அவன் நீல வண்ண காலருக்குள் கருப்பு, ‘லூயி வட்டான் ஆம்ப்ரே நாமேட்’ பாட்டிலிலுள்ள திரவம் தாராளமாகப் பொழிந்து கொண்டிருந்தது. அறை முழுவதும் ஆண்மையின் நறுமணம் பரவியது. மனித உடலில் சுரக்கும் ஃபெரமோன்கள் மணத்தை அடக்கிவிடும் ஓங்கிய வாசம். இதனால்தான் என்னவோ இப்பொழுதெல்லாம் காதல் துணைகளைத் தேடிக்கொள்வதில் அனைவருக்கும் மிகப்பெரிய தடுமாற்றம் ஏற்படுகின்றது.
கண்ணாடியில் அவன் முகம். எண்ணெய்யில் முக்கியெடுத்த கோரைப்புல்லைப் படிமானமாகப் பரப்பிவிட்டது போலப் பின்பக்கமாக வாரியிருந்தது தலை முடி. அவன் உற்றுப் பார்த்தான். ஒரு வெள்ளி இழை மட்டும் கருப்பு முலாமுக்குத் தப்பியிருந்தது. “டாமிட்” என்று முனகிக்கொண்டே ஒரு தூரிகையை எடுத்து கருப்பு வண்ணத்தை அந்த இழையில் தேய்த்துக்கொண்டான். கண்களின் இமை முடிகள் அவனது கூரிய பார்வையோடு வாள் சண்டை போட்டுக்கொண்டிருந்தன. குனிந்து கைக்கடிகாரத்தைப் பார்த்தான். அவசரமாக அங்கிருந்து நகர்ந்தான். LV என்று குறியிட்டிருந்த சிறு பணப்பையை பேண்ட் பின்பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கைக்கடிகாரத்தில் எதையோ தட்டினான். வாசல் கதவு திறந்து மின் விளக்கு அணைந்தது.
காருக்குள், “யூ சே இட் பெஸ்ட் வென் யூ சே நத்திங் அட் ஆல்” என்று ஒலித்துக்கொண்டிருந்தது. அவன் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்தது. “டால்” என்ற பெயரும் ஒரு இளம்பெண்ணின் முகமும் அலைபேசி வெளிச்சத்தில் மின்னின.
“ஹாய் டால், அஞ்சு நிமிஷத்துல இருப்பேன்” என்று குரல் செய்தி ஒன்றை அனுப்பினான்.
அவன் கருப்பு வண்ண ஜேகுவார், ’சர்ர்ர்ர்ர்’ என்று ஒரு புள்ளி அமைதியில் நின்றது. அவன் இறங்கியவுடன் ஒரு ஆள் வந்து அந்த காரை வாகனங்களை நிறுத்துமிடத்திற்கு ஓட்டிக்கொண்டு போனான்.
சுற்றியெழுந்த உயரக் கட்டிடங்களுக்கிடையில் சுழற்றி வீசும் காற்றைக் கிழித்துக்கொண்டு விரையும் கரும் புரவி போல ஆறடி உயரத்தில் பரந்த தோள்களுடன் கம்பீரமாய் தோன்றி பிரமாண்டமாய் மிளிர்ந்து கொண்டிருந்த அந்த ஹோட்டலுக்குள் நுழைந்து கொண்டிருந்தான் அவன்.
அவள் சிவப்பு நிற கவுனில் பொம்மை போலப் புன்னகைத்தாள். ”ஹேய் டால்” என்று அவளைக் கட்டிக்கொண்டு உதட்டில் முத்தமிட்டான். ஒரு பரிசை அவளிடம் நீட்டினான்.
“தேங்க்யூ” என்றாள்.
இருவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். பேடோவன் பியானோ இசை மென் அலையாய் மிதந்து கொண்டிருந்தது. குழிகள் இல்லாத பெரிய இட்லித் தட்டுகளை அடுக்கி வைத்ததைப் போல ஐந்து அடுக்கு கண்ணாடியிலான க்யூரெட் ஸ்டேன்ட் கொண்டு வந்து வைக்கப்பட்டது. கூடவே ஒரு கெட்டிலும் இரண்டு கப் அன்ட் சாசர்களும், ஒரு நீண்ட தட்டில் மூன்று வகையான சாஸ்கள் இரண்டு குட்டி தட்டுகள் எல்லாம் மேஜையை அலங்கரித்தன. ஐந்து அடுக்கிலும் விதவிதமான கேக்குகள், குக்கீஸ், பஃப், மற்றும் சாக்கலேட்டினாலான சில உருண்டையான தின்பண்டங்கள் கொலு வைக்கப்படிருந்தன.
“ஐ லவ் திஸ் எக்லெர்ஸ்” என்று கண்களை அகலத் திறந்தாள்.
“எனக்குத் தெரியும்” என்றான்.
அவள் தன் இரண்டு புருவங்களையும் கைகுலுக்கிக்கொள்ள விழைவது போல உள்பக்கமாக இழுத்து முகத்தைச் சற்றே சாய்த்தாள்.
“உன் தொண்டைக்குள்ள அது மிதந்து போற வேகத்தை வெச்சுப் பாக்கும்போது தெரியுது. ஒரு பொண்ணு நீச்சல் கொளத்துல நிதானமா பேக் ஸ்ட்ரோக் அடிக்கிற மாதிரி. அத்தோட உள்ள போக மனமில்லாம உன் உதட்டுல வேற ஒரு துளி ஒட்டிட்டு இருக்கு” என்று அவள் இதழோரத்தில் ஒட்டியிருந்ததை தன் சுண்டு விரலால் தடவி எடுத்துக் காண்பித்தான்.
அவன் குரல் கொஞ்சம் கரகரப்பாகவும், ஆழமாகவும், பட்டுத் துணியில் மயில் இறகை வருடியது போலவும் இருந்தது.
அவள், “ம்ம்ம் இன்ட்ரஸ்ட்டிங்” என்று கால் மேல் கால் போட்டுக்கொண்டே அவனைப் பார்த்தாள்.
அவன் அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.
இருவரும் சாப்பிடுவதில் மும்முரமானார்கள்.
அவன் இரண்டு கப்பிலும் காப்பியை ஊற்றினான். இருவரும் ஒரே ரிதமில் கப்பைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அதிலிருந்து வந்த ஆவியை உள்ளிழுத்து கண்களை மூடித் திறந்தனர்.
“ஹாஹா ஹாஹா” என்ற ஆரவாரப் புன்னகையும், “ம்ஹ்ஹூ” என்ற நளினப் புன்னகையும் ஒன்றையொன்று அடக்காமல் சரி விகிதத்தில் கலந்து குழைந்தன, அவர்கள் குடித்த காப்பியின் டிக்காஷன் – பால் விகிதத்தைப் போலவே. இருவரும் எழுந்து நடந்தனர். சர்வர் ஒருவர் வேகமாக வந்து ஒரு டப்பாவை அவனிடம் நீட்டினார்.
“ஃபார் யூ, எக்லேர்ஸ்” என்று அவளிடம் கொடுத்தான்.
“ஸ்வீட் ஆப்ஃ யூ” என்று வாங்கிக் கொண்டாள்.
கார் வேகமாக ஒரு பங்களாவிற்குள் நுழைந்தது. அவர்கள் காரிலிருந்து இறங்கும்போதே வீடு திறக்கப்பட்டிருந்தது. அவர்கள் உள்ளே நுழைய நுழைய மின் விளக்குகளும், குளிர்சாதனங்களும் ஒவ்வொன்றாய் தானாக இயங்க ஆரம்பித்தன. அவன் அவளைப் படுக்கையறைக்கு அழைத்துச் சென்றான்.
கதவு மூடிக்கொண்டது. சற்று நேரம் கழித்து இருள் திணறி மெலிதாக வெளிச்சம் பரவத் துவங்கியது. அவள் உள்ளாடையை அணிந்து கொண்டிருந்தாள். அவன் படுக்கைக்கு அருகிலிருந்த மேஜையிலிருந்து ஒரு பரிசு டப்பாவை எடுத்துத் திறந்தான். அவள் சிவப்பு நிற கவுனுக்குள் தன்னைத் திணித்துக் கொண்டிருந்தாள். அவன் அவள் கையில் ஒரு கடிகாரத்தைக் கட்டிவிட்டான்.
“லவ்லி” என்றாள்.
நேரத்தைப் பார்த்துவிட்டு, “ஓ… எனக்கு ஒரு க்ளாஸ் அட்டென்டன் பண்ணனும். காலேஜ் போகனும்” என்றாள்.
