சுடுகாட்டு ஆலமரமும் வெள்ளாட்டு ஆறுமுகமும் – வசந்தி முனீஸ்
சிறுகதை | வாசகசாலை
![](https://vasagasalai.com/wp-content/uploads/2022/07/Picsart_22-07-16_14-15-58-905-780x405.jpg)
“வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ!”
தான் எழுதிய வரிகளுக்கு கீழே தந்தம் போன்ற வெண்பற்களால் பிணமெரிக்கும் மயானக்கூரை அருகே நின்ற மய்யவண்டியில் வரைந்த ஓவியத்தில் பிச்சிப்பூவாய் சிரித்துக்கொண்டிருந்தார் கண்ணதாசன்.
வெயில் தாங்காத தன் வெள்ளாட்டங்குட்டிகளோடு, தானும் இளைப்பாற சுடுகாட்டு ஆலமரத்தின் நிழலில் ஒதுங்கினான் ஆறுமுகம். இசை கேட்டு மயங்குவதுபோல் ஆடுகள் அசை போட்டு உறங்கின. ஆறுமுகத்துக்கும் கண்கள் சொக்கின. சுடுகாடு என்பதால் பயம் அவனை உறங்கவிடாமல் உசுப்பிக்கொண்டே இருந்தது.
“ஏ!தூங்குப்பா. ஏன் முழிச்சிட்டு இருக்க?”
திடுக்கிட்டு எழுந்தான் ஆறுமுகம்.
“யாரு? யா…ரு பேசுறது?”
“நாந்தான்பா” என்றது ஆலமரம்.
ஓடிக் களைத்த வேட்டைநாயின் நாக்கினைப்போல் பயத்தில் ஆறுமுகத்தின் இதயம் வெளியில் வந்திருந்தது. உறங்கிக்கொண்டிருந்த ஆடுகளை “ட்ர்ரீ ட்ர்ரீ” என்று எழுப்பத் தொடங்கினான்.
“முட்டாப்பயல தூங்குற அதுகள ஏன் எழுப்புற? பேயாயிருந்தா இதுக்குள்ள ஒன்ன அடிச்சி கொன்னுருக்க மாட்டேனா! பயப்படாத, நான் ஒன்ன ஒண்ணும் செய்யப்போறதில்ல.”
இப்போது ஆறுமுகத்தின் இதயம் கொஞ்சம் துடிப்பினைக் குறைத்தது.
“மொதல ஓன் கையக் குடுப்பா.”
“கையிலாம் தரமுடியாது.”
“ஏமாத்துற சாமியாருக்கிட்டேயும், ஏமாளியாக்குற அரசியல்வாதிக்கிட்டேயும் யோசிக்காம கால்ல வுழுந்து கும்புடுறீய! ஒருத்தன் சரிக்கிச்சமமா மதிச்சி கையக்குடுத்தா நம்பமாட்டிங்கீய!”
“சரிப்பா… ஒன்ன நம்புறேன். ஒங்கையி எங்கப்பா இருக்கு?”
“புறா முட்டமாதிரி கண்ண வச்சிக்கிட்டு, என் கையி இருக்குறது ஒனக்குத் தெரியலியோ? ஒம்முன்னால தொங்குற என் விழுத தொடு.”
பின்னிப்பிணைந்து கலவி கொள்ளும் பாம்புகளைப்போலிருந்த விழுதுகளை பயத்துடன் தொட்டான் ஆறுமுகம். அந்த ஸ்பரிசம் அவனுக்கு கண்திறக்காத நாய்குட்டியின் காதுகளைப்போல மிருதுவாக இருந்தது. ஆதலால் ஆசுவாசமானான். அச்சம் துறந்தான். ஆலமரத்தின் கைகளை பிரண்டை கொடியாய் பற்றிக்கொண்டான்.
“என்னப்பா, பயம் போச்சா?”- கேட்டது ஆலமரம்.
“ஆமாப்பா, ஒன்னப்போயி பேயின்னு நெனச்சு பயந்துட்டேன்” – சிரித்தான்.
ஆலமரமும் ஆறுமுகத்தைப் பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்தது. ஆலமரத்தின் குலுங்கல் அதன் கிளைகளிலிருந்த கிளிகளுக்கும் மைனாக்களுக்கும் குதிரை சவாரி போலிருந்தது.
