
நரேன் சீக்கிரம் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்துவிடேன். எத்தனை நேரம் காத்திருப்பது? எனக்கு இந்த ஹாஸ்பிட்டல் வாசனையும், ஸ்பிரிட் நெடியும் குமட்டிக்கொண்டு வருகிறது. எத்தனை எச்சரிக்கையாய் இருந்தும் தங்கிவிட்டதா? அதானால்தான் குமட்டலும் மயக்கமுமா? யாரிடம் இதை நான் சொல்லமுடியும்? உன்னைத் தவிர. சீக்கிரம் எழுந்து வந்திருடா. நம் முதல் குழந்தையைக் கொண்டாட வேண்டாமா…?
கண்ணாடிக் கதவின் வட்டம் வழியே ஆக்ஸிஜன் மாஸ்க் மூடிய உன் முகத்தைப் பார்க்கிறேன்.நான் வலிக்கத் திருகும் உன் மூக்கு, அழுத்தமான உன் உதடுகள், மூடிய இமைகள் என அசைவின்றி துயின்றிருக்கிறாய்.
எனை வசீகரிக்கும் உன் அடர்ந்த சிகை மழிக்கப்பட்டு வெண்மையான கட்டுடன் யாரோ மாதிரித் தெரிகிறாய். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. சீக்கிரம் வா நரேன்.
உனக்குப் பிரியமான கருப்பு வண்ண சுடிதார் அணிந்திருக்கிறேன். ரெண்டு பேரும் ‘தர்பார்’ போகலாம் என்றாயே. அதற்காகத்தான் ரெடியாகி காத்திருந்தேன். நேற்றிலிருந்து இங்கேயே இருக்கிறேன். நீ ரசிக்கிறாய் என்பதாலேயே எனக்கு நயன்தாராவைக் கூடப் பிடிக்காமல் போய்விட்டது. “அவ என்ன என்ன விட ஒசத்தியா?” என்று உன்னிடம் சண்டையிட்டிருக்கிறேன். சீக்கிரம் வா நரேன்.
போலீஸ்காரர்கள் விசாரணைக்கு வருகிறார்கள். மைக்குடன் மீடியா காத்திருக்கிறது. என்ன சொல்லட்டும் நான்? எதுவும் சொல்லவில்லை. சொல்ல முடியவில்லை. இங்கே எந்த நியாயமும் கிடைக்காது. நீ வந்துடு நரேன் நாம போயிடலாம். இந்த ஊரே வேண்டாம், இந்த நாடே வேண்டாம். வேற எங்கயாவது போயிடலாம். பாஸ்போர்ட் கூட ரெடியா இருக்கு. எந்த நாட்டிலாவது நம் குழந்தையுடன் நம்ம வாழ்க்கையை வாழலாம். அங்கயெல்லாம் நீ யாரு உன் ஊர் எது எந்த குடும்பம்னு கேக்க மாட்டாங்க. நீ மட்டும் வந்துடுடா. எவ்வளவு நேரம் என்னைக் காக்க வைப்பாய்..?
காதலித்த காலங்களில் கூட ஒருநாளும் என்னை நீ காக்க வைத்ததில்லையே. “செல்லம்மா, நீ எப்பவும் எனக்காக வெயிட் பண்ணக்கூடாதுடீ” என்பாயே. இப்ப ஏன் காக்க வைக்கிறாய்…?
கலங்கிய கண்களுடன் உன் அம்மா என்னருகிலேயே இருக்கிறார்கள். என்னால் அவங்ககிட்ட கூட பேச முடியல. நம் திருமணத்தில் அவசரமாய் பார்த்தது. அதன் பிறகு இப்பத்தான் ஓராண்டு கழித்துப் பார்க்கிறேன். நரேன், நீ உங்க அம்மா ஜாடைதான். இப்பத்தான் அவங்க சென்னையையே பார்க்கிறார்கள். நம்ம வீட்டில் வைத்து அவர்களுக்கு சுத்திக்காட்ட வேண்டாமா…சீக்கிரம் வாடா.
