
மகாபோதியின் ஆலயத்தை நோக்கி நான் எடுத்த அந்த முதல் நடைபாதை, என் வாழ்க்கையின் வழக்கமான ஒரு பயணமாகத் தோன்றவில்லை. அது ஒரு அழைப்பாக இருந்தது. எங்கேயோ தொலைவில் இருந்து, ஆனால் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு மௌன அழைப்பு. அந்த ஆலயத்தின் வாசலை நான் முதன்முதலாக கடந்து சென்ற அந்த நொடி என் உடம்பைத் தாண்டி என் ஆன்மாவையே தொட்ட ஒரு அதிர்வை நான் உணர்ந்தேன். அது விளக்கம் அளிக்க முடியாத ஒரு உணர்வு; ஒரு பரிச்சயம் இல்லாத இடத்தில் கூட இங்கேதான் இருக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு பரிச்சயத்தின் வெப்பம். அந்த வாசலில் நின்றபடியே நான் சில நொடிகள் கண்களை மூடி நின்றேன். உள்ளுக்குள் ஒரு அலை எழுந்தது. அது பயம் அல்ல, அது மகிழ்ச்சியும் அல்ல, அது ஒரு அற்புதமான கலவையாக இருந்தது. என் மனம் முன்னதாகவே அந்த இடத்தோடு இணைந்துவிட்டது போல உணர்ந்தேன். அதன்பின் நான் மெதுவாக உள்ளே நுழைந்தேன். ஒவ்வொரு அடியும் என்னை இன்னும் ஆழமான அமைதிக்குள் அழைத்துச் சென்றது. நான் நெருங்கிக்கொண்டே போனபோது, தங்க நிறத்தில் ஒளிர்ந்த அந்த புத்தர் சிலை என் கண்களில் தென்பட்டது. அந்த சிலை ஒரு கலைப் பொருள் அல்ல. ஒரு உயிருள்ள அமைதியின் வடிவமாக இருந்தது. புத்தரின் முகத்தில் காணப்பட்ட அந்த சாந்தம் ஒரு மனிதன் அடையக்கூடிய உயர்ந்த நிலையை எனக்கு நினைவூட்டியது. அந்தச் சிலையைப் பார்த்த அந்த நொடியே என் உள்ளத்தில் ஏதோ திறந்தது. என் மூச்சு மெதுவாக மாறியது… அந்த அமைதி என்னுள் ஊறியது. அந்த இடத்தில் இருந்த அனைவரும் கண்களை மூடி தியானத்தில் இருந்தனர். அமைதி அந்த ஆலயத்தின் சுவர்களில் பிரதிபலித்தது. ஒரு மௌன இசையாக ஒலித்தது. நானும் மெதுவாக ஒரு இடத்தில் அமர்ந்தேன். ஆனால், நான் மற்றவர்களைப் போல தியானிக்கவில்லை. என் மனம் ஏற்கனவே புத்தருடன் உரையாட ஆரம்பித்துவிட்டது. அது வார்த்தைகளில் நடந்த உரையாடல் அல்ல, அது உணர்வுகளின் வழியாக நடந்த ஒரு தொடர்பு. புத்தர் என்னிடம் முன்பே சொன்னது எனது நினைவிற்கு வந்தது. “நான் தியானம் செய்த இடத்திற்குச் சென்று நீ அமர்ந்திரு, போதி மரத்தின் அடியில் அமர்ந்திரு, அங்கே உனக்கு ஒரு மாற்றம் காத்திருக்கிறது”.