“இந்தா சாப்பிடு” என்று தன் கிளையிலிருந்து பழங்களை உதிர்த்துப்போட்டுவிட்டு, “வீட்டுக்கு வந்த விருந்தாளிய கவனிக்கிறதுதான நம்ம பண்பாடு” என்றது ஆலமரம்.
“அப்பம் நா ஒனக்கு விருந்தாளியா?”
“விருந்தாளி மட்டுமல்ல சேக்காளியும் தான்.”
“ஷ்…ஆ…”
“என்னாச்சிப்பா! பழம் புளிக்கா?”
“ஆமா, நல்லா புளிக்கீது!”
“நீதான் கஞ்சிக்கு உப்பு வச்சிருப்பியே. அத தொட்டு தின்னு ருசியா இருக்கும்.”
ஆறுமுகமும் பழத்தினை தின்றுகொண்டே, “ஆமா, ஒனக்கு என்ன வயசிருக்கும்” என்றான்.
“எனக்கெல்லாம் ஓன் தாத்தன் பாட்டன் வயசாயிடுச்சி!”
ஆலமரத்தின் வயதைக்கேட்டு அதிர்ந்து போய் எழுந்து நின்றான் ஆறுமுகம்.
“ஏ! என்னப்பா, வயசக் கேட்டதும் வெடுக்குன்னு எந்திரிச்சிட்ட?”
“நான் சின்னப்பயன்லா. அதான் எந்திரிச்சேன்.”
“ஓகோ! நீ திரும்பவும் பயந்துட்டன்னு நான் நெனச்சிட்டேன்பா. பெத்தவங்களுக்கும், வயசுல பெரியவங்களுக்கும் எப்போதும் மரியாதை குடுக்கணும். மத்தவனுக்கெல்லாம் அவன் என்ன மரியாத ஒனக்கு குடுக்கானோ, அதே மரியாதைய அவனுக்கு திருப்பிக்குடு. சரி! இப்பம் நீ உக்காரு. சேக்காளிய யாராவது நிக்கவச்சி பேசுவாகளா?” – என்றது ஆலமரம்.
“இவ்வளவு வருஷமா நீ இந்த சுடுகாட்டுலத்தான இருக்குற, அப்பம்னா எவ்வளவு பேயப் பாத்துருப்ப?” என்றான் ஆலமரத்தினைப்பார்த்து ஆறுமுகம்.
“ஒண்ணக்கூட பாத்ததில்ல.”
“பொய் சொல்லாதப்பா.”
“அம்மா சத்தியமா நான் பாத்தது கெடயாது. ஆமா, நீ பாத்திருக்கியாக்கும்?”
“ம்கூம்… ஊருக்குள்ள பெருசுங்க சொல்லி கேள்விப்பட்டுருக்கேன்.”
“நீதான் சொடல – முண்டன், பேச்சி- எசக்கினு ஒரு சாமி விடாம வுழுந்து வுழுந்து கும்புடுறியே. அப்புறம் எதுக்கு பேயிக்கு பயப்புடுற?”
“சாமி இருந்தாலும், பேயின்னா பயம் வரத்தானப்பா செய்யுது!”
“நான் சொல்றத மொதல்ல ஒழுங்காக்கேளு.”
ஆலமரத்தினை அண்ணாந்து பார்த்துவிட்டு, “சொல்லு கேக்குறேன்” என்றான் ஆறுமுகம்.
“ஓங்கண்ணால பாக்காதவர எதையும் நம்பாத; கண்டக்கண்ட கட்டுக்கதய கேட்டு பயந்து சாவாத. ஓன் ஆட்டுக்குட்டியளு இப்படி மெய்மறந்து தூங்குறதுக்கு என்னோட எனலு மட்டும் காரணமில்ல. நீயும் தான்.”
“நானா!”
“பின்ன ஒங்க தாத்தாவா? நமக்கு என்ன ஆனாலும் ஆறுமொவம் பாத்துக்குவான்னு ஒன்ன முழுசா நம்பப்போயித்தான் இப்படி நிம்மதியா தூங்குது. அதுவ ஓன்மேல வச்சிருக்கிற நம்பிக்கையில கொஞ்சங்கூட நீ ஓன்மேல வைக்கல. தன்னம்பிக்கை கொண்டனவன காலம் ஒருநாளும் வெறுங்கைய்யா வீதியில விட்டதேயில்லடே! மொதல்ல ஒன்ன நம்பு. என்னமாதிரி வாழ்க்கையில பெருசா வருவ.”
