
காற்றின் கண்
பேய்க்காற்று வீசுகிறது
என்கிறார்கள் பலரும்
ஆண்டுதோறும் வரும்
நல்ல பருவங்களில்
இதுவும் ஒன்று
கூட்டிப் பெருக்கிச்
சுழற்றித் தூக்கி
முகத்தில் கொண்டாந்து
கொட்டுகிறது புழுதியை
ஈருருளை வாகனங்களில்
செல்வோருக்கெல்லாம்
கண்ணிலும் வாயிலும்
மண்
வீட்டுக்குள் அமர்ந்து
செய்வதொன்றுமற்று
பார்த்துக்கொண்டே
அமர்ந்திருக்கிறேன்
வீசும் காற்றில்
ஆடிக்கொண்டிருக்கும்
மரங்களை
பார்க்கப் பார்க்கப்
பிடிபடுகிறது
இலைகளின் சலசலப்பினுள்
இருக்கும் மௌனம்
கிளைகளின் ஆட்டங்களினுள்
இருக்கும் அசைவின்மை
குழலூதுவோனின்
விரல்களாய் அசையும்
மரங்களைப் பார்த்தபடி
அமர்ந்திருக்கின்றேன்
தன்னிசையில் லயித்து
மூடியிருக்கும்
அவன் கண்ணாக.
***
என் ஒருங்குறித் தட்டச்சு
அவ்வப்போது நிகழும்
தட்டச்சுப் பிழைகளில்
அவ்வப்போது ஒரு சில
சரியினும் மிக அழகாய்
அமைந்துவிடுகின்றன
என் பெயரைத் தட்டிய
விரற்பிசகில்
தோன்றி வந்த
ரனூஸ் என்னும் பெயரில்
வசீகரிக்கப்பட்டு
உறைந்தேன் ஒருகணம்
கீ வரிசையில்
விரல்கள்
தள்ளிப் பொருந்தியதைக்
கவனியாது தட்டியதில்
என் வயதுகள் சரிந்து
வாய்த்திருந்தது
ஒரு மழலைப் பிராயத்து
மொழிநடை
ஆல்ட் கீ
எக்குத்தப்பாய் அமுக்கியதில்
தமிழும் அல்லாது
ஆங்கிலமும் அல்லாது
ஒரு புதிய மொழியில்
புனைந்துவிட்டேன்
புதுக்கவிதை ஒன்று!
அல்லது,
நெடிலோசைகள் அளபெடுத்த
அந்த மொழி
தொல் கானகரின்
ஆதி மொழியாய்
இருக்கக்கூடும்
ஆங்கில எழுத்துகளின்
ஆன்மாவாய் மறைந்திருக்கும்
தமிழை வெளிக்கொணரும்
வித்தை என்று
விதந்தோதி மயங்கலாம்
லகுவுக்காக நான்
கையாளும்
ஒருங்குறித் தட்டச்சு.
***
குட்ஷெட் பாலம்
வெயிலெரிக்கும் நண்பகலில்
விரைகின்றன வாகனங்கள்
குட்ஷெட் பாலத்தின் மீது
ஓர நடைப்பாதையில்
கட்டையின் மீதமர்ந்து
தான் மட்டுமே அறிந்த
யாரோ ஒருவரிடம்
தான் மட்டுமே அறிந்த
ஏதோ ஓர் விசயத்தை
விளக்கிக் கொண்டிருக்கிறாள்
தான் மட்டுமேயான ஒருத்தி
வாகனங்கள் விரையும்
தார்ச்சாலைக்கு
முதுகு காட்டியபடி
புழுதித் தரையில்
ஆழ்ந்த நித்திரையில்
கிடக்கிறார்
ஒரு வயோதிகப் பித்தர்
கடப்பதற்கென்றே
கட்டப்பட்டுள்ள பாலத்தில்
இப்படிக் கண்ணில் பட்டனர்
கடக்க முடியாமல்
சிக்கிக்கிடக்கும் சிலர்.
***
கால தரிசனம்
கணத்தின் இருபக்கம்
அறிவாயோ?
பூப்பக்கம்:
மலையின் கணம்
உருகியசைவதாய்
எழுந்து கொண்டிருந்தது
கடலின் பேரலை
தலைப்பக்கம்:
அலையின் கணம்
உறைந்துவிட்டதாய்
நின்று கொண்டுள்ளது
பச்சை மாமலை.
**********