இணைய இதழ்இணைய இதழ் 90சிறுகதைகள்

வடு – பாஸ்கர் ஆறுமுகம்

சிறுகதை | வாசகசாலை

ந்த மனிதர் மிகவும் களைத்திருந்தார். பல நாட்களாக மழிக்காத தாடி மீசையில் அவரின் சோபையான கிழட்டு முகம் ஒளிந்திருந்து எட்டிப் பார்த்தது. தூக்கம் காணாத கண்கள் கண்ணாடி ஃபிரேமுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. மஞ்சள் கரையேறிய அரைக்கை சட்டையொன்றை அணிந்திருந்தார். அது ஒரு சமயத்தில் வெண்மையாக இருந்திருக்க வேண்டும். உடுத்தியிருந்த வேட்டி காய்த்து நொறுங்கிப் போன அவரின் கணுக்காலை மறைக்கத் தவறிற்று. 

இளங்காளியம்மன் கோவில் வாசலில் அவரை அசைட்டையாக காணக் கிடைக்கலாம். சமீபமாக அவருக்கு அங்குதான் கிடை. விடியும் முன்னமே கோவிலுக்கு வந்துவிடுவார். வாசலை தூற்றி பெருக்கி சுத்தம் செய்து விட்டு மூன்றாவது படியில் உட்கார்ந்து கொள்வார். பின்னர் நடை அடைக்கும் வரையில் அங்கேயே கிடப்பார். கோவிலில் கொடுக்கும் சோறுதான் அவருக்கு சாப்பாடு. கோவிலுக்கு வந்து செல்வோர்களை பார்த்துக் கொண்டிருப்பதுதான் அன்றாடம். 

இடையில் மூத்திரம் பெய்ய வேண்டி மட்டும் அங்கிங்கு அகலுவார். ஒதுங்கும் நேரத்தில் காணத் தவறவிட்டவர்களை ஓடிச் சென்றேனும் ஒருமுறை பார்த்துவிட்டு வந்தால்தான் அவருக்கு திருப்தி. அவைகளில் சில முகங்கள் பார்த்து சலித்துப் போனவைகள் என்றாலும் அவர் விடுவதில்லை. 

அவர் வாய் திறந்து பேசி வருடங்கள் சில கரைந்து விட்டன. அவருக்கு பேச்சு நின்றுவிட்டது. பசி தூக்கம் எல்லாம் மரத்துவிட்டது. ஆனாலும் மனிதர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மாடம் தூண் என்று பக்தர்கள் யாரேனும் தட்டிச் செல்லும் விபூதி குங்குமத்தை சிரைத்தையுடன் வழித்து எடுத்து பொட்டலம் கட்டிக் கொள்வார். அதுவும் அவரின் அன்றாடங்களில் ஒன்று.

இரவு கவிந்து கொண்டிருந்தது. தெரு மெல்ல உறங்க ஆரம்பித்தது ஒரு குழந்தையைப் போல. கலசத்தை கொசுக்கள் மொய்த்தன. கட்டியிருந்த வேட்டிக்குள்ளேயே குன்னிக்கொண்டார்கள் வாசலில் கையேந்தும் பிச்சைக்காரர்கள். பூக்கடை ஹுசைன் பாய் கடையை எடுத்து வைத்துவிட்டு சொன்னார், “ஆய்ங்க வாறன் , நாள பாப்போம்”.

கிழவர் அண்ணாந்து பார்த்தார், ஆமோதிப்பது போன்று.

“ஆய்ங்க, கவலப்படாதீரும், எல்லா சரியாயிடும்:, நேரமே புறப்படும், யளங்காளி எல்லாத்தையும் சீராக்கிடுவா, மாஷா அல்லாஹ் தொண இருப்பார், வருந்தாதீரும். வீட்டுக்கு கெளம்புங்க ஆய்ங்க”

‘மனுசனுக்கு சாக்காலத்துல தான் புத்தி வந்து தொலையிது எழவு, என்ன செய்ய’ – தனக்குள் சொல்லிக்கொண்டே சைக்கிளை மிதித்தார் ஹுசைன் பாய். 

இருளில் மெல்லிய கோடாக அவர் மறையும் திசையை பார்த்துக்கொண்டிருந்த கிழவர் எழுந்து தெருப் பக்கம் நடக்கலானார் தடுமாறிக் கொண்டே. 

