இன்றைய வாழ்கை சூழலில் தொடர்ந்து வாசிப்பில் இருப்பதென்பதே ஒரு சவாலாக தோன்றியது. நம் பிராயம் செல்ல செல்ல வாசிப்பின் சாத்தியங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன என்ற எண்ணம் எனக்கு உண்டு. பள்ளிக்காலங்களில் என் பொழுது போக்கு என்பதே வாசிப்பு தான். என் சுற்றுலா தளமாக நூலகம் இருந்தது. அதன் பிறகு கல்லூரி காலங்களில் இலக்கியம், வரலாறு, ஆன்மிகம் என்று சற்று தீவிர தளங்களுக்குள் தடையின்றி பயணிக்க முடிந்தது. அது ஒரு பொற்காலமாகவே இருந்தது. எந்த சிந்தனையுமின்றி புத்தகம் மாற்றி புத்தகமாக வாசிக்க முடிந்தது. நேரத்தை வீணாக்காமல் முக்கியமான எல்லா நூல்களையும் வாசித்து முடித்துவிடவேண்டும் என்ற எண்ணம் என்னை துரத்திகொண்டிருந்தது. அதற்க்கு ஒரு மறைமுகமான காரணமும் உண்டு. வரக்கூடிய காலங்களில் வேலை, தொழில் என்று போய்விட்டால் இதுபோன்ற வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமோ என்ற பயம்தான் முக்கியமான நூல்களை வாசிக்க வைத்து. ரஷ்ய, பிரஞ்சு, ஆங்கில, தமிழ் இலக்கியம் இன்னும் செவ்வியல் படைப்புகள் என நூல்களோடு தொடர்ந்து வாழ முடிந்தது. கல்லூரிக்கு பிறகான காலங்களில் நான் நினைத்தது உண்மை தானோ என்று தோன்றியது. பல வேலைகள், நெருக்கடிகள், பொறுப்புகள் சூழும்போது வாசிப்பு என்பதே வசதியானவர்களுக்கு மட்டும்தானோ என்ற எண்ணம்கூட எழுந்தது. மத்தியதர குடும்பங்களுக்கு புத்தகம், வாசிப்பு என்பது ஊறுகாயை தொட்டு கொள்வதை போன்றதாக எனக்கு பட்டது. என்றாவது ஒருநாள் பொழுதுபோக ஒரு புத்தகம் என்ற அளவுதான் வாசிப்பு சாத்தியம் என்று தோன்றியது. ஆனால் என்னுடைய எண்ணம் தவறு என்பது வரலாற்று மனிதர்களின் வாசிப்பனுபவத்தை சற்று நினைவு படுத்திபார்த்தபோது புரிந்தது.
வாசிப்பின்மைக்கான காரணமாக நாம் கருதுவது நேரமின்மை அல்லது நெருக்கடியான வாழ்க்கை சூழல். இது உண்மையான காரணம் தான். ஆனால் வரலாற்றை நோக்கி பார்க்கும்போது நிறைய வாசித்த பெரும் ஆளுமைகள் யாரும் வசதியான வாழ்க்கை சூழலோ அல்லது நெருக்கடியற்ற வாழ்க்கை சூழலோ அமைந்தவர்களல்ல. நெப்போலியன் போனபார்ட் பற்றி பல்வேறு கருத்துவேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் அவரிடம் நான் வியக்கும் ஒரு விஷயம் அவருடைய அபாரமான வாசிப்பு பழக்கம். உலகையே கைப்பற்ற வேண்டும் என்ற ஒரு தீவிர வேட்கையோடு பயணித்த ஒரு நபர். பல போர்கள், சூழ்சிகள், போராட்டங்கள், திடீர் தாக்குதல்கள், எதிர்நோக்கியிருக்கும் அபாயங்களுக்கான தயாரிப்புகள், பல அதிகாரிகளுடனான சந்திப்புகள்,பேச்சுவார்த்தைகள் என்று எப்போதும் உச்சகட்ட விழிப்பு நிலையிலே இருந்தாகவேண்டிய நெருக்கடியான வாழ்க்கை அவருடையது. