![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/03/FB_IMG_1584985796517-719x405.jpg)
உலகின் நம்பர் 1 போதை மருந்தின் வழியே கிடைக்கிற உச்சகட்ட பித்துநிலை என்பது எப்படி இருக்கும்? அதுபோல ஒரு ரகளையான அனுபவம்தான் இந்தப் படம் எனக்கு. “ட்ரான்ஸ்” என்பதற்கு என்ன பொருள் என்று தேடிப் பார்த்தேன்…
“A mental state in which you do not notice what is going on around you.”
என வந்தது.. இந்தப் படத்தை அப்படித்தான் எடுத்து வைத்திருக்கிறார்கள். கேமரா கோணங்கள், இசை, ஒளிப்பதிவு என எல்லாமே ஒருமாதிரி ராவான நிலை. “ருத்ர தாண்டவம் ” ஆடியிருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். Motivational speakersகளை வைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் தன்னுடைய பணியாளர்களுக்கு வேலையில் சோர்வு ஏற்படாதவாறு ‘Recreation Meetings’ நடத்துவார்கள். அலுவலகச் சூழலை இறுக்கமாக வைக்காமல் கொண்டாட்டக் களமாக உற்சாகப்படுத்தி வேலையில் கவனமாக இருக்கச் செய்யும் உத்தி அது.
நம் நாயகனுக்கு அது போல Motivational Speaker ஆக வேண்டுமென்று லட்சியம் இருக்கிறது. ஆனால் அவனது சூழல் அப்படி இல்லை. என்னதான் பாஸிடிவ் ஆட்டிட்யூட்டான ஒரு ஆளாகத் தன்னை முன்னெடுத்தாலும் அவனது பலவீனங்கள் அவனை அழுத்திக் கொண்டே இருக்கின்றன. உலகில் இருப்பவர்களை எல்லாம் வெற்றியாளராக மாற்ற வேண்டும் என்ற லட்சியம் இருப்பவன், அவன் வெற்றியாளனாக இருக்கிறானா ? என்றால் இல்லை என்பதே நிதர்சனம்.
வெறுமையில் அலையும் அவன் பயந்து மும்பைக்குச் செல்கிறான். அங்கே அவனுடைய வாழ்வு திசை மாறுகிறது. அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. நினைத்ததைப் போலவே ஒரு “மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக உருவாகிறான். அந்த இடம்தான் இந்தப் படம் எதிர்ப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கிய இடம். இந்த உலகில் மிகவும் மோசமான போதை “கடவுள்”. இங்கே கடவுள் என்பது ஒரு நம்பிக்கை அல்ல. அது ஒரு நிறை போதை. கடவுளை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் எதை வேண்டுமென்றாலும் பேசலாம் எதை வேண்டுமென்றாலும் விற்கலாம்… இங்கே அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே அதை ஒரு ‘Commodity’ போலப் பயன்படுத்தும் ஒரு கார்ப்பரேட் குழுமம் மூலம் அவன் கடவுளை விற்கும் பணியில் பணியமர்த்தப்படுகிறான். முதலில் தயங்கி மறுக்கும் அவன் அவனது நிலைமையை புரிந்து கொண்டு அந்தப் பணியில் ஈடு படுத்திக்கொள்கிறான்.
