பெருநகரைக் காண்பதற்கான முதல் படி: சோளம் என்கிற பேத்தி நாவலை முன்வைத்து – சுரேஷ் பிரதீப்
கட்டுரை | வாசகசாலை

இக்கட்டுரையை நுனிப்புல் தொடரின் பகுதியாக வைப்பதா வேண்டாமா என்ற குழப்பம் இருக்கிறது. எழுத்தாளர் கி.கண்ணன் தொன்னூறுகளில் இருந்து எழுதுகிறார் மற்றும் அவருடைய ஒரு சிறுகதைத் தொகுப்பு பத்தாண்டுகளுக்கு முன்பே வெளியாகி இருப்பதாக நூலில் உள்ள குறிப்பு கூறுகிறது. அந்த சிறுகதைத் தொகுப்பும் பரவலாக அறியப்படாத ஒன்றாக இருந்திருக்கிறது. கி.கண்ணனின் இரண்டாவது நூல் என்ற அளவில் இக்கட்டுரை நுனிப்புல் தொடரில் இடம்பெறலாம் என்று முதலில் நினைத்தாலும், நூலினை வாசித்த பிறகு அந்த எண்ணம் மாறிவிட்டது. கண்ணன் ஒரு அனுபவமிக்க எழுத்தாளராகவே இந்த நாவலில் வெளிப்பட்டிருக்கிறார்.
ராமச்சந்திர குஹா ‘Environmentalism: A Global History’ என்றொரு நூலினை எழுதி இருக்கிறார். அந்நூலில் சூழியல் சார்ந்து முன்வைக்கப்படும் முக்கியமான ஒரு பார்வை உள்ளது. உலக நாடுகள் பலவற்றில் சூழியல் சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்கிறவர்களாக பெண்களே உள்ளனர். ஏனெனில் பெண்கள் இடம்பெயர்வது குறைவாக இருக்கிறது. ஆண்கள் பிழைப்பு தேடியும் கலாச்சார சுதந்திரத்தின் காரணமாகவும் சுற்றி அலைவதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளனர். ஆனால், பெண்களின் வாழும் வெளியாக வீடும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுமே உள்ளன. ஆகவே எந்தவொரு சூழியல் சீர்கேடும் உடனடியாக பெண்களையும் குழந்தைகளையும் பாதிப்பதாலேயே பெண்கள் சூழியல் போராட்டங்களில் முன்நிற்கின்றனர் என்றொரு வாதத்தை வைத்திருப்பார். இதில் சூழியல் என்ற காரணியை எடுத்துவிட்டு வேறெந்தக் காரணியை பொறுத்தினாலும் அது பெண்களுக்குப் பொருந்துவதை உணர முடியும்.
சமூக மாற்றமும் உடனடியாக பெண்களிலேயே பிரதிபலிக்கிறது. திருமணத்திற்கு பிறகு ஆண்களின் உடைகளில் பிரதிபலிக்கும் மாற்றங்கள் கூட பெண்கள் வழியே நிகழ்ந்ததாகவே இருக்கும். எல்லா வகையான மாற்றங்களையும் பிரதிபலிப்பதாலேயே இதிகாச காலந்தொட்டு பெண்ணுடல் இலக்கியத்தில் முக்கியமான பேசுபொருளாக இருந்து வந்திருக்கிறது. நெருப்பில் இறக்கப்படும் உடல், நிர்வாணப்படுத்தப்படும் உடல், சீற்றம் கொண்டு முலையை அறுத்துக் கொள்ளும் உடல், குழந்தைகளுடன் கிணற்றில் குதிக்கும் உடல், கணவனுக்கு மருந்து வாங்க இருட்டில் ஒதுங்கும் உடல் என்று ஏராளமான உச்ச தருணங்களில் பெண் உடல் வெளிப்பாடு கொள்வதை இலக்கியங்களில் காண்கிறோம்.
கண்ணனின் இந்த நாவலையும் பெண் உடல் சந்திக்கும் நெருக்கடிகளை ஒரு குறிப்பிட்ட காலத்தில் வைத்துப் பேசுவதாக புரிந்து கொள்ளலாம். நாவலின் முன்னுரையில் ஜி.முருகன் நாவலின் அரசியல் பின்புலம் குறித்தும் அதை மிகத்தெளிவாக தள்ளி வைத்திருக்கும் ஆசிரியரின் தன்னம்பிக்கை குறித்தும் விரிவாகவே பேசி இருக்கிறார்.
