சிறுகதைகள்

தூங்கா இரவுகள் – ஹரிஷ் குணசேகரன்

சிறுகதைகள் | வாசகசாலை

நள்ளிரவை தாண்டியதும் அமேஸான் பிரைமை நிறுத்தி, சுயக்கட்டுப்பாடுகொண்டு நடப்பதாய் பூரித்து பெருமிதப்பட்டு படுத்தேன். வீட்டிலிருந்தபடியே வேலை செய்தது போக, மீதி நேரத்தை அதில்தான் கழிக்கிறேன். அண்ணன் வீட்டுக்கு, சேலத்துக்கு சென்ற அம்மா இ-பாஸ் கிடைக்காமல் அங்கேயே தங்கிவிட்டார். ஒருவகையில் அதுவும்கூட நல்லதுதான். திருமணம் செய்துகொள்வது குறித்தான வற்புறுத்தல்களையும் புலம்பல்களையும் கேட்கத் தேவையில்லை! கொரோனா பரவல் செய்திகள் அச்சமூட்டுவதாக கவலைகொள்ள செய்வதாக இருந்தாலும், ஆண்ட்ராய்ட் ஸ்டுடியோவில் கோடிங் அடிப்பதில், துறை சார்ந்து புதிதாகக் கற்பதில், சிக்கனமாகச் சமைத்து சாப்பிடுவதில், முதல்கட்ட ஊரடங்கு விரைவாக கரைந்தது.

கட்டிலுக்கு நேராய் இருந்த சாளரத்தைத் திறந்து காற்றையும் சாரலையும் எதிர்நோக்கினேன். நேரெதிரே அண்ணாந்து பார்க்கும் வண்ணம் நின்ற மூன்று மாடிக் கட்டம் உயிர் சோபையைத் தின்று செறிக்க, வெக்கையில் மனம் விசனப்பட்டது. வெஜிடேரியன்ஸ் ஒன்லி வாழும் அக்குடியிருப்பில் இன்னும் நூறு அடி ஆழத்துக்கு போர் போட்டு எல்லா நீரையும் உறிஞ்சி வழிக்கிறார்கள். பாவப்பட்டு வீசிய சிறு காற்று, கட்டிலின் மேலாக்க தொங்கவிட்ட கால் பாதத்தைக் குளிர்வித்து ஆற்றியது. இமை மூடியதும் சொரியும் தூக்கம் எப்பேர்பட்ட குடுப்பினை?

பெருமூச்செறிந்து ஐபோன் நோண்டி, ஃபேஸ்புக் போய் சுற்றலில் இருக்கும் அன்றைக்கான பிரச்னைகளையும், உடைபடும் பிம்பங்களையும் தெரிந்துகொண்டேன். தீர்ந்தும் தீராமலும் நேக்குப் போக்கு காட்டிய பிரச்னைகளின் கூட்டுத் தொகுப்பாக வாழ்க்கை எனக்குப் பட்டதால், சலிப்பு தொற்றி கைபேசியின் மெல்லிசான ஒளியை அணைத்து கவிழ்த்தேன். தவளையின் கிரீச் கிரீச்சும் இரவு பூச்சிகளின் இடைவிடாத சப்தமும் மின்விசிறியின் கூச்சலை மீறி காதில் விழுந்தன.

சமீபத்தில் வெள்ளை பூசிய கட்டடம் தாண்டி தெரிந்த கால்வாசி நிலவை, கட்டிலை விட்டெழுந்து ஜன்னல் வலைத் துவாரங்களின் வழியே கோர்த்து நிறைந்தேன். வெளிர் நீலமாய் அறைக்குள் கசிந்த சன்னமான ஒளியை ஊடறுத்து, மணிக்கட்டில் உட்கார்ந்த கொசு ஒன்றை அடித்து சாகடித்தேன். சாயுங்காலம் முதல் ஆசை தீர குருதி குடித்து உப்பிய கொழுத்த கொசுவாக இருந்திருக்க வேண்டும். பழகிய இருட்டுக்குள் இடது கையின் உள்ளில் புலப்பட்ட திடீர் குருதி ஈரத்தை வைத்து சொல்கிறேன். தலைநகரக் கொசு கடித்து, கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு டெங்குவால் செத்த என் நண்பனின் ஒன்பது மாதக் குழந்தையை, கைக்கு அடக்கமாக சொந்த ஊர் எடுத்துசென்று நல்லடக்கம் செய்த நினைவு வந்து தொலைத்தது.

