எங்களுடைய உறவுக்காரப் பெண்மணி சோழவந்தானில் இருந்தார். அதாவது அந்த ஊருக்கு மணமாகி வந்தவர். பூர்விகம் கேரளம். இறுதிக் காலத்தில் அப்பா படுத்த படுக்கையாய்க் கிடந்தபோது, அம்மாவுக்கு ஒத்தாசையாக நாலைந்து மாதங்கள் எங்களுடன் வந்து தங்கினார். செம்மீன் பாடல்களும், நடைமுறைப் புழக்கத்திலுள்ள சில மலையாளச் சொற்களும் எனக்குத் தெரியவரக் காரணமாய் இருந்தவர். ‘சிலப் போழ்’ என்ற சொற்றொடரை, ‘செல்லப்பம்’ என்று உச்சரிப்பாரா, குறும்புக்காரரான அவரது புதுக்கணவர், ’அதாரு செல்லப்பன்!’ என்று ஒவ்வொரு தடவையும் கேட்டு, தானே சிரித்துக்கொள்வார்! உண்மையில், அவர்தான் எங்களுக்குத் தொலைதூர உறவு.
அதெல்லாம் பழங்கதை. பல ஆண்டுகள் கழித்து, ஒரு திருமண வீட்டில் அந்தத் தம்பதியைச் சந்திக்க வாய்த்தது. உறவினரின் குறும்பு முழுக்க வடிந்து, மனைவியின் ஒப்புதலுக்குப் பிறகே ஒவ்வொரு சொல்லையும் உதிர்க்கவேண்டிய கதிக்கு ஆளாகியிருந்தார் என்பது நினைவு வருகிறது. ஆனால், இப்போதைய குறிப்பு அவர்களைப் பற்றியது அல்ல – கேரளத்தம்மாளின் கடைசித் தம்பி பற்றியது. என் வயதுதான் அவனுக்கும்.
எங்களுடன் தங்கியபோது, கோடைவிடுமுறையை முன்னிட்டுக் கொல்லத்திலிருந்து வந்திருந்த வல்சனையும் அழைத்துவந்தார். உடனடியாகத் தோப்புக்குள் ஓடிவிட்டான் அவன். ஆமாம், அவன் நடக்கவே மாட்டான். எப்போதும் ஓட்டம்தான்.
’விடுமுறைக்கு வரவில்லை, சொந்த வீட்டில் களவாடி, பிடிபட்டு, தாய்தகப்பனே துரத்திவிட்டார்கள்; வீட்டில் பொருட்களை பத்திரமாய் வைத்துக்கொள்வது உங்கள் பொறுப்பு’ என்று வந்த அன்றே அம்மாவிடம் அம்மிணியக்கா சொன்னதை நானும் கேட்டேன். மொத்தக் கரட்டுப்பட்டிக்கும் கேட்டிருக்கும்.
வல்சனிடம் சில வித்தியாசமான அம்சங்கள் இருந்தன. திமில்போல மேல்முதுகில் இருந்த புடைப்பு. பேசும்போது அநியாயத்துக்குத் திக்கும். நாக்கை மடித்து அவன் நொட்டைவிடும் சத்தம், தோப்பு வளாகத்தின் மறுகோடிவரை கேட்கும். வெறும் கைகளால் பற்றியே விறுவிறுவென்று தென்னைமரம் ஏறுவான். தோப்பின் மத்தியிலுள்ள சிறு கொட்டகையில் தன்னுடன் தானே அந்தரங்கமாக விளையாடிக்கொண்டிருப்பான். மற்றவன் பார்க்கிறானே என்ற கூச்சம் கொஞ்சமும் இருக்காது. மொத்தத்தில், பன்னிரண்டு வயதுச் சிறுவனின் உடம்புக்குள், முற்றிய வாலிபன் இருந்தான் என்கிற மாதிரித்தான் இப்போதைய ஞாபகத்தில் மீந்திருக்கிறான்.
இத்தனைக்கும் மேலே, வந்த மறுநாளே ஒரு புது சிநேகிதம் சம்பாதித்தான் – ஒரு அணில் குஞ்சு. எப்படி அதனுடன் பழகினான்; அதைப் பழக்கினான் என்பதெல்லாம் இன்றுவரை புரியாத சங்கதிகள். சட்டைப்பைக்குள் சாவகாசமாகக் கிடக்கும். உதடுகளைக் கூட்டி ஒருவிதமாக இவன் சீட்டியடித்ததும், பையின் விளிம்புவரை எட்டிப்பார்க்கும். வேறுவிதமாகச் சத்தம் கொடுப்பான். கழுத்தில் தொற்றியேறி காதுமடலைப் பற்றிக்கொண்டு தொங்கும்!
வீட்டுக்குக் கொண்டுவரமாட்டான். கொட்டகையின் உத்தரத்தையொட்டி, கூண்டு ஒன்றைத் தொங்கவிட்டிருந்தான். சிகரெட் அட்டைகள் ஈர்க்குச்சிகள் சன்னமான கம்பிகள் கொண்டு அவனே வடிவமைத்த கூண்டு. கடைக்கார அண்ணாச்சியிடம் யாசகம் வாங்கி, ஒரு கைப்பிடி கடலைப்பருப்பு கொண்டுவந்து கூண்டுக்குள் போட்டான். அப்படியெல்லாம் செய்திருக்காவிட்டாலும், இவனை விட்டுப் போயிருக்காது. அவர்களுக்குள் அப்படியொரு ஆழ்ந்த நட்பு.
இவ்வளவு பீடிகையும் ஒரு சம்பவத்தை விவரிப்பதற்காகத்தான்.
