பன் சொல்லவும் தவசிக்குக் கோபம் வந்துவிட்டது.
”ஒனக்கு சமயங் கொள்ளாங் கேட்டியா ? இருவது பர்லாங்குக்கு அங்கன கெடந்துகிட்டு இங்கன வந்து எட்டிப் பாக்கியதுக்கு ஒனக்கு கொள்ளையெடுக்கும் ! கூடவே இருந்து கொம்மையுங் கொய்யனுக்கும் பாடு சூடு பாக்கியது நானாங்கும் ! ஒங்கய்யனும் கொம்மயும் கெடந்த கெடைக்கும், நடந்த நடைக்கும் நானாயிருக்கப் போயி இந்த வூட்டு வாசல சவுட்டுகேன் ! வேற ஒருத்தனாயிருந்தா நாயேன்னு போயிருப்பாம் பாத்துக்கா யேக்கியப்பா ! நீ கெடந்து விக்காத… வெலையில்லாம ! பேசுகாம் பேச்சு !”
”சரி வுடும் மச்சா ! பைய வூட்டுக்கிட்ட போவோம் ! சின்னதுகள் சாப்டாவியளா இல்லியான்னி தெரியலைல்லா ?” என்று பொன்னப்பன் சொல்ல, குப்பி காலியானதும் மூன்று ஜோடி பிருஷ்டங்கள் இடம்பெயர்ந்து வீடு வந்து சேர்ந்தன. வீட்டின் வெளியில் இரண்டு டியூப் லைட்டுகள் வெளிச்சத்துக்காகக் கட்டப்பட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் ஜமுக்காளம் விரித்து படுத்திருந்தார்கள். கொசு கடிக்காமலிருக்க தேங்காய்ச் சவுரி கொண்டு புகைமூட்டம் போட்டு சிலர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
செல்லய்யன் வீட்டு அடுக்களையில் அக்கா தங்கைகள் உட்கார்ந்து பழைய காரியங்கள் குறித்துப் பேசிக் கொண்டு கஞ்சி குடித்துக் கொண்டிருந்தார்கள். தவசி அவர்களிடம் போய்க் கேட்டான்,
“என்னம்மாளு ! மக்கமாரு சந்திப்பா ? ஒங்கொங்க மாப்ளமாருவளுக்க வூட்டுல இருந்து வரம்ப கும்பிய காய வச்சிக்கிட்டுத்தா வந்தியளாக்கும் ? ஒவ்வொருத்திக்க கொடவண்டியும் கொட்டாரம் வரைக்கும் இருக்கு ? புள்ள கிள்ள உண்டாயிரிக்கிதியளா என்ன ? கொப்பன் முன் ரூம்புல போட்டா வரட்டான்னு கெடக்கியான் ! ஒங்களுக்கு இஞ்ச கள்ளத் தனமா கஞ்சிக்குடி இல்லியா ?”
”எலேய் ஒனக்கு வேணும்னா கேளாம்டே! இருக்கியது மாதிரி செத்தோல கஞ்சி தாரேய்ன் ! கொதி வைக்காத கேட்டியா ! காலைல பட்டினிக் கஞ்சி குடிக்க முடியாம ஆக்கிறாத செவமே !”
”செவத்த எனக்கும் எள்ளோல கஞ்சி தாங்கம்மாளு ! வயிறு பசிச்சிக்கிட்டே கெடக்கு ! காலத்தயிருந்து ஒபாசம் இருக்கேம் !”
”அப்டிக்கேளாம்ல! ஒங்கய்யன் விசுவாசம் இன்னுஞ் சாவல்ல கேட்டியா ? ஒனக்க உருவத்துல இன்னுஞ் சுத்திட்டுத்தான் நடக்கான் ! அவனும் வாயத் தொறந்து சோறு தான்னு கேக்க மாட்டாம் ! பெரிய மைனர்மாறு ! தெருத்தூத்தி பெயக்க !”
என்றவாறே பாக்கியசீலி கஞ்சியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்க தவசி குடிக்கத் துவங்கினான். செல்லய்யனின் மருமகன்மார்களும், பேரன் பேத்திகளும் வீட்டு முற்றத்தில் தரையில் வைக்கோல் பரப்பி அதன்மேல் சாக்குகளை விரித்து நித்திரையில் ஆழ்ந்திருந்தார்கள். அதுவொரு மார்கழி மாதமானதால் குளிர் ஊசி போல் துளைத்தது. பொன்னப்பனிடம் இசக்கியப்பன் கேட்டான்,
”தவசித் தா…ளிய எங்கடே காணல?”