இந்த நேரத்தே, ஊரடங்கில் ஒலித்த குயிலின் குரலொலி இயற்கையோடு ஒன்றிய உணர்வை தருகிறது. `ஓ… கடிகாரத்தை சரிபாதியாகப் பிரித்து நின்ற முட்களைப் பற்றி, எங்கிருந்தோ அக்குயில் பகர்கின்றதோ. புலரியை அறிவிக்கதானே அது வருகை தரும்! ஒருவேளை இது கரிச்சான் குருவியாக இருக்குமோ? அருகில் எங்கோ கூடுகட்டி முட்டையிட வந்துள்ளதோ?’ எதுவாக இருந்தால் என்ன? கண்களை மூடி தூக்கத்தை எட்டிப் பிடிக்கும் யத்தனத்தில் ஈடுபட்டேன்.

உலகையே கொரோனா சமூகப் பரவலாக கவ்வி இழுத்தாலும், தமிழ்நாட்டை கண்டு அது அஞ்சி நடுங்கி ஒளிகிறதோ? இரண்டு, மூன்று தினங்களில் கொரோனா கட்டுப்பட்டு மங்கி மறைந்துவிட்டதாக, உண்மையிலேயே ‘கண்மூடி’த்தனமாக நம்பினேன். கூர்க்கா வலம்வர முன்பெல்லாம் வழமையாகக் கேட்கும் லத்தி சத்தம் செவியில் விழுந்ததும் நிம்மதி சுரந்தது. ஆள் அரவமில்லா சாலைகளும் வெறிச்சோடிய தெருக்களும் வசதியாய்ப் போக, நாக்கை தொங்கவிட்டு எச்சில் ஊற்றித் திரியும் வெறி நாய்களுக்கு குஷி வந்துவிட்டதோ? ஊளையும் சண்டை கும்மாளமுமாக இரவை கெடுத்து குப்பைக் கூளங்களில் மறைகின்றன.

கொசுக்கடியில் இருந்து காத்துக்கொள்ள போர்வைக்குள் ஒடுங்கி அமிழ்ந்ததும் முதுகில் வியர்க்கத் தொடங்கியது. போர்வையைத் தூக்கியெறிந்து மீண்டும் ஜன்னல் பக்கம் வந்து சிகரெட்டை பற்றவைத்தபோது, முக்கால் நிலவு இன்னும் கவர்ச்சியாகத் தெரிந்தது. அம்மா அருகில் இல்லாததால் வீட்டில் புகைக்க முடிகிறது! நான் சிகரெட் பிடிப்பது ஆஃபிஸ் நண்பர்களைத் தவிர, அவனைத் தவிர யாருக்கும் தெரியாது.

புகையை உள்ளிழுத்து துகள்களை நன்றாகப் பற்றசெய்து மூக்கு வழியே, வாய் வழியேவிட்டு வானத்தை வெறித்தேன். இல்லை, வானத்தை வெறிப்பது போல நினைத்து வெறும் சுவரை. வெள்ளை சுவரை நோக்கி குமைந்தேன். இங்கிருந்தே கடப்பாரையைச் செலுத்தி காரையைப் பெயர்க்கலாம் போல இருந்தது. அதை ஆமோதிப்பது போல நெடுங் குழாயிலிருந்து சலசலப்பு எழுந்தது.

ஃபில்டர் தாண்டி புகைத்ததில் உதடு சுட்டதும், அந்தக் கணநேர வலியை அனுபவித்தேன். உறவு முறிந்ததை, தனிமை அண்டியதை, எல்லாமிருந்தும் இன்மை துரத்துவதை ஏற்று நகர முயன்று, விரக்தியின் விளிம்பில் குழப்பத்தில் வாடினாலும், நீண்ட வேலை நேரம் ஆறுதலாக இருக்கிறது. பல சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களுக்கு வேலை பறிபோன சூழலில், எனக்கு தவறாமல் சம்பளம் வங்கி கணக்கில் விழுகிறதே. ஆனால், அர்த்தமின்மை குறித்தும் முடிவிலா ரணப் பொழுது குறித்தும், அறுபடும்போது அனுபவிக்கும் வலி குறித்தும், இரவில் எழும் பேரச்சத்தை என்ன செய்து தொலைப்பது?