அன்று காலை, அக்கா தம்பிக்கிடையில் ஏதோ வாய்த்தகராறு. படுவேகமாக மலையாளத்தில் வைதுகொண்டார்கள். பகல்முழுக்க ஒருவரையொருவர் விரோதத்துடன் முறைத்துக்கொண்டார்கள். வழக்கமாக வல்சன் இரவில் படுத்துறங்குவது சின்னத் திண்ணையில். அன்றைக்கு லேசாகத் தூறல் போட்டது. எனவே, முன்னறையில் வந்து எங்களுடன் படுத்தான். சுவரோரமாகப் படுத்திருந்தவனிடமிருந்து கீச்சுகீச்சென்று சன்னமான சப்தங்கள் கேட்டவண்ணமிருந்தன. மற்றவர்களெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், கவனித்திருக்க வாய்ப்பில்லை. எப்போதோ நானும் தூங்கிவிட்டேன்.
மறுநாள் சனிக்கிழமைப் பொழுது, அம்மிணியக்காவின் அலறலோடுதான் விடிந்தது. கையில் பிடித்த விளக்குமாற்றை இலக்கில்லாமல் ஓங்கி ஓங்கித் தரையில் அடித்தாள். வல்சன் அவசரமாக எழுந்து வாசல் கதவைத் திறந்து விட்டான். சரசரவென்று ஓடி வெளியேறியது அணில்குஞ்சு. அத்தனை சிறிய பிராணிக்குள் அவ்வளவு சுதாரிப்பும், தப்பிக்கும் முனைப்பும் இருந்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது..
எதுவுமே நடக்காத மாதிரி அவரவர் நியமங்களுக்குள் நுழைந்தோம். குளித்துவிட்டு வந்து சுவரோரம் இருந்த தனது துணிப்பையை எடுத்த அம்மிணியக்கா மறுபடியும் வீரிட்டாள். மறுபடியும் விளக்குமாற்றை ஓங்கிக்கொண்டு பாய்ந்தாள் – இந்த முறை வல்சனை நோக்கி. இருந்த இரண்டு புடவைகளையும், வல்சனின் மாற்றுத் துணியையும் கந்தலாக்கியிருந்தது அணில்.
மாரில் கட்டிய பாவாடையோடு அவள் வீசிவீசி அடிப்பதையும், ஈரப்பாவாடைக்குள் முழுக்கப் பதுங்க முடியாமல் வெளித்தெரிந்து அலையாடும் மார்களையும், ‘விடு அம்மிணி, நான் வேறெ பொடவை தரேன்’ என்று அம்மா மன்றாடுவதையும்விட, யாரோ யாரையோ தாக்குகிற மாதிரி உணர்ச்சியற்ற முகத்துடன் நின்ற வல்சனைத்தான் இப்போது பிரதானமாக நிகழ்த்திக்கொள்கிறது மனம்…
கைசோர்ந்து, அவள் அடிக்கும் வேகம் ஓய்ந்ததும், தோப்புக்குள் ஓடினான். மறுகோடியில் ஆளுயர சுற்றுச் சுவர் உண்டு. தொற்றியேற வாகான பொந்துகள் கொண்டது.
மதியச் சாப்பாட்டுக்கு வல்சனைக் காணவில்லை. உள்ளுணர்ச்சியில் ஏதோ பட, அணில் கூண்டைப் போய்ப் பார்த்தேன். அதையும் காணவில்லை. கயிறு மட்டும் பரிதாபமாகத் தொங்கிக்கொண்டிருந்தது.
தோட்டத்தில் அணில்களுக்குப் பஞ்சமேயில்லை. ஊரைக் காலிசெய்து நாங்கள் கிளம்பும்வரை ஒவ்வொரு அணிலையும் உற்றுப் பார்க்கவும் செய்வேன். ஒன்றுக்கொன்று வித்தியாசமே தெரியாது. ஆனால், ஒன்று நிச்சயம். வல்சனுடைய சிநேகிதக் குஞ்சு அங்கே இல்லை. அடையாளம் எதையும் வைத்து இதைச் சொல்லவில்லை – உள்ளுணர்ச்சிக்குத் தெரியாததா.
வீட்டுக்குத் திரும்பி வந்தால், அம்மா அலறுகிறாள். முந்தைய நாள் எண்ணெய்க்குளியை முன்னிட்டு சுவாமி முன்னால் கழற்றிவைத்திருந்த நகைகளில், இரட்டைவடம் சங்கிலியை மட்டும் காணோம்.
மலையாளம்போல ஒலிக்கும் தமிழில் திரும்பத்திரும்பச் சொன்னாள் அம்மிணியக்கா:
ஞான் படிச்சுப் படிச்சுச் சொன்னதே மாமீ… நிங்ஙள் கேக்கலை….
அன்று முழுவதும் நினைத்து நினைத்து அம்மா குமுறியபோதெல்லாம் அடிபிறழாமல் இதையே சொன்னாள். ஆக மொத்தம், மூன்று அலறல்களாக எனக்குள் பதிந்திருக்கிறது அந்த சனிக்கிழமை…
திருமண வீட்டில் பார்த்தபோது, அம்மிணியக்கா தம்பதிக்கு சற்று வசதி கூடியிருந்தது என்று முதல் பார்வைக்கே தெரிந்தது. இப்போதைய நிலையில், ஓரிரு புடவைகள் கந்தலானாலும் கவலைப்பட மாட்டாள் என்று தோன்றியது. வல்சனைப் பற்றி விசாரித்தேன். அவன் அன்றைக்கு ஓடினதுதானாம்; அதற்கப்புறம் வீடு திரும்பவில்லை; அவனைப் பற்றித் தகவலும் இல்லை என்று சொன்னாள்…
மேற்கண்ட அத்தனையும் ஏன் நினைவு வந்தது தெரியுமா.
ஐம்பது வயதைக் கடந்ததிலிருந்தே, சுயசரிதை எழுதச் சொல்லி நண்பர்கள் ஆலோசனை சொல்ல ஆரம்பித்தார்கள். இப்போதிருக்கும் இடத்துக்கு எந்தவழியாக வந்து சேர்ந்தேன் என்பதை வாசகர்கள் அறிந்தாக வேண்டுமாம். மேற்கில் இது மிக சகஜம், இந்திய எழுத்தாளர்கள், அதிலும் தமிழ் எழுத்தாளர்களுக்குதான் அநாவசியக் கூச்சமெல்லாம் படுகிறார்கள் என்கிறமாதிரி திரும்பத் திரும்பச் சொல்லி நப்பாசையைத் தூண்டுவார்கள்.
