இணைய இதழ் 106சிறார் இலக்கியம்

சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 16 – யுவா

சிறார் தொடர் | வாசகசாலை

16. வற்றாத சுரங்கம்

‘’உன் பிறந்தநாளில் இத்தனை இடர்கள் நடந்திருப்பது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது கிளியோ’’ என்று குரல் கம்ம சொன்னார் சிங்கமுகன்.

நள்ளிரவின் நிலவொளி சாளரம் வழியே உள்ளே நுழைந்து அவர் அமர்ந்திருந்த கட்டிலை நனைத்தது. அருகே அமர்ந்திருந்த கிளியோமித்ரா ஆறுதலுடன் புன்னகைத்தார்.

‘’அதற்காக வேதனைப்படாதீர்கள்… ஒவ்வொரு நாளும் தீதும் நன்றும் மாறி மாறி வருவது ஒரு தலைவனுக்கு… ஒரு அரசனுக்கு வாடிக்கையான விஷயம்தானே? நிறைய நல்ல விஷயங்கள்… பல முன்மாதிரியான விஷயங்களும் இன்று நடந்ததே. அவற்றை எண்ணி ஆறுதல் அடைவோம்’’ என்றாள்.

‘’நீ சொல்வது உண்மைதான். ஆயினும், செவ்வந்தியைச் சிறையில் அடைத்ததும், கைதி போல விசாரித்ததும்தான் என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது. நாளையே அவள் நிரபராதி என முழுமையாக நிரூபனம் ஆகிவிட்டால் அவள் முகத்தில் எப்படி நாம் விழிப்பது?’’

‘’அடடா… அதையெல்லாம் யோசித்து மண்டையை உடைத்துக்கொள்ளாதீர்கள். செவ்வந்தி நம் மகள் போல. அவள் நம் நடவடிக்கை எதையும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டாள். எங்கே தவறு நடந்தது யார் காரணமாக இருப்பார்கள் என்று இந்நேரத்துக்கு யோசித்திருப்பாள். மகா மதியூகி பெண். பாருங்களேன்… நாளை அவளே இவன்தான் விஷம் கலக்கியது என்று ஆதாரத்துடன் வந்துநின்றாலும் நிற்பாள்’’ என்று புன்னகையுடன் சொன்னார் கிளியோமித்ரா.

‘’அப்படி நடந்தால் இந்த தேசத்திலேயே அதிகம் மகிழ்பவன் நானாகத்தான் இருப்பேன் அன்பே’’ என்றார் சிங்கமுகன்.

‘’தவறு அன்பே… அதிகம் மகிழும் பட்டியலில் முதலில் நான்தான் இருப்பேன். உங்களுக்கு இரண்டாம் இடம்தான்’’ என்று சிரித்தார் கிளியோமித்ரா.

‘’ஹா… ஹா… இன்று உன் பிறந்தநாள் சரியென்று விட்டுக்கொடுத்து விடலாம்தான். ஆயினும் செவ்வந்தி விஷயத்தில் மட்டும் விடமுடியாது. ஆகவே, இருவரும் ஒரே மதிப்பெண் பெற்று முதல் இடம் என்று அறிவிக்கிறேன்’’ என்றார் சிங்கமுகன்.

‘’சரி… மண்டியிட்டு வாள் எல்லாம் அளித்தீர்கள். ஆகவே, நானும் சம்மதிக்கிறேன்’’ என்று சிரித்த கிளியோமித்ரா, ‘’நள்ளிரவு கடக்க ஆரம்பித்துவிட்டது. சற்று நேரமேனும் உறங்குங்கள். நாளை நல்லபடியாக இருக்கும்’’ என்றாள்.

‘’விடிந்தால்தான் தெரியும்… எங்கே விசேஷ பதிப்புடன், ‘அரண்மனைக்குள் அரசியாருக்கே ஆபத்து… இதுதான் பாதுகாப்பு லட்சணமா? படியுங்கள் உரைக்கல்’ என்று அந்த குழலன் குரல் எழுப்புமோ என்று இப்போதே நடுங்குகிறது’’ என்று சொல்லி கலகல எனச் சிரித்தார் சிங்கமுகன்.

