
“உனக்கென்னப்பா காட்டுக்குள்ள இருக்க, ஊர் ஊரா சுத்தற..” என என்னை அறிந்தவர்கள், குறிப்பாக எனது நண்பர்கள் என்னிடம் கூறுவது வழக்கம். “உன்ன நெனச்சு எங்களுக்குப் பொறாமையா இருக்கு” எனக் கூறுவார்கள். நான் அப்படி என்ன வாழ்க்கை வாழ்கிறேன் எனக் கேட்டால்..?
நகரம் சார்ந்து வாழும் மக்கள் பொழுதுபோக்கிற்காக, தினசரி வாழ்விலிருந்து ஓரிரு நாட்கள் தப்பித்துக்கொள்ளப் பயணிக்கும் இடங்களில்தான் என்னுடைய வாழ்வும் பணியும்.
முதல் முதலாக சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையம் பற்றிக் கேள்விப்பட்டு அதைப் பற்றி மேலும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவே அங்கு சென்றேன். நடுக்காட்டுக்குள் சிமென்ட் பூசாத கட்டிடங்களைப் பார்த்துக் குழப்பமடைந்தேன் என்றே சொல்லாம். பழமையும் பயமும் என்னுள் குடிக்கொண்டது.
சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையம்
தமிழக கேரள எல்லைப் பகுதியில், கோயமுத்தூர் மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில், ஆனைகட்டியில் பல்லுயிர் வளமிக்க புதர்காடுகள் சூழ்ந்த இப்பகுதியானது யானைகள், புள்ளிமான்கள், காட்டுமாடுகள் மற்றும் எண்ணற்ற பறவைகளையும் வண்ணத்துப்பூச்சிகளையும் ஊர்வனவற்றையும் உள்ளடக்கியதாகும். இக்காட்டுக்குள் இயற்கையுடன் இயற்கையாகக் கட்டபட்டுள்ளது இந்த ஆய்வு மையம்.
வரவேற்பறையிலிருந்த அக்காவிடம், “நான் Mphil, Zoology படிக்கிறேன், இந்த ஆய்வு மையத்தில் சேர்ந்து படிக்க யாரிடம் விசாரிப்பது?” என்று கேட்டவுடன், “Dr. Bhupathi விஞ்ஞானியிடம் பேசுங்கள்” என்று அவரது அறையைக் காட்டினார். அவர் அங்கு நடைபெறும் ஆய்வுகள் பற்றித் தெளிவாக விளக்கினார். “இங்கு ஆய்வு செய்ய நிறைய படித்து தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று கூறி அனுப்பி வைத்தார். அவரது அறிவுரைகளைக் கடைபிடித்தேன். பிறகு நடந்த நேர்காணலில் வெற்றி பெற்று சூழல் நச்சுத் துறையில் ஆய்வு மாணவியாகச் சேர்ந்தேன். இறந்த பறவைகளின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து இறப்பிற்கான காரணங்களைக் கண்டறிந்து அதன் மூலம் அதன் வாழ்விடங்களில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளையும் கண்டறிந்து தீர்வுகளைத் தேடுவதுதான் என்னுடைய ஆய்வாகக் கொடுக்கப்பட்டது. சேர்ந்து பத்தே நாட்களில் குஜராத் கள ஆய்வுக்குச் செல்ல வேண்டியிருந்தது.
தமிழ்நாட்டில் நாம் பொங்கல் கொண்டாடும் அதே நாட்களில் குஜராத் மாநிலத்தில், மகர சங்கராந்தி கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகையின்போது பொழுதுபோக்கிற்காக மாஞ்சா நூலினால் (கண்ணாடித் துகள்களால் செய்யப்பட்ட நூல்) ஒருவரது பட்டத்தை மற்றவர்கள் அறுக்கும் (பட்டம் விடும்) போட்டி நடைபெறும். மற்றவர்களது பட்டங்களை அறுப்பதோடல்லாமல் பறவைகள், விலங்குகள், ஏன் சில நேரங்களில் மனிதர்களின் கழுத்தையுமே அந்த நூல்கள் அறுத்துவிடுகின்றன.