அவன் கார் கல்லூரி வாசலில் வந்து நின்றது. அவள் அவன் உதட்டில் முத்தமிட்டுவிட்டு அவசரமாக இறங்கினாள். உள்ளே நுழைந்து கொண்டிருந்த சில மாணவர்கள் அந்த காரையும் அவளையும் பார்த்துக்கொண்டே சற்று நேரம் வாயிற்கதவருகில் நின்றுகொண்டிருந்தனர். அவள் வெருட்டென உள்ளே நுழைந்து கழிப்பறைக்குள் சென்றாள். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு ஜீன்ஸ் பேண்ட் டீ ஷர்ட்டுடன் வகுப்பிற்குள் நுழைந்தாள். அவள் கையிலிருந்த, ’கூச்சி’ பேகை பார்த்து அந்த வகுப்பிலிருந்த பெண்கள் அனைவரும் எதையோ கிசுகிசுத்து சிரித்துக்கொண்டனர். அவள் கடைசி வரிசை இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.
பேராசிரியர் ஒருவர் உள்ளே நுழைந்து குறும் பொருளியல் பற்றி வகுப்பெடுக்கத் தொடங்கினார். வகுப்பு முடியும் நேரத்தில், “ ஃபோக்ஸ், நான் சொல்ல மறந்துட்டேன்…. ப்ரீத்தா, ஆஸ்யூஷுஅல் யூ ஆர் த டாப்பர் இன் திஸ் செமஸ்டர் டூ, கீப் இட் அப்” என்று ப்ரீத்தாவைப் பார்த்தார். அவள் கடைசி இருக்கையிலிருந்து புன்னகைத்து தலையை ஆட்டினாள். வகுப்பு முடிந்ததும் அவள் கல்லூரி அலுவலகத்திற்குச் சென்றாள். அங்கிருந்த சில கோப்புகளை எடுத்து அதிலுள்ள விவரங்களை கணினியில் தட்டச்சு செய்துவிட்டு, அங்கிருந்த அலுவலர் ஒருவரிடம் அந்த மாதத்திற்கான சம்பளத்தை வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.
சற்று நேரத்தில் அவள் ஒரு பேயிங் கெஸ்ட் ஹௌசிலுள்ள அறையில் தன் படுக்கையில் அமர்ந்திருந்தாள். அந்த கூச்சி பேகைப் பிரித்தாள். பேஜ் நிறத்தில் ஒரு ஹேண்ட் பேக். அத்தோடிருந்த எக்லேர்ஸஸ் டப்பாவைத் திறந்து ஒன்றை வாயில் போட்டுக்கொண்டு கண்களை மூடி ‘ஹ்ம்ம்ம்ம்’ என்று முகம் மலர்ந்தாள். அன்று மாலை வகுப்பில் பேராசிரியர், “இன் ஹியூமன் லைஃப், எக்கனாமிக்ஸ் ப்ரெசீட்ஸ் பாலிட்டிக்ஸ் ஆர் கல்ச்சர்” என்று சொன்னதை ஒருமுறை சொல்லிச் சிரித்துக்கொண்டாள்.
‘எலைட் சிங்கில்’ என்ற அவள் அலைபேசி ஆப்பிலிருந்து குறுஞ்செய்தி ஒன்று ஒளிர்ந்தது. ‘சுகர் டேடி சாம்’ என்று பெயரிடப்பட்டிருந்த ஒரு பக்கத்துக்குள் நுழைந்தாள்.
“ஹௌ டிட் யூ லைக் த கிஃப்ட்” என்ற செய்திக்கு” லவ்ட் இட்” என்று பதில் அனுப்பினாள். ஒரு பொம்மைப்படம் முத்தம் கொடுப்பதைப்போல வாயைக் குவித்துக்கொண்டு அவள் அலைபேசித் திரையில் குதித்து அடங்கியது.
ஒரு பெண் அழுது கொண்டே உள்ளே நுழைந்தாள்.
”என்ன ஆச்சு லீனா?” என்றாள்.
“தட் ஓல்ட் பாஸ்ட்டர்ட். ஹீ வாஸ் டிஸ்கஸ்டிங். நான் ஹூக்கர் இல்ல. ஹீ மேட் மீ ஃபீல் எம்ப்ட்டி.” என்றாள் லீனா அழுதுகொண்டே.
“சரி அழாத” என்றாள் இவள்.
“லெட் மீ க்ரை. வெளிய தான் எப்போதுமே சிரிச்சுகிட்டு பொம்ம மாதிரியே நிக்கிறோமே. இங்கயாவது அழுதுக்கறேன். மேக்கப் கலைஞ்சுடுமோன்னு கவலபட வேணாம் பாரு” என்றாள் லீனா.
“ப்லாக் ஹிம்” என்றாள் இவள் தன் புது கை கடிகாரத்தைக் கழட்டிக்கொண்டே.
“வாவ் இட் லுக்ஸ் ஸ்டன்னிங், ஹௌ வாஸ் ஹீ” என்றாள் லீனா கண்ணீரைத் துடைத்துக்கொண்டே.
“ஸிவீட் அன்ட் ஜென்ட்டில். அவரோட வீட்ட நீ பாக்கனும்ம்ம்” என்று எக்லேர்ஸ் டப்பாவை அவளிடம் நீட்டினாள்.
“யூ ஹேட் செக்ஸ் இன் த ஃபர்ஸ்ட் மீட்!!” என்று தன் படுக்கையில் படுத்தாள் லீனா
“ஃபைனலி ஐ காட் டூ நோ வாட் ஆர்கேசம் இஸ்”என்றாள் இவள்.
“அன்ட் எ ரோலக்ஸ்” என்று அவள் கொடுத்த கடிகாரத்தைக் கையில் கட்டிக்கொண்டு கண்ணைச் சிமிட்டினாள் லீனா.
“ஃப்ஃபூ, கிஃப்ட்ஸ் ஆர் நாட் எக்சைட்டிங் மீ எனிமோர் லீனா”
“மூனு வருஷமா சுகர் பேபியா இருக்கேன் எனக்கு இப்பவும் கிஃப்ட்ஸ் எக்சைட்டிங்தாம்பா” என்றாள் லீனா.
இருவரும் ஒரே பௌட்டிங் போசில் வெவ்வேறு உருவங்களாக செல்ஃபீ சட்டகத்துக்குள் உறைந்தார்கள்.
அடுத்த நாள் அவள் வகுப்பறையில் கடைசி இருக்கையில் அமர்ந்து அவசர அவசரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தாள். பின் அங்கே கூடி சிரித்துப் பேசிக்கொண்டிருந்த மாணவர்களிடம் சென்று ஒரு குறிப்பு நோட்டை கொடுக்குமாறு கேட்டாள். அங்கிருந்த யாரும் அவளைச் சட்டை செய்யாமல் பேசிக்கொண்டிருந்தனர். அவள் வெருட்டெனத் திரும்பி நடந்தாள். “சுகர் கேண்டி ஸ்பைசி கேண்டியா போகுதுன்னு” சிரிப்புக்கு நடுவுல ஒரு குரல். அந்த ஸப்ரிங் தலைமுடி பெண். அவள் திரும்பி பார்த்து விட்டு இருக்கையில் அமர்ந்து தன் அலைபேசியில் ஆழ்ந்தாள், பேராசிரியர் வந்ததும் வகுப்பில்.
அன்று இரவு அவளும் அவனும் ஒரு ஸ்டேன்டப் காமிடி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார்கள். அவள் அடர் ஊதா வண்ண ப்லே சூட்டில் லாவண்டர் மலர் காற்றிலசைவதைப் போல சிரித்துக்கொண்டிருந்தாள். அவளையும், காமெடியையும், குறும்புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவன் கண்ணத்துக் குழியில் ரசனையின் பூக்கள் மலர்ந்தன. பெண்களின் ஃபேக் ஆர்கேசம் குறித்து அந்த காமெடியன் ஏதோ வினோத ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்வையால் விழுங்கினர், பின் இதழ்களால்.
“யூ ஆர் மெஸ்மரைசிங் டால்” என்றான் அவன்.
அவள் பின்க் லிப்ஸ்டிக் அவன் இதழ்களில் சிரித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.
அவன் அறையில் மின்விளக்கு ரொம்ப நேரமாக எரிந்து அணைந்து எரிந்து அணைந்து எரிந்து அணைந்து அடங்கிக்கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அவள் கையில், ‘சாரா’ உடைப் பைகளுடன் கிளம்பினாள். அவன் வீட்டிலிருந்து கார் இரவின் அமைதியைச் சிராய்த்துப் பாய்ந்தது.
அவள் அறையில் மேக்கப்பை களைந்து கொண்டிருந்தாள். லீனா கையில் ஒரு ஆப்பிள் அலைபேசியை ஆட்டிக்கொண்டே வந்து அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.
“அந்த ஃபீல் லைக் ப்ரின்சஸ் மொமன்ட் இருக்கே” என்று சொல்லிக்கொண்டே லீனா கட்டிலின் மீது சரிந்தாள்.
“யாரு?” என்றாள் இவள்.
“பேரு ஜோசப். டிவோர்ஸ்ட். டில்லிலருந்து வந்துருக்காரு. ஆறு மாசம் இங்க பிசினஸ். ஒன்லி செக்ஸ், நோ எமோஷனல் ட்ராமா, அன்ட் என்னோட காலெஜ் செமஸ்ட்டர் ஃபீஸ் இஸ் டேக்கன் கேர்” என்று பெருமூச்சு விட்டாள் லீனா.
