இணைய இதழ்இணைய இதழ் 83கட்டுரைகள்

KILLERS OF THE FLOWER MOON – பாலைவன லாந்தர்

கட்டுரை | வாசகசாலை

டேவிட் க்ரான் எழுதிய THE KILLERS OF THE FLOWER MOON (THE OSAGE MURDERS AND THE BIRTH OF FBI) என்னும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம்.

1920ல் ஓசேஜ் என்னுமிடத்தில் ஓசேஜ் என்றழைக்கப்படும் செவ்விந்தியர்கள் வெள்ளை அமெரிக்கர்களுடன் இணைந்ததை ஏற்றுக்கொள்ள இயலாத மூத்த செவ்விந்தியர்கள் தங்களின் இயலாமையின் அடையாளமாக SACRED PIPE என்றழைக்கப்படும் ஒரு குழாயைப் புதைத்து சம்பிரதாயம் செய்கிறார்கள். ஓகாலமா இட ஒதுக்கீட்டின்படி அவர்களுக்கான தொகை கிடைக்கிறது. அதனால் செவ்விந்தியர்கள் தற்காலிகமாக பணம் படைத்தவர்களாகிறார்கள். தங்களின் வாழ்வை மேம்படுத்தவும் செய்கிறார்கள். வீடுகளை அலங்கரித்துக் கொள்கிறார்கள். வாகனங்கள் கால் நடைகளை உரிமையாக்கிக் கொள்கிறார்கள்.

அவர்களிடமிருந்து நூதனமாக வளங்களை பொருளாதாரத்தை அபகரிக்க வெள்ளை அமெரிக்காவைச் சேர்ந்த சிலரின் திட்டமிடலால் அன்றைய காலகட்டத்தின் அசாதாரண ஆயுதமான துப்பாக்கியாலும், விஷம் வைத்தும் ஒரே இனத்தைச்சார்ந்த செவ்விந்தியர்களை (அறுபதிலிருந்து நூறு வரை இருக்கலாமென ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்) கொன்றழித்த சம்பவங்களை ஆதாரப்பூர்வமாக எழுத்தாளர் டேவிட் க்ரான் தந்திருக்கிறார். அதனை திரைப்படமாக காணும்போது ஒடுக்கப்பட்ட இனத்தின் மீதான அட்டூழியங்களை நூறாண்டுகளுப்பிறகும் நம்மால் உணர முடிகிறது.

பேராசையும் குறுக்குபுத்தியும் கொண்ட எர்னஸ்ட் எனப்படுபவர் உலகப்போரிலிருந்து ஒகாலமாவில் இருக்கும் தனது மாமா வில்லியம் ஹேல் என்பவரிடம் தஞ்சமடைகிறார். அப்பகுதியின் துணை ஷெரிஃபாக இருக்கும் ஹேல் ஓசேஜ் வாசிகளின் மொழியைப் பேசுபவராகவும் அம்மக்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி ஊக்கப்படுத்துபவராகவும் அப்பகுதியின் கிங் என தன்னை அறிவித்துக்கொண்டு சாந்தமாக காட்டிக்கொள்ளும் ஹேல் வக்கிரமான உள் திட்டத்துடன் இரட்டை வேஷதாரியாக வலம் வருகிறார்.

போர் வீரர்களுக்கு உணவு சமைத்துக்கொடுக்கும் பணியிலிருந்ததாக சொல்கிறார் எர்னஸ்ட். பணத்தின் மீதான பேராசையை மாமாவிடம் வெளிப்படுத்துகிறார். எர்னஸ்டை பயன்படுத்தி ஒசேஜ் இனத்தின் பெரிய குடும்பங்களுள் ஒன்றை தன்வசப்படுத்த மாமா ஹேல் கச்சிதமாக திட்டமிடுகிறார். இவருக்கு உதவியாக எர்னஸ்டின் சகோதரர் பைரனும் செயல்படுகிறார்.

ஓசேஜ் குடும்பத்தைச் சார்ந்த மோலி என்னும் பெண்ணிற்கு வாகன ஓட்டியாக அறிமுகமாகும் எர்னஸ்ட் மோலியை தனது காதல் வலைக்குள் விழச்செய்கிறான். நாளடைவில் மோலியை உண்மையாகவே நேசிக்கும் எர்னஸ்ட் தனது மாமாவின் திட்டத்திற்கும் உடன்பட்டு நடந்து கொள்கிறான். எர்னஸ்ட்டின் இந்த செயல்பாட்டினை வைத்து அக்காலத்தின் கையாளாகாத வெள்ளை அமெரிக்கர்கள் சூழ்ச்சிகளுக்கு உடன்பட்டு போனதை புரிந்துகொள்ளலாம். இருவரும் கத்தோலிக்க மற்றும் ஓசேஜ் முறைப்படி திருமணம் செய்துகொள்கிறார்கள்.

