
வெள்ளை நிற குதிரைப் படையொன்று போருக்குத் திரண்டு வருவது போல் இருந்தது. குதிரைகள் மடக்கிய தன் முன்னங்கால்களை அசால்டாகத் தூக்கி, பாய்ந்து எழுந்து புழுதி கிளம்ப எதிரிப்படையை நோக்கி வருவது போலவே இருந்தன அலைகள். பௌர்ணமி நாளில் அத்தனை ஆக்ரோஷம் அந்த அலைகளுக்கு ஆகாதுதான். பீறிட்டுக் கிளம்பிவரும் ஒவ்வொரு அலையும் ஒற்றை வெண்குதிரைப் போல அத்தனை கம்பீரமாய் இருந்தது. நிலவொளியில் புறப்பட்டுக் கிளம்பும் அதன் வேகம் என்னவோ ஒரு மாயம் செய்து கொண்டே இருந்தது. இந்த அலைகள் தாத்தன் முப்பாட்டன் காலத்துக்கு முன்பிருந்தே வாழ்ந்து வந்தாலும் இவைகள் எப்போதும் கிழடுகள் ஆனதில்லை. புதுப் பெண்டாட்டியைப் பார்த்ததுமே வெடுக்கென எழுந்து கொள்ளும் ஆண்குறியைப் போலவே கடல் தன் அலை என்கிற குறியை ஓயாமல் தன் மணல் காதலியின் மீது செலுத்திக் கொண்டே இருக்கிறது.
கடல் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கயல். அவனிடம் பேசுவதற்கு அவளிடம் ஒன்றுமில்லை. பேச வேண்டியதெல்லாம் பேசியாயிற்று. கடல் காற்று சற்றுக் கவிச்சி வாசத்துடன் முகத்தில் மோதிக் கொண்டிருந்தது. அந்த நாத்தம் கிட்டத்தட்ட அவளுக்குப் பழகிய ஒன்றுதான்.
‘பூவெல்லாம் வச்சினுகீரே… பேச மாட்டியா என்கிட்ட? இப்டி வந்து போட்டு பக்கமா சாஞ்சிக்க. யாரும் பாக்க மாட்டாங்க. அடுத்த வாரமே ரெண்டு ரூமு கீர மாரி ஒரு வூடு பாத்துடலாம்.’ மணலில் கோடு போட்டுக் கொண்டிருந்த கயலின் வலதுக்கையை எடுத்து தன் மார்பில் வைத்துக் கொண்டான் முருகேசன்.
’வுடுயா பேச மாட்டேன்’ என்று கயல் தன் கையை இழுத்த வாக்கில் ஜிகினா போட்ட கண்ணாடி வளையல் முருகேசனின் மார்பைக் கீறிவிட்டுப் போனது.
’ஆ…ஆ…’ மார்பைத் தேய்த்துக் கொண்டிருந்தான். ‘ கயலு … அங்க பாருமே… அங்க பாரேன்’.
கயல் நோட்டமிட்ட தூரத்தில் இரண்டு பேர் இருந்தார்கள். இரண்டு பேரும் இதழ்களைக் கவ்விக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கவ்விக் கொண்டிருக்கும் வேகத்தைப் பார்த்தால் அநேகமாய் அவர்கள் அடுத்தகட்டம் நோக்கி முன்னேறியாக வேண்டும். ஊதக்காத்து சும்மா இருக்க விடாது. அவள் தன் கைகளை மெதுவாய் அவன் இடுப்பருகே கொண்டு போனாள். அதற்கு மேல் அங்கு கூர்ந்து கவனிக்க ஒன்றுமில்லை. அப்படி கவனிப்பதால் இன்னும் கொஞ்சம் ஆத்திரம் கிளம்பும் என்பது கயலுக்கு நன்றாகவே தெரியும்.
அலைகள் கரைதொட்டுவிட்டுப் போன ஈர மணலில் நண்டுகள் குறுக்கும் நெடுக்குமாய் விரவிக்கிடந்தன. கண்கள் இப்போது நண்டுகள் மீதிருந்தன. கயலின் இடுப்பருகே நண்டு ஊர்வது போல் இருந்தது. முருகேசன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டிருந்தான். கண்களில் கண்ணீர் கொப்பளித்துக் கொண்டிருந்தது. இந்த உலகமே உல்லாசமாய் இருக்கும் போது நமக்கு மட்டும் ஏன் இந்த கேடுகெட்ட வாழ்வு என்பது போல் இருந்தது. வழியும் கண்ணீரை தன் முந்தானையால் துடைத்துக் கொண்டிருந்தாள். முருகேசன் அப்போதுதான் நெற்றி முத்தத்தை ஆரம்பித்திருந்தான்.
