கதைக்களம்

தலைப்பிரட்டைகள்

தூயன்

அறை முழுவதும் அந்த சொல் சிதறிக்கிடப்பதாகவே உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் அச்சொல் மனதில் எழும்போதெல்லாம் விரல் விட்டு எண்ணியிருந்தால் ஒருவேளை படிப்படியாக சொற்கள் மறைந்து எண்ணிக்கை மட்டும் எஞ்சியிருக்கக்கூடும். அச்சொல்லிற்கென தனித்தவொரு உருவம் மூண்டிருப்பதை சமீப நாட்களாக நான் கவனித்துவருகிறேன். அதற்கென பிரத்யேக உருவம். சிக்குபிடித்த கேசம், பெருத்த சரீரம், தொங்கும் முலை கொண்ட ஒரு அருவருக்கத்தக்க பெண். புறவுலகில் அப்படியொருத்தியை இதுவரைப் பார்த்ததில்லை. அப்படியெங்கேனும் பார்க்க நேரிடுமென பிரக்ஞையில் அபாயவுணர்வு இருந்துகொண்டே வந்திருக்கிறது. சில இரவுகளில் திடீரென அவளின் அழுகுரல் மட்டும் அருகாமையில் கேட்கும். “ச்சீய் நாயே” என சப்தமாக அடித்தொண்டையில் கத்துவேன். அறையின் மௌனம் உடைபட்டு, உலகம் எங்கோ அப்பாலிலிருந்து வந்து விழுவது போலிருக்கும். அச்சொல் என் அப்பாவின் ஆசைக்காதலியாக இருக்கக்கூடுமென எண்ணியிருக்கிறேன். அவளுக்கென நான் கொடுத்த தோற்றமே அவர் பிம்பத்தின் சாயலில்தான்.

கட்டிலிலிருந்து எழுந்து ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி வந்து நின்றேன். வாகனங்கள் எந்திரபூச்சிகளாக கண்களை மினுக்கி நகர்ந்துகொண்டிருந்தன. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த பஸ் ஸ்டாண்டை தொலைவில் வைத்துப் பார்ப்பது எனக்கு பிடிக்கும். பேருந்துகள் பன்றியின் முலைப்பால் குடிக்க முண்டும் குட்டிகளாக இடம் கிடைக்காமல் திணறியபடி ஒன்றோடென்று முட்டிக்கொண்டிருந்தன. திருச்சியில் பஸ்ஸ்டாண்டிற்கு பக்கத்தில் குறைந்த வாடகையில் ரூம் யாருக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காதென நீலகண்டன் அடிக்கடிச் சொல்வான்(அவன் பிடித்துக்கொடுத்ததால்).  நான் ஒரு சிறிய வீட்டையே தேடினேன். ஆனால் இங்கு அப்படி கிடைப்பது சிரமமென்பதால் இதுவே போதுமென்றாகிவிட்டது.

முட்டை தேய்த்த பளபளப்பான பழைய சுண்ணாம்புச் சுவர்களும், அழுக்கேறிய கனத்த  மரக்கதவும், பச்சைநிற மடிப்பு ஜன்னல் கதவுகளும், மாட்டின் கருத்த மூக்குபோன்ற பழையபாணி உருண்டை சுவிட்ச்களும் முன்பு நல்ல லாட்ஜாக வாழ்ந்திருக்க வேண்டுமென வந்ததுமே நினைத்துக்கொண்டேன். இன்னொருவருடன் அறையை பகிர்ந்துகொள்ள எனக்குப் பிடிக்காது. என்னைப்பற்றி யாரிடமும் காட்டிக்கொண்டதில்லை. அலுவலகம் அருகிலேயே அறைகள் கிடைத்தும் தவிர்த்துவிட்டேன். அலுவலகம் என்பதே கண்களுக்கு அப்பால் இருக்க வேண்டும்.  தினமும் நீலகண்டன் கீழே இருக்கும் ஹோட்டலில் வேலை முடித்ததும் இரண்டு பாட்டில்களை பிடித்துக்கொண்டு வந்துவிடுவான். விடியும் வரை பேசிக்கொண்டிருப்போம். அதிகமும் பெண்களைப் பற்றித்தான். போதையின் உச்சத்தில் அவன் அனுபவித்த பெண்களின் உடல் வனப்புகளைப் பற்றி சிலாகிக்கத்தொடங்கி, பின் தாளாத புலம்பல்களாக அது ஓய்ந்து விடும். பெரும்பாலும் அதிகாலையிலே அவன்  எழுந்து மேல் தள அறைக்குச் செல்வான்.

சோடியம் விளக்கின் கோணலான மஞ்சள் வட்டத்தினுள்  ஒவ்வொருவராக நுழைந்து சென்றுகொண்டிருந்தார்கள். பழ வண்டியில் மஞ்சள் குறிகள்  அடுக்கி வைத்திருப்பது போல வாழைப்பழங்கள். சாலையில் நிழல்கள் சிறுத்து, உப்பி, நெளிந்து உருமாறிக்கொண்டிருந்ததை அப்படியே நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருகணம் கூட அந்நிலை நீடிக்கவில்லை. மீண்டும் அச்சொல் வண்டு போல ரீங்காராமிட்டவாறு என்மீது மோதி பிரக்ஞையைக் கலைத்தது. சட்டையைக் கலற்றி வீசியெறிந்து படுத்ததும் கட்டில் முனங்கி அடங்கியது. கால்களை சுவற்றில் தேய்த்தவாறு கைகளை பின் மண்டையில் செறுகிக்கொண்டேன். எப்போதும் இப்படிப் படுப்பதிலே  ஆசுவாசம் ஏற்படுகிறது. அக்குளிலிருந்து புளித்த வியர்வை நெடி பரவியதும் சட்டென அப்பா முகம் ஞாபகத்தில் எழுந்தது.  சரக் சரக் என கத்தரியும் சீப்பும் முட்டிக்கொள்ளும் சப்தம் துல்லியமாக அருகில் கேட்டது. அச்சப்ததினூடே அவரின் குரலும், கனைப்பும் வந்தன. அப்பா எப்போதும் பீடி இழுத்தபடியேதான் கத்தரித்துக்கொண்டிருப்பார். சுத்தமான வேட்டியணிந்தவர்கள் கடைக்கு வந்தால் மட்டுமே பீடியின் தலையை நசுக்கியெறிவார். சமயங்களில் தீவிரமான எண்ணங்களுக்கு ஆட்பட்டிருப்பதைப் போல முகம் கருத்திருக்கும். அப்போது பத்து பதினைந்தென அதன் எண்ணிக்கை உயர்ந்துகொண்டிருக்கும். அடுத்தடுத்த கட்டிலிருந்து பீடியைப் பற்ற வைக்கையில் கைகள் நடுங்குவதைப் பார்த்திருக்கிறேன். உள்ளுக்குள் ஓடும் எண்ணம் அறுபடும் வரை அவ்வெண்ணிக்கை நிற்காது..

