கட்டுரைகள்
Trending

கோபுலு: ஓவியத்தில் பன்முகம்- சந்தோஷ் நாராயணன்

சிறுவர் மலர், பூந்தளிர் மற்றும் ராணி காமிக்ஸ் வாசகனாக இருந்த நான் “ப்ரொமோஷன்” அடைந்து விகடன் குமுதம் இதழ்களை வாசிக்க ஆரம்பித்த தொண்ணூறுகளின் பாதியில் கோபுலு பத்திரிகை உலகிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

வாசிப்பும் ஓவியக்கல்லூரி படிப்பும் எனக்கு நவீன ஓவியங்கள் மீதான ஈர்ப்பை உருவாக்கி விட்டிருந்த அதே நேரம், அதற்கு இணையாக வெகுஜன இதழ்களின் ஓவியர்கள் / ஓவியங்கள் மீதான ஆர்வத்தையும் நான் கொண்டிருந்தேன். சிறுபத்திரிகை ‘’மனோபாவி”களிடம் இருந்த வெகுஜன கலைகள் மீதான பாவனையான விலகல் எப்போதும் எனக்கு இருந்தது இல்லை. அதற்கு காரணமாக நான் நினைப்பது பாஷாபோஷினி, மாத்யமம், போன்ற மலையாள இதழ்களை வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்ததால்தான். வெகுஜன X சிறுபத்திரிகை என்கிற கறாரான லக்‌ஷமண ரேகை மலையாளத்தில் இல்லை. நம்பூதிரி போன்ற ஓவியர்கள் வெகுஜன தளத்திலும் தீவிர வாசகர்களிடத்திலும் எப்போதும் கொண்டாடப்படுபவராகவே இருந்தனர்.

பழைய புத்தகங்களிலும், தொகுப்புகளிலுமாக எப்போதும் நான் தமிழ் வெகுஜன ஓவியர்களை, அவர்களின் நுட்பங்களை தேடித் தேடி பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் மாதவன், மாலி, மணியம் போன்ற தமிழ் வெகுஜன பத்திரிகை ஓவியர்களின் வரிசையில் கோபுலுவின் இடம் தனித்துவமானது. ஓவியர்கள் எப்போதும் தங்களுக்கென்று ஒரு பாணியை பின்பற்றினார்கள். ஆனால் கோபுலுவின் ஓவியங்களில் முக்கியமாக மூன்று வெவ்வேறு பாணிகளை பார்க்கமுடிகிறது. இது ஒரு வகையில் அரிதான‌ பன்முகத்தன்மை. பெரும்பாலான ஓவியர்களுக்கு கை கூடாதது. இவற்றை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

முதல் வகை

அந்தக்கால நகைச்சுவைத் துணுக்குகளான நர்ஸ்-டாக்டர், வேலைக்காரி- முதலாளி, டைப்பிஸ்ட்-மேனேஜர் என்பது போன்ற ஹாஸ்ய சித்திரங்களை கோபுலு வரையவில்லை.

அவருடைய நகைச்சுவையான கோட்டுச்சித்திரங்கள். அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளரும் கார்டூனிஸ்டுமான ஜேம்ஸ் தர்பர் போன்றவர்களின் பாணி. தர்பர் தனக்கு மிகப்பிடித்தமான ஆளுமை என்று கோபுலுவே ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறார். அன்றாட வாழ்க்கையின் சிறு சிறு தருணங்களில் நடக்கும் அபத்தங்களை கார்ட்டூன்களாக்கியவர் தர்பர்.

விகடனில் தொடர்ந்து பதினேழு வருடங்களாக கோபுலு வரைந்த ஸ்ட்ரிப் கார்ட்டூன்கள், நகைச்சுவை துணுக்கு ஜோக்குகள் இவ்வகையானவை. அன்று விகடனின் பெருவாரியான வாசகர்களாக இருந்த, கோபுலுவுக்கு நன்கு பரிச்சயமான‌ பிராமண குடும்பங்களைச் சேர்ந்த மனிதர்களை பெரும்பாலும் மைய கதாபாத்திரங்களாகக் கொண்டவை, மற்றும் சென்னையில் ரிக்சா ஓட்டுபவர்களிலிருந்து, தெரு வியாபாரிகள், ரயில்வே போர்ட்டர்கள், கஃபே சர்வர்கள் போன்ற‌ உதிரி மனிதர்கள். கோணலான, அபத்தமான, வெடிச்சிரிப்பை வரவழைக்கும், தருணங்கள்.