இதனால் பறவைகளுக்கு இறக்கை கிழிதல், அதிக ரத்தபோக்கு, எலும்பு முறிவு, கீழே விழுந்த அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்படுதல் எனப் பல துன்பங்கள் நேர்கின்றன. இந்தப் பறவைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட நிபுணர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு உதவ எங்களைப் போன்ற பறவை ஆராய்ச்சி மாணவர்களும் தன்னார்வலர்களாகப் பங்குகொள்கிறோம். குழுவாகச் சென்ற நாங்கள் மருத்துவர்களுக்கு உதவியதில் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. என் முதல் அனுபவமே, முற்றிலும் புதிதாக இருந்தது இன்னும் பயணங்களும் கற்றல்களும் தொடரப் போகின்றன என்று நினைத்தபோதுதான் என் வாழ்வின் அர்த்தம் புரியத் தொடங்கியது.
ஒவ்வொரு முறையும் கொத்துக்கொத்தாக பறவைகளின் இறப்பு பற்றிய செய்திகளை நாளிதழ்களில் படித்தும், வனத்துறையிடமிருந்தும் இயற்கை ஆர்வலர்களிடமிருந்தும் தகவல்கள் கிடைக்கும்போது செல்வேன். ஒடிசா மாநிலத்தில் சிலிக்கா ஏரியில் உள்ள நலபானா பறவைகள் சரணாலயம், கர்நாடகா மாநிலத்தில் உள்ள கொக்கர பெல்லூரு என்ற Community Reserve அதாவது குறிபிட்ட பகுதி மக்களே, அங்கு வாழும் உயிரினங்களைப் பாதுகாக்கும் இடம், ராஜஸ்தானில் உள்ள சாம்பார் என்ற உப்பு நீர் ஏரி, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாட்டின் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் போன்ற பல மாநிலங்களுக்கு பறவைகளின் இறப்பிற்கான காரணங்களைக் கண்டறிய பேருந்து, ரயில், விமானம், இருசக்கர வாகனம், மகிழுந்து எனப் பல வகையான வழிகளில், சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல நான் மேற்கொண்ட பயணங்கள் பற்பல. அதில் கிடைத்த அனுபவங்கள் ஏராளம்.
இதுமட்டுமில்லாமல் மற்ற ஆராய்ச்சியாளர்களுடன் மாலை நேரம் கேண்டீன் தேநீர், காலை-மாலை நடைப்பயிற்சி, ஆய்வகத்தில் இரவு நேரம் ஆய்வுகளைப் பற்றி கலந்தாலோசித்துக்கொண்டே ஆய்வுகளைச் செய்வது, காட்டுக்குள் மழையை ரசிப்பது, யானைகளை முழுமையாக கவனிக்கும் வாய்ப்பு, இயற்கை பற்றித் தெரிந்துகொள்ள வரும் குழந்தைகளிடம் விளையாடுவது முதல் பெரியவர்களிடம் ஆய்வுகளின் முக்கியத்துவத்தைப் புரியவைப்பது என ஒவ்வொரு நொடியும் புதிய கற்றல்களும், கற்பித்தல்களுமாக நகர்கின்றன சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையத்தின் 12 ஆண்டு கால அனுபவங்கள்.
இங்கு பறவைகளைப் பற்றி மட்டுமல்லாது சிங்க வால் குரங்கு, யானை போன்ற வன உயிரனங்களைப் பற்றியும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு பற்றிய ஆய்வுகளையும் மேற்கொள்கின்றனர். தெற்கே அந்தமான் நிக்கோபார் முதல் வடக்கே காஷ்மீர் வரையிலும், கிழக்கு பங்களாதேசு முதல் மேற்கே குஜராத் வரையிலும் விஞ்ஞானிகளின் வழிகாட்டலில், ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
யார் இந்த சாலிம் அலி?
2.0 திரைப்படம் வெளியானத்திலிருந்து, ‘பறவை மனிதர்’ என்றாலே உண்மையாகவே சினிமா நடிகர் அக்சய்குமார் என்றுதான் குழந்தைகளும் பொது மக்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பறவை ஆராய்ச்சியாளராக பல விமர்சனங்கள் இந்தப் படத்தை பற்றி இருப்பினும், இப்படத்திற்குப் பிறகு குழந்தைகளிடம் நான் ’2.0’ என்றவுடன் எனது உரையைக் கவனிக்கின்றனர் என்பதில் சுயநலமான மகிழ்ச்சிதான்.

