கட்டுரைகள்
Trending

இசையைப் பக்கங்களுக்குள் அடைக்கலாமா? – ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத் தொகுப்பு நூல் விமர்சனம்

அபிநயா

இசை குறித்து ஷாஜியின் கட்டுரைகள் வலைதளம், இணையம், பிரபல பத்திரிக்கைகள் என்று நிறையவே காணக் கிடைக்கின்றன. எஸ்.ரா, ஜெயமோகன் என்று கொண்டாடப்படும் எழுத்தாளர்கள் அனைவருமே சிலாகித்திருப்பதுடன் மொழிபெயர்ப்பும்  செய்திருக்கின்றார்கள். இசைக் கட்டுரைகள் என்றாலே அப்படி என்னதான் இருக்கும் என்று புத்தகத்தை அலட்சியமாக வாங்குபவர்களுக்கு, ‘இந்தப் பாட்டில் அப்படி என்ன இருக்கப் போகிறது’ என்று கேட்கப் போய் அந்தப் பாடலுக்கு மயங்கி அதையே தொடர்ச்சியாகக் கேட்கும் நிலைமையே ஏற்படும். முதல் கட்டுரை ஷாஜிக்கான இசையின் அறிமுகக் கட்டுரையாக இல்லை. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இசை எப்படி அவர்களுக்கு அணுக்கமாக அறிமுகமானது என்பதைப் போகிற போக்கில் ஞாபகப்படுத்திச் சொல்லும் சிறுகதையாய் இருந்தது.

நமது அன்புக்குரிய பாடகரைப் பற்றியோ இசையமைப்பாளர் பற்றியோ அவர் கூடவே பயணித்தவராக, எந்த ஒரு ஒப்பனைப் பூச்சும் இல்லாமல் அவர்களது வாழ்க்கை, இசைப் பயணங்களை எழுத்தின் வழியே நமக்கு கதையாகச் சொல்ல, அதை வாசித்துக் கேட்பதில்தான் எத்தனை சிலிர்ப்பும் நெகிழ்ச்சியும். எழுநூற்று சொச்சம் பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தை ஒரே மூச்சில் எல்லாம் வாசித்து விட முடியாது. வேளைக்கு சாப்பாடு என்பதைப் போல நாளைக்கு ஒரு கட்டுரை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பாடல்களையெல்லாம் அதன் பாடல் வரிகளுடன் இரசித்துக் கேட்கவே ஒருநாள் ஆகும். திரும்பத் திரும்ப பாடல்களைக் கேட்க, அந்தக் கட்டுரையைத் திரும்ப வாசிக்க என்று லயித்துப்போனால் அந்த நேர அவதானிப்பு படிப்பவரைப் பொருத்து மாறுபடும்.

குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இசைப் பிரபலங்களின் வாழ்வியலும் அவர்கள் சந்தித்த சறுக்கல்களும், புகழின் உச்சமும் அவர்களது ரசிகர்களுக்கும் ஏதோ ஒரு நிலையில் பொருந்தித்தான் போகின்றது. இசை மேதைகளின் மேன்மையும் பலமும் மட்டுமே ஆர்ப்பாட்டமாக சுட்டிக்காட்டப்படவில்லை. அவர்கள் தவறவிட்ட சில நெறிகள் நமக்கும் பாடமாக அமைந்து விடுகின்றன. இத்தனை துன்பத்திலும் துயரத்திலும் இத்தனை ஆழமான இசையை உருவாக்கிய மேதைகளைப் பார்த்து ஸ்தம்பித்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இசைக்கான யதார்த்த நிகழ்ச்சிகளின் பின்னால் நிகழும் செயல்பாடுகளைத் தெரிந்து கொண்ட பொழுது, ‘இதையா நம்மைச் சுற்றி உள்ளவர்கள் மனம் ஒன்றி உணர்ச்சிகரமாய் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்’ என்ற வருத்தமே மிஞ்சியது. தமிழ்த்திரை இசை மட்டுமல்லாமல் கன்னட, தெலுங்கு, கேரள, வடநாட்டு இசைகளுடன், கசல், ஹிந்துஸ்தானி,இலங்கை பைலா , மேலைநாட்டு இசை என்று கட்டட்ற தன்மையுடன் இசையின் வகைமைப் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

இசை, தாளம், மெட்டு மட்டுமல்லாமல் அதையும் தாண்டி அந்தப் பாடலில் அதைப் பாடிய அல்லது இசையமைத்தவருக்குப் பொருந்திப் போகும் பாடல் வரிகள், கவிதைகள் அவர்களுக்காகவே எழுதப்பட்டது போன்ற பிரக்ஞையை ஏற்படுத்தும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒரு மோசமான பாடகரின் பாடலைக் கூட இனிமையான சங்கீதமாக்கும் ஆற்றல் பெற்றுள்ளது வரமா சாபமா என்ற முடிவுக்கு வர முடியவில்லை.