உர எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக சேர்ந்த பின்பு ஊருக்கு போகும்போதெல்லாம் என்மீது ஒருவித அகந்தை சிதறடித்து வந்தமர்ந்துகொள்ளும். கனத்த எடையுடன் தன் றெக்கைகளை அசைத்து பறப்பது போலிருக்கும். சிறிய வயதிலே நல்ல வேலையில் அமர்ந்தது ஊரில் அநேகமாக நான் மட்டுமே. உரநிறுவனத்தைப் பற்றி சித்திராவிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போது அப்பா பீடி இழுத்தபடியே கட்டிலின் விளிம்புக்கு வந்து கேட்டுக்கொண்டிருந்தார். புதிய விசயங்கள் பேசுகையில் அவர் அப்படிதான் உட்கார்ந்திருப்பார். “பயிரு பத்தய வளக்கதேன் ஒரம் பண்றானா மூதேவிமவன்..” என்றார் ஆனந்தமாக சிரித்தபடி. சித்ரா அக்கா, “ஒன்னய எதுனா கேட்டுச்சா….வாய மூடிகிட்டிரு” என்று சீறினாள். அப்பா அம்மாவிற்கு பிறகு அக்காவிடம் மட்டுமே கொஞ்சம் பயந்து அடங்குவதுண்டு.

பள்ளி விடுமுறைகளில் கடையில்தான் அதிகமும் இருப்பேன். சிறுவயதிலிருந்தே சுழலும் சலூன் நாற்காலிமீது எனக்குத் தனி பிரியம். அது புதிதாக வந்திறங்கியபோது அதன் பளபளப்பிலும் மென்மையிலும் லயித்திருந்தேன். சிவப்பு வெல்வேட் குஷன் இருக்கைகளில் பிளாஸ்டிக் காகிதங்கள் பிரிக்கப்படாமல் புது மணப்பெண் போல வெட்கப்பட்டு அது அமர்ந்திருப்பதாக நினைத்தேன். அதன் வெள்ளி கைப்பிடியில் கோணலாக என் முகம் பிரதிபலிப்பதை சிரித்து ரசித்திருக்கிறேன். அந்நாற்காலியில் அமரவைத்து  அப்பா என்னை ஒரு முழுச்சுற்று சுழற்றிவிடும்போது பரவசமாக இருக்கும். அட்டனக்கால்போட்டு உட்கார்ந்து அப்போது பார்த்த சினிமா வசனங்களை  ஒப்பிப்பதும், பக்கவாட்டிலிருக்கும் சாய்வு சக்கரத்தின் அடியில் அமர்ந்து வண்டி ஓட்டுவதுமாக என் பொழுதுகள் அதனுடன் கரைந்திருக்கின்றன.

பத்து முடித்து பதினொன்று போன பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கடையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள பிரயத்தனப்பட்டேன். நண்பர்களுடன் கூடித்திரியும்போது யாராவது கடையைப் பற்றி விசாரித்தால் அப்படியே மனம் கூம்பிவிடும். என்மீதே  வெறுப்புணர்வு பரவத்தொடங்கியது. அதன்பிறகு கடைக்கு வருவதை தவிர்த்தேன். அப்பா என் விலகலை கவனித்துக்கொண்டிருந்தார். எப்போதாவது அவர் பேச்சினூடே அது வெளிப்படும்போது சித்ரா அக்கா புரியாமல் என்னை ஏறிட்டுப்பார்ப்பாள். கோயில்களில் மொட்டை எடுப்பதற்கும் பிணத்திற்கு நாவித சடங்கு செய்வதற்கு மட்டும் அவர் கூட நான் வருவது அவருடைய சாவின் வரை விளங்கமுடியாததாக இருந்தது.

நாச்சம்மை ஆச்சி என்னை பார்க்கும்போதெல்லாம் ‘எட்டு புளியாமர ராமேன் மவந்தான’ என்று  தோளைத்தட்டும். எத்தனைமுறை ஆமாமென்றாலும் அக்கேள்வியின் அந்தரங்கம் எனக்கு பிடிபட்டதில்லை. “படிக்கிறீயா” என்று ஒரு நமட்டுச்சிரிப்பை என்மீது வீசிவிட்டு நகரும். என் கற்பனை உலகம் அக்கிழவியின் சிரிப்பில் பொடிப்பொடியாக தகர்ந்து உதிர்ந்துவிடும். அவளை பார்த்ததுமே என் உடலை எங்காவது மறைத்துக்கொள்ளத் துடிப்பேன்.

எட்டு புளியமரங்கள் ஒரு வனம்போல சுற்றி அமைந்திருக்கும் இடத்தில்தான் தாத்தா கத்தியும், உடைந்த கண்ணாடி சட்டத்தையும் வைத்து கடையைத் தொடங்கினார். அதன்பிறகு கல் பாவிய சிறு மேடையும் பிய்ந்த குடையுடனும் அப்பா அவ்விடத்தில் அமர்ந்தார். திருமணத்திற்கு பின்பு அம்மாவின் ஓயாத நமச்சலினாலே அப்பா பஞ்சாய்த்து பிரசிடென்டைப் பார்த்து அங்கு சிமென்டு சிலாப்புகள் செறுகி கடையை கொஞ்சம் பெரிதாக விஸ்தரித்ததாக தாத்தா சொல்வார். எல்லாம் நான் பிறந்த நேரம் என்பது அவரின் கணிப்பு.

பன்னிரெண்டு முடித்து வேளான் படிப்பு கிடைத்ததும் என்ன ஏதுவென்று புரியாமல் கோயம்புத்தூர் கிளம்பிவிட்டேன். அம்மாவின் தூரத்து உறவு முறையில் பியூசி வரைப்படித்திருந்த ஒன்றிரண்டு பேர்களைத் தவிர அப்பாவழியில் யாரும் படித்திருக்கவில்லை. என் சித்தப்பாக்கள் அவரவரர் இடத்தில் கடை வைத்துக்கொண்டதோடு சரி. நான் சென்றதுமே அப்பாவிற்கு பெரும் ஏமாற்றம் கவிந்தது. என் இன்மை அவருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வன்மமாக ஊற்றெடுத்து, விடுமுறைக்கு வரும்போது என்மேல் பீறிடுவதை உணர்ந்திருக்கிறேன். “இந்த மயித்த படிக்துக்குத்தான்  நா வரவனுக குண்டிய கழுவி காசு புடிங்கி கட்டனுமா”.


அறைக்கதவு தள்ளுகின்ற சப்தம் கேட்டு பதறி எழுந்தேன். நீண்டநேரம் படுத்திருந்ததால் கணுக்காலில் கட்டில் கம்பி அழுத்தியதன் வலி எடுத்தது.  அறை   இருளில் மூழ்கியிருந்ததால் கண்கள் துழாவின. வெளியே நிற்பது நீலகண்டன்தான் என யூகிப்பதற்குள் “என்ன நைட்டுக்கு டிபன் வாங்கியாச்சா இல்ல கொண்டாரனுமா?” குரல் கொடுத்தான். விரல் இடுக்கில் பீர் பாட்டில்கள் இருந்தன.  என் பார்வையை கவனித்தவன் ‘எடக்கி போட போறேன்’ என்றான் சிரித்துக்கொண்டே. சிலாப்பில் இருந்த நான்கு பாட்டில்களையும் அதனுடன் கொடுத்தனுப்பி கதவைச் சாத்திவிட்டு படுத்தேன். கனத்த போர்வைக்குள் போனதுபோல மௌனம் வியாபித்தது. உடலெல்லாம் வியர்வை சுரந்து நாற்றம் கசிந்தது. எப்போதுமே வியர்வை நுகர்வதில் எனக்கு விருப்பம் உண்டு. மோசமான நாற்றமாக ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இன்று என்மீதே அருவருப்பு மூண்டுவிட்டிருந்தது.

