
நாயொன்று வீட்டின் அருகே வரும்போது
என்ன செய்யலாம்
அதன் பற்களைக் கண்டு
பயப்படலாம்
ஓயாது அசையும் அதன் வாலைக்
கண்டு சோர்வடையலாம்
அதன் கால்களில் காய்ந்த
சகதியைக் கண்டு சலித்துக்கொள்ளலாம்
குரைக்கிற சப்தத்தை கேட்டு
காதை மூடிக்கொள்ளலாம்
விரட்டலாம் கல் எறியலாம்
இல்லையேல்
நாம் என்றோ ஒருநாள் எறிந்த
பிஸ்கட்டை உண்டதற்காய்
நம்மைக் கண்டாலே
வாஞ்சையுடன் காலைச் சுற்றி வரும்
அதன் கழுத்தை தடவி கொடுக்கலாம்
அத்தனை மிருதுவான கழுத்தில்
மயங்கிப் போனால் நீங்களும்
என்னைப்போலவே அதற்காக தினமும்
பிஸ்கட்டுடன் காத்திருக்கலாம்.
**********
அகாலத் தனிமை
அரித்துப் போகும் பூச்ச
நாள்பட்ட நோய்
போதாத ஆகாரம் என
அத்தனையும் மறைத்து
அவர் அருகில் வரும் போது
அமைதியாய் பூக்கின்ற
அப்பாவின் தோட்டத்து செடிக்கு
அப்படியே அம்மாவின் சாயல்.
*********
முந்தி விநாயகனுக்கான துதி
ஊர்த்தலைவர் வரும் வரை நீளுமென்பது
எழுதப்படாத விதி
யார் கேட்டாலும்
யாருக்கு புரியாவிட்டாலும்
கத்திப் பாடவேண்டும் என்பது
இவனுக்கு எழுதப்பட்ட விதி
மங்கை வேடமிட்டு
நளினமாக நடக்கிற ஒருவன்
அவ்வப்போது தொண்டையை
செருமிக்கொண்டே இருக்கும்
ராஜபாட்டை கட்டியவன்
சாட்டைக்கு தன்னை
ஒப்புக்கொடுத்து போகிற கோமாளி
நரம்பு புடைக்க வாசிக்கும் கலைஞன் என
அத்தனைபேரும் பொழுதை நகர்த்த
கதையை நகர்த்துகிறான் கட்டியங்காரன்
வேடம் கட்டிய எவன்
தன் வசனத்தை மறந்தாலும்
மறக்காமல் எடுத்துக்கொடுக்கும்
கட்டியங்காரன்
கூத்தின் போது மட்டும்
தன்னையே மறக்கிறான்
கூத்து களைகட்டும் நேரத்தில்
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும்
அந்த இயக்கத்தில் தான்
கிளர்ச்சியடைகிறான்
இளைப்பாறுகிறான்
அதாகப்பட்டது என்றே
ஆயுள் முழுதும்
ஊர்க்கதையை கூறும்
கட்டியங்காரனுக்கு
ஒரு நா(ஆ)ள் கிடைப்பதில்லை
தன் கதையைக் கூற
எந்த நாடகமென்றாலும்
அவன் தவறாமல் கேட்கிறான்
உன் விதிய அந்த ஆண்டவன்
இப்படியா எழுதனும்…
***
அருமையான கட்டியங்காரன் பதீவு