இணைய இதழ்தொடர்கள்

அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 14

தொடர் | வாசகசாலை

ரண்டு மாதம் விடுமுறை. அந்நிய நிலத்திலிருந்து சொந்த நிலத்துக்கு வந்துவிட்டேன். வந்ததன் முதற்காரணம்..குடும்பத்தில் தொடர்ந்து மூன்று மரணங்கள்.

பொதுவாக இப்படி விடுமுறைக்கு வரும் NRI-க்கள் அனைவரும் அனைத்தையும் முகச்சுளிப்புடன் அணுகுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் நியாயம் எனக்குப் புரிகிறது. எதற்கெடுத்தாலும் மேலைநாடுகளை நம் நாட்டுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள். இந்தத் தவறுகள் எதையும் நான் செய்யப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், இயலவில்லை!

டெல்லி விமான நிலையத்திலிருந்து தொடங்கியது பிரச்சனை. சரியான பாஸ்போர்ட் பக்கத்தை திறந்து கொடுக்காததால் ஓரமாக நிற்க வைத்துவிட்டார்கள். எதுவும் கேட்கவும் முடியவில்லை. கேட்டாலும் பதில் ஹிந்தியில் தருகின்றனர். விமான நிலையத்தில் துள்ளக் கூடாது. எவ்வளவு பெரிய ஆசாமியாக இருந்தாலும் இப்படித்தான் நடத்துவார்கள். சரியாக ஒன்றரை மணி நேரமானது என் பெட்டியை சென்னை விமான நிலையத்திலிருந்து எடுப்பதற்கு…பத்து பத்து பெட்டியாக அனுப்பினார்கள்.

இவை அனைத்தும் மீறி வெளியில் வந்தால் பைத்தியக்கார விடுதியில் நுழைந்தது போல வாகனங்கள் எல்லா திசையிலிருந்தும் வந்து கொண்டிருந்தன. சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது. சாலையில் இப்படிக் கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டுவதை நான் வேறொரு கோணத்திலிருந்து பார்க்க விளைகிறேன்.

உலகம் முழுவதும் பெண்கள் வாகனம் ஓட்டுவது மிகக் குறைவு. அமெரிக்க சாலைகளில் நம் இந்தியாவை விட மிக அதிகமான பெண்கள் வாகனம் ஓட்டுகிறார்கள். பெண்களின் வாகனம் ஓட்டும் திறன் பற்றி நிறைய கேலிப் பேச்சுகள் அங்கே இருக்கிறது. ஆனால், நிறைய பெண்கள் வாகனம் ஓட்டுகிறார்கள் என்பது முக்கியம்.

சென்ற வருடத்தில் ஒருநாள், எண்பது வயதைக் கடந்த மூதாட்டி ஒருவர் என்னை இந்திய உணவகத்துக்கு அழைத்துச் சென்றார். அழைத்துச் சென்றார் என்றால் நடந்து செல்வதல்ல… தனது காரில் என்னை உணவகத்துக்கு அழைத்துச் சென்றார். உணவருந்தும் முன் நான் ஒரேயொரு பீர் மட்டும் அருந்தினேன். என்னை அழைத்து வந்தவர் மேன்ஹாட்டன் காக்டெயில் உணவுக்கு முன்னும் உணவருந்தும் போதும் அருந்தினார். எனக்கு கொஞ்சம் பதற்றமாகிவிட்டது. மேன்ஹாட்டன் கொஞ்சம் கடுமையான காக்டெயில். எனக்கெல்லாம் ஒன்று அருந்தினாலே தடுமாற்றமாகிவிடும். எண்பது வயதில் இரண்டு மேன்ஹாட்டன் அருந்தி இருக்கிறார். போதாத குறைக்கு என்னை காரில் வேறு அழைத்து வந்திருக்கிறார். என் பதற்றத்தைப் புரிந்து கொண்டு, “பயப்படாதே! மூன்றாவது மேன்ஹாட்டன் அருந்தினால்தான் கார் ஓட்ட முடியாது” என்றார்.

இங்கே குடி பிரச்சனையல்ல… குடித்துவிட்டும் சாலையில் தெளிவாகப் பயணம் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையை எண்பது வயதானவளுக்கு அந்தச் சமூகம் வழங்கியிருப்பதைக் கவனிக்க வேண்டும். இந்திய சாலைகளில் ஆண்கள் அதிகம் புழங்குகிறார்கள். இது ஒவ்வொரு நகரத்திற்கும் வேறுபடலாம். என்னளவில் திருச்சி மாவட்டத்தில் ஆண்கள் மட்டுமே சாலைகளில் இருக்கிறார்கள். எனவே, இயல்பாகவே ஓர் ஆண்தன்மை வெளிப்பட்டுக்கொண்டேஇருப்பதைப் பார்க்க முடிகிறது.

