
“அப்பாவும், தாத்தாவும் ஒருசேர என் கனவில் வந்து போனார்கள்” என்றான் சரவணன் தொலை நோக்கியின் கண்ணாடிகளைத் துடைத்தபடி.
“ஓ..முதல் முறையாகவா?” என்றேன் நான் ஆச்சர்யத்துடன்.
அப்பாவும் தாத்தாவும் கனவில் வருவதாக அவன் அவ்வப்போது சொல்வதுண்டு. ஆனால், ஒன்றாக ஒரே கனவில் வந்ததாகச் சொன்னதே இல்லை. என் கனவில் அவர்கள் எப்போதுமே வருவதில்லை என்பதே அவன் மீது சற்று பொறாமை கொள்ளச் செய்வதாக இருந்தது.
இந்தப் பெரியவர்கள் ஏன் எப்போது இளைய வாரிசின் மீதே அதிக அன்பும், கவனமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்?
அப்பாவும், தாத்தாவும் விவசாயிகளாக இருந்தனர். எங்களுக்கென்று இருந்த ஏக்கர் கணக்கிலான நிலத்தில் பயிரிட்டு, கிராமத்திலேயே மிகப்பெரும் விளைச்சல் கண்ட விவசாயிகளாக அவர்கள் திகழ்ந்தார்கள் என்பது கோயில் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘உலகின் பசியைத் விவசாயத்தால் தீர்ப்போம்’ என்று அவர்கள் சூளுறைத்ததாக பூசாரி சொல்லக் கேட்டிருக்கிறேன்.
“அவர்கள் இறந்து பல வருடங்களாகிறது என்றாலும் இன்னமும் நம்முடன் இருப்பதைப் போலவே தோன்றுகிறது” என்றேன் நான். அவர்கள் இருவருமே காட்டு யானைகள் இடறி 10 வருடங்கள் முன்பே இறந்திருந்தார்கள்.
அதிர்ஷ்டவசமாக, அவர்கள் எனக்கும் என் தம்பிக்கும் சேர்த்து, வீட்டுடன் கூடிய ஒரு மிகப்பெரும் தோட்டத்தை விட்டுச்சென்றிருந்தார்கள். செங்கல்லால் கட்டப்பட்டு, மத்தியில் ஒரு பெரிய தாழ்வாரத்துடன், பனை ஓலையால் கூரை வேயப்பட்ட வீடு அது. தோட்டத்தில் வீட்டுச் சமையலுக்குத் தேவையான காய்கறிகள் பயிரிட்டு வளர்த்து பயன்படுத்திக்கொண்டிருந்தோம்.
அவர்களின் மறைவுக்குப் பின் எங்கள் விவசாய நிலத்தை கோயில் பயன்படுத்திக்கொள்ள வாடகைக்கு விட்டிருந்தோம். அதில் எங்கள் மாதாந்திர செலவுகளுக்கான செல்வம் கிடைத்தது. நான் கோயிலுக்குச் சொந்தமான தொலை நோக்கி நிலையத்தில் பணிக்குச் சேர்ந்து, பஞ்சாங்கம், ஜோதிடம், எண் கணிதமெல்லாம் கற்றிருந்தேன். தம்பி சரவணனுக்கோ கோயில் வேலைகளில் ஆர்வம் இல்லை; அவனுக்குச் சொந்தமாகத் தொழில் தொடங்க விருப்பமிருந்தது. ஆனால், விருப்பம் மட்டும் இருந்துவிட்டால் போதுமா? என்ன தொழில்? எந்தத் தோழில் என்று இருக்க வேண்டுமல்லவா? எதுவும் தோதுப்படாமல், தோதுப்படும் வரை காத்திருப்பானேனென்று கிடைத்த வேலைகளைத் தற்காலிகமாகச் செய்து காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தான்.
நான் ஆழ்ந்த பெருமூச்சொன்றைப் பிரசவித்தேன்.
“அவர்கள் இருவரும் என் கனவில் வருவது இன்னமும் நடக்கவில்லை எனக்கு” என்றேன் வருத்தத்துடன்.
“எப்படி வருவார்கள்? அவர்களின் அந்திமக்காரியங்களைச் செய்ய நீ மயானம் செல்லவில்லையே. ஒருவேளை அந்தக் கோபமாக இருக்கலாம்” என்றான் சரவணன்.
