தீ
‘உன்
கொள்கையையும்
கோட்பாட்டையும்
புரட்சியையும்
புளிசோத்தையும்
தூக்கிக் குப்பையில் போடு’
என்றார்கள்
போன இடங்களிலெல்லாம்
தூக்கிப் போட்டேன்
அது
பற்றித் திபுதிபுவெனத் தீயாய் எரிகிறது.
****
அரசியல் போலி
எனக்கு
எந்தக் கொள்கையும்
கோட்பாடும் கிடையாது
ஆனால்,
ஒன்றே ஒன்றுமட்டும்
எனக்கிருக்கிறது
பசி
அதனால்,
நான் போராடுகிறேன்!
*****
அதன்பிறகு வாழ்ந்து தொலைக்கலாம்!
உன் கைபேசியின் கடவுச்சொல்
எனக்கு மந்திரச்சொல்
அடிக்கடி அர்த்த இராத்திரியில்
சூரிய மலர் பூத்துக்கொள்கிறது
உனக்கும் சேர்த்துப் பல்துலக்கி
குளித்துத் தயாராகிறேன்
சட்டைப் பொத்தான்களை
சரியாகப் பூட்டிக்கொள்வதில்லை
பேருந்துப் பயணத்தில்
இறங்க வேண்டிய நிறுத்தம் வருமுன்னே
இறங்கிவிடுகிறேன்
நூலகப் புத்தகங்களில்
உன் பிறந்ததேதி கொண்ட பக்கங்களில்
என் பெயரெழுதி வைத்துவிடுகிறேன்
தக்காளி விலை இலட்சம் ஏறினாலும்
உன் கன்னங்களெனக்கு
ஆப்பிள் பழங்கள்
வரிக்குதிரையின் பிடரிமயிர் போல்
பரவி நீண்டிருக்கும் உன் புருவங்கள்
என் மார்புக்கூட்டில்
உன் நியாபகார்த்தமாய் வைத்த
மயிலிறகு குட்டிபோட்டது போல்
எட்டிப்பார்க்குமென் குழந்தை மீசை
எல்லாம் புதிதாய் இருக்கிறது
நீ மௌனத்தோடு கடத்தும்
சொற்களின் இசை விளங்குகிறது
ஜன்னல் வழியே தெரிகின்ற
கொடிக்கயிற்றில் உலர்ந்துகொண்டிருக்கும்
ஈரத் துப்பட்டாவில் நீலவர்ணத்தில்
உனது முகம்
உனக்குப் பிடிக்குமென்பதற்காகவே
வீட்டின் முற்றத்தில் திராட்சைக் கொத்துகள் தொங்கும்படியாய்
கொடி வளர்க்கிறேன்
எதிர்வீட்டுப் பெண்ணின் கொலுசொலியில்
உன் பாதம் தடவுகிறேன்
கிறுக்குப்பிடித்துத் தலைசுற்றி
இத்தனையையும்
என் நினைவறுந்த நோய்த்தொற்றில்
உயிர்தொலைத்து நிற்கதியாகி
எழுதித் தொலைகிறேன்
எல்லாப் புண்ணாக்கையும் ஓரம் கட்டிவிட்டு
தூக்கத்தில் முந்திய விந்தின்
பிசுபிசுப்புக் கலந்த ஞாபத்தோடு
ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்
ஒருவேளை நீயுமென்னைப் போலவே
கனவின் நடுவில் தழுவிப் புணர்ந்து
முற்றும் கலக்கிறாயெனில்,
தலைவி !
காதலுறுவதோ…
மணம் முடிவதோ…
எதுவாகினும்
முதலில்
வாழ்தலுக்கான
நடைமுறைச் சட்டங்களை உடைப்போம்
சம்பிரதாயங்களைத் துடைப்போம்
அதன்பிறகு,
இந்த வாழ்க்கையை வாழ்ந்து தொலைக்கலாம்.
********