சிறார் இலக்கியம்
Trending

‘வானவில் தீவு’ – 18; செளமியா ரெட்

சிறார் தொடர் | வாசகசாலை

இதுவரை…
தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போன அந்த ஊர்ச் சிறுவர்கள் கடலுக்குள் இருந்த கோட்டைக்குள் நுழைந்தனர். அங்கே தேவைதையின் தோழி இன்கி பின்கி, அணில், மயில் போன்றோரைச் சந்திக்கிறார்கள். இன்கி வண்ண தேவதையைப் பற்றி சொன்னதைக் கேட்ட சிறுவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இனி…

எல்லோரும் பழையபடி அணிலின் வீட்டிற்கு வந்து அமர்ந்து, இனி என்ன செய்வது என யோசித்தனர்.

அம்மு மீன்: நான் ஒரு ஐடியா சொல்றேன். முயற்சி பண்ணிப் பாக்குறீங்களா?

இரும்பு மண்டையன்: ஐடியா அம்மு களமிறங்கிட்டா. இனி எல்லாம் சரியாகிடும்.

ராம்: சொல்லு அம்மு… சொல்லு…

அம்மு: ராம், உன்னால தான் அந்த இறக்கைய வச்சு பல விஷயங்கள் செய்ய முடிஞ்சதே. நீ இப்ப அத வச்சு ஏன் முயற்சிக்கக் கூடாது?

பாலா: வாவ், செம ஐடியா அம்மு!

பாலா: ராம், அந்த இறக எடுத்துட்டு வாடா.

அணில் எல்லாவற்றையும் வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. அதைக் கவனித்த பாலா, முன்பு நடந்த எல்லாவற்றையும் விளக்கினான்.

அணில்: ஓ. அருமையா இருக்கே. அதயே முயற்சி பண்ணிப் பாத்துடலாம்.

ராம், நீ வேணும்னா மயில் மாதிரி சத்தம் (அகவுதல்) போட்டுப் பாரு.

ராம் இறகை எடுத்து வந்து அமைதியாக அமர்ந்தான். மனதை ஒருநிலைப்படுத்தி, சிந்தனையை இறகின் மேல் குவித்து, மயில் போன்று அகவிப் பார்த்தான்.

அட்டகாசம்… அப்படியே மயில் கூவுவது போல் இருந்தது. எல்லோரும் வாயைப் பிளந்து பார்த்தனர். மேலிருந்து மயில் அம்மையாரும் யாராடா இது புது மயில் என்று எட்டிப் பார்த்தார்.

ராம் திரும்பவும் முயற்சித்தான். தொடர்ந்து அகவியதில், நிஜமாகவே மழை தேவதை வந்து விட்டது.

எல்லோருக்கும் பயங்கர அதிர்ச்சி. பொய்யாய் நடித்ததை நினைத்து உள்ளுக்குள் நடுக்கம் வேறு.

மழை தேவதையுடன், வண்ணங்களின் வானவில் தேவதையும் வந்திருந்தது. ராமின் கையில் இருந்த இறகைப் பார்த்ததும் மழை தேவதைக்கு எல்லாம் புரிந்தது. அந்த இறகு மழை தேவதையின் இறகு தான். தனக்குப் பிடித்த குட்டிப் பையனுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்திருந்தது. இவன் அவனுடைய பேரனாகத்தான் இருக்க வேண்டும்.

ஒரே சமயத்தில் பாசமும் கோபமும் மாறி மாறி வந்தது. இதுதான் சமயம் என்று வானவில் தேவதை, மழை தேவதையை சமாதானப்படுத்த முயற்சித்தது.

ஆனால் இவர்கள் ஏமாற்றியதை நினைத்து மழை தேவதைக்கு கோபம் கூடிக்கொண்டே போனது.

சில நிமிடங்களில் பெருமழை பெய்து ஓய்ந்தது.

வானவில் தேவதையும் அணிலாரும் சேர்ந்து மழை தேவதையை சமாதானப்படுத்தினர்.

உர்ரென்று அமர்ந்திருந்த மழை தேவதை, திடீரென்று நிமிர்ந்து ராமைப் பார்த்துப் புன்னகைத்தது. ராம் அறியாத பல சம்பவங்கள் மழை தேவதையின் மனதில் வந்து போயின.

அவன் வைத்திருந்த இறக்கையும் மழை தேவதையின் இறக்கைதான். தனக்கு மிகவும் பிடித்த சிறுவனுக்கு சில சக்திகளுடன் கொடுத்துவிட்டு வந்திருந்தது.

எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்த மழை தேவதை, உற்சாகமாகக் கூறியது.

“என் சொந்தங்களே… வாங்க எல்லோரும் நம்ம தீவுக்குப் போகலாம்.”

அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியைக் கொண்டாடி வானவில் தீவுக்குக் கிளம்பத் தயாராகினர். மழை தேவதை, வானவில் தேவதை, மற்ற தேவதைகள் எல்லோரும் பாடிக்கொண்டே பறந்து வர, மற்ற எல்லோரும் படகில் ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மீன்கள் எல்லாம் ஆடிப் பாடிக் கொண்டே நீந்தி வந்தன.

தீவில் ஆங்காங்கே சில வண்ணங்கள் தெரிவதைப் பார்த்த சயின்டிஸ்ட் தாத்தா, சிறுவர்கள் வெற்றி பெற்றதைத் தெரிந்து கொண்டார். தீவு மக்கள் எல்லோரும் வழியனுப்பிய இடத்திற்கு வந்து தேவதை மற்றும் சிறுவர்களுக்காகக் காத்து நின்றனர்.

இவர்கள் பக்கத்தில் வர வர தீவு முழுக்க விதவிதமான வண்ணங்கள் மின்னுவதைக் கண்ட ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர். ஊரே விழாக்கோலமாக இருந்தது.

சிறுவர்களுடன் வந்த தேவதைகள் தீவில் காலடி வைத்த போது கருப்பு வெள்ளையாக இருந்த அந்தத் தீவு, பல வண்ணங்கள் நிறைந்த அழகான ஊராக மாறியது. மழை இவர்களது மகிழ்ச்சியை இன்னும் இரட்டிப்பாக்கியது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தீவே குலுங்கியது. பல ஆண்டுகள் கழித்து வானவில் தீவு பழையபடி வண்ணங்கள் நிறைந்து இருந்தது. வண்ணத்துப்பூச்சிகள் படையெடுத்து வந்தன.

முற்றும்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button