கண்களை மூடியதும் அலுவலகத்தின் ஒவ்வொரு முகங்களாக மிதந்து வந்தன. பெருத்த முகங்களின் குரூரமான சிரிப்புகள். ராமுக்கண்ணு திருநெல்வேலி பாஷையில் ஏதோ என்னிடம் சொல்ல யத்தனிக்கிறார். வாட்ச்மேன் டூட்டி மாற்ற நின்றவாறு என்னைப் பார்த்து சிரிக்கிறார். இத்தனைநாள் என் அதிகாரத்தின் கீழ் வேலை செய்ததன் அருவருப்பு. இனி ஆவேசத்தோடு வெறிப்பிடித்த மிருகமாக என்னை எதிர்கொள்வார்கள். இனி நான் ஒதுக்கப்படுவேன். என் குரல் சன்னமாக குழாய் நீர்போல ஒழுகும். அரங்குலவன் அலுவலகத்தில் சேர்ந்ததிலிருந்தே சாதியைப்பற்றி அரித்துக்கொண்டேயிருந்தார். அப்போதே சொல்லியிருக்க வேண்டும் “நேத்து முழுக்க உங்களப்பத்தி தான் பேச்சு”. அவர் சொல்லும்போதே ஆத்திரம் கொப்பளித்தது. அடக்கிக்கொண்டு “அப்படி என்ன அரிப்பு?”  என்றேன். “எல்லாம் ஒரு கணக்குக்கு தான்..” என்றபோது அவர் முகத்தில் அலட்சியப் புன்னகை ஒழுகியது. உரையாடல்கள் திரும்ப திரும்ப மனதில் ஓட விட்டுக்கொண்டிருந்தேன். சட்டென அம்முகங்கள் சூழ்ந்து என்னை அடிக்கப் பாய்வதை கண்டு; திடுக்கிட்டு எழுந்தமர்ந்து கொண்டேன்.   மறுபடியும் அச்சொல். இம்முறை அது தன் உடைகளை களைந்து வீங்கிய சதைப் பிண்டங்களைக் காட்டி நிர்வாணமாக நின்றது. குமணட்டலுணர்வு வயிற்றை பிசைவது போல் இருந்ததும் தண்ணீரை ஆவேசமாக பருகித் தீர்த்தேன்.

ஃபேன் சட்டென்று முனகிய போதுதான் கரன்ட் நின்று வெகு நேரம் ஆனது தெரிந்தது. இருள் தனிமையின் கனத்தை இன்னும் கூட்டியிருந்தது. அறைக்கு வெளியிலிருந்து  புகைபோல வெளிச்சம் கசிந்ததில் அறையினுள் ஒவ்வொரு பொருட்களாக உயிர் பெற்று கண்களுக்கு  புலப்பட்டுக்கொண்டிருந்தன. எறிந்திருந்த சிகரெட்டொன்று கண்ணில் பட்டது. நைந்ததை பென்டெடுத்து பற்ற வைத்து இழுத்தேன். புகையை  உள்ளே தேக்கியபடி எழுந்து, எதிரேயிருந்த கண்ணாடியில் முகம் பார்த்தேன். என்; பிம்பம், அதன் பலநூறு வடிவங்களின் கடைசி ஒன்றாக கண்ணாடிக்குள் அலைந்தது. அச்சொல் நிர்வாணமாக என் முதுகிற்கு பின்னால் நின்றுகொண்டிருந்தது. “சீ நாயே” என கத்தியபடி சட்டையை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினேன்.


சாலையில் இறங்கியதும் சிறு பூச்சியாக காற்று சட்டைக்குள் புகுந்ததும் உள்ளிருந்த வேகம் சற்றே தணிந்தது. நகரம், இயந்திரம் போல வேகமாக சுழன்றுக்கொண்டிருந்தது. பெருநகரங்கள் எப்போதுமே உறங்குவதில்லை. ஷட்டர் மூடிய கடையின் கல் படிகளில் உடல்களின் அசைவுகள் தெரிந்தன. ஒன்றொடொன்று பிணைந்திருப்பது போன்று பிரமை. பெரிய தோள் பைகளுடன் சிலர் மறைவில் நின்று கொண்டிருப்பதை கவனித்தவாறு நடந்தேன். பஸ் ஸ்டாண்டை நெருங்கியதும்  மூத்திரத்தின் அமில நெடி நாசியை அறைந்தது. தொங்கும் விளக்கு வெளிச்சங்களினடியில் சர்க்கஸ் அமைப்பது போல பஸ்ஸ்டாண்டு இயங்கிக்கொண்டிருந்தது. வார இறுதிநாள் என்பதால் பயணித்தரகர்கள் ஆட்களை மறித்துககொண்டிருந்தனர். பெங்களுர் பஸ் நிற்கும் கடையில் டீ வாங்கிவிட்டு சிகரெட்டுடன் பிளாட்பார திண்ணையில் அமர்ந்தேன். முதுகில் தோல்பையுடன் இளைஞர்கள் சாவகாசமாக நின்றுகொண்டிருந்தனர். ஒவ்வொரு முகங்களாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

தூரத்தில் காம்பௌன்ட் ஓரங்களில் இளைப்பாறிக்கொண்டிருந்த பேருந்து இடைவெளியில் திருநங்கைகளிடம் பேரம் நடந்து கொண்டிருந்தது. தலையில் மல்லிகை அசைவதை கண்டதும் சட்டென்று கோகிலாவின் ஞாபகம் வந்தது. அவள் பெயர் கோகிலா என்றுதான் நீலகண்டன் சொல்லியிருந்தான். அவனுக்கு மாதம் மூன்று முறையாவது அவளுடன் இருக்க வேண்டும். மற்ற பெண்களை விட கோகிலா மட்டுமே செய்நேர்த்திக் கொண்டவள் என்று சொல்லி சிரிப்பான். அவள் செல் நம்பரை என்னிடம் கொடுத்தும் நான் ஏனோ தவிர்த்துவிட்டேன். அவள் நினைவு தோன்றியதுமே புலன்களில் ஒரு மிருகம் புரண்டு படுக்கும் அசைவொலியைக் கேட்டேன். அவளின் குண்டு கைகள் என்மீது உரசிச் செல்வதுபோல கிளர்ச்சிப் பரவியது. சுற்றிப் பார்;த்தேன். கோகிலா எங்கிருந்தாலும் நன்றாக தெரிந்துவிடும் குட்டையான தடித்த உடம்புடன் அசைந்து நடப்பாள். இருளுக்குள் தயங்கி நிற்பவர்களை கண்டுவிட்டால் மெல்ல தாளத்திற்கு இசைவது போல தலையை ஆட்டிச்சிரிப்பாள் அதுவே அவளை எதிர்கொள்ள இளகுவாக்கும். அதிகமும் அவளிடம் பேரம் பேசுகிறவர்களையே பார்த்திருக்கிறேன். இரவு முழுவதும் சோர்வு தட்டாத தேகம்.

