
‘பிழைத்து கொண்டுவிட்டேன்’ என்பதை மீறி, அடுத்த நொடியினைக் கொண்டு தீர்மானிக்கும் யாவையும் மறந்திருந்த மருத்துவ நாட்களில் அப்படியாக ஒரு பிரார்த்தனையைக் கேட்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. விளங்கிக் கொள்ள வேண்டி எடுத்த முயற்சிகள் என்னைக் கொண்டு போய் நிறுத்திய இடத்தினை மறக்கவே இது நாள் வரை நினைத்திருக்கிறேன். அதன் அர்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
மீண்டும் மீண்டும் அவை எழுப்பக்கூடிய ஓசையினுள் மனம் சென்று கொண்டே இருந்தது. உச்சரிப்புகளின் கோர்வையைக் கொண்டு அதைப் புரிந்து கொள்ள முயன்றும் அது எடுபடவில்லை. சிறு துண்டுகளாக அவ்வறையின் வெளிச்சம் என்னை சிதறடித்துக் கொண்டிருக்க, நான் சுவர்களின் மேல் படரத் தொடங்கியிருந்தேன். என்னால் முடிந்தவரை அவற்றை கைக்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் என்னை எங்ஙனம் கொண்டு செல்லப் போகிறது என்கிற முன்விவாதங்களில் இருந்து முழுவதுமாக விடுபட்டிருந்தேன். பக்கத்து அறையிலிருந்து வரும் அக்குரலின் மொழியினை அறியாதவனுக்கு எப்படி அது விளங்கக்கூடும்?
ஏனோ மனம் அதனிலிருந்து வெளியேற முடியாமல் போனதை அக்குரல் அறியவில்லை. இப்படி ஒருவன் அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்பதை அறியாது, அது மேலும் தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்க அதை அறிய நான் எடுத்த எவ்வித முயற்சிகளும் செல்லுபடியாகவில்லை. எனது தூக்கத்தைப் பறித்துக்கொண்ட அக்குரலின் வலிமை இரவு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
நேற்று வரை அந்த அறை காலியாகவே இருந்தது. எனக்கான தேக மருத்துவத்தை முடித்துவிட்டு ஒவ்வொரு முறை அதைக் கடந்து வரும் போது, தாழிடப்பட்ட அவ்வறையின் முன் நின்றுவிட்டு வருவது வழக்கம். இங்கு வரவிருக்கும் ஒருவரை எப்போதும் விடுவித்து விடு என்று அவற்றினோடு தானாக உளறத் தொடங்கிவிடுவேன். காலியாகக் கிடக்கும் அதனை விரும்பத் தொடங்கியிருந்ததே அதற்கு காரணம். நோயின் நெடி இல்லாது சிறிது காலம் ஓய்வெடுக்க விரும்புவதாக அவ்வறை என்னிடம் புலம்பிக் கொண்டே இருக்கும். அக்கால கட்டங்களில் அது மகிழ்ச்சியாக இருப்பதாய் கூறியது. ஆனால், இன்று அம்மகிழ்ச்சியைப் பலிகொள்ளும் ஒன்று நடந்து கொண்டிருப்பதை ஏற்கச் சற்றும் தயார் நிலையில் இல்லாத போது, நிகழும் இவற்றை எப்படி விவரித்து அதில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்? இப்போது அவ்வறை காலியாக இல்லை.
இரவு முழுவதையும் அக்குரலே எடுத்துக்கொள்ள, தன்னை மும்முரமாக வெளிப்படுத்தும் முகத்தினை காண வேண்டும் என்கிற ஆர்வத்தினால் குறுகிய எனது அறையில் போடப்பட்டிருந்த எனது படுக்கையை விட்டு எழுந்து அங்கும் இங்கும் என நடந்து கொண்டே இருந்தேன். என் கணிப்பின் படி அது ஒரு பெண்ணின் குரல்தான் என்பதைத் தாண்டி எதுவும் பிடிபடவில்லை. என் அனுமானத்தில் அதில் கண்டிப்பாகத் தனது பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டிய அக்கறை இருந்தது.
