இணைய இதழ் 109சிறார் இலக்கியம்

சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 19 – யுவா

சிறார் தொடர் | வாசகசாலை

19. புலிமுகன் திட்டம்

‘’அரிமாபுரி பொடியனுக்கு அதிகாலை வணக்கம்’’ என்று கேலியுடன் வரவேற்றார் புலிமுகன்.

‘’வேங்கைபுரி மன்னருக்கு வணக்கம்’’ என்றான் குழலன்.

அந்த மாளிகையின் வரவேற்பறை போலிருந்த இடத்தில் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார் புலிமுகன்.

‘’என்னை எதிர்பார்த்தாயா பொடியா?’’ என்று கேட்டார்.

‘’யூகித்திருந்தேன் மன்னா… சுரங்கக் கொள்ளையர்கள் என்று ஒரு கூட்டத்தை உருவாக்கி எங்கள் நாட்டுக்குள் அனுப்பி இருக்கிறீர்கள். நடுநிசியில் சுரங்கத்தில் நுழைந்து நான்கைந்து மூட்டைத் தங்கக் கட்டிகளைக் கொள்ளையடிப்பது மட்டுமே இவர்களின் நோக்கமல்ல. மூடப்பட்ட சுரங்கங்களின் வழிகளைக் கண்டறிவதும் எவ்வளவு தங்கம் கிடைக்கலாம் என்று ஆராய்வதும் இந்த சுகந்தனின் முக்கிய வேலை’’ என்றான் குழலன்.

‘’பலே பொடியா… சரியாகச் சொல்கிறாயே! வேறு என்ன யூகிக்கிறாய் சொல் பார்க்கலாம்’’ என்றார் புலிமுகன்.

‘’காவல்களை மீறி சுரங்கத்தில் நுழைந்துவிட முடியாது. எனவே, சுரங்கப் பொறுப்பாளரான தளபதி கம்பீரனைக் கையில் போட்டுக்கொண்ட இந்த சுகந்தன், அந்த கம்பீரனுக்கு அடிபணிந்து நடப்பது போலவும், கொள்ளையடிப்பதை அவரிடம் கொடுத்துவிட்டு அவர் கொடுப்பதைப் பெற்றுக்கொள்வது போலவும் நாடகம். உங்களின் நோக்கம் தளபதியைச் சிக்கலில் மாட்டவைத்து அவர் மூலம் எங்கள் படைகளின் வலிமையைக் குறைத்துப் போரிட்டு நாட்டைக் கைப்பற்றுவது’’ என்றான் குழலன்.

புலிமுகன் கைகளைத் தட்டினார். ‘’சபாஷ்… எங்கள் திட்டங்களை நன்றாகவே புரிந்துகொண்டாய். பாடசாலையில் படிக்கும் உனக்கே இவ்வளவு அறிவு இருக்கும்போது ஒரு நாட்டின் அரசன்… இன்னொரு நாட்டைக் கைப்பற்ற நினைக்கும் எனக்கு எவ்வளவு அறிவு இருக்கும்? உன்னைப் பற்றி நான் சொல்லட்டுமா?’’ என்று கேட்டார்.

குழலன் அமைதியாக அவரை ஏறிட்டான்.

‘’ஊனமுற்ற தந்தை உடல்நலக் குறையுள்ள தாய் மற்றும் சகோதரிகளுடன் வறிய குடும்பமாக இருப்பவன். குடும்பச் சூழ்நிலையைச் சமாளிக்க அந்த உத்தமனுக்கு உதவி செய்துகொண்டு அரண்மனை வாசலில் உரைக்கல்லை கூவி விற்பதாகப் பாவனை செய்கிறாய். அதன்மூலம் உள்ளே இருக்கும் சில வீரர்கள், அதிகாரிகளின் நல்லெண்ணத்தில் இடம்பிடித்து அவ்வப்போது சிறு சிறு தகவல்களைக் கறந்து உன் உரைக்கல் ஆசிரியனுக்கு உரைக்கிறாய்’’ என்றார் புலிமுகன்.

குழலன் புன்னகைத்தான்.