நான் முதலில் செல்ல வேண்டும்; எனக்குப் பின்னாடி வா.. போன்ற திமிர்த்தனங்கள் மிக இயல்பாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. என்னால் இவர்களின் நியாயங்களைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. சாலையை நான்காகப் பிரித்திருக்கிறார்கள். போவதற்கு இரண்டு வழி; வருவதற்கு இரண்டு வழி. போகும் வழி இன்னும் சற்று தூரத்தில் வலது இடதாகப் பிரிகிறது. வலது புறம் செல்பவர்கள் வலது புறத்திலும், இடது புறம் செல்பவர்கள் இடது புறத்தில் செல்வதும் தானே விதி? விதியை விடுங்கள். அப்படிச் செல்வதுதானே எளிமையானது?

ஆனால், அப்படி யாரும் செல்வதில்லை. ஒருவரையொருவர் முந்தி சாலை பிரியும் இடத்தில் சரியாகத் திரும்ப முடியாமல் சாலை நெரிசல்… இதில் வேடிக்கை என்னவென்றால் நெரிசலில் ஒருவரையொருவர் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொள்கிறார்கள். அதிலும் இரண்டு கெட்ட வார்த்தைகள் எனக்கே புதிதாக இருந்தது.

இந்த நிலை மாற பெண்கள் சாலையில் அதிகம் பயணிக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. உடனே பெண்ணியவாதிகள் கோபித்துக் கொள்ளக் கூடாது. நான் சொல்ல வருவதை மிக நுட்பமாக விளங்கிக் கொள்ள வேண்டும். பெண்கள் அதிகம் சாலையில் பயணிக்கும் போது வறட்டு ஆண் தன்மை கொஞ்சம் தணியும் என்கிறேன்.

கிரேக்க இதிகாசங்கள் ஆண்-பெண் இரண்டும் சேர்ந்துதான் முழு மனிதன் என்று கற்பிக்கிறது. ஆங்கிலத்தில் “Better half” என்று சொல்வது, தனிப்பட்ட ஆணின் வாழ்வில் மட்டுமல்லாது சமூகத்திலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

சாலையில் பயணிக்கும் போது எனக்கான பயணத்தை மட்டும் நான் நிகழ்த்தவில்லை! என்னோடு சேர்ந்து ஆயிரமாயிரம் பேர் பயணிக்கிறார்கள். அவரவர்க்கென்று ஒரு வாழ்விருக்கிறது என்ற அடிப்படையான கருணை ஒவ்வொருவருக்குள்ளும் வரும்போதுதான் விதியை மதித்து சரியான முறையில் பயணம் செய்ய முடியும்

இரண்டாவது, பயணம் செய்வது என்பது சுதந்திரத்தின் குறியீடு. அரசர்கள் காலத்தில் குதிரைகள் அந்நிலையை வகித்தன இன்று பைக் மற்றும் கார்கள்.

இந்தியா வந்த பிறகு, நான் பெரிதும் தவறவிடுவது என் ஜீப்பை மட்டுமே. நினைத்த நேரத்தில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு எங்கும் சென்று வந்துவிடுவேன். ஒருநாள் அப்படித்தான் எந்தவித முன் தயாரிப்புகளுமின்றி, நானும் நண்பனும் நியூ ஹாம்சயர் வொயிட் மவுண்டன் சென்றுவிட்டோம். விடியற்காலையில் மீண்டும் அப்படியே வெர்மோண்ட் ஸ்டோ வில்லேஜ் சென்றுவிட்டோம். எப்படி சாத்தியமானது? ஜீப் இருக்கிறது; செல்வோம். அவ்வளவுதான். இளைஞர்கள் பைக் மீது தீராக்காதல் கொண்டிருப்பதற்கு காரணம் என நான் பார்ப்பது நினைத்த நேரத்தில் வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை வழங்கிவிடுகிறது என்பதுதான்.

இந்தியா வந்த பிறகு நான் என் ஓட்டுனருக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. நீண்ட நாள் சந்திக்காத ஒரு தோழியின் வீட்டுக்குச் செல்ல இன்னொருவரின் துணையை நாடியிருக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் பெண்கள் சாலையில் அதிகம் பயணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. இன்று தமிழகத்தில் பெண்களுக்கு விலையில்லாப் பேருந்துப் பயணம் சாத்தியமாகியுள்ளது. ஆனால், அது போதாது. பெண்கள் சாலையில் தானாகப் பயணிக்கும்போது நிலைமை கொஞ்சம் சீராகலாம்.

பெண்களுக்கு எதிரான வன்முறை எல்லா இடத்திலும் இருக்கிறது. அதையெல்லாம் சரி செய்த பிறகுதான் இந்த நிலையை அடைய முடியும் என்பதையும் நான் உணர்ந்தே இருக்கிறேன்.