ஓசேஜ் குடும்பத்தில் அடுத்தடுத்துக் கொலைகள் நடக்கின்றன. மோலியின் சர்க்கரை நோய்க்கு கொடுக்கப்படும் அப்போதைய அரிய மருந்தான இன்சுலின் ஊசிகளில் எர்னஸ்ட் விஷத்தைக் கலந்து செலுத்துகிறார். மோலி கர்ப்பமாகவும் நோய்ம்மையுடன் மரணத்தை எதிர்த்து போராடுகிறாள். தனது வீட்டின் உணவு உள்பட அனைத்தையும் சந்தேகம் கொள்கிறாள்.

வில்லியம் ஹேலின் திட்டப்படி மோலியின் சகோதரிகள் சுடப்பட்டும் விஷத்தினாலும் மரணிக்கிறார்கள். ஹேல் எர்னஸ்டிடம் மோலி குடும்பத்தை அவரது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சொல்கிறார். அவர்களின் headrights எனப்படும் தலைமை உரிமைக்கான தொகையை அடைய திட்டமிடுகிறார்.

ஆனால் ஹேல் எதிர்பார்க்காத சில நடவடிக்கைகளை மோலி எடுக்கிறார். தனது பகுதியைச் சார்ந்த அதிகாரிகளின் நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை இழந்து வாஷிங்டன் டி. சி. க்கு செல்கிறார். தனது உடல்நிலைக் குறித்த சந்தேகங்களை பாதிரியாரிடம் பகிர்ந்து கொள்ளும்போது அவருடைய அறிவுரையின்படி ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜிடம் கோரிக்கை வைக்கிறார். அதன்படி The Bureau of Investigation (BOI) ஓசேஜ்களின் மரணங்களை விசாரிக்கத் தொடங்குகிறார்கள்.

தீவிர விசாரணைக்குப் பிறகு வில்லியம் ஹேல், பைரன் மற்றும் எர்னஸ்ட் கைதாகிறார்கள். தொடக்கத்தில் மாமாவிற்கு எதிராக உண்மைகளை வெளிப்படுத்த தயங்கிய எர்னஸ்ட் தனது சிறிய மகளின் மரணத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் தவிக்கிறார். மோலியின் மீதான காதலும் அவரை உறுத்தவே மாமா ஹேலின் அனைத்து திட்டங்களையும் தான் அதற்காக உடன்பட்டதையும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தருகிறார். தனது மனைவிக்கு இன்சுலினில் விஷம் கலந்ததை மட்டும் மறைத்து விடுகிறார்.

சிறையிலிருக்கும் எர்னஸ்ட்டை சந்திக்கு மோலி உனது குற்றங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாயா? என்று கேட்கிறார். அப்போதும் உண்மையை மறைக்கும் எர்னஸ்ட்டை நிரந்தரமாகப் பிரிகிறார் மோலி.

இதற்குப்பிறகான நிகழ்வுகளை மேடையில் கதைசொல்லும் பாணியில் இசையோடு நிகழ்த்தி முடிக்கிறார்கள். சிறிதுகால சிறை தண்டனை கொலைகளுக்கும் துரோகங்களுக்கும் இன அழிப்புக்கும் முழுமையான தண்டனையாக இருந்து விடுமா என்ற கேள்வியை பார்வையாளர்கள் சுமந்துகொண்டு திரையரங்கத்திலிருந்து வெளியேறுகிறார்கள்.

எண்ணெய் வளத்திலிருந்து அவர்களுக்கான அழிவும் ஆபத்தும் தொடங்கியது. மிளகு, பட்டு, மசாலாக்கள் மற்றும் தேயிலைக்காக கிழக்கிந்திய கம்பெனிகள் இந்தியாவிற்குள் ஊடுருவியது மறுக்க இயலாதது. உலகின் அனைத்து வளங்களும் தங்களுக்கே சொந்தமானதென எண்ணும் மேட்டிமைத்தன ஆதிக்க புத்தியிலிருந்துதான் போர்களும் இன அழிவுகளும் நடந்திருக்கின்றன. புதைக்கப்பட்ட உண்மைகள் வெளியாகும் தருணத்தில் நாடு கைமாறி சூழல் கைமீறிப் போயிருக்கிறது. (உங்களுக்கு இந்த இடத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தளத்தின் மீதான சூழ்ச்சி நினைவுக்கு வந்தால்… நன்று)

திரைப்படத்தின் மேக்கிங் பற்றி நிறைய எழுதியாக வேண்டும். நூறு வருடங்களுக்கு முந்தைய தளத்தை கண்முன் காட்சியளிக்க தருவது அத்தனை எளிதான காரியமில்லை. கலை இயக்குனர்கள் அதை இங்கு செம்மையாக செய்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் மோலியின் வீட்டிற்குள் சுழலும் கேமரா அடுக்களையில் தண்ணீரை அடிகுழாய் இறைப்பியில் இறைப்பது போன்ற காட்சி அத்தனை நுட்பமானதாக இருந்தது.