நாளை வரை காத்திருக்க முடியாது. எனது அறையிலிருந்து வெளியேற நினைத்தேன். அது நடக்காது என்பதை அறிந்திருந்தும், எனது ஒற்றைத் தலைவலி விடாது இக்காலகட்டத்தில் என்னை முழுவதுமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தது. உடல் எங்கும் கொதிக்கும் சதை பிண்டங்களில் முடங்கப் போகும் எனது உடலைப் பத்திரமாகக் காக்க வேண்டியே இங்கு வர நேர்ந்தது. எத்தனை எத்தனை மருத்துவத்திற்குப் பிறகே இவ்விடத்திற்கு வந்து சேர்ந்தேன். வந்தது முதல் அதை கைக்கொள்ள என்னுடன் சேர்ந்து மருத்துவர்களும் போராடிக் கொண்டிருந்தனர். எனக்குத் துணையாக என்னுடைய நண்பன் வந்திருந்தான். காலை முழுவதும் சாப்பாடு வாங்கிக்கொடுப்பது, மருந்து வாங்குவது என்று அலைந்த களைப்பில் என் படுக்கைக்குக் கீழ் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பாது நடந்து கொண்டிருந்தேன். இவனைப் போலக் கண்டிப்பாக யாரோதான் என்னைப் போன்ற இன்னொருவருக்காகத் தனது பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். காலை அவன் எழுந்ததும் அவனிடத்தில் கேட்க வேண்டிய கேள்வியாக அது மாறியது. எனக்கான பிரார்த்தனையை உச்சரிக்கச் சொல்லிக் கேட்க வேண்டும். கண்டிப்பாக அவற்றினை அவன் ஏற்று நடந்தே ஆகவேண்டிய நிலைக்கு அவனைத் தள்ள வேண்டும். உறங்கிக் கொண்டிருக்கும் அவனின் முகத்தைக் காண்கையில், ‘நாளை வரை காத்திரு’ என்று கூறினேன். ஒரு கட்டத்தில் அவன் என்னுடன் இருப்பதற்கான காரணங்களை நானே பட்டியலிடுவது வழக்கம். அதை பற்றியெல்லாம் அவனிடத்தில் பேசியது கிடையாது என்றாலும், அவனின் ஒன்றுதலுக்கான காரணம் எதுவாக இருக்கும். என்னைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறானோ என்று அவனைப் பார்க்கும் போதெல்லாம் நினைப்பது உண்டு. அந்த மகிழ்வை அவனிடத்தில் இருந்து பிடுங்க அவனை எல்லா விதமான ஏவுதலிலும் செலுத்திக் கொண்டிருப்பேன். அருகிலிருக்கும் அவ்வறையிலிருந்து வெளிப்படும் தெரியாத அம்மொழியினில் இருக்கும் வீரியம் நிறைவேற வேண்டும் என மறுபடி வேண்டிக்கொண்டேன்.
