இணைய இதழ்இணைய இதழ் 47கட்டுரைகள்

தொலைந்து போன மனிதத்தின் துயரவரிகள் – கவிஞர் அன்பாதவன்

கட்டுரை | வாசகசாலை

“கொரொனா யுகம்”

கடைகள் இருக்கின்றன
ஆனால் திறந்திருக்கவில்லை.
பொருள்கள் இருக்கின்றன
வாங்க முடியவில்லை.

வேலைகள் இருக்கின்றன
ஒன்றும் செய்யமுடியவில்லை
சாலைகள் இருக்கின்றன
எங்கும் போகமுடியவில்லை.

மனிதர்கள்
விலகி விலகிப் போகிறார்கள்.
நெருங்க முடியவில்லை.
இரவுகள்
வந்து வந்து போகின்றன.
உறக்கம் வரவில்லை.

முகங்கள் மூடியிருப்பதால்
பார்க்க முடியவில்லை…

ஊரடங்கு என்கிறது அரசு.
உள்ளடங்கு உள்ளடங்கு
என்கிறது வாழ்க்கை.
– கவிஞர் சிற்பி.
(முகந்து தீராக் கடல்)

மறக்க முடியாத நாளது.! இரண்டு நாள் விடுப்பில் ஹாசன் நகரிலிருந்து விழுப்புரம் வந்தவனை வீட்டுக்குள் சிறைப்படுத்தியது மகாராஜாவின் உத்தரவு. சற்றொப்ப 80 நாட்கள்; தரைத்தள அறைச்சிறையில் நானும், முதல் தளத்து அறைகளில் குடும்பத்து அங்கத்தினரும். தேநீர் கிடையாது, செய்தித்தாள் கிடையாது, எடை குறைக்கும் நடைக்கும் வாய்ப்பில்லை. ஒரே ஊரிலிருந்த நெருங்கிய உறவுகளையும் கண்குளிரக் காண வாய்ப்பில்லை. வாய்ப்பே இல்லை!

கொரொனா என்றார்கள். தீ நுண்மி எனத் தமிழ்ப்படுத்தினார்கள்.. கிருமி என கிண்டலடித்தார்கள். லாக்டவுன்.. சக்தி வாய்ந்த கடவுளர்களுக்கும் சிறைதான்.. கோவில் வளாகங்கள் நடைசாத்த, வாசல்களில் திருமணங்கள்! திட்டிவாசலாய்..ஒரே துணை கைபேசி மட்டுமே! ஆனால் யார், யாரை அழைக்க..?

என்னைப்போலவே மும்பையிலிருந்து நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமத்திற்கு வந்த புதிய மாதவியும் சிறைபிடிக்கப்பட்டார். பல நாட்கள் கழித்தே இதுவும் தெரிந்தது! பிறகு எப்படியோ தடை பல தாண்டி மும்பை சென்றடைந்த கதை கசப்பான நிஜம்.! சராசரி மனிதர்கள் கசப்புகளை விழுங்கிவிடக்கூடும், ஆனால், படைப்பாளிகளுக்கு அஃதோர் மறக்கவோ கடந்து போகவோ முடியாத அனுபவமாகிவிடுகிறது. எனக்கு தீ நுண்மி தினங்கள், ‘ஹைபுன் பறவைகளின் சிம்பொனி’ நூலைத் தந்தது. புதியமாதவிக்கோ புதினமாய், ‘‘சிறகொடிந்த வலசை’.

இத்துனை பீடிகைக்கும் காரணம் உண்டு. ஒரு புதினத்திற்கு காலப் பின்ணணி மிக முக்கியமானது; ஏனெனில் அதைச் சார்ந்தே பாத்திரங்களின் மொழி மற்றும் வர்ணனைகள் அமையும். மட்டுமின்றி, சமகாலத்தை படைப்பாக்குதல் ஒரு சவால்! காரணம் தீ நுண்மி தின வாழ்வை, ஒரு புதினச் சிமிழுக்குள் அடைத்துவிட முடியாது. இன்றைக்கும் ஓமைக்ரான் மற்றும் வேறு பெயரெடுத்து வேறுவேறு முகமூடி தரித்து வலம் வந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கிடையில் ஆட்சியாளர்களின் மனக்குரங்கு எத்திசையில் தாவும் என்பது எவரும் அறியாதது.