இப்படியே ஐந்து மாதங்கள் கழிந்தன. அவர்களின் அறை முழுவதும் பிரான்டட் உடைகளும், செருப்புகளும், ஹேண்ட் பேகுகளும், இன்னும் அத்தனை டம்பப்பொருட்களும் சீண்டுவாரின்றிக் குவிந்து கிடந்தன. இருவரும் சென்னையிலிருக்கும் அத்தனை ஐந்து நட்சத்திர ஹோட்டல் அனுபவங்களைப் பற்றியும், ஆண்களின் மிடுக்குத்தனங்களைப் பற்றியும் அவர்கள் உளவியல் பற்றியும் பேசித்தீர்த்தனர். அன்று இரவு அவள் ஒரு சூட்கேசில் தன் பொருட்களை வரிந்துகட்டிக்கொண்டிருந்தாள்.
“எங்க போற?” என்றாள் லீனா
“அடுத்த வாரம் என்ன அவரு வீட்ல தங்க சொல்லிருக்காரு” என்றாள்.
“வாவ் யூ காட்டு கெட் எ ராயல் ட்ரீட்மென்ட், ட்ரஸ்ட் மீ” என்றாள் லீனா.
இருவரும் கண்சிமிட்டி சிரித்துக்கொண்டனர்.
அவள் அவன் வீட்டிலிருந்தாள். இருவரும் சோஃபாவில் அமர்ந்து வீட்டுத் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவள் அவன் பின்னங்கழுத்தை வருடிவிட்டுக்கொண்டிருந்தாள். அவன் கண்கள் சிவந்தன. அவன் அவள் மீது சரிந்தான். அவளை இறுக்கி அணைத்து தன் மடி மீது புரட்டிப் போட்டுக்கொண்டான். அவன் அலைபேசியில் அழைப்பு வந்தது. “இரு வரேன்” என்று சட்டென அவளை விலக்கிவிட்டு எழுந்தான்.
“டால் டூ யூ லைக் டு ஹேவ் மசாஜ்?” என்றான்.
“ஓகே” என்றாள்.
அவன் அலைபேசியில் மூழ்கினான். “டன். நான் ஒரு ரெண்டு மணி நேரம் வெளிய போய்ட்டு வரேன். இன்னும் பத்து நிமிஷத்துல மசாஜ் பண்ண ஆள் வருவாங்க. ச்சில்லாக்ஸ்” என்று கிளம்பினான்.
அவள் அவனை அணைத்து முத்தமிட்டாள்.
சற்று நேரத்தில் வந்த பெண் அவளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள். அவன் வீட்டில் மசாஜ் செய்து கொள்வதற்கென்றே ஒரு அறை இருப்பது அப்பொழுதுதான் அவளுக்குத் தெரிந்தது. லாவண்டரும், லில்லியும் கலந்த ஒரு வாசம் அந்த அறையில். இமைகளைக் கட்டி இழுக்கும் வீணை தந்திகளின் இசை. அவள் உடல் தளர்ந்தது. ஒரு மணி நேரம் முடிந்தது என்று அந்தப் பெண் சொன்னபோதுதான் அவள் இவ்வுலகத்திற்கு மீண்டும் வந்தாள். குளித்து முடித்து மேக்கப் போட்டுக்கொண்டாள். குளிர்சாதனப்பெட்டியிலிருந்து சாக்கலேட் ஒன்றை வாயில் போட்டுக்கொள்ளும்போது அவன் அவளைப் பின்னாலிருந்து கட்டிக்கொண்டான்.
“நாம சேந்து டின்னர் பண்ணலாமா?” என்றான்.
அவள் “யப்” என்று துள்ளினாள்.
“பீட்சா?” என்றாள் அவள்.
“பிரியாணி?” என்றான் அவன்.
அவள் கன்னத்தைக் கிள்ளினான். அவன் பேசிக்கொண்டேயிருக்க இருவரும் சமைக்கத் துவங்கினர். அவன் பரிணாமம் பற்றியும் அதிலிருக்கும் விடுபட்ட இணைப்புகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தான்.
“150,000 ஆண்டுகள்ல, மாடர்ன் ஹோமோசேப்பியன்ஸ் எவால்வ் ஆயிருக்கோம்னு நெனைக்கிறீங்களா?”
“நிச்சயமா. எதுனால இப்ப இவ்ளோ கேயாஸ் இருக்குன்னு நெனைக்கிற? இன்னிக்கு ஒரு குறிப்பிட்ட துறையில இருக்குற அறிவு, டேட்டாங்கறது எல்லாருக்கும் கை நுணி விரல்ல தெரிஞ்சுக்க முடியுது. அதுனால இன்டர்டிப்பென்டன்சிங்கறது கொறஞ்சு போச்சு. ஆளாளுக்கு ஒப்பீனியன்ஸ், ஆளாளாக்கு ஒரு சின்ன கூட்டம். அந்த கூட்டம் குறுகிக் குறுகி இன்னும் கொஞ்ச வருஷத்துல தனிமனித சுவர்கள் எழுப்பப்பட்டுடும். ஒரு உயிர், அதுக்கான உலகம்னு. அதுவே ஒரு புது ஸ்பீசியசா மாறுறதுக்கும் வாய்ப்பு இருக்கு. அதுக்கான ட்ரான்சிஷன் ஜெனரேஷன்லதான் நாம இருக்கோம்னு நெனைக்கிறேன். அதான் கோப்பப் பண்ண முடியாம தவிக்கிறோம், எரிச்சலாறோம்” என்று சொல்லிக்கொண்டே அவளை அணைத்துக்கொண்டான்.
சமையலுக்கு இடையிடையே இருவரும் அணைத்து முத்தமிட்டுக்கொண்டனர். சற்று நேரத்தில் பிரியாணியும் சிக்கனும் கமகமத்தன. இருவரும் சாப்பிடத் தொடங்கினர்.
“ஹேய் டால், நீ என்ன படிக்கிற?” என்றான்.
“மாஸ்டர்ஸ் இன் மைக்ரோ எக்கனாமிக்ஸ்” என்றாள்.
”எக்கனாமிக்ஸ் ஒரு கல்ச்சர ஷேப் பண்ணுதுன்னு நெனக்கிறியா இல்ல வைஸ் வேர்சாவா?” என்றான்.
“ம்ம்…. ரெண்டும்தான். ஆனா மொதல்ல சொன்னதுதான் அதிகம். வேலன்டைன்ஸ் டேல இருந்து, மதர்ஸ் டே வரைக்கும் எல்லாமே மொதல் ஆப்ஷனதான சப்போர்ட் பண்ணுது…?”
அவள் அந்த மேஜையில் இருந்த ஸடார்பக்ஸ் கோப்பை ஒன்றைக் கையில் எடுத்து, மோனோபாலிஸ்ட்டிக் காம்படீஷன் கூட அப்டிதான? சுடச்சுட யோசிச்சு அத கூலா ஹேன்டில் பண்ணா சக்சஸ்தான். அப்படித்தான Frappuccino effect பாசிபில் ஆச்சு. இன்னிக்கு ஸடார்பக்ஸ் ஒரு மினி பேங்க் இல்லயா? அதுக்கு 0 % இன்ட்ரெஸ்ட்க்கு, 1.5 பில்லியன் டாலர் கஸ்டமர்ஸ் குடுக்கறாங்க ப்ரேக்கேஜ் இன்கம்மா அவங்களுக்கு தெரியாமலேயே.
“ஹ்ம்ம்ம். ரைட் , யூ எஸ்ல இருக்கிற சின்ன சின்ன பேங்க்ல கூட 1 பில்லியனுக்கு கீழதான் அசெட் இருக்கு” என்றான்.
“ஆமா அவங்களோட இன்டீரீயர் டிசைன், ஃபிசிக்கல் லொக்கேஷன் எல்லாமே ஒரு கல்ச்சரல் சேன்ஜ்-அ கொண்டு வந்துருக்குன்னுதான் நெனைக்கிறேன்” என்றாள்.
“ப்ரில்லியன்ட் டால்” என்றான்.
சாப்பிட்டு முடித்து இருவரும் சேர்ந்து ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் அங்குமிங்கும் திரும்பிக் கொண்டிருந்தாள்.
“புடிக்கலயா?” என்றான்.
அவள் மெலிதாகப் புன்னகைத்தாள்.
அவன் அவளை தன் இரு கைகளிலும் ஒரு முயல் குட்டியைத் தூக்குவதைப் போல அள்ளிக்கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தான். அவர்கள் நுழையும்போது பளிச்சென்று வெள்ளை வெளிச்சம். அவள் கண்களைக் குறுக்கிக்கொண்டாள். மஸ்காராவின் விரைப்பில் அவள் இமைகள் ஒரு வில்லிலிருந்து பாயத் துடிக்கும் கூரம்புகள் போலக் குறிபார்த்தன. அவன் அவளைக் கீழே இறக்கிவிட்டதும் அவள் கண்கள் அகலத் திறந்து அவை மேல் நோக்கிப் பாய்ந்தன. அவள் வாயைத் திறந்து கொண்டு 360 டிகிரி சுற்றினாள், சாவி கொடுத்த ஜப்பான் பொம்மையைப் போல. அவள் குட்டைப் பாவாடை குடை போல விரிந்தது. அந்த அறையின் நான்கு புறமும் புத்தகப் படிகள். அறையின் கூரையைத் தொடும் உயரம் வரை.