கோபுலுவின் சிறுவர்களைப் பற்றிய அவதானிப்பும், சித்தரிப்புகளும் அபாரமானவை. கிட்டத்தட்ட அவரே சிறுவர்களுக்கு உரிய ஒரு மனநிலையை கடைசி வரை தக்க வைத்திருந்தார். எண்பது வயதிற்கு மேல் அளித்த ஒரு நேர்காணலில் கூட தான் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்றாக “போகோ” சேனலைதான் சொல்கிறார். தேவனின் துப்பறியும் சாம்புவை காமிக்ஸ் தொடராகவே வரைந்திருக்கிறார். மனிதர்களின் அசாதரணமான நகைச்சுவை உடல்மொழியை அசாத்தியமாக‌ சித்தரித்திருக்கிறார்.

போலவே கோபுலுவின் அரசியல் கார்ட்டூன்களையும் இவ்வகையான நகைச்சுவை கோட்டுச்சித்திரங்களுக்குள் அடக்கி விடலாம். ஆனால் அரசியல் கார்ட்டூன்கள் அவர் மிகக்குறைவாகவே வரைந்திருந்தாலும் அவை ஷங்கர் போன்றவர்களின் கர்ட்டூன்களுக்கு எவ்வகையிலும் குறைந்தவை அல்ல.

இரண்டாவது வகை

கோபுலு, வாஷிங்டனில் திருமணம், தில்லானா மோகனாம்பாள் போன்ற தொடர்களுக்கும், விகடன் அட்டைப் படங்களுக்காகவும் வரைந்த நகைச்சுவை வண்ண ஓவியங்கள். கோட்டோவியங்களாக இருந்தாலும் சரி, வண்ணச் சித்திரங்களாக இருந்தாலும் சரி, அவற்றில் மிக நுட்பமாக தெரியும் சிறு சிறு சித்தரிப்புகள், சித்திரத்தின் மூலை முடுக்குகள் கூட நம்மை சுவராஸ்யமாக திரும்பத் திரும்ப தேடிப் பார்க்க வைப்பவை. ஒரே ஓவியத்தில் இருக்கும் பல்வேறு கதாபாத்திரங்கள் கூட தனித்தன்மையுடன் தங்களுக்கேயுரிய உடல்மொழிகளுடன் வெவ்வேறு செய்கைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். பின்னணிகளில் கூட அவ்வளவு வேலைப்பாடுகள், கலாச்சாரக்கூறுகள். ஒரு புள்ளியோ கோடோ கூட வீணாக ஓவியத்திற்குள் இல்லை. ட்ரெங்குப் பெட்டி, ஜமுக்காளம்,பாத்திர பண்டங்கள் போன்ற அன்றாடம் புழங்கும் பொருட்கள் கூட ஒரு கதாபாத்திரத் தன்மையுடன் உயிர்பெற்று கேலியாக காட்சி தருகின்றன‌.

ரியலிசத்திலிருந்து கேரிக்கேச்சர் தன்மையை நோக்கி நகர்ந்து விட்ட பொருட்கள், மனிதர்கள், நிகழ்வுகள். பெரும்பாலும் அமெரிக்காவின் அன்றைய பிரபல பத்திரிகை ஓவியராக இருந்த “நார்மன் ராக்வெல்” போன்றவர்களின் பாணியில் வரைந்த “போஸ்டர் கலர்” ஓவியங்கள் அவை.

ராக்வெல்லின் நேரடியான பாதிப்பு கோபுலுவுக்கு இருந்ததா என்று தெரியவில்லை, ஆனால் இருவருடைய வண்ண நகைச்சுவை ஓவியங்களிலும் சில ஒற்றுமைகளை கண்டுகொள்ள முடிகிறது. ரியலிசம் போன்று தோன்றினாலும் மனிதர்கள் மெல்லியதாக கேரிகேச்சர் தன்மையுடன் இருக்கிறார்கள், தரை மற்றும் சுவர்களின் கோணங்கள், சுவர்களில் தொங்கும் கேலண்டர்கள், போஸ்டர்கள், இன்ன பிற பொருட்களின் நுட்பமான பதிவுகள், வண்ணங்களை பயன்படுத்தும் விதம், ஒளி மற்றும் நிழலின் பயன்படு போன்றவை.

அப்போதைய அமெரிக்க பெரும்பான்மை மக்களின் கலாச்சாரத்தை, வாழ்க்கை முறையை நார்மன் சித்தரிக்கிறார். போலவே கோபுலு அவரைச் சுற்றி இருந்த வாழ்க்கையின் காட்சிகளை நிஜத்தன்மையுடன் அதே நேரம் பகடியாகவும் அழுத்தமான தனித்தன்மையுடனும் சித்தரித்திருக்கிறார். சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’ போன்ற தொடர்களுக்கான படங்களை வரைந்த போது இந்தியாவை தாண்டியிருக்கவில்லை கோபுலு. ஆனாலும் அவருடைய கற்பனைத்திறன் எல்லைகளைக் கடந்திருக்கிறது. வெள்ளையர்களின்
உடல்மொழி, உடையலங்காரங்கள் நம்மை வியக்க வைக்கிறது. இன்று அவர் ஓவியங்களைப் பார்த்தால் ஒரு காலகட்டத்தின் பல்வேறு தருணங்கள் நம் முன் உறைந்து நிற்கும் பிரம்மை எழுகிறது.