‘சிறகொடிந்த வலசை’ புதினத்தில் வேறுவேறு முகம் கொண்ட மனிதர்கள் வருகிறார்கள். எதையும் எதிர்பார்க்காமல், துயரக்காலத்தில் தன் இனம் சார்ந்தவர்க்கு உதவும் உன்னத குணத்தோடு குமணராசன்களும் அவர்தம் தமிழ்த் தம்பிகளும் ஒரு புறமெனில்.. தன் சகோதரி குழந்தைகளுக்கு அரசு கொடுத்த உதவித்தொகையில் ‘புல்லட்’டும் புது நகையும் புத்தம் புதிய கைபேசியுமாய்.. காடு நிறைந்த தாய்மாமன் உறவுகளும் இன்னொரு புறம். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் முகங்களும் முகமூடிகளுமே படைப்பிலக்கியத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன என்பதை எவருமே மறுக்கவியலாது.

ஓர் எளியக் கோட்டோவியமாய் ஒளிரும் ‘மைனி’ பாத்திரம் இப்புதினத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. வயிற்றுக்காக உடலை விற்றாலும், ஆதரவற்ற குழந்தைகள் இருவரை வளர்க்கும் பொறுப்பேற்கும் மைனி. மைனி வருவதற்குள் கொரொனா அழைத்துவிட, மைனிக்கான தங்குமிடத்தை தர ஏற்பாடு செய்திருந்த சாய்பு.. ! யார் யாரை விஞ்சப்பார்க்கிறார்கள் ? 

ஆசையாசையாய்ப் பெற்ற பிள்ளைகளிடம், தம் கடைசி காலங்களில் ஒருவேளை உணவுக்காக, உடைகளுக்காக, அவர்களின் தாட்சண்யத்துக்காக காத்திருக்கும் கிராமத்து முதியவர்களும் கூட ஒரு விதத்தில் சிறகொடிந்த பறவைகள் தாம்!

தீ நுண்மிக் காலத்து குடும்பத்தலைவனின் மரணம் எப்படி அக்குடும்பத்தை அலைக்கழிக்கிறது என்பதை மும்பையின் பின்புலத்தோடும் ‘தாராவி’ எனும் பெருஞ்சேரி மனிதர்கள் குறித்த சில கோட்டோவியங்களோடு புதினமாய்த் தந்திருக்கும் புதியமாதவிக்கு பூச்செண்டு! காரணம் தாராவி என்பது மும்பை எனும் மாநகரத்துள் அமைந்த பன்மொழி பேசும் பல்வேறு பண்பாட்டு மனிதர்களால் நிறைந்த பெரும்பகுதி. தாராவி குறித்த முதல் அசல் நாவல் தமிழில் இது எனப் பெருமிதமும் கொள்ளலாம்.

“வளமை- இல்லாமை, ஒரே சாதிக்குள் நிலவும் வர்க்கவேறுபாடு, இதனடிப்படையில் உருவாகும் போராட்டங்கள், சாதிய மற்றும் வர்க்க வேறுபாடுகளைக் கடந்து நிற்கும் மனித நேயம், பெண்ணினம் ஒடுக்குமுறைக்கு உட்படல், வாழவேண்டுமென்ற உயிர்த்துடிப்பு, நிறைவேறாத ஆசைகள், சுரண்டல், சுரண்டல்வாதிகளுக்கு ஒடுக்குவோருக்கும் மதம் துணை நிற்றல், சில நேரங்களில் மதமே ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் நிகழ்த்துதல், சாதி சமய வர்க்க வேறுபாடுகளை மீறி நிற்கும் காதலுணர்வு – அதைக் கருக்க முனையும் பழைமைவாதிகளும் ஆதிக்கசக்திகளும் என சமூகத்தில் பல்வேறு வாழ்க்கைச் சிக்கல்கள் இடம் பெற்றுள்ளன. இவையனைத்தையுமோ தேர்ந்தெடுத்த ஒன்றிரண்டு வாழ்க்கைச் சிக்கல்களையோ நாவலாசிரியன் தன் படைப்பில் வெளிப்படுத்த முனைகிறான்” எனக் குறிப்பிடும் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் (இனவரைவியலும் தமிழ் நாவலும் – பக் 42) கருத்துகளோடு முழுமையாக பொருந்திப் போகிறது புதியமாதவியின் ‘சிறகொடிந்த வலசை’ புதினம். 