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை விட பல மடங்கு உக்கிரமான,நெருக்கடியான,சவாலான வாழ்க்கை. ஆனால் இவையெல்லாம் வாசிக்காமல் இருப்பதற்க்கான காரணங்களாக அவர் கருதவில்லை. இன்னும் தீவிரமாக அவர் புத்தகங்களை வாசித்தார். அவர் எங்கு வெளியூர் பயணித்தாலும் வரலாறு,தத்துவம்,இலக்கியம்,கவிதைகள்,இயற்க்கை வரலாறுகள்,அறிவியல் என்று பல துறை நூல்ளின் வால்யூம்கள் கொண்ட சுமார் நாற்பதிற்க்கும் அதிகமான பெட்டிகளை கூடவே கொண்டு செல்வார். மனதில் தோன்றுகிற புத்தகங்களை அவ்வப்போது வாசிப்பார். மிகப்பெரும் ஜெர்மானிய எழுத்தாளரான கதேவுடைய முதல் நாவலான SORROW OF YOUNG WERTHER என்ற நாவலை மட்டும் சுமார் ஏழு முறை வாசித்திருக்கிறார். இதுபோன்று இன்னும் பெரும் இதிகாசங்களை வாசித்து தள்ளியிருக்கிறார். அவர் வாசிப்பின் தரம் எந்தளவு இருந்ததெனில் ஒரு முறை ஒரு ஆங்கிலேயருடன் பெரும்கவிஞரான மில்டன் பற்றி விவாதிக்கும்போது அவருடைய புகழ்பெற்ற இதிகாசமான PARDISE LOST பல குறைகள் உடையது.அதன் மொழி கவித்துவம் குறைந்தது என்றும், அவரோடு ஒப்பிடுகையில் லத்தீன் பெரும் கவிஞர் ஓசியனின் கவிதை மிக சிறந்ததாக இருப்பதாக கூறுகிறார். அத்தோடு ஒரு கவிதை எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றியும் உரையாடுகிறார். இது அவருடைய ஆழமான இலக்கிய பார்வையை காட்டுகிற உதாரணம். சிறையில் இருந்தபோது கூட இரவெல்லாம் விழித்து வாசித்துக்கொண்டே இருந்திருக்கிறார். மிக நெருக்கடியான வாழ்வியல் சூழலிலும் மிக அதிகமாகவே வாசித்திருக்கிறார்.
இதுபோன்ற எண்ணற்ற நபர்களை உதாரணமாக கூறலாம். கார்ல் மார்க்ஸ் ஒரு தீவிர வாசகர். அவருடைய மிக விரிவான வாசிப்பிலிருந்துதான் அவர் தன்னுடைய பொதுவுடைமை சிந்தனையை அடைகிறார். அவருடைய வாழ்வும் எண்ணற்ற நெருக்கடிகள், உடல் உபாதைகள், பொருளாதார நெருக்கடிகளால் சூழப்பட்டதுதான். வாசிப்பு சார்ந்த சோர்வு சில சமயம் ஏற்படும்போது பிறருடைய அனுபவங்கள் ஒரு ஊக்கியாக செயல்படும். அப்படிதான் நேரு, மார்க்ஸ், நெப்போலியன், ரூஸ்வெல்ட், உம்பர்தோ ஈகோ, கதே, சாமுவேல் ஜான்சன் என்று எண்ணற்ற நபர்களின் வாசிப்பனுபவத்தை தெரிந்துகொண்டேன். சிறையில் இருந்தபோதும் தன் வாசிப்பை நேரு அவர்கள் விடவில்லை. அவருடைய GLIMPSES OF WORLD HISTORY என்ற நூலில் உலக இலக்கியத்திற்கென்றே ஒரு தனி கட்டுரையை எழுதியுள்ளார். அதில் அவர் வாசித்த முக்கியமான இலக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்கிறார்.