மூன்றாவது வகை

ஆலவாய் அழகன், கலங்கரை தெய்வம் போன்ற சரித்திர தொடர்களுக்கும், அமுதசுரபி போன்ற இதழ்களின் தீபாவளிமலர் அட்டைப் படங்களுக்கும், மற்றும் பல புராண ஓவியங்களுக்கும் வரைந்த, மேற்கத்திய பாணியின் பாதிப்புகள் முற்றிலும் இல்லாத இந்திய சிற்பங்களின் அழகியல் தன்மை கொண்ட, வரலாற்று அறிவுடன் வரையப்பட்ட ஓவியங்கள்.

வாராந்திர தொடர்களுக்கான ஓவியங்கள்தானே, என்கிற அசட்டை சற்றும் இல்லாமல், தீவிரமான பார்வையுடன், இந்திய, ஓவிய, சிற்ப, கட்டிட‌ மரபின் நுட்பங்களை அறிந்தவராக, அதைப்பற்றிய ஆழமான அறிதலுடன் பதிவு செய்யப்பட்டவை. தொடர்களிலிருந்தும், எழுத்திலிருந்தும் துண்டித்து சட்டகமிட்டு மாட்டினாலும் தனியான ஒரு பாரம்பரிய‌ ஓவியத்துக்குரிய முழுமை கொண்டவை. உடை மற்றும் உடல் மொழியின் அழகியல் என நமது காட்சி மரபுக்கு உரிய இலக்கணங்களுடன் அமைந்து வந்தவை அவை.

தஞ்சை பெரிய கோவில்களின் சிற்பங்களை ரசித்ததையும், கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தாராசுரம் கோயிலுக்குச் சென்று அங்கே இருக்கும் சிற்பங்களை தொடர்ந்து வரைந்து பயிற்சி எடுத்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். தாராசுரம் ராஜேந்திர சோழன் காலத்து கோயில் சிற்பங்கள் அற்புதமானவை. பிறகு மாலியின் தலைமையில் தஞ்சையை சுற்றி உள்ள முக்கியமான இடங்களுக்குச் சென்று ஓவியங்கள் வரைந்ததையும் சொல்லி இருக்கிறார்.

இவ்வகையிலான தொடர்ந்த தேடல்கள் பாரம்பரிய ஓவிய நுட்பங்கள் பற்றியும், காட்சி கலை சார்ந்த மரபு பற்றியும் ஆழமான அறிதலை கோபுலுவுக்கு வழங்கி இருக்கலாம். கோபுலுவை நகைச்சுவை பாணியிலான ஓவியராக மட்டுமே சுருக்காமல் அவருடைய இந்த வகையிலான தீவிரமான ஓவிய முறைமையைப் பற்றிய பார்வையும் முக்கியமானது.

இறுதியாக, எனக்கு தமிழில் தீவிர இலக்கிய வாசிப்பு அறிமுகமான தொண்ணூறுகளின் கடைசியிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் நவீன இலக்கியம் சார்ந்து வந்த பெரும்பாலான சிறு பத்திரிகைகளில் மேற்கத்திய பாணியிலான அரூப தன்மையுடைய ஓவியங்களை போடுவது ஒரு ஃபேஷன். அவர்கள் பாணியில் சொல்வதானால் “மோஸ்தர்”. புரியாத தன்மைதான் கலை என்று நம்பும் ஒரு ஃபேக் கூட்டம் இருந்தது/ இருக்கிறது. ஒரு வகையான கலை இலக்கிய போலித்தனம் அது. அப்ஸ்ட்ராக்டாக நாலு கோடு இழுத்துக் கொடுத்தால் நவீன பாணி ஓவியம் என்று சிறுபத்திரிகைகளில் போடுவார்கள். இவ்வகை பரிசோதனைகளை ஒரு ஓவியனாக நானே முயன்று பார்த்து வெற்றியும் பெற்றிருக்கிறேன். இவர்கள் கோபுலு போன்ற கலைஞர்களை வெறும் வெகுஜன ஓவியர் என்று எளிதாகக் கடந்து விடுவார்கள்.

ஆனால் எந்த உலகத்தரமான ஓவியர்களுக்கும் சற்றும் குறையாத ஒரு ஆளுமை கோபுலு என்று நான் சொல்வேன்.

நன்றி :

ஆனந்த விகடன் (கோபுலு ஓவியங்கள்)

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button