எந்த ஒரு படைப்பும், படைப்பாளி சார்ந்த அரசியல் அந்த படைப்பினூடே எந்த அளவுக்கு கலந்து சீரியதொருப் படைப்பாய் மிளிர்கிறது என்பதைப் பொறுத்தே படைப்பின் வெற்றி அமைகிறது; பாரட்டப்படுகிறது; விருதுகள் பெறுகிறது. 

‘சிறகொடிந்த வலசை’ புதினத்துள் மிக நுட்பமாக ஒரு தலித் அரசியலை பூரணமாக மறைத்து வைத்திருப்பது சிறப்பு. புதினத்தின் காலம் தீ நுண்மி காலமாகிய 2020 என்றாலும் கதையின் மையமான குமார், தனத்தின் காதலில் மறைந்திருக்கிறது தென் தமிழகத்தின் சாதீய அரசியல். “வெள்ளையும் சொள்ளையுமா குளத்தங்கரைப் பக்கமும் கோனார் தோட்டத்திலேயும் அலைஞ்சிகிட்டிருக்கான் அந்த கீழத்தெருப்பைய..” (பக்26). ஆக, குமார் கீழத்தெரு எனும் சேரியின் புதல்வன். ஆனால், எங்குமே தனம் எந்த சாதியெனக் குறிப்பிடவேயில்லை.; ஏனெனில் சாதி இந்து X தலித் என்கிற அரசியல் கட்டமைக்கப்பட்டு, எந்த சாதியானாலும் தலித்துக்கு எதிராகவே சிந்திப்பார்கள் என்ற முடிவுக்கு வாசகனை யோசிக்க வைத்துள்ளார் புதிய மாதவி. மட்டுமின்றி, கிராமம் சாதியின் பெயரால் துரத்துகிறது, மாநகரமோ சாதி மதம் கடந்து வரவேற்று வாழும் வாய்ப்பளிக்கிறது என்ற நுண்ணரசியலையும் புதினத்துக்குள் பொதிந்து வைத்திருக்கிறார்.

‘‘விழித்தெழு’ குழுவின் இளைஞர்களைப் பற்றி வர்ணிப்பவர் “எல்லோரும் வேலைக்குப் போகிறவர்கள், இவர்கள் யாரிடமும் போய் கை நீட்டுவதில்லை, சிலருக்கு சுயதொழில், கேட்டரிங்க், சலூன், மெடிக்கல் ஸ்டோர், சாப்ட்வேர் எஞ்சினியர், வக்கீல்னு இவர்கள் சமூகத்தின் முகமாக இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய எந்த விமர்சனங்களையும் இவர்கள் கண்டு கொள்வதில்லை. வலிய சண்டைக்குப் போகாதே, வந்த சண்டையை விடாதே என்பதுதான் களத்தில் இவர்களது பாலிசி” (பக் 47) – இதுபோன்ற இளைய தலைமுறையின் செயல்வீச்சும் குமணராசன்களின் வழிகாட்டுதலும் ஒன்று சேர்கையில் சிறகொடிந்த பறவைகளுக்கும் முளைக்கும் புதிய சிறகுகள், உதிக்கும் புதிய சூரியன்..!

நாவல் : சிறகொடிந்த வலசை

ஆசிரியர்: புதிய மாதவி,

பக்கம்: 142, விலை.ரூ 150.

வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை. 

தொடர்புக்கு: 9444640986

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button