ஆனால் உண்மையான பறவை மனிதர், பறவையியலாளரின் தந்தை என்றால் அது டாக்டர் சாலிம் அலி (Dr. Sàlim Ali) தான். பம்பாயில் உள்ள மாமா வீட்டில் வசித்து வந்தார் சாலிம் அலி. இருபதாம் நூற்றாண்டில் ஏர் கன் (Air Gun) எனப்படும் குருவி சுடும் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருந்தன. ஒன்பது வயதே ஆன சாலிம் அவர்களுக்கு ஒரு துப்பாக்கியைப் பரிசளிக்கிறார் அவருடைய மாமா. பள்ளி விடுமுறை நாட்களில் பறவைகளை சுட்டு வீழ்த்தி மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார் சாலிம் அலி. ஒருநாள் அவர் சுட்ட குருவியின் தொண்டைப் பகுதியில் மஞ்சள் நிறம் இருப்பதைக் கவனித்தார். ’ஏன்?’ என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கான விடையைத் தேடவும் தொடங்கினார். அவருடைய மாமாவிடம் கேட்க, அவர் BNHS என்ற பிரிட்டிசாரல் நிறுவப்பட்ட பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் செயலாளர் W.S. Millerd என்பவரைச் சந்தித்து இக்கேள்விக்கு விடை கேட்கும்படி அனுப்பி வைத்துள்ளார். அப்பறவை மஞ்சள் தொண்டை சிட்டு ஆண் பறவை என்ற பதிலைக் கொடுத்தார் மில்லார்ட். அதோடு நிற்காமல் அந்த நிறுவனத்தில் ஆராய்ச்சிக்காக சேகரித்து பாடம் செய்து வைத்திருந்த பறவை மாதிரிகளை சாலிம் அலிக்கு மில்லார்ட் அவர்கள் காட்டினார். வெவ்வேறு வண்ணங்களும், அளவுகளும் கொண்ட பறவைகளைக் காண்பித்ததும் பறவைகளைப் பற்றி முழுமையாகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் சாலிம் அலிக்கு எழுந்துள்ளது.
சாலிம் அலி பிறந்து ஓராண்டிலேயே அப்பா இறந்துவிட்டார், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அம்மாவும் இறந்துவிட்ட நிலையில்தான் அவரது மாமா சாலிமையும் இவருடைய எட்டு சகோதர சகோதரிகளையும் பம்பாயில் வளர்த்தார். ஆதலால் பள்ளிப்படிப்பை 1913ல் முடித்த பிறகு புனித சேவியர் கல்லூரியில் விலங்கியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் படிக்க முடியாத காரணத்தால் ஓராண்டிலேயே படிப்பைத் துறந்து குடும்பத் தொழிலைக் கவனித்து வந்தார். அப்போதும் பறவை நோக்கலை மட்டும் தொடர்ந்து வந்தார். இதற்கிடையில் அவருடைய மாமாவும் இறந்துவிட்டார். கைவிட்ட கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். இம்முறை தாவரவியல், கணக்கு பதிவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களை ஒரே காலங்களில் படித்து முடித்து, 1918ல் தேஹ் மினாவை திருமணமும் செய்து கொண்டார்.
பல்வேறு மாகாணங்களில் ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜாக்களுக்கு அங்கிருக்கும் பறவைகளைப் பற்றி ஆவணப்படுத்தித் தருவதாக கடிதம் எழுதினார். ஹைத்ரபாத் நிஸாம் அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். பம்பாய் வரலாற்றுக் கழகமும் ஏற்றுக்கொண்டது. அதை முடித்த பின் திருவாங்கூர் – கொச்சி மாகாண காடுகளுக்கு சென்றார்.
அப்போது பல கேள்விகள் எழுந்தன. அவருடைய மனைவியுடன் சேர்ந்தே விடைகளைத் தேடி அலைந்தார். பள்ளம்-மேடான சாலைகளில் மாட்டு வண்டிகளில் பயணம் செய்தனர். இருவரும் சிறிய கூடாரங்களில் தங்கினர். அனைத்து விதமான கடினமான சூழலிலும் இருவரும் சேர்ந்தே பயணித்தனர். ‘The Book of Indian Birds’ என்று 1934-1939 வரையிலான காலத்தில் இந்தியப் பறவைகளை பற்றி புத்தகம் எழுதினர். இப்புத்தகம் 1941 ல் வெளிவந்தது. விடுதலைப் போராட்டத்தின் மூலம் சிறையில் இருந்த ஜவஹர்லால் நேருவைச் சந்தித்து இப்புத்தகத்தை இவருடைய கையெழுத்துடன் கொடுத்தார். படித்து ஆச்சரியமடைந்த அவர் தனது மகள் இந்திரா காந்தி அவர்களுக்கு பரிசளித்ததைத் தொடர்ந்து உலக அளவில் இந்நூல் கவனத்தைப் பெற்றது.