உலகின் எல்லா சத்தங்களும் ஒரே நேரத்தில் சுருங்கி, ஒரு மௌனத்தின் இசையாக என் உள்ளத்திற்குள் ஓடி வந்தன. “எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இந்த மரம் எத்தனை ஆன்மாக்களின் கதைகளைக் கேட்டு இருக்குமோ?” என்று நான் எண்ணினேன். அந்த நிழலில் நின்றவுடன், எனக்குள் இருந்த குழப்பங்கள் ஒவ்வொன்றாக கரைந்துப் போகத் தொடங்கின. “தேடிக்கொண்டே போகும் இந்த வாழ்க்கைக்கு ஒரு முடிவு இருக்கிறதா?” என்று என் மனதிற்குள் கேள்வி எழுந்தது. அந்த சிலையை நேராக நோக்கியவுடன், என் உள்ளத்தில் எழும் உணர்வுகள் சாதாரணமானவை அல்ல. அவை காலத்தால் கசிந்த ஒரு ஆத்ம அனுபவத்தின் ஒலிகள். அதே நேரத்தில் பதில் சொல்லாமல் பதிலாக இருந்தது அந்த இடத்தின் அமைதி. பிறகு, நான் மீண்டும் மெதுவாக கண்களை மூடினேன். அந்த இருளுக்குள் ஒரு வெளிச்சம் பிறந்தது. நான் புரிந்துகொண்டேன், ’பயணம் என்பது இடங்களை அடைவதற்காக அல்ல, உள்ளத்தை அடைவதே’. என் கையில் இருந்த பேனா அந்த அனுபவங்களைக் காகிதத்தில் சிதறவிடத் துடித்தது. “இது ஒரு பயணம் இல்லை, இது ஒரு மறுபிறப்பு” என்று நான் எழுதினேன். ஆலயத்தின் ஒவ்வொரு கல்லும் என்னிடம் ஒரு வரலாற்றைக் கூறியது. அந்தக் கற்கள் வெறும் கட்டுமானம் அல்ல, அவை யுகங்கள் கடந்து வந்த தியானங்களின் சுவடுகள்.
மரங்களின் நிழல் என் தோள்களில் விழுந்தது. அது ஒரு இயற்கைத் தாலாட்டைப் போல இருந்தது. என் கண்களில் நீர்த்துளிகள் தோன்றின. அது துயரத்தின் நீர் அல்ல, அது பரவசத்தின் புனித நீர். அந்த நொடியில் நான் என்னை உலகின் ஒரு அங்கமாக உணரவில்லை. உலகமே என்னுள் அடங்கியதென உணர்ந்தேன். அந்த ஆலயத்தை நோக்கும் என் பார்வை, ஒரு தேசாந்திரியின் சஞ்சலமான பார்வை அல்ல.
“பயணம் என்பது பாதைகள் கடப்பது அல்ல, பரமத்தை அடையும் பரிசுத்தமான பரிவேசம்” என்று உணர்ந்தேன்.
“உருவெடுத்து வருவதெல்லாம் மாயை”:
புத்தரைப் பார்த்து வெளியே வந்த அந்த நொடியே, என் வாழ்க்கையின் பாதை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது என்பதை நான் அப்போது உணரவில்லை. ஆனால், அந்த மாற்றம் வெளியில் நடக்கவில்லை, அது என் உள்ளத்தின் ஆழத்தில் அமைதியாக வேரூன்றிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் காற்றே வேறொரு உலகத்தை சேர்ந்தது போல இருந்தது. “அமைதி, சாந்தம், கருணை”. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் என் மனதைச் சூழ்ந்தன. வெளியில் நான் நின்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு புத்த பிக்கு மெதுவாக என்னை அணுகினார். அவர் முகத்தில் இருந்த புன்னகை சாதாரணமல்ல. அது உள்ளத்தை வாசிக்கும் ஒரு அமைதியான மொழி. அவர் என் கையில் மூன்று இலைகளை வைத்து, ” உன் வாழ்க்கையில் சந்தோஷம் எப்போதும் நிலைக்கட்டும்” என்று ஆசீர்வதித்தார். அந்த வார்த்தைகள் என் காதுகளுக்கு வந்தபோதும், அது