
21. புதிய அரசாங்கம்
‘தொம்… தொம்… தொம்’
முரசுவின் உற்சாக முழக்கம் அரண்மனையின் ஒரு பக்கம் இருந்த பாதாளச் சிறைசாலைக்குள்ளும் ஒலித்தது.
‘’கேட்கிறதா மந்திரி கிழமே…’’ என்று தலையை உயர்த்தி ஜன்னலைப் பார்த்தவாறு கடுப்புடன் பேசினான் கம்பீரன்.
‘’என் செவிகளுக்கு எந்தக் குறைபாடும் இல்லை’’ என்ற நிலாமதிசந்திரன் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார்.
‘’புதிய பதவியேற்புக்களுக்கான முழக்கம் அது. என்னென்னவோ கனவுகள் கண்டேன். சேர்ந்த கூட்டணி சரியில்லை. அதுதான் இங்கே இருக்கிறேன். இல்லாவிட்டால் அங்கே இருந்திருப்பேன்’’ என்றான் கம்பீரன்.
மந்திரி நிமிர்ந்து, ‘’இது நான் பேசவேண்டிய வசனம். ஏதோ தானியக் கிடங்கு, உரக்கிடங்கு என்று என் சக்திக்குட்பட்ட இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளியெடுத்து சம்பாதித்து நிம்மதியாக இருந்தேன். நீ வந்துசேர்ந்தாய். இதில் இவ்வளவு இழுக்கலாம்… அதில் அவ்வளவு அள்ளலாம் என்று ஆசையூட்டினாய். இப்போது மொத்தமாக இங்கே இருக்கிறேன். என் அளவில் செய்த சின்னச் சின்னத் தவறுகளுக்கு மன்னித்தாவது நாட்டை விட்டுப் போ என்று துரத்தியிருப்பார். நீ செய்த காரியங்களால் நானும் இப்படி பாதாளச் சிறையில்… என் வயதுக்கு இது தேவையா?’’ என்றார் அலுப்புடன்.
‘’கவலைப்படாதீர்கள் மந்திரியாரே… அரசருக்கு இரக்க குணம் அதிகம். அவர் இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் உங்களின் இந்த வயதையே சொல்லி அடிக்கடி கெஞ்சும். அவரது பிறந்தநாள் அல்லது பெரிய அரசரின் பிறந்தாளை முன்னிட்டு உம்மை விடுதலை செய்தாலும் செய்துவிடுவார்’’ என்று மெல்ல சிரித்தான் சுகந்தன்.
அவனை முறைத்த நிலாமதிசந்திரன், ‘’அடச்சீ… வாயை மூடு. உன்னைப் போன்ற கொள்ளைக்காரனையும் எங்களுக்குச் சமமாக ஒரே சிறைக்குள் அடைத்திருக்கிறார் பார். அவமானம் பிடுங்கித் தின்கிறது. உனக்கு கொஞ்சமும் வெட்கமாக இல்லையா? வாள் சண்டையில் சூர்யனிடம் நான்கே நிமிடங்களில் மண்ணைக் கவ்விவிட்டு சிரிக்கிறாயே’’ என்றார்.
‘’ஹா… ஹா… எனக்கு என்ன வெட்கம்? நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? கொள்ளையடித்தாலும் அதில் நேர்மையுடன் இருந்தேன். வேலைக் கொடுப்பவர்களுக்கு விசுவாசமாக இருந்தேன். ஆனால், அந்த புலிமுகன் ஆபத்து என்றதும் என்னை அம்போ என்று எடுத்துக் கொடுத்துவிட்டான். அரசன், உம்மைப் போன்ற உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் இப்படித்தான் போல. ஆதாயத்துக்காக எங்களை நன்றாகப் பயன்படுத்துவீர்கள். ஆபத்தில் அள்ளிக்கொடுத்துவிடுவீர்கள். அதற்காக நீங்களே வெட்கப்படாதபோது நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?’’ என்று அலட்சியமாகச் சொன்னான் சுகந்தன்.
‘’சரியான சந்தர்ப்பம் கிடைக்கட்டும். இங்கிருந்து தப்பித்து காட்டுகிறேன்’’ என்று சிறை சுவரில் குத்தினான் கம்பீரன்.
‘’ஆனால் ஒன்றை கவனித்தாயா? நம்மை எல்லாம் ஒரு பக்கம் தூண்டிவிட்ட அந்த அயல்தேச வணிகன் எந்த ஆதாரமும் இன்றி தப்பிவிட்டான்’’ என்றார் நிலாமதிசந்திரன்.