“அவர்கள் மரணிக்கையில் நாம் பாலகர்கள். அந்த இளம் வயதில், மயானத்தின் வினோதங்களைக் கண்டு நான் அச்சம் கொண்டு வர மறுத்ததில் ஆச்சர்யமென்ன இருக்க முடியும்?.” என்றேன் நான் தன்னிலை விளக்கும் நோக்கில்.
“நாம் முக்கிய நாட்களைக் கூட பாவிப்பதில்லை. நோன்பு இருப்பதில்லை. விரதம் இருப்பதில்லை. விரதங்களும், நோன்புகளும் ஆத்மாக்களை திருப்திப்படுத்தும் என்று பூசாரிக்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்றான் சரவணன்.
சில நொடிகளுக்கு நாங்கள் இருவருமே பேசிக்கொள்ளவில்லை.
“அவர்கள் ஏதேனும் சொன்னார்களா?” என்றேன் நான் எங்கள் இருவருக்குமிடையே அப்பிக்கிடக்கும் மெளனத்தைக் களையும் நோக்கில்.
“கொடூரமான பசியை உணர்வதாகவும், தோட்டத்திலிருக்கும் தங்கள் வயிறுகள் தங்களுக்கு கிடைக்க உதவுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்” என்றான் சரவணன் கண்ணாடிகளைத் துடைத்த துண்டை உதறியவாறு.
“வயிறா? தோட்டத்திலிருந்தா?” என்றேன் நான் அதிர்ச்சியுடன்.
கனவில் மூதாதையர்கள் தோன்றுவது மிகவும் ஆழ்ந்த அர்த்தங்களை உடையது எனவும், அவ்வர்த்தங்களைப் புறக்கணிப்பது மிகப்பெரும் துரதிருஷ்டங்களைக் கொணரும் எனவும் பூசாரிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பதின்ம வயதில் பெற்றொர்கள், மூதாதையர்கள் துணையின்றி நாங்கள் தனித்து விடப்பட்டதையே நாங்கள் சாபமாகக் கருதியிருந்தோம். இப்போது இவ்வர்த்தங்களைப் புறக்கணிப்பது என்பது அந்த சாபத்தின் அளவை மேலும் அதிகரிக்கலாம். நாங்கள் எங்கள் நிலையை இதற்கு மேலும் சிக்கலாக்கிக்கொள்ள விரும்பவில்லை.
உண்மையில், மனதில் அடி ஆழத்தில், என் தந்தை மற்றும் தாத்தாவின் ஆன்மாக்களை ஆறச்செய்வதற்கான சரியான காரியங்களை நான் செய்யவில்லை என்ற குற்ற உணர்வில் நான் பீடிக்கப்பட்டிருந்தேன். குறைந்தபட்சம் விவரம் தெரிய வந்த பிறகேனும் நான் செய்ய வேண்டியதைச் செய்திருக்கலாம்; ஆனால், தனி ஆளாக தம்பியையும், எங்கள் வாழ்க்கையையும் பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தியதில் அது தன் முக்கியத்தில் பிந்தங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் பின்னணியில், என் தந்தை மற்றும் தாத்தா தம்பியின் கனவில் தோன்றி வெளிப்படுத்திய ஆசையை நிறைவேற்றுவது தான் நான் அவர்களுக்குச் செய்யும் கர்ம பூர்த்தியாக இருக்க முடியும் என்றே நான் நம்பினேன்.
ஆதலால் கோடாரி, மண்வெட்டியுடன் தோட்டத்தில் இறங்கி தோண்டத்துவங்கினேன். மண் மிகவும் இறுக்கமாக இருக்கவே, நான் பலமுறை என் கோடாரியை பலம் கொண்ட மட்டும் மண்ணில் இறக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் கோடாரியை மண்ணில் இறக்கிய வேகத்தில் ‘நங்’ என்று ஒரு உலோகம் மற்றொரு உலோகத்துடன் வேகமாக மோதிக்கொள்ளும் சப்தம் கேட்டது; சரவணன் கூட சப்தம் கேட்டு என்னருகே வந்துவிட்டிருந்தான்.
முதலில் ஒரு உலோகப் பானையின் வாய் தெரிந்தது. அதனை என் கைகளால் பற்றி, நெகிழ்த்தி, நெகிழ்த்தி உயர்த்த, அந்த முழுப்பானையில் வெளியே வந்தது. நானும் சரவணனும் சேர்ந்து அந்தப் பானையை நீரையும், தென்னை நாரையும் வைத்து தேய்த்துக் கழுவி சுத்தம் செய்தோம். இதற்குள் மாலை மங்கி இருளாகியிருந்தது.