ஞாபகம் இருக்கிறதா நரேன், நம் முதல் சந்திப்பு. உங்க புராஜக்ட்டிற்காய் நீ, திலீப், இமான் எல்லாரும் எங்க பிளாக் வந்திருந்தீங்களே. நான் உன்னை அப்போ சரியாக் கூட கவனிக்கலை.
“நதியா, நீங்க எல்லாரும் வந்தப்ப நாங்க அனிதாவதான் பார்த்தோம். அவதான் ஸ்மார்ட்டா இருந்தா. ஆனா சிரிச்சிக்கிட்டே நீ எனக்கு புக்ஸ் கொடுத்தப்பதான் உன்னைக் கவனிச்சேன். அடுத்தநாள் எலக்ட்ரானிக்ஸ் பிளாக்ல நீ மாடிப்படி வளைவில் நடந்து வந்த அக்கணம், மாலைச் சூரிய வெளிச்சம் ஜாலிகளின் வழியா உன் மேல விழுந்து உன் கூந்தல் பொன்னிறமாய் காற்றில் அலைந்து வசீகரிச்ச அந்த நொடியில் தான் உன்னை விரும்பத் தொடங்கினேன்” என்று நீ என்னிடம் பிறகு கூறினாய். அத்தனை பிரியத்துடன் நதியா என்று எவர் என்னை அழைத்துவிட முடியும்? நரேன் நீ எழுந்து வந்துவிடு.
எவர் மீதும் புகார் அளிக்க விரும்பவில்லை. என் நரேனை எனக்குத் தந்துவிடுங்கள் என்று கெஞ்சுகிறேன். என்ன செய்யட்டும் நரேன். அப்பா என்றழைக்க என் நா கூசுகிறது. நடு வீதியில் வைத்த உன்னை வெட்டியபோது எப்படித் துடித்திருப்பாய். நான் செல்லமாக அடித்தாலே வலி தாங்கமாட்டாய். ரொம்ப வலிக்குதா நரேன்? உன் வலியெல்லாம் எனக்குக் கடத்த முடியாதா? ஏன் என்னைக் காதலித்தாய்? இருபத்து ஆறு வயதில் உயிருக்குப் போராடவா? மாமா அண்ணன் சித்தப்பா என்று ஒரு கூட்டமே காத்திருக்கிறது. நான் அறுத்துவிட்டு வந்துவிடுவேன் என்னைக் கூட்டிச் செல்லலாம் என்று என் அம்மா அமர்ந்திருக்கிறாள். நான் உன் அம்மாவின் பின்னே மறைந்து கொள்கிறேன்.
நரேன் நாம் காதலிக்கத் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பின்பு ,ஸ்காலர்ஷிப் லிஸ்ட்டில் என் பெயர் இல்லை என்றபோது தான் நீ என் சாதியைப் பற்றித் தெரிந்து அரண்டு போனாய். என் கருப்பு நிறத்தையும் என் பிரண்ட்ஸான ஆரோக்ய மேரி, கவிதாவைப் பார்த்து நானும் அதேதான் என்று நினைத்ததாய்க் கூறினாய். “வேண்டாம் நதியா ரொம்ப பிரச்சினை ஆகிவிடும்” என்று என்னிடம் ஒரு வாரம் பேசாமலிருந்தாய். ஆனால் எனக்கு அது சிரிப்பாகத்தான் இருந்தது. என் அண்ணன் உன்னை அடித்த போதுதான் அதன் தீவிரம் புரிந்தது. ஆனால் உன் நேசத்தை நான் இழக்க விரும்பவில்லை. அது என்னால் முடியாது.