“நீ நல்லா பேசுறப்பா. ஓன் பேச்சக் கேட்டப்பொறவு அடமழ வெறிச்சி ஆகாயத்த பாத்தமாதிரி மனசு பளிச்சின்னு இருக்கு! சரி, எனக்கு ரொம்ப தாகமாயிருக்கு. நான் போயிட்டு பக்கத்து கெணத்துல தண்ணி குடிச்சிட்டு வாரேன். உனக்கு வேணும்னா சொல்லு. கொண்டு வாரேன்.”
“நீ கொண்டுவர தண்ணியில என் ‘குட்டி(உள்)நாக்கு’க்கூட கொஞ்சமும் நெனையாது! நமக்கெல்லாம் மழ பெஞ்சாத்தான் தாகம் தீரும்!”
“இப்பல்லாம் எங்கப்பா கரெக்ட்டா மழை பெய்யுது. அந்த சனியன் புடிச்ச மழ ஏமாத்துறதால, நான் எங்கெல்லாம் ஆட்டபத்திக்கிட்டு மேய்ச்சலுக்கு அலைய வேண்டியிருக்கு தெரியுமா?”
“‘மரத்தப்பூராம் வெட்டுனா, மழ மயித்துக்குள்ளயா பெய்யும்? ஒண்ணு…ஒங்களுக்குள்ளே வெட்டி சாவுறீங்க; இல்ல, எங்கள வெட்டி எல்லா உசுரையும் சாவடிக்கிறீங்க. நீங்கலாம் என்ன ஜென்மம்ல? த்தூ…”
கோபத்தில் பொங்கியெழுந்த ஆலமரத்தினை கண்டு வாயை பொத்திக்கொண்டான் ஆறுமுகம்.
“யப்பா! நானலாம் மரத்த…” – இழுத்தான் ஆறுமுகம்.
“இரு! இரு! மொதல நீ போயி தண்ணி குடிச்சிட்டு வா. அப்றம் பேசிக்கலாம்.”
“சரிப்பா! அதுக்குள்ள நீ கொஞ்சம் சாந்தமாவு” – என தண்ணீர் குடிக்கச் சென்றான் ஆறுமுகம்.
சிறிதுநேரம் கழித்து வந்தவன், “என்னப்பா,ஒங்கோவமெல்லாம் தீர்ந்துடுச்சா”என்றான்.
“சேக்காளி! திட்னதுக்கு என்ன மன்னிச்சிருப்பா”
“நீ ஏன் மன்னிப்பு கேக்குற? நாங்கதான் ஒங்கிட்ட மன்னிப்பு கேக்கணும். ஏன்னா, நீ சொல்ற மாதிரி மனுசனுவ போற போக்க பாத்தா, இன்னும் கொஞ்ச காலத்துல கழுவுறதுக்குக்கூட தண்ணியில்லாம கல்ல வச்சித்தான் தொடைக்கணும் போல. ஆனா, நானலாம் குட்டியளுக்கு ரெண்டு கொழ கிள வெட்டுவன தவுர, முழுசா மரத்தயே கொல செய்யமாட்டேன்பா!”
“நீங்கல்லாம் பரம்பர பரம்பரயா ஆடுமாடு வளக்குறவுங்க. ஒங்களுக்கு எப்பம் வெட்டனும்; எவ்வளவு வெட்டனும்னு தெரியும். ஆனா, ஊருல எவன் வெட்டுனாலும் எடப்பயலுவத்தான் எவனாவது வெட்டிருப்பான்னு மரத்துக்காரன் நெனப்பான்.”
“அவனுவத்தான் சொல்றான்னா, மரத்துக்காரனுக்கு எங்கப்போச்சி புத்தி?”
“எல்லாம் இந்த பணக்காரப்பயலுகளும், அதிகாரத்துல இருந்தவனுங்களும் அந்தக்காலத்துலயே இன்ன சாதிக்காரன்னா இப்படித்தான் இருப்பான்; இதத்தான் செய்வான்னு பொதுசனங்க புத்தியில நல்லா பதிய வச்சுட்டானுவ. நம்ம சனமும் இன்னயவர அத நம்பிட்டுத்தான் இருக்கு. என்னத்த சொல்ல…!” –
ஆலமரம் கிளைகளையசைத்து பெருமூச்சு வாங்கியது.
“சேக்காளி, ஒனக்கு கீழ கொள்ளிப் பானய விட ஒடஞ்ச கோட்ரூ பாட்டலுத்தான்பா நெறையக் கெடக்கு. ஒன்னால நடக்க முடியாததுனால தப்பிச்ச! இல்லன்னா கால கண்டமாணிக்கி குத்தி கிழிச்சிருக்கும்.”