எனக்குத்தான் தயக்கம். ஞாபகசக்தி மிகமிகக் குறைவு என்பது ஒருபுறம்; ஞாபகத்தில் எஞ்சியிருப்பவை விரித்துரைக்கும் அருகதை கொண்டவைதாமா என்ற சந்தேகம் மறுபுறம். தவிர, அபூர்வமாக நிகழ்ந்துவிட்ட அமானுஷ்ய அனுபவங்கள் ஓரிரண்டையும் எழுதவேண்டித்தானே வரும். நிரூபணம் கேட்குமே வாசக சமூகம்? அதைவிட, நிஜமாக நிகழ்ந்த சிலவற்றையேகூட, புனைகதை என்று நம்பிவைக்குமே?!
’நாலைந்து கதாபாத்திரங்களை முன்வைத்து, கதைகள் என்ற பேரில் நீ எழுதுவது அத்தனையுமே கட்டுரைகள்தாமே; அதிலும், நடந்துகொண்டிருப்பதை நீ எழுதியதேயில்லையே; நடந்தது பற்றிய ஞாபகத்தையும், அதுபற்றிய யோசனையையும்தானே எழுதுகிறாய்’ என்று இஸ்மாயில் ஒருமுறை கருத்துரைத்து, புன்னகைக்க வேறு செய்தான். ’செய்திக் கட்டுரைகளே அபாரமான புனைவுத்தன்மையுடன் உலவும் காலகட்டத்தில், புனைகதையில் கொஞ்சம் கட்டுரைத்தன்மை சேர்ந்துவிட்டால்தான் என்ன கேடு?’ என்று நினைத்துக்கொண்டேன்.
அவனை விடுங்கள், எதிலும் குறைகண்டுபிடித்தால் மட்டுமே நிறைவடைகிற மனம் அது. தவிர, யோசித்துக்கொண்டிருந்தால் யோசித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்; களத்தில் இறங்குவதுதான் ஒரே வழி என்று நேற்று தோன்றியது. இன்று ஆரம்பித்துவிட்டேன்.
ஞாபகங்களை மட்டுமே எழுதுவது சாத்தியமில்லை. ஏற்கனவே சொன்னேனே, என் ஞாபகசக்தி மிகமிக பலவீனமானது. அப்படியாவது எழுதத்தான் வேண்டுமா என்பதும் முக்கியமான கேள்விதான். நண்பர்கள் சொல்கிற மாதிரி, சாமானியனாக இருந்த ஒருத்தன் எழுத்தாளனாகப் பரிணமித்த கதையில் கொஞ்சம் சுவாரசியம் இருக்கத்தானே செய்யும். வந்த தடத்தைத் திரும்பிப் பார்க்க எனக்குமே ஆசையாய்த்தான் இருக்கிறது…
அதற்காகவாவது எழுதிப் பார்க்கலாம். ஞாபகசக்திக் குறைவை ஈடுகட்டும்விதமாக, ஓரிரு கனவுகளையும் பிரமைகளையும் நிகழ்ந்தவை மாதிரியே எழுதி வைத்துவிடலாம் என்று தீர்மானித்தேன். அனுபவங்களை எழுதுவதுதானே திட்டம். கனவு மட்டும் அனுபவம் கிடையாதா என்ன! மேலும், இத்தனை ஆண்டுகள் கழித்து, எதைக் கனவில் கண்டேன், எது நனவில் நடந்தது என்றெல்லாம்கூடக் குழப்பங்கள் நேரத்தான் செய்கிறது. இதைவிடப் பெரிய வயிற்றெரிச்சல், என்னுடைய ஞாபகங்களில் சிலவே, என்னுடையவைதானா, வேறு யாருடையதோவா என்றுகூட பிரமிப்பாய் இருக்கிறது…
எல்லாம் போக, ஞாபகமென்ன கனவென்ன, எழுதுவது என்று தொடங்கிவிட்டாலே, அத்தனையும் கதையாக ஆகத்தானே செய்யும்…
காஷ்மீருக்கு மூன்று நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தேன். திருமணமாவதற்கு முந்தைய வருடம். மற்றவர்களும் மணமாகாதவர்கள்தாம். நாலுபேரும் உள்ளூரிலேயே அளவு கடந்த சுதந்திரத்துடன் உலவியவர்கள். வெளி மாநிலம், மொழி தெரியாத பிரதேசம், உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம்… கேட்கவா வேண்டும். அவிழ்த்துவிட்ட மாதிரி ஆகிவிட்டது. மிதமிஞ்சிய சிகரெட்டுகள், நள்ளிரவுவரை குடி. பகல்முழுக்க ஊர்சுற்றுதல்.
ஒரு நாள் டால் ஏரியில் படகுச் சவாரி, மறுநாள் பஹல்காம், அடுத்த நாள் குல்மார்க், நாலாம் நாள் ஸோன்மார்க் என்று ஆனந்தமாகத் திரிந்தோம். ஊருக்குப் புறப்படுவதற்கு முந்தைய நாள், உள்ளூரைச் சுற்றிப் பார்க்கப் பேருந்து ஏறினோம். எங்கள் வழிகாட்டி ஆலோசனை சொன்னார்:
ஏதாவது பொருள் வாங்க வேண்டுமென்றால் பிற்பகலில் போகலாம். முதலில் மொகல் கார்டன்ஸ் பார்த்துவிடுவோம்…
நல்ல யோசனைதான். ஊர் திரும்பவிருப்பதை முன்னிட்டு, நேற்றிரவு இரண்டு மணிவரை குடித்திருந்தோமா. கொஞ்சம் சாவகாசமாய் இருப்பது நல்லதுதான்.