‘க்க்கா … க்க்கா…கா… சுண்டல்கா. சூடான சுண்டல்கா ‘ என்றது அந்த குரல். இவன் ஒருத்தன் நேரங்கெட்ட நேரத்துல …அதெல்லாம் ஒன்னும் வேணாம்பா.கெளம்பு … கெளம்பு.. ஒரு மன்ஷன நிம்மதியா இருக்க வுடறானுங்களா. ச்சை’.
’ நமக்குன்னு படுக்க ஒரு ரூம் இருந்தா இங்க வந்து இப்டி கஷ்டப்படணும்னு என்ன தலையெழுத்துனு கேக்குறேன். வூடு பாக்குறேன் .. வூடு பாக்குறேன்னு மூணு மாசமா இதே தான் சொல்ற… ஆனா பாத்த மாதிரி இல்ல. இந்த மாதிரி வெட்டவெளியில வந்து நிம்மதியா பேச கூட முடியல…’
’அட இருடி. .. மேஸ்திரி இந்த வாரம் அட்வான்ஸ் தரன்னு சொல்லிக்கிராரு. அடுத்த வாரமே வூடு பாத்துடலாம். நமுக்காச்சும் ஒரு ரூமு கீது. ராத்திரியானா பீச்சுக்கு வந்து ஒரு ரவுண்டு பாரு. அவென் அவெனுக்கு பெட்ஜீட் தான் ரூமு. பீச் மண்ணுலதான் குடும்பமே நடத்துறான். நான் இன்னா உன்ன இங்க வோணும்னா கூட்டிட்டி வரேன். ’’ முருகேசன் தன் பங்குக்குப் புலம்பித் தீர்த்தான்.
முருகேசனுக்கும் கயலுக்கும் முதல் ஒரு வாரம் மட்டும் தான் நடக்க வேண்டியது எல்லாமும் சுமுகமாய் நடந்து முடிந்திருந்தது. அதன் பிறகு இந்த மூன்று மாதத்தில் அவ்வப் போது ரகசியமாய் சில முத்தங்களும் கட்டிப் பிடித்தலுமே நடந்து கொண்டிருக்கிறது.
கடற்பரப்பில் படரும் நிலாவொளியைத் தாண்டி சற்று ஏறிட்டுப் பார்த்தால் பக்கத்தில் சில அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருந்தன. கீழடுக்கிலிருந்து மேலடுக்கு வரை கட்டம் கட்டமாகப் பரவியிருந்த சன்னல்களில் கணிசமாக மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பலர் தங்கள் சன்னல்களைத் திரையிட்டிருந்தார்கள். ஒரு சிலர் திரை விலக்கி வைத்திருந்தார்கள். கணிசமாக தூரத்திலிருந்து பார்ப்பதற்கு அவை கட்டடம் முழுக்க மாட்டி வைக்கப்பட்ட எல்இடி டிவிக்கள் போல தெரிந்தன. திரைபோட்ட ஜன்னல்களில் சற்று வெளிச்சம் குறைவாகவும் போடாதவைகளில் கொஞ்சம் கூடுதலாகவும் இருந்தது. கண்களை மிக அழுத்தமாய் பரவவிட்ட போது சன்னல்கள் வழியே இருவர் தங்களை இறுக்கி அணைத்துக் கொண்டிருப்பது போலவே தெரிந்தது. கயல் தன் கண்களை அகலாமல் கட்டடத்தில் பதித்திருந்தாள்.அவளுக்கு நிழல்கள் போன்ற உருவம் தவிர வேறெதுவும் தெரியவில்லை.
தூரத்தில் நிழல்கள் போல தெரிந்த அந்த இருவரும் , ஜன்னல் வழியாக கடலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
‘பேபி… வாட்ட லவ்லி ஃப்ராக்ரன்ஸ்’ என்று அவள் தலையை முகர்ந்துகொண்டே பின்னங்கழுத்தில் படரிக்கிடந்த கற்றைக் கூந்தலை தன் விரல்களால் கோதி முன்பக்கமாக தள்ளிவிட்டுக் கொண்டிருந்தான் அவன். தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு அவள் வெறும் ப்ரேசியர் மட்டுமே அணிந்திருந்தது போல் இருந்தது. ஆனால் அது ஃப்ரீ ஸ்லீவ்லெஸ் ஷாட் கவுன். கஷ்டப்பட்டு க்ளீவேஜை மறைக்க வேண்டிய அவசியமில்லாத காதல் இரவுகளுக்கு மிகப் பொருத்தமான உடைதான். அவள் பின்னங்கழுத்தில் ஏற்கெனவே ஹிக்கி என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய செல்லக்கடிகளின் தழும்புகள் பட்டன் ரோஜா நிறத்தில் ஆங்காங்கே தென்பட்டன. பின்பக்கமிருந்து மெதுவாய் அணைத்தபடி அவள் இரண்டு கைகளையும் கோர்த்தபடி தன் இறுக்கத்தைக் கூட்டியிருந்தான் அவன். இருவரும் சம உயரத்தில் இருந்தவாறே அலைகள் மின்னுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் மெதுவாய் தன் விரல்களின் அழுத்தத்தைக் கூட்டிக் கொண்டே பேசுகிறாள்.