“உனக்கு புக்ஸ் வாசிக்கப் புடிக்குமா?” என்றான்.
“ரொம்ப ரொம்ப” என்று ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தாள்.
“ஓகே ஹேவ் ஃபன். நான் படம் பாத்து முடிச்சுட்டு வரேன்” என்று அவளை முத்தமிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
கிட்டார், பேட்மிட்டன், படங்கள், புத்தகங்கள், ஷாப்பிங், செக்ஸ் என்று மூன்று நான்கு நாட்கள் வேகமாய் நகர்ந்தன. அன்று அவர்கள் அவன் வீட்டின் மொட்டை மாடியில் நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். நிலவு அவள் உடல் நிறத்தை அள்ளிப் பூசிக்கொண்டு மிளிர்ந்தது. இருவரும் நீச்சல் குளத்தின் திண்டில் சாய்ந்துகொண்டு மூச்சு வாங்கினர். அவன் அவள் காதில் ஏதோ கிசுகிசுத்தான். அவள் புன்முறுவல் உதிர்த்தாள். அவன் அவளை அள்ளிக்கொண்டு போய் அங்கிருந்த ஒரு சிறிய படுக்கையில் பரப்பினான். அவள் மீது சரிந்தான். அவள் இதழ்கள் யாரோ வலுக்கட்டாயமாகப் பிடித்து விரித்தது போல விரிந்தது. அவள் கண்களில் அதன் வலி மிளிர்ந்தது. அவன் வெருட்டென எழுந்தான். சட்டைக்குள் நுழைந்தான். அவளும் உடை மாற்றிக்கொண்டாள். இருவரும் அமர்ந்தனர். அவன் அவளைத் தோள்களில் சாய்த்துக் கொண்டு “ஆர் யூ ஓகே டால்?” என்றான். அவன் உரம் பாய்ந்த தோளில் ஈரம் பூத்தது. அவன் ஏதும் பேசாமல் தன் தோளைப் பூங்காவனமாக்கிக் கொண்டான். சற்று நேரத்தில் அவள் உறங்கிவிட்டாள். அவன் அவளை வீட்டிற்குள் தூக்கிக்கொண்டு போய் அவன் அறையின் படுக்கையில் கிடத்தினான்.
அடுத்த நாள் காலை அவள் அவசர அவசரமாய் குளித்து மேக்கப் போட்டுக்கொண்டு அவனைத் தேடிக்கொண்டிருந்தாள். அவன் மூன்றடுக்கு வீட்டின் ஒவ்வொரு அறைகளுக்குள்ளும் வெளிச்சம் பரவி ஒடுங்கிக் கொண்டிருந்தது. அவள் ஜிம்மிற்குள் நுழைந்தாள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அவன் தசைகளில் அதிர்ந்து கொண்டிருந்தது. அவளைப் பார்த்ததும் அவன் பாட்டை நிறுத்தினான். “மார்னிங் டால்” என்று புன்னகைத்தான். அவள், ”சாரி” என்று எச்சிலை விழுங்கினாள். “யூ டோன்ட் ஹேவ் டூ பி” என்று அவன் நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டான்.
“இன்னிக்கி ஷாப்பிங் போலாமா? இட்ஸ் யுஅர் டே. என்ன வேணுமோ வாங்கிக்கோ” என்றான்.
அவள் புன்னகைத்தாள்.
“ஐ லைக் தட் லிப்ஸ்டிக் ஷேட்”என்றான்.
கையில் இருபது முப்பது பைகளுடன் அவள் அறைக்குள் நுழைந்தாள். லீனா ஓடி வந்து அவளைக் கட்டிக்கொண்டு, “யூ லுக் லைக் எ ரியல் ப்ரின்சஸ் நௌ” என்றாள்.
பைகளை ஒரு ஓரமாக வைத்துக்கொண்டே மேஜை மீதிருந்த புத்தக அடுக்கைப் பார்த்து பெருமூச்சு விட்டாள் அவள்.
“பிரிக்கவா?” என்று குதித்துத் தாவினாள் லீனா.
“மூனு வாரத்துக்கு நோ”.
“ஏன்டி?” என்றாள் லீனா.
“எக்சாம்ஸ்”
“போச்சுடா இனிமே மூனு வாரத்துக்கு நீ பேசவே மாட்டியே, நான் என்னோட பாய் ஃபிரண்டு வீட்ல தங்கிக்கறேன்” என்று பெட்டியை பேக் செய்தாள் லீனா.
மூன்று வாரம் அவள் இரவுகள் உறக்கமின்றி அயர்ந்து கொண்டிருந்தன. கடைசி தேர்வுக்காக அவள் கிளம்பிக்கொண்டிருந்தபோது லீனா பெட்டியுடன் சிடுசிடுன்னு உள்ளே நுழைந்தாள்.
“ரெண்டு வாரம் ஒருத்தனோட ஒரே வீட்ல இருக்கும்போதுதான் அவன் போடற குப்பையோட தரம் தெரியுது” என்று கூறிக்கொண்டே குளியலறைக்குள் நுழைந்தாள்.
இவள் மேஜை மீது இருந்த, அவன் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த ”Between the world and Me” என்ற புத்தகத்தை தன் இடது கட்டை விரலால் கீழிருந்து மேலாக வெருட்டென உராய்ந்து விட்டாள். ஒரு கணம், சிறகை விரிக்கத் துடிக்கும் பட்டாம்பூச்சியெனப் படபடத்து அடங்கின அதனுள் பொதிந்து கிடந்த சிந்தனைகளும், சொற்களும். இவள் வெளியே சென்றாள்.
வகுப்பில் பேராசிரியர், “அசைன்மன்ட்ல 70% ப்லேஜியரிசம், ரீரைட் இட்” என்று அந்த ஸ்ப்ரிங் முடி பெண்ணைத் திட்டிக்கொண்டிருந்தார்.
இவள் நான்கு நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைத்துச் சிரித்துக்கொண்டாள். ஒரு மாணவன் அவளுக்காக அந்த அசைன்மன்ட்டை எழுதிக்கொண்டு வந்திருந்தான். அந்த ஸ்ப்ரிங் முடி பெண் அவனுக்கு முத்தம் கொடுத்து அதை வாங்கிக்கொண்டாள்.
இவள் வெளியே போகும்போது அந்தப் பெண் ஓடி வந்து “ஏய் எனக்கு அசைன்மன்ட்ல ஹெல்ப் பண்றியா கொஞ்சம்?” என்றாள்.
“உன்னோட ப்ரெயினுக்கு கொஞ்சம் சுகர் கேண்டி தேவப்படுதுன்னு நெனைக்கிறேன்” என்று அவளைப் பார்த்து நக்கலாய் சிரித்துவிட்டு நகர்ந்தாள் இவள்.
“பிட்ச்” என்று அந்த ஸ்ப்ரிங் முடிப் பெண் இவளை முறைத்தாள்.
இவள் நடு விரலைத் தூக்கிக் காண்பித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
தேர்வு முடிந்து அன்று மாலை கட்டிலில் வந்து விழுந்தவள்தான் அடுத்த நாள் அதி காலையில் அவள் அலைபேசி அழைப்பில்தான் மீண்டும் கண் விழித்தாள்.
“ப்ரீத்தா, நான் கீழ வெயிட் பண்றேன் பீச் போலாம் வரியா?” என்ற பட்டுத்துணியில் மயிலிறகு உரசும் அவன் குரல் அவள் செவி உராய்ந்து அவளது பெண் நாளங்களை ஊடுருவி அவளைப் புணர்ந்து கொண்டிருந்தது.
“அஞ்சு நிமிஷம், ப்ரஷ் பண்ணிட்டு வரேன்” என்று குளியலறைக்குள் விரைந்தாள். அவனின் குரல் அவளை அப்பொழுதும் தழுவிக்கொண்டுதான் இருந்தது.
அவன் கார் உள்ளிருந்து அதிகாலைச் சூரியனைப் பார்த்துக்கொண்டிருந்தான். கருங்குடுவைக்குள்ளிருந்து திணறி வழிந்துகொண்டிருந்தது சிவப்பு சாயம். அடுத்த இரண்டு நிமிடத்தில் ப்ரீத்தா அள்ளி முடிந்த கொண்டையுடன் காருக்குள் நுழைந்தாள். அவள் இடுங்கிய கண்களிலும் அதே சிவப்பு சாயம். அவள் இமைகள் இன்னுமும் தூக்கத்தைத் தாங்கி சோம்பல் முறித்துக்கொண்டிருந்தன.
“எக்சாம்ஸ் எப்படிப் பண்ண ப்ரீத்தா?”