எனக்கான ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே என்னுடைய அறையை விட்டு வெளியேறினேன். என்னைப் போன்று தமிழ் முறைப்படி சிகிச்சை வேண்டி வந்தவர்களுடன் அங்கு தங்கியிருந்த இருபது நாட்களில் பழகியிருந்தேன். அவர்களை ஒப்பிடுகையில் ஓரளவு நன்றாக நடக்க கூடியவனாகவும், கை கால்களை தன் போக்கில் அசைக்கக் கூடியவனாகவும் நானே இருந்தேன். இருபதுகளின் பிற்பகுதியில் இருக்கும் எனக்கு ஆரம்ப கட்டத்தில் இங்கு வந்ததே அதற்குக் காரணம். சிகிச்சையின் படி சுமார் இருபது நாட்களைக் கடந்ததில் ஓரளவு அந்த ஒற்றைத் தலைவலியை எதிர் கொள்ள மன தைரியம் கிடைக்கப் பெற்றிருந்தது. தன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றைத் தன் வசப்படுத்த முயலும் ஒவ்வொரு நேரங்களிலும் இந்த தலைவலி என்னை ஒட்டிக் கொண்டிருக்கிறது. இப்போது கூட அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். எதற்காக இந்த அலைச்சல், தன் செவிகளை மூடிக் கொண்டு நிம்மதியாக உறங்க வேண்டும் என்று பலமுறை எனக்குள் சொல்லிச் சொல்லி அலுத்துப் போனதே மிச்சம். இருந்தும் நேற்றைய இரவிற்கான பதிலை வேண்டி எனது கால்கள் பக்கத்து அறையை நோக்கிச் சென்றது. தாழிடப்பட்டிருந்த அவ்வறையின் முன் நின்றிருந்தேன். சற்றும் எதிர்பாராத ஒன்றாகவே அது இருந்தது. நேற்றிரவு முழுவதும் கேட்டுக்கொண்டிருந்த யாவும் எனது கற்பனையா என்று குழம்பிக் கொண்டிருந்ததைக் கவனித்த நண்பன், ‘என்ன’ என்பது போலத் தலையசைக்க அவனிடம் கேட்க வேண்டிய கேள்வியை ஞாபகப்படுத்த முயன்றேன்.
“எனக்காக எப்போதாவது நீ பிரார்த்தித்திருக்கிறாயா..?” என்று கேட்ட என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டான். அவனிடமிருந்து பதிலை எதிர்பார்த்து நின்றிருந்த என்னை, ‘மருத்துவர் கூப்பிடுகிறார்’ என்று சொல்லி அழைத்துச் சென்றான். நான் அவ்வறையினை பார்த்துக்கொண்டே முன் நகர்ந்தேன்.
அங்கு தங்கியிருப்பவர்களின் விவரங்கள் கீழே உள்ள பலகையில் எழுதப்பட்டிருக்கும். அவற்றில் அவ்வறையின் எண்ணில் தங்கியிருந்தவர்களின் விவரங்கள் எழுதி அழிக்கப்பட்டிருந்ததை கவனித்தேன். அவற்றை அறிய வேண்டிய அழைப்புகள் எல்லாம் என்னிடத்திலிருந்து அனைவராலும் துண்டிக்கப்பட்டது எதனால் என்று தெரியாது மருத்துவரைச் சந்தித்து, அன்றைக்கான சிகிச்சை சீட்டை வாங்கிக்கொண்டு ஆண்களுக்கென பிரத்தேக சிகிச்சை அறையினுள் நுழைந்தேன். எப்போதும் போல ஆடைகளையெல்லாம் களைந்து சிறு துணியினால் எனது பிறப்புறுப்பை மட்டும் மறைத்துக்கொண்டு படுத்தேன். என்னதான் என் உடலை அவர்கள் ஒருமுகப்படுத்த முயன்று கொண்டு இருந்தாலும் சிந்தனை அனைத்தும் அவ்வறையையே சுற்றிக் கொண்டிருந்தது.எப்போது என்னுடைய அறைக்குச் செல்வேன் என்றுதான் இருந்தது.
அன்றைக்கான சிகிச்சை முடிவடைந்து வரும் போது அவ்வறை திறந்திருந்தது. உள்ளே எட்டிப்பார்க்க முடியாது உடல் நடுக்கம் கொள்ளத் தொடங்கியிருந்தது. வேகமாக என்னுடைய அறையினுள் நுழைந்தமட்டில் படுக்கையில் படுத்துக்கொண்டேன். இன்றிரவு ஒலிக்கப்போகும் அக்குரலினை கேட்க வேண்டி அல்லாடிய என்னை கட்டுப்படுத்த முயன்று கொண்டே இருந்தேன்.
“புதிதாக பிரார்த்தனையை பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாய்” என்ற நண்பனிடத்தில், “இன்று இரவு உனது உறக்கத்தை விடுத்து அக்குரல் வெளிப்படுத்தும் அர்த்தத்தை விளக்க முடியுமா?” என்றேன்.