குன்றுமேடு என்ற சென்னையின் புறநகர் கிராமம் ஒன்றில் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் நாவலின் களம் அமைகிறது. நெருக்கமாக வீடுகள் அமைந்த, ரகசியம் பேண வாய்ப்பற்ற, சந்தடிமிக்க ஒரு வாழ்க்கைச்சூழலை கண்ணனின் கச்சிதமான மொழி மிகச் சிறப்பாக பிரதிபலிக்கிறது. உதடிக்கிழவியும் அவளது பேத்தி சோளமும் குன்றுமேட்டுவாசிகளுக்கு அப்பம் சுட்டுக் கொடுத்து பிழைக்கின்றனர். சோளம்தான் நாவலின் பிரதான பாத்திரம் என்றாலும், சோளத்தின் கிராமவாசிகள் பலரும் இந்தச் சிறிய நாவலில் முழுமையாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு சித்தரிப்பும் ஒற்றைப்படையானதாக இல்லை. ஏழ்மையான வாழ்க்கைச்சூழலில் பேண முடியாத வைராக்கியம் போன்ற உயர்குடி உணர்வுகளை இந்த நாவல் எள்ளி நகையாடுகிறது. குன்றுமேட்டிலேயே உயர்ந்த வேலையில் இருப்பது எட்டியம்மாவின் கணவன்தான். அரசு மருத்துவமனையில் பியூனாக இருக்கிறான். எட்டியம்மாவுடன் உதடிக்கிழவிக்கு சண்டை வருகிறது. ஆனால், பேத்திக்கு உடல்நலமற்று போகும்போது அவளிடம்தான் ஓட வேண்டி இருக்கிறது. காய்ந்த காய்கறிகளை விற்கும் புட்லூரா கடன் கேட்டு வரும் சோளத்தை அவமதிக்கவே செய்கிறாள் . ஆனால், சோளம் நாவில் எச்சிலூற பார்க்கிறாள் என்பதற்காக அவித்த மரவள்ளிக் கிழங்கையும் கொடுக்கிறாள். கட்டிட வேலைக்கு சோளத்தையும் அழைத்துவரும் சரோஜா அன்று வேலை இல்லை என்று தெரிந்ததும் திரும்பிப் போவதில்லை; மேஸ்திரியுடன் உறவு கொண்டு வேலையைப் பெறுகிறாள்.
சமூகத்தின் ஒவ்வொரு உயர் அடுக்கும் அதற்கு கீழ் உள்ள அடுக்கைச் சுரண்டியே வாழ வேண்டி இருக்கிறது. அப்படி எல்லா வகையிலும் சுரண்டப்படும் ஒரு அடித்தட்டு வாழ்க்கையைத்தான் இந்த நாவல் பேசுகிறது. சென்னையின் அடித்தட்டு வாழ்க்கையை பேசும் சில நாவல்கள் சமீப ஆண்டுகளில் வந்திருக்கின்றன. அவை அனைத்தையும் விட கண்ணனின் இந்த நாவல் பல வகையிலும் மேம்பட்டது. முதலில் ஆசிரியருக்கு எதைச் சொல்ல வேண்டும் என்பதிலிருக்கும் தெளிவு. ஒரு உதாரணம் சொல்லலாம். சோளத்தை காலையில் எழுந்ததும் பல் துலக்கச் சொல்லி உதடிக்கிழவி திட்டுகிறாள். ஆனால், சோளம் பல் துலக்குவதில்லை. பல் துலக்கினால் வயிறு கபகபவென பசிக்கும். சாப்பிட ஒன்றுமிருக்காது. சோளத்தின் சிநேகிதி மாலா மலம் கழிக்கச் செல்லும்போது புதரில் கல்லினை வீசச் சொல்கிறாள். மலம் கழிக்க வரும் பெண்ணின் நிர்வாணத்தைப் பார்க்க சிலர் ஒளிந்து காத்திருக்கின்றனர். இதுபோன்ற பல்வேறு நுண்தருணங்களை மிக நெருக்கமாகப் பின்ணி எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல். ஒரு சித்தரிப்பும் சாதாரணமாக கடந்துபோகக்கூடியாத இருப்பதில்லை. வெறுமனே ‘ஏழ்மையின் அவலத்தை’ சொல்வதாகவோ வர்க்க முரண்களை எடுத்துரைப்பதாகவோ இல்லாமல் அடித்தட்டு வாழ்க்கையில் இருக்கும் பாடுகளையும் ருசிகளையும் மிகுந்த கலைநயத்துடன் கண்ணன் நாவலில் கொண்டு வந்திருக்கிறார்.
நாவலின் எல்லா அத்தியாயத்திலும் காமம் ஏதோவொரு வகையில் உள்நுழைந்துவிடுகிறது. அது தவிர்க்க முடியாததும்கூட. எந்நேரமும் குடித்துவிட்டுச் சுற்றும் கணவன் இரவில் வந்து மார்பை பிசையும்போது முனியம்மா சீற்றமடையாமல் என்ன செய்வாள்? மாலாவிற்கு அவள் தாய்மாமனுடன் நிகழும் உறவு பட்டவர்த்தனமாகவே நாவலில் சொல்லப்படுகிறது. நாவலில் காமம் சார்ந்த பெரும்பாலான சித்தரிப்புகள் பட்டவர்த்தனமாகவே உள்ளன என்று தோன்றுகிறது. தனித்தனி அறைகளில் வசிக்க நேர்ந்துவிட்ட இன்றைய சூழலில் இருந்து பார்க்கும்போது இந்த நாவலின் பட்டவர்த்தனம் அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால், எங்குமே குறுகுறுப்பு அளிக்கும் விதமாக காமம் சார்ந்த சித்தரிப்புகள் இடம்பெறவில்லை.