“ஜானக, யம்மா ஜானக” என்ற அவரின் குரலுக்கு, “ஓவ்” என்று எதிர் குரலெழுப்புவாள் ஜானகி. 

“என் அம்மா” என்று உச்சந்தலையை வாஞ்சையாக வருடிவிட்டு முன் நெற்றியில் முத்தம் பதிப்பார். பிறகு கோவிலில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் கோர்வையாகச் சிரிக்கச் சிரிக்க சொல்லிவிட்டு திருநீறும் குங்குமமும் தீற்றுவார். அவள் கண்களை மூடியபடி பெற்றுக்கொள்வாள். 

அன்றைக்கும் அவர் அதை போலத்தான் அழைத்தார். வருடினார். முத்தினார். கதை சொன்னார். பின்னர் தீற்றிவிட்டார். ஆனால், ஜானகிதான் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை போல பிரக்ஞையின்றிக் கிடந்தாள். 

ஜானகி தூங்கினாலும் அவர் கதை சொல்ல ஒருநாளும் தவறுவதில்லை. அப்படித்தான் ஒரு இரவில், “யம்மா ஜானக, இன்னைக்கு கோவில்ல என்னாச்சுன்னு கேளு”

….

அவள் அமைதியாக இருந்ததை சாதகமாக கொண்டு சன்னமான குரலில், “யம்மா ஜானக, நம்ம தரும்மு இல்ல தரும்மு, ப்ச் அதாம்மா கருப்பு கோவிந்தராசு மக. அவதான். இன்னைக்கு கோவிலுக்கு வந்திருந்தா, பேரம் பேத்திகளோடு. இன்னைக்கும் பாக்க நல்லாதான் இருக்கா தாயீ. கருப்பா எடுப்பா. ஆனா, அவ பொண்ணும் பேர பிள்ளைவோலும் அவ கணக்கா வராதுடியம்மா. என்னிய காட்டி பிள்ளைகவொலுக்கு ‘தாத்தா பாரு தாத்தா’ங்குறாள் படுபாவி கோணலாக சிரிச்சிகிட்டே. எனக்கு வெலவெலத்துப் போச்சு. பருவத்துல இருந்த திமிரு சத்தக்கொண்டு கொறஞ்சிருக்குணுமே. நாயிக்கு. இல்லையே. அப்படியே இருக்கா. கிணத்துல போட்ட கல்லு கணக்கா பாலிஷா! எனக்கு உதறல் எடுத்து போச்சு. 

அவளைப் பார்க்கும்பொ ஒன்னுதான் தோனிச்சு. ‘அடி பாதகத்தி அன்னிக்கே இந்த திமிருத்தனத்த காட்டியிருந்தா ரெண்டு பேரு பொழப்பும் பொச பொசன்னு எவ்ளோ நல்லா இருந்திருக்குமே’. 

ஜானகி சுவாச மொழியில் ‘உம்’ கொட்டிக் கொண்டிருந்தாள். 

கலியமூர்த்தி தொடர்ந்தார் , “கோவிக்காதம்மா அவ என்னிய விரும்புனா” சிறிய இடைவெளி விட்டு சொன்னார், “நானும்தா”, பெரு மூச்செறிந்தார். 

மௌனமான அந்த நொடியும் பெருமூச்சும் தவறவிட்ட பெருவாழ்வின் சூன்யம் போல அவரைச் சூழ்ந்தன. 

“அவ அப்பன் ஒரு பொன்னப்பய. அவந்தேன். ரஜூ பொருத்தம், யோனி பொருத்தம், மசுரு பொருத்தம்ன்னு எங்கள சேத்து வைக்கல. ஜானக.. நீயி அவள பாத்திருக்கதான.. அவ ஆளு எவ்ளோ களையா இருப்பா. இல்லா! நல்ல வளத்தி. மாரும் தோளுமா கச்சிதமா. ம்ம் நமக்கு வாய்க்கல எவனோ ஒரு சூர்ணாகோயிலு பயலுக்கு வாய்ச்சுது. என்ன செய்ய. எல்லாம் விதி. என்ன செய்ய. பச்”, சலித்து கொண்டார். 

மேலும் தொடர்ந்தார், “பொருத்தம் பாத்தான் பாரு ஒரு கிழப்பய , அவன் மட்டும் எங் கையில கெடைக்கணும்”, பற்களை தாடை எலும்புகள் நொறுங்கும்படியாக கடித்தார்.