“அடச்சே, இரவு உணவுக்கு உணவகத்திலிருந்து சிக்கன் தம் பிரியாணி வரவழைக்கலாம் என்று இருந்தேன். மறந்தே போய்விட்டது” என்றான் சரவணன் சலிப்புடன்.
சட்டென அந்த உலோகப்பானை கனமானது. நான் அதனுள் எட்டிப்பார்த்தபோது அதனுள் சூடான சிக்கன் தம் பிரியாணி ஆவி பறக்க இருந்தது. நானும் சரவணனும் ஆளுக்கொரு தட்டெடுத்து, பானை பிரியாணியை சமமாகப் பிரித்து உண்டு முடித்தோம்.
“என்ன சுவை! என்ன சுவை! வாழ்வில் இத்தனை அற்புதமான பிரியாணியை நான் உண்டதே இல்லை” என்று ஆனந்தக் கூத்தாடினான் சரவணன். எங்கள் தட்டுகளை கழுவி வைத்துவிட்டு, மீண்டும் பாணை முன் அமர்ந்த போது,
“இரண்டு இனிப்பு வெற்றிலையும் பாக்கும்” என்று சரவணன் சொல்ல, சற்றைக்கெல்லாம் அந்தப் பானைக்குள் வெற்றிலை, பாக்கு, குலகந்து, சன்னா இருந்தது.
“பொன் முட்டையிடும் வாத்து நமக்குக் கிடைத்திருக்கிறது” என்ற சரவணன் சந்தோஷத்தில் துள்ளினான். அன்றிரவு முழுவதும் நாங்கள் அந்த மாயாஜால வாத்திடம் பல வகையான இனிப்பு, கார வகைகளை வரவழைத்துப் புசித்தோம்.
“நம் அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் இப்படியோரு பானை இருப்பது தெரிந்திருப்பின், அவர்கள் ஏன் கஷ்டப்பட்டு விவசாயம் செய்ய வேண்டும்?” என்றான் சரவணன்.
“நான் மண்ணில் கோடாரியைப் பாய்ச்சுகையில் மண் இறுக்கமாகவே தான் இருந்தது. இந்தப் பானையை மண்ணுக்குள் வைத்தது நம் முன்னோர்கள் தான் என்றால், மண் இத்தனை இறுக்கமாக இருந்திருக்காது” என்றேன் நான்.
சரவணன் ஆமோதிப்பாய்த் தலையசைத்தான்.
“நாம் இப்பொது பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு உணவகம் துவங்கலாம் என்று நினைக்கிறேன்” என்றான் சரவணன். என் தம்பி எந்தளவிற்கு அடுத்தவரிடம் கை நீட்டி ஊதியம் பெறுவதை வெறுத்தான் என்பதை நான் அறிந்தே இருந்ததால் அவனது பேச்சு எனக்கு ஆச்சர்யத்தை தரவில்லை.
“எனது வேலையை நான் தக்க வைத்துக்கொள்கிறேன். நீ வேண்டுமானால் இந்தப் பானையை வைத்து உணவகம் துவங்கு” என்று ஆலோசனை தந்தேன் நான்.
என் அப்பாவும் தாத்தாவும் தாமாகவே முன்வந்து இந்தப் பானை குறித்துச் சொன்னது அவனது கனவில் தான் என்பதால், அந்தப் பானை அவனிடம் இருப்பது தான் சரியாக இருக்குமென்று எனக்குத் தோன்றியது ஒரு பிரதான காரணம். அதுமட்டுமல்லாமல், கோயில் வேலையில் இருந்த எண் கணிதம், வானவியல் சாஸ்திரம் சார்ந்த பணிகள் தந்த சவால்களை எதிர்கொள்வது எனக்கும் பிடித்திருந்தது.
“இது, பொன் முட்டையிடும் வாத்து, சகோதரா. இந்த உலகின் பசியையே தீர்க்கவல்லது” என்றான் சரவணன் அந்தப்பானையைப் பார்த்தபடியே. அந்தப் பானையை நான் பார்த்தபோது ‘அட்சயபாத்திரம்’ என்று அந்த பானையின் வாய் விளிம்பில் செதுக்கப்பட்டிருந்ததை நான் கவனித்தேன்.