மீண்டும் ஐபோனை எடுத்து அவனுடனான சம்பாஷணைகளைச் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, ஃபேஸ்புக் பதிவுகளை, இன்ஸ்டா புகைப்படங்களை அடுத்தடுத்து பார்த்தேன். இவனால் மட்டும் எப்படி எல்லாவற்றையும் மறந்து பழையபடி சந்தோஷமாக இருக்கமுடிகிறது? எல்லாம் முடிந்துவிட்டதா? கெட்ட கனவென நடந்த சண்டைகளை, பேசிய வார்த்தைகளைக் கடந்து, அன்பெனும் படகில் ஒன்றாகப் பயணித்து கரையேற முடியாதா? ஒற்றைத் தலைவலி எட்டிப் பார்த்து உச்சந்தலையில் வின்னென்று அடித்தது. முன்பே மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரை போட்டு, மிடறு நீரருந்தி அமைதியாகப் படுத்தேன். சற்று ஓய்ந்ததும் மீண்டும் சிகரெட் ஒன்றையெடுத்து பற்றவைத்து புகையிழுத்தேன்.

அடர்த்தியானதும் ஸ்தூலமானதுமான இரவு, புகை மண்டலமாகவும் சிகரெட் துண்டுகளாகவும் மிஞ்சுவதில் உடன்பாடில்லைதான். தூக்கம் வரவில்லை என்றால் நான் என்ன செய்வேன்? நிலவு உச்சிக்கு சென்றுவிட்டதால் அறையெங்கும் வெளிச்ச இருட்டு பரவியது. அவனால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்போது என்னால் ஏன் முடியாது? மீண்டும் டிண்டர் கணக்கை ஆக்டிவேட் செய்து, நல்ல புரொஃபைல் பிக்சராக வைத்தேன். ஃபேஸ்புக்கில் பல நாள் திறக்கப்படாத இன்பாக்ஸை திறந்தபோது, ஆல்பர்பஸ் அங்கிள்களிடமிருந்து “வணக்கம் தோழீ..”, “சாப்டீங்களா தோழீ?”, “ஏன் ரிப்ளை பண்ண மாட்றீங்க தோழி” போன்ற குறுஞ்செய்திகள் கொட்டின. நட்பு வட்டத்தில் இல்லாத ஒருவன், தன் குறியின் புகைப்படங்களை அனுப்பி, ஹாய் சொல்லி இருந்தான். அவசரமாக அவனை முடக்கி, போனை வீசினேன்.

இம்முறை நிசப்தத்தை கெடுக்கும் பொருட்டு, குரலெழுப்பி கத்திய பட்சியால் எரிச்சலடைந்து நொந்தேன். வெகு நேரம் விழித்திருந்ததால், கண்கள் சொருகி எரிச்சல் விளைகிறது, ஆனால், தூக்கம்தான் வரமாட்டேன் என்கிறது. வெப்பமேறிக் கிடந்த கண்களைக் குளிர்வித்து ஊர்ந்து கசிந்தது நீர். நீண்ட இரவும், மூன்றரை மணிக்கு கூவும் குயிலும், கருணையற்று இயற்கையின் அங்கமாக நிகழ்ந்து கரைகின்றன. கண்களின் கீழே சமீபமாக முளைத்த கருவளையத்தையும் சுருக்கத்தையும் தொட்டுத் தடவி வருந்தினேன்.

போத்தலைத் தேடி உருட்டி கண்டடைந்து நா நனைத்தபோது, மின்னல்வெட்டு பளிச்சிட்டது. தூக்கமின்றி வெறுமனே கழியும் இரவு போல அர்த்தமின்றி இது நிகழ்கிறதோ? நினைத்தபோதே பெருத்த இடி சத்தம் கேட்டது. ஒலியை ஒளி முந்திக்கொண்டு பயணிக்கும் என்று முன்பு படித்தது, இப்போதுதான் உரைக்கிறது. தலையைச் சுற்றி ஒளி வட்டம் கவிந்ததுபோல நினைத்து சிரித்துக்கொண்டேன். கண்களை தூக்கம் முத்தமிட அதுமட்டும் போதுமா? நன்றாக உறங்கி சில மாதங்கள் ஆகின்றன.

“சார்… அவளுக்கு தூக்கத்துல நடக்குற வியாதி வரவே வராது.  ஏன் தெரியுமோ?”

“ஏன்… அவளுக்கு காலே இல்லையா?”