“ஏம், இப்ப மட்டும் என்ன கெட்டு போச்சுது. போயி அவள கட்டிக்கிட்டு இன்னும் நால பெத்து போடுங்க. அதுங்களுக்கு நான் பீ ,மோத்திரம் வாரி போடுறேன்” என்றாள் கண்களைத் திறக்காமலேயே.. 

திடுக்கிட்டு நினைவுக்கு வந்தவர், “அட, நீயி தூங்கலையா நீ தூங்கி போட்டேன்ன்னு நெனச்சுக்கிட்டு எதையோ பொலம்புனேன் அவ்ளோதான்”, மழுப்பினாரொழிய அவருக்கு தரும்மு மேல் ஆசையில்லாமல் இல்லை என்பதை ஜானகி அறிந்தேயிருந்தாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை மௌனமாக வேடிக்கை பார்த்தபடி சிரித்துக் கொண்டது சுவரில் தொங்கிய கல்யாண போட்டோ. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில் தம்பதிகள் இருவரும் திகிலுடன் நின்று கொண்டிருந்தனர் கழுத்து மாலையுடன். 

மீண்டும் மீண்டும் அழைத்தும் ஜானகி எழாமல் இருப்பது அவருக்கு ஒருவித கலக்கத்தை உண்டாக்கியது. வெளிக்கு இருந்துவிட்டு வந்தார். உடல் நடுங்க தொடங்கிற்று. 

“ஜானக அம்மா ஜானக….. ” என்று திணறிக்கொண்டே அவர் எழுப்பும் ஓசை அவளுள் புகவில்லை. உடலிருந்து எதிரொலித்த வண்ணம் இருந்தது. வீடு முழுக்க நிரம்பித் ததும்பியது. அவரின் அழைப்புகளை ஏற்காது கிடக்கும் ஜானகியை, “இந்தம்மா அவரு எவ்ளோ நேரம் கத்துறாரு செத்த என்னான்னுதான் கேளுமே”, என்று சொல்வதை போல பல்லி ஒன்று கெவுளி செய்தது. ஜானகி எழவில்லை. 

சர்க்கரைவியாதி வந்து ஒவ்வொரு விரலாய் எடுக்கப்பட, நடக்கும் வித்தையை கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தாள் ஜானகி. எல்லாமும் கிடையில் இருந்தபடியேதான். வம்சாவழி வியாதி. அம்மாவிடமிருந்து மகளுக்கும் வந்து விடுமோ என்ற அச்சத்தில் இரண்டு மூன்று வருடங்களாக ஜானகியை பார்க்கவிடாமல் பாலசுந்தரியை வைத்திருந்தான் அவள் கணவன். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை, ‘அவனுக்கு அவன் பெண்டாட்டி பிள்ளை’, என்று கலியமூர்த்தி விட்டுவிட்டார். 

கெவுளி சத்தம் அதி ஓங்காரமாய் ஒலித்த அந்த ஊமை இரவில் கலியமூர்த்தி ஜானகியின் உடலை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார், சில நொடிகள் அப்படியே நின்று கொண்டிருந்தார் செய்வதறியாது. 

திடீரென ஜானகி படுக்கையிலிருந்து ஒருமுறை அனிச்சையாக பாதி உடலை மட்டும் எழும்பி பின் அயர்ந்தாள். சிக்கிக் கொண்டிருந்த சுவாசம் ‘ஆஃவ்’ வென்று வெளியே வந்தது. தண்ணீர் என்பது போல கட்டைவிரலை வாயருகே வைத்துக்காட்டினாள். 

உள்ளே ஓடினார் கலியமூர்த்தி. 

“க் ..கேவ்வ்வ்வ்”

ஜானகி எப்பொழுதும் எழுப்பும் வழக்கமான கேவல் சத்தம்தான். ஆனால், அன்றைக்கு அது சற்று வினோதமாக இருப்பதாகத் தோன்றியது. அருகில் சென்று பார்த்தார், படுக்கையில் கோணலாக கிடந்தாள் ஜானகி. கண்கள் திறந்திருந்தன. ஒரு கண்ணில் மட்டும் அரும்பியிருந்த கண்ணீர் பக்கவாட்டில் வழிந்ததில் காதோர முடி லேசாக நனைந்திருந்தது. மற்றொன்று எதையோ சொல்ல வந்ததை சொல்ல முடியாத ஏக்கத்துடன் ஏரவானத்தை வெறித்து கொண்டிருந்தது. உடலில் இன்னும் கூட வெப்பம் இருந்தது.