மோலியின் தாய் லிசி உண்மைகளை அறிந்தும் அதை நிரூபிக்க இயலாத அழுத்தமான பெண்ணாக காட்சியளிக்கிறார். தனது மரணத்தை முன்னமே அறிந்துகொள்வதாக சொல்கிறார். ஆந்தையின் உருவத்தில் மரணம் அழைப்பதாகவும் முன்னோர்களுடன் நடனமாட செல்வதாக சொல்கிறார். இது பழங்குடியினரின் தீர்க்கமான மரணத்திற்கு பிந்தைய வாழ்வினைக்குறித்த பார்வையை காட்டுகிறது. அவர் மரணிப்பதற்கு முன்பாக அவருடைய கூந்தலை தலைவாரி விடும் சீப்பினால் ஒழுங்குபடுத்துகிறார்கள். பிறகு அந்த சீப்பை ஆற்று நீரில் மிதக்கவிடுவதும் குறியீடாக இருக்கிறது.

இசை இப்படத்தின் உயிரோட்டாமாக இருக்கிறது. ROBBIE ROBERTSON இசையமைத்திருக்கிறார். கொண்டாட்டங்களுக்கும் துக்கத்திற்குமென இசையை மனதின் ஆழத்திற்குள் செலுத்தி சலனப்படுத்தும் உக்தியில் இசை அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இறுதியில் வெற்றியைக் கொண்டாடும் பழங்குடி நடனத்திற்கான இசையில் அதுவரை இழந்த இழப்புகளுக்குமான துக்க இசையையும் கலந்து கொடுத்திருக்கிறார் அது ஒரு மாயை.

ஒளிப்பதிவு கச்சிதமான வெயிலையும் இரவின் அமைதியையும் ஒருங்கே பதிவு செய்கிறது. FLOWER MOON என்று ஏப்ரல் மே மாதத்தில் பூக்கும் பூக்களை அழைக்கிறார்கள். தந்தை தாய் தாத்தா பொன்ற உறவுகளை சூரியன், சந்திரன், பூமி போன்ற இயற்கையோடு ஒப்பிடுகிறார்கள். வகான் –டா என்னும் கடவுளை வழிபடுவதாகவும் சொல்கிறார்கள்.

இன்றுவரை பின்பற்றப்படும் ஆத்மார்த்த நம்பிக்கை கலாச்சாரங்கள் மூத்தக்குடிகளிடமிருந்து அபகரித்துக் கொள்ளப்பட்ட அல்லது மரியாதையுடன் பின்பற்றக்கூடிய அவர்களின் நம்பிக்கைகளின் ஊற்றாகத்தான் இருந்திருக்கிறது என்பதை இப்படம் மேலும் விளக்குகிறது.

Martin Scorsese

SHUTTER ISLAND
THE WOLF OF WALL STREET
THE IRISHMAN
THE DEPARTED

போன்ற திரைப்படங்களை இயக்கிய சிறந்த இயக்குனர் MARTIN SCORSESE இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் மார்டின் இப்படம் முழுக்க நம்பிக்கை துரோகம் குறித்தான உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதென கூறினார். நடிப்பு அரக்கர்களான ROBERT DE NIRO, LEONARDO DICAPRIO, LILY GLADSTONE ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளார்கள். டிகாப்ரியோவின் உடல்மொழியை அத்தனை நுணுக்கங்களாக செதுக்கியுள்ளார்கள். கண்கள், உதடு, கைகள் என அனைத்தும் குற்ற உணர்ச்சியிலும் ஆசையிலும் துடிக்கின்றன. காதலும் அச்சமும் கலந்து மோலிக்கு கலந்த விஷத்தை தானும் அருந்திக் கொள்கிறார். ஓர் ஒப்பற்ற நடிப்பின் ரசிகன் டிகாப்ரியோ.

மேலும் மேலும் பேசுவதற்கு நிறைய அம்சங்களைப் பொதிந்துள்ள இப்படம் குறித்து என்னுடைய சிறிய பார்வையை தந்துள்ளேன்.

நன்றியும் அன்பும்

*********

palaivanam999@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button