*****

‘’குழலன் அங்கும் வரவில்லையா?’’ என்று வாரிச்சுருட்டி எழுந்தான் உத்தமன்.

‘’இல்லை உத்தமா… அவனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்று என் மனம் சொல்கிறது. கடைசியாக அவனை நீ பார்த்ததைச் சொல்’’ என்றான் சூர்யன்.

‘’இந்த வயல்வெளியைக் கடந்து அந்தப் பாதை வழியாகத்தான் சென்றான். அவன் வீட்டுக்குச் செல்ல அது குறுக்கு வழி. ஆனால், ஆள் அரவமற்ற பாதை. சொன்னாலும் கேட்க மாட்டான். எனக்கென்ன பயம் என்று எப்போதும் அந்த வழியே செல்பவன்’’ என்றான் உத்தமன்.

‘’வா… இப்போது சென்று பார்ப்போம்’’ என்றான் சூர்யன்.

இருவரும் வரப்பின் மீது நடந்து… வயல்வெளியைக் கடந்து… அந்த மரங்கள் அடர்ந்த பகுதியை அடைந்தார்கள். நிலவொளி இருந்தபோதிலும் கையிலும் விளக்கு எடுத்து வந்திருந்தார்கள் நாலா திசையிலும் பார்த்தவாறு அணு அணுவாக அடியெடுத்து நடந்தார்கள்.

‘’சூர்யா… இங்கே கவனி’’ என்று ஓர் இடத்தில் நின்றான் உத்தமன்.

தரையில் காட்டிய விளக்கு வெளிச்சத்தில் உற்றுக் கவனித்த சூர்யன், ‘’புற்கள் கலைந்துள்ளன. யாரோ புரண்டு எழுந்தது போலிருக்கிறது’’ என்றான்.

‘’அதே…’’ என்று மண்டியிட்ட உத்தமன், ‘’இங்கே பார்… கைத்தடம்…குழலனின் கை போல்தான் இருக்கிறது. இங்கே ஒரு போராட்டம் நடந்திருக்கிறது’’ என்றான்.

‘’எனில், குழலன் கடத்தப்பட்டிருக்கிறான்’’ என்ற சூர்யன் இடுப்பில் கைகளை வைத்தவாறு நீண்ட தூரத்துக்குப் பார்வையை வீசினான்.

உத்தமன் இன்னமும் தரையையே உற்றுப் பார்த்தபடி இருந்தான். குனிந்த சூர்யன், ‘’என்ன உத்தமா?’’ என்று கேட்டான்.

புற்களுக்கு அருகில் இருந்த மண்தரையைச் சுட்டிக்காட்டினான் உத்தமன்… ‘’நன்றாக கவனி… குழலன் தகவலும் சொல்லியிருக்கிறான்’’ என்றான்.

சூர்யன் மண்டியிட்டு கவனித்தான். தரையில் ஏதோ கோடுகள் போலிருந்தது. ‘’என்ன இது?’’

‘’தமிழ் எழுத்துக்களை எண்ணில் எழுதியிருக்கிறான்.’’

‘’என்ன எழுதியுள்ளான்?’’

‘’சொன்னால் என்னையே சந்தேகமாகப் பார்ப்பாய் சூர்யா!”’

‘’விஷயம் சொல் உத்தமா!’’

‘’க ஆ ம ம’’ என்றான் உத்தமன்.

‘’புரியவில்லை’’ என்றான் சூர்யன்.

‘’சுருக்கமாக எழுதியுள்ளான்… கறுப்பு ஆடை மர்ம மனிதன்!’’

உத்தமன் இப்படிச் சொன்னதும் அவனையே உற்றுப் பார்த்தான் சூர்யன்.