கட்டுரைகளில் நாம் வாசித்த இசை மேதைகள் குறைந்தபட்சம் ஒரு நாள் முழுவதுமாவது நம்முள் வியாபித்து இருப்பார்கள். பாடல்களாய் நினைவில் ஒலித்துக் கொண்டே இருப்பார்கள். கட்டுரைகளை வரிசைப்படிதான் வாசித்துச் செல்லவேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. முதலில் நமக்கு நெருக்கமானவர்களை மட்டும் வாசித்து விட்டு புத்தகத்தை மூடிவிடலாம் என்ற எண்ணத்தை ஷாஜியின் இசையாலான எழுத்துக்கள் மாற்றும். துளியும் பரிட்சயம் அல்லாத, நாம் தப்பித் தவறிக்கூட கேட்டேயிராத இசை மேதைகளின் பாடல்களுக்கான அறிமுகமாகவே இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடலாம்.

ஸ்வர்ணலதா, மலேசியா வாசுதேவன், யேசுதாஸ், ஜானகி, ஏ.ஆர்.ரஹ்மான், எம்.எஸ்.வி, டி.எம்.சௌந்தர்ராஜன், ஷ்ரேயா கோஷால், ஹரிஹரன், பி.பி.ஸ்ரீனிவாஸ், மின்மினி, மர்லின் மன்றோ, மைக்கேல் ஜாக்ஸன், டி.ஆர் மகாலிங்கம், பாப் மார்லி, ஏ.எம்.ராஜா போன்ற பல  நட்சத்திரங்களின் குறிப்பிடப்பட்ட பாடல்களைக் கேட்டு கட்டுரையை வாசிக்க, அளவில்லாத மகிழ்ச்சியை சுரந்து கொண்டிருக்கும் இசைத் தட்டுக்கள் போலவே அந்தக் கட்டுரைகளும் பரிணமித்திருக்கின்றன. இந்தப் புத்தகத்தை எப்பொழுதும் நம்முடனேயே வைத்துக்கொள்ளவே மனம் விரும்பும். பிரியமானவர்களுக்கு அதுவும் இசைப்பிரியர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கி அன்பளிப்பாய் கொடுக்கத் தோன்றும். இந்தப் புத்தகம் கொடுத்த அனைத்து ஆனந்தத்தையும், துள்ளலையும், அப்படியே அள்ளி எடுத்து அவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்ற பரவசம் மனதினுள் பரவும்.

கீதாதத், இசை ஞானிக்கு வழிகாட்டுதலாய் இருந்த சலீல் சௌத்ரி, சக்பெர்ரி, சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட இங்கல்பெர்ட் ஹம்பெர்டின்க், பார்வை சவால் கொண்ட ரவீந்திர ஜெயின், மெஹ்தி ஹசன், ஜெய்தேவ், ஜெக்ஜித் சிங், மார்வின் கயே, ஈடித் பியாஃப், மன்னா டே, ஜான் டென்வர்  போன்ற பல இசைமேதைகளுக்கான அறிமுகக் கட்டுரைகளாய் மட்டுமல்லாமல் அவர்களின் இசை வாழ்வு குறித்தான ஒட்டுமொத்த விவரக்குறிப்புகளாய் இருக்கிறது என்றே சொல்லலாம்.

அபிநயா ஶ்ரீகாந்த்
அபிநயா ஶ்ரீகாந்த்

சமயம் சார்ந்த புத்தகங்களை புரட்டி எதாவது ஒரு பக்கத்தை எடுத்து வாசித்தோமென்றால் நம் மனக்குழப்பத்திற்கான தீர்வு உண்டு என்ற நம்பிக்கை பல மதங்களில் உண்டு. அல்லது தினந்தோறும் தங்கள் சமய நூல்களை சில பக்கங்களாவது வாசிக்க வேண்டும் என்பது பலரின் பழக்கம். இசையையே மதமாகவும், மொழியாகவும் கொண்டிருப்பவர்கள் அவ்வப்போது இந்தப் புத்தகத்தை எடுத்து வாசிப்புதும், இந்தக் கட்டுரைகளில் வரும் பாடல்களை தங்கள் கணினியிலோ அலைபேசியிலோ ஒரு ப்ளே லிஸ்ட் பட்டியலாக்கி அடிக்கடி கேட்பதிலோ எந்த ஆச்சர்யமும் இல்லை.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. மனமார்ந்த நன்றிகள். திரு.ஷாஜி அவர்களின் பதிவேற்றம் என்னை பரவசப்படுத்திவிட்டன. இனி என்றென்றைக்கும் வாசகசாலையைப் பின் தொடரும் பலரில் நானும் ஒருவனாக இருப்பேன். நன்றிகள் தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button