ஒரு ஊரில் ஓரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் சோமு. அவன் சாதாராண நடுத்தர வகுப்பைச் சார்ந்த பையன். அவனை அவனது பெற்றோர்கள் அன்புடனும் பாசத்துடன் வளர்த்தனர். நல்லொழுக்கங்களை போதித்தனர். அவன் வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். தினமும் அவன் அவனது மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.
அவ்வாறு அவன் பள்ளிக்குச் செல்லும்பொழுது தினமும் வழியில் செருப்பு தைக்கும் முதியவரைப் பார்ப்பதுண்டு. ஒரு நாள் சோமு மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்லும்பொழுது அம்முதியவர் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று தாகம் தாங்க முடியாமல் கத்தினார். சோமுவும் தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை அவருக்குத் தந்து அவரது தாகம் தணித்தான்.
அப்போது ஒரு கனம், அவரை உற்று நோக்க அவரது ஆடையில் ஆங்காங்கே சில கிழிசல்கள் இருப்பது கண்டு மனம் வருந்தினான்.பிறகு பள்ளிக்கு நேரமாகவே, “நன்றி தம்பி, நல்லா இருப்ப கண்ணு… ” என்ற வாழ்த்தையும் தண்ணீர் பாட்டிலையும் பெற்றுக்கொண்டு பள்ளிக்கு விரைந்தான்.
அன்று மாலை பள்ளி முடிந்து சோமு வீட்டிற்கு வந்தவுடன், நடந்ததைக் கூற அவனது பெற்றோர்கள் அவனைப் பாராட்டினர்.
ஒரு நாள் சனிக்கிழமை, சோமுவிற்கு பள்ளி விடுமுறை நாள். மதிய உணவிற்குப் பிறகு, சோமுவின் தாயார் அவனை அழைத்து, “சோமு! இந்தப் பையில்
அப்பாவின் பழைய துணிகள் உள்ளன. இவற்றை உன் பள்ளிக்கு அருகில் இருக்கும் பழைய துணிகள் பெற்றுக் கொள்ளும் கடையில் கொடுத்து பணம் பெற்று வா!! 25 அல்லது 30 ரூபாய் தருவார்…” என்று கூறி, அப்படியே வரும் வழியில் அந்தப் பணத்தில் அரை லிட்டர் பால்பாக்கெட் ஒன்று வாங்கி வா.மாலை நம் வீட்டிற்கு விருந்தினர் வருவதாக தெரிவித்துள்ளனர்” என்றார்.
“பார்த்து பத்திரமாக சென்று வா, பையை சைக்கிள் கேரியரில் பத்திரமாக வைத்துக்கொண்டு கவனமாக செல்…” என்று கூறி அனுப்பி வைத்தார்.
சோமுவும் புறப்பட்டான்.
வழியில் செருப்பு தைப்பவரைக் கண்டான்.
அவரது உடையின் கிழிசல்கள் அவன் மனதை பாதித்தது.
உடனே, தன்னிடம் இருந்த பழைய துணிகளை பையுடன் அவரிடம் வழங்கினான். அதனைப் பெற்றுக் கொண்ட அவர், சோமுவை மனதார வாழ்த்தினார்.
பின்பு சோமு வீடு திரும்பினான்; “பால் வாங்கி வந்தாயா? எங்கே பழைய துணிகள்
வைத்து எடுத்துச்சென்ற பை?” என்று கேட்க,
சோமு உண்மையைக் கூறலாமா என்று ஒரு நொடி சிந்திக்க, ‘இல்லை வேண்டாம் அந்தப் பணத்தில் பால் வேறு வாங்கி வரச்சொன்னாளே’ என்று யோசிக்க அவனது அம்மா “என்னவாயிற்று சோமு, என்ன யோசிக்கற?” என்று கேட்டாள்.
“அது வந்து வந்து …பை தொலைஞ்சுடுச்சு அம்மா!..நான் கடைக்குச் சென்று கேரியரைப் பார்த்தால் பை இல்லை..
வழியிலேயே விழுந்து விட்டது போல…” என்று சோமு கூற…
அவன் தாயார், “அப்படியா சரி விடு, முதலில் இதைச் சொல்ல ஏன் தயங்கினாய்?” என்றாள்.
மாலை அப்பா அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினார்.
அம்மா நடந்ததைக் கூற ..”சரி விடு நம் பையன் நல்லவன், பொய் சொல்லமாட்டான்.” என்றார்.
சிறிது நேரத்தில் சோமுவின் நண்பன் இராமு, சோமு வீட்டிற்கு வந்தான். “இன்று மதியம் நீ செருப்பு தைப்பவருடன் பேசிக்கொண்டிருந்தாயே, அவரிடம் ஒரு பையைக் கூட வழங்கினாய் அல்லவா?
நான் உன்னை சாலையின் மறு பக்கதிலிருந்து உற்று கவனித்தேன்” என்றான்.
இவை அனைத்தையும் கேட்ட சோமுவின் பெற்றோர் பூரிப்புடன், அவனை ஆரத்தழுவி, “இல்லாதவருக்கு கொடுப்பது இறைவனுக்கு கொடுப்பது, நீ செய்தது ஒரு நற்செயல், இதற்கு நீ எங்களிடம் பொய் கூறியிருக்க வேண்டியதில்லை. இனி நம் வீட்டில் பழைய துணிகளை கடையில் போட வேண்டாம்; வறியவர்களுக்கே கொடுப்போம், முடியும் பொழுது புது துணிகளும் கொடுப்போம்.
முடிந்த வரை உணவை வீணாக்காமல் இவர்களைப் போன்றவர்களுக்கு கொடுப்போம்…” என்று சொல்ல, சோமுவும், “சரி அம்மா, சரி அப்பா…” என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்.
எளிமையான நடை.. … அருமையான கதை….. இதனை குழந்தைகள் பின்பிற்ற ஆரம்பித்தால் மண்ணுலகில் மன நிறைவோடு வாழலாம்…