அவள் பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஹலோ…… “என்று அவள் பக்கம் தலையைச் சாய்த்துச் சிரித்தான்.
அவன் நெருக்கமான வெண்பற்கள் அவளை இறுக்கமாகக் கட்டி இழுத்தன.
“ப்ரீத்தாஆ…” என்று சாலையைப் பார்த்துக்கொண்டே குரலை உயர்த்தினான்.
“ஹ்ம்ம் சூப்பரா போச்சு”
‘உள்ளத்தை மறைத்தேன் உயிர் வலி பொறுத்தேன் என் சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்’ என்று யேசுதாஸ் குரல் கடற்கரை மணலைப் போல மனதை உள்ளே பொதிய விட்டுக்கொண்டிருந்தது. சற்று நேரத்தில் இருவரும் காரிலிருந்து இறங்கி மணலில் பொதிந்தனர். அவள் அவன் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“ப்ரீத்தா, சாரி எக்சாம்ஸ் முடிஞ்சு ஒருநாள் கூட உன்ன ரெஸ்ட் எடுக்க விடாம காலையிலே டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்று கடல் அலையை வாரிக்கொண்டு அவன் குரல் அவள் செவிக்குழாய்க்குள் பாய்ந்து எழும்பியது.
அவள் அவன் கண்களை நேருக்கு நேராய் ஊடுருவினாள். அவள் கண்மை இல்லாத வெற்றுக் கண்கள் அவன் மனதில் எதையோ கிறுக்கத் துடித்தன. அவன் காற்றில் கலைந்து பறக்கும் அவள் முடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டே புருவங்களை உயர்த்தினான்.
“ச்சச்ச டிஸ்டர்ப் லாம் இல்ல. எனக்குமே உங்கள பாக்கனும் போலத்தான் இருந்தது” என்று மெல்லிய கீற்றை முகத்தில் மிளிர விட்டாள்.
“இந்த வாரம் ஃபுல்லாவே நெறைய பிஸினஸ் மீட்டிங்ஸ். பயங்கர ஸ்ட்ரெஸ். அதில்லாம ஏதோ மனசு வேற சரியில்லை. யார்ட்டயாவது ரிலாக்ஸா பேசனும் போலவே இருந்தது” என்றான்.
சிதறிய கடல் நுரைத் துளிகள் அவன் வெள்ளை முடியில் முத்துச் சரம் கோர்த்துக்கொண்டிருந்தன. காலை தன்னை இயல்பாய் வடித்துக் கொண்டிருந்தது அந்தக் கடற்கரையில். இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.
அந்தக் கடலலைகளுக்கு நடுவில் பெண் குழந்தை ஒன்று அதன் அப்பாவின் தோளில் அமர்ந்து வானில் உருண்டு திரண்டு கொண்டிருந்த சிகப்புப் பந்தைப் பிடிக்கக் கைகளை உயர்த்திக் கொண்டிருந்தது. அவன் அதையே சற்று நேரம் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தான். ப்ரீத்தா அவன் வலது தோளில் சாய்ந்து கொண்டாள். சுள்ளென்று சுட்ட சூரியனை அவன் கழுத்தில் தடவிப் பார்த்துக்கொண்டான். சூடு அதிகமாகத்தான் இருந்தது. அவன் எச்சிலை விழுங்கிக்கொண்டு, “போலாமா?” என்றான். இருவரும் மண்ணை உதறிக்கொண்டு எழுந்தனர்.
கதவு திறக்கும் சப்தம் கேட்டு லீனா கண் விழித்தாள். ப்ரீத்தா அவள் படுக்கையில் போய் அமர்ந்து கொண்டாள். லீனா அவள் மடியில் படுத்துக்கொண்டே “காலையிலேயே எங்க போய்ட்டு வர?” என்றாள்.
“வினோத்தோட பீச் போயிருந்தேன்”
“வினோத்!” என்று வினோதமாகப் பார்த்தாள்.
“லீனா ஜ தின்க் ஐ வான்ட் டூ மேரி ஹிம்”
லீனா வாயைப் பிளந்துகொண்டு அவள் மடியிலிருந்து எழுந்தாள்.
ப்ரீத்தா அவள் உதடுகளைத் தன் விரல்களால் மூடிவிட்டுக்கொண்டே “மூடு” என்றாள்.
சிரிப்பு.
“நீ இதுக்கு முன்னாடி இருந்த சுகர் டாடிட்டதான் இப்படிச் சொல்லப் போறியோன்னு தோனிச்சு எனக்கு” என்றாள் லீனா.
“நோ… அவரு எங்கூட ஒரு எமோஷனல் சப்போர்ட்டுக்குதான் இருந்தாரு. வீ டிட் நாட் ஹேட் செக்ஸ். என்னால எமோஷனலா அவரோட நிறைய கனக்ட் பண்ண முடிஞ்சுது. ஆனா ரொமேன்டிக்கா இல்ல. அவரு பேசுவாரு நான் கேப்பேன். அவ்வளவுதான்” என்று ப்ரீத்தா முடிப்பதற்குள், “ஹஹஹா இந்த ரிலேஷன்ஷிப்ல பெரும்பாலும் அப்டித்தான? வீ ஆர் டூ லிசன் அன்ட் ப்லீஸ் தெம்” என்றாள் லீனா.
“ஆமா. ஆனா வினோத் பேசிட்டு எப்பவும் என்னோட மூஞ்சியப் பாப்பாரு. என்னோட ரிப்ளைக்கு வெயிட் பண்ணுவாரு. நான்தான் பேசமாட்டேன்”
“ஹ்ம்… ஹௌ ஓல்ட் இஸ் ஹீ?”
57.
“உனக்கு கொழந்தைங்கலாம் இன்ட்ரஸ்ட் இல்லையா?” என்று அவளருகிலிருந்த டெடிபேரைக் கையில் எடுத்துத் தடவிக்கொண்டே கேட்டாள் லீனா.
“ஐ திங்க் ஹீ கேன் பீ எ குட் டாட்”
அறை முழுவதும் சிரிப்பொலி பரவியது.
“ஐ மீன் எங்களோட கொழந்தைக்கு” என்றாள் ப்ரீத்தா.
“அவர்ட்ட இதப் பத்தி பேசினியா?”
“இன்னும் இல்ல. இனிமே என்னால நம்ம வயசுல இருக்கற ஒருத்தன டேட் பண்ண முடியும்னு தோனல லீனா. இந்த மெச்சூரிட்டி, எமோஷனல் ஸ்டெபிலிட்டி, ஃபினான்ஷியல் ஸ்டெபிலிட்டி எனக்கு ஒரு கம்ஃபர்ட் ஸோன குடுத்துடுச்சு. எனக்கு இதுவே இப்ப பழக்கப்பட்டுடுச்சுன்னு நெனைக்கிறேன்” என்று பெருமூச்சு விட்டாள் ப்ரீத்தா.
“எனக்கு அப்டி இல்ல ப்ரீத்தா. எனக்கு கிரேசினஸ் வேணும். எல்லாமே இப்படித்தான்னு ஒரு தீர்மானத்தோட வாழ எனக்குப் பிடிக்காது. வாழ்க்கைல இருக்கிற அபத்தங்கள சேந்து ட்ரை பண்ணி ஒருத்தருக்கொருத்தர் பிலேம் பண்ணி, ஒவ்வொண்ணா கத்துக்கணும். ஐ வான்ட் டூ கோ அ ரோலர் கோஸ்டர் ரைட்“ என்று ப்ரீத்தா மடியில் மீண்டும் படுத்துக்கொண்டு டெட்டி பேரை அணைத்துக்கொண்டாள் லீனா.
இரண்டு நாட்கள் கழித்து ப்ரீத்தா வினோத் கட்டிலில் அவன் மேல் படுத்துக்கொண்டிருந்தாள். “டால், ஒன்னோட பேரன்ட்ஸ் எங்க இருக்காங்க?“ என்று அவள் கூந்தலைச் சுழற்றிக்கொண்டே கேட்டான் அவன்.
“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அம்மா இறந்துட்டாங்க ஒரு ஆக்சிடென்ட்ல. அப்பா வேற கல்யாணம் பண்ணிட்டு யூ எஸ்ல செட்டில் ஆயிட்டாரு” என்றாள்.
அவன் அலைபேசியில் அழைப்பு வந்தது. ”நான் கெளம்பணும் ப்ரீத்தா” என்று ஒரு பரிசு டப்பாவை அவளிடம் நீட்டினான். அவள் ஆடையை அணிந்துகொண்டு அந்த டப்பாவை அங்கேயே வைத்து விட்டுக் கிளம்பினாள். அவன், “எடுத்துக்கோ” என்று அவளைப் பார்க்காமலேயே கூறினான். அவள், “வேணாம்” என்று சொல்லிவிட்டு வீட்டு வெளியே போய் நின்றாள். அவர்கள் காரில் விரைந்தனர்.