‘’அதுதான் மெத்த படித்தவனின் மூளைக்கும் உங்களைப் போன்றவர்களின் மூளைக்கும் உள்ள வேறுபாடு. வேங்கைபுரி மன்னனிடமும் இருக்கிறான். இங்கேயும் நினைத்தபோது வந்துபோகிறான். இந்நேரம் பதவியேற்பு விழாவின் சிறப்பு விருந்தாளியாக வீற்றிருப்பான்’’ என்றான் சுகந்தன்.
******
அது அரண்மனை மைதானத்தில் நடக்கும் புதிய பதவியேற்பு விழாவுக்கான நிகழ்வுதான். மக்கள் திரள் மைதானத்தை நிறைத்திருந்தது. மேடையில் அரசரும் அரசியும் அமர்ந்திருந்தார்கள். கீழே முதல் வரிசையில் சூர்யன், உத்தமன், நட்சத்திரா, செவ்வந்தி, குழலன், சிவராச தாத்தா… அந்த வரிசையில் ஒருவனாகப் புன்னகை மாறா முகத்துடன் கிங்விங்சன்.
‘தொம்… தொம்… தொம்…’ என்று மீண்டும் முரசு முழங்கியது.
‘’இப்போது நமது மதிப்புகுரிய மாமன்னர் உரையாற்றுவார்’’ என்று அறிவித்தான் நல்லான்.
சிங்கமுகன் எழுந்து நின்றதும் கூட்டம் மகிழ்வுடன் ஆர்ப்பரித்தது. கைகளை உயர்த்தி அமைதியாக்கினார்.
‘’என்னருமை மக்களே… சில காலமாக நம் நாட்டில் சில விரும்பதகாத விஷயங்கள் நடந்துவிட்டன. அதற்கு மக்களைப் புரிந்துகொள்ளாமல் இருந்த எனது மெத்தனமும் முக்கிய காரணம். அதற்காக முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் செய்யும் ஒவ்வொரு தவறும் எத்தனை ஆயிரம் பேரை பெரிதாகப் பாதிக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். தவறுகள் செய்த கம்பீரனையும் நிலாமதிசந்திரனையும் சிறைக்குள் அடைத்துவிட்டேன். நியாயமாகப் பார்க்கப் போனால் நானும் அங்கே இருக்கவேண்டியவன்’’ என்று சொல்லி நிறுத்தினார்.
மக்கள் மறுப்பது மன்னிப்பது போல ஆர்ப்பரித்தார்கள்.
‘’இந்த தவறுகள் எல்லாம் வெளிவரக் காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி சொல்லவும் தளபதி மற்றும் மந்திரி பொறுப்பில் புதியவர்களை அமர்த்தவும்தான் இந்த விழா. வந்துள்ள உங்கள் அனைவருக்கும் நன்றி’’ என்று வணங்கினார்.
மக்கள் கைத்தட்டி வரவேற்றனர். சிங்கமுகன் தொடர்ந்தார்.
‘’முதலாவதாகப் புதிய தளபதியாகப் பொறுப்பேற்கப் போகிறவர்… இந்த இடத்துக்கு நான் முன்னாள் தளபதியின் மகனும் எனது மெய்க்காப்பாளனுமான சூர்யனைத்தான் தேர்வுசெய்திருந்தேன். சூர்யனிடம் சொல்லியிருந்தேன். ஆனால், சூர்யன் அந்தப் பதவியை மறுத்துவிட்டான். தான் மெய்க்காப்பாளனாக இருக்கவே விரும்புவதாகச் சொல்லிவிட்டான். எனில், யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்தபோது என் அன்புகுரிய கிளியோமித்ரா ஒரு பெயரைச் சொன்னார். அந்தப் பெயரை ராணியே அறிவிப்பார்’’ என்றார்.