அமெரிக்காவிலிருந்து வந்த இரண்டு வாரம் கெடுபிடியாகச் சென்றது. நியூயார்க்கிலிருந்து டெல்லி வர பதினான்கு மணி நேரம்! காலம், வெளி இரண்டையும் கடந்து தலை சுற்றிக் கிடந்தேன். இரண்டு வாரமும் காரில் செல்லும் போதெல்லாம் நெஞ்சு வலி தான். இப்படிச் செல்லக் கூடாதே என்று வாயைத் திறந்தால் இங்கெல்லாம் இப்படிப் போனால்தான் சரியாக இருக்கும் என்று இலவச அறிவுரை வேறு! அன்று அப்படி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எங்களுக்குப் பின்னால் ஒரு ஆம்புலன்ஸ் வேகமாக வந்தது. வழக்கம் போல எல்லோரும் அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். எனக்கு பதற்றம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் எங்கள் ஓட்டுநரை வண்டியை ஓரம் கட்டச் சொல்லி வழி விட்டாகிவிட்டது. இப்போது ஆம்புலன்ஸைத் துருப்பாக பயன்படுத்தி வேகமாக செல்ல முனைந்த வாகன நெரிசலில் மாட்டிக் கொண்டோம். இன்னும் ஆம்புலனஸ் எங்கள் முன்னால் எறும்பு போல ஊர்ந்துக் கொண்டிருந்தது. நான் எதாவது சொல்வேன் என்று எங்கள் வீட்டார்கள் எதிர்ப்பார்த்தார்கள். நான் எதுவும் சொல்லவில்லை. என் அப்பா வாய்விட்டு கேட்டுவிட்டார். எந்தவித உணர்வுகளும் இன்றி, “ஆம்புலன்ஸுக்கு வழிவிடாத ஒரு சமூகத்தில் வாழ்ந்து என்ன செய்துவிடப் போகிறார்கள்? ஆம்புலன்ஸ் உள்ளே அவதியுறும் யாராக இருந்தாலும் சரியாகி சாலையில் செல்லும் போது இன்னொரு ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவாரா என்பது சந்தேகம்தான். அதனால் யாரும் இறப்பதைக் குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை” என்றேன். பதினைந்து நிமிடத்துக்கும் மேலாக ஆம்புலன்ஸ் ஊர்ந்து கொண்டே சென்றது.

அந்நிய நிலக் குறிப்புகள் தொடருக்காக நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. நார்மன் ராக்வெல் ஓவியங்கள் குறித்து எழுதியிருந்த போது எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி பாராட்டி எழுதியிருந்தார். மேலும், அவருக்கு பிடித்த நார்மன் ராக்வெல்லின் ஓவியங்கள் குறித்துப் பகிர்ந்திருந்தார். அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும். ஊருக்கு வந்திருப்பதால் எதைக் குறித்து எழுதுவது என்பதில் குழப்பமாக இருந்தது. கடைசியில் இந்த ஒரு கட்டுரைக்காக திருச்சி முழுவதும் என் பைக்கில் சென்று வரும்படி ஆனது. சென்ற முறை வந்த போது சின்ன ஒரு விபத்தில் சிக்கி காயங்களுடன் தப்பித்தேன். அதனால் இந்த முறை அதி ஜாக்கிரதையாக திருச்சியை சுற்றி வந்தேன். பலமுறை பலருக்கு அரைச் சமாதானக் குறியீட்டைக் காட்ட வேண்டும் போல இருந்தது. ஆனால், இங்கிருப்பவர்களுக்கு அது புரியாது என்பதால் இரத்தக் கொதிப்பு தலைக்கு ஏற அமைதியாக வந்துவிட்டேன். (சமாதானக் குறியீடு என்பது ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் V வடிவில் காட்டுவது. அரைச் சமாதானக் குறியீடு அதில் பாதி, அதாவது ஆட்காட்டி விரலை மடித்து வெறும் நடுவிரலை மட்டும் காண்பிப்பது).

‘Ten Commandments’ படம் பார்க்கும் போதெல்லாம் பார்வோன் மோசேயிடம் சொல்லும் ஒரு குறிப்பிட்ட வசனத்தை திருப்பித் திருப்பிக் கேட்பேன். மோசேவை எகிப்திலிருந்து நாடு கடத்தும் முன் ஒரு கோலை அவனிடம் நீட்டி, “இதோ உன் செங்கோல், இதோ தேள்களையும் பாம்புகளையும் பல்லிகளையும் கொண்டு அமைக்கப்பட்ட உன் அரசாட்சி. உன்னால் இயலுமானால் அவர்களின் சுதந்திரத்துக்காகப் போராடு. எபிரேயர்களை என்னிடமே விட்டுவிடு.” நாடு திரும்பிய போது என் மக்கள் தேள்களாகவும், பாம்புகளாகவும், பல்லிகளாகவும் மாறியிருப்பார்கள் என்பதை நான் எதிர்ப்பார்க்கவில்லை!

நாம் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது…!

(தொடரும்…)

முந்தையது | அடுத்தது

valan.newton2021@aol.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button