சரவணன் விரைவாகவே உணவகம் திறந்தான்; மிகக்குறுகிய காலத்தில், நகரத்தின் 24 இடங்களில் கிளைகளுடன் அந்த உணவகம் வியாபாரத்தில் பெறுகியது. அவனது வருமானம் மிகக் குறுகிய காலத்தில் விண்ணைத் தொட்டது.
“நமக்கு இலவசமாகவே உணவு கிடைக்கையில், நீ ஏன் கோயில் வேலையை நம்பியிருக்க வேண்டும்?” சரவணன் ஒவ்வொரு முறை என்னைச் சந்திக்கையிலும் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
இது குறித்து எனக்கொரு புரிதல் இருந்தது. மிகச்சுலபமாகக் கிடைக்கும் செல்வம், மனிதர்களின் புரிதல்களில் இடைவெளிகளை உருவாக்கும் என்பது என் அவதானம். இயக்க ஒழுங்கின் அடிப்படையில் பார்க்கின், இந்த இடைவெளிகள் ஏணிகளின் இயக்க ஒழுங்கிற்கு எதிரான விளைவுகளைத் தரக்கூடியவை. எங்கள் இருவரில் யாரேனும் ஒருவராவது அப்படிப்பட்ட இடைவெளிகளுக்கு இடமளிக்கக்கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எல்லாமும் நன்றாகச் சென்றுவிட்டால், கடவுளை யார் நினைவு கூர்வது? ஒரு நாள் சரவணன் தன் பிரச்சனையைத் தீர்க்க உதவும் படி கேட்டு என்னை சந்தித்தான்.
“ஒரு நாள் இது 1500 தட்டு உணவுகளை பிரசவித்தான் மற்றொரு நாள் 1000 தட்டுகளுக்கான உணவுகளைத் தருகிறது. சில நாட்களில், இந்தப் பானை எந்த உணவையுமே பிரசவிப்பதில்லை. சைவ உணவுகள் கேட்டால், காய்கறிகளே இல்லாத உணவுகள் தருகிறது. அசைவ உணவுகள் கேட்டால், அதில் அசைவமே இருப்பதில்லை. இப்படி சிற்சமயங்களில் இந்தப் பானையின் வெளிப்பாடுகளில் குறைபாடுகள் தோன்றுகின்றன. இந்தக் குறைபாடுகளால் என்னால் உணவகத்தொழில் செய்ய முடியவில்லை. பொதுமக்கள் குறைகள் சொல்கிறார்கள்; என் நிறுவனத்தின் மதிப்பை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் தொற்றிக்கொள்கிறது; திடீரென மலடானதை போலவும், ஒரு பட்டமாக உயரப்பறக்கையில் திடீரென கயிறு அறுந்ததைப் போலவும் உணர்கிறேன். எனக்கு உதவி செய்யேன். உன்னைத் தவிர வேறு யாரிடம் நான் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது?” என்றான் கவலையுடன்.
“இந்தக் குறைபாடுகளை எப்போதிருந்து கவனிக்கிறாய்?”
“முப்பது நாட்களாக”
“இத்தனை நாளும் எதற்குக் காத்திருந்தாய்?”
“துவக்கத்தில் இந்தக் குறைபாடுகள் மிகவும் சிறிய எண்ணிக்கையில் தான் இருந்தது” என்ற சரவணன், ஆழ்ந்த பெருமூச்சொன்றை பிரசவித்துவிட்டு,
“மூன்று நாட்கள் எடுத்துக்கொள். எதனால் குறைபாடுகள் தோன்றுகிறது என்று பார்த்துச்சொல் சகோதரா” என்று கெஞ்சும் குரலில் சொன்னவன், சற்று யோசித்துவிட்டு,
“நம் தாத்தாவும் அப்பாவும் உன் கனவில் இதுகாறும் வராதது இதனால் தானோ?” என்றான்.
நான் அவனைக் கேள்வியாகப் பார்க்க,
“ஓருவேளை உன் பிறப்பின் நோக்கம் என் போல் சுகிப்பது மட்டும் இல்லையோ என்னவோ?“ என்றான்.
“கவலையில் பிதற்றாதே” என்றேன் நான்.
“இல்லை. என் ஊகம் சரியென்றால், இந்தப் பிரச்சனைக்கான தீர்வை நீ கண்டுபிடிப்பாய்” என்றான் சரவணன்.
அவன் சென்ற பிறகு நான் அந்தப் பானையைச் சோதிக்கலானேன்.