“நரேந்திரன் ரிலேட்டிவ்ஸ்….” உடைந்த தமிழில் டாக்டர் இயலாமையை விவரிக்கிறார். உனக்கு நினைவு திரும்பவில்லையாம். தலையில் பட்ட ஆழமான வெட்டினால் இரத்தம் பெருகுவது நிற்கவில்லையாம். வெண்டிலேட்டரில் போடுவதாய் கூறுகிறார்கள். என் செய்வேன்…? வந்துவிடு நரேன். இன்னமும் நாம் வாழவே தொடங்கவில்லையே…
எத்தனையோ வலிகளுக்குப் பின் நம் திருமணம் நடந்து நாம் சென்னைக்கு வந்துவிட்டோம். எத்தனை இனிமையானது நம் காதல் வாழ்வு! நீ என்னை முழுமையாக்கினாய். எனக்குள்ளே மறைந்திருந்த என் பெண்மையை மலரச் செய்தாய். சிணுங்கல்கள், சண்டைகள், சமாதானங்கள், கொஞ்சல்கள்… பேரன்பால் நிறைந்தது என் மனம். எனக்கு சமைக்கவே தெரியாது. நீதான் சொல்லித் தந்தாய். உலகப் படங்கள் பார்க்க கற்றுக் கொடுத்தாய். “கண்ணம்மா, உலகம் ரொம்ப பெரிசு நான் ஆன்சைட்டுக்கு கலிபோர்னியா போனப்ப பிரம்மிப்பா இருந்தது. இன்னும் ஆறு மாதம் உன் பி்ஜி முடிஞ்சிட்டா நாம எல்லா இடத்துக்கும் போகலாம்” என்றாய்.
நீ வாசிக்கும் ஆத்மாநாமை, தேவதச்சனை, வண்ணதாசனை, ஜெயமோகனை, லாசாராவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாய். வார இதழ்கள் தவிர்த்து வாசிப்பற்ற எனக்கு கிராவையும், ஜெயகாந்தனையும் திஜாவையும் வாசித்துக் காண்பித்தே அறிமுகம் செய்தாய். உலக இலக்கியங்களையும் தால்ஸ்தாயையும், தஸ்தவோயஸ்கியையும் செவ்வியல்களையும் நான் அறிய வேண்டும் என்று விரும்பினாய். மாதொருபாகன் சர்ச்சை பற்றியெல்லாம் என்னிடம் ஆவேசமாய் விவாதித்திருக்கிறாய். நான் அறியாத உலகினை எனக்கு அறிமுகம் செய்தாய். எத்தனை புத்தகங்கள் நம் வீட்டில் உனக்காகக் காத்திருக்கின்றன. போன வாரம் புத்தகக் கண்காட்சியில் ஆயிரத்து எழுநூறு ரூபாய் கொடுத்து நீ வாங்கிய போரும் வாழ்வும் பிரிக்காமலேயே இருக்கிறது. நரேன், சீக்கிரம் வந்து எனக்கும் நம் குழந்தைக்கும் அதை வாசித்துக் காட்ட வா.
கீட்சையும் வேர்ட்ஸ்வொர்த்தையும் நேசிக்கும் நீ அவர்கள் கண்ட சமவெளிகளையும் டாபடைல்ஸ் மலர்களையும் தேம்ஸ் நதிக்கரையையும், பனியுருகும் பள்ளத்தாக்குகளையும் வானம்பாடிகளையும் என்னுடன் சேர்ந்து காண திட்டங்கள் வைத்திருந்தாய். வந்து விடு நரேன், நாம் லண்டன் நகர வீதிகளில் கைகோர்த்து நடக்க வேண்டாமா?
சோடியம் விளக்கொளியில் இந்த ஐசியு பின்புறம் அமர்ந்திருக்கிறேன். வேப்பமரங்கள், காகங்கள், வேகமாய் நடக்கும் செவிலியர்கள், வார்ட் பாய்கள், டாக்டர்கள் என்று மருத்துவமனை எனை இம்சிக்கிறது. அந்த காரிடரில் நடந்து செல்லும் மலையாள நர்ஸ்களில் ஓரத்தில் வருபவள் அழகாக அசைந்து நடக்கிறாள். நீ இங்கே இருந்திருந்தால் அவளை ரசித்திருப்பாய். நான் உன்னை முறைத்திருப்பேன். பெண்களின் அசைவுகள் உனக்குப் பிடிக்கும். வீட்டில் என் பின்னாடியே அலைந்திருக்கிறாய். என் நடையை, என் கோபங்களை நேசித்தாய்.