எல்லோரையும் வணங்கியவாறு எழுந்த கிளியோமித்ரா, ‘’தளபதி என்றாலே அது ஆணாக மட்டும்தான் இருக்க வேண்டுமா? ஏன் அந்த இடத்தில் ஒரு பெண் இருக்கக் கூடாது? அரசியாக நானே அமைதியாக இருந்துவிட்டபோது, பெண்களுக்கும் வாள் ஏந்தும் உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்து அதில் வெற்றி கண்டவள் நட்சத்திரா. அவளது வீரம் குறித்து உங்களுக்கு சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. மேலும் இந்நாட்டுக்காக உயிர் நீத்த முன்னாள் தளபதியின் மகளும் அவள். நாட்டின் தளபதியாக நட்சத்திரா சிறப்புடன் செயல்படுவாள் என்பதில் எனக்கு எள் அளவும் சந்தேகமில்லை. ஆகவே, நட்சத்திரா மேடைக்கு வரவும்’’ என்றார் கிளியோமித்ரா.
கூட்டம் பெரும் உற்சாக முழக்கமிட்டது. நட்சத்திரா எழுந்து எல்லோரையும் வணங்கியவாறு மேடைக்குச் சென்றாள். அரசரும் அரசியும் சேர்ந்து அளித்த வாளை கம்பீரத்துடன் பெற்றுக்கொண்டாள்.
‘’என் மீது நம்பிக்கைகொண்டுள்ள அரசிக்கும் அரசருக்கும் எனது நன்றிகள். இந்தப் பதவியை நான் வேண்டாம் என்று மறுக்கவோ, தயங்கவோ போவதில்லை. ஏனெனில், ஆணுக்குச் சமமாகப் பெண்களாலும் வீரத்தில் சாதிக்க இயலும். எனவே, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்துவேன். ஒருவேளை எந்தச் சூழலிலாவது தவறும் பட்சத்தில் இந்தப் பதவிக்கு ஏற்றவளில்லை என்று ஒதுங்குகிறேன். ஒரு செயலைச் செய்யாமலே நழுவுவதை விடச் செய்துப்பார்த்து சரணடைவது கேவலமல்ல. எல்லோருக்கும் நன்றி’’ என்று வணங்கினாள்.
கைத்தட்டல் அடங்க நேரமாயிற்று. பின்னர் சிங்கமுகன் பேசினார்.
‘’கிளியோமித்ரா தளபதிக்கானத் தேர்வைச் சொன்னதும் முதன்மை மந்திரிக்கானத் தேர்வில் எனக்கு யோசனையே ஏற்படவில்லை. அந்த இடத்துக்கும் மதியிலும் பொறுமையிலும் சிறந்த ஒரு பெண் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அப்படியான ஒருவர்… செவ்வந்தி. வயதில் சிறியவளாக இருந்தாலும் செவ்வந்தியின் சிந்தனைகள் மிகப்பெரியது. ஆகவே, முதன்மை மந்திரியாக செவ்வந்தியை ஏற்று மற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்’’ என்றார்.
எல்லோரும் ஏற்கும் விதமாக கைகளைத் தட்டினார்கள்.
செவ்வந்தி மேடையேறி அதற்கான உத்தரவைப் பெற்றுக்கொண்டாள். அனைவரையும் வணங்கினாள்.
‘’நான் இதைப் பதவியாகப் பார்க்கவில்லை. பதவி என்று சொல்லும்போதுதான் உன்னைவிட என் பதவி பெரிது. என்னைவிடச் சிறியவருக்குப் பதவியா என்றெல்லாம் எண்ணம் எழும். இது ஒரு செயல். இந்தச் செயலில் பிறருடன் நான் கரம் கோக்கிறேன். ஒரு ரதத்தில் அதன் ஆசனம் அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். அதுதான் அரசனையும் அரசியையும் சுமப்பது போலத் தெரியலாம். ஆனால், ரதத்தின் சக்கரங்கள், இழுக்கும் குதிரைகள், குடையாகத் தாங்கியிருக்கும் மேற்பகுதி என எல்லாமும்தான் அந்த ரதத்தின் சிறப்பு. அப்படியாகவே நாடு என்கிற ரதத்தில் நான் ஓர் இருக்கை. அதற்கான கடமையைச் செய்வேன்’’ என்றாள்.
மீண்டும் கைத்தட்டல் அடங்க நேரமாயிற்று.
‘’அடுத்து பாராட்டப்பட வேண்டிய நம் நாட்டின் மிகச் சிறந்த குடிமகன்… சிறு மகன். ஆனால், அறிவில் சிறந்த மகன்… குழலன். நம் நாட்டின் ஒவ்வொரு குழந்தையும் கல்விசாலைக்கு வரவேண்டும் என்று அவன் எடுத்த முயற்சி மிகப்பெரியது. பாடசாலைகளின் நிர்வாகக் குழுவின் தலைமையில் குழலன் இருப்பான்’’ என்றார் சிங்கமுகன்.