மாலாவின் வாழ்க்கையும் அவள் அக்கா தீபாவின் வாழ்க்கையும் சில பக்கங்களே எழுதப்பட்டிருந்தாலும் அதுவே அவர்களுடைய வாழ்க்கைச்சூழலை புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது. பூனைக்கு காமம் என்னவாகப்படுகிறது; அது சோளத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நுணுக்கமாக எழுதி இருக்கிறார்.
ஏராளமான பாத்திரங்களும் அவற்றின் நுண்மையான சிக்கல்களும் பேசப்பட்டிருந்தாலும் நாவலின் மையம் சோளம்தான். பூனையுடனான அவள், பிறகு அவனாக அவளைவிட்டு விலகும் சூழல் போன்றவற்றுக்கு பிறகு நாவல் முடிவை நோக்கி நகருமிடம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. உண்மையில் ஆசிரியரின் சமூக விமர்சனம் இந்தப் பகுதியிலேயே வெளிப்படுகிறது. சோளத்தின் வாழ்க்கை ‘காதல் தோல்வி’யால் சீரழிவதில்லை. காதல் சார்ந்த மிகையுணர்ச்சிகள் எதுவும் சோளத்திடம் இல்லை. அவளுக்கு பூனையின் திடமான உடல் மட்டுமே பிடித்திருக்கிறது. அடித்தட்டு வாழ்க்கையுடைய எல்லோருக்குமே காமம்தான் முதன்மை என்றும் ஆசிரியர் பொதுமைப்படுத்தவில்லை. ஊனமாகிப்போன தாய்மாமனுடன் மாலா ஓடிப்போகிறாள். சோளத்திற்கு முதலே காமத்தின் மீதிருக்கும் நாவலின் தொடக்கம் முதலே சொல்லப்பட்டு வருகிறது. பூனையுடனான அவளது அனுபவங்களும் அவன் அவளை விட்டுப் பிரிவதும் அவளுக்கு வேதனையைத் தந்தாலும் உடைத்துப் போடுவதில்லை.
உண்மையில் சோளத்தின் நிலைமாற்றம் தொடங்குவது அவள் கட்டிட வேலை செய்யும் இடத்தில் நிகழும் விபத்திற்கு பிறகுதான். அது விபத்தா இல்லை அவள் தற்கொலைக்கு முயன்றாளா என்ற இடம் பூடகமாகவே விடப்பட்டிருக்கிறது. ஆனால், உடல்வலுவினைக் கொண்டு செய்யக்கூடிய வேலைகளைச் செய்ய முடியாமலாகும்போது சோளத்தின் குணமும் மாறத் தொடங்குகிறது. வேலை செய்ய இயலாமல் போனபிறகு அவள் செய்கிறவை குற்றமா இயல்பா என்று நம்மால் பிரித்தறிய முடிவதில்லை.
நாவலை வாசித்து முடிக்கும்போது அடித்தட்டு வாழ்க்கை பெண்களின் மீது செலுத்தக்கூடிய வன்முறை எத்ததையது என்பது பற்றிய போதத்தை அடைகிறோம். குன்றுமேடு சென்னைக்கு அருகில் இருந்த ஒரு கிராமம்தான். சென்னையின் உயிர்ச்சூழல் இன்றைய அதீதமான குடியேற்றம் அதன் காரணமாக நிகழ்ந்துள்ள சீர்கேடுகளுக்கு பிறகும்கூட வளமானதாகவே உள்ளது. முக்கால் நூற்றாண்டுக்கு முந்தைய அந்நிலத்தை ஒரு சிறிய கிராமத்தின் வழியே கண்ணன் சிறப்பாக சித்தரித்துக் காண்பிக்கிறார். இன்றைய மாநகரத்தை இந்த நாவல் வேறொரு பரிணாமத்தில் காண்பிக்கிறது. மாபெரும் வியாபார கேந்திரமாகவும் ஒவ்வொரு அடி நிலமும் பெரும் அரசியல் கணக்குகள் கூடியதாகவும் மாறிவிட்ட இன்றைய சென்னையை அதன் வழியாக இக்காலத்தைய நம்முடைய மாநகர வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கான ஒரு தொடக்கப்புள்ளியாக சோளம் என்கிற பேத்தி நாவலைப் பார்க்க முடியும்.
ஒரு ஊர் அதிலும் ஒரு குடும்பம் அதிலும் ஒரு பெண் பற்றிப் பேசும் இந்நாவலின் பின்னணியில் ஒரு பெரும் வாழ்க்கை அமைந்திருப்பதும், அந்த வாழ்க்கை சமகாலத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருப்பதும் ஆச்சரியத்தை அளிக்கிறது.