‘’அதான் சொன்னேனே… என்னையே சந்தேகிப்பாய் என்று. நான்தான் குழலனைக் கடத்தி இருக்கிறேன் என்று நினைக்கிறாயா நண்பா?’’ என்று கேட்ட உத்தமன் குரலில் கேலியும் கவலையும் கலந்து ஒலித்தது.

******

‘’நான்தான் விஷம் கலந்தேன் என்று எந்த ஆதாரத்தில் சொல்கிறாய்?’’ என்று சீற்றமுடன் கேட்டான் கம்பீரன்.

‘’நீ கலக்கலை… நீ சொல்லி உன் ஆள் கலந்தான்’’ என்று புன்னகையுடன் சொன்னான் கிங்விங்சன்.

இடம்… கிங்விங்சன் மாளிகை. சற்று முன்பு சிறைச்சாலை விசாரணை நடக்கும்போதே கம்பீரன் பக்கம் வந்த கிங்விங்சன் ரகசியமாக ஓர் ஓலையைக் கையில் திணித்தான்.

விசாரணை முடிந்து வெளியே வந்து எல்லோரும் புறப்பட்டதும், தனியாகச் சென்று அதைப் படித்தான் கம்பீரன்.

‘உன் விஷத் திட்டம் எனக்குத் தெரிந்துவிட்டது. மேற்கொண்டு அறிய என் மாளிகைக்கு இப்போதே வா’ என்ற குறிப்பு.

கம்பீரன் அதிர்ந்தான். உடனே கிளம்பி கிங்விங்சன் மாளிகையை அடைந்தான்.

‘’என் ஆளா? யாரவன்? அந்தக் கைதிகளில் யாரைச் சொல்கிறாய்?’’ என்று சீறினான் கம்பீரன்.

‘’ஹா… ஹா… அந்த அப்பாவி கைதிகளில் அவன் இல்லை. உன் திட்டப்படி பாயசத்ல பாய்சன் கலந்துட்டு அப்பவே நழுவிட்டான்’’ என்றான் கிங்விங்சன்.

‘’எ… என்ன… ? என்ன?’’ என்ற கம்பீரன் குரலில் பதற்றம்.

‘’ஹா… ஹா… கம்பீரா… அரிமாபுரி தளபதியே… உனக்கு டவுட்… சந்தேகமா இருந்தா அவன் உன் திட்டப்படி உன் மாளிகையின்… அதென்ன சொல்வது… ஆங்… நிலவறையில் பதுங்கி இருக்கானானு பார்த்துட்டு வாயேன். நான் காத்திருக்கேன்’’ என்று சொல்லி கால் மீது கால் போட்டுக்கொண்டான் கிங்விங்சன்.

கம்பீரன் திகைத்துப் போனான்… ‘’அ… அப்படியென்றால்… என் திட்டம் முழுவதும் நீ அறிந்திருக்கிறாய் அல்லவா?’’

‘’ம்…’’ என்று புன்னகைத்தான் கிங்விங்சன்.

‘’ஓ… எனில், என் மாளிகைக்குள்ளேயே ஒற்றனை வைத்திருக்கிறாயா நீ? உன்னைக் கில்லாடி வணிகன் என்று மட்டும்தான் நினைத்தேன்’’ என்றான் கம்பீரன்.

‘’ஹா… ஹா… மடையா… நீ மட்டுமல்ல மன்னர்கள் என்று சொல்லிக்கொண்டு இங்கே இருக்ற எல்லோரும் அப்படி நினைச்சுதான் எங்களை உள்ளே விடறீங்க. நாங்க யார்னு இன்னும் கொஞ்சம் போனால் தெரியும்’’ என்றான் கிங்விங்சன்.

‘’சுற்றியுள்ள நாடுகள் பற்றியோ அந்த மன்னர்கள் நாசமாகப் போவது பற்றியோ அக்கறையில்லை. எங்கள் அரிமாபுரிக்கு எதற்கு வந்திருக்கிறாய்?’’ என்று கேட்டான் கம்பீரன்.