இம்மாநகரருக்கு வந்த ஒரு நடுஜாமத்தில்தான் முதன் முதலில் அவளைப் பார்த்தது. சேலையை சரி செய்வதென அவிழ்த்து அப்படியே சரியவிட்டுக்கொண்டிருந்தாள். பயணக் களைப்பில் இறங்கிய போது அவளின் அச்செய்கையைக் கண்டு திடுக்கிட்டேன். சேலை முழுதும் நழுவிவிடாதா என எண்ணத் தோன்றியது. தொலைவுப்பயணி என்றே அவளை நினைத்து நெருங்கினேன். அதிதீவிர அலங்காரமும் திரும்ப திரும்ப அவள் அவிழ்ப்பதுமாக இருந்ததை கவனித்த பின்னே அது ஒரு தொழில் உத்தியெனப் புரிந்தது.

டீ ஆறிவிட்டிருந்தது. சிகரெட் புகைத்;தபடியே எழுந்து பஸ்ஸ்டாண்டை சுற்றி நடக்கத் தொடங்கினேன். இரவுகளில் இங்கு சுற்றுவதே மனதிற்கு லேசாக இருந்தது. பஸ் ஸ்டாண்டே அரை உறக்கத்தில் விழித்துக்கொண்டிருப்பது போல் இருந்தது. பேருந்துகள் மெல்ல முனங்கி நகர்ந்துகொண்டிருந்தன. பயணியர் விடுதி வாயிலில் போதையுடன் சிலர் லுங்கி அவிழ்ந்து தரையை புணர்ந்தவாறு கிடந்தனர். ஒரு முழுச்சுற்று சுற்றியும் அவள் உருவம் கண்ணில் படவில்லை. அவள்  யாருடனோ புரள்வது போன்றதொரு காட்சி ஆழ் மனதில் வந்து போனது. திரும்பவும் பெங்களுர் பஸ் நிற்குமிடத்திற்கே வந்துசேர்ந்தேன். சிகரெட் பாக்கெட் வாங்குவதற்கு திரும்பியபோது ஆவின் டிப்போவிற்கு அருகில் கோகிலா முகம் தெரிந்தது. அது அவள்தானா என பார்வையில்; கோட்டு சித்திரம் வரைந்து உறுதிபடுத்திக்கொண்டேன். என் சதைகள் முடுக்கிவிடப்பட்டு துடித்து, பதற்றம் தொற்றியது. சிமெண்டு கட்டையில் அமர்ந்திருந்தாள். பக்கத்தில் திருநங்கைள் வியாபாரத் தரகர்களாக. எப்போதும் அவளை நேரடியாக சென்று பேசிவிட முடியாதென நீலகண்டன் புலம்புவான். சேலைக்குள் எதோவொன்றை வைத்து சலனமில்லாமல் கடித்துக்கொண்டிருந்தாள். பக்கத்திலிருந்தவளிடம் ஒருவனைச் சுட்டிக் காட்டி பலமாகச் சிரித்தாள். அவனின் ஆண்மை பற்றியதாகவோ கூச்சவுணர்வையோ இருக்கலாம். அவளுடன் நாலைந்து பெண்கள் நின்றார்கள். அவளை அணுகப்போவதே எனக்குள் கிளர்ச்சி மூட்டியது. அதுவரை இருந்த என் அழுத்தம் உடைந்து, ஆவேசம் மெல்ல தணிவதாக உணர்ந்தேன். பஸ் ஸ்டாண்டிற்கு வரும்போதெல்லாம் கொஞ்ச நேரமாவது அவளை நின்று பார்க்காமல் போனதில்லை. அதிகபட்சம் இருவது நிமிடத்திற்குள் அவளுக்கு ஆள் கிடைத்துவிடும். அடுத்த கணம் திமுதிமுவென வெளியே நிற்கும் ஆம்னிக்கு கூட்டிப்போவதும் நொடியில் ஆம்னி இருளில் விருட்டென மறைந்து விடுவதையும் அப்பாலிலிருந்த பார்த்திருக்கிறேன்.

அப்பெண்களின் உடல் நெளிவுகளை தூரத்தில் தயக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தவர்களின் நடுவே வந்து நின்றேன். அப்போது என் தோளை யாரோ தட்டிச்செல்வதாக உணர்ந்தேன். சட்டென திரும்பியதும் அருகில் என் பார்வைக்காக காத்திருந்த அம்முகத்தை நோக்கினேன். என் வயதை விட சிறியவன். அவன் கண்களில் ஒரு சமிக்ஞை அசைந்தது. நான் குழப்பமாக கோகிலாவைப் பார்த்தேன். அவள் சிரித்தாள். அச்சிறுவன் போதையில் தடுமாறியபடியே என் பதிலுக்காக காத்திருந்தான். நான் அமைதியாக நின்றதால் பொறுமையிழந்து நகர்ந்து அடுத்த தோளை உரசச் சென்றான். ஒருகணம் அவனும் நானும் வேறுவேறு உலகங்களின் விளிம்பில் நிற்பது போலிருந்தது எனக்கு.

அவள் எழுந்து அங்கிருந்த சிறு இருளுக்குள் ஒரு நடை போனாள். அது தயக்கம் கலைவதற்கான வாய்ப்பு என யூகித்து அவளருகே சென்றேன். அப்போது தான் அவளை மிக நெருக்கத்தில் பார்க்க முடிந்தது. இடது கண் மூக்கு நுனியைப் பார்த்தபடி சாய்த்திருக்க, வலது கண் மட்டுமே என்னைப் பார்த்தது. வெவ்வேறான இந்த பார்வையால் ஒரு கணம் தடுமாறினேன். பின் வலது கண்ணை மட்டும் பார்ப்பதாக தீர்மானித்திக் கொண்டேன். கொய்யா காயை கையில் வைத்து கடிப்பதும் பின்பு எதற்கோ மறைப்பதுமாக இருந்தாள். என்னை சட்டை செய்யாமலே நின்றுகொண்டிருந்தவளின் மீது என் பார்வையை ஓடவிட்டுக் கொண்டிருந்ததை கவனித்தவள்  “என்ன” என்றாள்.  நான் “போலாம்” என்றேன் தயக்கமாக. அவள் என் முழு உடலை ஒரு நொடியில் அளந்துவிட்டு “ஆள் வருது” என்று திரும்பிவிட்டாள். நான், “போயிட்டு வர லேட்டாவுமா…?” என்றேன் சன்னமாக. அவளுடன் பேசும் இடைவெளிகள் தயக்கங்கள் கரைந்துகொண்டிருந்தன. என் பக்கம் திரும்பி “ஆய்யரத்தயிநூறு” என்றாள் சாதாரணமாக. “ம்” என தலையை உருட்டுவது போல அசைத்தேன். அத்தனையும் ஒரு நாடக ஒத்திகைப் போலிருந்தது. பாக்கெட்டில் ஆயிரம் மட்டுமே இருந்ததை கவனித்து தயக்கமாகக் கேட்டேன்.. அவள் முறைப்பது போல “ரூம் வாடக ஒங்கப்பனா தருவான்..” என்றாள். எனக்கு சட்டென கோபம் உள்ளிருந்து கால்கட்டிய ராட்ச பறவையாக அடித்தது. அடக்கிக்கொண்டு என்னுடைய அறைக்கு செல்லலாம் என்றேன். “ஒன்னும் பெர்ச்சன வராதுள்ள..” என்றவள் தயாராகிவிட்டதாக சேலையை உதறி சாத்தினாள். பஸ்ஸ்டாண்டிலிருந்து வேகமாக நடக்கத்தொடங்கினோம். சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டேன்.

