
றாமின் இரண்டாம் பருவம் கவிதைத் தொகுப்பு, அதன் அட்டைப்படத்திலிருந்துதான் பேசப்போகும் அரசியலைத் தீர்க்கமாக முன்வைக்கிறது. அட்டைப் படத்தின் வீரியம் துளியும் குறையாமல் இறுதிவரை நீள்கிறது. இரண்டாம் பருவம்நூல்’ அதிகமும் நான்’கள்’, ‘மீறியும்தீண்டு’ என இரட்டைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது.
’ஆஹாங் என்றொரு மகாதத்துவம்’ என ஆரம்பிக்கும் முதல்கவிதை, றாம் தான் பேசும் பாலியல்சார் அரசியலை, தன்நிலைப்பாட்டை வாசகர் ஏற்கவேண்டும், ஏற்கவேண்டாம் என்ற நிலைகளைக் கடந்து எழுதியிருக்கும் தன்னிலை விளக்கமாகப் புரிந்து கொள்கிறேன்.
இதுதான் வாழ்க்கை என்றேன்/ அருகில் அமர்ந்தபடி வடிவேலும் ஆஹாங் என்றார் என நீண்டு செல்லும் அக்கவிதை, எதிலும் எதுவுமில்லை அல்லது எல்லாமும் எல்லாவற்றிலும் உள்ளது, நீ எப்போதும் அமைதியாக இரு என ஆஹாங் தத்துவம் பேசுகிறது.
ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து நின்றுபோனதும், அதுவரை வாழ்நாளில் கண்டிராத சாலை வெறுமையை, அதன் நீடிய மௌனத்தை, மெத்தை விரித்தும் உறங்க யாருமில்லா அதன்தனிமையை அனைவரும் உணர்ந்திருப்போம். அவ்வுணர்தலும் ஆஹாங் கவிதையைப் போல அங்கதத் தொனியில் பதிவு செய்யட்டுள்ளது. இக்கவிதைகளைத் தாண்டித் தொகுப்பில் வேறெங்கும் விளையாட்டுத்தனம் பதிவாகவில்லை.
’அவன் உடல்போல் தோதான/ பண்டம் வேறொன்றிருக்குமா பிரதர் ’போன்ற இடங்களிலும் உன்மத்தமாகவே நகைக்கும் தொனியுள்ளது.
கவிதை என்பது என்ன? சில கற்பிதங்களைப் புரட்டிப்போடுவதும் சிலவற்றை வழிமொழிவதும் புதிய அறிதல்களை வெளிப்படுத்துவதும்தானே. ’மீச்சிறு இளம்வெப்பத்தைச் சுகித்தல்’ என்னும் கவிதையில்,
’நான் படர்ந்து தரையாகிறேன்
அவள் என்மீதூறும் நீர்மையால்
சகதியாகுதல் கலவு’
என்று செம்புலப்பெயல் உருவகத்தை மாற்றியமைத்து, ஆணை நிலமாகவும் பெண்ணை நீராகவும் மாற்றம்செய்கிறார் றாம்.
நான் பாலிலி என்றும் பால் புதுமையினர் என்றும் பால் வேறுபாடுகள் எனக்குப் பொருட்டில்லை என்றும் பல கவிதைகளில் ரூபங்கொள்ளும் மனிதர்கள் அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சுகாறா என்னும் மேஜிக்காரி இடம்பெறும் கவிதைகள், வெப்பமிகுதியில் ஆவியாகும் நீரின் இயல்பைத் திரித்து அதை வண்ணமயமாக்கிக் காட்சிப்படுத்துவதைப் போன்ற மாயச்சித்திரத்தை உருவாக்கின்றன. முப்பத்திமூன்று பரிமாணங்கள் கொண்ட மேஜிக்காரனின் கதை என்னும் கவிதை, சுகாறா தான் உறவாடிய முப்பத்துமூன்று ஆண்களும் ஒருவரே என ஓர் புள்ளியில் பிரக்ஞையடைவதாகச் சொல்கிறது. உடல்களின் இயல்பு, வனப்பு, மலர்ச்சி என மொத்தமும் ஒன்றே என்றும் அதன் நிறைவு அலாதி என்றும் அறியும் பூரணத்தின் பதிவாக அதைப் பார்க்கமுடிகிறது.