“நேற்றே அதை உணர்ந்திருந்தேன்.. கனவில் என்று விட்டுவிட்டேன்..”
“அது கனவில் இல்லை.. நம் பக்கத்து அறையினிலிருந்து வெளிப்படும் ஒன்று என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்.. அதன் உச்சரிப்புகள் கண்டிப்பாக உன்னை கிறங்கடிக்கும் “
“இப்போது அதை அறிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய்..?” என்று கேலியும் அக்கறையும் நிறைந்த தொனியில் சொன்னவனிடத்தில் எப்படி அதைக் கடத்த முடியும் என்று யோசித்தேன்.
“இப்படி வைத்துக்கொள்..அவை நமக்கும் உதவக் கூடும் அல்லவா..?”
“மரணம் பற்றிய பயமே உன்னை பேசத் தூண்டுகிறது…அதில் என்னையும் இழுக்காதே… அது எப்படி நமக்கு உதவும்..?”
“நீ ஒரு முறை அக்குரலைக் கேட்ட பின்னால் இந்த கேள்விகள் எல்லாம் பறந்து போகும்..”
“இது கேள்விகள் இல்லை..தெரியுமா..எதனுள்ளும் நுழைத்துக் கொள்ளாது இருத்தல் உனக்கு நல்லது என்று மருத்துவர் சொன்னதை மறந்து விட்டாய் போல..”
சிறிது நேர அமைதிக்குப் பிறகு, “ஆமாம்..அம்மருத்துவர் சொல்வதைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறேன்..ஆனால், அப்படியே அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன..?”
“இருக்கிறது..முதலில் உடல் நலம் தான் முக்கியம்..”
“கண்டிப்பாக..இக்குரலும் எனக்கு உதவும் என்கிற நம்பிக்கை கிடைக்கிறது..நீ ஒருமுறை அக்குரலை கேட்க வேண்டும்..’
“உனக்கான ஒன்றாக இருக்கும் பட்சத்தில்..நீ விளையாடியே ஆக வேண்டும்..” என்று சிரித்துக்கொண்டான்.
நான் சொன்னது போல அக்குரலினை கேட்ட நண்பனிடத்தில் மாறுதல்களை என்னால் உணரமுடிந்தது. இப்போது இருவரும் சேர்ந்து அக்குரல் வெளிப்படுத்தும் அர்த்தத்தினை அறிய முற்படும் போது பாதியில் நின்றது. மீண்டும் அதைக் கேட்க வேண்டிய இருவரின் விருப்பமும் நிறைவேறாது போனது. அது வெளிப்படுத்திய வார்த்தைகளை மூளைக்குள் ஏற்றியிருந்தோம், அவற்றை அதன் உச்சரிப்புகளிலேயே இருவரும் உளறிக்கொண்டிருந்தோம். என்னை விட இப்போது என்னுடன் வந்த நண்பன் அதை மனப்பாடமாக வைத்திருந்தான். ஏனோ அவன் அதை எனக்கு ஞாபகப்படுத்தவே மறக்காது இருந்தது போலத் தோன்றியது.
என்னை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு அவற்றைப் பற்றி விசாரிப்பதாகக் கூறினான். என்னுடைய கவனம் முழுவதும் அக்குரலைச் சுற்றியே இருந்தது. இன்றும் அவ்வறையினை நொடிப்பொழுதில் கடந்து அறைக்கு திரும்பினேன். அங்கு என் நண்பன் அருகில் என் படுக்கையில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். கண்டிப்பாக அந்த குரலின் சொந்தக்காரி அவளாகத்தான் இருக்க கூடும். அவள் எப்போது பேசுவாள் என்று மனம் ஏங்கியது. அவளை எனக்கு நண்பன் அறிமுகப்படுத்தினான். ஆனால், அந்த அறிமுகத்தில் மகிழ்ச்சி அறவே இல்லை. எப்படி இங்கு வந்தடைந்திருப்பாள்.. எங்களைப் போன்று அவளும் இவ்வறையினை சுற்றிக் கொண்டிருக்கலாம்.