’பேபி… வாட்ட லவ்லி சினாரியோ. ஸீ தட் பீபுள். எவ்ளோ ஜாலியா ஓபனா ஹக் பண்ணிட்டு கிஸ் பண்ணிட்டு இருக்காங்கல்ல..’அவள் சொல்லவும்,
அவன் அங்கிருந்து கொண்டே பார்வையை நூற்றென்பது டிகிரிக்குப் படரவிட்டான். மெல்லிய இருட்டில் அத்தனை ஜோடிகளுக்குமான ஒரே அறையாக இருந்தது கடற்கரை. அத்தனைப் பேருக்குமான ஒற்றை விளக்காய் தூரத்திலிருந்தது நிலா. எல்லோரும் கொலு வைத்தது போல ஜோடி ஜோடியாக சீரற்ற வரிசையில், அதே நேரத்தில் சேர்த்துக் கட்டிய பொம்மைகள் போல ஒட்டிக்கொண்டவாறே உட்கார்ந்திருந்தார்கள். சிலர் நின்ற மேனிக்கு ஒட்டி வைத்த பொம்மைகள் போல தெரிந்தார்கள்.
’ய்யா பேபி…ஃபன்னி கைஸ். பக்கத்துல யார் கைல மொபைல் இருக்கும்னு கூட கவலைப்படாம கிஸ் பண்ணிட்டு இருக்காங்க. இட்ஸ் நாட் சேஃப்டி.. டிஸ்டபர்ன்ஸ் இருந்துட்டே இருக்கும்ல. எனக்கெல்லாம் பப்ளிக்கா பீச்சில கிஸ் பண்றது பிடிக்கல பேபி. பட் ஐ லவ் பீச்’. அவன் சொல்வதைக் கேட்டு,
அவள் அப்படியே அவன் கைகளைச் சற்றுத் தளர்த்திக் கொண்டு திரும்பிக் கொண்டாள். அவன் மீசையைக் கடித்து இழுத்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு கௌதம் மேனன் படமொன்று ஓடிக்கொண்டிருப்பதாகத் தெரியும்.
மண்ணென்னெய் பம்ப் ஸ்டவ் எரியும் போது புஸ் … புஸ் என்று அழுத்தமாக ஒரு சத்தம் வருமே… அவ்வாறாகவே பெரிய ஸ்டவ் ஒன்றை பற்ற வைத்தது போல் கடல் அலைகள் ஓயாமல் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன. கடல் தன் ஊதக் காற்றால் அங்கிருக்கும் காதலர்களையெல்லாம் சூடாக்கிக் கொண்டிருந்தது.
கயல் இப்போது முருகேசனின் தோளில் சாய்ந்திருந்தாள். முருகேசனுக்கு ஹிக்கி முத்தங்கள் பற்றியெல்லாம் தெரியாது. அவசரத்துக்குக் கிடைத்த ஏதோ ஒரு இடத்தில் அவன் முத்தமிட எத்தனித்தான்.
‘தாயி மகமாயி… நல்லதே நடக்கும் இனி. அடுத்த மாசமே கல்யாணம் ஆகிரும். அடுத்த வருசத்துக்குள்ள ஆம்புள புள்ள தொட்டில்ல தவழும்… ‘ தாயி நல்ல குறி சொல்றேன் .. முப்பது ரூவா தான்’ என்றாள் கிழவி ஒருத்தி.
’முதல்ல சுண்டல், அப்புறம் பூக்காரி, பெறகு பலூன் விக்கிற பையன், ரெண்டு மூணு குட்டி பசங்க வேற புக்கு வாங்கிக்கச் சொல்லி கேட்டுட்டுப் போச்சுங்க. கொஞ்சம் முன்னாடி தான் திருநங்கை ஒருத்தர் கூட ஆசிர்வாதம் பண்ணிட்டு போயிருந்தாங்க. இப்ப இந்தம்மா …என்பது போல நினைத்துக் கொண்டே தலையை ஏறிட்டு பார்த்துக் கொண்டே சொன்னான் முருகேசன்.