படிக்கட்டுகள்போல, அடுக்குகளாக உயர்ந்து செல்லும் பாத்திகள். ஒவ்வொன்றும் சுமார் நூறு நூற்றைம்பது அடி அகலம். அடுக்குதோறும், பூத்துக் குலுங்கும் மலர்ச் செடிகள். நடுவில் பாய்ந்து இறங்கிவரும் சிறு ஓடை. சிமெண்ட்டால் கட்டியது. அங்கங்கே புகைப்படம் எடுத்துக்கொண்டும், செடியிலுள்ள பூக்களுக்கு நிகராக நடமாடித் திரியும் காஷ்மீர அழகிகளைக் கூச்சமில்லாமல் வெறித்துக்கொண்டும் சென்றுகொண்டிருக்கிறோம் – சட்டென்று அந்த அதிர்ச்சி தாக்கியது.
அவள் நின்றிருந்தாள். தோழிகளோடு நின்றிருந்தாலும், அவர்களுடன் மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்தாலும், அவளுடைய பார்வை என்மீது அழுத்தமாகப் பதிந்திருந்தது.
குல்மார்க் செல்லும் வழியில் அவளைப் பார்த்தது நினைவிருக்கிறது. அதுவொரு விசித்திரமான சந்தர்ப்பம்.
தேநீர்த் தலமொன்றின் முன்னால் நாங்கள் சென்ற சுற்றுலா வேன் நிறுத்தப்பட்டது. அரைகுறை ஆங்கிலத்தில்,
அரைமணி நேரம் வண்டி இங்கே நிற்கும்.
என்று அறிவித்துவிட்டு இறங்கிய வழிகாட்டியின் பின்னோடு நாங்களும் இறங்கிப்போனோம். ஆனந்தமாக சிகரெட் பிடித்துவிட்டு, வேலியோரம் ஒதுங்கினேன். கடைசிச் சொட்டு இறங்கும்போது விதிர்த்தது. ஆமாம், கால்சட்டையின் ஸிப்பை ஏற்றியவாறு நிமிர்கிறேன் – எதிரே அவள் நிற்கிறாள்.
கன்னங்களில் மட்டும் ஆப்பிள் தோலை ஒட்டிய மாதிரிச் சிவப்பும், மலர்ந்த கண்களும், கூர்மையான ரோமானிய நாசியும், இரட்டைச் சடையும், நயமான காஷ்மீரி உடையும்… ஆனால், மேற்கொண்டு அவளை ரசிக்க முடியாமல் எனக்குள் எழுந்த சந்தேகம்…
நான் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தபோதே வந்துவிட்டாளா, அப்போதுதான் உதித்தாளா. அவள் முகத்தில் திகழ்ந்தது இயல்பான புன்னகைதானா, கேலிச் சிரிப்பா. படபடவென்று ஆகிவிட்டது. வேனுக்கு ஓடி வந்தேன். நல்லவேளை, யாரும் பார்க்கவில்லை. குறிப்பாக, நண்பர்கள் பார்க்கவில்லை. அப்புறம் ஊர் திரும்பும்வரை கிண்டல் செய்தே கொன்றுவிடுவான்கள்.
ஆனால், சோமசுந்தரம் பார்த்திருக்கிறான் என்பது, பிற்பாடு அவன் சொல்லும்போதுதான் தெரிந்தது. அதை அப்புறம் சொல்கிறேன்…
அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவளுடைய விலாப்புறங்களில் இறக்கைகள் முளைத்தன. அதே சமயத்தில் என்னுடைய விலாவிலும் மெல்லிய நமைச்சலை உணர்ந்தேன். அடுத்து நடந்ததைத்தான் இப்போதுவரை நம்ப முடியவில்லை எனக்கு – அவளுடைய உருவம் சிறுத்துக்கொண்டே போனது. மிகச் சில விநாடிகளில் முழுமையான வண்ணத்துப்பூச்சியாக மாறியிருந்தாள். உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் பூச்சி.
அதே வேகத்தில் நானுமே வண்ணத்துப்பூச்சியாகிவிட்டிருந்தேன் என்பதையும் இப்போது நினைத்தால் ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது. இதே தர்க்கத்தின் பிரகாரம், சுற்றியிருந்த மனிதர்கள் அத்தனைபேருமே உருமாறியிருக்க வேண்டுமல்லவா. இல்லை. சோமு சோமுவாகவே இருந்தான். மற்றவர்களும்தான். ஆனால், அடுத்த நொடியே அவள் என்னை அழைப்பது கேட்டது. பறக்கக் கூப்பிடுகிறாள்.
என்ன இருந்தாலும் நான் வந்தேறிப் பூச்சிதானே. அவளுடைய சிறகுகள் அளவுக்கு என்னுடையவை வண்ணமயமாக இல்லை. இத்தனைக்கும் முந்தாநாள்வரை கூட்டுப்புழுவாகத்தான் இருந்தாளாம்! இத்தனை விரைவாகப் பறக்கக் கற்றுவிட்டிருந்தாள் என்பது பற்றிய வியப்பைத் தெரிவித்தேன். சிறகுகளைச் சற்று துரிதமாகப் படபடத்துச் சிரித்தாள்.