“ஒருநாளு அப்படித்தான் பொணத்துக்குப் போட்ட ரோசாப்பூ மாலய திங்க ஓடிவந்த செனமாடு ஒண்ணு, காலு தடுமாறி ஒடஞ்ச கண்ணாடி சில்லுமேலயே ‘பொத்துன்னு’ வுழுந்துடுச்சு. வயித்துலயிருந்து ரெத்தம் பால் பீய்ச்சறமாதிரி ‘சீத்துன்னு’ அடிக்குது. பிரசவ வலிய விட பெரிய வலியா இருந்துருக்கும்போல! ‘ம்மானு…’ கத்திச்சி பாரு…! எனக்கு உசுரே போயிடுச்சு. இப்படியெல்லாம் பண்ணாதீங்கன்னு, அந்த குடிகாரப் பயலுவக்கிட்ட கொஞ்சம் சொல்லப்பா.”
“மொதலாம் ‘ஊர்கூடி தேர் இழுத்தாங்க’… இப்ப ‘ஊர்கூடி பீர் குடிக்குறாங்க’. அதனால, எவன்ட்டப் போயி சொல்ல முடியும்?”
“நீ சொல்றதும் வாஸ்தவந்தான். ஒருத்தன், ரெண்டுபேருன்னா சொல்லலாம். ஊருக்கு சொல்ல முடியுமா? ஆமா, வந்ததிலிருந்து பாக்குறேன். நீயேன் அடிக்கடி மூக்கப் பொத்துற?”
“இங்க நாத்தம் கொடலப் புடுங்குது! நீ எப்படித்தான் தாங்குறீயோ?”- ஆறுமுகத்துக்கு வாந்தி வருவது போலிருந்தது.
“மச்சு வீட்டுல இருக்குறவன மனுசனாவும், குச்சு வீட்டுல இருக்குறவன நாயாவும் பாக்குறமாதிரி, கோயில்ல இருக்குற ஆலமரத்த சுத்தப்பத்தமாவும், சுடுகாட்டுல இருக்குற எங்கெளயில ஆடுமாடுவ நஞ்சுக்கொடிகளக்கெட்டி என்ன நாத்தமடிக்கவும் வச்சிட்டானுவ. நஞ்சுக்கொடிய விட ஒங்க மனுசங்க பொண நாத்தத இழுத்து இழுத்து, என் நொரையிரலே இத்துப்போச்சு!”
ஆறுமுகம் ஆலமரத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “நானும் நஞ்சுக்கொடிய நெறையத்தடவ கெட்டியிருக்கேன்பா. என்னை மன்னிச்சிரு!”
“பரவாயில்ல… இனும செய்யாத.”
“சரிப்பா…!”
“அட! இப்பும்தான ஒங்கைய பாக்குறேன். ‘அம்மா’ன்னு பச்சக்குத்திருக்க, அம்மா மேல ரொம்ப பாசமோ!”-கேட்டது ஆலமரம்.
“பாசந்தான். ஆனா, இது என் ஆளு பேருப்பா.”
“என்னது…ஓன் ஆளா…! அப்பம், ஓன் ஆளு பேரு ஏதோ அம்மான்னு முடியுது. அப்படித்தான?”
“முடியல… தொடங்குது!”- காட்டுத்துளசியை கிள்ளியபடி வெட்கப்பட்டான் ஆறுமுகம்.
“வெக்கப்படாம சொல்லப்பா!”
“காதக்குடு, சொல்றேன்.”
“சும்மா! சொல்லப்பா. சுடுகாட்டுல எவன் கேக்கப்போறான்.”
“அப்படி சொல்லாத, நம்மூரு பயலுவளுக்கு பாம்புக்காது. கேட்டுட்டுப்போயி பத்தவச்சிற போறாணுவ. நீ காதக்கொண்டா!”
ஆலமரம் தன் காதுக்கிளையை நன்றாக கீழே வளைத்து, “ம்..சொல்லு” என்றது.
“அ.ம்..மாப்பொ.ண்..ணு.” என்று கிசுகிசுத்தான் ஆறுமுகம்.
சரியாக காதில் வாங்காத ஆலமரம் ஆறுமுகத்தைப்பார்த்து, “அடச்சீ! அம்மாவையும் பொண்ணையுமா காதலிக்கிற? ஒன்னப்போயி நல்லவன்னு நெனச்சன் பாரு, எம்புத்திய செருப்பாலயே அடிக்கணும்.”