அவள் அமெரிக்காவின் குக்கிராமத்திலிருந்து தன் குழந்தையின் மருத்துவத்திற்காக இங்கே வந்திருப்பதாகவும், இரண்டு நாட்களாக சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஆங்கிலத்தில் சொன்னாள். அவள் இரவில் வெளிப்படுத்தும் மொழி அல்ல அது; ஆனால் ,அவள் குரலின் மூலம் அவளேயது என்று தெரிந்துகொள்ளலாம்.
மேலும் தொடர்ந்தவள்.. “இதுதான் கடைசி முறை என்று தோன்றுகிறது..என் குழந்தை கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள். இப்போது வர வர நோயின் தீவிரத்தில் அவள் சிரிப்பை மறந்துவிட்டாள். அதை எப்படியாவது ஞாபகப்படுத்த வேண்டும் என்பதில்தான் என்னுடைய எல்லா முயற்சிகளும் இருந்தது. ஒவ்வொரு முறை அவள் தனது கசந்த வாயைக் கொண்டு சுவைக்கும் உணவினை கொன்று விட வேண்டும் என்று தோன்றுகிறது. இரவு முழுவதும் அவளுக்கான நிம்மதியை வழங்க வழிசெய்ய வேண்டி எங்களின் தெய்வத்திடம் வேண்டுகிறேன்.. அதற்காக எங்கும் செல்ல எனது கால்கள் தயாராக இருக்கிறது“ என்று நிறுத்தினாள்.
எதிரிலிருந்து அவள் எந்த பதிலோ, ஆறுதலையோ எதிர்பார்க்காத உச்சரிப்புகள் அவை. அதில் ஒரு பயனும் இருக்கப்போவதில்லை என்று எனக்குத் தெரியும்.
அவள் கூற கூற என் மனதிற்குள் இதோ என் அருகில் இருப்பவன் இவற்றைப் பற்றி என்ன நினைத்து கொண்டிருப்பான் என்பதில் எண்ணம் ஓடியது..
‘பிழைத்துக் கொண்ட அப்பாவி என்பான் என்னை .. கூலி ஆள் என்று நினைத்து ஏவும் யாவையும் அவனின் ஆயுளைக் கொண்டு அளந்திட முடியும் என்று நினைத்திருப்பவனின் உயிர் அசைவுகள் கண்டிப்பாக ஒருநாள் நிற்க கூடும்..அன்றும் நான் உடனிருப்பேன்..அதில் எனக்கான ஒய்வைக் கண்டிப்பாக எடுப்பேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அன்றைய நாளுக்கான நெறிமுறைகளை இன்றே நான் பயிற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். கண்டிப்பாக அது நிகழ்த்தப் போகும் ஆச்சிரியங்களை அனுபவிக்க அவனுடன் நான் இல்லாமல் எப்படி.. இப்போது இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பது தன்மரணக் குறிப்புகளின் அத்தியாயங்கள் என்பதை நன்றாக அறிந்திருக்கிறேன்..’
அவளைப் போன்றே அவனுக்கான மொழியை அவன் உருவாக்கவும் கூடும். அதில் எனக்குத் தெரியாத பல உண்மைகளை அடுக்கினாலும் அதிலிருந்து மீண்டு வரக் கூடிய ஆற்றலை அளித்திடும் வழியை கண்டடைய வேண்டும்.
அவள் தொடர்ந்தாள் “எங்கோ இருந்து..இங்கு வந்து என் குழந்தையை முழுவதுமாக இழக்கக் கூடிய நிலையில் என்னை நிறுத்திய யாவருக்கும் நான் நன்றியைத் தவிர என்ன சொல்லமுடியும்..மீ? ண்டும் ஒருமுறை அவளைச் சிரிக்க வைக்க என்னால் முடிந்தளவு முயலுவேன். அது அவளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும்; ஏற்படுத்துகிறது. அங்ஙனம் நிகழும் தன்மையைக் கொண்டு விலகிட முடியாத படி எனது அரணை ஏற்படுத்துவேன்..” என்றாள்.
