வானவில் தீவு-16 [சிறார் தொடர்]- சௌமியா ரெட்
இதுவரை…
தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக அந்த ஊர்ச் சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்தனர். கடலுக்குள் இருந்த கோட்டைக்குள் நுழைந்து, அங்கே தேவைதையின் தோழி இன்கி பின்கியை சந்தித்தார்கள். இன்கி வண்ண தேவதையைப் பற்றி பாடியதைக் கேட்ட சிறுவர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.
இனி…
அணில்: வாங்க வாங்க தம்பிகளா.. என்ன புது வரவா? எப்போ வந்து மாட்டுனீங்க?
மகேஷ்: இன்னிக்கு தான் அணில் அண்ணே.. எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லிதான் நாங்க உள்ள வந்தோம். ஆனா இங்க யாருமே அப்படி வந்ததில்லையாமே.
சோகமாகச் சொன்னான் மகேஷ். அணில் உருண்டு புரண்டு சிரித்தது.
அணில்: இங்க வந்து மாட்றதுக்கு கேள்வி பதில் கூத்தெல்லாம் நடந்துச்சா? ஹாஹாஹா..
ஒரே மூச்சில் மொத்த கதையையும் அணிலிடம் சொன்னான் மகேஷ்.
அணில்: ஓஹோ.. இது தான் நடந்ததா? இங்க பாருங்க தம்பி, இந்த இடத்துக்கு யாரும் விரும்பி வந்ததது இல்ல. அப்படி வந்தா கேள்வி எல்லாம் கேட்பாங்கனு இப்போ தான் எனக்கும் தெரியும். இங்க இருக்கிறவங்க எல்லாருமே அந்த தேவதைகள் பிடிச்சு உள்ள போட்டவங்க தான்.
அம்மு மீன்: அப்போ நீங்க எப்படி உள்ள வந்தீங்க அணில் அண்ணே? அணிலுக்கும் கடலுக்கும் சம்மந்தமே இல்லையே?
அணில்: சரியான கேள்வி தான். ஆனா நாங்க பரம்பரையாவே இங்க தான் இருக்கோம். ஒரு முறை எங்க பெரிய தேவதை ஒரு இடத்துல இருந்து இங்க கோச்சுகிட்டு வந்துட்டாங்களாம். கூடவே வானவில் தேவதையும் வந்துட்டாங்க. அப்போ அவங்களுக்கு பிடிச்ச சில மிருகங்கள், பறவைகளையும் எடுத்துட்டு வந்துட்டாங்க. அதுல வந்தவன் தான் நான். குகைக்கு உள்ள என்னோட குடும்பம் இருக்கு.
ராம்: அணிலண்ணே, அந்த தேவதைகளை தேடித்தான் நாங்க வந்திருக்கோம். அவங்க எங்க ஊர விட்டு தான் கோச்சுகிட்டு வந்தாங்க.
அணில்: அப்படியா விஷயம்! ஆனா, அவங்கள நீங்க சந்திக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான். அவங்க ரொம்ப கோவக்காரங்களா இருந்தாலும் பாசமானவங்க. அவங்கள விட வானவில் தேவதை கொஞ்சம் சாஃப்ட்டான ஆளு தான்.
–
இரும்பு மண்டையன்: கேட்டியா அம்மு. பாசமானவங்கனு சொல்றாரு அணில் அண்ணன். கண்டிப்பா கூப்பிட்ட உடனே வந்துருவாங்கன்னு நினைக்கிறேன்.
அம்மு: அட ஏன் இரும்பு, நீ வேற! வர்றதா இருந்தா அவங்க எப்பவோ வந்திருப்பாங்க.
இரும்பு மண்டையன்: அப்புறம் பாசமானவங்கனு சொல்றாங்கல்ல.
அம்மு: பாசமானவங்களா இருந்தா சொன்ன உடனே ஓடி வந்திருவாங்களா? ஏன் கோபமா இருக்காங்கனு மொதல்ல கண்டுபிடிக்கனும். அப்போ தான் அதுக்கேத்த மாதிரி யோசிக்க முடியும்.
இரும்பு மண்டையன்: அதுவும் சரி தான்.
–
ராம்: நாங்க பாக்க ஏதாவது உதவி பண்ணுங்க ண்ணே.
அணில்: சரி தம்பி. ஆனா அவங்க உங்க ஊர்ல இருந்து தான் கோச்சுகிட்டு வந்திருக்காங்க. உங்கள பாத்தா என்ன சொல்லுவாங்கனு தெரியாதே
ராம்: ஆனா பாத்து தான்ணே ஆகணும். இப்படியே விட்டா, எங்க ஊருக்கு கடைசி வரைக்கும் வண்ணங்களே கிடைக்காது.
அணில்: அதுவும் சரி தான்.
ராம்: ம்ம்ம்…
மகேஷ்: அவங்கள வரவழைக்க ஐடியா ஏதாவது இருக்கா
அணில்: மொதல்ல வானவில் தேவதை கிட்ட பேசலாம். ஆனா சமாதானம் ஆக வேண்டியது மழை தேவதை தான். மழை வந்தா, கூடவே வானவில் தேவதையும் வழக்கம்போல வந்துடுவாங்க.
–
அம்மு: இத்தனை நாள் இவங்க மழை தேவதையை பத்தி சுத்தமா மறந்துட்டாங்க.
இரும்பு மண்டையன்: ஆமா அம்மு. நானே மறந்துட்டேன்.
அம்மு: ம்ம்ம்.. சரி விடு. என்ன தான் ஆகுதுன்னு பார்ப்போம்.
–
ராம்: மழை தேவதை எங்க இருப்பாங்கனு சொல்லுங்க அணிலண்ணே. நாங்க போய் சந்திச்சு பேசி பாக்குறோம்.
அணில்: அச்சச்சோ அப்படில்லாம் பண்ணிடாதீங்க. அதெல்லாம் மழை தேவதைக்கு பிடிக்காது.
ராம்: அப்போ என்ன தான்ணே பண்றது. அவங்க கிட்ட பேசித் தானே பிரச்சனைய தீர்க்க முடியும்?
அணில்: ஆமா. ஏதாவது வழி யோசிப்போம்.
ரொம்ப நேரமாக அணில் யோசித்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது தனக்குள்ளும் பேசிக் கொண்டது. எதிலும் திருப்தியில்லாத பாவனையில் நடந்துகொண்டே இருந்தது.
எல்லோருக்கும் பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது.
மகேஷ்: டேய், பசிக்குதுடா
மீன் கூட்டம்: எங்களுக்கும் தான்.
அணில்: சரி, மொதல்ல சாப்பிடுவோம். அப்புறம் நிதானமா யோசிக்கலாம்.
பாலா: சரி, சாப்பாட்டுக்கு எங்க போறது?
அணில் உள்ளே சென்று வந்தது. அதன்பின் ஒவ்வொருவராய் பல விதமான உணவுகளை எடுத்து வந்தனர். பல வண்ணங்களில், வாசனையும் மூக்கைத் துளைத்ததால், எல்லோருக்கும் எச்சில் ஊறத் தொடங்கியது. சாப்பிடத் தயாரானார்கள்.
தொடரும்…