ஒரு வாரம் வினோத்திடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. ப்ரீத்தா தினமும் தன் அலைபேசியைப் பார்த்துத் தவித்து ஏமாந்து கொண்டிருந்தாள். அன்று பொறுக்க முடியாமல் அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள். வெகு நேரம் கழித்து அவனிடமிருந்து, ‘இன்னைக்கு மீட் பண்னலாம்’ என்று பதில் வந்தது. அவள் அவசரமாகக் கிளம்பினாள்.
“எங்க போற?” என்றாள் லீனா.
“ஐப்ரோஸ்” என்றாள்.
லீனா புருவத்தை உயர்த்திப் பார்த்தாள்.
“இன்னி்க்கு நைட் வினோத்தோட டின்னர்க்கு போறேன். அன்ட் நான் அன்னிக்கு உங்கிட்ட சொன்னதப் பத்தி அவர்ட்ட பேசப்போறேன்”
டெட்டிபேருடன் செல்ஃபீ எடுத்துக்கொண்டே, “குட்லக்” என்றாள் லீனா.
ப்ரீத்தா வினோத் வீட்டில் அமர்ந்திருந்தாள். அவன் சமையலறையிலிருந்து ஒரு தட்டுடன் வந்தான். “இன்னிக்கு என்னோட சமையல சாப்ட்டுட்டு நீ என்ன விடப்போறதில்ல பாரு ப்ரீத்தா” என்று எல்லாவற்றையும் மேஜையில் வைத்துவிட்டு, கைகளை விரித்துப் புன்னகைத்தான். அவள் மேஜை அருகே வந்தாள்.
“இன்னைக்கு மேக்கப் இல்லாம உன்ன பாக்கறது நெறைஞ்ச அமாவாசையில வானத்த பாக்கறமாதிரி இருக்கு ப்ரீத்தா. ஆழமா ஆர்ப்பாட்டமில்லாம அன்யோன்யமா” என்று அவள் கண்களின் கருவிழிகளைத் துழாவினான்.
“கேன் ஐ ஹக் யூ?” என்று தன் வெள்ளைக் கோரை முடிகளைக் கோதி விட்டுக்கொண்டான்.
அவன் குரல் அவள் மீது வருடியது. ப்ரீத்தா அவனை இறுகத் தழுவிக் கொண்டாள். மேஜையில் வைக்கப்பட்டிருந்த பாஸ்டாவிலிருந்து பறந்த ஆவி பக்கத்திலிருந்த கண்ணாடி டம்ப்ளரில் படர்ந்து பரவிக்கொண்டிருந்தது. இருவரும் அமர்ந்தனர்.
“மேரேஜ் பத்தி என்ன நெனைக்கீறீங்க வினோத்?” என்றாள்.
“ஹாஹாஹா… சீ ஐ டோல்ட் யூ, இன்னைக்கு நீ ஆழமா ஆர்ப்பாட்டமில்லாம இருக்கன்னு” என்று வைனை ஒரு மடக்கு குடித்தான்.
“வில் யூ மேரி மீ” என்று அவனைப் பார்த்தாள்.
நீண்ட அமைதி.
அவன் அவள் விழியிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டான்.
இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
“ஹௌ டிட் யூ கெட் திஸ் ஐடியா ப்ரீத்தா?” என்று தன் இரு கை விரல்களையும் கோர்த்துக்கொண்டான்.
“மைக்ரோ எக்கனாமிக்ஸ் எக்சாம் எழுதும்போது” என்றாள்.
‘ஹாஹாஹா’ என்ற அவன் புன்னகை அவள் கருவிழிகளைக் கடிகாரப் பெண்டுலமாய் ஆட சாவி கொடுத்தது.
“மேரேஜ் ஒரு பெரிய கமிட்மென்ட் ப்ரீத்தா. அதுக்கு நான் எப்போதுமே ரெடியா இல்ல” என்று எழுந்தான்.
“ஹௌ அபௌட் லிவ்விங் டூகெதர்?” என்று அவன் முன் போய் நின்றாள்.
அவன் அவள் பார்வையை தவிர்த்து முன் நடந்தான்.
“வினோத், நீங்க என்னோட எக்சாம் அப்போ, அந்த மூனு வாரம் என்ன மிஸ் பண்லன்னு சொல்லுங்க பாக்கலாம்?” என்று மீண்டும் அவன் விழிகளில் பாய்ந்தாள்.
அவன் சோஃபாவில் அமர்ந்தான். அவள் அவன் அருகிலமர்ந்து அவன் இரு கரங்களையும் தன் உள்ளங்கையில் புதைத்துக்கொண்டாள்.
“ப்ரீத்தா உனக்கு எங்கருந்து இந்த ஐடியா வந்துது?” என்று அவளை ஒரு அவசரப் பார்வையில் கடந்தான்.
“உங்களுக்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்கற என்கிட்டருந்து வந்தது” என்று அவன் விழிகளுக்குள் நிதானமாய் திடமாய் விழுந்து படர்ந்தாள்.
“ஹோ… ப்ரீத்தா இந்த ச்சீஸி டையலாக் எல்லாம் நீ பேசமாட்டியே என்ன ஆச்சு உனக்கு?”
“நீங்க கூடதான் இன்னிக்கு என்ன ஹக் பண்ணிக்கவான்னு பெர்மிஷன் கேட்டுட்டு ஹக் பண்ணீங்க. உங்களுக்கு என்ன ஆச்சுன்னு நான் கேக்க மாட்டேன். எனக்கு நடிக்கத் தெரியாது” என்று புன்னகைத்தாள் ப்ரீத்தா.
அவன் அவள் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தண்ணீர் குடித்தான்.
“சீ ப்ரீத்தா, உன்னோட ஏஜ்ல இருக்கற ஒரு பொண்ணுக்கு, என்ன மாதிரி ஒரு மெச்சூர்ட் மைன்ட் அட்ரேக்ட்டீவாதான் இருக்கும். அது நார்மல். அதுவும் இல்லாம நம்ம செக்ஸ்லயும் இன்வால்வ் ஆனதால அந்த அட்ரேக்ஷன் இன்னும் ஜாஸ்தியா இருக்கும். இது ஒரு டைம்லி அர்ஜ் தான்” என்றான்.
“அப்டி பாத்தா இங்க எல்லாமே டைம்லி அர்ஜ்தான். நாம படிக்கிறது, வேலைக்குப் போறதுன்னு எல்லாமே. ஆனா அதேயே தொடர்ச்சியா செய்யும்போது அதுவே நம்ம வாழ்க்கையாயிடுது. இப்ப என்னோட சேந்து வாழறதுல உங்களுக்கு என்ன கஷ்டம்? அத சொல்லுங்க”
“ஓகே திஸ் இஸ் த லிமிட். யூ கேன் லீவ் நௌ” என்று கூறிக்கொண்டே அவன் கார் சாவியை எடுத்து அவளை திரும்பிப் பார்த்தான்.
அவள் ஹேண்ட் பேகை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு எழுந்து அவன் பின்னால் நடந்தாள். கார் ப்ரீத்தா வீட்டின் முன்னால் போய் நின்றது. அவள் இறங்கிய அடுத்த கணம் அது வேகமாய் சென்று மறைந்தது. அவள் கண்களைத் துடைத்துக்கொண்டு பார்த்தாள். உண்மையிலேயே கார் மறைந்திருந்தது. ப்ரீத்தா வீட்டிற்குள் நுழைந்து செவிரில் சாய்ந்து இரு கால்களையும் கட்டிக்கொண்டு அமர்ந்தாள். இருட்டைக் கிழித்துக்கொண்டு ஒரு விம்மல். ஈரத்தை மட்டுமே உணர முடிந்தது. அந்த விம்மலின் காயத்தின் ஆழத்தையோ அதன் இடத்தையோ இருட்டில் பார்க்கமுடியவில்லை.
வினோத் கையிலிருந்த கோப்பையின் தெள்ளத் தெளிவான விஸ்கியைப் பார்த்தான். அதை ஒருமுறை சுழற்றிவிட்டு விட்டுக் கண்களை மூடிக்கொண்டான். விமானத்தின் கேப்டன் என்னவோ பேசிக்கொண்டிருந்தான்.
‘டக்’ என்று சத்தம். அறையில் வெளிச்சம் பரவியது. லீனா ஓடிப்போய் ப்ரீத்தாவைக் கட்டிக்கொண்டாள். ப்ரீத்தாவின் கண்கள் சிவந்திருந்தன. மூக்கிலிருந்து தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. லீனா அவள் தலைமுடியைக் கோதிவிட்டாள். மனித மனங்களைப் போலக் காயங்களுக்கு அத்தனை வைராக்கியம் இருப்பதில்லை. ஆறுவதற்கு முன்பாகவே ஒரு சிறிய வருடலில் வலியின் வீரியத்தைப் பட்டென குறைத்துக்கொண்டு விடுகிறது. ஒருவேளை வலி என்பது காயத்தின் உண்மையான தன்மையில்லையோ என்னவோ.
ப்ரீத்தா லீனாவை கட்டிக்கொண்டே, “வினோத் ப்ஃரீக்ட் அவுட்” என்று மூக்கைத் துடைத்துக்கொண்டாள்.