ஆலமரம் சொன்னதைக்கேட்டு, முடைவாசம் பிடித்த கிடாவைப்போல் மூக்கையும் உதட்டையும் மேல் தூக்கி ‘ஈ..ஈன்னு..’ புரண்டு விழுந்து சிரித்துவிட்டு, “ஓங்காதுல ஈயத்தக்காச்சி ஊத்த, என் ஆளு பேரு அம்மாப்பொண்ணுன்னு சொன்னேன்” என்றான்.
“சரியாப்போச்சி! நாந்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்னா,”-ஆலமரமும் சிரித்தது.
“யப்பா! ரெண்டுபேரும் ஒரே சாதிதான…?” – கேட்டது ஆலமரம்.
“இல்ல சேக்காளி. அதான் பெரிய பிரச்சனையே!”
மேக்காத்து பலமாக வீசியது. பக்கத்து மரமெல்லாம் காற்றின் வேகம் தாங்காமல் தாழ்வதும் எழுவதுமாகயிருந்தது. சில மரங்கள் வில்லாய் வளைந்து, மீண்டும் நேராய் வர பாடாய் பட்டன.
“என்னாச்சி சேக்காளி? சாதிய சொன்னதும் சத்தம் அடங்கி குத்துக்கல்லா மாறிட்ட!” – என்று ஆலமரத்தின் கைகளை ஆறுமுகம் அசைத்தான்.
“நம்மூர்ல மூனுமாசத்துக்கு முந்தி நல்ல பிராயத்துப்புள்ள ஒண்ணு செத்துப்போச்சி தெரியுமா…?”
“தெரியுமே! பேரு…ஆயிரத்தா. மருந்தக்குடிச்சி செத்துப்போனா”
“மருந்தக்குடிச்சி அவ சாவல. மருந்தக்குடுத்து சாவடிச்சிட்டானுவ!”
“என்னப்பா, சொல்ற!? போலீசுலாம் வந்து விசாரிச்சு மருந்தக்குடிச்சித்தான் செத்தான்னு கேச முடிச்சதுப்பா!”
“துட்டக்குடுத்தா வெட்டுனவன விட்டுட்டு, வெகுளிப்பயல குத்தவாளின்னு புடிச்சிட்டுப் போயி கொன்னுருவானுவ. அந்த நீசப்பாவியல மட்டும் என்னைக்கும் நம்பாத.” – உடலதிர்ந்து சொன்னது ஆலமரம்.
“மருந்தக்குடுத்துத்தான் கொன்னாங்கன்னு ஒனக்கு எப்படி தெரியும்?”
“அன்னக்கி அவ பொணத்துக்கு தீ மூட்டிட்டு, அவ குடும்பத்துக்காரங்க இங்கிருந்து ஒரு ஆறேழு மணிக்கெல்லாம் கெளம்பிட்டானுவ. பொணம் எரிக்குற பட்டாணி எசக்கி, ‘துள்ளத்துடிக்க செத்துருக்கா. சீக்கிரம் எரியாதுன்னு தூரமா கெடந்த எருமூட்ட, வைக்கலு, அஞ்சி லிட்டரு டப்பாவுல இருந்த பெட்ரோலு எல்லாத்தையும் இந்தா இருக்குற பாறாங்கல்லுக்கிட்ட எடுத்து வச்சுட்டு, அவன் இடுப்புல இருந்த ‘மானிட்டர்’ புல்ல எடுத்து, அதுமேல உக்காந்து ‘ராவா’ ஊத்திக்குடிச்சான். அவனுக்கு போத ‘கிச்சுன்னு’ ஏறியிடுச்சி. என்ன வெக்கையும் பொகையும் மூச்சுத்திணற வச்சது. இருந்தாலும் கொஞ்சம் எப்படியோ கண்ணசந்தேன் நான்.”
“பொணம் நல்லா எரியும்போது, எந்திருச்சி நிக்குமாமே? அப்பம் அடிச்சி, ஒடச்சிப்போடலன்னா, மூட்டத்தவிட்டு வெளில வந்து வுழுந்துரும்னு சொல்வாங்களப்பா! எசக்கியண்ணன் எந்திரிச்சானா, இல்லையா?”