நேரடியாகச் சொன்னால் இன்றைக்கு பால் தினகரன் மற்றும் அவரைப்போல இருப்பவர்கள் செய்யும் அழிச்சாட்டியங்கள், மற்றும் தகிடுதத்தங்கள்தான் படமே. அவர்கள் நிகழ்த்துவது பிரார்த்தனைக் கூட்டங்கள் அல்ல. கடவுளின் பெயரால் நம்பிக்கையை, பணத்தை அறுவடை செய்வது. இங்கே எழைகள் முதல் பணக்கார்கள் வரை கணிசமானவர்களுக்கு கடவுள்தான் ஒரே நம்பிக்கை எனும்பொழுது..அற்புதங்கள் நிகழ்ந்துவிடாதா எனக் காத்திருக்கும் போது.. கடவுளின் பெயரால் அற்புதங்கள் நிகழ்த்துகிறோம் என்று யார் கிளம்பி வந்தாலும் உடனடியாக அவர்களைச் சந்திப்பார்கள்.. அதற்காக அவர்கள் எத்தனை வேண்டுமென்றாலும் கொடுப்பார்கள். கொடுக்கத் தயாராகவும் இருப்பார்கள். நித்தியானந்தா, அமிர்தானந்தமயி, ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ் போலவே கிறிஸ்துவ மதத்தில் இயங்கும் பெந்தகோஸ்தே குழுக்கள் இவர்கள் எல்லோரும் மிகச் சிறப்பாக பேசிப் பேசியே நாடகத்தை அரங்கேற்றுவார்கள். “பேச்சு” எதை வேண்டுமானாலும் செய்யும். அதுவும் சிறப்பாகப் பேசும் பேச்சாளர்கள் மிகச்சரியாக நம்பும்படி ஒன்றைப் பேசினால் எல்லோரும் அதைக் கேட்பார்கள்.. அவர்களது பேச்சுக்கு என்று தனி ரசிகர்கள் உருவாவார்கள். பேசிப் பேசி மக்களை தன் பிடியில் வைத்திருந்து அரசியல் செய்பவர்கள் ஏராளம். பேசிப் பேசி மக்களை ஏமாற்றி ஒரு சாராரைக் கொன்றவர்கள் ஏராளம். எனவே பேச்சு அனைத்தையும் தீர்மானிக்கிறது. அங்கே யார் சரியாகப் பேசுகிறார்கள் என்பதைப் பொறுத்தே விளைவுகள் தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கருக்கு கிடைக்கும் மலைப்பான வாய்ப்பல்லவா இது? அவனது பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் முண்டியடிக்கும். அவன் பேசினால் நோய் தீரும்..அவன் பேசினால் அறபுதங்கள் நிகழும்..அவன் பேசினால் கடவுளை உணர முடியும் எனும் அளவிற்கு அவனது பேச்சால் மக்களைக் கட்டிப்போடுகிறான். நம்பவைக்கிறான்..அதன் மூலம் அவனது புகழ் எங்கோ பரவுகிறது. பணத்தில் ஆடம்பரத்தில் திளைக்கிறான். ஒரு கட்டத்தில் தன்னைக் கடவுளாகவே நினைத்துக் கொள்கிறான்..அந்த அதீத தன்னம்பிக்கையில் அவன் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்குப் பேட்டி கொடுக்கலாம் என்று செல்ல அங்கே நடக்கும் குழப்பங்களில் அவன் நிஜமாகவே யார் என்று தெரிய வருகிறது. தனக்குப் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் குழு அவனை என்னவாக நடத்துகிறது என்றும் அவனுக்குப் புரிகிறது. ஏற்கனவே பலவீனங்கள் சூழ்ந்த அவனது உளவியல் மேலும் பாதிக்கப்படுகிறது அதிலிருந்து எப்படி மீள்கிறான்? உண்மையில் கடவுள் என்பது என்ன? கடவுள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை என்பது என்ன? எது உண்மை? எது பொய்? என முடிந்த அளவிற்கு சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படம் பார்த்துவிட்டு வந்து இரண்டு மூன்று நாட்கள் நான் அரண்டு போய் அமர்ந்திருந்தேன் என்பதே நிதர்சனம். ஏனெனில் ஒரு திரைப்படத்தை எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் இந்தக் கதையை இப்படித்தான் எடுக்க வேண்டும்…இப்படித்தான் கேமரா கோணங்கள் இருக்க வேண்டும்… இதற்கான இசையை இப்படித்தான் உருவாக்க வேண்டும்..ஒளி மற்றும் ஒலி வடிவமைப்புகளை இப்படித்தான் வடிவமைக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் அன்வர் ரஷீத்தின் திட்டமிடலை நினைத்து நிஜமாகவே பிரமித்துப் போனேன். எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் எதற்கு கௌதம்மேனன் என்று யோசித்தேன்? அவருடைய அறிமுகக் காட்சி அசத்தல். அதேபோல அவரது ஆங்கில வசனங்களும், மேனாரிசமும் பெரும் பலம் என்றாலும் ஃபகத் எனும் ராட்சசன் முன்பு எல்லோருமே தோற்று விடுகிறார்கள். மலையாள சினிமாவில் சமகாலத்தில் இயங்கும் எல்லா முக்கியமான நடிகர்களும் இதில் உண்டு என்றாலும் ஃபகத் கதாப்பாத்திர வடிவமைப்பைப் பற்றி தனியாக எழுத வேண்டும்.
தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் மிகப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது. மேலே சொன்னதைப் போல இந்தப் படமே ஒரு போதை… பல காட்சிகளை, வசனங்களைக் குறிப்பிட்டு எழுத வேண்டும் என்பதே என் ஆவல்..ஆனால் அதை எல்லாம் சொன்னால் படம் கொடுக்கும் அனுபவத்தை தொலைத்து விடுவீர்களோ என்று சொல்லாமல் விடுகிறேன்.
TRANCE is a very good experience for me.