அங்கே மலர்ந்திருந்த அத்தனையுமே எனக்குப் பரிச்சயமில்லாதவை. நல்லவேளை, அவள் உள்ளூர்க்காரி என்பதால், எங்களுக்கு உகந்த பூக்கள் எவையெவை, எந்தெந்தப் பூவில் எத்தனை ஆழத்தில் தேன் இருக்கும்; ஒரு நாள் மட்டுமே உயிரோடிருக்கும் பூவில் எத்தனை வேகமாய் உறிஞ்சித் தீர்க்க வேண்டும்; ஆறு கால்களையும் மகரந்த மையத்தில் எந்த அளவுதான் அழுத்திப் பதிக்கலாம்; அந்த ஊர்க் காற்றின் இயல்பான விசையும் வேகமும் என்று ஏகப்பட்ட விஷயங்களைக் கற்றுத் தந்தாள். அவள் சொல்லும் அத்தனையும் எனக்குப் புதிதாக இருந்தனவா, ஒருவேளை நான் நிஜமாகவே வண்ணத்துப்பூச்சி ஆகவில்லையோ; ஆகிவிட்டதாக பிரமை மட்டுமே கொண்டிருக்கிறேனோ என்றும் தோன்றத்தான் செய்தது…
ஆனால், சேர்ந்து பறந்தபோது எங்களுக்குள் உருவான நெருக்கம் அபரிமிதமானது. இயல்பாகப் படுவதுபோல, மெனக்கெட்டு உரசிக்கொண்டோம். தற்செயல்போல அவள் அளித்த முத்தத்துக்குப் பிறகு உன்மத்தம் பிடித்தது எனக்கு. ஓயாமல் பறந்துகொண்டும், ஒரே பூவில் அமர்ந்து தழுவிக்கொண்டும், ஆசைமீறும்போதெல்லாம் பிணைந்துகொண்டும் திரிந்தோம். பகல்களென்ன இரவுகளென்ன பருவங்களென்ன ஆண்டுகளென்ன, எதுவுமே எங்களுக்கொரு பொருட்டாக இல்லை. பனி பொழியும் நாட்களில் புதர்களுக்குள்ளும், வெயில் முனகும் நாட்களில் வெட்டவெளியிலும், கோடை நாட்களில் பூக்கள் மீதமர்ந்தும் ஓயாக் காதல் புரிந்து அலைந்தோம்.
நாங்கள் அமர்ந்த மலர்களின் மகரந்தத்தைச் சுமந்து அடுத்த தலைமுறையைச் சூலுற வைத்து, அடுத்தடுத்தடுத்த தலைமுறைகள் மலர்வதைப் பார்த்துக் களித்தபடி… அவ்வளவுதான், ஆயுள் முழுக்க நீடித்திருந்த ஒற்றைத்தருணத்தில் அமிழ்ந்து களித்த வேளையில், சோமுவின் குரல் காதருகில் ஒலித்தது.
வேகமா வாடா. எம்புட்டு நேரந்தான் உங்காளு பின்னாடியே திரிவெ. கைடு கூவுறாம் பாரு. வண்டியெ எடுத்துறப் போறான்.
பிற்பகலில் குங்குமப்பூ, சுந்தரம் அண்ணாவுக்கு சால்வை, மன்னிக்குக் காஷ்மீரப் பட்டு என்று வாங்கிய ஒவ்வொரு உருப்படியிலும் அவளுடைய மணம் பொங்கிப் பெருகி களிப்பையும் ஏக்கத்தையும் ஒருங்கே அளித்தவாறிருந்தது. இப்போது ஞாபகத்தில் எழுந்ததை எழுத முற்படும்போதும் அதே மணம் என் நாசியில் உதிக்கிறது…
மேற்சொன்ன சம்பவம் நடந்தது முற்றிலும் நிஜம்; ஒரு இம்மிகூட பிரமை கிடையாது; ஆனால், பிற்பகல் முழுக்க என் தோள்களிலும் விலாவிலும் நிரம்பியிருந்தது பறந்தலைந்ததன் சோர்வா, இன்னும் பறக்க உந்தும் தினவா, இழப்பின் ஏக்கமா, அல்லது முந்தைய நாள் குடி அலுப்பின் மிச்சமேதானா என்பதுதான் குழப்பம். அதுபோக, நடந்த வேளை பற்றியும் குழப்பம்தான். மொகலாயத் தோட்டங்களைப் பார்த்த போதிலா, அன்றிரவா, ஜம்முவை நோக்கிய பேருந்துப் பயணத்திலா என்பதும் துல்லியமாக நினைவில்லை.
சக வண்ணத்துப்பூச்சியின் நிறங்கள் ஞாபகமிருக்குமளவு, அவளுடைய பூர்விக முகம் நினைவில்லை. என்னைத் தவிர யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆரம்பத்திலும் முடிவிலும் என்னைத் தோள்சேர்த்து நின்றிருந்த சோமுவுக்கே தெரியாதுபோல. பயல் இதைப்பற்றி ஒரு சொல்லும் பேசவில்லையே…
தென்கோடியில் உள்ள சோழவந்தானும், வடகோடி ஶ்ரீநகரும், அவற்றுக்கிடையிலான பல்லாயிரம் மைல் இடைவெளியும், நிலமற்ற வெளி ஒன்றில் அடுத்தடுத்துக் கிடப்பது அபாரமான கிளர்ச்சி அளிக்கிறது! ஞாபகங்கள் கனவுகள் என்று, சேகரித்து வைக்க நிலம் தேவைப்படாத சமாசாரங்களும் அதே பூடகவெளியில் கிடக்கின்றன என்பதும் சுவாரசியம்தானே!
கனவுக்கும் ஞாபகத்துக்குமான வித்தியாசங்கள் என்று ஒரு பட்டியலை ஏதோவொரு புத்தகத்தில் படித்தேன். கனவு ஆழ்மனம் பிதுக்கி அனுப்புவது என்றால், ஞாபகம் மேல்மனம் தன்னுடைய தொகுப்பிலிருந்தே தேடி எடுப்பது – ஜோசியக்கிளி சீட்டெடுக்கிற மாதிரி என்று நூலாசிரியர் எழுதியிருந்தார். நிச்சயம் இந்தியாவில் எழுதப்பட்ட புத்தகம்தான். நேரடியாக ஆங்கிலத்தில் எழுதியதா, பிராந்திய மொழி எதிலிருந்தாவது பெயர்க்கப்பட்டதா என்று நினைவில்லை.