‘’அப்படித்தான் அந்த உத்தமனும் நினைத்துக்கொண்டு இருக்கிறான். ஆனால், நீ அவனுக்கே தெரியாமல் சில ரகசியங்களை வைத்திருக்கிறாய். அரண்மனையின் மூத்த கிழம் சிவராசாவின் அடிப்பொடிதானே நீ?’’ என்று கேட்டு சிரித்தான் புலிமுகன்.

குழலன் முகத்தில் இப்போது மெல்லிய வியப்பு வந்தது.

‘’அந்தக் கிழம் எப்பேர்பட்ட மூளைக்காரர் என்று தெரியும். உடல் தளர்ந்தாலும் சிந்தனைகள் தளராத கிழம். உன்னைப் போல வறுமையிலும் நாட்டுப்பற்றுமா இருக்கும் சிலரின் மனதைக் கொள்ளையடித்து யாருக்குமே சந்தேகம் தோன்றாத வகையில் ரகசிய படை போல வைத்துக்கொண்டு அந்தக் கோமாளி அரசனையும் நாட்டையும் அரணாகப் பாதுகாத்து வருகிறது கிழம். சரிதானே?’’

‘’……..’’

‘’அந்தக் கிழத்தின் அரணை உடைக்கப் போகிறேன் பொடியா. அதற்கான முதல் பலி நீதான். அதில் பகடைக்காய் அந்த தளபதி. உன் பிணத்தின் மூலமாகவே நாட்டில் ஒரு கலவரத்தை உண்டாக்கப் போகிறோம். குழப்பத்தை உருவாக்கப் போகிறோம். பின்னர் படையெடுத்து வந்து அரிமாபுரியைக் கைப்பற்றப் போகிறோம்’’ என்று விஷமமாகச் சிரித்தார் புலிமுகன்.

‘’ஓம்… ஓம்… என்கிறீர்களே… அதில் நிச்சயம் இன்னொரு நபர் இந்த சுகந்தனாக இருக்க முடியாது. இவனெல்லாம் உங்கள் வேலையைச் செய்யும் அடிமையல்லவா?’’ என்ற குழலனின் பின்னந்தலையில் கோபத்துடன் அடித்தான் சுகந்தன்.

‘’என் இடுப்பு அளவு கூட இல்லை. அவன் இவன் என்றா சொல்கிறாய்?’’ என்று பற்களை நறநறத்தான்.

‘’டேய்ய்ய்… இரு’’ என்று கையமர்த்தினார் புலிமுகன்.

குழலன் அசராமல் புலிமுகனை ஏறிட்டான். ‘’நான் சொன்னது சரிதானே?’’ என்று கேட்டான்.

புலிமுகன் சிரித்து, ‘’மெத்த சரிதான் மேதாவியே… அந்த இன்னொருவர் யார் என்றும் யூகிக்க முடிகிறதா?’’ என்று கேட்டார்.

‘’அயல்தேச வணிகனோ?’’ என்று கேட்டான் குழலன்.

‘’ஹா… ஹா…’’ என்று சிரித்த புலிமுகன், ‘’சுகந்தா போதும் இவனுடன் பேசியது. கூட்டிச்சென்று தலையை எடு’’ என்றார்.

‘’இவன் பேசிய பேச்சுக்கு ரத்தம் சூடேறி காத்திருக்கிறேன்’’ என்ற சுகந்தன் வலுவுடன் குழலனின் கழுத்தைப் பிடித்து இழுத்துச் செல்ல ஆரம்பித்தான்.

*******

‘’உங்கள் விளையாட்டுக்குள் குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும்’’ என்றார் சிங்கமுகன்.

இன்னொரு வீரனையும் உத்தமன் வீழ்த்திவிட்டு வர… மூவருமாக கம்பீரனைச் சூழ்ந்த வேளையில் தனது வீரர்களுடன் உள்ளே நுழைந்திருந்தார் சிங்கமுகன்.

நட்சத்திரா, சூர்யன், உத்தமன் சட்டென தங்கள் வாள்களைத் தாழ்த்தி விலக… கம்பீரன் வேகமாக அரசரை நெருங்கி வணங்கினான்.