“லவ் பண்றன்னு சொல்லிட்டியா? ன்னு அவள் தோள்களை உலுக்கிக் கேட்டாள் லீனா.
“கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்”
“ஆர் யூ க்ரேசி?” என்று ப்ரீத்தாவை விலக்கிவிட்டுக் கட்டிலில் அமர்ந்தாள் லீனா.
“அவருக்கு நான் வேணும்னு எனக்குத் தெரியும்”
“யா எக்சாக்ட்லி அதுக்குதான் ஒனக்கு காசு குடுக்குறாரு”
“ஐ மீன்… நாட் ஜஸ்ட் ஃபிசிக்கலி”
“ஒரு வருஷத்துக்கு முன்னாடி கார்த்திக் கூடத்தான் பே பண்ணாரு ஜஸ்ட் பாஃர் எமோஷனல் நீட்”
“இது வேற லீனா. எங்க ரெண்டு பேருக்கும் நாங்க வேணும்”
“உனக்கு இது வேற ப்ரீத்தா. ஆனா சுகர் டாடீஸ்க்கு அப்டி இல்ல. அவங்க உலகத்துல, பொண்ணுங்களுக்கான டைம்ங்கறது தூங்கறதுக்கு முன்னாடி அவுங்க மனசிலயும் மூளையிலயும் பணம் கைமாறு நடக்காத அந்த பத்து நிமிஷம் மட்டும்தான். சில நாள் அந்த பத்து நிமிஷத்தையும் ஆல்கஹால் உறிஞ்சிடும். அவங்ககிட்ட போயி கல்யாணத்த பத்திப் பேசினா ஃப்ரீக் ஆகாம என்ன பண்ணுவாங்க”ன்னு ஒரு சாக்லெட்டை ப்ரீத்தா வாயில் திணித்தாள் லீனா.
ப்ரீத்தா கண்களை மூடினாள். ‘அவன் அவள் மேல் வியர்க்க விறுவிறுக்க மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தான். அவள் சுகத்தின் உச்ச நிலையில் ஏதோ முனகிக்கொண்டிருந்தாள். அவன் அலைபேசி அலறியது. அவன் வெருட்டென அவனை அவள் உள்ளிருந்து பிடுங்கிக்கொண்டு, அலைபேசியை எடுத்துப் பேசினான். “கம்மிங்” என்று சொல்லிவிட்டு அவசரமாக உடையை அணிந்து கொண்டு கிளம்பிச் சென்றான். அவள் தன் இரண்டு கால்களுக்கும் இடையில் தலையணையை வைத்துக்கொண்டு திரும்பிப் படுத்து மணியைப் பார்த்தாள். 00:30. அவனிடமிருந்து அழைப்பு வந்தது. “ஹேய் டால் நான் வரதுக்கு காலைல ஆயிடும். யூ ஸ்லீப் வெல்” என்று காலை கட் செய்து விட்டான். இவள் தன் மார்பை வருடிக்கொண்டே கவிழ்ந்து படுத்துக்கொண்டாள்’
“ஹ்ம் ரைட்” என்று கண்களைத் திறந்து லீனாவைப் பார்த்துச் சலிப்பான ஒரு புன்னகையை உதிர்த்தாள் ப்ரீத்தா.
ஒரு வாரம் ஆகியிருந்தது. ப்ரீத்தா அந்த அறையை விட்டு வெளியே செல்லவேயில்லை. வினோத் வீட்டிலிருந்து எடுத்து வந்த புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடித்தாள். தினமும் சிங்கில் எலைட் ஆப்பை நூறு முறையாவது திறந்து வினோத்திடமிருந்து ஏதாவது செய்தி வந்திருக்கிறதா என்று பார்த்து ஏமாந்து கொண்டிருந்தாள். அன்று பொறுமையிழந்து’ ஹாய் கேன் வீ மீட்?’ என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். சற்று நேரத்தில் அவனிடமிருந்து பதில் வந்தது. தான் சிங்கப்பூரில் இருப்பதாகவும் இன்னும் இரண்டு நாள் கழித்து வருவதாகவும், புதன் கிழமை மாலை அவளைச் சந்திப்பதாகவும் அனுப்பியிருந்தான்.
ப்ரீத்தா வீட்டை விட்டு வெளியே சென்றாள். மழைக்கு முந்தைய மண் வாசம் மூளையில் எதிர்பார்ப்பைச் சுண்டிவிட்டு அவள் கண் இமைகளை மேல் நோக்கி விரியச்செய்தது. மழைத் துளி ஒன்று அவள் இமைப்படகில். ஒளியியல் மாயை. உலகம் நளினமாய் வளைந்தது. ‘அஒஔ’ என்ற மென்குரல் இழையத் திரும்பிப் பார்த்தாள். சிறு குழந்தை ஒன்று அவன் அம்மா பேசுவதைப்பார்த்து தன் வாயைக் குவித்துக்கொண்டிருந்தது. எதிர்பார்ப்புகள்தான் உயிரை உயிரோட்டமாக நெகிழச்செய்கின்றன. எதிர்பார்ப்புகள்தான் காலத்தின் மாயைத் தன்மையை யதார்த்த தன்மைக்கு உருமாற்றுகின்றன. யதார்த்தங்களை வலியாக்கி உழலச்செய்கின்றன. உறவுகளின் திடமான இணைப்புச் சங்கிலியைக் கண்ணுக்குத் தெரியாத மாய இழையாக நிலைகுலையவும் செய்கின்றன. உண்மையில் உயிர்வாழ்தல் என்பது இரு உச்சநிலைகளுக்கிடையில் சமநிலையைக் கண்டறிதல்தானோ? அவள் அந்தக் குழந்தையிடமிருந்து தன் கண்களை விலக்கிக்கொண்டு நடந்தாள். ‘தி ஸ்பைன்’ என்ற ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்தாள். ‘சேப்பியன்ஸ்’ என்ற புத்தகத்தை வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.
புதன் கிழமை, ப்ரீத்தா கருநீல ஜாம்தானி பருத்தி புடவையில் தன்னை புதைத்துக் கொண்டாள். அந்த கலைக்கூடத்தில் அத்தனை கூட்டம் இல்லை. உள்ளே நுழைந்ததும் வேன் ஹாஹ், ‘Almond blossom’ அவளை வரவேற்றது. அது அவர் தன் அண்ணனுக்கு மகன் பிறந்தபோது அவருக்குப் பரிசாக அனுப்பிய ஓவியம். புதிய வரவின் அடையாளம். அவள் அதைப் பார்த்துக்கொண்டே நின்றாள்.
“ஹாய் டால்” என்று அவன் அவளைப் பின்னாலிருந்து கட்டிக்கொண்டான்.
அவன் குரல், சுவாசம் அவள் கழுத்தில் படர்ந்தது. அவள் அவனைப் பார்த்தாள். அவன் அவள் ஜிமிக்கியை ஆட்டிவிட்டுக்கொண்டே, “யூ லுக் லைக் எ ஸ்கல்ப்ச்சர்” என்று அவளை மேலிருந்து கீழ் வரை ஊடுருவினான். இருவரும் ஓவியங்களில் கரைந்தனர். அவன் ஜப்பனீஸ் வுட் கட் ஓவியங்கள் இரண்டையும், ‘Almond blossom’யும் வாங்கிக்கொண்டான். இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.
அவன் வீட்டின் ஒரு படுக்கையறை சுவரில் மலையை விழுங்க வாய் பிளக்கும் பேரலையின் அந்த ஓவியத்தை மாட்டிக்கொண்டிருந்தான். ப்ரீத்தா இடது வலது என்று கீழே நின்று கொண்டு அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். அவற்றை நேராக மாட்டிவிட்டு அவன் தலையைச் சாய்த்து அவளைக் கோணலாகப் பார்த்தான்.
“வா…ட்?” என்று அவள் புன்னகைத்தாள்.
இருவரும் படுக்கையில் குழைந்த வர்ணங்களாய் ஒருவர் மேல் ஒருவர் இழைந்துகிடந்தனர்.
“நான் உங்கள ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றாள்.
அவன் அவளுக்கு வாங்கி வந்த வின்டர் ஜாக்கெட்டை அவளிடம் கொடுத்தான்.
“லவ்லி” என்று வாங்கிக்கொண்டு அதை மேஜை மீது வைத்தாள்.
தான் வாங்கிய புத்தகத்தை அவனிடம் நீட்டினாள்.
அவன் கண்களைக் குறுக்கிக்கொண்டு அவளைப் பார்த்தான்.
“இந்தாங்க”
அவன் அதை வாங்கிக்கொண்டான்.
“இந்த ஒரு வாரம் என்னப் பத்தி எப்பயாவது நெனச்சீங்களா?” என்று அவன் தலைமுடியைக் கோதி விட்டாள்.
அவன் “ப்ரீத்தா…” என்று அவளை விலக்கினான்.
“அன்னிக்கு என்னோட எக்சாம் முடிஞ்சவொடனே காலங்காத்தாலயே ஏன் வந்து என்னப் பாத்தீங்க?” என்று அவனைப் பார்த்தாள்.