”இங்கன எங்கயாது நிப்பாம்ணே !”
”அவனக் கூப்புடு !”
பொன்னப்பன் எழுந்து, “வோ மச்சாய்ன் ! ஓய் தவசி மச்சாய்ன் !” என்று கூப்பிடவே தவசி குரல் கொடுத்தான்,
“இருலே மாப்ள வாரைன் ! ரெண்டு புடி கஞ்சி குடிக்கப் பொறுக்க மாட்டானுவளே!”
என்று அவசர அவசரமாக வாய்க்குள் போட்டுவிட்டு எழுந்து புழக்கடைக்குப் போனான். சிவகாமி செல்லய்யனின் அருகே ரெண்டு காலையும் நீட்டமாக நீட்டி அமர்ந்திருந்தாள். பக்கத்தில் கொஞ்சம் கிழடுகள் கள்ள முழிப்பு வைத்து திருட்டுத் தனமாக அமர்ந்து உறங்கிக் கிடந்ததுகள். சிவகாமியும் செல்லைய்யனின் கட்டிலில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அந்த இரவானது செல்லய்யனின் வாழ்க்கை போலவே மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
நள்ளிரவிலும் சொந்தக்காரர்கள் வந்து கொண்டுதானிருந்தார்கள். அவர்களுக்கான செய்தியாக “செல்லய்யன் செத்துப்போனார் : காலையில் அடக்கம்” என்பதுதான் சொல்லப்பட்டிருந்தது.
“எய்யா ! இந்த செல்லய்யன் மச்சினே இருக்கியாம்லா ! அவேன் ரெம்பத் தங்கமான மனுசனாக்கும் ! இப்புடி பிராயத்துல செத்துப் போயிட்டானே ?”
என்று அங்கமுத்து அங்கலாய்க்க தவசிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
”வேய் பெரியப்போய் ! ஒனக்கு பிராயம் எவ்வள ஆவுகு?”
”ஒரு தொண்ணத்திரெண்டு இருக்கும் மக்கா !”
”ஒன்னய வுட பன்னெண்டு வயிசு எளப்பம் செல்லய்யனுக்கு ? ஒனக்கு அவனக் கண்டா பிராயம் மாதிரிதான் தெரியும் !”
”இருந்தாலும் சாவிய வயிசாப்போ ?”
”பின்ன ஒரு மனியன் எப்ப சாவனும்ன்னி நீ சொல்லுக ? நீ மூத்து முதுகொடிஞ்சி லாந்துகது காணாது இல்லியா ? இவ்வளவு பேசுகியே நா யாருன்னி சொல்லு பாப்பம் !”
”அது… அதுவந்து கண்ணு பத்த மாட்டேங்கு பாத்துக்கா ?”
”இரு கிட்ட வாரேன் ! இப்ப சொல்லு !”
என்று அங்கமுத்துவின் அருகில் வந்தான் தவசி. அங்கமுத்து கூர்ந்து பார்த்துவிட்டு சொன்னார்,
“நீ இந்த பஞ்சி முட்டாயிகாரங்கூட போயி பஞ்சடஞ்சி பஞ்சராயி வந்தால்லா பகவதி ? அவளுக்க மொவந்தானடே ?”
”பாத்தியா ? சொல்லுகதுக்கு ஆயரங் கதையளு இருக்கு… இவேன் எதச் சொல்லி லேவ சொல்லுகாம் பாத்தேளாய்யா ?”
”எப்போ சாவு வூட்டுல வச்சி வேற காரியங்கள பேச வச்சிராதடே !” என்ற கிழவனிடம் தவசி,
“நீ வேற காரியங்கள பேசு! பேசிப்பாரு ? எனக்க மாமன்கூட ஒன்னிய தொணைக்கி அனுப்பி வைக்கியோம் ! என்று சொல்லிவிட்டு பொன்னப்பனிடம் திரும்பி,
“லேய் மாப்ள ! கூட ஒரு பெட்டி செய்யச் சொல்லி கோட்டாரத்துக்கு சொல்லிரு ! அங்கமுத்து வெடி தீந்துட்டாம்ன்னு ஆளு சொல்லி அனுப்பச் சொல்லு ! தொட்டிக் கூய்மோனுக்கு எடுப்பப் பாக்கலியா ?”
பொன்னப்பனும், இசக்கியப்பனும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
“எலேய் பெத்த தவப்பன் செத்துக் கெடக்கான் ! நீங்க கெடந்து கொணகொணன்னி பல்லுவளக் காட்டிக்கிட்டு கெடக்கிதியளே ? சும்மா இரிங்களாம்ல?” என்றாள் துஷ்டிக்கு வந்து பக்கத்து வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த தாயம்ம கிழவி. மணி அதிகாலை மூன்று அடித்தது. பொன்னப்பனும், இசக்கியப்பனும் படுத்துறங்கினார்கள்.