’எங்குளுக்கு கல்யாணம்லாம் எப்பியோ ஆயிருச்சு. இப்ப வந்து குறி சொல்றியா?’
-கிழவி அங்கிருந்து நகர்ந்து போனாள். எதையோ முனகிக் கொண்டே போனாள். பாவம் அவள் கஷ்டம் அவளுக்கு.
இம்முறை கயல் முருகேசனின் கைகளை அவளாகவே இழுத்துப் பற்றிக் கொண்டாள். கயல் முருகேசனின் சொந்த அக்காள் மகள் தான். ஆத்தூருக்கு அக்கா குடும்பம் போன பிறகு அம்மாவும் பிள்ளையும் சைதாப்பேட்டையில் ஒரு பேட்சுலர் ரூமெடுத்து தங்கிக் கொண்டார்கள். ஒரே ஒரு ரூம்தான் . சமைக்க, படுக்க புரள எல்லாம் ஒரு அறைதான். குளிக்க கக்கூஸ் போகவெல்லாம் பக்கத்தில் இருக்கும் சந்து பக்கமாக இருக்கும் பொதுக்கழிவறை. முருகேசன் வாங்கும் தினக்கூலி அந்த சின்ன வீட்டு வாடகைக்குத்தான் கட்டுபடியாகும். தவிர கல்யாணம் ஆனபிறகு வீட்டுக்கு மருமக வரப்போ வேறு வீடு பாத்துக்கலாம் என்று இருந்துவிட்டார்கள். ஒரு மழைநாளில் பாசி படிந்த படிக்கட்டு வழுக்கிவிட முருகேசன் அம்மா தவறிவிழுந்து கால் ஒடிந்து போய் படிக்கையில் விழுந்தாள். முருகேசனின் அக்காவும் கயலும் தான் கொஞ்ச காலத்துக்கு ஒத்தாசையாக இருந்தார்கள். ’நடு முதுகெலும்பு ரெண்டா ஒடஞ்சதால இனி உங்க அம்மா எழுந்து நடக்க வாய்ப்பில்லை’னு டாக்டர்கள் கையை விரித்தார்கள். பணம் இருந்தா பெரிய ஆஸ்பத்திரிகளா தேடிப் போகலாம். கட்டையில போற வயசுல எனக்குன்னு எதுவும் செலவும் வேணாம், சிரமமும் வேணாம்னு ஆத்தா சொல்லவும் , முருகேசனுக்கு கயலை கட்டி வைத்தார்கள். தூக்கி வளர்த்த பாட்டிக்கு பாட்டி… இப்ப மாமியார் வேற. கயல்தான் இப்போதும் பீ மூத்திரம் எடுத்துக் கொண்டிருக்கிறாள்.
கல்யாணம் ஆன முதல் ஒரு வாரம் தான் அக்கா வீட்டில் இருந்த போது கயலுக்கும் முருகேசனுக்கும் அதெல்லாம் நடந்தது. அதன்பிறகு படுக்கையில் இருக்கும் அம்மாவை வைத்துக் கொண்டு ஒரே அறையில் ரகசிய முத்தங்கள் தவிர வேறெதையும் நிகழ்த்திவிட முடியாது. இப்போ அப்போ என்று மூன்று மாதமாகியும் புது வீடு பார்க்க முடியவில்லை முருகேசனால். ஒரு முறை அம்மா தூங்கியப்பின் அவசரத்துக்கு கட்டிலுக்கு கீழ் ஒதுங்கினார்கள். இடுக்கத்தில் பெரிதாக எதையும் நிகழ்த்திவிட முடியவில்லை. இரும்புக்கட்டிலில் துரு பிடித்த கட்டிலின் வெல்டிங் செய்த இணைப்பில் கீறிக்கொண்டு ரத்தம் வந்தது தான் மிச்சம். அதன் பிறகு , கட்டிலுக்கு கீழ் போவதில்லை. யாராவது அம்மாவைப் பார்த்துக் கொள்ள ஆள் கிடைத்தால் கயலை இப்படி பீச்சுக்கு அழைத்து வந்துவிடுவான்.
இதுவே பழகிவிடுமோ என்கிற பயம் தான் கயலுக்கு. அவள் கனவு வீட்டில் ஒரு சின்ன படுக்கையறையும் அங்கு கொஞ்சம் மல்லிகைப்பூக்களும் சிதறி இருந்தன. அடுத்தவாரம் இந்த நிலை இருக்காது என கயல் இப்போது நம்பிக் கொண்டிருக்கிறாள். அவள் தலையில் சூடியிருக்கும் இந்த மல்லிக்கைச்சரம் கலவியில் கசங்கிச் சிதறி அறை முழுக்கப் பரவியிருக்கும் என்பது அவள் நினைப்பு.