‘’ஹா… ஹா… அக்கறை இல்லை… இதுதான்… உங்களின் இந்தப் பலவீனம்தான் எங்களுக்குப் பலம். உன் அரிமாபுரிக்கு ஏன் வந்திருக்கோம்னா… தங்கச் சுரங்கம்’’ என்றான் கிங்விங்சன்.

கம்பீரன் கேலியான விழிகளுடன் ஏறிட்டு, ‘’வற்றிவரும் கிணறு அது. இருக்கும் கொஞ்சத்தை எடுத்துக்கொள்ளலாமே என்று பார்த்தேன். அதற்குத்தான் இந்தப் போட்டியா?’’ என்றான்.

கிங்விங்சன் இன்னும் அதிகமாகச் சிரித்து, ‘’இந்த நாட்டில் இருந்த ஒரே அறிவாளி வீரசிங்கம். நல்லவேளை… அவர் போய்ட்டார்’’ என்றான்.

‘’என்ன சொல்கிறாய்?’’ என்று கேட்டான் கம்பீரன்.

‘’கம்பீரா… அது வற்றாத…. ம்… என்னமோ சொல்வீங்களே… ஆங்… ஊற்று… தங்க ஊற்று’’ என்றான்.

‘’………’’

‘’புரிலியா? அந்த மலையடியைச் சுற்றி பூமிக்குள்ள அவ்வளவு தங்கம் இருக்கு. இன்னும் நூறு வருஷம் எடுத்தாலும் கொடுத்துட்டே இருக்ற பூமி அது.’’

‘’…….’’

‘’அப்றம் எதுக்கு மத்த சுரங்கத்தை வீரசிங்கம் மூடிட்டாருனு யோசிக்றியா? அதான் சொன்னேனே… இந்த நாட்டில் இருந்த ஒரே ஒரு புத்திசாலினு’’ என்று புன்னகைத்தான் கிங்விங்சன்.

********

‘’தா… தாத்தா…’’ என்று திகைத்தாள் செவ்வந்தி.

அந்த நள்ளிரவில் தன்னைத் தேடி அவர் வருவார் என்று செவ்வந்தி சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

சிவராச தாத்தா!

90 வயது முதிய மரம். நாடே மதிக்கும் அறிவுப் பழம். பெரிய அரசர் வீரசிங்கம் குழந்தையாக இருந்த காலம் தொட்டே அரண்மனையில் இருந்தவர். இன்றும் அமைச்சரவையில் ஒருவராக இருப்பவர். (கிங்விங்சன் அரசியின் தலைவலிக்கு ஒரு வில்லை அளித்தார் என்று சிங்கமுகன் சொன்னபோது எழுந்து குறுக்கிட்டாரே… இவர்தான்)

வீரசிங்கம் நிறைய விஷயங்களை இவரை ஆலோசித்துதான் செய்வார். ஒரு காலத்தில் இவரைத்தான் முதன்மை மந்திரியாக வைத்திருந்தார். பின்னர்…

‘’வீரசிங்கா… நான் பல ஆண்டுகளாக முதன்மை மந்திரியாக இருந்துவிட்டேன். போதும் விலகிக்கொள்கிறேன். பதவி என்பது எப்போதும் பரவலாக எல்லோரிடமும் கை மாறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பலரின் சிந்தனை, அறிவாற்றலால் புதிது புதிதாகச் செயல்பாடுகள் உருவாகும். நாட்டுக்கு நன்மைப் பயக்கும். என் ஒருவன் சிந்தையிலேயே நாடு சுருங்கிவிடக் கூடாது’’ என்று சொல்லி விலகினார்.