என் உள்ளத்தில் ஒரு விதையாய் விழுந்தது. அந்த மூன்று இலைகள் என் கையில் இருந்தாலும், அது என் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக மாறியது. அதன் பிறகு, நான் எடுத்த ஒவ்வொரு அடியும் மிகவும் மெதுவாகவும் உணர்வோடும் இருந்தன. அந்தப் பாதை என்னை எங்கே கொண்டுச் செல்கிறது என்றுத் தெரியவில்லை. ஆனால் அது என்னை என்னுள் கொண்டு செல்கிறது என்று என்பது மட்டும் தெளிவாக இருந்தது. போதி மரம் அருகில் சென்றபோது, என் மூச்சே மாறியது. அந்த இடத்தில் ஒரு வித்தியாசமான ஆற்றல் இருந்தது. அது, எனது கண்களால் பார்க்க முடியவில்லை. ஆனால், என் மனதால் என்னால் நன்றாக உணர முடிந்தது. நான் தலை நிமிர்ந்து அந்த போதிமரத்தைப் பார்த்தேன். அந்த நொடியிலே உலகம் முழுவதும் அமைதியாகிவிட்டது போல இருந்தது. அந்த மரம் ஒரு மரம் அல்ல, அது ஒரு உயிருள்ள ஞானம். அந்த மரத்தின் கீழ்தான் “புத்தர் ஞானம் பெற்றார்” என்று சொல்லும்போது, அது ஒரு வரலாறு மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. அந்த உணர்வின் ஆழத்தில் நான் என்னையே இழந்தேன். நான் எனது கண்களை மூடி புத்தரிடம் ஒரு சிறிய வேண்டுகோள் வைத்தேன்.

“நீங்கள் இங்கே இருந்தால், ஒரு பறவையாக வந்து எனக்கு ஒரு சைகை கொடுங்கள்”, என்று மனதாரக் கேட்டேன். இது ஒரு தேசாந்திரியின் தூய நம்பிக்கை. அங்கே இருந்தவர்கள், “இங்கே பறவைகள் அதிகம் வராது” என்று கூறினார்கள். ஆனால், அந்த நொடியிலே, ஒரு பறவை மட்டும் என்னை நேராகப் பார்த்துக் கொண்டிருந்தது. அது அசையவில்லை, அது பயப்படவில்லை, அது என்னை நோக்கி இருந்தது. அந்தப் பார்வையில் ஒரு பதில் இருந்தது. அந்த ஒரு நொடியிலே, நான் கேள்விகளைக் கடந்து, பதில்களை உணர்ந்தேன். அந்த அனுபவம் என்னை முழுமையாக மாற்றியது. என் உள்ளத்தில் ஒரு ஒளி பிறந்தது.அது வெளிச்சம் அல்ல, அது விழிப்புணர்வு. அந்த ஒளி என்னை தியானத்தின் பாதைக்கு அழைத்துச் சென்றது. நான் அங்கேயே அமர்ந்துகொண்டு, கண்களை மூடி தியானம் செய்யத் தொடங்கினேன். முதல் சில நொடிகள் என் மனம் அலை பாய்ந்தது. ஆனால், மெதுவாக அது அமைதியான நிலையை அடைந்ததது. நான் என் மூச்சை கேட்கத் தொடங்கினேன். நான் என்னையே உணரத் தொடங்கினேன். அந்த நாளிலிருந்து, தினமும் அங்கே வந்து தியானம் செய்வது என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியது. ஒவ்வொரு நாளும் நான் வேறொரு அனுபவத்தைப் பெற்றேன். சில நாட்களில் அமைதி, சில நாட்களில் கண்ணீர், சில நாட்களில் வெறும் வெற்றிடம். ஆனால், அந்த வெற்றிடத்திலும் ஒரு நிறைவு இருந்தது. ஒருநாள் நான் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது, ஒரு இலை மெதுவாக என் மேல் விழுந்தது. அது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல, அது என் உள்ளத்தை அதிர வைத்தது. அங்கே உள்ள விதிமுறைகளின் படி அந்த மரத்தின் இலைகளை யாரும் பறிக்கக் கூடாது. ஆனால், அந்த இலைகள் தானாக வந்து என்னைத் தொட்டன.