“அவ தூங்குனாதான நடக்குறதுக்கு. ஹ்… ஹ்…”

சோ, கிரேஸி மோகன் பாணியில் நகைச்சுவை துணுக்கு ஒன்றை எழுதும் ஆசை முளைத்தது.

சொல்லி வைத்ததுபோல, நான்கு மணிக்கு மீண்டும் குயில் சத்தம். அடுத்த பத்து நிமிடத்தில் அணில்பிள்ளை ஒன்றின் ஃபுகு ஃபுகு சத்தம். சாஸ்திரப்படி ஒற்றைத் தென்னை மரம் வீட்டுக்கு, குடும்பத்துக்கு உகந்ததல்ல என்று, வெட்டி வீழ்த்த துடித்துக்கொண்டிருக்கும் வீட்டு உரிமையாளரின் காதில் நிச்சயம் இது விழாது. மணி ஐந்தானதும் சேவல் கொக்கரித்து பொழுது புலர்வதை மனிதர்களுக்குத் தெரியப்படுத்தியது. நான்தான் தூங்கவே இல்லையே! பள்ளி பருவத்து பஜனை கூட்டத்தில் பாடிய, “பொழுது புலர்ந்தது… யாம் செய்த தவத்தால்” ஞாபகம் வந்தது.

வயிறு உப்பி கபகபவென்று பசியெடுக்க, சமையலறைக்குள் நுழைந்து காய்ந்த ரொட்டி துண்டுகளைக் கடித்து இழுத்து மென்றேன். விழித்துக்கொண்ட அல்சரால் வயிறு பொருமியதும், ஏலக்காய் ஜெல் குடித்து சாந்தப்படுத்தினேன்.

`அவனுக்கு ஏன் கால் பண்ணக் கூடாது?’ யோசித்தேன்.

“என்னது… இந்த நேரத்துல கூப்புட்றியா? பிரேக்-அப் பண்ணப்போ அவன் மூஞ்சு எப்டி இருந்துச்சி பாத்தியா…” தர்க்கம் சொன்னது.

“யாராச்சி ஒருத்தர் சமாதானமா போய்தான ஆகணும்.”

“அவன் ஒரு ஈகோயிஸ்ட். உனக்கு சுத்தமா செல்ஃப் ரெஸ்பெக்ட் இல்லையா?” இறுதியில் தர்க்க அறிவே வென்றது.

கடைசியாக ஆலந்தூர் மெட்ரோ வரை ஒன்றாகப் பயணித்து, நடைமேடையில் கட்டிப்பிடித்து பிரிந்த சம்பவம் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. அவன் விமான நிலையத்துக்கும் நான் பரங்கிமலைக்கும் சென்று சேர்ந்த பிறகு, கொரோனா ஊரடங்கு அமலில் வந்த பிறகு, வாழ்க்கை மீளவே இல்லை. அவனைத் தொடர்புகொள்ள நினைக்கும்போதெல்லாம் வாக்குவாதத்தின் ஊடாக அந்தக் கடுகடுத்த, எரிச்சல் அப்பிய முகம் கண்முன் வந்துபோனது. அவனுடன் பழகிய நாட்களை திரும்பிப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அவன் ஒரு நாளும் என்னை அனுசரித்து அன்போடு, அக்கறையோடு நடத்தியதே இல்லை என்று தோன்றுகிறது.

கூந்தலை அள்ளி சுருட்டி உச்சந்தலையில் கொண்டை முடிந்து கண்ணாடி பார்த்தபோது, என் மீது அவன் கொண்டிருக்கும் புகார்கள் குறித்து, கோபம் குறித்து அசை போட்டேன். சரியான புரிதல் நிகழாதபோது, பிரிதலாவது அழகியலோடு விளைந்ததை நினைத்து நிம்மதி அடைந்தேன். இணையதள சிறுகதை ஒன்றில் புறக்கணிக்கப்பட்ட, திரும்ப செலுத்தப்படாத, மறுதலிக்கப்பட்ட அன்பு குறித்து வாசித்தது ஆறுதலாக இருந்தது. யாநியின் வயலின் இசையை ஒலிக்க செய்தபோது, அது ஆழ ஊடுருவி உள்ளில் தொட்டது. இப்படியே விரக்தி மனநிலையில் அவதிப்பட்டு நோவது வீணென்று சிந்தையில் உதித்தது. மதகு உடைந்ததும் திடுமென்று பெருக்கெடுத்து ஓடிய நீர்போல தூக்கம் சம்பவித்தது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button