“ஜானக.. அம்மா ஜானக” , கூப்பிட்டு பார்த்தார். சலனமில்லை. 

“போ..நீயும் போய் சேந்துட்டியா…ம்ம்”.

துண்டை உதறி தோளில் மீண்டும் போட்டுக்கொண்டார். கைகளை விரித்து அண்ணாந்து பார்த்தார். தாடிக்குள் கையைவிட்டு எதையோ தேடுவது போல சுவாரஸ்யம் காட்டினார். தன் மனைவியின் காலடியில் சரிந்து அமர்ந்தார். மௌனமாக அழுதார். அனிச்சையாக விரல்களில்லாத முண்டமான இரண்டு பாதங்களையும் வருடினார். இந்நேரம் ஜானகி உயிருடன் இருந்திருந்தால், ‘நீங்க போய் எங் காலே புடிக்கலாமா’ என்று பதறிப் போயிருப்பாள். ஆனால், அப்படி எதுவும் இப்பொழுது நடக்கவில்லை.

ஜானகியின் கண்களில் ஜீவனில்லை. அவள் மார்பகங்கள் சுவாசத்திற்கு ஏற்றாற் போல விம்மவில்லை. விலகிக்கிடந்த சேலையைச் சரி செய்ய அவள் கைகள் முற்படவில்லை. ஜானகி அமைதியாக இருந்தாள். பிணமாக!

கண்ணீரை வழுக்கையில் துடைத்து கொண்டார். நீண்ட நேரத்திற்கு பின்னர் கண்களைச் சுருக்கி சுருக்கி தன் மகளுக்கு தொலைபேசினார். 

“யப்பா பாலு… தாயீ … அம்மா தவறிட்டா மா …”. 

அழுது அரட்டிக்கொண்டிருந்தவர் சற்று அமைதியாகி, வீட்டை ஒருமுறை நோட்டம் விட்டார். வீடு அமைதியாக இருந்தது. பெரிய அடுக்களை. கம்பிகளிட்ட தாழ்வாரம். நெடிய கொல்லை. தனித்தனியாக இரண்டு அறைகள், பெரிய பெரிய தூண்கள். உத்தரங்கள் போடப்பட்ட கூடம். நாட்டு ஓடு வேய்ந்த பழைய வீடு. 

மௌனத்தின் கணம் தாளாமல் சொன்னார், “நீயில்லாத இத்தனை பெரிய வீட்டில் தனியாக இருக்கப்போவதை நினைச்சாலே பயமா இருக்கு ஜானக எழுந்துரியேன்”. 

“நாப்பது வருசமா உங்கூடயே இருந்துட்டேன். எல்லாத்துக்கும் உன்னையே அண்டி வாழ்ந்துட்டேன். சொந்த ஊர்தான் என்றாலும் கடைகண்ணிக்கு போகவேண்டி உன்ட்டதான் வழி கேட்டு நிற்பேன். என்னால நீ இல்லாமல் தனியாக இருக்க முடியாதும்மா. இப்பவே என் மூச்சும் நின்னுடுச்சுன்னா நானும்…. “, என்ற போது வாசலில் பெரும் சத்தத்துடன் காற்று சுழன்றடித்து அடங்கியது. தெருநாயின் ஊளை சத்தம் தூரத்திலிருந்து பீதியாக ஒலித்தது.

மீண்டும் ஒரு பெரும் அமைதி. 

ஜானகியின் உடலின் இடப்பக்கமாக குனிந்து அமர்ந்திருந்த கலியமூர்த்தி “ஏங்க….”, என்றொரு குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தார். 

அச்சு அசலாக அதே குரல்தான். நான் வாழ்நாளெல்லாம் சலிக்க சலிக்க கேட்ட குரல்தான். என் ஜானகியின் குரல் தான். “யம்மா ஜானக .. நீ… நீ…இன்னும்….” தழுதழுத்தார். 

“ஆமாங்க…’, நிசப்தமான அந்த நள்ளிரவில் ஜானகி பேசலானாள். 

ஜானகியின் சில்லிட்ட கைகளைப் பற்றிக்கொண்ட கலியமூர்த்தி வாய்விட்டு அழுதார். , “யம்மா அடீ ஜானக”

நாற்பது ஆண்டுகால நினைவுகளின் மழையில் இருவரும் தெப்பலாக நனையத் துவங்கினர். 