சாலிம் அலியினால் ஏற்பட்ட திருப்புமுனைகள்
சாலிம் அலி அவர்களின் ஆய்வு பறவைகளை மட்டும் காப்பாற்றவில்லை. கேரளத்தில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு, ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயம் ஆகிவையும் அவரது ஆய்வுகளால் காப்பாற்றப்பட்டன. தற்போதும் இவர் அறிமுகபடுத்திய பறவைகளின் காலில் வளையமிடுதல், மற்றும் இவர் வெளியிட்ட புத்தகம் ஆகியவற்றையே பறவை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகிறோம்.
ஏன் இவர் பெயரில் ஆராய்ச்சி மையம்?
வட இந்தியாவில், மகாராஷட்ராவில் BNHS போல தென் இந்தியாவிலும் ஒரு ஆராய்ச்சி நிலையம் வேண்டும் என்று அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியில் பொறுப்பிலிருந்த இந்திரா காந்தியிடம் கோரிக்கையை வைத்தார் சாலிம் அலி. ஆனால் அதை நிறேவேற்றுவற்குள் 1987ல் இறந்துவிட்டார். அதன் பின் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 1990 ல் சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையம் தொடங்கினர்.
குறிப்பிடத்தக்க தற்போதைய ஆய்வுகள்
அந்தமான் தீவுகளில் உள்ள குகைகளில் Edible nest swift என்ற பறவையின் கூடு மனிதர்களின் உணவுக்காக சீனாவிற்கு கடத்தப்பட்டு வந்த நிலையில் அதன் இனம் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனை அறிந்த விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்த மக்களுக்கு மாற்று முறைகளைக் கற்றுக்கொடுத்து தற்போது அந்தப் பறவை இனம் அதே மக்களால் காப்பாற்றப்பட்டு வருகிறது.
சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையத்தில் உள்ள நச்சுத்துறையியல் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் என்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லி 2011 ஆம் ஆண்டு கேரளாவில் தடைசெய்யபட்டது.
தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வனப்பகுதியில் அமையவிருக்கும் இந்தியாவின் முதல் தேவாங்கு காப்பகம் சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையம் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையின் அடிப்படையில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பல முக்கியப் பிரச்சனைகளுக்கு ஆய்வுகள் மேற்கொண்டு அறிவியல்பூர்வமாக தீர்வுகளை முன்வைத்து, மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்கள் சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையத்தின் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும். எதிர்காலத்திலும் வன விலங்குகள், சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளுக்கு திருப்புமுனையாக விளங்கும் சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பறவை நோக்கல் என்பது பொழுதுபோக்காக ஆரம்பித்து பிற்காலத்தில் மொத்த இயற்கையையும் காப்பாற்ற ஆராய்ச்சி முடிவுகளைச் செயல்படுத்தி, அவரே பி.என்.எச்.எஸ் நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பு ஏற்கும் அளவிற்கு உயர்ந்தார் சாலிம் அலி. சில வருடங்களுக்கு முன் மேல்தட்டு மக்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட பறவை நோக்கல் எனும் இத்துறை தற்போது அரசுப் பள்ளி மாணவர்கள், கிராமப்புற மக்கள் என விரிவடைந்துள்ளது என்பதை மிகப்பெரும் புரட்சியாகவே கருதுகிறேன்.
“I suppose I have done my bit, It’s now up to you younger people” (நான் என்னுடைய பங்கை முடித்துவிட்டேன், இனி இளைஞர்களாகிய உங்கள் கையில்) என்ற பறவை மனிதர் Dr. சாலிம் அலி அவர்களது வரிகளை நாம் அனைவருமே மனதிற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையுடன் இக்கட்டுரையை முடிக்கிறேன்.
*******