அறையின் டியூப் லைட்டினடியில் அவள் வேறொருத்தியாக தெரிந்தாள். கவர்ச்சியின் நிழல் மட்டுமே வந்திருந்தது. நடுத்தர வயதைக்கடந்த உப்பிய உடம்பு. தேவைக்கதிகமான சதைகள் இடுப்பைச்சுற்றியிருந்தன. குட்டிப் பையன் 9தொப்பியணிந்திருப்பது போல மூக்குத்தி அச்சிறுத்த மூக்கில் சரிந்திருந்தது. சிலகணங்கள் சுயபிரக்ஞையின்றி அவளையே வெறித்துக்கொண்டிருந்தேன். அவள் தலையைத்தூக்கி என் முகத்தை ஏறிட்டதும் நான் சமாளித்து மேஜையில் டிபன் பார்சல் இருப்பதைக் காட்டி “சாப்டுறீயா” என்றேன். அவள் வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு என்னிடம் “நீ சாப்புடு நல்லா தெம்பா இருக்கட்டும்” என்றாள்.  “எனக்கு சாப்பாடு பிடிக்கல. நீ எடுத்தக்க ஆறிடும்” என்றதும் வெறுப்பாக பொட்டலத்தை எடுத்து முகர்ந்தாள்.

“புரோட்டவா”

“தெரியல. பிரிச்சு பாரு…கீழ ஓட்டலருந்து வந்திருக்கும்”

அவள் பிரித்து “எனக்கு புரோட்டா புடிக்காது. ஆனா இதுல நல்லா நெய் வாசம் வருது”என்றாள். அப்போது அவள் முகத்தில் இளவயது பெண்ணுக்குரிய தயக்கம் தெரிந்தது.   “மௌகு பாற பக்கம் நயினார் கடயில இப்படி தான் இருக்கும்”. சாப்பிடத் தொடங்கினாள். அவளுக்கு நல்ல பசி இருந்திருக்க வேண்டும்.

அலுவலகத்தில் என் மீது கவிந்த அருவருப்புணர்வும் மன அழுத்தமும் இப்படி பஸ்ஸ்டாண்டை சுற்ற வைத்திருப்பதாக அவளிடம் சொன்னேன். மிகநெருங்கி பழகியவளாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாள். அப்பா, நான், கடை, அம்மா, அலுவலகம் என சில நிமிடங்களில் என் மொத்த வாழ்க்கையும் சொல்லிமுடித்திருந்தேன். அவள் இது போன்ற  நூறு கதைகள் கேட்டிருக்க வேண்டும் என்று அக்கணம் அறிந்ததும் அவமானமாக இருந்தது. என் முகத்தில் இருந்த ஏமாற்றத்தை கவனித்துவிட்டு “சரி அதுக்கென்ன.. அல்லாத்துக்கும் ஒரு வழி உண்டு தான..” என்றாள். அவளைப் பற்றி கேட்கக் கூடாதென எச்சரிக்கையாக இருந்தேன். “பொய் பெரட்டு சொல்லி மூக்கால அழுது காச புடுங்கிருவாளுக” என்று நீலகண்டன் சொல்வது ஞாபகம்.

“வீட்டுல பொண்டாட்டிய மாட்டடி அடிச்சுட்டு ஆவேசமா வந்து பூர்ற ஆளு தான் நெறையா…அப்புடி வரும்போது ஒரு வேகம் இருக்கும்….” என்றவள் சிரித்தபடியே என்னை அணைத்தாள். சட்டென சதைகளின் உரசலில் குளிர்ந்தேன். உத்வேகத்தோடு அவளை ஆவேசமாக அணைத்து தள்ளினேன். தினம் தகிக்கும் எத்தனையோ உடல்களின் தழலை விழுங்கும் எரிஅரவம் அவளென அக்கணம் நினைக்கத் தோன்றியது. என் சதைகள் முறுக்கி விரிந்தன. மனத்தின் ஆங்காரம் இருக்குமிடமெல்லாம் தென்பட்டன. ஒரு கணம் அவள் சாவின் விளிம்பில் துடித்தாள். என் ஆவேசம் அடங்காமல் அலைந்தது. அவளின் அந்த ஒற்றைக்கண் கவிழ்ந்த பாச்சை போல துடித்துக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவள் தேகத்தைப் பார்த்தேன். சதைகள் இறுகாமல் வயிறும் பிருஷ்டமும் தளர்ந்து தொழ தொழவென சரிந்திருந்தன. அவளிலிருந்து தனி உடலாக அவை கிடந்தன. நானே அச்சதைப்பிண்டங்களாக மாறிவிட்டதாக உணர்ந்தேன். அவளின் வெற்றுடலைப் பார்ப்பது அடி வயிற்றில் கசந்தது. குமட்டலுற்றேன். அவள்மீது படியும் எண்ணங்களைத் திருப்பி வேறு முகங்களை நினைவிலிருந்து எழச்செய்தேன். சில முகங்கள் என்னுடன் பேச முற்பட்டன. காலப்பிரக்ஞையின்றி நினைவுகள் தாவி ஓடின. எத்தனை உடல்கள் அவள்மீது புரண்டெழுந்து சென்றிருக்கும் என்ற நினைவு தட்டியதும் குரூரமான அருவருப்பு முதுகில் அறைந்தது. உடல் கூசியது. சட்டென அவள் உடலிலிருந்து என்னை ஒரு சவ்வு போல பியந்துக்கொண்டு எழுந்தேன். அவள் ஏதுமறியாது அன்னாந்து கிடந்தாள்.

அவளிலிருந்து விடுபட்டு ஜன்னல் பக்கம் வந்ததும் என் வியர்வையுடலை காற்று கூசிச்சென்றது. இன்னும் தவிப்பு அடங்காது மனம் அலைந்தது. திடுதிப்பென்று சரிவில் இடறி விழுந்தது போல தடுமாறினேன். எதையுமே செய்யாது இருந்திருக்கலாமென தோன்றியது. அருவருப்புணர்வு தன் கனத்த கால்களை நெஞ்சில் வைத்து அழுத்தியது. மறுபடியும் அலுவலகம், சொற்கள், அவமானம் என எண்ணங்கள் மாறிக்கொண்டிருந்தன. எத்தனை அபத்தமான சொல் அது. தொண்டை அடியில் கசந்து குத்துகிறது. முதன் முதலில் குடித்த போது உண்டானது கசப்பு போல அச்சொல் ஆழம் வரை சென்றிருக்கிறது. அவளைப் பார்ப்பதே அலுப்பூட்டியது. மனதிலிருந்து வெளியேறிய ஆவேசத்தின் வெற்றிடங்களிலெல்லாம் மூர்க்கமான தைரியவுணர்வு நிரம்பிக்கொண்டது. அவளை எதிர்கொள்ளும் முன் இருந்த பதற்றம் இப்போது இல்லை. அவளே ஒரு  உயிர் போல தெரியவில்லை.