“நதியா, உன் அலையும் கூந்தல், வசீகரிக்கும் மாநிறம், எனை மயக்கும் நீர் ததும்பும் உன் பெரிய விழிகள், சின்ன மூக்கு, கோபத்தில் சுழிக்கும் உன் இதழ்கள், நரேன் என்று சிணுங்கும் உன் குரல், உன் நீண்ட விரல்கள், நான் முத்தமிடும் உன் பாதங்கள், கற் சிலைபோன்ற உன் வடிவு, துள்ளும் உன் நடை, சிறு பறவையாய் தலைசாய்த்து கண்கள் இடுங்க நீ சிரிக்கும் பேரழகு, கபடமற்ற உன் நேசம், உலகில் எனக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்று நம்பும் உன் பேரன்பு, என் மனவுலகை நிறைக்கும் பேரரசி, எழில் கொஞ்சும் என் இரவுகளின் தேவதை…என்னுள் ஊடுருவி நிறைக்கும் தீரா நேசம்…நான் சோர்ந்த கணங்களிலெல்லாம் எனைத் தாங்கும் உன் மடி..கண்ணம்மா…கண்மணீ…”
கவிதையாய் என்னைக் காதலித்தாய். வந்துவிடு நரேன்.
நம் திருமணத்திற்குப் பிறகு போனில் வந்த என் குடும்பத்தினரின் அழைப்பு என்னை மிரள வைத்தது. நான் திரும்பி வராவிட்டால் உன்னைக் கொன்று விடுவதாகக் கூறியபோது மனங்கசந்து உன் தோளில் சாய்ந்தேன். “கண்மணி, நீ என் மீது சாயும் கணங்களில்தான் என்னை முழுமையாய் ஆணென்று உணர வைக்கிறாய். யாரும் என்னைக் கொன்று விட முடியாது. நீதான் என்னை உயிர்ப்பித்திருக்கிறாயே” என்று தோளோடு என்னை அணைத்துக் கொண்டாய். நரேன், தலை சுற்றுகிறது. வயிற்றில் குமட்டுகிறது. நீவந்துவிடேன்.
மருத்துவமனை சர்ச்சிலிருந்து வெண்கல மணி ஒலிக்கிறது. இந்த இரவின் தனிமையை அவ்வொலி இன்னும் அதிகமாக்குகிறது. இங்கிருக்கும் மரத்திலிருந்து மஞ்சள் வண்ண மலர்கள் உதிர்கின்றன.
உன் நண்பனின் ஊரான ஜவ்வாது மலைக்கு நம் திருமணமானதும் அழைத்துச் சென்றாயே. எத்தனை இனிய தேனிலவு நாட்கள். நானறியாத மரங்களையெல்லாம் காண்பித்தாய். அடர்ந்த லண்டானாப் புதர்களில் வெண்மையும் சிவப்பும் பல வண்ணக் கலவைகளுமான மலர்கள். கொடிகளில் கொத்துக்கொத்தாய் சிவந்த உருண்டைப்பழங்கள். காட்டாமணக்குப் புதர்களில் பசும் காய்கள். சிறிய செடிகளும் ஊனாங்கொடிகளும் அடர்ந்த அவ்விடத்தில் புல்வெளியில் சரக்கொன்றை மரங்களின் அருகே நாம் அமர்ந்திருந்தோம். இலைகளே தெரியாமல் தங்க நிறக் கொன்றை மலர்கள் மரங்களை நிறைத்திருந்தன. காற்றில் பூவிதழ்கள் நம் மீது விழ கரங்களைப் பற்றி நாம் அமர்ந்திருந்த அவ்விடம்… காட்டுச் சேம்பிலைகளில் உருண்டோடிய நீர் முத்துக்களை நீ என் மீது தெளித்த அப்பூரிப்பு… யாருமற்ற நம் உலகு நாம் இருவர் மட்டுமே அலைந்த மகிழ்வு காட்டுப்புறாக்களின் குழறல்கள், தேனீக்களின் ரீங்காரங்கள், குருவிகளின் ஒலி என்று நாம் அமர்ந்திருந்த மாய உலகு…வந்து விடு நரேன், மனிதம் மட்டுமே வாழும் இழிவுகளற்ற உலகிற்கு சென்றுவிடலாம். உலகில் ஏதாவதொரு மூலைக்குச் சென்றுவிடலாம்.