‘’அ… அரசே… பாருங்கள் அரசே… மூவருமாகச் சேர்ந்து எனது மாளிகையில் நுழைந்து வீரர்களை வீழ்த்திவிட்டு என்னையும் கொல்ல முயல்கிறார்கள். இவர்களின் வண்டவாளங்களை நான் கண்டுபிடித்து விடுவேனோ என்ற பயத்தில்…’’ என்று பேச ஆரம்பித்தான்.

‘’இ… இல்லை அரசே… நாங்கள் இங்கே குழலனைத் தேடியே வந்தோம்’’ என்று அவசரமாகக் குறுக்கிட்டான் சூர்யன்.

‘’குழலனுக்கு என்ன?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’அவனை நேற்று இரவு முதல் காணவில்லை. இவர் கடத்தி இருப்பார் என்று சந்தேகிக்கிறோம்’’ என்றான் உத்தமன்.

‘’பார்த்தீர்களா அரசே… அந்தச் சிறுவனை நான் எதற்கு கடத்தப் போகிறேன்? என் மீது இந்த மூவருக்கும் எப்போதுமே வெறுப்பு. தான் வகித்து இருக்க வேண்டிய தளபதி பதவியில் நான் இருக்கிறேனே என்கிற வன்மம் இந்த சூர்யனுக்கு. இவனுக்குத் துணையாக சகோதரியும் அவளை மணக்கப் போகும் அவனும்’’ என்று சீறினான் கம்பீரன்.

‘’பொறு… பொறு கம்பீரா… ஏன் இவ்வளவு பதற்றம் கொள்கிறாய்? நான் வந்துவிட்டேன் அல்லவா? என்னவென்று விசாரிக்கிறேன்’’ என்றார் சிங்கமுகன்.

‘’அரசே… இவர் மாளிகையில் சோதனையிட்டுப் பாருங்கள். குழலன் எங்காவது அடைக்கப்பட்டு இருக்கலாம்’’ என்றாள் நட்சத்திரா.

‘’எந்த அடிப்படையில் தளபதியின் மீது குற்றசாட்டு வைக்கிறாய்?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’எங்கள் மீது இவர் கொண்டிருக்கும் கோபத்தின் அடிப்படையில்தான் மன்னா. புதிய பாடசாலைகள் அமைக்கும் குழுவில் நாங்கள் இருப்பது இவருக்குப் பிடிக்கவில்லை.  நாங்கள் இருந்தால் இவரது ஊழல் விவகாரங்கள் வெளியாகிவிடும் என்கிற பயம்’’ என்றாள் நட்சத்திரா.

‘’இது அபாண்டம் அரசே… பாடசாலைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அது முழுக்க முழுக்க மந்திரியாரின் பொறுப்பில் அல்லவா இருக்கிறது?’’ என்று குறுக்கிட்டான் கம்பீரன்.

‘’அப்படியெனில் சுரங்க ஊழல்… கொள்ளை என்று எடுத்துக்கொள்ளலாமா?’’ என்று குறுக்கிட்டான் உத்தமன்.

‘’உன் உரைக்கல்லில் எழுதுவது போல வாய்க்கு வந்ததை வேந்தன் முன்பு பிதற்றாதே. என்ன ஆதாரம் இருக்கிறது உன்னிடம்?’’ என்று சீறினான் கம்பீரன்.

‘’நிறையவே இருக்கிறது. அரசர் கேட்டால் அவற்றை ஒப்படைப்பேன்’’ என்றான் உத்தமன்.

‘’அரசே… பாடசாலை விஷயத்தில் நானும் குழலனும் சேகரித்து வைத்திருக்கும் தகவல்கள் வீட்டில் உள்ளன. அவற்றை உங்களிடம் ஒப்படைக்க தயார்’’ என்றாள் நட்சத்திரா.

‘’சரி… அவற்றை நான் பார்க்கிறேன். கம்பீரா… இப்போது சந்தேகத்தின் அடிப்படையில் உன் மாளிகையைச் சோதனையிடலாமா?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’அ… அரசே… இவர்கள்தான் ஏதோ உளறுகிறார்கள் என்றால்…’’

‘’இப்போது சோதனையிடுவதாகச் சொன்னது இவர்களுக்காக அல்ல. எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்துக்காக’’ என்றார்.