தூரத்தில் தெரிந்த கட்டடத்தில் சன்னல் திரை மூடப்பட்டிருந்தது.
‘பேபி… இந்த டே எப்படி இருந்துச்சு. சூப்பரா எஞ்சாய் பண்ணியா?’
‘ய்ய்யா டார்லிங்… பட் சம் அதர் டே நாம ஏன் பீச்ல ஓபன் செக்ஸ் ட்ரை பண்ணக் கூடாது?… இந்த மாதிரி பப்ளிக் பீச்செல்லாம் வேணாம். எங்கயாச்சும் ப்ரைவேட் பீச் போலாம்… சேஃப்டியா இருக்கும்” அவள் தன் ஆசைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தாள்.
அவசரமாக, தன் இன்னர்வேரை எடுத்து மாட்டிக்கொண்டு ட்ராக் பேண்ட்டைத் தேடிக் கொண்டிருந்தான்.
‘எனக்கும் பிடிக்கும் பேபி… ஆனா இப்போலாம் எதுவுமே சேஃப்டி இல்ல. எங்க பாத்தாலும் சிசிடிவி கேமராஸ். யூ.நோ ஒன் திங் …ரெண்டு பேர் கிஸ் பண்ணிக்கிட்டா அதை ஏதோ எக்ஸிபிஷன் பாக்குற மாதிரி பாக்குற ப்ளடி பீபிள்ஸ் தான் இந்த நாட்ல இருக்காங்க… செக்ஸ் பத்தி எஜுகேஷன்ஸ் வேணும்னு சொல்வாங்க. ஆனா ஹஸ்பெண்ட் அண்ட் வொய்ப்னா கூட பப்ளிக்கா ஹக் பண்ணிக்க முடியாது. என் வொய்ப் தானே … ஓபன் செக்ஸ் வச்சுக்கலாம்னு நான் நினைச்சாலும் அதை திருட்டுத்தனமா விஷுவலாக்கி வைரல் ஆக்கிடுவானுங்க.
ஏதோ செக்ஸ்ங்கிறது பாக்காததப் பாக்குற அதிசயம் மாதிரி.’ அவன் பேசப் பேச விடாமல் சிணுங்கிக் கொண்டே இருந்தது அவன் கைபேசி.
’பேபி… உங்க பாஸ் தான் கால் பண்றார்’.
’யெஸ் நைட் பார்ட்டிக்கு வரேன்னு கமிட் பண்ணிட்டேன். நீ ஒன்னும் ஃபீல் பண்ணாத…நெக்ஸ்ட் மன்த் ஒரு ஃபாரின் ட்ரிப் போலாம்…. ஸீ யூ பை’ என்றான்.
அவன் அவசரத்தில் உள்ளாடையைத் திருப்பிப் போட்டுக் கொண்டிருந்திருப்பான் போல. ஜாக்கி என்பது திருப்பி எழுதியது போல இருந்தது. அவள் அதைச் சொல்வதற்கான அவகாசத்தைக் கூட கொடுக்காமல் அவன் அங்கிருந்து போனில் பேசிக் கொண்டே கிளம்பியிருந்தான். அவள் விளக்கை அணைத்துவிட்டு அந்த சன்னலின் திரையை மூடியிருந்தாள். கணிசமாக அந்த கட்டடத்தில் எல்லா சன்னல்களில் இருந்தும் இருள் மட்டுமே தெரிந்தது அப்போது.
முருகேசனும் கயலும் எழுந்து நின்று கொண்டார்கள். ’ஒரே ஒரு முத்தம் அந்த மாரி குடுத்துக்கலாமா?’ என்றான் முருகேசன். பக்கத்தில் இருந்த ஜோடி லிப்லாக்கில் மூழ்கியிருந்தது. சரி என்பது போல் தலை சாய்த்துக் கொண்டாள் கயல். அருகில் வந்தார்கள் இருவரும். மழை தன் பங்குக்குக் குறுக்கே வந்து நின்றது.
’ச்சே சனியன் பிடிச்ச மழை’ என்று அங்கிருந்தவர்கள் ஓடினார்கள். ’ரெயின் கிஸ்’ பற்றியெல்லாம் இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சீக்கிரம் வா… என்று கயலை இழுத்துக் கொண்டு ஓடினான் முருகேசன்.
அலைகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மணல் மீது ’ரெய்ன் கிஸ்’ செய்து கொண்டிருந்தது.