அவன் “வாட்ஸ் ராங் வித் யூ ப்ரீ… டால்” என்றான்.
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. என்னோட body count பத்தி யோசிக்கிறீங்களா?” என்று அவனைப் பார்த்தாள்
வினோத் அவளைப் பார்த்தான். அவள் உதடு துடித்துக்கொண்டிருந்தது. போர்க்களத்தில் வாளின் கூரிய முனையின் கருணைக்குக் கெஞ்சித் துடிக்கும் இதயம் போல. போரின் முனைப்பில் இதயத்திற்கும், இரும்புக் கேடயத்திற்குமான வேற்றுமையை உணரும் நேரம் ஏது? காதலைப் புரிய வைக்கும் தவிப்பும் புரிந்தும் அதை மறுதலிக்கும் தவிப்பும் அப்படித்தான். அவன் அவள் துடிப்புக்கு நேரம் கொடுக்காமல் கூரிய வாளை ஆழமாகச் சொருகினான்.
“உனக்கு மொரேலிட்டி பத்தின செல்ஃப் குவெஸ்டனிங் வந்ததே இல்லையா?”
“ஓ அவ்ளோ மாரல் வேல்யூஸ் இருந்தா ஏன் சின்ன பொண்ணுங்கள உங்க தேவைக்கு யூஸ் பண்ணிக்கிறீங்க?”
அவன் அவசர அவசரமாக பேன்ட்டையும் சட்டயையும் போட்டுக்கொண்டான்.
“Financial domination fetish?” என்று அவள் பங்கிற்குச் சொல் வாளை எறிந்தாள்.
அவன் அவளைப் பார்த்து வெற்றுச் சிரிப்பை உதிர்த்தான். அவள் கண்கள் கலங்கின. “ஓகே, ‘சேவியர் காம்ப்ளெக்ஸ்’?” என்று அவன் முன்னால் போய் நின்றாள்.
அவன் அவள் தோள்களைப் பிடித்துக்கொண்டு ”டால், இங்க ரேப் பத்தி பேசற அளவுக்கு யாரும் மிடில் ஏஜ் க்ரைசிஸ் பத்தி பேசறதில்ல, செக்க்ஷூஅல் டெப்ரவேஷன் பத்தி பேசறதில்ல, எவல்யூஷனுக்கும், டெக்னாலஜிக்கும், மேல் ஃபீமேல் ப்ரைமல் இன்ஸ்டின்க்ட்க்கும் இருக்ற லேக் பத்தி பேசறதில்ல” என்றான்.
“ஸ்டாப் ஆல் திஸ் இன்டலெக்ச்சுஅல் டாக்ஸ். என்ன நீங்க லவ் பண்றீங்கன்னு சொல்றதுல உங்களுக்கு என்ன அவ்ளோ ஈகோ?” என்று அவன் சட்டையைப் பிடித்தாள்.
“பொடவையக் கட்டிட்டு கெளம்பு. லெட்ஸ் கோ” என்று அவள் பிடியிலிருந்து விலகி நடந்தான் வினோத்.
அவள் புடவையைக் கட்டிக்கொண்டு கண்ணீர் தளும்ப அவனைப் பார்த்தாள். அவன் கார் சாவியை எடுத்து அதை அழுத்தினான். மின் விளக்கு அணைந்து, வீட்டுக் கதவு திறந்தது. இரவின் வெளிச்சமற்ற வெளிச்சம் பரவியது. அவன் கடற்கரையில் அவள் கூந்தலை விலக்கி விட்ட விடியல் தருணங்கள், தான் எனும் அகந்தை முறிந்த இன்ப ஒளிக்கோடுகள் பளிச்சிட்டன அவள் கண்களில். அகந்தையின் உச்சகட்ட வெற்றி என்னவாக இருக்கும்? எதிராளியின் கண்களில் ஒரு துளி நீரைச் சுரக்கவிடுவது. அதை எந்த ஆரவாரமும் இன்றி காற்றில் மிதக்கும் சிறு தூசி நிகழ்த்திவிட்டுப் போய்விடுகிறது. எனினும் மனிதன் அதைக் கட்டிக்கொண்டு அழுவதேன்? இன்பம் என்பது துன்பத்தின் எதிர்வினை மட்டுமோ?
அவள் அவன் அருகில் சென்று, அவன் கண்களில் படர்ந்து, ‘நானே போய்க்கிறேன்‘ என்று வெருட்டென நடந்து மறைந்தாள்.
அவன் கண்களை மூடிக்கொண்டான். அவள் வாசம் மூச்சடைத்தது. ஒரு ஏமாற்றத்தைச் சந்தித்துக் கடக்கத் திரண்டு உடனே அகன்றுவிடும் மெல்லிய தன்னியல்பான கண்ணீர்த்திரை போதுமானதாய் இருக்கிறது. ஒரு அன்பை மறுதலிக்க எத்தனை இரும்புத்தோல்களை போர்த்திக்கொண்டு தன்னியல்பை இழந்து கனத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது? கதவு மூடி மின்விளக்கு எரிந்தது. போரிலாவது வாள்கள் குத்திக் கிழித்துவிட்டுத்தான் நகரும். காதலில் மரணத்திற்காகத் துடிக்கும்போதே நகர்வு நிகழ்ந்துவிடும்.
ப்ரீத்தா கண்களைக் கசக்கிக்கொண்டே அவள் வீட்டின் படுக்கையிலிருந்து எழுந்தாள். அலைபேசியில் எலைட் ஆப்பை விரலால் தட்டினாள். சுகர் டாடி சாம் காணாமல் போயிருந்தார். அவள் அலைபேசியைத் தூக்கி எறிந்தாள்.
ஒரு வாரம் கழித்து அவள் கல்லூரிக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். வினோத்தின் கருப்பு நிற ஜேகுவார் அந்தப் பெண்ணை இறக்கிவிட்டு வெருட்டென மறைந்தது. அவள் அந்தப் பெண்ணைத் தொடர்ந்தாள். அவள் ஆபீஸ் ரூமிற்கு சென்று ஒரு காகிதத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினாள். ப்ரீத்தா அவசரமாக உள்ளே சென்று அதை எடுத்துப் படித்தாள். அந்தக் காகிதம் நனைந்து கொண்டிருந்தது.
டின்னருக்கு மேஜையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு ப்ரீத்தா நம்பரை அழைத்துக்கொண்டிருந்தாள் லீனா.
வினோத் தன் அறையில் படுத்துக்கொண்டே ப்ரீத்தா கொடுத்த சேப்பியன்ஸ் புத்தகத்தைத் திறந்து முகர்ந்துகொண்டிருந்தான்.
‘I am always gonna be daddy’s little girl’ என்று க்ரிஸ்சி ரோட்ஸ் குரல் அந்த வீட்டின் வேறொரு அறையில் நிறைந்து கொண்டிருந்தது. ‘The great wave of Kanagawa’ போட்டோவை கழற்றிவிட்டு ’Almond blossom’ படத்தைப் படுக்கைக்கு பின்னாலிருக்கும் சுவரில் மாட்டிக்கொண்டிருந்தாள் அந்தப் பெண். அவள் அலைபேசி அதிர்ந்தது. சிங்கப்பூர் எண் ஒன்றிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது. அதை எடுத்துச் சிரித்துக்கொண்டே, “மதர் ஸ்டெல்லா, ஐயம் ஹோம்” என்றாள்.
வினோத் தன் அறையில் கண்ணாடி முன் நின்று கொண்டு துருத்திக் கொண்டிருந்த தன் ஆண்மையை அழுத்தி அடக்கிக் கொண்டிருந்தான். Humans are bodies of desires, souls of virtues and servants of biased brain.
*******
வணக்கம். பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் குமாரிகளாக ஆகும்போது மைக்ரோ படிப்பிற்காக மேக்ரோ வேலைகளைச் செய்யும் பற்றிய ஒரு கதை. டால் அலெய்ஸ் பிரீத்தா எப்படி 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களோடு பணத்திற்காக இணக்கமாக இறுக்கமாக இருக்கிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டும் கதை. ஆனாலும் எழுத்துகளில் கொச்சைத்தன்மையில்லை.சென்னையில் மேலோட்டமாக அன்றாட வாழ்க்கையில் நிகழ்கிறது என்பதே உண்மை.நீங்கள் கவிதாயினி என்றே கேள்விப் பட்டிருக்கிறேன். சிறுகதை எழுத்தாளர் என்று எனக்குத் தெரியாது. இக்கதை ஒரு நாவலை போன்று நகர்கிறது. மொத்தத்தில் தித்திக்கும் ஆண்கள் என்பதை விட ஆண்கள் அப்படித்தான், உபயோகிக்கும் ஆண்கள், திணறடிக்கும் ஆண்கள் என்றுதான் கூற வேண்டும்.Hormones உள்ளவரை Harmony. வேறு சில சிறந்த கதைகள் என்பனவற்றை லிங்க் அனுப்புங்க.