போன மாதம் அப்பா போனில் திருவிழாவிற்கு அழைத்தபோதே என்னை அரைமனதுடன் கலங்கிய கண்களுடனேதான் பேருந்தில் வழியனுப்பினாய். பேசப்பட்ட சாதிப்பெருமைகளும் உன்னை ஏளனமாய்க் கூறிய மொழிகளும் எனக்கு அருவருப்பூட்டின.
எவருக்குத் தெரியும் நரேன், உன் தூய மனம். அம்மா உறங்கிய அதிகாலையில் எப்படியோ தப்பித்து உன்னிடம் வந்துவிட்டேன். அதே போல நீ அன்று எப்படியாவது தப்பித்திருக்கக்கூடாதா? இருட்டில் தனியே உன்னை மடக்கி அத்தனை பேர் சேர்ந்து தாக்கியதுதான் இவன்களின் பெருமை!!!
..
இதோ இந்த வராண்டாவின் முனையிலே உன்னை வெட்ட திட்டமிட்டவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன செய்ய முடியும் நான்? இவன்களுக்கு எப்படி புரியவைப்பேன் நம் நேசத்தை? பெண்ணின் கருவறையை ஆக்கிரமிக்க எண்ணும் வெறி, நீ உயிருடன் இல்லாவிட்டால் பரவாயில்லை. அவனுடன் வாழக்கூடாது என்னும் இவன்களின் காட்டுமிராண்டித்தனத்தை காண்பிக்க, இவன் சாதிப் பெருமைகளைப் பறைசாற்ற நாம்தானா கிடைத்தோம்? சீக்கிரம் எழுந்து வாடா. நாம் சென்றுவிடலாம்.
மூன்று நாட்களாய் நினைவழிந்து இங்கேயே நிற்கிறேன். என் குரல் உனக்கு கேட்கவில்லையா நரேன்? யார் இவன்களுக்கு அதிகாரம் தந்தது என் நரேனை என்னிடமிருந்து பிடுங்கிக்கொள்ள… நரேன், கண்ணாடி அறையினூடே உன்னைப் பார்க்கிறேன். ட்யூப்கள்,கேபிள்கள்..மெஷின்கள் சூழ நீ…
நரேன், உன் பார்வைகள்தான் எனை முதலில் ஈர்த்தவை. கலைந்து வசீகரிக்கும் உன் முடி, நான் நேசிக்கும் உன் சிவந்த நிறம், எனை விழுங்கும் நாணமுறச் செய்யும் உன் கூரிய பார்வைகள், உலகில் நான் கவலைகளற்று சாயும் உன் அகன்ற தோள்கள், என் கரங்களைப் பொத்தி வைத்துக்கொள்ளும் உன் கைகள்… உன் சிரிப்பு, கோபங்கள், கெஞ்சல்கள், நதி எனும் உன் குரல் எல்லாமே எனக்கு வேணும் நரேன்.
என் அத்தை வந்து கைப்பிடித்து என்னை அழைத்து செல்கிறாள். யார் யாரோ நிற்கிறார்கள். பெரிய பெரிய ஆட்கள். கட்சிக்கரை வேட்டிகள். முறுக்கிய மீசைகள். அறிவாள்கள்.
“நரேன், உன்னை இப்படியே விட்டு விட்டு வரச் சொல்கிறார்கள். என் அப்பாவுக்கு பெரிய பதவி தருவார்களாம். என்னை எவனுடனோ வெளிநாட்டுக்கு அனுப்புவார்களாம். இப்படியே வராவிட்டால் என் குடும்பமே அழிந்து விடுமாம். நீ மருத்துவமனையிலிருந்து வரவே மாட்டாயாம். பேரங்கள் நடக்கின்றன.
நள்ளிரவில் அவ்விடத்திலிருந்து விலகி உன்னிடத்தில் வருகிறேன். எனக்கு நீ மட்டும் போதும். எத்தனை யுகங்களிலும் அது மட்டுமே நடக்கும். வந்து விடு நரேன்…
***