இந்த சிவராச தாத்தாவால் முதன்மை மந்திரியானவர்தான் நிலாமதிசந்திரனின் தந்தை. பின்னர் நிலாமதிசந்திரன் மந்திரியானார். இன்று சிங்கமுகன் உட்பட அரண்மனையில் இருக்கும் பலரும் இவரை ‘கிழம்… சாகும் வரை ஒரு பக்கம் இருந்துவிட்டுப் போகட்டும்’ என்ற எண்ணத்தில்தான் வைத்திருக்கிறார்கள். சிவராச தாத்தாவும் அதற்கெல்லாம் வருந்தாமல் அங்கே நடப்பதை கவனித்து வருகிறார்.

செவ்வந்திக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவரது அறிவாற்றல் பற்றி அந்த அரண்மனையில் நன்கு புரிந்துகொண்ட ஒரே பெண். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அவரிடம் சென்று பேசிக்கொண்டு இருப்பாள். இன்று நடந்த விஷயங்களால் அதிர்ச்சியுற்று மனம் உடைந்திருந்த நிலையில் அவர் தேடி வந்தது மகிழ்ச்சியை அளித்தது.

செவ்வந்தியின் வீட்டு வாசலில் கண்காணிப்புக்காக இருந்தவர்களும் அவரைப் பணிவுடன் வணங்கினார்கள்.

சிவராச தாத்தா உள்ளே செல்வதற்கு முன்பு… ‘’பிள்ளைகளா… நான் இங்கே வந்துசென்றது யாருக்கும் தெரியக் கூடாது’’ என்றார்.

‘’ஆகட்டும் ஐயா’’ என்றார்கள் அவர்கள்.

அவர் செவ்வந்தியுடன் வீட்டுக்குள் சென்றார். அவரை வீட்டில் இருந்தவர்கள் பணிவுடன் வரவேற்று அமர வைத்தார்கள்.

‘’நீ எவ்வளவு வேதனையில் இருப்பாய் எனப் புரிந்துகொள்கிறேன் செவ்வந்தி’’ என்றார் தாத்தா.

‘’சிறையில் இருந்ததை நான் வேதனையாக நினைக்கவில்லை தாத்தா… அரசியின் உயிருக்கு நேர இருந்த ஆபத்தை நினைத்துதான் வேதனைப்படுகிறேன். யார் இதைச் செய்திருப்பார்கள்? அந்த அயல்தேச வணிகர் மட்டும் தடுக்காமல் போயிருந்தால்… நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது’’ என்றாள் செவ்வந்தி.

சிவராச தாத்தா புன்னகைத்து, ‘’ஆண்டவன் இருக்கிறான் மகளே… நல்ல உள்ளங்களை அவ்வளவு எளிதில் தீங்குக்குள் தள்ளிவிட மாட்டான்’’ என்றார்.

‘’எதற்காக தாத்தா இது நடந்திருக்கும்?’’

‘’வேறு எதற்கு… தங்கச் சுரங்கத்துக்காகத்தான்’’ என்றார்.

செவ்வந்தி திகைப்புடன் பார்த்தாள்… ‘’அ… அந்தச் சுரங்கத்துக்காகவா? அதுதான் ஆயுள் முடியும் நிலையில் இருக்கிறதே…’’ என்றாள்.

‘’இல்லை செவ்வந்தி… அதன் ஆயுள் அப்படியெல்லாம் முடிந்துவிடாது. என்னைப் போல அது. பல தலைமுறைகளைப் பார்த்துக்கொண்டே இருக்கும். ஆனால், என்னைப் போல கிழம் ஒரு மூலையில் கிடக்கட்டும் என்று ஒதுக்க மாட்டார்கள். காலம் செல்லச் செல்ல மதிப்பு கூடியபடிச் செல்லும். ஹா… ஹா…’’ என்று சிரித்தார் சிவராச தாத்தா.

செவ்வந்தி வியப்புடன் ஏறிட்டாள்… ‘’என்ன தாத்தா சொல்கிறீர்கள்?’’

‘’ஆமாம் மகளே… அங்கே மூடப்பட்ட சுரங்கங்களில் இன்னும் தங்கம் இருக்கிறது. இன்னும் பல சுரங்கங்களையும் தோண்டலாம். எடுத்துக்கொள் எடுத்துக்கொள் என்று கொடுத்துக்கொண்டே இருக்கும்’’ என்றார்.