அம்பேத்கரின் மேதமையும் அவருடைய சாதனையும் உலகிற்கே தெரியும். அதற்க்கு பின்புலமாக அமைந்தது அவருடைய பரந்த வாசிப்பனுபவம்தான் என்பதை பலர் கவனிக்க தவறிவிடுகிறார்கள். அம்பேத்க்கரின் வாசிப்பை பற்றி தெரிந்து கொண்டது அவருடைய வாழ்க்கை வரலாற்று படத்தின் மூலம்தான். நூலகம் திறக்கும்போது உள்ளே நுழையும் அவர் இரவு மூடும்போது வெளியேறுகிறார். இதை தவிர அவர் எப்படி வாசித்தார், என்ன நூல்களை விரும்பி வாசித்தார் என்பது போன்ற தகவல்களை இணையத்தில் தேடியபோது சில கட்டுரைகள் மட்டுமே தென்பட்டது. அப்படியாக, தற்செயலாக அய்யா வீரமணி அவர்கள் எழுதியுள்ள ‘அம்பேத்கரின் புத்தக்காதலும் புத்தகக்காதலும்’ என்ற நூல் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதன் பின் அந்நூலை வாங்கி வாசித்தேன். முதல் பகுதி அம்பேத்கரின் பௌத்த காதலை, அதன் மீதான ஈடுபாடு போன்றவற்றை விவரிக்கிறது. இரண்டாம் பகுதியில் அவருடைய புத்தகக்காதலை பற்றி மிக தகவல்பூர்வமாக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூலை வாசித்தபோது அம்பேத்கர் எப்போதும் வாசிப்பிலே இருந்திருக்கிறார் என்பது புரியவந்தது. அவருக்கு வாசிப்புதான் முதன்மையானதாக இருந்திருக்கிறது. புத்தகங்களை அவர் பல இடங்களிலிருந்து தேடி சேகரித்திருக்கிறார். ஒருவர் அவரிடம் வாசிப்பிலே எப்போதும் இருக்கிறீர்களே உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் ? என்று கேட்க, அதற்கு அவர் ஒரு நூலை வாசிக்கும்போது சோர்வு ஏற்பட்டால் அடுத்து வேறு ஒருநூலுக்கு மாறிவிடுவேன் என்கிறார். சில சமயம் நான்கு நூல்கள் அவர் வாசிப்பதற்க்காக அருகில் இருக்குமாம். அவருடைய வாசிப்பை பற்றி அவருடைய பணியாள் கூறும்போது பல சமயம் நான் இரவு தூங்க செல்லும்போது அவர் படித்துகொண்டிருப்பதை பார்ப்பேன், பின்னர் நடு இரவில் விழிப்பு ஏற்பட்டு எழுந்து பார்த்தால் அப்போதும் வாசித்துகொண்டே இருப்பார் என்கிறார். சில சமயம் ஒரு நூலில் ஆழ்ந்தது போய்விட்டால் அதிகாலை ஐந்து மணி வரையிலும்கூட வாசித்துக்கொண்டே இருப்பாராம்.