முப்பத்துமூன்று என்ற எண்ணைப் பின் தொடர்வதிலிருந்து இக்கவிதை வேறொரு வாசிப்புக்கும் வழி வகுக்கிறது. முப்பத்து மூன்று என்ற இலக்கத்தை, Free mason போன்ற ரகசிய குழு அமைப்பின் உயர்ப்படிநிலை (Top of the hierarchy) என்று குறிப்பிடுவார்கள். மறைஞானம், மேஜிக் என இயங்கும் அவ்வமைப்பினரைப் போலவே சுகாறாவும் மேஜிக்காரனோடு உடலுறவு கொள்கிறாள். இறுதியில் தானும் ஓர் மேஜிக்காரியென உணர்ந்து கொள்கிறாள். முற்றுப்பெறலைத் தவிர்த்து, சுகாறாவும் மேஜிக்கும் வளர்ந்து கொண்டே செல்கின்றன.
மெய்ம்மை:
ஒரு நல்ல கவிதைத் தொகுப்பு, பல கருப்பொருட்களைக் கொண்டிருக்கும். அதை வெளிப்படுத்தும் முறையில் வித்தியாசங்களும் நுண்ணிய அரசியலும் இருக்கும். கவித்துவத்துக்கு மொழி இலகுவாதல் எத்தனை இன்றியமையாததோ, அத்தனை அவசியம் அது வெளிப்படுத்தும் கண்டடைதல்கள். அன்றாடத்தின் நீட்சியில் வாழ்வின் திளைப்பில் எல்லாரும் சில உண்மைகளைக் கண்டடைகிறோம். அனுபவத்திலிருந்து கிளைக்கும் அறிதல்களை நிஜம் எனப் பற்றிக் கொள்கிறோம். அதுபோலவே,
’பார்வை என்பது பூரணத்தின் குறை
குறை என்பது முழுமையின் மீச்சிறுஅலகு’ (பக்.16)
’யாவும் இப்பிரபஞ்சத்தில் புணர்ந்தே பிழைக்கின்றன
நீயும் நானும் எம்மாத்திரம்’ (பக்.52)
போன்ற அடிகள், அறிதலின் சொற்பிறப்பாய் வந்து விழுந்துள்ளன.
என் காதற் கைப்பாவாய் – செல்ஃபோன் பற்றிய கவிதையில்,
’நீதான் அவளைக் கண்டறிந்தாய்
எனக்கு அவள் என்பது நீதான்
அவளுக்குநான்என்பதுநீதான்’
என்னும் வரிகளைத் திறன் பேசியில் காதல் வளர்க்கும் எவராலும் தன்காதலுடன் பொருத்திப் பார்க்க முடியும். தொண்ணூறுகளுக்கு முன் பிறந்தவர்களுக்கு, காதல் கடிதம் எப்படி ஆதர்சமாய், தொடர்பு கொள்ளும் மூலச் சாதனமாய் இருந்ததோ அதுபோலவே இத்தலைமுறைக்குத் திறன்பேசி. வாட்ஸப்பிலிருந்து செய்தி அறிவிப்பு ஒலியைக் கேட்டதும் பதட்டமடையும் நவயுக மனிதர்களோடு கைக்கோர்ப்பதாக, இக்கவிதையுள்ளது.‘சன்னதம்’ என்னும் கவிதை, கூடலுக்கு விரும்பும் ஒருவனது ஏக்கமாக, உளக்கொந்தளிப்பை ஏற்படுத்தும் மொழியால் நெய்யப்பட்ட தாபப்பிரவாகமாக உருக்கொண்டுள்ளது.
சுயப்பரிமாணங்களின்மொழியமைவு:
ஒவ்வொரு மனிதனுக்குள்ள சுயத்தையும் ’நான்’ என அடையாளப்படுத்துகிறோம். பால் வேறுபாடின்றி எல்லாருக்கும் ஓர் ’நான்’ உள்ளது. எல்லாருள்ளும் ஓர் ’நான்’ உள்ளது. தனது நானையே பல நானாகப் பிரித்துப் போட்டுப் பார்க்கும் வழக்கமும் அறியும் நுட்பமும்கூட உள்ளது. அப்படி தனது நான்களை, நான் பற்றிய அவதானங்களை, பிறரது நான் தன்னுடைய நானுடன் இடைப்படும் நுண்ணிய இடைவெளியை, அதன் ஒன்றாதலை நேர்த்தியாக மொழிப்படுத்தியுள்ளது ‘குலாபிகளாகும் வரை நீட்டி எழுதப்பட்ட நான்கள் ’என்னும் தலைப்பின் கீழுள்ள கவிதைகள்.