கூட்டம் உற்சாகத்துடன் விசில் அடித்தது. குழலன் மேடைக்கு வந்து வணங்கினான்.
‘’இவ்வளவு பெரிய மனிதர்கள் வீற்றிருக்கும் மேடையில் நான் பேசுவது முறையாக இருக்காது. எனது எண்ணங்களை நான் செயல்களாக்கி காண்பிக்கிறேன். அதன் பலன்களைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். என் இந்த உயரத்துக்குக் காரணமானவர்கள் பலர். சிலரை இங்கே குறிப்பிட முடியாத கட்டுப்பாடு. சிலரைப் பற்றிச் சொல்லலாம். அதில் முதன்மையானவர் உத்தமன் அண்ணா. தேசத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்கான உதாரணம் அவர். நம் அரசர் அவருக்கும் அரசாங்கத்தில் ஏதேனும் ஒரு பொறுப்பு தருவதாக எவ்வளவோ பேசி பார்த்தார். அவர் மறுத்துவிட்டார். இந்த மேடையிலாவது ஏறி என் பொறுப்புக்கான உத்தரவை அவர் கைகளால் அளிக்க வேண்டும்’’ என்றான் குழலன்.
உத்தமன் புன்னகையுடன் மேடைக்கு வந்து அந்த உத்தரவை அரசரிடமிருந்து வாங்கி குழலனிடம் கொடுத்தான். ஆர்ப்பரித்த கூட்டம் நோக்கி வணங்கிவிட்டுப் பேசினான்.
‘’என்னைப் போன்ற எழுத்தாணி பிடிப்பவர்கள் எப்போதும் ஆளும் அரசை விட்டு சில அடிகள் தள்ளியே நிற்க வேண்டும். அது எவ்வளவு அற்புதமான அரசாக இருந்தாலும் அந்த இடைவெளி அவசியம். ஏனெனில், அப்போதுதான் அவனால் எந்த விமர்சனத்தையும் தைரியமாக முன்வைக்க முடியும். அரசை நெருங்கிவிடும்போது அவன் எழுத்தில் புகழ்மொழிகள் கலந்துவிடும். முதலில் சின்னச் சின்னத் தவறுகள்தானே நடக்கிறது. இது பெரிதாகப் பாதிக்காது என்று எழுத்தில் சமாதானம் சொல்ல ஆரம்பிப்பான். பின்னர் இதெல்லாம் ஒரு தவறா என்று கேள்விகுறி போட்டு எழுதுவான். அதற்கும் பின்னர், அந்த நாட்டு அரசனைப் பார்… அவனது கொடுமையைவிட இங்கு ஆயிரம் மடங்கு மேல் என்று தவறுக்குத் துணையெழுத்தாவான். ஆகவே, ஓர் ஆட்சிக்கு ஓர் அரசனுக்கு எதிர் வரிசையில் நிற்பவனின் எழுத்தே என்றும் சரியாக இருக்கும்’’ என்றான்.
சிங்கமுகனும் நீண்ட நேரம் கூட்டத்துடன் சேர்ந்து கைத்தட்டினார். உத்தமன் மேடையை விட்டு இறங்கிவிட்டான்.
‘’ஙிஙிங்ஙா’’ என்றது சூறாவளி. (கண்ணெல்லாம் வியர்க்குதுப்பா. நம் நாட்டுக்கு நிஜமாகவே நல்ல காலம் வந்துடுச்சு)
‘’மிய்… மியாவ் மியாவ்’’ என்றது வெற்றி. (மேடையில் இருக்கிறவங்க எல்லோருமே திறமைசாலிகள்தான். ஆனா, ஒரு விஷயம் கவனிச்சியா?)
‘என்ன?’
‘அரசரின் மெய்க்காப்பாளனின் தங்கைதான் தளபதி. அந்த தளபதி மந்திரியின் வருங்கால நாத்தனார். ஒரே குடும்ப ஆதிக்கமா இருக்கே.’
‘அட போடா… நாட்டுக்கு நல்லது நடந்தா சரி.’
‘நீயும் அந்தக் குடும்பத்தில் ஒருத்தனாச்சே… அப்படித்தான் பேசுவே’ என்றது வெற்றி.