தவசிக்கு உறக்கம் வரவில்லை. மடியில் இருந்த ஒரு குப்பி மாம்பட்டையை மெதுவாக எடுத்துக் கொண்டு அடுக்களைக்குள் போனான். அங்கும் இரண்டு பேர் படுத்துக் கிடந்தார்கள். இரண்டு பச்சை மிளகாய்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து அந்த மாம்பட்டை என்னும் மதுரத்தை விழுங்கி விட்டு ரெண்டு முறை தூ தூ’வென துப்பிக் கொண்டே மிளகாயைக் கடித்தபடியே வெளியில் வந்து ஒரு திண்ணையில் அமர்ந்து பீடி ஒன்றையெடுத்துப் பற்ற வைத்தான்.
ஊரே மயான அமைதியில் உறங்கிக் கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு நாய் ஊளையிடும் சப்தமும், கோழி ஒன்று கத்தும் சப்தமும் ஒருசேரக் கேட்டதில் தவசி சொன்னான்,
“கார்த்திக முடிஞ்சி மார்கழியானாலும் இந்த நாயிக கோழியையும் வுட மாட்டங்கே ! இனிமே முட்ட திங்கம்போ சூதானமாத் திங்கணும் !”
தாயம்ம கிழவி புரண்டு படுத்தாள்.
”என்ன தாயம்மத்தே ! ஒறக்கம் வர மாட்டேன்னி சொல்லுகா?”
”கொசுக்கடிக்கில்லா மக்கா ! போதாக்கொறைக்கி இந்த நாயி வேற கால்மாட்டுல கெடந்து உபத்திரவப் படுத்துகு !”
தாயம்ம கிழவியின் கால்மாட்டில் கிடந்தது நாயல்ல ! அவளின் கணவன் சுப்பாண்டிக் கிழவன்.
”காலம்போன காலத்துல மாணியக் கெட்டிப் போடாம கெழவிக்க காலச் சொறிஞ்சிக்கிட்டு கெடக்கயில்லியா நாய ?”
என்ற தவசியிடம் சுப்பாண்டி, “எடே தவுசி ! மாமனயா நாயிங்கா ?”
“ஒன்னைய நாயின்னி சொல்லுவனா மாமா ? நீ கோழில்லா ? பிஞ்சி போன நார்ப்பெட்டியவே வுட மாட்ட ? அந்து கீழ விழுந்துரும் பாத்துக்கா! அவ்ளதாஞ் சொல்ல முடியும் !”
“குளுருகுல்லா மக்கா ?”
“குளுருகுன்னா காலுக்கெடையில கையக் குடுத்துட்டுப் படு ! கெழவிக்க காலுக்கெடையில மொணைய ? அதுந் துட்டி வூட்டுக்கு வந்த எடத்துல ? அப்பொரஞ் செல்லையங் கெழவன் எந்திரிச்சி வந்துருவாம் பாத்துக்கா? அவனுங் கொறஞ்ச ஆளு ஒண்ணுங் கெடையாது !”
என்று தவசி செல்லையனின் பேரைச் சொல்ல தாயம்மா கிழவியின் முகத்தில் அத்தனைப் பூரிப்பு.
“மேப்புடியா சிரிச்சிருப்பாளே ?”
என்று கேட்டான் சுப்பாண்டிக் கிழவன். தவசிக்கு ஆச்சரியம்,
“நீரு எப்புடிவே கண்டு புடிச்சீரு ?”
“கையுங் களவுமாவே புடிச்சிருக்கேன் ! இதென்ன பெரிய காரியோம் ?”
தவசிக்கு மீண்டும் ஆச்சரியம்,
“இந்தத் தா…ளிமொவேன் செல்லயன் ஒருத்தியயும் வுட்டு வைக்கலியே ?”
என்று திகைக்க இன்னும் திகைக்க வைக்கும் வகையில் ஒரு கருத்த உருவம் இருட்டுக்குள் தோளில் மண்வெட்டியுடன் நடந்து போனது.
“எம்மா… ஓய் சுப்பாண்டி மாமா ! அங்க பாரும்வோய் ! செல்லய்யன மாதிரி ஒருத்தம் போறாம் ! சாவுகதுக்க மின்னயே பேயா வந்துட்டானே செவத்து முடிவான் !”