சன்னதம் பெற்ற சாமியாடியைப் போல் சிதறிய தன் நான்களைத்தொகுத்துப் பார்த்திருக்கிறார், றாம். ஐந்து பக்கங்களில் இக்கவிதை பல அடுக்கில் வியாபித்திருக்கிறது.எழுதி ஓய்ந்துவிடக் கூடிய அலகுகளை உடையதா ’நான்’ எனும் அகநிலை? வெளியைப் போல் திரட்டிப் பார்க்க முடியா அதன் பரிமாணங்களைச் சொற்களுக்குள் கடத்த முயன்றிருப்பதே அசாத்தியமான முயற்சி. பல குரல்களில் தன்னிலையாகப் பெருகியுள்ள நான்களைப் பற்றிய கவிதை, இத்தொகுப்பின் தனித்துவமான கவிதைகளுள் ஒன்று.
’சார் எனும் ஒரு டஜன் விளிப்புகள்’ என்ற தலைப்பில் அமைந்துள்ள கவிதையும் ’நான்’ பற்றிய கவிதையைப் போலவே பல அடுக்குகளாக வெளிப்பட்டுள்ளது.
’வாருங்கள் ஒரு மிடறு மது அருந்திவிட்டு
ஒரு மில்க் சேக் குடிக்கலாம்’
என்ற வரிகளையும் பலவாகப் பரிமாணம் கொள்ளும் வரிகளாக வரிசைப்படுத்தலாம்.
மீறியும் தீண்டும் பக்கங்கள்:
தன் அடங்காத் தாபத் துயரங்களை, பாலுறவு வேட்கையை, பாலியல் தேர்வு பற்றிய நிலைப்பாட்டைப் பகிரங்கமாக, துணிச்சலுடன் முன்வைக்கும் கவிதைகளே இரண்டாம் பகுப்பான ’மீறியும் தீண்டு’ பகுதியில் இடம்பெற்றுள்ளன.
’சதா என்னைத் துரத்தியபடி
இருக்கிற தந்த சர்ப்பம்’
எனத் தொடங்கும் கவிதை, பொருத்துக் கொள்ள முடியா உடல்விழையும் வாதையை, அதைத் தீர்த்துக் கொள்ள நாம் தேர்ந்தெடுக்கும் நடைமுறையுடன் கோர்த்து வார்த்தெடுக்கப்பட்ட அற்புதம். இதே கருவை பக்கம்.46-ல் இடம்பெற்றுள்ள கவிதையும் பேசுகிறது. என்ன செய்தாலும் நிவர்த்திக் கொள்ளாத மானுடப் பசியைப் பேசிக்கொண்டே இருக்கிறார், றாம்.
தன் பாலின விருப்பமுள்ளவர்களின் உணர்வை, அவர்களது பார்வையை, உடல் வேட்கையை, இருபால் ஈர்ப்புள்ளவர்களின் மனநிலையை, உறவுத்தேடலைப் பேசும் ‘மீறியும் தீண்டு தொகுப்பை, அறிந்து கொள்ள முடியுமளவு உணரமுடியவில்லை.
’ஓ விட்டேத்தியே
உனக்குப் புரியாது
எமது காதல் உனக்குப் புரியாது’
எனக் கவிஞரே சொல்வது போல், இப்படைப்புகள் குறிவைத்து எழுதப்பட்ட வகுப்பினர்க்கே தனது முழுவீரியத்தை வெளிக்காட்டும் என நினைக்கிறேன். தன் பாலின விருப்பம் பற்றிய கவிதைகளில் உள்ள சிறிய அலகுகளான உணர்வு முடிச்சுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லையே தவிர உறவுக்கான ஏக்கத்தையும் உடல் தாபத்தையும் உணரமுடிகிறது.
செல்ல – அசகோதரா, மாதுளை, சிட்டு எனக் கவிஞர் தன் இணையர்களுக்குச் சூட்டியுள்ள செல்லப் பெயர்கள் நினைவில் நிரந்தரமாய்த் தங்கிவிடுகின்றன. அசகோதரா என்னும் சொல் பாலியல் பின்புலத்தில் ஓர் அரசியல் சொல்லாக வடிவெடுக்கும் கனத்துடன் ஒலிக்கிறது.
மனதுக்கு நெருக்கமான கவிதைகளால் நிரம்பியிருக்கும் இத்தொகுப்பு, றாமுக்கு எத்தனை முக்கியமோ கவியுலகிற்கும் அத்தனை முக்கியம். புதுவிதமான அழகியல் கட்டமைப்புடனும் அரசியல் முன்னெடுப்புடனும் பல வாசிப்புகளுக்கான கதவுகளைத் திறந்து வைக்கிறது, இரண்டாம் பருவம்.
****