‘அடேய் மடையா… அப்படிப் பார்த்தா நீயும் எங்க குடும்பத்துல ஒருத்தனே’ என்றது சூறாவளி.
‘அப்படிங்கறே ரைட் வுடு’ என்றது வெற்றி.
‘என்னது ரைட்டா?’
‘ஆங்கிலம் ஆங்கிலம்… கண்டுக்காதே!’
‘ஆங்கிலம்னு சொன்னதும்தான் நினைவுக்கு வருது. அந்த ஆங்கில வணிகனைப் பார்த்தியா அமைதியா இருக்கான். எல்லோருக்கும் முந்திகொண்டு பேசறவனாச்சே…’
‘கொஞ்ச நாளைக்குப் பேச மாட்டான். ஏன்னா, நடந்த கலாட்டாவில் நம் அரசருக்கு அவன் மீதும் லைட்டா… அதாவது கொஞ்சம் சந்தேகம் வந்திருக்கு. ஆனாலும், அந்நிய தேசக்காரனை… உலகம் முழுக்கப் பரவியிருக்கும் ஒரு நிறுவனக்காரனை அவசரப்பட்டு கைது, விசாரணை செய்ய முடியாதே. அவனது பின்புலம் என்னவோ? அதனால அரசர் அமைதியா விட்டுட்டார். ஆனாலும் இந்த எமகாதவகன் கொஞ்ச நாளில் மெதுவா அரசருக்குப் பக்கத்துல பக்கத்துல போய்டுவான் பாரேன்’ என்றது வெற்றி.
*****
விழா முடிந்து விருந்து நடக்கும் இடத்தில் உத்தமனை ஒட்டிவந்து நின்றாள் நட்சத்திரா…
‘’என்ன உத்தமரே… அரசுடனும் அரசுப் பொறுப்பிலும் இருப்பவர்களிடமிருந்தும் தள்ளியே இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டீர். எனில், நம் காதல்?’’ என்று கேட்டாள்.
‘’அதை நீ சொல்… உனக்கு உத்தமன் வேண்டுமா? தளபதி பொறுப்பு வேண்டுமா?’’ என்று கேட்டான் உத்தமன்.
‘’ம்… எனக்கு இரண்டுமே வேண்டும்’’ என்றாள் நட்சத்திரா.
‘’எனில், நாட்டில் தவறுகள் நடக்கும்போது உரைக்கல்லில் உன்னைப் பற்றியும் எழுதுவேன். வீட்டுக்கு வந்ததும் சண்டைப் பிடிக்கக் கூடாது’’ என்றான் உத்தமன்.
‘’ஆகட்டும்… ஆனால், நல்லது நடந்தால் பாராட்டியும் எழுத வேண்டும்’’ என்றாள் நட்சத்திரா.
‘’அது முடியாது. அப்புறம் உரைக்கல்லில் ஒரே மனைவி புகழ்மாலையாக இருக்கிறது என்று அவப்பெயர் ஏற்பட்டுவிடும். ‘தினச் சிங்கம்’ பத்திரிகையில் வேண்டுமானால் நீ விளம்பரம் போட்டுக்கொள். முதலில் அந்தக் கறுப்பு ஆடை மர்ம மனிதன் யாரென்று கண்டுபிடி’’ என்று புன்னகைத்தான் உத்தமன்.
‘’ம்….’’ என்று முறைப்புடன் வாயைக் கோணிக் காட்டிவிட்டு நகர்ந்தாள் நட்சத்திரா.
கிளியோமித்ராவுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.
‘’என்ன மந்திரியாரே… உன் காதலை மெய்க்காப்பாளனிடம் சொல்லிவிட்டாயா இல்லையா?’’ என்று கேட்டார் கிளியோமித்ரா.
‘’இ… இன்னும் இல்லை அரசியே…’’ என்றாள் செவ்வந்தி.
‘’இன்னும் என்ன தயக்கம்? ஒரு நாட்டுக்கே மந்த்இரி நீ. உன்னைக் கட்டிக்கொள்ள கசக்குமா? சீக்கிரம் சொல்லிவிடு’’ என்று சிரித்தார் கிளியோமித்ரா.
விருந்து முடிந்து கிளம்புபவர்கள் சிங்கமுகனை நெருங்கி வணங்கி விடைபெற்றனர். அவர் அருகே சிவராச தாத்தாவும் நின்றிருந்தார்.
அங்கே வந்த கிங்விங்சன், ‘’மிஸ்டர் சிங்கமுகன்… உங்க விருந்துக்கு நன்றி. நான் புறப்படறேன்’’ என்றான்.