ஆனால், மேற்படிப் பட்டியல் மற்றும் கருதுகோள் தொடர்பாக எனக்குள் எழுந்த குழப்பம் நினைவிருக்கிறது – வாலிப ஞாபகத்தில் பதிந்திருக்கும் காஷ்மீர்க்காரி கனவில் வந்து முத்தம் கொடுக்கும்போது நான் அனுபவிப்பது கனவையா, ஞாபகத்தையா? அல்லது, யாருக்குக் கொடுக்கிறேன் என்றே புரியாமல் கனவில் நான் கொடுக்கும் முத்தங்களை நினைவுகூரும்போது அதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
மேற்படிக் கேள்விகளும், அவற்றுக்கு சாத்தியமான பதில்களுமே மயிர்பிளக்கும் தர்க்கங்கள்; வெறும் சொல் விளையாட்டுகள். அவ்வளவுதான். இரண்டிலுமே இப்போது என்ற அம்சம் கிடையாது என்று எடுத்துரைத்து சுமுகமாக என்னைக் கடைத்தேற்ற முற்பட்ட நண்பன் நேற்றுக் கனவில் வந்தான். ஞாபகத்திலிருக்கும் அதே தோற்றத்தில் இருக்கவும் செய்தான் – அமரனாகிவிட்டவனின் உருவத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை அல்லவா.
எப்படியாவது உடனடியாய் சுயவரலாற்றை எழுதிவிடுவது என்ற முடிவை நோக்கி என்னை உந்தியது இந்த அம்சம்தான் – முதுமை உருவாக்கிவைத்த பெருங்குழப்பம். நேரில் தெரியும் உருவத்துக்குப் பெயரையும், நினைவில் மேலெழும் பெயருக்குரிய உருவத்தையும் தேடுவது கிட்டத்தட்ட அன்றாட நடைமுறை ஆகிவிட்டது. எஞ்சியிருப்பவற்றையாவது பதிவு செய்துவைத்துவிடுவது உத்தமம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அவற்றில் எத்தனை குழப்பம் இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும்…
மேற்சொன்ன சம்பவத்தினடியாய் இன்னொரு சிடுக்கும் முளைத்திருக்கிறது – தலைமுறைகள் தாண்டி நான் கொண்டிருந்த அனுபவம், என்னுடைய சகா சோமுவின் பார்வையில் சில நிமிடங்களாய் இருப்பது ஒன்று; வண்ணத்துப்பூச்சிகளின் காதல் மட்டுமல்ல, உயிர்க்குலத்துக்கே, ‘காதல்’ என்ற சமாசாரம் இத்தனை குறுகியதுதானோ என்ற கேள்வி.
அப்புறம், தன்னிச்சையாய்ப் பதிந்திருக்கும் ஞாபகங்கள் என்ன வரிசையில் அமைந்திருக்கின்றன, மேலேறி வருவதற்கான வரிசையின் பின்னிருக்கும் தர்க்கம்தான் என்ன என்பதெல்லாம் புரியவே மாட்டேனென்கிறது. இந்தக் குழப்பம் மேலெழும்போதுதான், போர்ஹேயின் ’மணல்புத்தகம்’ என்ற கதை கொஞ்சம் புரிகிற மாதிரி இருக்கிறது. பின்னே, பால்யத்திலிருந்து வாலிபத்துக்கு நகர்ந்து முதுமைக்கும் வந்துசேர்ந்தபிறகு, மறுபடியும் பின்னோக்கிப் பாய்வதன் பொருள்தான் என்ன!
அப்பா இறந்து, நாங்கள் ஊரைவிட்டு வெளியேறி, சிறுநகரில் ஒரு வருடம் வசித்து, மதுரைக்குக் குடிபெயர்ந்து, கல்லூரிப் படிப்பு முடியும் தறுவாயில் – எட்டு முழு வருடங்கள், ஒரே வாக்கியத்தில் அடங்கிவிட்டது பாருங்கள்! – கடைசிவருடப் படிப்பின்போது, வகுப்பில் அமரப் பிடிக்காமல், கல்லூரி விளையாட்டுத் திடலில் சென்று தனியாக அமர்ந்திருந்தேன். சுற்றுச்சுவருக்கு மறுபக்கமிருந்த சாலையில், லாரிகளும் பேருந்துகளும் தலைப் பகுதி மட்டும் காட்டி எதிரெதிர்த் திசையில் விரைந்தன. ஓசை மட்டுமே எழுப்பி, கண்ணுக்குப் புலப்படாத வாகனங்களும்தான்.
பார்வையில் பட்டப்பகலும், மனத்தினுள் கும்மென்ற நள்ளிரவுமாய் நிலவிய அந்தப் பொழுதுக்கு என்ன அடையாளம் என்றே தெரியவில்லை. உடன்பிறந்தவர்களின் ஆதிக்கத்தில், கூறு இல்லாத தாயாருடன், அநாதரவாக விட்டுப்போன அப்பாவின் நினைவு அழுத்தமாக எழுந்து நெஞ்சடைத்தது. அவர் ஒரு ஆள் மட்டும் இருந்திருந்தால், எதிர்காலத்தைப் பற்றி எனக்குள் இவ்வளவு அச்சம் எழுந்திருக்காது…
அச்சத்துக்குக் காரணம் இருக்கிறது. காலையில் இரண்டாவது வகுப்பை எடுத்தவர், தனியார் நிறுவன நிர்வாகி. இறுதியாண்டு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு அது. மாணவர்கள்மீது கல்லூரி காட்டிய கரிசனத்தின் சான்று. எங்கெல்லாம் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன, அவற்றுக்கு விண்ணப்பிப்பது எப்படி, அரசு வேலைக்கான தேர்வுகளுக்குத் தயாராவது எப்படி என்று வென்றவரின் குரலில் அடுக்கினார். அவர் சொல்லச் சொல்ல ஆசுவாசம் படர்வதற்கு பதிலாக, எனக்குள் பீதி உயர்ந்துகொண்டே போனது.
புகுமுக வகுப்புத் தேறிய தகுதியை வைத்தே, முன்னரே ஓரிரு வங்கித் தேர்வுகளும் அரசுத் தேர்வுகளும் எழுதியிருந்தேன். எதிலுமே தேறுவேன் என்ற நம்பிக்கை துளியும் இல்லை… அதிலும் ஒவ்வொரு முறையும் தேர்வு மையத்தில் கூடும் திருவிழாக் கூட்டத்தில் நான் அடையாளமற்றுக் கரைந்துபோவது தாள முடியாததாய் இருக்கும்.