அவள் எழுந்து உடைகளை மாற்றிக்கொண்டிருந்தாள். “அஞ்நூறு தான் இருக்கு…எடுத்துக்க” என்று கட்டிலில் வீசிவிட்டு கதவில் தொங்கிய சட்டையை எடுத்தேன். அவள் “என்ன” என்றாள் கனத்த குரலில். நான் ஏதும் பேசாது கைலியை அவிழ்த்துக் கட்டியவாறு நீர் மொன்டு பருக குனிந்தபோது களைந்தச் சேலையை அள்ளி உடம்பில் வீசியபடி “ஐநூற வெச்சுகிட்டுதான் இப்பிடி கெடந்து பொரண்டியா..தேவுடியா பயலே..” என்றவள் ஆவேசத்துடன் என் நெஞ்சைப் பிடித்து திருப்பினாள். அவளை அறைந்துவிட துடித்து அடக்கிக்கொண்டேன். அவள் முகம் புடைப்பது போல வீங்கியிருந்தது. “என்னடா மொறைக்கிற” என்றாள். அவள் குரலில் வியாபார தொனி அதிர்ந்தது. அம்மாறுகண் முகத்தில் முறைப்பு என்பதே வெளிப்படவில்லை. மாறுகண் இருப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சனை என்று அப்போது ஞாபகம் வந்ததும் சிரித்துக்கொண்டேன். அவளுக்கு ஆத்திரம் மேலும் பீறிட்டது. விறுவிறுவென சேலையை சுற்றியவாறு பூச்சரத்தையும் தாலிக்கயிறையும் மாலைபோல போட்டுக்கொண்டு கிளம்பத் தயாரானாள். அவள் உடல் அசைவில் அலுப்பு தெரிந்தது. என் நெஞ்சு வெறித்தனமாக அடித்ததைக் காட்டிக்கொள்ளாமல் பாக்கெட்டிலிருந்த சிகரெட்டை பற்றவைக்காமல் உருட்டிக்கொண்டிருந்தேன். இன்னும் ஒரு நிமிடம் தான் அவள் போய்விடப் போகிறாள் என்று மனம் சொல்லிக்கொண்டிருந்தது.

மரக்கதவு பின்னால் கிடந்த செறுப்பை மாட்டியபடி “ஒங்க அப்பன் அம்பட்டையன்கிட்ட செரக்கே வந்துட்டு இப்பிடிதான் காசு குடுப்பானுவளா” என்றாள். அச்சொல்லினைக் கேட்ட அடுத்த கணம் ஆத்திரம் பீறிட்டது. அவளின் தலைமுடியை பிடித்திழுத்து முகத்தை அறைந்து தள்ளினேன். மொத்தென தரையில் சரிந்தாள். அப்போது அவளின் உருவம் என் பிரக்ஞையில் தங்கிவிட்டிருந்த அச்சொல்லின் உருவம்தானென உணர்த்தியது. அவளின் கனத்த உடம்பு கட்டில் விளிம்பில் மோதி அதிர்ந்ததும் மேலும் என் வேகம் கூடியது. கட்டிலைப் பிடித்தெழுந்தவள் கெட்டவார்த்தையில் என்னை நோக்கி கத்தத்தொடங்கினாள். அதிகமும் என் அப்பாவின் தொழிலை. எச்சிலை குதக்கி என் மீது எம்பி துப்பினாள். வெள்ளை நுரையுடன் கால்; விரலில் தெறித்தது. என் ஆத்திரம் தீரும் வரை அடித்து மிதித்தேன். தொடையில் ஏறி உதைத்ததும் “அம்மா” என்று ஈனஸ்வரத்தில் தொடையைப் பிடித்தபடி விம்மினாள். “நாதிகெட்ட மூதேவி ஒனக்கு குடுக்கறது நூறே அதிகம்… நீ என்ன பத்தி பேசுறியா…. ஒம்மொவரைய பாத்தா ஒரு மசிறும் வரல…ஒனக்கு அந்த நம்பருங்கலே பரவால…ஒனக்கு எவன் வாரன்…எல்லாம் பல்லு போன பாம்பு வந்து உருண்டுட்டு போவுது.. சீ நாயே எந்திரிச்சு போடீ…இனி இங்க பாத்தன்னா ஒதச்சு கொண்ணுடுவேன்..” அவள் கதவு மூலையில் பன்றி போல சுருண்டு கிடந்தாள்.

அரைமணி நேரம் விசும்பிக்கொண்டிருந்தவளைப் பார்க்காமல் ஜன்னல் வெளியே வெறித்துக்கொண்டிருந்தேன். என் வியர்வை வழிந்து தரையில் சொட்டியது. மெல்ல எழுந்தவள் தொடையை ஊன்ற முடியாமல் கதவைப் பிடித்துக்கொண்டாள். அவள் முகம் கண்ணீர் வழிந்து சிவக்க ஒரு வனக்காளியாக மாறியிருந்தது. வலது கண் மட்டும் என்னைப் பார்க்க, இடதுகண் தரையைப் பார்த்தவாறு சிறு பூச்சி போல துடித்துக்கொண்டிருந்தது. கீழே ஆம்னி ஹாரன் கொடுப்பது கேட்டதும் கெந்தியபடி இறங்கிச் சென்றாள். அறை முழுவதும் வியர்வையுடன் அவள் விட்டுச்சென்ற சென்ட் வாடையும் கலந்து வீசியது.


வேலையில் சேர்ந்து ஓராண்டு முடிப்பதற்குள்ளே அப்பா இறந்து போனார். அவர் இறப்பு கொஞ்சம் கொஞ்சமாக அவரை அரித்துக்கொண்டேயிருந்த ஒன்று. ரசம் போன கண்ணாடி சட்டத்தையும், தொடைகளில் தையல் போட்ட கிழிந்;த நாற்காலியை மட்டுமே வெகுநாட்களாக தனிமையில் அமர்ந்து பார்த்துக்கொhண்டிருந்ததாக அப்பாவின் நண்பர்கள் சொன்னார்கள். சரியாக யாரும் கடைக்கு வருவதில்லையென முன்பே அறிந்திருந்தேன். மாதம் முடிந்ததும்  முடி தேங்கிய சாக்குமூட்டையை எடுக்க ஆள் வராமல் அப்படியே கிடந்திருக்கிறது. தந்தி பேப்பர் பார்க்க வருபர்களிடமெல்லாம் அப்பா தகராறு செய்ததாக சித்ரா எனக்கு போன் பண்ணினாள். என் வயதொத்த பையன்களை வழியில் பார்க்கின்ற போது “சார் போன மாசம் கடப்பக்கம் வரல போல” என்று ஏக்கமான சிரிப்போடு கேட்பதை நானே பார்த்திருக்கிறேன். அச்சமயங்கள் என் கவனம் படிப்பில் குவியாமல் அலைக்கழிக்கப்பட்டிருந்தது. ஹாஸ்டலில் அப்பாவை நினைத்துக்கொண்டு அமர்ந்திருப்பேன். எத்தனை நாற்றம் குமைந்த அக்குள்களை வழித்து சுத்தம் செய்திருந்தார். என்னால் குமட்டலெடுக்காமல் அதைப் பார்க்கவே முடிந்தில்லை என்று எண்ணிக்கொள்வேன்.  குஷனும், வாசனை பௌடரும் கொண்ட கண்ணாடி பிரேம் போட்ட புதிய கடைகள் எங்கள் ஊர் பஸ்ஸ்டாப் முக்கில் அப்போதே ஆரம்பித்திருந்தன.