‘’அ… அரசே…’’

சிங்கமுகன் தனது வீரர்கள் பக்கம் திரும்பி, ‘’உள்ளே போய்த் தேடுங்கள்’’ என்றார்.

வீரர்கள் மாளிகையின் எல்லாப் பகுதிகளுக்கும் பிரிந்து சென்றனர்.

********

‘’செ… செவ்வந்தி…. என்ன சொல்கிறாய்?’’ என்று அதிர்ச்சியுடன் கேட்டார் கிளியோமித்ரா.

மன்னரும் வீரர்களும் வேகமாகப் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே செவ்வந்தி அரண்மனை வாயிலில் வந்து நின்றாள். ‘’அரசியாரே… ஆபத்து… குழலன் பெரிய அபாயத்தில் இருக்கிறான்’’ என்றாள்.

அதைக் கேட்டு அரசி அதிர்ந்து, ‘’என்ன ஆபத்து அவனுக்கு?’’ என்று கேட்டார்.

‘’வேங்கைபுரி மன்னன் கடத்தி சென்றுள்ளான். உடனே சென்று மீட்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் சிறுவனின் தலைக்கு ஆபத்து’’ என்றாள்.

கிளியோமித்ரா திடுக்கிட்டார். ‘’உனக்கு யார் சொன்னது?’’

‘’அதைச் சொல்ல இப்போது நேரமில்லை அரசியே… நாம் உடனே புறப்பட வேண்டும்’’ என்றாள் செவ்வந்தி.

‘’நா… நாமா? அரசர் இப்போதுதான் தளபதி வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்’’ என்றார் கிளியோமித்ரா.

‘’தளபதி விவகாரத்தை அவர் பார்த்துக்கொள்ளட்டும். இதை நாம் கவனிப்போம்’’ என்றாள் செவ்வந்தி.

‘’நாம் என்று யாரைச் சொல்கிறாய்?’’ என்று கேட்டார் அரசி.

‘’இதோ… வாசலில் கூடியிருக்கும் இவர்களைத்தான்’’ என்று கையை நீட்டிக் காண்பித்தாள் செவ்வந்தி.

பெரும் பெண்கள் கூட்டமும் அவர்களுக்குப் பின்னால் ஆண்கள் கூட்டமும் இருந்தது. அந்த நேரத்தில் அபாய முரசு ஒலித்ததுமே அனைவரும் விழித்து வந்துவிட்டார்கள்.

‘’என்ன விளையாடுகிறாயா செவ்வந்தி? பொதுமக்களாகிய பெண்களையும் மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு அடுத்த நாட்டுக்குச் செல்வதா?’’ என்றார் கிளியோமித்ரா.

‘’ஆம் அரசியாரே… முதல் விஷயம் நாம் சண்டையிடச் செல்லப் போவதில்லை. பேசுவதற்காகச் செல்கிறோம். அரிமாபுரியின் அரசி வேங்கைபுரி அரசியைப் பார்க்கப் போகிறார்’’ என்றாள் செவ்வந்தி.

‘’எதற்கு?’’ என்று கேட்டார் கிளியோமித்ரா.

‘’மரியாதை நிமித்தமாக. நேற்று உங்கள் பிறந்தநாள். அதை முன்னிட்டு அடுத்த நாட்டு அரசியைச் சந்திக்கிறீர்கள்.’’

‘’அதற்கு இந்த அதிகாலையில் அவசர அவசரமாகவா?’’

‘’அதனுடன் ஓர் அவசரக் கோரிக்கை வைப்பதற்காகவும்தான்.’’

‘’என்ன கோரிக்கை?’’

‘’எங்கள் நாட்டு சிறுவன் ஒருவன் உங்கள் நாட்டில் ரகசிய கைதியாக இருக்கிறான். தாமதித்தால் அவன் உயிருக்கு ஆபத்து. ஆகவே, மீட்க வந்தோம். அது விஷயமாக வேங்கைபுரி அரசியிடம் நீதி கேட்க வந்தோம்’’ என்றாள் செவ்வந்தி.