கண்களில் வெளிச்சமும், மானசீகத்தில் இருட்டுமாய்த் தடுமாறிக்கொண்டிருந்த வேளையில், திடலின் மறு எல்லையில், சட்டென்று அவர்கள் உதித்தார்கள்.
சாத்தமங்கலம் நோக்கிப் போகும் பேருந்தின் தலையிலிருந்து இறங்கிவருகிறவர்கள் மாதிரித் தெரிந்தார்கள். இரண்டு நார்மடிக் கிழவிகளும், அவர்களுக்கு நடுவில் இருபுறமும் அசைந்தாடி வரும் இரட்டை நாடி மனிதரும். கிழவிகளின் சாயப் புடவைகளுக்கிடையே அந்த மனிதரின் சலவை வேட்டி சட்டை பளீரென்று ஒளிர்ந்தது…
என்னை நோக்கித்தான் வருகிறார்கள். நெருங்க நெருங்க எனக்குள் பதட்டம் உயர்ந்தது. நடுவில் வருகிறவர் என் அப்பா சாயலில் இருந்தார். அந்தக் கிழவிகள்?
அட, அப்பாவேதான். அவரது வலது கையைப் பிடித்திருந்த கிழவியைப் பற்றி முன்னமே விரிவாக எழுதியிருக்கிறேன். தாயம்மாப் பாட்டி. என் அம்மாவின் அம்மா. மருமகனைத் தொட்டுப் பேசியே நான் பார்த்ததில்லை. இப்போது கைபற்றி நடந்து வருகிறாள்.
மற்ற கிழவியைப் பற்றி இதுவரை குறிப்பிட்டதுகூடக் கிடையாது. அப்பாவின் அம்மா. நேரில் பார்த்ததில்லை; நான் பிறக்குமுன்பே இறந்துவிட்டாள் – சித்தப்பா வீட்டில் மாட்டியிருக்கும் மகாப்பெரிய புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன். அப்பாவுக்கும் சுப்புப் பாட்டிக்கும் எப்போதுமே சுமுகமான உறவு இருந்ததில்லை என்று அம்மா சொல்லியிருக்கிறாள். நான் அச்சு அசல் அந்தப் பாட்டியின் சாயல் என்றும் சொல்வாள். என் தலையில் ஒரு காவித்துண்டை முக்காடாகப் போட்டு,
அப்பிடியே எங்கம்மா மாதிரியே இருக்கான் பாரு!
என்று கொஞ்சுவாராம் அப்பா… ஆக, அமரர்கள் மூவரும் எதிரில் நிற்கிறார்கள். கரகரத்த குரலில் அப்பா கேட்கிறார்:
என்னடா படவா, தனியா வந்து உக்காந்திருக்கே!
அந்தக் குரலின் வாஞ்சை எனக்குள் நீராக நிறைகிறது. கண்கள்வழி ஊற்றெடுக்க முட்டுகிறது.
பின்னே, அவன் பயம் அவனுக்கு.
ஆறுதலாய்ச் சொல்கிறாள் தாயம்மாப் பாட்டி. உயிரோடு இருப்பவர்கள் அத்தனைபேரும் என்னை வதைக்கும்போது, இறந்தவர்கள் இப்படிப் பரிவுகாட்டித் தொலைக்காமல் இருக்கலாமே; வேதனை அதிகரிக்கவல்லவா செய்கிறது என்று ஆதங்கமாய் இருக்கிறது.
இங்கே உக்காந்திருக்கறதுக்கு, வீட்டுக்குப் போய்ப் பாத்தாத் தேவலையே. அடுத்த நிமிஷம் ஆகாசத்துக்கும் தரைக்குமாக் குதிச்சிற மாட்டானா!
சுப்புப்பாட்டியின் குரலை இப்போதுதான் முதன்முறையாய்க் கேட்கிறேன். தில்லானா மோகனாம்பாளில் வரும் சி கே சரஸ்வதியுடையதுபோல தொனித்தது. அப்பாவின் குரல்போலவே கரகரத்தது…
வந்ததைவிடப் படுவேகமாக மறைந்துவிட்டார்கள். அடடா, நான் வாய்திறந்து ஓரிரு வார்த்தைகள் பேசியிருக்கலாமோ; இத்தனை வருடம் கழித்து வந்த அப்பாவை ஒருதடவை தழுவிக்கொண்டிருக்கலாமோ; மூன்று பேரையுமே தரையில் படுத்து நமஸ்கரித்திருக்கலாமோ என்றெல்லாம் மனம் அல்லாடிக்கொண்டிருக்க, செலுத்தப்பட்டவன் மாதிரி விசுக்கென்று எழுந்து நடந்தேன். தரையில்தான் நடந்தேனா என்றே தெரியவில்லை – வகுப்பு முடிந்து எதிரில் வந்த முத்தையா என்னைப் பார்த்துக் கையசைத்திருக்கிறான். நான் எதிர்வினையே காட்டவில்லையாம்.
கண்ணெத் தெறந்து தூங்கிக்கிட்டே நடக்குறவன் மாதிரிப் போனயேடா.
என்று ஆச்சரியப்பட்டான் – அடுத்தநாள் நண்பர்களுக்குச் சாக்லேட் வழங்கியபோது.
ஆமாம், முந்தினநாள் வீட்டுக்குப் போகிறேன் – சுவாமி தட்டில் சாணித்தாள் உறை காத்திருக்கிறது. மத்திய அரசுப் பணிக்கு நான் தேர்வாகியிருப்பதைத் தெரிவிக்கும் கடிதம்!