அதற்கு தயாராக இருந்தவன் போல என் நண்பன், “உங்களின் நன்றி யாரையும் வருத்தாது என்பதை அறிந்திருக்கிறீர்களா..?”
“வருத்தாது ..ஆனால், அது எல்லா செவிகளுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாக மாறும்..மாற்றுவேன்…”
அப்போது என் அருகில் எதுவும் தெரியாதது போல நின்று கொண்டிருப்பவன் எனது கைகளைப் பிடித்தான். அவனது தொடுதலில் இருக்கக் கூடிய யாவையும் வெளிப்படுத்தக் காத்திருந்தவைகளிடம் எவ்வளவு சீக்கிரம் விலக வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் விலக முற்பட்டேன். அவர்களின் உரையாடல் என்னவோ இருவரும் தனக்குள்ளேயே பேசிக்கொள்ளும் பாவனையிலேயே அரங்கேற்றப்பட்டது. இருவரும் ஒரு நோயாளியைச் சுமந்து கொண்டிருப்பவர்கள். அவளுடைய நன்றி இங்கு இருப்பவர்களை வருத்தம் கொள்ளச் செய்யாது என்பதை இவ்வளவு தீர்க்கமாகச் சொல்லும் அளவுக்கு எப்படி இவன் தேர்ந்தான். அருகிலிருந்து மரணத்தை பார்ப்பவர்களுக்கு அது தொற்றிக் கொள்ளும் என்கிற பயத்தைத் தாண்டி ஏதோ ஒன்று இருப்பதாகப்பட்டது.
அவள் எங்களை அழைத்துக் கொண்டு அவ்வறையினுள் நுழைந்தாள்..அமைதியாக அங்கு உறங்கி கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து, இரவில் அவளுக்கே உரித்தான அப்பிரார்த்தனைகள் மிதக்கும் உச்சரிப்புகளில் எதையோ சொன்னாள். அதன் விளக்கத்தைக் கேட்டிடாது அங்கிருந்து நகர்ந்தோம்.
இரவில் மீண்டும் அவளின் குரல் விடாது துரத்தியது. அதைக் கவனிக்கக் கூடாது என்று ஓடிக்கொண்டிருந்தேன். அதிலிருந்து தப்பிக்க முடியாது அக்குழந்தையின் அருகில் போய் நின்றுகொண்டேன். அவள் என்னை ஒரு நெடிய பாதையில் கொண்டு வந்து விடும் வரை உடன் வந்தாள். அதன் எல்லையைக் கண்டறிய விரும்பியவளின் முக பாவனையோடு நாங்கள் வந்தடைந்த வழியிலேயே மீண்டும் திரும்பினாள். வழிநெடுகிலும் எங்காவது சிரிப்பதற்கு ஏங்கினேன். அருகில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தவனிடம் “இது மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது..என்பதை உணருகிறாயா..?” என்றேன்.
தூக்க கலக்கத்தில் எரிச்சலுடன், “அவ்வளவும்..அவளின் உச்சரிப்புகளில் தெறிக்கும் அன்யோனியமே உன்னை இப்படி யோசிக்க வைக்கிறது…”
“இல்லை என்று ஒரு போதும் என்னால் வாதிட முடியாது. அந்த அன்யோனியத்தில் அவள் எதையோ உதறப் பார்க்கிறாள்”
“அவளின் இரவு பிரார்த்தனைகள் யாவும் ‘அவளையே கொல்ல’ என்பதை இப்போதாவது புரிந்து கொள்…”
“அவளையே கொல்ல…அவளையே கொல்ல..” என்று முனகினேன்.
“அதே“ என்று சிரித்துக் கொண்டவனின் சிரிப்பு இப்படுக்கையிலிருந்து கேட்கையில் எனக்கு அருவருப்பைக் கொடுத்தது.