“ஜானக…நாமிருவரும் தனியா இருக்குற இந்த ராத்திரி, நம்ம முதலிரவை நினைவு படுத்தல ”, குழைந்தார்.

உதடுகளை வாய்க்குள் மடித்து வைத்து கொண்டு கள்ளமாகச் சிரித்தாள் ஜானகி.

“ஏன் என்னாச்சு”, பதறினார். 

“அங்…”, என்ற ஏற்றத்துடன் “மொத ராத்திரி அன்னிக்கி நீங்க பண்ண கூத்துதான். தோலு உறிஞ்ச வாழைக்காய வச்சுக்கிட்டு எரியுது எரியுதுன்னு கறி சோத்துக்கு கூட வராம, சொந்தகாரவங்க முன்னாடி அவமானமா போச்சு. மறக்குற கதயா அது”

நடந்ததை எண்ணி உடலைச் சிலுப்பிக்கொண்டார் கலியமூர்த்தி. 

“அப்பிடி இருந்தும் தான்…. சீ“, என்று கவிச்சியாக ஜானகி சிரிக்க அவரும் சேர்ந்து கொண்டார். 

நிசப்தம். 

“உன் தம்பிக்காரன் கல்யாணத்தில் நடந்த அவமானத்தை மறக்கவே முடியாது ஜானக. குறுகிதேன் போனேன். இறுமாப்பு புடிச்ச நீதான் கடைசி வர அவன்கிட்ட பேசாமலே இருந்துட்டியே, வீம்புக்காரி ”, நிசப்தத்தை கலைத்தார்.

“அதே விட்டு தள்ளுங்க. அந்த நாயை பத்தி பேசாதீங்க”, என்றாள் சட்டென்று.

ஒழுங்கற்ற இடைவெளியில் உரையாடலும் மௌனங்களும் சிரிப்புகளுமாக நீண்டது இரவு. ஜானகியின் உடலில் குளிர்ச்சி லேசாக பரவிக் கொண்டிருப்பதை கலியமூர்த்தி இன்னும் உணர்ந்தாரில்லை. ஜானகியின் உள்ளங்கையில் இப்போது அவர் உஷ்ணத்தின் தீனக்குரல். 

மேலும் சொன்னார்.

“ஒரு குண்டுமணி தங்கங் கூட வாங்கி போட முடியாம…. ” உச்சுக்கொட்டினார். 

எதிர் தரப்பில் மௌனம். 

“இரவல் நகையை நம்பியே காலம் தள்ளிட்டியே தாயீ!.”, ஆறுதல் தேடினார். 

அவள் நெடிய மௌனம் காத்தாள். என்ன நினைத்தாள் என்று சொல்லாமலே இருந்துவிட்டாள். அவருக்கு ஏமாற்றமாக ஆனது. 

“வேலை எல்லாம் முடிச்சிட்டு சுணங்குற வேளையில நீ விடுற சின்ன சின்ன குறட்டை என்னை மீளா துயரில் தள்ளும். பெரும் குற்ற உணர்வு வரும். தெரியுமா ஜானக?”

“ம்ஹும்“, என்ற ஓசை எழுந்தது, மௌனம் கலைந்தது. அதன் அர்த்தம் என்னவென்று அவருக்குப் புரியவில்லை. 

உணர்வு பொங்கி அவர் அழுத போது தன்னுடைய சில்லிட்ட கைகளினால் அவரின் கண்ணீரைத் துடைத்துவிட்டாள் ஜானகி. 

“உங்ககிட்ட ஒன்னு சொல்லணும், இப்போதாவது அதே சொல்லட்டுமா?” என்றாள் பரிதாபமாக .

உண்மையில் அது ஒரு ஆயுத்தம். 

கலியமூர்த்தி வெறுமென “ம்” மென்றார் குழப்பத்துடன்.