“சேக்காளி, நடுச்சாமத்துல யாரோ அழுவுறமாதிரி சத்தம் கேட்டுச்சு. என்னடான்னு எந்திரிச்சி பாத்தா…”
“ஏ… ஐய்யா!
சேத்து வைக்கன்னு
சொல்லி கூட்டி வந்திட்டு….
இப்படி சோத்துல
வெசம் வச்சி கொன்னுட்டியே!”
“ஏ… ஆத்தா!
பொட்டன்னு பொறந்தப்பமே
பொடிநெல்லு போட்டு கொல்லாம….
இப்படி பூத்த செடிய
வேரோடு வெட்டி சாய்ச்சிட்டியே!”
“ஏ… அண்ணே!
எஞ்சாமி நீதான்னு சொல்லுவீயே….
இப்ப எந்த சாமிக்கு
என்ன பலிக்கொடுத்த?”
“ஏ… தம்பி!
பெத்த புள்ளயப்போல
ஒன்னத்தூக்கி வளத்தேனே,
இப்படி பொசுக்குற தீயில
என்னப் பொசுக்குன்னு தூக்கிப்போட்டுட்டியே!”
என்று ஒப்பாரி வச்சி அழுதாள் ஆயிரத்தாள்.
“அடப்பாவமே…!” – ஏங்கியழுதான் ஆறுமுகம்.
“ஐய்யோ! எஞ் சங்கரு, இந்த வல்லரக்கனுவ ஒன்ன என்ன செஞ்சானுவலோ, ஏது செஞ்சானுவலோ தெரியலியே! சங்கரு… நீயிருக்கும் நெஞ்சாங்கூட்ட நெருப்பு திங்குதே!” – அப்டினு அழும்போது ‘டமாருன்னு’ ஒரு சத்தம்…!
பட்டாணி எசக்கி பயந்து எந்திரிச்சிட்டான்.
ஆலமரம் சொன்னதைக்கேட்டு ஆறுமுகமும் ‘ஆவ்வூனு…’ அலறிட்டான்.
“என் வேரடி பக்கத்துல, வெடிச்சி வுழுந்த ஆயிரத்தா ஈரக்குலய பாத்ததும்.. என்மேல பேரிடி வுழுந்தமாதிரி இருந்துச்சு. பட்டாணி எசக்கி கவுட்ட கம்பத்தூக்கிட்டு அடிக்க வர்றதுப்போல ஓடிவந்தான். ஆனா, அடிக்கல. ஏன்னா, அவன் குடிக்கும்போதெல்லாம் “யண்ணே! தெனம் இப்படி குடிச்சன்னா, சீக்கிரம் கொடலு வெந்து செத்துருவ. பாவம்! ஓன் பொண்டாட்டிப்புள்ளய என்ன பண்ணும்? குடிக்காதண்ணே!” அப்டின்னு ஆயிரத்தா சொல்வாளாம்.
“என்ன வெந்து செத்துராதன்னு சொல்லிட்டு, ஏ! தாயி இப்ப நீ வெந்தும் நொந்தும் செத்தீட்டிய….” அப்டினு மாங்குமாங்குன்னு அவனும் அழுதுட்டு, கையிலிருந்த கம்பால ஈரக்குலய குத்தியெடுக்காம தன் கையாலயே விதை நெல்லை அள்ளுறதுபோல எடுத்து எரியும் தீமூட்டத்துல போட்டான்.
தீ எரிந்து முடிந்தது! புகை படர்ந்து உயர்ந்தது! ஆயிரத்தாள் எரிந்து சாம்பலானாள். காற்றோடு காற்றாய் கலந்துபோனாள்.
இப்போது ஆலமரத்தின் விழுதுகள் கண்களாக மாறியிருந்தன. கண்கள் குளமாக கலங்கியிருந்தன.
அந்தி சாய்ந்ததை பார்த்த வெள்ளாடுகள் ஒவ்வொன்றாய் எழுந்து தலையை உதறி குதி போட்டும், வேகமாய் நடந்தும், வீட்டைநோக்கி ஓடத்தொடங்கின.
“சேக்காளி! ஆடுவ கெளம்பிடுச்சி, நா வரட்டும்மா” என்றான் ஆறுமுகம்.
“சரி, சேக்காளி! பாத்து பத்திரமா போ!” என்றது ஆலமரம்.
பேய்கள் இருக்குமிடம் தெரிந்துவிட்டதால், நடுவழியில் நின்று கொண்டு ஊருக்குள் போக நடுநடுங்கினான் ஆறுமுகம்.
*****