“சன்னாவுடன் இரண்டு சப்பாத்தி ” என்றேன். அந்தப் பானைக்குள் இரண்டு சப்பாத்திகளும் சன்னாவும் இருந்தது; எந்தக் குறைபாடும் தென்படவில்லை.
“மூன்று இட்லி, சாம்பார், தேங்காய்ச் சட்டினி, மெதுவடை” என்றேன். சற்றைக்கெல்லாம், மூன்று இட்லி, சாம்பார், தேங்காய்ச் சட்டினி பானைக்குள் தோன்றியது; மெதுவடை இல்லை என்பதைக் குறித்துக்கொண்டேன்.
அதன் பிறகு குறைந்தது ஒரு டஜன் உணவுப்பண்டங்களையாவது நான் அப்பானையின் உதவியுடன் வரவழைத்தேன். ஆங்காங்கே சிற்சில குறைபாடும் தென்பட்டன. அதை வைத்து, மேலும் மேலும் உணவுப்பொருட்கள் அதிகளவில் கேட்கப்படுகையில், குறைபாடுகள் அதிகம் தென்படுகிறது என்பதை ஊகித்துக்கொண்டேன்.
எனக்கும் எதுவும் புரியாமல், அந்தப் பானையை வெறித்துப் பார்க்கையில் தான் ‘அட்சயபாத்திரம்’ என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்த இடத்தில் என் கவனம் குவிந்து, அணிச்சை செயலாக கண்களை மூடி அவ்வார்த்தையை நான் உச்சரித்தேன். அப்போது நான் அப்பானையை என் இருகைகளாலும் ஏந்தியிருந்தேன். சட்டென பானையின் எடை கூடியதைப் போல் உணர, நான் கண்விழிக்கையில், என் கைகள் ஏந்தியிருந்த பானையின் மேல் இன்னொரு பானை இருப்பது புலப்பட்டது. நான் இரண்டையில் தரையில் இறக்கி வைத்துவிட்டு, கவனமாகப் பீராய்ந்ததில் தான் ஒன்றை கவனித்தேன்.
இரண்டு பானைகளும் உருவத்தில் ஒன்றே போல் இல்லை. இரண்டாவது உருவத்தில் ஆஸ்திரியா நாட்டைப் போல் இருக்க, முதலாவது எதன் உருவத்தில் உள்ளது என்பதை அவதானித்தபோது தான் அது ஜப்பான் நாட்டைப் போல் இருப்பதைக் கண்ணுற்றேன். அதன் மூலம், பானையின் மீது கை வைத்து, கண்களை மூடி ‘அட்சயபாத்திரம்’ என்று உச்சரித்தல், புதிய பானைகள் தோற்றுவிக்கும் வழிகளுள் ஒன்றுச் என்பதைப் புரிந்துகொண்டேன்.
அதன் படி, அதே முறையில், சீனா, இந்தோனெசியா, பாகிஸ்தான், ஸ்வீடன் போன்ற உருவங்களில் அடுத்தடுத்து பானைகள் வரவழைத்தேன்.
“மூன்று இட்லி , சாம்பார், தேங்காய்ச் சட்டினி, மெதுவடை” என்று நான் சொல்ல, சற்றைக்கெல்லாம், மூன்று இட்லி, சாம்பார், தேங்காய்ச்சட்டினி ஜப்பான் உருவப்பானையிலும், மெதுவடை இந்தோனெஷியா உருவப்பானையிலும் தோன்றியது.
“தண்ணீர்” என்று நான் சொல்ல, இந்த முறை பாகிஸ்தான், இந்தோனெசியா, ஆஸ்திரியா மற்றும் ஜப்பான் உருவப்பானைகளில் தண்ணீர் தோன்றியது. இப்போது என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்திருந்தது. சரவணன் என்னைச் சந்திக்க வந்தபோதுதான் மூன்று நாட்கள் ஆகிவிட்டது என்பதை நான் உணர்ந்தேன்.
“ஏதாவது கண்டுபிடித்தாயா?” என்றான் சரவணன் வந்ததும் வராததுமாய்.
“ஆம்” என்றேன் அமைதியாக.
“என்ன? என்ன கண்டுபிடித்தாய்” என்றான் கொப்பளிக்கும் ஆர்வத்துடன்.