‘’இப்படிச் சொல்லி அந்த நாட்டின் எல்லைக்குள் நுழைந்துவிட முடியுமா? நாம் சொல்லும் குற்றச்சாட்டு பொய்யாகி விட்டால்?’’ என்று கேட்டார் கிளியோமித்ரா.

‘’பொய்யாகாது அரசியாரே… தவிர,பெண்களையும் பிள்ளைகளையும் கைதிகளாகப் பிடிக்கக் கூடாது என்பது விதிமுறை. நாம் தவறான நோக்கத்தில் நுழையாதபட்சத்தில் பெண்களை எதுவும் செய்ய முடியாது’’ என்றாள் செவ்வந்தி.

கிளியோமித்ரா சில நிமிடங்கள் யோசித்தார். கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்தார். கூட்டத்தின் முன்னிலையில் கண்ணீருடன் தவிக்கும் குழலனின் தாயை நோக்கினார்.

‘’சரி செவ்வந்தி… புறப்படலாம்’’ என்றதும் பெண்கள் கூட்டம் உற்சாகத்துடன் முழுக்கமிட்டது.

*******

‘’அரசே… தளபதியாரின் தனி அறைக்குள் ஒரு நிலவறை இருக்கிறது’’ என்று வேகமாக வந்து சொன்னான் ஒரு வீரன்.

‘’அங்கே என்ன இருக்கிறது?’’

‘’திறந்துப் பார்க்கவில்லை அரசே… தங்கள் அனுமதியுடன்…’’

சிங்கமுகன் தலையைத் திருப்பி கம்பீரனை ஏறிட்டார். ‘’அரசு விவகாரங்களுக்காக தளபதி ரகசிய அறைகள் வைத்துக்கொள்ளலாம். அதில் தவறேதுமில்லை. ஆயினும், அரசனே வந்திருப்பதால் திறந்து பார்க்கலாம் அல்லவா?’’ என்று கேட்டார்.

‘’அ… அரசே…’’

‘’ம்… சொல்லுங்கள் தளபதி!’’

‘’என்னைச் சிக்கவைக்க வேண்டுமென்பதற்காக…’’

‘’ம்… சொல்லுங்கள்!’’

‘’அந்த நிலவறையில் ஒரு… ஒரு பிணம் வைக்கப்பட்டுள்ளது’’ என்று தடுமாறினான் கம்பீரன்.

‘’நீங்கள் பார்த்தீர்களா?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’இ… இல்லை அரசே…’’

‘’பார்க்காமல் எப்படி பிணம் இருப்பதாகச் சொல்கிறீர்கள்?’’

‘’……’’

‘’போகட்டும்… யார் பிணம் அது?’’

‘’தெ… தெரியாது அரசே!’’

‘’எனில் வாருங்கள்… போய்ப் பார்த்து சேர்ந்தே தெரிந்துகொள்வோம்’’ என்றார் சிங்கமுகன்.

தளபதியின் அறைக்குள் சென்று நிலவறையின் கதவைத் திறந்து கீழே இறங்கிச் சென்றவர்கள் அதிர்ந்தார்கள். தலை துண்டிக்கப்பட்ட ஓர் உடல் அங்கே இருந்தது.

‘’அ… அரசே… இந்த உடல் அணிந்திருக்கும் ஆடை… அரசியார் பிறந்தநாளுக்காகச் சமையல் செய்ய வந்தவர்கள் அணிந்திருந்த ஆடையைப் போலுள்ளது’’ என்றான் சூர்யன்.

சிங்கமுகன் பார்வை அங்கே சுழன்றது. ‘’இங்கே பிணம் மட்டும் இருப்பது போலத் தெரியவில்லையே… அதென்ன மூட்டைகள்?’’ என்று கேட்டார்.

இரண்டு வீரர்கள் வேகமாகச் சென்று பிரித்துப் பார்த்து, ‘’அரசே… தங்கக் கட்டிகள்’’ என்று எடுத்து காண்பித்தார்கள்.

‘’எ… எல்லாம் யாரோ திட்டமிட்டு செ… செய்திருக்கும் சதிகள் அரசே…’’ என்றான் கம்பீரன்.