தாத்தா பழைய நடிகர் பி.யூ.சின்னப்பாவுக்கு முடித்திருத்திருக்கிறாரென அப்பா அடிக்கடிச்சொல்வார். சின்னப்பா ஊருக்கு வரும்போதெல்லாம் தாத்தாவை கூப்பிட்டுவிடுவாராம். தாத்தா இளநீர் வலுசயை துடைத்தெடுப்பது போல தாடையை வழிப்பதாக சின்னப்பா  சொல்வதாக பெருமைப்பட்டுக்கொள்வார். அப்பா தாத்தாவின் நினைவாக சின்னப்பாவின் பழுப்பேறிய படத்தை மாட்டியிருந்தார். மிக அந்தரங்கமான  வசீகரத்துடன் பி.யூ.சின்னப்பா அதில் சிரித்துக்கொண்டிருப்பதாக நினைப்பேன். ஒரு மழை இரவில் அப்பா கடைக்குள்ளே பூட்டிக்கொண்டு நெருப்பு வைத்துக்கொண்டு இறந்து போனார். மூலையில் குவிந்து கிடந்த ரோமம் முழுவதிலும் பற்றிய தீ விடியும் வரை அடங்காது எரிந்துகொண்டேயிருந்தது. அதன் கருகல் வாடை பச்சை மாமிசம் தீயில் உருகுவது போல அவ்விடமெங்கும் குமைந்தது. சுழல் நாற்காலியில் விறைத்துக்கிடந்த அப்பாவின் உடலை வெளியே தூக்கி வந்தோம். கரும்புகை அப்பிய கண்ணாடிச்சட்டத்தை ஏனோ ஏறிட்டுப் பார்க்க முடியாமல் நகர்ந்துகொண்டேன்.


அறையின் மூலையில் துரு ஏறிய குழாயைப் வெறித்தபடியே அத்தனை காட்சிகளும் மனதில் ஓடின. பழைய நினைவுகள் உடலில் புலன்களை அடைத்து வெளியேற துடிக்கின்றன. கண்களை மூடிக்கொண்டேன். பெரிய இருள் வெளியில் ஒரு தீபம் மட்டும் எரிவது தெரிந்தது. சட்டென அந்த கண்கள் நினைவிலிருந்து மீண்டு வந்தன. உடனே அந்நினைவை களைக்க சித்ராவை நினைத்தேன், அம்மா படத்தை ஞாபகப் படுத்தினேன், நீலகண்டனை நினைத்தேன், அவனின் முன்னோக்கி எட்டிப்பார்க்கும் வளைந்த காதுகளை ஞாபகத்தில் கொண்டவந்தேன், அவனின் கண்களை நினைத்தேன் திரும்பவும் கோகிலாவின் கண்களே தெளிந்து வந்தது. ஒருமணி நேரத்தில் எத்தனைமுறை அவள் கண்களைப் பார்த்திருப்பேன்?

விழிப்பு வந்ததும் அனிச்சையாக தலை தூக்கிப் பார்த்தேன். சரியாக மணி ஒன்பதைக் காட்டியது. இன்று அதுவே ஜெயித்துவிட்டது போல இருந்தது. இரவு முழுவதும் யாருடனோ விவாதம் செய்ததுபோல தாடையில் வலி எடுத்தது. நீலகண்டன் தந்தி பேப்பரை கதவிடுக்கில் தள்ளியிருந்தான். மடித்த புதிய வேட்டி போல கிடந்தது. திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தேன். கோகிலாவின் ஒரு தடம் கூட மிச்சமில்லை. நேற்று எல்லாமே ஒரு கனவு போல ஒன்றின்;மீது ஒன்றாக சரிந்திருந்தது.

ஜன்னல் பக்கம் திரும்பினேன். கட்டிடங்களுக்கு பின்னால் வானம் வெளுத்திருந்தது. ஒரு பெரிய ஓவியம் போல வெளிக்காட்சிகள் தெரிந்தன. சில சமயம் அவ்வோவியத்திற்கு உயிர் கொடுப்பது போல சட்டென பறவைகள் பறந்து செல்லும். ஜன்னலை நோக்கி நடந்தேன் ஓவியம் கொஞ்சம் கொஞ்சமாக அகண்டு விரிந்து சட்டென நான் அதனுள் நுழைந்து விட்டது போலானது. நேற்று இரவில் பஸ் ஸ்டாண்டில் மனித நெருக்கத்தினூடே நான் நின்று கொண்டிருந்த இடத்தைத் தேடினேன். பேருந்துகளை அலுவலகப் பரபரப்பு தொற்றியிருந்தது. மாராத்தான்கள் கருப்பு பையின் தலை முடியைப் பிடித்தபடி அலுகலகம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு சிரிப்பு தான் வந்தது. அப்பா ஒருவேளை படித்து வேலையிலிருந்திருந்தாலென நினைத்துக்கொண்டேன். அவர் அம்பட்டையன் தொழிலே அரசு உத்யோகம்தான் என்பார். மெல்ல தெளிவு வந்ததுமே அலுவலகம் ஞாபகம் தான் முதலில் வந்தது. மேலும் இரண்டு நாட்கள் கூடுதலாக லீவு சொல்லிவிட்டு அறையிலே இருந்தேன்.


இரண்டு நாட்கள் முழுதும்  தூங்கிக்கொண்டேயிருந்தேன்.  உறக்கம் ஒரு போதையாக மாறிவிட்டிருந்தது. எப்போதாவதுதான் இப்படி தூக்கம் வந்திருக்கிறது. கை தொங்கியபடி கட்டிலிலிருந்து தரையை வெறிப்பதும் பின் அன்னாந்து மேற்சுவரைப் பார்ப்பதுமாக கிடந்தேன். தொண்டை வறண்டதும் ரம் பாட்டிலை கவிழ்த்துக்கொண்டேன். பாட்டில் முடித்ததும் குடல் எரிந்து பின் அணையும். கொஞ்சம் கொஞ்சமாக அதன் அமிலக்கசப்பு மறைவதை எச்சில் விழுங்கியபடி ரசிப்பேன். நீலகண்டன் நான்கு முறை வந்திருக்கிறான். எனக்கு ஒரு கனவு போலவே அது நிகழ்ந்ததாக பின்னால் அவனிடம் சொன்னேன். சாயங்கால வேளைகளில் மங்கிய வெளிச்சத்தைப் பார்க்கும் போது பெரும் துக்கமாக இருக்கும். அப்பா ஞாபகம் வந்துவிடும். அவரின் அந்த கருகிய உடலை சுத்தமான வெள்ளை வேட்டியில் போத்தியிருந்ததும் வெந்த சதையிலிருந்து நீர் வந்து கொண்டேயிருந்ததும் சித்ரா அவரின் உடலில் விழுந்து அழுதபோது அச்சதைகள் கொழகொழவென கலைந்து வேட்டித்துணியில் ஈரமாக படிந்ததும் ஒவ்வொன்றாக நினைவில் வரும். உடல் நடுங்கி உதறுவது போல கால்களை உதைப்பேன். கண்களை திறந்ததும் கண்ணீர் பக்கவாட்டில் வழியே காதில் வழிந்துகொண்டிருக்கும்.