அந்த வேலையில் ஆறுமாதம்தான் நீடித்தேன். வங்கி வேலை கிடைத்தவுடன் ராஜினாமா செய்துவிட்டேன். அவர்கள் மூன்றுபேருக்கும் இதுவும் தெரிந்துதானே இருக்கும். இதைப் போய்ச் சொல்வானேன் என்று தவிர்த்துவிட்டார்களோ.
தமிழ்த் திரைப்படத்தில், பாடிக்கொண்டே மரத்தைச் சுற்றி ஓடியாடி முடித்துவிட்டு, அதே காட்சியின் தொடர்ச்சியாக வசனம் பேசிக்கொண்டு நடக்கும் ஜோடிகளைப் பார்த்து எவ்வளவு சிரித்திருக்கிறேன். எனக்கே அப்படி நடந்துவிட்டபோது, பிரமை உருவெளித்தோற்றம் பகல்கனவு என்று எந்தச் சொல்லும் கிட்டேயே வராத அளவு தத்ரூபமாக அல்லவா இருந்தது? அன்றைய தினத்தில் என்னைப் பீடித்திருந்த விழைவேக்கத்தின் காட்சிவடிவமோ அது?!
முறையற்ற கிரமத்தில் மேலெழும் ஞாபகங்களை, அவை வருகிற வரிசையிலேயே அடுக்கிவிடலாம் என்று தோன்றுகிறது. தொடர்ச்சியாக, பிறப்பிலிருந்து வளர்ச்சிப்பருவத்தின் ஒவ்வொரு கட்டமாக எழுதிச் செல்வது சாத்தியமில்லை. ஒரு கண்ணி பிறழ்ந்துவிட்டாலும், பெரும் சோர்வு தட்டிவிடக் கூடும். ஆற்றாமை தரும் சோர்வு அளப்பரியதல்லவா! பாருங்கள், இந்த வாக்கியமே என் சொந்த வாக்கியம்தானா, வேறெங்கோ படித்ததா என்று குழம்புகிறேன்…
விஷயத்துக்கு வருகிறேன். ஞாபகத் தொகுப்பில் எஞ்சியிருக்கும் உதிரி நிகழ்வுகளை, உதிரிக் குறிப்புகளாகவே எழுதி வைத்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்திருக்கிறேன்.
தொகுப்பு என்றவுடனே, புளிமூட்டைபோல ஒன்றைக் கற்பனை செய்துகொள்ளக்கூடாது; அதிலேயே பல விதமான சேகரங்கள் உண்டு – உதாரணமாக, இனிமேலும் நாம் குரங்குகள் இல்லை என்ற அறிதல், மனித குலத்துக்குள் அழுத்தமான ஒரு ஞாபகமாகத் தங்கியிருக்கிறது என்பது ஒரு வகை.
இன்னொரு வகை, திருமணமாகி உடன் வாழ வருகிறவள், கிட்டத்தட்ட நமக்கு அடிமையேதான் என்ற ஆணின் ஞாபகமும், நாம் பிறவியெடுத்ததே அண்டிவாழ்வதற்காகத்தான் என்ற பெண்ணின் ஞாபகமும் கிட்டத்தட்ட வழக்கொழிய ஆரம்பித்த பிறகும், சிலர் மட்டும் ஆசையாக நினைவில் வைத்திருக்கிறார்கள் அல்லவா, அதைப் போன்றது. மூன்றாவது, இன்று காலையில் இட்லி சாப்பிட்டேன், என் பெயர் கிருஷ்ணன், வங்கிப் பணி செய்து ஓய்வு பெற்றவன் என்கிற மாதிரி நேரடி, நடைமுறைத் தகவல்கள்…
முன்னரே குறிப்பிட்ட புத்தகத்தில் வாசித்ததுதான் இந்தப் பகுப்பு முறையும். ஆனால், எதுவுமே அதனதன் இடத்தில் நிலையாய் இருப்பதில்லை; குளத்துக்கும் கரைக்கும் மாறிமாறித் தாவும் தவளைபோல, குதித்துக் குதித்து இடம்பெயர்ந்துகொண்டிருக்கும் என்று நானே உணர்ந்திருக்கிறேன் – இதை வாசிக்கும் எவருமே இன்னும் சில அல்லது பல வகைகளை உருவகித்துப் பார்க்க முடியும் என்றும்கூடத் தோன்றுகிறது…
ஞாபகம், கனவு என்று புகைமூட்டமாக நகர வேண்டாம் – கண்ணாடியைப் பார்க்கும்போது; முன் வழுக்கையும், கொத்தாக எஞ்சியிருக்கும் நரைமுடியும், கடைவாய்ப் பற்கள் உதிர்ந்ததால் டொக்கு விழுந்த கன்னங்களுமாக நிற்கும் சிடுமூஞ்சியைப் பார்க்கும்போது; கருகருவென்ற முடியும் கவர்ச்சியான சிரிப்பும் கரையாத தோள்த்தசைகளுமாக நினைவில் மீந்திருக்கும் எனது உருவமே கனவின் தொலைவுக்குப் போய்விட்டிருக்கிறதல்லவா!
அது சரி, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு சம்பவங்கள். இவற்றை எதற்காக அடுக்கித்தர வேண்டும்? என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன். இதுவரை எழுதியதை நேற்று முழுசாக வாசித்தபோது இப்படித்தான் தோன்றியது.
ஆனால், மூன்றுக்கும் ஆழ்ந்த தொடர்பு ஒன்று இருக்கத்தான் செய்கிறது – அது நானேதான்!
ஏற்கனவே சொன்ன மாதிரி, இன்னும் நூறு நூற்றைம்பது சம்பவப் புள்ளிகள் சேரும்போது, முதலாவதுக்கும் முப்பதாவதுக்கும்கூட நேரடித் தொடர்பு உருவாகிவிடலாம். பார்க்கப்போனால், நான் என்பதே சில நூறு சம்பவப் புள்ளிகளின் தொகுப்புதானே! அல்லது, அவை குறித்த ஞாபகங்களின் தொகுப்பு… சுருக்கமாக, நடமாடும் கிடங்கு….