அப்போது நகர்ந்து ஒரு பகுதிக்குச் சென்ற உத்தமன், ‘’அரசே… இது வெறும் நிலவறை அல்ல. ஒரு சுரங்கமும் கூட… வெளியே எங்கோ செல்வதற்கு வழி உள்ளது’’ என்றபடி அங்கிருந்த ஒரு அலமாரியை நகர்த்தினான்.

அந்த அலமாரிக்குப் பின்னால் ஓர் ஆள் நுழையும் அளவுக்கு வழி இருந்தது.

‘’என்ன தளபதி… சதி செய்தவர்கள் சுரங்கமுமா அமைத்துவிட்டுச் சென்றுள்ளார்கள்? இப்படி ஒரு சுரங்கத்தை அரசு விவகாரங்களுக்காக உங்கள் மாளிகையில் அமைத்திருப்பதாக எனக்குச் சொல்லவே இல்லையே’’ என்றார் சிங்கமுகன்.

நான்கு வீரர்கள் கம்பீரனைச் சூழ்ந்து கைது உத்தரவுக்காகக் காத்திருந்தார்கள்.

‘’அ… அரசே… மன்னியுங்கள்… அந்தச் சுரங்கக் கொள்ளையர்களைச் சந்திக்க….’’

‘’ஓ… கொள்ளையர்கள் பிடிபடாமல் இருப்பதன் காரணம் இத்உதானா? சரி, இந்தப் பிணத்துக்குப் பதில் சொல். சமையல்காரன் வேடத்தில் நுழைந்து விஷம் கலந்தது இவன்தானா?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’ஆ… ஆமாம் அரசே…’’

‘’எனில் ஏவியவன் யார்?’’

‘’நா… நான்தான் அரசே… ஆனால், அரசியையோ வேறு யாரையோ கொல்வது எனது நோக்கமல்ல…’’

‘’பிறகு… பாயசத்தின் கூடுதல் சுவைக்காகவா?’’

‘’இ… இல்லை அரசே… அதைப் பருகும் முன்பு தடுத்து காப்பாற்றி…’’

‘’ம்… காப்பாற்றி?’’

‘’அந்தப் பழியை செவ்வந்தி மற்றும் இவர்கள் மீது சுமத்தலாமென்று…’’ என்ற கம்பீரன் பார்வை நட்சத்திரா மற்றும் சூர்யன் மீது சென்றது.

சிங்கமுகன் மெல்ல புன்னகைத்தார். ‘’அப்படியானால் இதைப் பற்றி அரண்மனையில் சென்று பேசிக்கொள்வோமா?’’

வீரர்கள் கம்பீரனை வலுவாகப் பிடித்தார்கள். அவர்கள் மேலே வந்தபோது, நல்லான் வேகமாக வந்துநின்றான்.

‘’அரசே வணக்கம்… அரசியாரும் செவ்வந்தியும் மேலும் பல பெண்களும் வேங்கைபுரி நோக்கி புறப்பட்டுள்ளார்கள். உங்களிடம் சொல்லும்படி உத்தரவு’’ என்றான்.

அனைவரும் திடுக்கிட்டார்கள்.

‘’வேங்கைபுரிக்கா… எதற்கு?’’ என்று பதறினார் சிங்கமுகன்.

‘’அரசியின் நேற்றைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று வேங்கைபுரி அரசியைச் சந்தித்து ஆசியைப் பெறுவதற்காம்’’ என்றான் நல்லான்.

‘’இதென்ன பைத்தியக்காரத்தனம்…’’

‘’அதனுடன் அங்கே கைதியாக இருக்கும் குழலனை மீட்டுவருவதற்குமாம்’’ என்றான்.

‘’இடியட்… இடியட்… மடையா… மடையா.. இதையல்லவா முதலில் சொல்ல வேண்டும்?’’ என்று சீறினார் சிங்கமுகன்.

‘’அரசியார் அந்த வரிசையில்தான் சொன்னார் அரசே’’ என்றான் நல்லான்.

‘’உன்னைச் சொல்லி குற்றமில்லையடா… மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி… உனக்கு அமைந்த அரசனின் அறிவு  அப்படி’’ என்றார் அரசர் சிங்கமுகன்.

தொடரும்…
iamraj77@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button