
என்னை எவ்வளவு பிடிக்கும்
என்று அடிக்கடி கேட்கிறாய்
அளவுகள் கேட்கிறாய்
காரணங்கள் கேட்கிறாய்
சில சமயங்களில் திடீரென்று
வெறுக்கும் அளவிற்கு கோபம்
உண்டாக்கி இருக்கிறேனா என்றும்
கேட்டுக்கொள்கிறாய்
கேள் கண்ணே!
அடித்துப் பெய்தாலும்
ஆசையாய்த் தூறினாலும்
மழை ஏற்காத
கடல் உண்டா?!
***
இந்தப் பிரபஞ்சம்
கிழித்தெறிந்த
என் காதல் முனைக்கு
நீ
சாத்தியப்படவில்லை!
***
தீராத நேரங்கள் வேண்டி
சில மணித்துளிகள் சிரித்து
கதை பேசி, ஊடல் பூசி
இறவா வரம் வேண்டி
அல்லது
வேண்டும் பொழுது
இறக்கும் வரம் வேண்டி
காதல் தாண்டிய
கவிதைகள் செய்து
அழகாய் ஒருநாள் மரிப்போமா?!
***
உனை அணைத்துக்கொள்ள
என்றுமே நான்
கார்காலம் தேடியதில்லை!
எந்தவொரு இசைவடிவிலும்
நம்மை உட்புகுத்தி
முகம் தேடியதில்லை!
கரடுமுரடான பாதைகள்
என் பாதத்திற்குச் சம்மதமே!
வருடும் தென்றலை விட
வீசும் புயலில் பிழைக்கத் தெரிந்த
உன் காதல் சுமக்கும்
அசாத்தியமனுஷி – நான்!
******