‘’அ… அப்புறம் ஏன் மூடப்பட்டது?’’

‘’இந்த மண்ணும் இங்குள்ள மனிதர்களும் மனநிம்மதியுடன் இருப்பதற்காகத்தான்’’ என்றார் தாத்தா.

‘’தாத்தா… புரியவில்லை!’’

‘’மகளே… இந்தப் பூமி அன்னையைப் போல. ஓர் அன்னை ஒரு வீட்டுக்கு மனைவியாக, மகளாக, தாயாக இன்னும் பல வடிவங்களில் இருந்து அந்தக் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் தேவையானதைச் செய்கிறாள். அப்படித்தான் பூமியும் நாம் உயிர் வாழ உணவை விளைவித்து அளிக்கிறது. நம் இல்லங்களைச் சுமக்கிறது. தங்கம் போன்ற பல கனிமங்களைக் கொடுத்து நம் அடிப்படைத் தேவைகள் மட்டுமின்றி அலங்காரத் தேவைகளையும் அளிக்கிறது அல்லவா?’’ என்றார்.

‘’ஆமாம் தாத்தா!’’

‘’உணவு தாய் என்றால்… தங்கம் மனைவி போல. ஒரு வீட்டுப் பெண் மனைவியாக மட்டுமே இருந்தால் என்ன ஆகும்? பிள்ளைகளும் பெரியவர்களும் நிற்கதியாக நிற்பார்கள். ஆடம்பரமான தங்கமும் மனைவியைப் போல. அதன் பளபளப்பைப் பார்த்து மேலும் மேலும் சுவிக்கும் எண்ணம் வரும். அடுத்தவர்கள் கண்கள் எல்லாம் அந்த அழகை கவர நினைக்கும். அபகரிக்க படையெடுத்து வருவார்கள். பூமியைத் தோண்டித் தோண்டி எடுப்பார்கள். பின்னர் இங்கே புல் பூண்டுகூட முளைக்காது. சுற்றுச்சூழல் முற்றிலும் கெடும்’’ என்றார் சிவராச தாத்தா.

‘’புரிகிறது தாத்தா… இதனை நீங்கள் பெரிய அரசரிடம் சொன்னீர்கள். அறிவும் அக்கறையும் நிறைந்த அவர் அதனை உணர்ந்தார். தன் நாட்டுக்குப் பொன் பொருளைவிட அமைதியும் மக்களின் நல்வாழ்வும்தான் அவசியம் என முடிவெடுத்தார். சுரங்கங்களில் தங்கம் அவ்வளவுதான் என்று சொல்லி மூடிவிட்டார். அடிப்படைத் தேவைக்காக மட்டும் ஒரு சுரங்கத்தை விட்டுச் சென்றுள்ளார்’’ என்றாள் செவ்வந்தி.

‘’கற்பூரம் நீ’’ என்று புன்னகைத்தார் சிவராச தாத்தா.

‘’அதுசரி தாத்தா இந்த ரகசியத்தை அறிந்துகொண்ட அந்த மகா புத்திசாலி யாராக இருக்கும்?’’ என்று கேட்டாள்.

அவளை சில நொடிகள் அமைதியாக ஏறிட்ட சிவராச… ‘’வேறு யாராக இருக்கும் என்று நினைக்கிறாய்? வணிகம் செய்ய வந்துள்ளேன் என்று பணிவுடன் வணங்கி உள்ளே நுழைந்து, இன்று சிறைச்சாலைக்குள் நடக்கும் விசாரணை வரையில் இடம் பிடித்துவிட்டானே… கிங்விங்சன்’’ என்றார்.

செவ்வந்தி திடுக்கிட்டு ஏறிட்டாள்.

‘’ஆம் மகளே… அவன் மிக மிக ஆபத்தானவன்’’ என்றார் தாத்தா.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button