இந்தளவு தீவிரமாக வாசிக்க காரணம் அவருள் தீயாக எரிந்த தேடல். எல்லாவற்றையும் விட அவரை தீவிர வாசிப்பில் ஆழ்த்தியது அவருடைய சமூக அக்கறையும், அவர் சிறுவயது முதல் சந்தித்து வரும் சாதீய ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள் போன்றவைகளும்தான். இவ்வளவு அவர் வாசித்திருக்கிறார் என்பதை படிக்கும்போது நமக்குள் பொதுவாக எழும் எண்ணம் என்னவென்றால் அவர் பொருளாதார ரீதியாக வலிமையுள்ளவராக இருந்திருப்பார் என்பதுதான். ஆனால், உண்மையில் அவர் மிகுந்த வசதியுள்ள வாழ்க்கையை வாழவில்லை. லண்டனில் தங்கி ஆராய்ச்சி படிப்பு படிக்கும்போது கையில் பணமில்லாமல் அவருடைய புத்தகங்களில் சிலவற்றை விற்று தான் வாழ்த்திருக்கிறார். அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் மிக அற்புதமான ஒரு படம். ஒவ்வொருவரும் நிச்சயம் பார்க்கவேண்டியது. அதில் அவர் நூலகத்தில் நாளெல்லாம் வாசித்த பின் இரவு ஒரு ஹோட்டலில் பாத்திரங்களை கழுவும் காட்சி வரும். அது அவருடைய வருமான போதாக்குறைகளுக்காக. அங்கும் அவர் தன் சக நண்பரோடு கிப்லிங்கின் கவிதை குறித்து உரையாடுவார். எப்போதும் அவர் புத்தகங்களின் நினைவில், அது பற்றியதான சிந்தனையிலே தான் இருந்திருக்கிறார். அவருடைய பிற்கால வாழ்க்கையிலும்கூட பொருளாதார நெருக்கடி இருந்திருக்கிறது. ஒரு நூலை அவர் வெளியிட நினைக்கும்போது அதற்க்கான பொருள் வசதி அவரிடமில்லை என்பதால் மிகவும் சிரமப்படுகிறார். உடல் உபாதைகள்,பொருளாதார நெருக்கடிகள் போன்றவைகள் இருந்தாலும் உள்ளூர எப்போதும் ஊறிக்கொண்டே இருக்கும் தேடல் தீ இருந்ததால் எந்நிலையிலும் அவர் வாசித்துகொண்டிருந்தார். தேடல் தான் வாசிப்பை நோக்கி உந்தும் கருவி. அப்படியான வாசகர்கள் இடையிடையே சில தடைகளை சந்தித்தாலும் வாசிப்பு விட்டுப்போகாது. இன்னும் அவர்களின் மனம் எவ்விடத்திலும் அதை நோக்கியே இருக்கும். இது தீவிர வாசகர்கள் எல்லோருமே உணரும் ஒரு பொதுவான இயல்புதான்.
எழுத்தாளர் சம்பத்தின் இடைவெளி நாவலில் வரும் கதாபாத்திரம் தினகரன் எப்போதும் ஓயாத சிந்தனை ஓட்டம் உள்ளவனாக இருப்பான். அவன் ஒரு தோல் மன்டியில் வேலை பார்ப்பான். ஒரு இடத்தில் தினகரன் ‘எனக்கு கணக்கு வழக்கு சம்பந்தமான வேலைகளை விட தோல்களை தூக்கி வைப்பதுபோன்ற வேலைகள் தான் சௌகரியமாக இருக்கும், அப்போதுதான் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கலாம்’ என்று சொல்வான். இதுதான் இலக்கியவாதிகள், தீவிர வாசகர்கள், தேடல் உள்ளவர்களின் நிலை. அவர்கள் வேறேதேனும் வேளையில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களின் மனம் முழுவதும் நூல்கள் பற்றியும் பலவேறு சிந்தனைகள் பற்றியதாகவே இருக்கும். அம்பேத்கரின் விஷயத்திலும் இதுதான் வெளிப்படுகிறது. அம்பேத்கரை சந்திக்கும் நபர் ஒருவர் கேட்கிறார் உங்களை போலவே சிறந்த வாசகர்களான நேருவும், காந்தியும் இரவில் தூங்குகிரார்களே நீங்கள் மட்டும் ஏன் விழித்துப் படித்துகொண்டிருக்கிரீர்கள் என்று கேட்க்கும்போது அதற்க்கு அம்பேத்கர் ‘அவர்களுடைய சமூகம் விழித்திருக்கிறது அதனால் அவர்கள் தூங்குகிறார்கள், ஆனால் என் சமூகம் தூங்கிக்கொண்டிருக்கிறது அதனால் நான் விழித்திருக்கிறேன்’ என்கிறார். இந்த அக்கறை தேடலை ஏற்படுத்துகிறது. தேடல் தொடர்ந்து நம்மை வாசிக்க வைக்கிறது.
*****