“அந்த நாள் எனக்கு நல்லா நினைவிலிருக்கு அன்றைக்கு நம்ம வீட்டில் திருக்கை மீன் குழம்பு. நல்ல பெரும் மீனு. அதே கழுவி ஏற்பாடு பண்ண நாலு நாலரை ஆயிடுச்சு. நீங்க உங்க கூட்டுக்காரர்களை சாப்பாட்டிற்கு கூட்டியாந்தீங்க. நல்லா குடிச்சிருந்தீங்க. நிக்க வலுவில்லாம இருந்தீங்க. ஒரு ஆள் உங்களத் தாங்கிப் பிடிச்சிருந்தார். அவரும் போதையிலதான் இருந்தார். நேரம் பொறுக்காமல் போக அவங்க முன்னாடியே கண்டபடி சத்தம் போட்டீங்க. என் சேலையை புடிச்சு இழுத்தீங்க. சட்டையை கிழிச்சீங்க. முகத்தில் ரெண்டு மூணு முறை அடிச்சீங்க. போதையில இருந்த உங்க கூட்டுக்காரர் ஒருத்தர் என்னை விழுங்கிவிடுவது போல கேவலமாப் பார்த்தார். அது உங்களுக்கு தெரியுமா இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனா, அதற்குப் பிறகு அவர் நம்ம வீட்டிற்கு வந்ததில்லை. உங்களை பெஞ்சில் படுக்க வைத்துவிட்டு சாய்வாக நின்னுகிட்டே சிரிச்சார். தள்ளாடியபடியே என்னை நோக்கி வந்தார். கொல்லை பக்கத்துக்கு வரச்சொல்லி எனக்கு சாடை காட்டினார். அவரோட சிவந்த கண்னை நேராப் பாக்க எனக்கு பயமா இருந்தது. பின்னர் கையை மடக்கி குலுக்கி அசிங்கமாக ஒரு சைக செஞ்சாரு. உடைஞ்சு போய் அழுதேன். நீங்கள் முத்தத்துல தூங்கிகிட்ருந்தீங்க”

சிறிய இடைவெளிவிட்டு தொடர்ந்தாள், ”ஆனா, நான் சொல்ல வந்தது அது இல்ல. உங்கள் அண்ணிட்ட நடந்ததைச் சொல்லி அழுதேன். அவர்தான் என்னைத் தேத்தினார். இந்த வீட்டாம்பிள்ளைங்க எல்லாம் இப்படிதான். நீ வா ஒன்னாம் ஆட்டம் சினிமாவிற்கு போய் வருவோம்னு ஆறுதல் சொன்னார். ரஜினி நடிச்ச முரட்டு காளை போகலாம்னு தீர்மானிச்சு சமையல் சாமான்களையெல்லாம் அவரசகதியில் கழுவி கவிழ்த்துவிட்டு புறப்பட்டோம். விஜயா டாக்கீஸ் ஊருக்கு தூரம். வீடு திரும்ப இரவு பத்து மணி ஆயிருச்சு. மறுபடியும் அடி உதை. அப்போது நீங்க சொன்ன ஒவ்வொன்னும் கருவ முள்ளு போல சுருக்குன்னு ஆழமா தச்சிடுச்சு, இன்னும் கூட அதிலிருந்து சீழ் வடியுது அப்பப்பொம்”.

பெருத்த அமைதிக்கு பின் சொன்னாள், “அதுதான் நான் முதலும் கடைசியுமா நான் பார்த்த சினிமா”.

பாய்ச்சிய கூர் ஆயுதத்தை சதை கிழிய உருகித் திரும்ப வீசிய நிறைவில் ஜானகியின் முகம் அமைதியாக இருந்தது. 

அவளின் எதிர்பாராத இந்த திடீர் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நிலை குழைந்து தவித்தார் கலியமூர்த்தி. குறுகுறுவென உட்கார்ந்திருந்தார் 

இருவருக்குமிடையில் கனத்த மௌனம் பனி போல படர்ந்தது. 

அடைத்துக் கொண்ட தொண்டையை ‘ம் ஹும்’ என்று கனைத்து சரிசெய்து கொண்டு கேட்டார், “ஆமாம், நீயேன் அந்த பயல பாத்து சிரிச்ச”.

ஒரு நிமிடம் அவர் முகத்தையே சலனமற்று உற்றுப் பார்த்த ஜானகி காறி உமிழ்ந்தாள். தன்னிலை மறந்திருந்த கலியமூர்த்தி சட்டென நினைவுக்கு வந்தது போல முகத்தை துடைத்துக்கொண்டார். தன் மனைவியின் உடலைப் பார்த்தார். பிணம் புரண்டிருந்தது!

இரவில் இன்னும் இருள் ஏறியிருந்தது.

*******

ipbaskararumugam@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. தலைப்பிறகு ஏற்றவாறு வடுக்கள் பேசும், பேசி பழித் தீர்த்துக் கொள்ளும் கதை. இறந்தும் புகழைப் போல் வடுக்களுக்கு கூட சாவில்லை என பேச வரும் கதை. சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button