‘’எங்கே? உங்கள் தேசத்துக்கேவா?’’ என்று கேட்டார் சிவராச தாத்தா மெல்லியச் சிரிப்புடன்.
பதிலுக்குச் சிரித்த கிங்விங்சன், ‘’அப்படிலாம் போய்ட மாட்டேன். அதான் கம்பீரன் என் மேலே சொன்ன புகாரில் நான் எந்த தப்பும் செய்யலைனு ப்ரூஃப் பண்ணிட்டேனே… நான் சாதாரண வணிகன். நாங்க இந்த நாட்டுக்கு செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கு’’ என்றான்.
‘’நல்லது கிங்விங்சன்… செய்யுங்க… நாங்களும் எதிர்கொள்ள தயாரா இருக்கோம்’’ என்றார் சிவராச தாத்தா.
இருவரின் பார்வைகளும் புன்னகைகளும் அவர்களுக்கு மட்டுமே புரிந்தது.
*******
‘’அரண்மனைக்குள் சந்தோஷம்… அரசியாருக்குப் பிறக்கப்போவது குட்டி சிங்கமுகனா… சிங்கமுகியா? படியுங்கள் உரைக்கல்… அரண்மனைக்குள் சந்தோஷம்… அரசியாருக்குப் பிறக்கப்போவது குட்டி சிங்கமுகனா… சிங்கமுகியா? படியுங்கள் உரைக்கல்…’’
குழலனின் குரல் கேட்டு ‘பளீர்’ எனக் கண்விழித்தார் சிங்கமுகன். வேகமாகச் சென்று உப்பரிகையில் நின்று கீழே பார்த்தார். கையில் உரைக்கல் பத்திரிகையுடன் குழலன்.
‘’அடேய்… முழலா’’ என்று அழைத்தார்.
குழலன் நிமிர்ந்து பார்த்து, ‘’என்ன அரசே?’’ என்று கேட்டான்.
‘’என்னடா இது? நேற்று இரவுதானே எங்களுக்கே விஷயம் உறுதியானது. அதற்குள் எப்படியடா செய்தி தெரிந்தது?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.
‘’மன்னிக்கவும் அரசே… செய்தியாளர்கள் குறித்த விபரங்களை நாங்கள் சொல்வதில்லை’’ என்றான் குழலன்.
‘’பாவி… போகட்டும் அதென்ன ‘அரசியாருக்கு…?’ தலைப்பையாவது ‘அரசருக்குப் பிறக்கப் போவது’ என்று எழுதியிருக்கக் கூடாதா?’’
‘’மன்னிக்கவும் அரசே… ஆட்சியில் இருப்பவரை எங்கள் உரைக்கல் புகழ்ந்து எழுதாது’’ என்று புன்னகைத்தான்.
‘’போடா… டேய் போடா’’ என்று நொந்த குரலில் சொன்னவரை நெருங்கி அணைத்துக்கொண்டு சிரித்தார் கிளியோமித்ரா.
அவளை ஏறிட்ட சிங்கமுகன், ‘’ம்… பார்த்தாயா பயலின் வாய்க்கொழுப்பை’’ என்றார்.
‘’விரைவில் உரைக்கல் காகித அச்சு புத்தகமாக வரப்போகிறதாம். குழலனைப் பாராட்டி நீங்கள் கொடுத்த பரிசில் அயல் தேசத்தில் இருந்து அச்சு இயந்திரத்தை வாங்கி அவன் அண்ணன் உத்தமனுக்குக் கொடுத்திருக்கிறானாம்’’ என்றார் கிளியோமித்ரா.
‘’ஐயையோ… இனி தினம் ஒரு இதழை வெளியிட்டு என் ஆட்சியைக் கிழிப்பானே… அதுசரி நமக்கு குழந்தைப் பிறக்கப் போகும் விஷயத்தை உரைக்கல்லுக்குச் சொன்ன செய்தியாளினி நீதானா?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.
‘’அடடே… நீங்களும் புத்திசாலியாக மாற ஆரம்பித்துவிட்டீரே’’ என்ற கிளியோமித்ரா இன்னும் பெரிதாகச் சிரித்தார்.
முற்றும்.
(சரித்திரங்கள் சட்டென்று முடிவதில்லை. சிங்கமுகன் மீண்டும் வரக்கூடும்.)