அந்த நொடியிலே நான் ஒரு அருளை உணர்ந்தேன். அந்த இலை என் கையில் இருந்தபோது,அது ஒரு பொருள் இல்லை.அது ஒரு அனுபவம்.அது ஒரு நினைவுச் சின்னம் அல்ல, அது ஒரு உறுதி. “நீ சரியான பாதையில் இருக்கிறாய்” என்ற ஒரு அமைதியான உறுதி. அதன் பிறகு, மீண்டும் ஒரு புத்த பிக்கு என்னை அணுகி ஐந்து இலைகளைக் கொடுத்தார். “இதை நீ எப்போதும் இழக்காதே” என்று அவர் என்னிடம் கூறியபோது, அது ஒரு எச்சரிக்கை அல்ல, அது ஒரு அர்த்தமுள்ள அறிவுரை எனத் தோன்றியது. அந்த ஐந்து இலைகள் என் கையில் இருந்தாலும், அவை என் உள்ளத்தில் ஒரு பொறுப்பாக மாறின. நான் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தபோது, இன்னொரு புத்த பிக்கு என்னிடம் வந்து, “நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டார். நான் என் அனுபவங்களைப் பகிர்ந்தேன். அவர் அமைதியாகக் கேட்டார். பிறகு, மெதுவாக என்னை வழிநடத்தத் தொடங்கினார். அவர், புத்தர் தியானம் செய்த இடங்களை ஒவ்வொன்றாக எனக்கு விளக்கினார். ஒவ்வொரு இடத்திற்கும் என்னை அழைத்துச் சென்று, அந்த புனித நிலத்தில் என் காலடிகளை வைக்கச் செய்தார். அது ஒரு பயணம் அல்ல, அது ஒரு பரிமாற்றம். அந்த இடங்கள் என்னை மாற்றின. அவர் எனக்குப் பல பௌத்த மந்திரங்களை கற்றுக் கொடுத்தார். அந்த மந்திரங்கள் வெறும் ஒலிகள் அல்ல, அவை மனதை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டவை. “இதை நீ யாரிடமும் எப்போதும் எதற்காகவும் சொல்லக்கூடாது”, என்று அவர் கூறியபோது, அது ஒரு ரகசியம் போல இருந்தாலும், அது உண்மையில் ஒரு பொறுப்பு. நாட்கள் கடந்து சென்றன. அந்த அனுபவங்கள், மெதுவாக என் வாழ்க்கையை மாற்றின. என் முன்னால் இருந்த மனிதர் இப்போது இல்லை. என் எண்ணங்கள் மாறின, என் பார்வை மாறின, நான் உலகத்தை வேறு விதமாக பார்க்கத் தொடங்கினேன். பலர் புத்தகங்கள் மூலம் புத்தரைப் பற்றித் தெரிந்துக் கொள்கிறார்கள். ஆனால், எனக்கு அங்கே அது ஒரு நேரடி அனுபவமாகக் கிடைத்தது. அந்த அனுபவம் என் உள்ளத்தை ஆழமாகத் தொட்டது. அங்கே இருந்த பல புத்த பிக்குகளில், “யாரோ ஒருவர் உண்மையான ஞானத்தை உடையவர்” என்று நான் உணர்ந்தேன். அவர் என்னை மாற்றினார். அவர் என்னை என்னுடன் சேர்த்தார். இன்று வரை அந்த அனுபவங்கள் என் வாழ்க்கையில் ஒரு அடையாளமாக இருக்கின்றன. நான் எப்போது குழப்பம் அடைகிறேனோ, அந்த போதிமரத்தின் நிழலை நினைவில் கொண்டு வருகிறேன். அந்த அமைதி என்னை மீண்டும் ஆரோக்கியமாக நிலைப்படுத்துகிறது. போதிமரத்தின் கீழ் நான் கண்டது புத்தரை அல்ல, நான் என்னையே கண்டேன். அந்தத் தேடல் இன்னும் தொடர்கிறது. அந்த ஒளி இன்னும் என்னுள் எரிகிறது. அந்த அனுபவம் என் வாழ்க்கையின் ஒரு பகுதி அல்ல, அது என் வாழ்க்கையாகவே ஆகிவிட்டது.
தொடரும்…