“இது நீ தோட்டத்து நிலத்தில் விதைகள் தூவுவதைப் போலத்தான். தூவியது உன் நிலமாக இருக்கலாம், வேர் உன் தோட்டத்து மண்ணில் இருக்கலாம். ஆனால், மரமாக அந்த விதை அண்டை வீட்டுத் தோட்டத்தில் எழும்பி வளரலாம். அல்லவா? நீ காலையில் உண்ட உணவு, இந்தக் கணத்தில் உன் உடலின் எந்தெந்த பகுதியில் தஞ்சமடைந்திருக்கிறது என்பதை உன்னால் கூற இயலுமா?” என்றேன் நான்.
சரவணன் இடமும் வலமுமாய் பலமாகத் தலையாட்டினான்.
“ஏன் முடியாது? அது உன் உடல் தானே? நீ தானே அதை ஆள்கிறாய்? உனக்குத்தானே உன் உடலின் மீது முதல் உரிமை. அப்படியிருக்க உன்னால் ஏன் அதைச் சொல்ல முடிவதில்லை?” என்றேன் நான்.
சரவணன் எதுவும் பேசாமல் என்னையே பார்த்தபடி நின்றிருந்தான்.
“இந்த நிலமும், இந்த இயற்கையும் கூட அப்படித்தான். நீ அறுவடை செய்வது, நீ விதைத்தது தான் என்பது என்ன நிச்சயம்? நீ விதைத்த விதையானது எப்போதோ தோன்றிய தாவரத்தின் விதையின் எத்தனையாவது தலைமுறை என்பதை அறிவாயா? அத்தாவரத்தைத் தாங்கிய நிலம் இதுகாறும் எதை எதையெல்லாம் சகித்து, சுகித்து நீடித்திருக்கிறது என்பதை அறிவாயா? அத்தாவரத்திற்கு உயிர் தரும் நீர் இப்பூமிப்பந்தில் விழுந்த எத்தனையாவது துளி என்பதை அறிவாயா? அப்படியிருக்க, விளைச்சல் உன்னுடையது என்றெப்படி ஆகும்? இந்த உண்மை புரிந்ததனால் தானோ என்னவோ நம் பிறப்பிற்குக் காரணமானவர்கள் இந்த பானைகள் மூலம் அதை நமக்குப் புரிய வைக்க முயல்கிறார்களோ என்னவோ? கோயிலில், இதுகாறும் அதிகபட்ச விளைச்சல் கண்டவர்கள் என்ற சாதனையை நம்மைப் பெற்றவர்களே வைத்திருக்கிறார்கள். அது அவர்களின் சாதனையே அல்ல என்கிற பேருண்மையை நான் கண்டுபிடித்துவிடுவேன் என்று தெரிந்துதான் என் கனவில் அவர்கள் வர மறுக்கிறார்களோ என்னவோ? எப்படி விதைக்கும் நிலத்தில் உன் நிலம், அண்டை வீட்டாரின் நிலம் என்ற பாகுபாடெல்லாம் இல்லையோ அதே போல, இந்தப் பானைகளும் பாகுபாடு பார்ப்பதில்லை. அதுதான் இங்கே நடக்கிறது. ” என்றேன் நான்.
சரவணன் என்னையும் மற்ற பானைகளையும் மாறி மாறிப் பார்க்க, அவனுக்கு அந்தப் பானைகள் குறித்து நான் விளக்க வேண்டி வந்தது.
“ஆனால், குறைபாடுகள் தோன்றியபோது, ஒரே ஒரு பானை தானே இருந்தது” என்றான் சரவணன் குறுக்குக் கேள்வி கேட்கும் தோரணையில்.
“நமக்குத் தெரியாமல் இன்னமும் பானைகள் மண்ணுக்கடியில் இருக்கின்றனவோ என்னவோ?” என்றேன் நான்.
சற்று நேரம் குழம்பியவன், “இப்போது இந்த குறைபாடுகளை நான் என்னதான் செய்ய?” என்றான் தீர்வுக்கு ஏங்கியவனாய். எனக்கு அவனைப் பார்க்கையில் பாவமாக இருந்தது.
நான் ஆழ்ந்த பெருமூச்சொன்றைப் பிரசவித்தேன்.
“இன்னமும் தோண்டி எடுக்கப்படாமல் மண்ணுக்குள் இருக்கும் பானைகளையும் நீ மீட்டெடுத்துவிடும் பட்சத்தில், இந்த அத்தனைப் பானைகளின் ஒருங்கிணைந்த இருத்தலிலும், ஒற்றுமையிலும் நீ ஒன்றை அவதானிக்கலாம்: இங்கே எந்தக் குறைபாடுகளும் இல்லை என்பதை” என்றேன் நான்.
**********