ஒரு வாரம் புகைமூட்டம் போல அறை நிறைந்திருந்தது. அறைக்குள் நுழைந்ததுமே அருவருப்புணர்வு வந்துவிடுகிறது. அதிகமும் நீலகண்டனிடம் வெட்டிப் பேச்சிலே கழித்தேன். அவனும் ஊருக்கு கிளம்பிவிடவே தனிமையின் கனம் கூடிற்று. அவள் மீது எனக்கேற்பட்ட ஆவேசமும் மூர்க்கமும் என்னுள் நெளியும் புழுக்களாக கிடந்திருக்கிறது. எத்தனையோ பெண்களின் முகம் தொட்டுச்சென்றிருந்தபோதும் என்னிலிருந்து அந்நினைவு அகலாது, அவள் பிம்பம் மட்டுமே எல்லாமுமாக இருந்தது. புண் அழுகியதுபோல என்னை நிம்மதியிழக்கச் வைத்தது. அன்றைக்கு அதுவரையில்லாத குரூரமான ஒருவனாக நான் வெளிப்பட்டிருந்தேன். மறுபடியும் அவ்வுருவம் படியேறி மேலெழுந்து வரும் என்கிற பயமே என்னை நடுங்கச் செய்தது. குற்றவுணர்வு அறைந்து தள்ளியது. இனி நான் ஒன்றும் செய்வதற்கில்லை என்றான பிறகு அறைக்கதவை இழுத்து சாத்தி வெளியேறினேன். சட்டென்று மனம் விடுதலையுணர்வு அடைந்தது போலிருந்தது.

மெல்ல பஸ்ஸ்டாண்டை நோக்கி நடக்கத்தொடங்கினேன். நன்றாக மழை பெய்து ஓய்ந்திருந்தது. சாலைகள் தண்ணீர் விட்டு கழுவியது போல பளபளத்தன. மெல்ல குளிர் பரவியது. லைட்டர் இல்லாமல் சிகரெட்டை கடித்தவாறே நீண்ட நடை சென்றேன். உடல், எடையில்லாது லேசானதாக மாறியிருந்தது. பேருந்தின் ஹெட்லைட் வெளிச்சத்தில் மஞ்சள் சிவப்பாக மனிதர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தனர். சுணங்கி கிடக்கும் பூச்சரத்தின்மேல் விற்பவள் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தாள். சட்டென்று கோகிலாவின் நினைவு வந்தது. அடுத்த கணமே பதற்றம் அடையத் தொடங்கினேன். அந்நினைவே என்னை இழுத்து செல்வதாக உணர்ந்தேன்.

பஸ் ஸ்டாண்டு முழுவதும் தேடியும் அவள்  கண்ணில் புலப்படவில்லை. அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கஸ்டமர்களிடம் அவள் இருக்கமாட்டாள். திரும்பவும் அதே இடத்திற்கு வந்து சேர்ந்து விடுவாள். அவளைப் பார்த்துவிடுவேனென்கிற பயமும் தேடவேண்டுமென்கிற உள்ளுணர்வும் மாறி மாறி வந்தன. இருளில் துழாவுவது கண்ணில் வலியெடுத்தது.  நடந்தபடியே மேம்பாலம் செல்லும் பாதைக்கு வந்துவிட்டிருந்தேன். கால்கள் சோர்வுற்றதும் அங்கிருந்த ஹோட்டல் படிக்கட்டில் அமர்ந்தேன். திருநங்கையொருத்தி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளை  எப்போதும் கோகிலாவோடு பார்த்த ஞாபகம். அங்கிருக்கும் திருநங்கைகளிலே அச்சு வார்த்த பெண் போலிருப்பாள். குண்டு கண்களும், ஒல்லியான உடம்பும், நெடு நெடுவென்ற வளர்ச்சியும் ஒரு அழகி போலவே காட்டும்.

பாலத்தின் அடியில் குவிந்திருந்த இருட்டை திரும்பிப் பார்த்துவாறே கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டே வந்தாள். தலைக்கு மேல் கத்துவது போன்ற நாரசமான ஒரு குரல். என்னைப் பார்த்ததும் சிகரெட் கேட்டாள். பாக்கெட்டைப் பிரித்து நீட்டினேன். ஒரு பறவை அலகில் கொத்துவது போல தொட்டு எடுத்தாள். நான் அமைதியாக அவள் முகத்தைப் பார்த்தேன். பழகியது போல சிரித்தவள் “ இந்த எளவு சம்பாத்யத்துக்கு நாயி மாரி படனும்”. நான் அவளையேப் பார்த்தேன். பின் நீண்ட மௌனம். முழு சிகரெட்டையும் கரைத்துவிட்டு “என்ன” என்றாள் அலட்சியமாக. நான், “நிறையா படிப்பியா?” என்று கேட்டேன்.

“ஆமா. நாந்தான் படிச்சேன்” என்றவள் பட்டென்று சிரித்துவிட்டாள். சிரிக்கும் போதே அவளுக்குள்ளிருந்த ஆண் முகம் தெரிந்தது.

அவளிடம் கேட்பதற்கு யோசித்துக்கொண்டிருந்ததும் என்னைப் பார்த்து என்ன வரியா?” என்றாள். நான் மறுத்துவிட்டு “அந்த குண்டு பொம்பள ஒன்னு இருக்கும்ல..” என்றேன் தணிந்த குரலில். அவள் நாலைந்து பெயர்களைச் சொல்லிவிட்டு பின் “டோரியா..” என்றாள். நான் தலையாட்டினேன். அப்போது அவளின் முகம் இருகியது. அம்மாற்றம் எனக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தவே  “ இல்ல ஆளேயே காணமே அதான்’” என்றேன் போலியான பாவனையில். “வேற எங்கயும் போயிடுச்சோ?”

“எங்க போகுது….அது புருசன் போட்டு இடுப்ப எலும்ப ஒடிச்சு மூலைல அள்ளி போட்டுட்டான்.. எப்புடி குண்டிய குலுக்கிக்கிட்டு சுத்துனா. இந்த பஸ்டாண்டுல என்னமோ அவளுக்கு மட்டுந்தான் குண்டி இருக்கமாரி” என்றாள். நான் திடுக்கிட்டு அதிர்ந்தேன். “ஏன் என்னாச்சு..அது தொளில் பண்றது புருசனுக்கு தெரியாத?” என்றேன் உடைந்த குரலில்

“தெரியும்.. அவந்தான் யாரோ கட்சி ஆளுக்கு அனுப்பி வெச்சுருக்கான்.. இது ஒன்னும் சொவமா இருக்கலனு அந்தாளு இவ புருசன ஒதச்சுட்டானாம்.. புருசக்காரன் கோவத்துல அண்டாவ தூக்கி அவ குண்டில போட்டு போயிட்டடான். ஆஸ்பெட்டல்ல கெடக்குது. இனி குண்டி ஒக்காறாது…ஒனக்கு என்ன அதான்  வேணுமா..?”

நான்  சலனமற்று அமர்ந்திருந்தேன். கால்கள் வெடவெடத்து நடுங்கின.  அவள்  என்னிடம் ஏதோ கேட்டாள். நான் ஒன்றும் பேசாதிருக்கவே என் மார்பை கிள்ளினாள். நான் பயந்து தட்டிவிட்டேன். அவள் சிரித்தபடியே முணுமுணுத்துக்கொண்டே இருளுக்குள் யாரையோ கூப்பிட்டபடியே எழுந்துச்சென்றாள். நான் அவள் போவதையேப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button