கிழவன் எழுந்து பார்த்து மிரண்டு போகவே தவசி எழுந்து வீட்டுக்குள் ஓட அங்கே செல்லையன் படுத்திருந்த படுக்கையில் காலியான மூன்று மாம்பாட்டைக் குப்பிகள் கிடந்தன. கூடவே சிவகாமிக் கிழவியும் இன்னும் செல்லையனுக்கு முறைபெண்டீர்களான இரண்டு கிழவிகளும் விசும்பிக் கொண்டிருந்தார்கள்.
தவசி என்னவென்று விசாரிக்க, “எய்யா ! இருட்டுக்குள்ள வச்சி சீரழிச்சிப்புட்டானே பாவி ?” என்று அழுதார்கள். மீண்டும் தவசி கேட்டான்,
”எத்தே ! என்ன நடந்துன்னி சொல்லு ! ஓலம் வைக்காத !”
”ஓம்மாமன் திடீர்ன்னு எந்திரிச்சி நட்டங்குத்தர நின்னு செவுரு முட்டிய எங்களான்னு கேட்டு என்னைய வெதுப்பிப் புட்டாம் மக்கா !”
”ஒன்னைய வெதுப்புனாஞ் சரி ! இவுளுவ யாங் கெடந்து புழிஞ்சி ஊத்துகாளுவா?”
”இருட்டுக்குள்ள அவளுவள வெரசிப் புட்டாம் மக்கா ஒம்மாமேஞ் சீமையக் கெடந்தவன் !”
”ஒன்னய அடிச்சானா அத்த ?”
”என்னைய செவுட்டுல மாத்தரம் அடிச்சிட்டு வுட்டுட்டாம்டே !”
”அது எப்புடி ?”
”ஒனக்க மாமங்காரனுக்கு வெளிச்சத்துலயே வெள்ளி தெரியாது ! இருட்டுக்குள்ள இரும்பத் தெரியுமா ? என்னயவெல்லா அவனுக்கு கண்ணு தெரியாதுல்லாடே ?”
”காலைல என்னவோ டாக்டருகிட்ட பேயம்பழம் வித்த ? நடுராத்திரில எழுப்புவாம்ன்னி ?”
”அது ராத்திரில குடிக்க வெள்ளங்கேட்டு எழுப்புவாம்ன்னு மனசிலாக்கிக்கிடணும் !”
“சவத்த ! பாலு ஊத்தி செத்துருவாம்னு கெடந்தவன் எந்திச்சி கெளவியளுக்கு பாலூத்திக்கிட்டு போயிருக்கானே செத்த முடிவான் ! சாவிய காலத்துல சாமானங் கெடந்து சாலு உழுதுருக்கு பாத்தேளா ? சை !”
தவசிக்கு சலிப்பு வந்தது. சாகக்கிடந்த தன்னுடைய தகப்பன் இருட்டுக்குள் நடந்து போவதையறிந்த பொன்னப்பன் எழுந்து ஓடிப்போய் செல்லைய்யனிடம் கேட்டான்,
”எப்போய் ! நீ இன்னுஞ் சாவல்லியா ?”
இதைக் கேட்ட செல்லய்யனுக்குக் கடும்கோபம் வந்து,
“எவம்புல செத்தாய்ன் தாயளிக்க மக்கமாருவளா? தட்டுல ஏறிக்கிட்டு திரும்பிப் பாத்தா ஏணியக் காணையில ? என்னையவால கெடப்பாட்டுல போட்டு வச்சிருக்கிய ? வெள்ளாவி வச்சிப்புடுவேம் பாத்துக்கிடுங்க ! தந்தயக் கொல்லியளு!
“எப்பா ! சொம்புக் கணக்குல பாலு குடிச்ச தெம்புல பேசுதியோ ?”
“பாலு பூளளெல்லாய்ன் ஒங்கள ஊத்தச் சென்னது ஆருடே ? அந்த மாம்பட்டக் குப்பியள ஒளிச்சி வச்சது மாத்தரம் யாருன்னி அறியட்டும் ! அன்னக்கி இருக்குட்டியளா ஒங்களுக்கு சாமக்கொட !”
என்று தன்னுடைய வீட்டைப்பார்த்து கோஷமிட்டவாறே நடந்து வயலுக்குப் போனார் செவுருமுட்டி செல்லையன் என்ற காம்ரேட்.
இவரது எழுத்துக்கே உண்டான எள்ளல் நடை…
மண்வாசனை வீசும் வட்டார வழக்கு…
இரும்பை விழுங்கிய மாதிரி இருப்பவரையும் விழுந்த விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை…
???
எப்பவும் போல சூப்பர்…
வாழ்த்துக்கள் தோழர் ?